இலங்கை கதிர்காம 

ஸ்கந்த முருகன் ஆலய வரலாறு

சாந்திப்பிரியா

பாகம்-6

அந்த ஊர்வலத்தில்தான் பரம ரகசியமாக பெட்டியில் வைக்கப்பட்டு உள்ள யந்திரத்தை யானையின்  முதுகில் ஏற்றி   எடுத்துச் செல்கிறார்கள். அதுவே முருகனாக பாவிக்கப்படுகிறது. பௌர்ணமிக்கு முதல் நாள் அன்று எடுத்துச் செல்லப்படும் அந்தப் பேழை வள்ளி அம்மனின் ஆலயத்தில் இரவு முழுவதும் வைக்கப்படுகிறது.  அன்று இரவு முருகப் பெருமான் வள்ளியுடன் கணவன்-மனிவியாக ஆனந்தமாக இருப்பதாக ஐதீகம் உள்ளது. அடுத்த நாள் காலையில் மணமக்கள் இருவரும் -முருகனும் வள்ளியும்- மேனிக் கங்கை நதியில்  நீராடுவதான ஐதீக சடங்கு நடத்தப்பட்டு முடிந்தவுடன் வள்ளி ஆலயத்துக்கு மீண்டும் சென்றப் பின் அங்கிருந்து அந்தப் பேழை மீண்டும் கதிர்காமன் ஆலயத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படும். அந்த பிரசித்தி பெற்ற கதிர்காம வருடாந்த பெருவிழாவின் போது, தாமிரத்திலோ தங்கத்தட்டிலோ எழுதப்பட்ட பரமரகசியமான மந்திர சக்தி வாய்ந்ததாக கூறப்படும்  அந்த யந்திரத்தைக் கொண்ட பேழை வெண் வஸ்திரத்தால் மூடி வைத்திருந்து யானையின்  மீது வைத்து  ஊர்வலம் வரும்போது வழி முழுதும் மக்கள் ஆடிப்பாடி மகிழ்கிறார்கள்.
இந்த கதிர்காம பண்டிகையின் முக்கிய அம்சம் அலாட்டி அம்மாக்களின் பங்குதான். அழாட்டி அம்மாக்கள் என்பவர்கள் வள்ளியின் இனத்தை சேர்ந்தவர்கள். வள்ளி கதிர்காமனை காதலித்தபோது அவளுக்கு துணையாக இருந்தவர்கள் அந்த சமூகத்தினர். ஆகவே அவர்கள் தமது கைகளில் எரிந்து கொண்டு இருக்கும் விளக்குகளை ஏந்திக் கொண்டு கொண்டு ஊர்வலத்தில் நடந்து செல்வார்கள். புராணக் கதைகளில் இடம் பெற்றுள்ள வள்ளியின் இனத்தை சேர்ந்தவர்களான ‘வேத்தாஸ்’ என்பவர்களுடன் கதிர்காமனுக்கு தொடர்ப்பு இருந்தது. அதனால்தான் வேத்தாஸ் என்ற வேடுவப் பிரிவினர் அவர்களது இனப் பழக்கத்தின்படி கதிர்காமனையும் வணங்கி வந்தவர்கள். முருகனின் இளைய மனைவியான ‘வள்ளி’ அந்த தீபகற்பத்தில் வாழ்ந்து வந்த வேத்தாஸ் என்ற பிரிவினரில் இருந்து வந்தவர் என்பதினால் சூரபத்மனின் வதத்திற்குப் பிறகு வேத்தாஸ் இனத்தினரின் வழிபாட்டுத் தலமாக கதிரகாமக் ஸ்கந்த முருகனின் ஆலயம் அமைந்தது.
கதிர்காமனில் சிங்கள மற்றும் இந்துக்கள் ஒன்றிணைந்து கதிர்காமரை வழிபடுவதற்கும் ஒரு புராணக் கதை உள்ளது. முருகனைப் போலவே சிங்கள இனத்தை சேர்ந்த புராணக் நாயகரான விஜயா என்பவருக்கும் இரண்டு மனைவிகள் உண்டு. உள்ளூரில் இருந்த இளவரசியான குவேனி என்பவள் அவளுடைய இரண்டு சகோதரர்களின் எதிர்பையும் மீறி அவருக்கு பாதுகாப்பாக தங்க இடமும் உணவும் கொடுத்து காப்பாற்றி முடிவாக அவரை மணந்து கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றெடுத்தாள். அந்த புராண நாயகனின் மதுரையை சேர்ந்த இன்னொரு மனைவி தன்னுடன் கைவினை தொழிலாளிகளையும் அழைத்துக் கொண்டு இங்கு வந்து குடியேறினாள்.
அந்த குவேனி பிரிவை சேர்ந்த வம்சாவளியினர் பெரும்பான்மை இனத்தவரான சிங்களத்தவர். கதிர்காமரையும் அவரது இரண்டாவது மனைவியான வள்ளியையும் போற்றி வணங்கி வந்தார்கள். ஆனால் மதுரையை சேர்ந்த முதல் மனைவியின் வம்சாவளியினர் தமது தாயாரின் மொழியான தமிழைப் பேசி, பழங்கால ஆச்சாரப்படி கதிர்காமரின் முதல் மனைவியான தெய்வானையை மட்டுமே போற்றி வணங்குவார்கள். இப்படியாக கதிர்காமர் எனும் முருகப் பெருமானுக்கு இருந்த இரண்டு மனைவிகளை இரண்டு சமூகத்தினர் வணங்கி வந்துள்ளனர்.
ஆனால் கதிர்காம பண்டிகை இந்த இரண்டு பிரிவினரையும் ஒன்று சேர்க்கும் விதத்தில் அமைந்து உள்ளது. இந்தப் பண்டிகையில் இரண்டு பிரிவினரும் ஒன்று சேர்ந்து இரண்டு வார காலம் நடைபெறும் பண்டிகையில் ஒன்றாக நாட்டியமாடி, பாடல்கள் பாடி, வாத்தியங்களை இசைத்து யானை மீது ஊர்வலமாக வரும் கதிர்காமரை வணங்கி கொண்டாடுவது பார்ப்பவர்களைப் பரவசப்படுத்துகிறது.
கதிர்காமனில் மூன்று ஆலயங்கள் உள்ளன. அவை முருகன், வள்ளி மற்றும் தெய்வானைக்காக அமைந்தவை. ஒவ்வொன்றும் தனித்தனி ஆலயமாக ஒன்றுடன் ஒன்று சுமார் நூறு முதல் நூற்றி ஐம்பது அடி தூரங்களில் உள்ளன. இதுவும் கதிர்காமனில் ஒரு விசேஷமான அம்சமாகவே உள்ளது. உலகில் எங்குமே ஒரே இடத்தில் இப்படி மூவருக்கும் -முருகன், வள்ளி மற்றும் தெய்வானைக்காக- தனித் தனி ஆலயங்கள் உள்ளதைக் காண முடியாது.
ஆனால் இன்னொரு மனைவியான தெய்வானையின் கதி என்ன? சம்பிரதாய முறையில் ஆச்சார பிரிவு மிக்க இந்துக்களினால் பராமரிக்கப்பட்டு   உள்ளது கிழக்கு நோக்கிப் பார்த்தபடி உள்ள தெய்வானையின் ஆலயம்.  இந்த ஆலயத்தைக் கட்டியவர் வடநாட்டை சேர்ந்த கல்யாணகிரி ஸ்வாமிகள் என்பவரே.  திருவிழாவின்போது இச்சா சக்தியை (வள்ளி) தேடிச் செல்லும் கதிர்காமருக்கு தன்னுடைய வருத்ததை தெரிவிப்பது போல அவருக்கு முதுகைக் காட்டிக் கொண்டு அமர்ந்துள்ள நிலையில் கிரியா சக்தியான தெய்வானையின் ஆலயம் அமைந்து உள்ளது. தெய்வானையின் ஆலயத்து சடங்குகள் அனைத்தும் பெரிய அளவில் வடப்பகுதியை சேர்ந்த ஆச்சாரம் மிக்க பண்டிதர்களினால் செய்யப்படுகின்றது.
ஸ்ரீலங்காவின் புத்தமத வழிபாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ள பதினாறு புனித இடங்களில் ஒன்றாக கதிர்காமனின் ஆலயமும் கருதப்படுகிறது. ஸ்ரீ லங்காவில் தங்களைப் பாதுகாக்கும் கடவுளாக கருதப்படும் வணங்கப்பட்டு வரும் நாதா, பட்டி மற்றும் விஷ்ணு போன்ற கடவுட்களுடன் சேர்த்து  கதிர்காமனும் ஸ்ரீலங்காவின் வணக்கத்துக்கு உரிய கடவுளாக ஏற்கப்பட்டு உள்ளார். அதனால்தான் கண்டியில் நடத்தப்படும் புத்தரின் புனிதப் பல்லை பவனியாக எடுத்துச் செல்லப்படும் புனிதத் திருவிழா ஊர்வலத்தில் கதிர்காமரையும் சேர்த்து நான்கு கடவுட்களும் இடம் பெற்றுள்ளனர். கதிர்காமனின் புராண, இதிகாச வரலாற்றுச் செய்திகளையும் கதைகளையும் காணும் பொழுது சமூக நடை முறைகளில் மாறுபட்ட கருத்துக்கள் கொண்டு வளர்ந்து வந்த இந்து, சிங்கள, புத்த மற்றும் வேத்தாஸ் இனங்களின் வழிபாட்டு முறைகள் அந்த வருடாந்திரத் திருவிழாவின்போது  ஒன்றிணைந்து சங்கமித்துள்ளது போலத் தோன்றும்.
கதிர்காமனுக்கு  செல்வதற்கு மூன்று பாதைகள் உள்ளன. அவை திரிகோண வீதிகள் எனப்படும். கதிர்காமனுக்கு செல்பவர்கள் அங்குள்ள மேனிக் கங்கை என்ற நதியில் குளித்துவிட்டு ஈரத் துணியுடன்தான் ஆலயப் பிரதர்ஷணம் செய்ய வேண்டும். அப்படி குளித்து விட்டு செல்பவர்கள் வாயில் இருந்து ஆரோஹரா என்ற சப்தத்தைத் தவிர வேறு ஆராதனை சொற்கள் வெளிப்படக் கூடாது என்பது ஐதீகம்.
……….தொடரும்