இலங்கை கதிர்காம 

ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு

சாந்திப்பிரியா

பாகம்-5
ஆனால் இன்றுவரை அந்தப் பேழை வைத்தது யார், அதில் யந்திரத்தை வைத்தது யார், எதற்காக அது ரகசியமாக வைக்கப்பட்டுள்ளது என்பது போன்ற எந்த விவரமும் யாருக்கும் தெரியவில்லை. அதன் காரணமும் எங்குமே எழுதி வைக்கப்படவில்லை. கூறப்படுவது அனைத்துமே வாய்மொழிக் கதைகள்தாம். ஒரு வேலை கல்யாணகிரி ஸ்வாமிக்கு அடுத்தடுத்து வந்த வழித் தோன்றல்கள் அவற்றை அறிந்து இருக்கலாம். அவர்கள் மூலமே வாய்மொழிக் கதைகளும் தொடர்ந்திருக்கலாம். கல்யாணகிரி ஸ்வாமியின் காலம் முதலாகச் சிருங்கேரி பீடத்தைச் சேர்ந்த தசநவமிப் பிரிவிலுள்ள வட இந்தியத் துறவிகளே தெய்வயானை அம்மன் கோயிலைப் பரிபாலனம் செய்கின்றனர். அவருக்குப் பின்பு கேஸபுரி ஸ்வாமிகள், சுராஜ்புரி ஸ்வாமிகள் மற்றும் பாலசுந்தரி என்ற பெண் துறவியும்  ஆலயத்தை பரிபாலித்து வந்துள்ளார்கள்.  அவர்களில் பாலசுந்தரி எனும் பெண் துறவி பற்றிக் கூறப்படும்  கதையும் அற்புதமானது.
1814-ம் ஆண்டுகளில்  வட இந்திய நாட்டை சேர்ந்த அரசன் ஒருவன் தனக்கு பிள்ளை இல்லாக் குறையைப் நீக்குமாறு  கதிர்காமக் கந்தனை வேண்டிக் கொள்ள முருகனின்  அருளினால் அவருக்கு குழந்தை பாக்கியம் உண்டாயிற்று. அவன்த மன்னனுக்கு  பிறந்த முதற் குழந்தையே  பாலசுந்தரி என்பவர்.  குழந்தைப் பிறந்தால் பிறக்கும் மூத்த குழந்தையை  கதிர்காமருக்கு சேவை செய்ய அர்ப்பணிப்பதாக  வாக்குறுதியைக்  கொடுத்திருந்த மன்னன் வேறு வழி இன்றி  தன் சத்தியவாக்கை காப்பாற்றினான். பச்சிளங் குழந்தையான பாலசுந்தரியை தக்க பாதுகாப்புடன் கதிர்காமக் கடவுளுக்கு கொடுத்து விட்டுச் சென்றதும் குழந்தை அங்கு அங்கிருந்த பூசாரியால் வளர்க்கப்பட்டாள்.  வயதுக்கு வந்ததும் ஆத்மீக வாழ்வை மேற்கொண்ட  பாலசுந்தரியின் வனப்பும் அழகும் கண்டி மன்னனின் கவனத்தை கவர்ந்தது. தன்னை மணம் புரிந்து கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தான். ஆனால் மன்னனின் வேண்டுகோளை நிராகரித்தாள் என்பதினால் அவளை தூக்கிக் கொண்டு வருமாறு படையை அனுப்ப அவளை படை வீரர்களால் கண்டு பிடிக்க முடியவில்லை. அவளை கதிர்காமனே காப்பாற்றினார்.  அதன் பின்னர் அந்த அம்மையார் ஆலய நிர்வாகத்தை மேற்கொண்டு இருந்தார். 1873 ஆம் ஆண்டு அந்த பெண் துறவி காலமாகும் முன்னர் தனது வாரிசாக  மங்களபுரி ஸ்வாமியை நியமித்தார்.
திருவிழாக்களில் கதிர்காமத்தில் திரைக்குப் பின் வைத்துப் பூஜை செய்யப்படும் அந்தப் புனித பெட்டியை நன்கு அலங்கரித்து யானை மீது வைத்து உலாவாக எடுத்து வருகிறார்கள். பரம்பரைப் பரம்பரை நடைமுறைப்படி அந்த பேழைக்கு ‘கபூரலா’ பிரிவினர்தான் பூஜைகளை செய்கிறார்கள். அவர்களை அந்தப் பழக்கத்தைக் கைவிடுமாறுக் கூற வேறு யாருக்கும் அதிகாரம் கிடையாது. அனைத்து ஆலயங்களிலும் திருவிழாக்களில்  தெய்வானை-வள்ளி சமேத முருகனாகவே பாவித்து முருகனை ஆராதிப்பார்கள். ஆனால் கதிர்காம ஆலயத்தின் முக்கியத் திருவிழாவாக வள்ளியின் திருமண நிகழ்ச்சியே நடைபெறுகிறது. அந்த விழாவில் நடைபெறும் சடங்கு உண்மையில் நடைபெறும் நிகழ்ச்சி போல அமைந்து உள்ளது. வேடுவர் குல ஆடையை அணிந்தப் பெண்கள் அங்கு வந்து கபூரலா பிரிவினரிடம் வள்ளி- முருகனின் திருமணத்திற்கு சீதனமாக என்ன பொருட்கள் மற்றும்  எத்தனை பணம் தரப்படும் என்று பேரம் பேசுவார்கள். ஆலய பிரதான வாயிலில் இந்த நிகழ்ச்சி ஒரு நாடகம் போல நடைபெறும். பேச்சு வார்த்தைகள் நடைபெற்று முடிந்தப் பின் முருகனை அங்கிருந்து ஊர்வலமாக வள்ளியின் ஆலயத்துக்கு அழைத்துச் செல்வார்கள். ஈஸ்சலா மாதத்தில்  (ஜூலை மாதம்) வரும் பௌர்ணமி தினத்தில் நடைபெறும் கதிர்காம பண்டிகையின்போது கதிர்காமரின் திருவிழா ஊர்வலம் புறப்பட்டு வள்ளி அம்மன் ஆலயத்தை நோக்கிச் செல்லும். அப்போது தெய்வானையின் ஆலயம் சந்தடி இன்றி அமைதியாக இருக்கும். தெய்வானையின் ஆலயத்து பண்டிதர் ஊர்வலம் கிளம்பும் முன் அந்தக் கடவுளை பார்க்கச் சென்றாலும், தெய்வானைக்கு தனது கணவர் வள்ளியிடம் செல்வது பிடிக்காது. இதுவும் ஒரு ஐதீகமாகவே பார்க்கப்படுகிறது.
……தொடரும்