ஜீவாத்மாவின் பயணம் -14
பன்னிரண்டு நாட்கள் சடங்குகள்- பொது நியதிகள்- அவற்றின் காரணங்கள்
296) குடும்பத்தில் ஒருவருடைய மரணத்தினால் வீட்டினருக்கு ஏற்பட்டு உள்ள அசௌகர்யம் அதாவது இறந்தவரது இழப்பினால் ஏற்பட்டுள்ள துயர நிலைக் காலம் என்பதை சுருக்கி அசௌகம் என்பார்கள். அதைதான் சாஸ்திர சம்பிராயததில் தீட்டு காலம் என்று கூறி உள்ளார்கள்.
297) சாஸ்திரங்களின் அடிப்படையில் மரணம் அடைந்தவர் வீட்டினர் 12 நாட்கள் தீட்டு காலத்தைக் கடை பிடிப்பார்கள். அந்த 12 நாட்களில் அவர்கள் சுப காரியங்களில் கலந்து கொள்ள தகுதி அற்றவர்களாக கருதப்படுவார்கள்.
298) ஒரு மனிதன் இறந்த பிறகு அவருடைய ஆன்மா இறைவனை அடைய வேண்டும் என்பதற்காகவும், பிதுர் லோகத்தில் உள்ள அவருக்கு முன் இறந்த ஏழு தலைமுறையினரின் குடும்பத்தினருடன் சேர்ந்து சாந்தி அடைய வேண்டும் என்பதற்காகவும்தான் பன்னிரண்டு நாள் அசுப சடங்குகள் செய்யப்படுகின்றன. அந்த கர்மாக்கள் நடக்கும் காலத்தில் சாதாரணமாக வீடுகளில் அடுப்பை மூட்ட மாட்டார்கள்.
299) பண்டைய காலத்தில், மக்கள் விறகு மற்றும் மாட்டு சாணத்திலான வறட்டி போன்றவற்றை பயன்படுத்தி அடுப்பை பற்ற வைத்து உணவு சமைத்தனர். இறுதி சடங்கில் சுடுகாட்டிலும், சடலத்தின் உடலை தகனம் செய்வதற்கும், தினசரி நடைபெறும் சடங்குகளுக்காகப் பயன்படுத்தப்படும் ஹோம குண்டம் மற்றும் பிண்டத்திற்கான அடுப்பை பற்ற வைப்பதற்கும் விறகு மற்றும் மாட்டு சாணத்திலான வறட்டி பயன்படுத்தப்பட்டன என்பதினால் சடங்குகள் முடியும்வரை அந்த பொருட்களை பயன்படுத்தி சமையல் அடுப்பை பற்ற வைக்கக் கூடாது என்பதாக சாஸ்திரங்கள் தடை விதித்தன.
300) ஆகவே உறவினர்கள் மற்றும் நெருங்கிய நண்பர்கள் வீடுகளில் இருந்து இறந்தவர்கள் வீட்டிற்கு . உணவை கொண்டு தந்தார்கள்.
301) ஒவ்வொரு நாளும் சடங்கை முடித்துவிட்டு வீட்டிற்கு வரும்வரை வீட்டில் உள்ளவர்களால் சமைக்க முடியாது. இந்த காலத்தில் செய்யப்படும் சடங்குகளைப் போல அல்லாமல் பண்டை காலங்களில் கர்மாவை செய்து முடித்து விட்டு வர பல மணி நேரம் ஆகும். அதற்கு காரணம் அதில் பல நியதிகளை வைத்திருந்தார்கள். சடங்குகளை முடித்து விட்டு வீடு வந்தப் பின் மீண்டும் குளித்து விட்டுதான் அடுப்பை மூட்டி சமையல் செய்ய முடியும். அதற்கும் அதிக நேரம் ஆகும். வீடுகளில் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை இருந்தால் அவர்களால் அத்தனை நேரம் பட்டினியுடன் இருக்க முடியாது. ஆகவே உறவினர்கள் சாப்பாட்டைக் கொண்டு வந்து வைத்தார்கள். ஆகவே அது மனிதாபிமான அடிப்படையில் கடை பிடிக்கப்பட்டு வந்திருந்த சடங்கே தவிர இதற்கு வேறு விஞ்ஞான ரீதியிலான காரணம் இருப்பதாகத் தெரியவில்லை.
302) சமைப்பதைத் தவிர்ப்பது இறந்தவருக்கு மரியாதை செலுத்துவதற்கான அறிகுறியாகும், மேலும் அந்தக் குடும்பம் ஆழ்ந்த துக்கத்திலும், துயரத்திலும் இருப்பதை வெளிப்படுத்தும் செயல் ஆகும். இதற்கு ஒரு ஆன்மீக அடிப்படையிலான காரணமும் உள்ளது. பண்டை காலங்களில், அடுப்பை மூட்டி சமைத்ததும் சிறிதளவு சாதத்தை அடுப்பில் போட்டு அக்னி தேவருக்கு நைவித்தியமாக கொடுத்தப் பின்னரே வீடுகளில் சாப்பிடுவார்கள். அதாவது அக்னி தேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு ஆகும். இன்றும் சில வீட்டில் இதைக் கடை பிடிக்கிறார்கள். துக்க வீட்டில் துக்க காரியங்கள் முடியும்வரை எந்த சுப நிகழ்ச்சியும், மங்களகரமான பூஜைகளும், யாகங்களும் செய்யக் கூடாது என்பதினால் அக்னி தேவரை ஆராதிக்கும் ஒரு பூஜைப் போன்ற சடங்கு செய்யப்படக் கூடாது என்பதாக சாஸ்திரங்கள் கூறி உள்ளன.
303) கொழுந்து விட்டு எரியும் நெருப்பைத்தான் பயன்படுத்தக் கூடாது என்பதே ஒரு நியதி என்பதினால்தான் பல குடும்பங்களிலும் இன்று காஸ் அடுப்புகளை மூட்டாமல், மின்சாரத்தால் இயங்கும் ஹீட்டர், மைக்ரோ ஓவென் போன்ற அடுப்புகளை காஃபீ அல்லது டி குடிக்க பயன்படுத்துகிறார்கள். மின்சார ஹீட்டர்களை பயன்படுத்தி குளிக்க தண்ணீரை சூடு செய்வதை போலத்தான் அதுவும் உள்ளது என்று அது நியாயப்படுத்தப்படுகின்றது.
304) எதனால் 12 நாட்கள் துக்க காலம் என்பதாக அறிவிக்கப்பட்டது என்றால் இறந்தவர்களது குடும்பத்தினர்களின் துக்க அளவின் மன நிலைக்கு ஏற்ப தீட்டுக் காலம் நிர்ணயிக்கப்பட்டு இருந்துள்ளது. ஒருவர் பெரும் துயரில் இருக்கும்போது அவர்களது நரம்பு மண்டலம் தளர்ச்சி அடையும், மன நிலை பாதிக்கப்பட்டு விரக்தி நிலையில் இருப்பார்கள். இறந்தவர்களை நினைத்து அழுதழுது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் பலவீனம் அடைந்து இருப்பார்கள்; எனவே, அந்த சோகமான நிகழ்வை மறக்க அவர்களுக்கு மன ஓய்வும் அமைதியும் தேவைப்பட்டது.
305) கர்மா செய்யும் காலமான பன்னிரண்டு (பதிமூன்றாம் நாள் சுப காரிய நாள்) நாட்களில் அவர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு வந்து விடுவார்கள். ஆகவே அதையே தீட்டு காலம் என்று கூறி அந்த தீட்டு காலத்தில் இறந்தவர் வீட்டுக்கு அதிகம் யாரும் சென்று குடும்பத்தினரை தொந்தரவு செய்யக் கூடாது என்ற நெறிமுறைகளை வகுத்திருந்தார்கள். உடல் மற்றும் மன ரீதியாக பாதிக்கப்படுபவருக்கு ஒய்வு தர தீட்டு எனக் கூறப்பட்ட இதில் விஞ்ஞான அடிப்படையும் உள்ளது.
306) இறந்தவர்கள் வீடுகளில் அசுப சடங்குகளைச் செய்வதால், சடங்குகள் செய்யப்படும் நாட்களில் நேரில் சென்று இரங்கல் தெரிவிப்பதை நண்பர்களும், உறவினர்களும் தவிர்ப்பார்கள். இறந்தவரின் குடும்ப உறுப்பினர்களும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்கவோ அல்லது அவர்களிடம் சாதாரணமாகப் பேசவோ முடியாது. ஆகவே எவரும் வந்து துக்கத்தை அதிகப்படுத்துவது இல்லை என்ற சூழ்நிலையில் உள்ள இறந்தவர்கள் குடும்பத்தினர் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்புகிறார்கள்.
307) இருப்பினும், சாஸ்திரங்கள் துக்கக் காலமான 12 நாட்களை முற்றிலும் எதிர்மறையான அர்த்தத்தில் கூறி இருக்க முடியாது; ஏனெனில் பண்டைய காலத்தில் மரணம் அடைந்தவர் வீடுகளுக்கு செல்ல பல கட்டுப்பாடுகளை விதித்து இருந்ததற்கு சில அறிவியல் காரணங்களும் இருந்திருக்க வேண்டும். பண்டைய கால முனிவர்களும், துறவிகளும் வாழ்க்கையின் அனைத்துத் துறைகளிலும் பெரும் அறிவாற்றல் மிக்கவர்களாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
308) தீட்டுக் காலம் அனுஷ்டிக்கப்பட்டதற்கு விஞ்ஞான அடிப்படையிலான இன்னொரு வலுவான காரணமும் உள்ளது. இறந்தவர்கள் உடலில் சில தீய கிருமிகள் தோன்றும். அவற்றில் சில பறந்த வண்ணமும் இருக்கும்; இறந்தவர் நோயாளியாக இருந்தால் அவரது உடலில் இருந்து வெளியேறும் கிருமிகள் மற்றவர்கள் மீதும் பரவலாம். ஆகவே அத்தகைய நிகழ்வுகளை கருத்தில் கொண்டே இறந்தவர்கள் வீட்டிற்கு மற்றவர்கள் அதிகம் போவதை தவிர்ப்பதற்காக 12 நாட்கள் கட்டுப்பாட்டை விதித்து இருக்கலாம்.
309) கர்மா செய்பவர்கள் தினமும் சுடுகாட்டுக்கு சென்று கல் ஊன்றிய இடத்தில் பன்னிரண்டு நாள் காரியம் செய்து விட்டு வருவார்கள். அப்போது அவர்கள் உடலில் சில விஷக் கிருமிகளுடன் கூடிய அசுத்தங்களும் ஒட்டிக் கொண்டு வர வாய்ப்பு உள்ளது. அப்படிப்பட்ட விஷக் கிருமிகளை தாமே அறியாமல் வீட்டுக்கு கொண்டு வந்து விடுவதினால் அவை வீட்டில் இருக்கும் அனைவரிடமும் பரவி விடும். சுடுகாட்டில் இருந்து கொண்டு வரப்படும் அந்த கிருமிகளின் வாழ்வு காலமும் 10 அல்லது 12 நாட்களே என்பதும் தெய்வ லீலையில் ஒரு அதிசயம் ஆகும். அவைகளும் வீட்டில் வந்து குளித்தவுடன் தண்ணீருடன் போய் விடும். ஆகவே அந்த பன்னிரண்டு நாட்களிலும் சுடுகாட்டுக்கு சென்று விட்டு திரும்பும் வீட்டினரை தொட்டு, தழுவுவதின் மூலம் நம் மீதும் அந்தக் கிருமிகள் ஒட்டிக் கொள்ள வாய்ப்பு உள்ளது. அவற்றை மனதில் கொண்டுதான், சுத்தத்தை அனுஷ்டிக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தும் வகையில், மறைமுகமாக கர்மாவை செய்யும் வீட்டுக்குச் சென்றால் குளிக்காமல் வீட்டுக்குள் நுழையக் கூடாது என்று சாஸ்திர விதி நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. அவைகளே தீட்டு என கூறப்பட்டு அவர்களிடம் இருந்து மற்றவர்கள் தள்ளி இருக்க வேண்டும் என்று கூற காரணமாக அமைந்தது.
310) ஆனால் அந்த கிருமிகள் அனைத்தும் சுபஸ்வீகாரம் செய்யப்படும் பதிமூன்றாவது நாளன்று செய்யப்படும் ஹோம குண்டத்தில் இருந்து வெளிப்படும் ஹோம குண்டப் புகையை தாங்க முடியாமல் மரணம் அடைந்து விடும். அதற்குக் காரணம் ஹோமங்களில் பயன்படுத்தப்படும் குறிப்பிட்ட சில பொருட்களுக்கு மருத்துவக் குணமும், கிருமி நாசினி தன்மையும் உண்டு. ஹோம சடங்கு செய்யப்பட்ட 24 மணி நேரத்திற்குப் பிறகும் கிருமிகளைக் கொல்லும் சக்தி நீடிக்கும். ஹோம புகை எதிர்மறை சக்தியை நீக்குகின்றன மற்றும் ஆன்மீக ரீதியாக உயர்ந்த சூழ்நிலையை உருவாக்குகின்றன. விஞ்ஞான ரீதியிலான இதை மனதில் கொண்டுதான், கிருமி நாசினி போன்ற குறிப்பிட்ட தன்மைகளை கொண்ட பொருட்களை ஹோமங்களில் பயன்படுத்த வேண்டும், இன்னென்ன பொருட்களை ஹோமத்தில் போட்டால்தான் அந்த கலவையின் சக்தியினால் ஹோமப் புகையில் இருந்து கிருமி நாசினி தோன்றும் என்பதற்காக அவை சாஸ்திர விதி என்று கூறப்பட்டு இருந்திருக்க வேண்டும் என்பது தெளிவு.
311) இப்படியான விஞ்ஞான ரீதியிலான காரணங்களைத் தவிர மேலும் ஒரு ஆன்மீகக் காரணமும் உள்ளது. அந்த பன்னிரண்டு நாட்களிலும் இறந்தவர்களது ஜீவாத்மா தான் வாழ்ந்திருந்த அந்த வீட்டில் வந்து கொண்டும் போய்க் கொண்டும் இருக்கும். அந்த நேரத்தில் உறவினரும் மற்றவர்களும் வீட்டுக்கு வந்து உற்சாகமாக இருந்தால் அதைக் கண்டு அந்த ஜீவாத்மா வேதனைப்பட்டு மனம் வெதும்பி நிற்கும்.
312) அவர்களுடைய சந்தோஷ அதிர்வலைகள் அந்த இடத்தில் இருந்து துயர அதிர்வலைகளை துரத்தி அடிக்க, துயரமுற்று உள்ள ஜீவாத்மாக்களும் சடங்குகளை ஏற்க முடியாமல் அங்கிருந்து ஓடிப் போக நேரிடும். அதனால் அது படும் வேதனை, துயரம் போன்றவை அந்த குடும்பத்தின் அமைதி இன்மைக்கு வழி வகுத்து விடும். ஒரு விதத்தில் பார்த்தால் அதுவே துயரத்தோடு இருக்கும் ஜீவாத்மாவின் சாபத்தைப் பெற வழி வகுத்து விடும்.

ஜீவாத்மாவின் பயணம் – 15
வருடாந்தர சிரார்த்தம் மற்றும் தர்ப்பணம்
313) கருட புராணத்தின்படி, பிரேத வடிவில் இருக்கும் ஆன்மா, 11 மற்றும் 12 ஆம் நாள் சடங்குகளில் வழங்கப்படும் உணவைப் பெற வானத்திலிருந்து கீழிறங்கி வருகிறது. யம கணங்கள் ஜீவாத்மாவை ஒரு கயிற்றால் கட்டி யம லோகத்திற்கு இழுத்துச் செல்லும்போது, அதை தாங்கி கொண்டு அவர்களுடன் பயணிக்க தேவையான சக்தியை, அந்த இரண்டு நாட்களிலும் உட்கொள்ளும் உணவு அந்த பிரேதத்திற்கு அளிக்கிறது.
314) கருட புராணத்தின்படி, அப்போது அந்த ஜீவாத்மா தன் வீட்டை பார்த்து கதறிய வண்ணம் நாள் ஒன்றுக்கு 247 காத தூரம் என பகலிலும் இரவிலும் யம கிங்கர்களுடன் யமபுரியை நோக்கி நடந்து செல்லத் துவங்கும். அவ்வாறு நடந்து செல்லும் ஜீவனுக்கு பசியும் தாகமும் அந்தந்த ஜீவன் அவற்றுடன் சுமந்து செல்லும் கர்மாக்களின், கர்த்தாக்கள் செய்யும் சடங்குகளின் தன்மையையும் பொறுத்தே அமைந்து இருக்கும்.
315) ஜீவாத்மா மரணம் அடையும் முன்னர் அது குடி இருந்திருந்த உடலின் செயல்களினால் அடைந்து இருந்த கர்ம வினைகளுக்கு ஏற்ப அது அழைத்துச் செல்லப்படும் பாதைகள் எளிதில் கடந்து செல்லும் தன்மையிலும், நடந்து செல்லவே முடியாத நிலையிலும் இருக்குமாம்.
316) உருவமற்ற ஜீவாத்மா எப்படி நடந்து செல்லும் என்பதாக ஒரு கேள்வி எழும்பலாம். பூமியில் உள்ள பாதைகளை போலவேதான் வான்வெளியில் ஜீவாத்மாக்களை அழைத்துச் செல்ல அவர்களால் நடக்க முடிந்த தேவ தன்மையிலான பாதைகள் இறைவனால் அமைக்கப்பட்டு உள்ளன. அவை நம் கண்களுக்கு தெரியாது.
317) கருட புராணத்தின்படி, யமலோகம் செல்லும் வரையிலாவது கடுமையாக கடக்க வேண்டிய பாதையின் உக்கிரத்தை குறைத்து, அமைதியான மன நிலையில் அந்த ஜீவன்கள் பயணிக்க, அவர்களது வாரிசுகள் செய்யும் நியமங்களும் கர்மாக்களும் அவர்களுக்கு பெரிய அளவில் உதவுகின்றன.
318) அடுத்த ஒரு வருட காலத்தில் அந்த ஜீவாத்மாவின் வாரிசுகள் சிரத்தையோடு செய்யும் கர்மாக்கள், மற்றும் தான தர்மங்கள் யமராஜருக்கு விடப்படும் கோரிக்கை போல அமைந்து விடும். சடங்குகளில் ஓதப்படும் ஆற்றல் மிக்க மந்திர ஒலிகளின் அதிர்வலைகளினால் மனம் இளகும் யமதர்மராஜன் அந்த ஜீவாத்மாவை பசி தாகம் இல்லாமல் பார்த்துக் கொண்டு, நல்ல பாதையில் அழைத்து வருமாறு எம கிங்கர்களுக்கு உத்தரவு போடுவாராம்.
319) பசியோடு நடந்து செல்லும் ஜீவனுக்கு மாதத்தில் ஒரு நாள், அதாவது அந்த ஜீவன் இறந்த திதியன்று, ஓரிடத்தில் தங்க அனுமதி அளிக்கப்படும். அதனால்தான் ஒருவரது மரணத்திற்கு பின்னர் ஒவ்வொரு மாதமும் அவர் மரணம் அடைந்த திதியன்று அவருடைய உடலில் இருந்து வெளியேறிய ஜீவனின் பசியையும் தாகத்தையும் அடக்க மாதாந்திர திதி நடத்தப்பட்டு பிண்டம் போடப்படுகிறது. இவ்வாறு 12 மாதங்களும் வரக்கூடிய திதியன்று பிண்டம் கொடுத்து அந்த ஜீவனின் பசியை போக்க வேண்டும். அப்படி போடப்படும் பிண்டமும், செய்யப்படும் சடங்கும் நடந்து செல்லும் அந்த ஜீவாத்மாவின் பசியையும் தாகத்தையும் அடக்குமாம்.
320) சந்திரனின் வளர்பிறை சுழற்சியில் (சுக்ல பக்ஷம்) 15 திதிகளும், சந்திரனின் தேய்பிறை சுழற்சியில் (கிருஷ்ண பக்ஷம்) 15 திதிகளும் உள்ளன; ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தேவதையினால் கட்டுப்படுத்தப் படுகின்றது என்பதினால் ஸ்ரார்தத்திற்கு திதி மிகவும் முக்கியமானது. இறந்து போனவர் எந்த திதியில் இறந்து போனாரோ அந்த திதியில்தான் முதல் ஒரு வருடத்தில், ஒவ்வொரு மாதமும் அவருக்கு ஸ்ரார்த்தம் செய்ய வேண்டும். அப்படி செய்தால்தான் அவர்களின் ஜீவாத்மாக்கள் மன அமைதி பெற்று மறு வாழ்வில் மோட்சம் பெறுவதை உறுதி செய்ய முடியும்.
321) இவ்வாறு ஒரு ஆண்டு காலம் நடந்து செல்லும் அந்த ஜீவன் ஒரு ஆண்டு நிறைவடைந்தவுடன் யமபுரத்தை அடைகிறது. இதனால்தான் பயணிக்கும் ஜீவாத்மா யமபுரிக்கு செல்வதற்கு எடுத்துக் கொள்ளும் ஓர் ஆண்டு காலமும் அந்த வீட்டில் ஓர் ஆண்டுக்கு குதூகுலம், கொண்டாட்டம், சுபகாரியம் போன்றவை நடைபெறக் கூடாது என்று சாஸ்திரம் கூறுகிறது.
322) தர்ப்பணம்: குடும்ப உறுப்பினர் ஒவ்வொரு மாதமும் தர்ப்பணம் எனப்படும் சடங்கைச் செய்கிறார்கள். தர்ப்பணத்தின் முதன்மை நோக்கம் பித்ருக்களின் வடிவத்தில் இருக்கும் மூதாதையர்களை திருப்திப்படுத்தும் சடங்கு ஆகும்; தர்ப்பணம் செய்தால் மகிழ்ச்சி அடையும் பித்ருக்கள் தரும் ஆசிகள் குடும்பத்தினருக்கு நலனையும் நல்வாழ்வையும் தருகின்றது.
323) ஒரு வருடத்துக்குப் பின்னரும் எப்போது தர்ப்பணம் செய்தாலும் பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்ய வேண்டிய நாளன்று, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை நிறுத்தி வைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய தெய்வ சம்பந்தமான பூஜைகளைக் கட்டாயம் செய்ய வேண்டும். இதனால் பித்ருக்களின் ஆசி கிடைக்கும்.
324) சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணைந்திருக்கும் நாளான அமாவாசையன்று பித்ருக்களுக்குப் பசியும் தாகமும் அதிகமாக ஏற்படும் என்று தர்ம சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆகவே அம்மாவாசை தினங்களில் இறந்தவர்களின் பசியையும், தாகத்தையும் போக்க கறுப்பு எள் கலந்த தண்ணீரால் தர்ப்பணம் செய்ய வேண்டும். இதனால் இறந்தவர்களின் பசியும் தாகமும் விலகி ஆசி வழங்குவார்கள்.
325) அமாவாசை திதியன்று ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தர்ம சாஸ்திரம் கூறுகின்றது
326) அதனால் அன்றைக்கு தர்ப்பணம் செய்து எள் கலந்த தண்ணீர் தரப்படவில்லை என்றால் அவர்கள் ஏமாற்றமடைந்து வருத்தத்துடன் திரும்பிச் செல்கிறார்கள் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளன. தர்ப்பணம் செய்வதற்கு வசதியில்லாத இடத்தில் உள்ளவர்கள் பசுக்களுக்கு புல்லையிட்டு அவற்றைத் திருப்தி செய்தால் போதும் என்று சாஸ்திர நூல்கள் கூறுகின்றன.
327) வருடத்தில் வரும் மூன்று அமாவாசைகள் முக்கியமானவை. தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி அமாவாசை. இதில் புரட்டாசி அமாவாசை ரொம்பவே மகத்தானது என்கிறார்கள். மகாளய பட்சம் என்று சொல்லப்படும் புரட்டாசியின் மகாளய பட்ச பதினைந்து நாட்களும் முன்னோர்களுக்கான நாட்கள். எனவே இந்த நாட்களில், முன்னோர்கள் நம் வீட்டுக்கு வந்து போவார்கள், ஆசி வழங்குவார்கள் என்பது ஐதீகம். மகாளய அமாவாசை நாளில், செய்யப்படும் தர்ப்பணம் மிகவும் மகத்தானது என்பது நம்பிக்கை.
328) கோவில்கள், குளங்கள், கடல் போன்ற இடங்களில் செய்யப்படும் தர்ப்பணங்களுக்கு மிக அதிகமான சக்தி உண்டு. திருவாலாங்காடு, திருவள்ளூர், ராமேஸ்வரம், திருமயம், அரண்மனைப்பட்டி, திருவண்ணாமலை, திருவிடைமருதூர், காசி, திருநள்ளாறு ஆகிய இடங்களில் தர்ப்பணம் செய்வது மிக சிறந்தது.
329) அவை அனைத்தையும் விட திலதர்ப்பணபுரி எனும் ஊரில் (திருவாரூர்- பூந்தோட்டம் இடையில் உள்ளது) தர்ப்பணம் செய்வது மிக, மிக விசேஷமாக கருதப்படுகிறது. ஏன் என்றால் இங்கு ஸ்ரீராமரும் லட்சுமணரும் தம் தந்தையான தசரத மகாராஜாவிற்கும், தமது தந்தையைப் போல அவர்கள் கருதிய ஜடாயு பறவைக்கும் தர்ப்பணம் செய்தார்களாம்.
330) மறைந்த முன்னோர்களுக்கு நாம் செய்யும் சிரார்த்தங்களும், தர்ப்பணங்களும் நமது குடும்பத்தினரின் நன்மைக்காவே செய்யப்படுகிறது. அகவே தவறாது சிரார்த்தத்தையும் தர்ப்பணங்களையும் செய்ய வேண்டும்.
331) மாசிகம்: மாசிகம் என்றால் பொதுவாக இறந்தவருக்கு பிண்டம் கொடுப்பது என்பது அர்த்தம். மாசிகம் என்பது ஒருவரது மறைவிற்குப் பின் மாதந்தோறும், ஒரு ஆண்டு முடியும்வரை, இறந்தவரின் ஆன்மா சாந்தி அடையவும், அடுத்த பிறவிக்கு அவர் நல்ல முறையில் செல்லவும் பிரார்த்தனை செய்யப்படும் சடங்கு ஆகும். இறந்தவர் திதியைக் கணக்கில் கொண்டு ஒவ்வொரு மாதமும் மாசிகம் எனும் சடங்கு செய்யப்படும்.
332) சில வருடங்களில் ஒரே மாதத்தில் இரண்டு திதிகளும் வருவதினால் வருடத்திற்கு 16 மாசியங்கள் வருவதாக கூறுகின்றார்கள். அவரவர் குடும்ப புரோஹிதர் ஒவ்வொரு மாதமும் செய்ய வேண்டிய மாசிகம் குறித்துக் கூறுவார்கள். அவர்களை கலந்து ஆலோசனை செய்து மாசிகம் செய்வதே சிறப்பு ஆகும்.
333) குடும்ப சூழ் நிலை மற்றும் உள்ள இடத்தினால் ஒரு சிலர் மாதம், மாதம் அவர் இறந்த திதிக்கு மாசியம் கொடுக்காமல் ஆறு மாதத்துக்கு ஒரு தடவை மாசியம் கொடுப்பதும் உண்டு என்றாலும் அது அத்தனை ஏற்புடையது அல்ல என்பதாக புரோஹிதர்கள் கூறுகின்றார்கள்.
334) சிரார்த்தம்/ திவசம்: சிரார்த்தம்/ திவசம் என்பது இறந்த மூதாதையர்களுக்கு மரியாதை செலுத்துவதற்கும், அவர்களின் நினைவைப் போற்றுவதற்கும் இறந்துபோன முன்னோர்களின் ஆன்மாக்கள் சாந்தியடையவும், அவர்களின் பாவங்கள் நீங்கவும், அவர்களின் ஆசீர்வாதத்தைப் பெறவும் செய்யப்படும் ஒரு சடங்கு ஆகும். சிரார்த்தம் செய்வதால் குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் நிலவும் என்று நம்பப்படுகிறது. இதை “திதி” என்றும் கூறுவர்.
335) ஆண்டுக்கு ஒரு முறை இறந்தவர்களின் திதியைக் கணக்கிட்டு கொடுப்பதுதான் சிரார்த்தம் என்றாலும், இறந்து போனவர்களுக்கு ஓராண்டுக்குள் 16 முறை சிரார்த்தம் கொடுக்க வேண்டும் என்று சாஸ்திரம் சொல்கிறது. அவற்றை ஏகோதிஷ்ட ஸ்ரார்த்த சடங்கு என்றும் கூறுவார்கள். இறந்தவரின் உடலில் உள்ள பதினாறு தெய்வீக அம்சங்கள் சொர்க்கத்தை அடைவதையும் இது உறுதி செய்கிறது. அந்த ஸ்ரார்தங்களை ஊன மாசிகாம், ஊன ஆப்திக மாசிகாம், திரிபத்ஷிக மாசிகம் மற்றும் மாதாந்திர மாசிகம் என்றும் அழைப்பார்கள்.
336) ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் தர்பணத்தின் போதும் வந்து நின்று கொண்டு தங்களுக்குத் தரப்படும் எள் கலந்த தண்ணீரை பெற்றுக் கொள்கின்றார்கள் என்று கூறப்படுவதை போலவேதான் ஸ்ரார்த்த தினங்களிலும் அந்தந்த வீட்டு பித்ருக்கள் வீட்டிற்கு வந்து தங்களுக்குத் தரப்படும் உணவை பெற்றுக் கொள்வதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
337) சிரார்த்தம் செய்யும்போது பித்ருக்கள் நம்மோடு மூன்று நாட்கள் வந்து தங்கிச் செல்வதாக ஐதீகம் உள்ளது. சிரார்த்தம் செய்வதற்கு முதல் நாள் அவர்கள் வந்து விடுவதாகவும் அதனால்தான் முதல் வருடத்தில் மாதா மாதம் செய்யப்படும் மாஸ்யம் அல்லது ஒரு வருடத்திற்கு பின் செய்யப்படும் சிரார்த்தத்தின் முதல் நாள் அன்று ஊன மாஸ்யம் எனும் சடங்கை அந்த காலங்களில் செய்தார்களாம். சிரார்த்தத்திற்கு மறு நாளும் பித்ருக்கள் நம்மோடு தங்கி இருந்து தமது ஆசீர்வாதங்களை அளித்தப் பின்னரே திரும்பிச் செல்வார்களாம்.
338) சிரார்த தினத்தன்று, வீட்டில் ஆசாரத்துடன் சமையல் செய்து வைத்து, இரண்டு புரோஹிதர்களை வைத்து ஹோமம், பிண்ட தானத்தையும் செய்து, அவரையும் வீட்டில் போஜனம் செய்ய வைத்து, தட்சணையும் கொடுத்து அனுப்புவதை பர்வண சிரார்த்தம் என்பார்கள்.
339) ஹோமம் பிண்டதானம் போன்ற சில காரியங்கள் இல்லாமல், வீட்டில் சமையல் செய்து வைத்து இரண்டு புரோஹிதர்களை அழைத்து, போஜனம் செய்ய வைத்து தட்சணை கொடுத்து அனுப்புவதை சங்கல்ப சிராத்தம் என்பார்கள்.
340) இரண்டு புரோஹிதர்களை வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு வீட்டில் சாப்பாடு செய்து கொள்ள என்னென்ன பொருட்கள் தேவையோ – அரிசி காய்கறிகள், பருப்பு போன்ற அனைத்து பொருட்களையும் வாங்கிக் கொள்ள பணமும் அவருக்கான தட்சணையும், அளித்து செய்யப்படும் சிராத்தம் ஆம சிராத்தம் எனப்படும்.
341) சிராத்தம் செய்ய வசதி இல்லாதவர்கள் புரோஹிதரை கலந்தாலோசனை செய்து இரண்டு புரோஹிதர்களை வீட்டிற்கு அழைத்து அவர்கள் ஒவ்வொருவருக்கும் வாழைக் காயையும், ஒரு நாள் சமையலுக்கான அரிசியையும், தக்ஷணைகளையும் கொடுத்து அனுப்புவது ஹிரண்ய சிரார்த்தம் எனப்படும்.
342) சிராத்தம் செய்ய வசதி இல்லாதவர்கள் கருப்பு எள் கலந்த தண்ணீரை விட்டு, பித்ருக்களை மனதில் வேண்டிக் கொண்டு தர்ப்பணம் செய்யலாம்.
343) சிரார்த்தங்களில் மறைந்த முன்னோர்களின் கோத்ரத்தையும் பெயரையும், நட்சத்திரத்தையும் இறந்து போன திதிகளையும் சிரார்த்த சடங்குகளை செய்யும் போது கூறுவார்கள். மந்திர உச்சாடனைகளுடன் அவற்றை உச்சாடனை செய்யும்போது, அவர்களின் திதியுடன் கூடிய ஜீவ சக்திகள், படைக்கப்படும் சிரார்த்த உணவோடு கலந்து விடும். இது நம் கண்களுக்கு தெரிவது இல்லை.
344) இதனால்தான் காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும், கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகள் ஸ்பரிஸம் பெற்ற சிரார்த்த உணவுகளில் இருந்து வெளியேறும் ஜீவ அணுக்களை, அவரவர்களது குடும்பங்களை சேர்ந்த பித்ருக்களால் மட்டுமே ஆவாஹித்துக் கொள்ள முடியும், ஒரு குடும்பத்தின் பித்ருக்களினால் மற்ற குடும்பத்து கர்மா செய்பவர்களின் உச்சாடனைகளில் இருந்து வெளிப்படும் ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாதாம். இதுவே விசித்திரமான தெய்வ நியதியாகும் .
345) எதேர்சையாக சில வருடத்திற்கு முன்னர் இறந்து விட்ட தந்தையின் வருடாந்திர சிரார்த்தமும், அதற்கு அடுத்த சில வருடம் பொறுத்து இறந்து விடும் தாயாரின் மாசாந்திர மாசிகமும் சேர்ந்து வந்து விட்டால் என்ன செய்வது? தந்தையின் வருடாந்திர சிரார்த்தமும், தாயாரின் சிரார்த்தமும் ஒரே நாளில் வந்து விட்டால், முதலில் தந்தையின் வருடாந்திர சிராத்தம் செய்து விட்டு பிறகு மீண்டும் தனியே சமையல் செய்து தாயாரின் சிரார்த்தமும் செய்ய வேண்டும்.
346) எதேர்சையாக பெற்றோர்களின் வருடாந்திர சிரார்த்தமும், மாதப் பிறப்பு பண்டிகையும் சேர்ந்து ஒரே நாளில் வந்து விட்டால் என்ன செய்வது? பெற்றோர்களின் வருடாந்திர சிரார்த்தமும் மாதப் பிறப்பு பண்டிகையும் சேர்ந்து வந்தால் முதலில் மாதப் பிறப்பு பண்டிகையை செய்து விட்டு அதற்கு அடுத்தே பெற்றோர்களின் வருஷ சிரார்த்தத்தை செய்ய வேண்டும்.
347)உடல் நிலை சரியில்லாதவர்கள் அருகில் யாரையாவது உதவிக்கு வைத்துக் கொண்டு அவர்கள் மூலம் சிரார்த்தம் செய்ய செய்யலாம் என்கின்றது தர்ம சாஸ்திரம் .
348) சகோதரர்கள் தனித் தனியேத்தான் சிராத்தமும் செய்ய வேண்டும். ஒரே தெருவில் பக்கத்து, பக்கத்து வீட்டில் சகோதரர்கள் வசித்தாலும் கூட சிராத்தம் தனி தனியே தான் செய்ய வேண்டும. கூட்டுக் குடும்பமாக இருந்தால் அல்லது சகோதரர்கள் ஒன்று சேர்ந்து செய்தால் மூத்த சகோதரருடைய பக்கத்தில் அமர்ந்து கொண்டு அவரோடு சேர்ந்தே மந்திரங்களை ஓதி சிரார்த்தம் செய்ய வேண்டும்.
349) விபத்தில் பெற்றோர் காலமானால் யார் முதலில் இறந்தார்கள் என்பதை கணக்கில் கொள்ளாமல் ஒரே நாளில் இருவருக்கும் சிராத்தம் செய்ய வேண்டும். ஆனால் படைக்கப்படும் உணவு மற்றும் பாயசம் என்பவற்றை இருவருக்குமே தனித் தனி பாத்திரங்களில் செய்ய வேண்டும்.

ஜீவாத்மாவின் பயணம் – 16
தீட்டு காலம் மற்றும் மரண தீட்டைப் பற்றிய பொது விதிமுறைகள்:
350) ஒருவர் வீட்டில் மரணம் நிகழ்ந்தால், அவரோ அல்லது அவரது குடும்ப உறவினர்களோ 31 ஆம் நாள் சடங்கு முடியும் வரை இன்னொருவரின் மரண வீட்டிற்கு செல்லக் கூடாது.
351) தீட்டுக் காலத்தை ஸ்நானத் தீட்டு, பக்ஷிணீ தீட்டு, ஒரு நாள் தீட்டு, 11/2 நாள் தீட்டு, மூன்று நாட்கள் தீட்டு மற்றும் பத்து நாட்கள் தீட்டு எனப் பிரித்து உள்ளார்கள். தீட்டிலும் பிரசவ தீட்டு மற்றும் மரணத் தீட்டு என இரு வகை உண்டு.
352) தற்செயலாய் துர் மரணம் அடைவோருக்கு, அதாவது விபத்தில் உயிர் இழந்தவர் என யாராக இருந்தாலும், அவர்களுடைய உறவினர்களுக்கு தீட்டு உண்டு. ஆனால் உடனடியாக கர்மாக்களை செய்யாமல் 6 மாதம் கழித்து கர்மா செய்ய வேண்டும் என்பது விதி ஆயினும் 24 நாட்கள் கழித்து செய்ய வேண்டும் என்றும் ஒரு விதி உள்ளது.
353) ஆனால் தற்கொலை செய்து கொண்டவரின் குடும்பத்தினருக்கும், பங்காளிகளுக்கும் தீட்டு, தர்ப்பணம் போன்றவை கிடையாதாம். ஏன் எனில் அவர்கள் பிசாசாக மாறி விடுவதாக ஐதீகம். ஏன் எனில் அவ்வாறு மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய சடங்கு முறைகள் தெளிவாக கூறப்படவில்லை. அவரவர் வீட்டு புரோகிதர்கள் கூறும்படி சடங்கு செய்ய வேண்டும்.
354) சன்யாசிகள் மரணம் அடைந்தால் அவர்களது வீட்டினருக்கும் பங்காளிகளுக்கும் தீட்டில்லை, செய்தியைக் கேட்ட பின் குளித்தால் போதும்.
355) 88 அடிகளுக்குள் பிணம் இருந்தால், அதை எடுக்கும்வரை, அருகில் உள்ள வீட்டினர் சமைப்பது, சாப்பிடுவது கூடாது.
356) மரண வீட்டில் சாப்பிட்டால் (கை நனைத்தல் என்றும் கூறுவார்கள்), அவர்கள் முப்பத்தி ஒரு நாட்கள் (31) எந்த ஆலயத்திற்கும் செல்லக்கூடாது என்கின்றது சாஸ்திரம்.
357) எவர் ஒருவர் வீட்டில் ஸ்ரார்தம் செய்தாரோ, அன்றைய தினம் ஸ்ரார்த்தம் முடிந்ததும் அவரோ அவர் குடும்பத்தினரோ மரண துக்கம் விஜாரிக்க இன்னொரு வீட்டிற்கு செல்லக் கூடாது.
358) தீட்டு முடியும்வரை தீட்டு உள்ள வீட்டினர் எந்த ஒரு புண்ணிய காரியங்களுக்கோ, புண்ணிய சடங்குகளுக்கோ அல்லது ஆலயத்துக்கோ செல்லக் கூடாது.
359) எத்தனைதான் அதிக வயதானவர் என்றாலும், தீட்டு உள்ள காலத்தில், தீட்டு இல்லாதவர்கள் அல்லது அதே வீட்டில் உள்ளவர் கூட அந்த வயதானவரை நமஸ்கரிக்கலாகாது.
360) ஒரு தீட்டுக்காரன் மற்றொரு தீட்டுக்காரனைத் தொடக் கூடாது. தீட்டுள்ளவன் வீட்டுக்கும் அவன் சாமான்களுக்கும் தீட்டுண்டு. ஆகவே தீட்டுள்ளவன் வீட்டுக்குச் சென்று விட்டு தம் வீடு வந்ததும் இன்னொரு முறை ஸ்நானம் செய்ய வேண்டும்.
361) இரங்கல் தெரிவிக்க மரணம் அடைந்தவர் வீட்டிற்கு செல்பவர்கள், தமது வீடு திரும்பிய பிறகு, தங்கள் கால்களை வீட்டிற்கு வெளியே தண்ணீர் விட்டு அலம்பிக் கொண்ட பின்னரே வீட்டிற்குள் நுழைய வேண்டும். பின்னர் உடனடியாக குளித்துவிட்டு, அவர்கள் அணிந்திருந்த/உடன் எடுத்துச் சென்ற அனைத்து ஆடைகளையும் நனைக்க வேண்டும். அதுவரை, வீட்டில் வேறு எந்தப் பொருளையும் தொடக் கூடாது. இவை சாஸ்திரங்களில் பரிந்துரைக்கப்பட்ட நியமனங்கள் ஆகும் .
362) ஒரு குடும்பத்தை சேர்ந்த ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள் (மகன்கள்), அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் (பேரன்கள்), அந்த ஆண் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள்(கொள்ளு பேரன்கள்), அந்த ஆண் கொள்ளுப் பேரன் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக ஏழு தலைமுறை சந்ததியில் பிறக்கும் ஆண்கள் அனைவரும் பங்காளிகள் எனப்படுவர்.
363) ஏழு பங்காளிகள் குடும்பத்தில் (முதல் குடும்பம்) உள்ள எந்த ஆண் இறந்தாலும் அந்த ஏழு பங்காளிகள் குடும்பத்தினருக்கும் ஏற்படும் தீட்டு சமமாகவே இருக்கும்.
364) ஆனால் எட்டாவது பங்காளி குடும்பத்திற்கு முதல் ஏழு பங்காளிகளில் உள்ள முதல் குடும்ப பங்காளியின் தீட்டு கிடையாது. அது இரண்டாம் பங்காளியின் குடும்பத்தில் ஏற்படும் பிறப்பின் மற்றும் மரணத்தின் மூலமே ஏற்பட்டும்.
365) முதல் தலைமுறை முதல் ஏழாவது தலைமுறை வரை ஒரு பிரிவு பங்காளிகள்; இரண்டாம் தலைமுறை முதல் எட்டாவது தலைமுறை வரை மற்றொரு பிரிவு பங்காளிகள்; மூன்றாம் தலைமுறை முதல் ஒன்பதாவது தலைமுறை வரை மற்றொரு பிரிவு பங்காளிகள்; பங்காளிகள் என்று அழைக்கப்படும் ஏழு தலைமுறை உறுப்பினர்கள் இந்த வழியில் இருப்பார்கள்.
366) ஒரு குடும்ப வம்சத்தில் ஏழு பரம்பரையினர் என்பவர்கள் யார்? உதாரணமாக ஒரு குடும்ப வம்சத்தில் பத்து பரம்பரையினர் உள்ளனர் என்று வைத்துக் கொள்வோம். அவர்களின் குடும்பத் தலைவர்கள் பெயர்கள் கோபாலன், கிருஷ்ணன், மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன், நந்தன், ரமேஷன் மற்றும் முகுந்தன் என்று வைத்துக் கொள்வோம்.
367) தீட்டுக் காலத்தை அனுஷ்டிக்கும் முதல் ஏழு பரம்பரையினர் கோபாலன், கிருஷ்ணன், மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி மற்றும் ராமன் ஆவார்கள்.
368) அடுத்த ஏழு பரம்பரையினர் கிருஷ்ணன், மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன் மற்றும் நந்தன் ஆவார்கள்.
369) அதற்கு அடுத்த ஏழு பரம்பரையினர் மாதவன், வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன், நந்தன் மற்றும் ரமேஷன்.
370) அதற்கும் அடுத்த ஏழு பரம்பரையினர் வாசுதேவன், சக்ரபாணி, உப்பிலி, ராமன், நந்தன், ரமேஷன் மற்றும் முகுந்தன் ஆவார்கள். இப்படியாகவே ஏழு பரம்பரையினர் (பங்காளிகள்) எனும் கிளை உள்ளது.
371) ஒரு குடும்பத்தில் ஏழு வயதுக்குள் சிறுவனோ அல்லது சிறுமியோ மரணம் அடைந்து விட்டால் அதன் சொந்த சகோதரர்களுக்கும் சகோதரிகளுக்கும் தாய் தந்தைக்கும் மட்டுமே பத்து நாள் தீட்டு உண்டு. அந்த குடும்பத்தின் ஏழு தலைமுறையில் உள்ள பங்காளிகளுக்கு தீட்டுக் கிடையாது.
372) ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் ஒருவருக்கொருவர் ஏழு ஆண்டுகள் தொடர்ந்து பார்க்காமலும், எந்த சம்மந்தமும் இல்லாமல் இருந்திருந்தால் ஒருவருக்கொருவர் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தில் மற்றவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு. அவர்களுக்கு பத்து, மூன்று, ஒரு நாள் தீட்டு போன்றவைக் கிடையாதாம்.
373) வீட்டில் மரணம் நிகழ்ந்து விட்டால், ஒரு வருடத்திற்கு, அதாவது முதல் வருட சிரார்த்தம் வரும்வரை, நடக்கவிருக்கும் மங்களகரமான நிகழ்ச்சியைத் தள்ளிப் போடுவது வழக்கம். இறந்தவருக்கு முதல் திவசம் கொடுத்த பிறகே ஆலயத்துக்கு சென்று தேங்காய் உடைத்து அர்ச்சனை செய்து விட்டு அதன் பின் சுப காரியங்களை தொடங்க வேண்டும்.
374) ஆனால் அனைத்து சுப காரியங்களுக்கும் ஒரு வருட இடைவெளி என்று சொல்லும் சாஸ்திரங்கள், திருமண நிகழ்ச்சிக்கு மட்டும் தோஷமில்லை என்றே சொல்கிறது. திருமணம் நிச்சயிக்கப்பட்ட வீட்டில் எதிர்பாராமல் ஒரு மரணம் நிகழ்ந்து விட்டால் திருமணத்தை தள்ளிப் போடாமல் நடத்தி வைக்கலாம் என்று சாஸ்திரம் சொல்கிறது. இருப்பினும், திருமணத்திற்கு 15 நாட்களுக்கு முன்பு மரணம் ஏற்பட்டிருந்தால், 13 நாட்கள் சடங்கு முடிந்த பிறகு திருமணத்தை வேறொரு தேதிக்கு ஒத்தி வைக்க வேண்டும்.
375) எந்த தீட்டும், தீட்டு கால முடிவில் காலையில் எழுந்த உடன் குளித்து விட்டால் விலகி விடும் என்பார்கள். ஆனால் எந்த ஒரு தீட்டுக் காலமும் காலை 8 மணி 24 நிமிடத்திற்கு அப்பால்தான் விலகும் என்பதினால் தீட்டு காலம் முடிந்ததும் காலை 8.24 மணிக்கு பிறகே குளிக்க வேண்டும் என்கிறது சாஸ்திரம். அதற்கு முன்னால் குளித்தால் தீட்டு விலகியதாக எடுத்துக் கொள்ள முடியாது, அது தொடரும் என்கிறார்கள். ஆனால் தற்காலத்தில் இதை நடைமுறையில் வைத்திருக்க முடியவில்லை என்பதினால் விடியற்காலை ஐந்து மணிக்கு மேல் குளிப்பதில் தோஷம் இல்லை என்பதாக புரோஹிதர்கள் கூறுவார்கள். ஆகவே இது விஞ்ஞான அடிப்படையில் எழுந்துள்ள நியதி அல்ல, ஓரளவிற்கு ஆன்மிகம் மற்றும் தர்ம நெறி முறைகளின் அடிப்படையில் அமைந்ததே என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
376) ஒரு குடும்பத்தில் இரவு 1.30 மணி வரை யாராவது இறந்து விட்டால் அவரது மரணம் முதல் நாளைய கணக்கில் சேரும். 1.30 மணிக்கு மேல் இறந்தால் மறுநாள் கணக்கில் சேரும் என்கின்றது சாஸ்திரம்.
377) ஒருவர் வீட்டில் சிரார்த்த காரியம் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. சிரார்த்தம் நடந்து கொண்டு இருக்கும்போதே சிரார்த்தம் செய்பவருக்கு இன்னொரு இறப்பு தீட்டு வந்துவிட்டது எனும் போது சிரார்த்தம் முடிந்த பின்னர்தான் அந்த தீட்டு துவங்கும்.
378) எந்த ஒரு பிரும்மச்சாரிக்கும் தீட்டு இல்லை. ஸ்நானம் மட்டுமே உண்டு.
379) திருமணம் நடக்கும்போது, மணப்பெண் அல்லது மாப்பிள்ளையின் பெற்றோர்கள் இறந்து விட்டால், அந்த திருமணம் முடிந்து, மணமக்களின் கிரஹப் பிரவேச சடங்கும் முடிந்து சுபமாக திருமண சடங்கை முடித்து வைக்கும் சேஷ ஹோமம் செய்யும் வரை அவர்களுக்கு தீட்டு கிடையாதாம். சேஷ ஹோமம் என்பது சில தமிழ் பிராமண திருமணங்களில், பெரும்பாலும் நான்காவது நாளில், திருமணச் சடங்குகளின் நிறைவைக் குறிக்கும் முறையில் நடைபெறும் ஒரு வேத சடங்கு ஆகும். இது திருமண முகூர்த்தத்தில் பயன்படுத்தப்பட்ட நெய்யில் இருந்து சிறு துளி எடுத்து மணமகளின் தலையில் தெளித்து திருமணமானவர்களை ஆசிர்வதிக்கும் சடங்கு ஆகும். ஆகவே அதுவரை அவர்கள் எந்த துக்கத்தையும் கடைப்பிடிக்க வேண்டியதில்லை.
380) ஒருவர் பங்காளியின் மரணத் தீட்டை அனுஷ்டித்துக் கொண்டு உள்ள காலத்தில், அவர்கள் செய்ய வேண்டிய குடும்ப சிரார்த்த தினம் வந்து விட்டால் அவர்கள் அந்த தீட்டு முடியும்வரை அவர்கள் சிரார்த்தம் செய்யக் கூடாது. பண்டிதரிடம் அடுத்த தேதி கேட்டு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
381) ஒரு சன்யாசியின் தாய் அல்லது தந்தை இறந்தால் சன்யாசிக்கு ஸ்நானம் மட்டுமே உண்டு. அதற்குள் காரணம் அந்த சன்யாசியின் உடலை அவர்கள் ஈன்று எடுத்ததினால் அந்த உடலுக்கு தர வேண்டிய மரியாதை ஆகும் அந்த செயல். தீட்டு கிடையாது.

தீட்டு காலம் : ஸ்நானத் தீட்டு:
382) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விட்ட பெண் இறந்து விட்டால் அவள் பிறந்த வீட்டுப் பங்காளிகளுக்கு தீட்டில்லை. ஆனால் இறந்த சேதி கேட்டதும் குளிக்க வேண்டும். அதாவது அவர்களுக்கு ஸ்நானத் தீட்டு மட்டுமே உண்டு.
383) மற்ற உறவினர் இறந்தால் அதைக் கேட்டதும் ஸ்நானம் செய்தால் மட்டுமே போதுமானது. அதை தீட்டு என்பதாக கருதாமல், குளிக்கும்வரை அந்த தீட்டை ஆசாரம் அற்ற நேரமாக அதாவது விழுப்பு என்று கருதுவார்கள். ஒருவேளை அந்த செய்தி வரும் முன்னரே அவர்கள் ஏற்கனவே குளித்து விட்டு இருந்தாலும் மரண செய்தியைக் கேட்டதும் மீண்டும் ஒருமுறை அவர்கள் ஸ்நானம் செய்ய வேண்டும்.
384) பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டு செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்கு பிறகு கேட்டால் அது தீட்டாக கருதப்பட மாட்டாது. அந்த செய்தி கேட்டதில் இருந்து குளிக்கும்வரை அதை ஆசாரம் அற்ற நேரமாக கருதி ஒரு ஸ்நானம் மட்டும் செய்தால் அதுவே போதுமானது.
385) ஒருவர் மரணம் அடைந்து விட்டப் பின் அவருக்காக மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டிய பங்காளிகளுக்கு அந்த செய்தி மரணம் நிகழ்ந்த நாளில் இருந்து பதினோராம் நாள் விடியற் காலையில் கிடைத்தால் அவர்களுக்கு மூன்று நாட்கள் தீட்டு கிடையாது, ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.
386) சகோதரியின் கணவர்கள் மரணம் அடைந்தால் அந்த சகோதரியின் சகோதரர்கள் ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.
387) அதே போல திருமணம் ஆன சகோதரிகள் மரணம் அடைந்தாலும் அந்த சகோதரியின் சகோதரர்கள் ஸ்நானம் செய்தால் அது மட்டும் போதுமானது.
388) ஒருவர் வீட்டு மாப்பிள்ளை இறந்தால் மாமனார் மற்றும் மாமியாருக்கு ஸ்நானத் தீட்டு.

தீட்டு காலம் : ஒரு நாள் தீட்டு
389) மூன்று நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டிய ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி, இறந்த மூன்று நாட்களுக்குப் பிறகு உறவினர்கள்/பங்காளிகளுக்கு கிடைத்தால், ஒரு நாள் தீட்டு காலம் மட்டுமே போதுமானது.
390) பத்து நாட்கள் துக்கம் அனுசரிக்க வேண்டிய ஒரு குடும்ப உறுப்பினரின் மரணம் குறித்த செய்தி, இறந்த ஆறு மாதங்களுக்கு பிறகு உறவினர்கள்/பங்காளிகளுக்கு கிடைத்தால், ஒரு நாள் தீட்டு காலம் மட்டுமே போதுமானது.

தீட்டு காலம் : ஒன்றரை நாள் பக்ஷிணீ தீட்டு
391) ஒன்றரை நாள் தீட்டை பக்ஷிணீ தீட்டு என்பார்கள். பக்ஷிணீ என்பது 90 நாழிகைகள் கொண்ட காலம். அது பண்டைய கால சாஸ்திர அளவாகும்.
392) பக்ஷிணீ தீட்டு காலம் என்பது இரண்டு பகலும் ஓர் இரவும் அல்லது இரண்டு இரவும் ஒரு பகலும் கொண்ட நேரம் ஆகும்.
393) பக்ஷிணி தீட்டு காலம் உள்ளவர்களுக்கு பகலில் மரணச் செய்தி கிடைத்தால், அந்த நாளின் இரவு மற்றும் அடுத்த நாள் பகல் மற்றும் இரவு நேரத்தை துக்கக் காலமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது செய்தி கிடைத்த இரவு + மறுநாள் பகல்+ மறுநாள் இரவு என்றாகும். மறு நாளைக்கு மறுநாள் அதிகாலையில் குளித்தால் மட்டுமே தீட்டு விலகும்.
394) அதேபோல், மரணச் செய்தி இரவில் கிடைத்தால், அந்த இரவையும் அடுத்த இரண்டு நாள் பகல் வேளையையும் துக்கக் காலமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அதாவது ஒரு இரவு + மறுநாள் பகல்+ அன்று இரவு + அடுத்த நாள் பகல் என்றாகும். அவர்கள் இரண்டாவது நாள் இரவில் அல்லது மூன்றாம் நாள் அதிகாலையில் குளித்தால் மட்டுமே தீட்டு விலகும்.
395) பக்ஷிணி தீட்டை 36 மணி நேரத்துக்குப் பிறகு அதாவது காலையில் கேட்டால் ஒரு பகல் தீட்டு, இரவில் கேட்டல் ஒரு இரவு தீட்டு மட்டுமே உண்டு.
396) பத்து நாள் தீட்டு காலம் உள்ளவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் அனுஷ்டிக்க வேண்டிய பத்து நாள் கால தீட்டை பற்றி மூன்று மாதங்களுக்கு மேல், ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு முன்னால் கேட்டால் அவர்கள் மூன்று நாட்கள் கூட தீட்டு காக்கத் தேவை இல்லை. அவர்கள் செய்தி கேட்டதில் இருந்து ஒன்றரை நாட்கள் தீட்டு காத்தால் அது மட்டுமே போதுமானது.
397) ஆனால் அதே செய்தியை அந்த குடும்பத்தினர் ஆறு மாதங்களுக்கு மேல், ஆனால் ஒரு வருடத்துக்கு முன்னால் கேட்டால், அந்த செய்தியைக் கேட்டதில் இருந்து ஒரு நாள் தீட்டு காத்தால், அது மட்டுமே போதுமானது.

தீட்டு காலம் : மூன்று நாட்கள் தீட்டு : பத்து நாட்கள் தீட்டு
398) திருமணம் ஆகி புகுந்த வீட்டுக்கு சென்று விடும் பெண்களுடைய கோத்திரம் புகுந்த வீட்டுக் கோத்திரமாகி விடுவதினால் அவர்களுக்கு பிறந்த வீட்டு தீட்டு கிடையாது. அவளுடைய தாய் மற்றும் தந்தை இறந்தால் மட்டுமே அந்தப் பெண்ணிற்கு மூன்று நாட்கள் தீட்டு உண்டாம்.
399) ஒருவருடைய மரணத்தினால் (‘Y’ குடும்பம்) இன்னொரு குடும்பத்தினருக்கு (‘X’ குடும்பம்) பத்து நாட்கள் தீட்டு ஏற்படும் என்ற நிலை. ‘Y’ குடும்ப மரணம் குறித்த அதே செய்தி பத்தாவது நாள் காலையில், தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘X’ குடும்பத்தின் தீட்டு காலம் முதல் தீட்டு காலமான பத்தாவது நாளோடு போய் விடும். அதாவது பதினோராம் நாள் குளித்த பின் இரண்டு தீட்டும் போய் விடும்.
400) ஆனால் அதே செய்தி அவர்களுக்கு பதினோராம் நாள்- குளித்த பின்னரோ அல்லது குளிக்கும் முன்னரோ- எப்போது கிடைத்தாலும் மீண்டும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும்.
401) ஆனால் அதே செய்தி அவர்களுக்கு 30 நாட்களுக்கு பிறகு எப்போது கிடைத்தாலும் மீண்டும் பத்து நாட்கள் தீட்டு காக்க வேண்டும்.
402) ஒருவருடைய மரணத்தினால் (‘Y’ குடும்பம்) இன்னொரு குடும்பத்தினருக்கு (‘X’ குடும்பம்) மூன்று நாட்கள் தீட்டு ஏற்படும் என்ற நிலை. ‘Y’ குடும்ப மரணம் குறித்த அதே செய்தி பத்தாவது நாள் காலையில், தெரிய வருகிறது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘X’ குடும்பத்தின் தீட்டு காலம் முதல் தீட்டு காலமான மூன்றாம் நாளோடு போய் விடும். அதாவது நான்காம் நாள் குளித்த பின் இரண்டு தீட்டும் போய் விடும்.
403) ஆனால் அதே செய்தி அவர்களுக்கு 10 நாட்களுக்கு பிறகு 13 நாட்களுக்கு முன்னால் எப்போது கிடைத்தாலும் ஸ்நானம் செய்தால் தீட்டு போய் விடும்.
404) ஆனால் அதே செய்தி அவர்களுக்கு 13 நாட்களுக்கு பிறகு எப்போது கிடைத்தாலும் மீண்டும் மூன்று நாட்கள் தீட்டு காக்க வேண்டும்.
405) ஒரு குடும்பத்தில் தாய் தந்தையின் மரணத்தை அவர்களது மகன்களோ, திருமணம் ஆகாத பெண்களோ எப்போது கேட்டாலும், அதாவது எதோ தவிர்க்க முடியாத காரணத்தினால், மூன்று மாதங்கள், ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடத்துக்குப் பிறகு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். தாய் மற்றும் தந்தை இறந்து எத்தனைக் காலம் ஆனாலும் சரி, அது குறித்து முதல் செய்தி எப்போது கேட்டாலும் சரி, அந்த செய்தி கிடைத்த நாள் முதல் அடுத்த பத்து நாட்கள் தீட்டு உண்டு.
406) மனைவி தனது கணவரின் மரணச் செய்தியை எப்போது பெற்றாலும் – உடனடியாகவோ அல்லது சில நாட்கள்/சில வாரங்கள்/சில மாதங்கள் அல்லது வருடங்களுக்குப் பிறகு பெற்றாலும் கூட, தனது கணவரின் மரணத்திற்காக பத்து நாட்கள் தீட்டு அனுசரிக்க வேண்டும்.
407) ஒருவருடைய மரணத்தினால் (‘Y’ குடும்பம்) இன்னொரு குடும்பத்தினருக்கு (‘X’ குடும்பம்)மூன்று நாட்கள் தீட்டு உள்ளது என்ற நிலை. ஆனால் பத்து நாட்கள் தீட்டு அனுஷ்டிக்க வேண்டிய ‘Y’ குடும்ப மரணம் குறித்த செய்தி இன்னொரு செய்தி மூன்று நாட்கள் தீட்டு காலத்தில் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘X’ குடும்பத்தின் தீட்டு காலம் முதல் தீட்டு காலமான மூன்றாவது நாளோடு போய் விடாது. மேலும் ஏழு நாட்கள் தீட்டு காத்த பின்னர் பத்தாம் நாளன்றுதான் போகும்.
408) ஒருவருடைய மரணத்தினால் (‘Y’ குடும்பம்) இன்னொரு குடும்பத்தினருக்கு (‘X’ குடும்பம்)மூன்று நாட்கள் தீட்டு உள்ளது என்ற நிலை. ஆனால் பத்து நாட்கள் தீட்டு அனுஷ்டிக்க வேண்டிய ‘Y’ குடும்ப மரணம் குறித்த செய்தி இன்னொரு செய்தி மூன்று நாட்கள் தீட்டு காலம் முடிந்து நான்காம் நாள் வந்துவிட்டது என்று வைத்துக் கொள்வோம். அப்போது ‘X’ குடும்பத்தின் தீட்டு காலம் முதல் தீட்டு காலமான மூன்றாவது நாளோடு போய் விடாது. மேலும் பத்து நாட்கள் தீட்டு காத்த பின்னர் பத்தாம் நாளன்றுதான் போகும்.
409) ஒரு குழந்தை பிறந்த பின் பத்து நாட்களுக்குள் இறந்து விட்டால், பெற்றோர்களுக்கு குழந்தை பிறப்பினால் இருந்த பிறப்பு தீட்டும், குழந்தையின் இறப்பு தீட்டும் சேர்ந்து பத்தாவது நாள் இரண்டு தீட்டும் முடிவடைந்து விடும். அதாவது பிறப்பு தீட்டும், இறப்பு தீட்டும் சேர்ந்து சம காலத்தில் முடிந்து விடும்.
410) 13 நாள் கர்மாக்களை செய்து கொண்டிருக்கும் ஒருவருக்கு, 13 நாட்கள் சடங்கு முடியும் முன்னால், குழந்தையின் பிறப்பு தீட்டும், இறப்பு தீட்டும் குறித்த செய்தி 12 நாட்களுக்குள் என்று வந்தாலும் (தனித்தனியே வந்தாலும் சரி, சேர்ந்தே வந்தாலும் சரி), 13 ஆம் நாள் காலை குளித்ததும் அனைத்து தீட்டும் போய் விடும்.
411) ஆனால் அதே குழந்தையின் மரண செய்தி 13 ஆம் நாள் சடங்கு முடிந்ததும் வந்தால் பெற்றோர்களுக்கு மீண்டும் பத்து நாட்கள் தீட்டு உண்டு.
412) பத்து நாள் தீட்டு உள்ள ஆண் ஒருவர் நோயினால் குளிக்க முடியாத நிலையில் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கிறார். அப்படி என்றால் அவருடைய தீட்டு எப்படி விலகும்? அப்படிப்பட்ட நோயாளியை எவராவது ஒருவர் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். குளித்தப் பின் மீண்டும் தொட்டு விட்டு குளிக்க வேண்டும். இப்படியாக பத்து முறை தொட்டு விட்டு பத்து முறை குளித்தால் நோயால் படுத்துள்ளவரின் தீட்டு சாஸ்திரத்தின்படி விலகி விடுமாம். நோயால் படுத்திருப்பவருக்கு பதிலாக இன்னொருவர் பத்து முறைக் குளிப்பதின் மூலம் பத்து நாளைய கர்மாவில் நோயால் படுத்துள்ளவர் கலந்து கொண்டு விட்டதாக தேவர்கள் ஏற்றுக் கொள்வார்களாம். ஆனால் அந்த நோயாளி நோய் விலகி வீடு திரும்பியதும் வீட்டில் புண்யாவசனம் செய்ய வேண்டும். இது முழுமையாக நம்பிக்கையின் அடிப்படையில், தர்ம சாஸ்திர முறையில் அமைந்த விதியாகும், விஞ்ஞான பூர்வமான காரணம் எதுவும் கிடையாது.
413) இந்து தர்மத்தில் சில விஜித்திரமான தீட்டு காலம் உள்ளது. முதலாவது நிகழ்வு – ஒருவருடைய தந்தை இறந்து விட்டார். அவரது சடங்குகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளபோது, தந்தை இறந்து பத்து நாட்களுக்குள் தாயாரும் இறந்து விட்டால் சடங்குகளை நிறுத்த மாட்டார்கள். ஆனால் இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை புரோஹிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும். தந்தையின் பத்து மற்றும் தாயாரின் பத்து நாள் தீட்டு இரண்டும் சேர்ந்தே, மொத்த தீட்டு காலமும் 13 ஆம் நாள் சுபஸ்வீகாரத்தோடு விலகி விடும்.
414) இரண்டாவது நிகழ்வு – தாயாரின் மரணம் தந்தையின் சடங்குகள் நடக்கும் 11 அல்லது 12 ஆம் நாள் ஏற்பட்டால் தந்தைக்கான சுபஸ்வீகாரம் 13 ஆம் நாள் செய்ய முடியாது, தந்தை இறந்து விட்ட 14 ஆம் நாள்தான் செய்ய முடியும். அன்றுதான் இரண்டு தீட்டும் விலகும். ஆனால் அதற்குள் இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை புரோஹிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும்.
415) தாயாரின் மரணம் தந்தையின் சடங்குகள் நடக்கும் 13 ஆம் நாள் ஏற்பட்டால் தாயாருக்காக பத்து நாள் தீட்டு உண்டு. ஆகவே 13 ஆம் நாள் தந்தைக்கு செய்ய வேண்டிய சுபஸ்வீகாரம் தாயாரின் சுபஸ்வீகாரத்துடன் 26 ஆம் நாள்தான் செய்ய முடியும். இது குறித்து இருவருக்கும் செய்ய வேண்டிய 12 நாட்கள் சடங்குகளை புரோஹிதர் கூறும் ஆலோசனையை ஏற்று அதன்படி செய்து முடிக்க வேண்டும்.
416) ஒருவருடைய தாயார் இறந்து விட்டார். அவரது சடங்குகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளபோது, தந்தை இறந்து விட்டால், தந்தை என்று இறந்தாரோ அன்றில் இருந்து பத்து நாட்கள் தீட்டு உண்டு. உதாரணமாக தாயாரின் மரண சடங்குகள் நடந்து கொண்டிருக்கும்போது ஐந்தாம் நாளன்று தந்தை மரணம் அடைந்து விட்டால் இருவரது தீட்டும் தந்தை மரணம் அடைந்த 5 + 10 = 15 ஆம் நாள் அன்றுதான் போகும். அதற்கு பின்னரே மீதம் உள்ள 11 மற்றும் 12 ஆம் நாள் சடங்குகளை செய்த பின் அதற்கு அடுத்த நாள் வீட்டில் சுபஸ்வீகாரம் செய்ய முடியும். சடங்கு கீழ் கண்டவாறு செய்யப்படும்:
• பண்டிதரின் வழிகாட்டுதலின்படி தாய்க்கு செய்யப்படும் முதல் ஐந்து நாட்கள் சடங்குகள் நடைபெற்ற பின் சடங்கு நிறுத்தப்படும் (ஐந்தாம் நாள் தந்தையின் மரண செய்தி கிடைத்த பின்).
• ஆறாவது நாளில் இருந்து அடுத்த ஐந்து நாட்கள் தந்தைக்கான முதல் ஐந்து நாட்கள் சடங்கு நடைபெறும்.
• அடுத்த நாளிலிருந்து (அதாவது பத்தாவது நாளில் இருந்து) மீதமுள்ள ஏழு நாட்கள் சடங்குகள் (12வது நாள் வரை) தாய் மற்றும் தந்தை இருவருக்கும் ஒரே நேரத்தில் செய்யப்படுகின்றன.
• இவ்வாறு மொத்தம் 17 நாட்கள் சடங்குகள் முடிக்கப்பட்டு 18வது நாளில் சுபஸ்வீகாரம் நடத்தப்படுகிறது.
417) ஒரு குடும்பத்தில் தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட சடங்குகள் நடைபெற்றுக் கொண்டு உள்ளன. அந்த சடங்குகள் முடியும் முன்னரே அந்த குடும்பத்தில் உள்ள மகன்களின் மனைவிகளோ, இல்லை மகன்களின் மகள்களோ அல்லது மகன்களோ, அல்லது திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ள மகளோ யார் இறந்து விட்டாலும் அந்த குடும்பத்தில் உள்ள அனைவருக்குமே முந்தய தீட்டோடு பிந்தைய தீட்டும் போய் விடும். அதாவது தாயாரோ அல்லது தந்தையோ இறந்து விட்டதினால் ஏற்பட்ட பத்து நாள் தீட்டு முடியும் அதே தேதியிலேயே மேலே கூறிய நிலையில், அதாவது மகன்களின் குடும்பத்தில் ஏற்படும் மரணத்தினால் (மகன்களின் மனைவிகளோ, இல்லை மகன்களின் மகள்களோ அல்லது மகன்களோ, அல்லது திருமணம் ஆகாமல் வீட்டில் உள்ள மகளோ மரணம் அடைந்து விட்டதினால்) ஏற்பட்ட தீட்டும் சுபஸ்வீகாரத்துக்கு முன்னால் குளித்ததும் விலகி விடும்.
418) தந்தையின் முதல் மனைவி உயிருடன் இருக்கையில், அவர் சட்டப்படி மணம் செய்து கொள்ளாமல் மேலும் சிலரை திருமணம் செய்து கொண்டு இருந்தால் அவருடைய இரண்டாம் மனைவி அல்லது மூன்றாம் மனைவி என யார் மரணம் அடைந்தாலும் தந்தையின் மூலம் பிறந்த பிள்ளைகள் மற்றும் பெண்களுக்கும் பத்து நாட்கள் தீட்டு உண்டாம். ஆனால் அந்த செய்தியை அவர்கள் ஒரு வருடத்துக்குப் பிறகு கேட்டால் தீட்டு காலம் மூன்று நாள் மட்டுமே.
419) மனைவி கர்பமாக இருந்தால் அவளது கணவர் வேறு எவருடைய சவத்தையும் தூக்கக் கூடாது. ஆனால் அவருடைய தாய், தந்தை அல்லது சந்ததி இல்லாத மூத்த சகோதரர்களின் சவத்தை சுமக்க தடை இல்லை.

தீட்டு காலம் : பத்து நாள் தீட்டு (ஒரு குடும்பத்தினருக்கு)
ஒரு குடும்பத்தினருக்கு கீழ் கண்டவர்களின் மரணத்தினால் பத்து நாட்கள் தீட்டு உண்டு.
• தந்தை, தாய்
• உடன் பிறந்த சகோதரர்கள்(ஸமானோதர சகோதரர்கள் என்பார்கள்), அவர்களது மனைவிகள்
• உடன் பிறந்த சகோதரர்களின் ஏழு வயதுக்கு மேல் ஆன ஆண் மகன்கள்.
• உடன் பிறந்த சகோதரர்களின் ஏழு வயதுக்கு கீழ் ஆன ஆண் மகன்கள் மரணம் அடைந்தால் ஸ்நான தீட்டு மட்டும் உண்டு. ஆனால் அவர்கள் பூணூல் போட்டு இருந்தால் பத்து நாட்கள் தீட்டு உண்டு.
• உடன் பிறந்த திருமணம் ஆகாத சகோதரிகள்
• தந்தைக்கு எத்தனை மனைவிகள் (‘ஸபத்னீமாதா’க்களின்) இருந்தாலும் அவர்களுடைய மகன்கள் (அவர்களை ‘பின்னோதர சகோதரர்கள்’ அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)
• தந்தையின் தாய் மற்றும் தந்தை (தந்தை வழி பாட்டி மற்றும் தாத்தா)
• தந்தையின் சகோதரர்கள் மற்றும் அவர்களது மனைவிகள் (பெரியப்பா, பெரியம்மா, சித்தப்பா மற்றும் சித்தி)
• தந்தை வழி பெரியப்பா மற்றும் சித்தப்பாவின் மகன்களும் (பின்னோத்ரன் அல்லது ஒன்று விட்ட சகோதரர்கள் என்பார்கள்) அவர்களது மனைவிகளும்
• 7 தலை முறை தந்தை வழி பங்காளிகள் (ஒரு ஆணுக்கு பிறக்கும் ஆண் குழந்தைகள், அந்த ஆண் குழந்தைகளுக்குப் பிறக்கும் ஆண் குழந்தைகள் என வரிசையாக வரும் சந்ததியில் ஏற்படும் அனைத்துக் கிளைகளிலும் உள்ள *ஆண்கள் அனைவரும் ‘ஸபிண்டர்கள்’ அல்லது ‘க்ஞாதி’ அல்லது ‘தாயாதிகள்’எனப்படுவர்).

தீட்டு காலம் : பத்து நாள் தீட்டு (ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கு)
கீழ் கண்டவர்களின் மரணத்தினால் ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கு பத்து நாட்கள் தீட்டு உண்டு.
• ஒரு குடும்பத்து ஆண் மகன் இன்னொருவருக்கு ஸ்வீகாரமாகி விட்டால் ஸ்வீகாரம் போன ஆண் மகனுக்கும் அவனது மனைவிக்கும் ஸ்வீகரித்த தந்தை மற்றும் ஸ்வீகரித்த தாயாரின் மரணம். (குறிப்பு:- ஒருமுறை இன்னொருவருக்கு ஸ்வீகாரம் போய் விட்டால் சாஸ்திரங்களின்படி ஸ்வீகாரம் எடுத்தவர்களே அவர்களுடைய தாயார் மற்றும் தந்தை ஆவார்கள்)
• 7 தலை முறை ஸ்வீகரித்த தந்தை வழி பங்காளிகள்
420) தீட்டு காலம் : பத்து நாள் தீட்டு (குழந்தை மரணம்)
• ஒரு குடும்பத்து ஆண்களுக்கு பிறந்து பத்து நாட்களே ஆன ஆண் குழந்தை அல்லது மணமாகாத பெண் குழந்தை என எந்த குழந்தை இறந்தாலும் கீழ்கண்டவர்களுக்கு மட்டும் பத்து நாள் தீட்டு.
• இறந்த குழந்தையின் தந்தை, தாய், மற்றும் மணமான சகோதரர்கள் மற்றும் பின்னோதர சகோதரர்கள் (அதாவது தனது தந்தை மூலம் மாற்றாம் தாய்க்கு பிறந்த ஆண்கள் என்பார்கள்)

மேலே கொடுக்கப்பட்டுள்ள துக்க நாட்கள் பின்வரும் புத்தகங்களில்
காணப்படும் தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை:

421) பல காலமாக போதிக்கப்பட்டு வந்திருந்த தர்ம சாஸ்திர நெறி முறைகளை ஆராய்ந்து அவற்றை தொகுத்து அளித்திருந்ததில் காலம் காலமாக முன்னோடியாக காட்டப்படுவது கிரந்த மொழியில் எழுதப்பட்டுள்ளதாக கூறப்படும்
1. ‘வைத்தியநாத தீக்ஷிதீயம் ஆசௌச காண்டம்’ என்பதாகும்.
அதைத் தவிர
2. 7 ஆம் நூற்றாண்டில் தமிழாசுர முனிவர் என்பவர் எழுதி உள்ள ‘ஆசௌச தீபிகை’
3. 1882 ஆம் ஆண்டில் யாழ்பாணத்தை சேர்ந்த வண்ணை மா. வைத்தியலிங்க பிள்ளை வெளியிட்டு உள்ள ‘ஆசௌச தீபிகை‘,
4. எழு நூறு வருடங்களுக்கு முன்னர் சிதம்பரத்தில் வாழ்ந்த அகோர சிவாச்சாரியார் என்பவரினால் ஆகம நூல்களில் இருந்து எடுத்து தொகுக்கப்பட்டு எழுதப்பட்ட ‘அகோர சிவ பத்ததி’ என்னும் சைவ சமயக் கிரியைகளுக்கான கை நூல்
5. மஞ்சன்குடி வெங்கடராம சாஸ்திரிகள் எழுதிய ‘ஸம்க்ஷேப தர்ம சாஸ்திரம்’
6. நித்யகாம்ய மஹாயக்ஞ சமிதியின் ‘ஆசௌசச் சுருக்கம்’
7. 1933 ஆம் ஆண்டு திருவையாறு ஸ்ரீநிவாஸ பிரஸ் வெளியீடான ‘அபிநவாசௌச ஸங்கரஹம்’
8. ஸ்ரீ ஜகத் குரு டிரஸ்ட் வெளியீடான ‘இறப்பு தீட்டு’
9. 1937 ல் தஞ்சை மாவட்டம் பாபனாசம் தாலுகா கீழவிடயல் கிராமம் ஸ்ரீ ஆர். முத்துசாமி அய்யர் எழுதி வெளியிட்டுள்ள ‘வர்ணாஸ்ரம தர்ம சாஸ்திரம்’
10. கொக்குவில் வைதீககிரியாரத்னம் மயிலணி பிரும்மஸ்ரீ சோமாஸ்கந்த குருக்கள் எழுதி உள்ள ‘சிரார்த்த நியமங்கள்’ மற்றும்
11. சென்னை திருவல்லிக்கேணி காரிமாறன் கலைகாப்பகம் வெளியிட்டு உள்ள ‘சூதகமும் ஆசௌசமும்’ எனும் புத்தகம் போன்றவற்றில் மரணத் தீட்டு மற்றும் அதன் சடங்குகள் பற்றிய பல அரிய செய்திகள் உள்ளன.
422) தீட்டு காலம் குறித்த விவரங்களை மேல் கூறிய நூல்களில் காணப்பட்ட செய்திகளின் அடிப்படையில் தொகுத்து எழுதி உள்ளேன். பண்டை காலத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள புத்தகங்களில் காணப்படும் பல செய்திகள் எளிதில் பாமர மக்களுக்கு விளங்கவில்லை என்பதினால் , பல வார்த்தைகளுக்கான விளக்கத்தை அகராதிகளில் தேடித் பார்த்து முடிந்தவரை அவை அனைத்தையும் விளக்கி உள்ளேன்.

கட்டுரை முடிந்தது