ஹிரண்யகஷிபுவின் மகன்  பிரஹலாதன்
எப்படி விஷ்ணுவின் பக்தன் ஆனான் ?
சாந்திப்பிரியா

நாம் அனைவருமே ஹிரண்யகஷிபு நரசிம்ம அவதாரம் பெற்ற மகாவிஷ்ணுவினால் கொல்லப்பட்ட கதைதான் பெரும்பாலும் அறிந்து இருபோம். ஆனால் அது ஏன் நடந்தது, ஹிரண்யகஷிபுவிற்கு பிரஹலாதன் மகனாகப் பிறந்தது ஏன் என்பதையோ அவன் எப்படி விஷ்ணுவின் பக்தனாக இருந்தான் என்ற கதையையோ பலருக்கு தெரிந்து  இருக்காது. காரணம் பல புராணங்களில் கூட அந்தக் கதை மாறுபட்டு உள்ளது.
ஒரு ஜென்மத்தில் ஹிரண்யகஷிபுவும், அவனுடைய சகோதரரான ஹிரண்யாஷ்டசகனும் வைகுண்டத்தில் ஜெயா- விஜயா எனும் பெயர்களில் துவாரகாபாலகர்களாக இருந்தவர்கள். அவர்கள் ஒருமுறை பிரும்மாவின் மகன்களை வைகுண்டத்தில் நுழைய விடவில்லை என்பதினால் அவர்கள் மூன்று  யுகங்களில் ஆண்களாக  பூமியில் பிறந்து விஷ்ணுவினால் அல்லது விஷ்ணுவின் ஏதாவது ஒரு அவதாரத்தினால்  மரணம் அடைவார்கள் என  சபிக்கப்பட்டார்கள். அப்போது அவர்கள் பார்வதியிடம் சென்று அழுதபடி பெண்களான  தமக்கு விடிமோட்ஷம் தருமாறு வேண்டினார்கள். அவளும், அவர்களின் சாபத்தை தன்னால் மாற்ற முடியாது என்றும், ஆனால் அவர்கள் மூன்று யுகங்களிலும் சாபத்தைக் களைந்து கொண்டப் பின் மீண்டும் அவர்கள் பெண் துவாரகாபாலகர்களாகி, சக்தி தேவிகளின் காவல் தேவதைகளாக இருப்பார்கள் என வரம் கொடுத்தாள். அதனால்தான் சக்தி தேவியின்  ஆலய சன்னதியின் கருவறையில் ஜெயா-விஜயா என்பவர்கள் காவல் தேவதைகளாக  நிற்கிறார்களாம். பிரும்மாவின் சாபத்தினால் மூன்று அசுரர்களின் அவதாரங்களை மூன்று ஜென்மங்களில் எடுத்த ஜெயாவும் விஜயாவும்,  அவர்களது  கடைசி பிறப்பில்  வராக ரூபத்தில் வந்த விஷ்ணுவினால் கொல்லப்பட்ட ஹிரண்யாஷ்டசகனாக ஒருவளும், பக்த பிரஹலாதனின் தந்தையாக ஹிரண்யகஷிபு  என்றவனாகவும் வந்து  நரசிம்ம அவதாரம் எடுத்த விஷ்ணுவினால் கொல்லப்பட்டான். அதன் பின் சாப விமோசனம் பெற்றவர்களை சக்தி தேவியானவள் தனது ஆலய காவல் தேவதைகளாக நியமித்துக் கொண்டாளாம்.
ஹிரண்யகஷிபு பல அறிய  வரங்களையும் , அவனை எளிதில் அழிக்க முடியாத அளவிற்கான வரங்களையும் பிரும்மா மூலம் பெற்று இருந்தவன். அவனால் அனைத்து  தேவர்களும், ரிஷி முனிவர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு இருந்தார்கள்  . அவனைக் கண்டு அஞ்சி ஓட வேண்டி இருந்தது. அத்தனை வலிமை மிக்கவனாக இருந்தும் தனக்கு இன்னமும் அதிக சக்தி வேண்டும் என்று எண்ணியவன் சிவனை வேண்டிக் கொண்டு ஐம்பது வருட கடும் தவத்தில் அமர்ந்து கொண்டான்.  அந்த தவத்தில் அவன் வெற்றி அடைந்துவிட்டால் அவனே மூலோகங்களின்- தேவலோகம், வைகுண்டம் மற்றும் கைலாயங்களின் அதிபதி ஆகிவிடுவான்.  அவனுக்கு பூரக ஜென்ம சாபமான விஷ்ணுவினால் மரணம் என்பதும் இருக்காது  என்பதினால் அனைத்து தேவர்களும், ரிஷி முனிவர்களும் கவலைக் கொண்டார்கள்.

 அந்தப் பறவையைக் கொல்கிறேன் எனக் 
கோபமாக எழுந்தான் ஹிரண்யகசிபு 

அவனோ தவத்தில் யாருக்கும் சளைத்தவன் அல்ல. கடுமையான விரதம் பூண்டு அன்ன ஆகாரம் இன்றி தவம் இருப்பவன். ஆகவே மேற்கூறிய காரணத்தினால் அவன் தவத்தைக் கலைக்க வேண்டியது அவசியம் ஆயிற்று. தேவர்கள் அனைவரும் சென்று   ஏழு உலகிலும் அப்போது இருந்த எவராலும், எதனாலும் மரணம் சம்பவிக்க முடியாது என்ற அழியா வரத்தை ஹிரண்யகஷிபுவிற்கு தந்து இருந்த பிரும்மாவிடம் சென்று தமது கவலையை தெரிவித்தார்கள். அவரும் கவலை அடைந்தார்.  தான் செய்து விட்ட தவறினால் அவன் எளிதில் அழியா வரம் பெற்று விட்டான். என்ன செய்வது எனக் கவலைப்பட்டவர் நாரதரை அழைத்தார். அவரிடம் ஹிரண்யகஷிபுவின் தவத்தைக் கலைக்கவும், அவனைக் கொல்லவும்  ஏதாவது உபாயம் உள்ளதா எனக் கேட்டார். நாரதர் அவரைத் தேற்றினார். கவலைப்பட வேண்டாம் என்றும், அதற்கான உபாயத்தை தான் செய்வதாகவும் கூறி விட்டு சென்றார்.
அதற்கு முன்னரேயே நாரதர் விஷ்ணுவிடம் ஆலோசனை பெற்று இருந்தார்.  அதன்படி வெண்ணை திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்க வேண்டும் என்பதினால்   தவத்தின் முடிவில்தான் அவன் தவத்தைக் கலைக்க வேண்டும் என எண்ணிய நாரதர்  , ஹிரண்யகசிபு   நாற்பத்தி ஒன்பது ஆண்டுகளாக அவன்  தவத்தில் இருந்த இடத்தின் அருகில் இருந்த மரத்தில் ஒரு பறவையின் உருவில் சென்று அமர்ந்து கொண்டார். அதன் மீது அமர்ந்து கொண்டு வேண்டும் என்றே, உரத்தக் குரலில் ‘ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…’எனக் கத்திக் கொண்டே இருந்தார். சிவபெருமானை துதித்தபடி தவத்தில் அமர்ந்து  நாற்பத்தி ஒன்பது வருடங்களாகி விட்டது. இன்னும் ஒரே ஒரு வருடம்தான்  பாக்கி. அவன் தவத்தினால் மனம் மகிழ்ந்து இருந்த  சிவபெருமான் அவனுக்கு காட்சி தர தன்னை தயார் செய்து கொண்டு இருந்தார். அந்த நேரமே அதைத் தடுக்க சரியான நேரம் என்பதை உணர்ந்த நாரதர் அந்த நேரத்தை தேர்ந்து எடுத்து ர் தவத்தில் இருந்தவன் காதுகளில் அந்த ஒலி பெரியதாக சென்று விழும் வகையில் பறவை போல கத்திக் கொண்டு இருக்க அவன் தவம் கலைந்தது. நாற்பத்தி ஒன்பது வருட தவம் செய்தது வீணாயிற்று.  எந்தப் பறவை அப்படி கத்துகிறது என கோபத்துடன் அதை கொல்வதற்காக மரத்தில் அதை தேடியபோது அது பறந்து சென்று விட்டது. ‘ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என்ன நாராசம் இது …இந்தப் பறவை என் நாற்பத்தி ஒன்பது வருட தவத்தையே கலைத்து விட்டதே’ என ஆத்திரத்துடன் அரண்மனைக்கு திரும்பினான்.

காயாது  வயிற்றில் இருந்தக் குழந்தையின் 
நினைவும், மனதும் விஷ்ணுவையே 
நோக்கி ஓடிக்  கொண்டு இருந்தது 
 

அப்போதுதான் அவன் மனைவியான ‘காயாது’ என்பவள்  குளித்து விட்டு வந்திருந்தாள். ‘என்ன தவம் முடிந்து வரங்களை பெற்றுவிட்டீர்களா’ என ஆர்வத்துடன் அரைகுறை ஆடையுடன் இருந்தவள் அவனை வந்து கட்டிக் கொள்ள, அவளை அந்த நிலையில் கண்ட அவனுக்கு காமவெறி தலை தூக்கியது. ‘அனைத்தும் குளறுபடியாகிவிட்டது….எதோ ஒரு  பறவை வந்து ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…எனக் கூவிக் கொண்டே என் தவத்தை கலைத்து விட்டது’ என ஆத்திரத்துடன் மீண்டும் மீண்டும் அதையே கூறிக் கூறிக் கொண்டு அவளுடன் உடலுறவை தொடர்ந்து கொண்டிருக்க   அவனுடைய உயிர் அணுவும் ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என்ற மந்திரத்தை கிரகித்துக் கொள்ள  அந்த உயிர் அணுவினால்  கர்பமுற்ற ‘காயாது’ வயிற்றில் இருந்தக் குழந்தையான பிரகலாதனும் விஷ்ணுவின் நாமத்தை ஜெபித்தபடியே இருந்தான்.

 தனக்குப் பிறந்தக் குழந்தையே 
தன்னை கொல்ல அவதாரம் எடுத்துள்ளது எனத் 
தெரியாமல் மகிழ்ச்சியுடன் அதை கொஞ்சினான் 
 

இன்னொரு புராணக் கதையின்படி ஹிரண்யகசிபு தவத்தில் அமரும் முன் அவன் தனது மனைவியான ‘காயாது’ என்பவளை கர்பவதியாக்கி இருந்தான். அவன் தவத்தில் அமர்ந்து இருந்த நேரத்தில் ஹிரண்யகசிபுவை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்திரன் அங்கு வந்து  கர்பமுற்று இருந்த ‘காயாது’வை இழுத்துக் கொண்டு போகத் துவங்கியபோது அவள் மயக்கம் அடைந்தாள்.  அப்போது நாரதர் அங்கு  கோபமாக வந்து அவனை வழிமறித்தார்.   ‘நீ செய்வது உனக்கே சரியாக உள்ளதா இந்திரா, இவளுக்கு பிறக்க உள்ள குழந்தை விஷ்ணுவின் பக்தனாகி, அவன் மூலமே அந்த அசுரனை விஷ்ணு பகவான் அழிக்க உள்ளார் என்பதினால்தான்  இவள் வயிற்றில் இந்தக் குழந்தையை வளரச் செய்துள்ளார். ஒரு பெண்ணை, அதுவும்  ஒரு கர்பிணியை, உன்னுடன் உனக்கு நிகராக சண்டைப் போட்டு தன்னை விடுவித்துக் கொள்ள முடியாமல் உள்ள இவளை நீ  அவமானப் படுத்தியதினால், இந்த பாவச் செயலை செய்த நீ பிரும்மஹத்தி தோஷம் பிடித்து அலைவாய். உடனே அவளை விட்டு விட்டு  இந்த இடத்தை விட்டுச்  செல்’ எனக் கோபமாகக் கத்தியப் பின், ஒரு ரிஷி உருவில் தன்னை மாற்றிக் கொண்ட அவர் மயக்கம் அடைந்துக் கிடந்தவளை  தண்ணீர் தெளித்து எழுப்பினார். அதனால்தான் இந்திரன் கௌதம முனிவரின் மனைவியான அஹில்யாவிடம் முறை கேடாக நடந்து சாபம் பெற்ற சம்பவம் நடந்தது. அஹில்யாவின் சாபத்தினால் இந்திரன் உடம்பு முழுவதும் பெண் அங்கங்களாக மாறி அவமானப்பட்டு நாரதர் மூலம் மீண்டும் விமோசனம் பெற்றார்.  மயக்கம் தெளிந்த ‘காயாதுவை’ ரிஷி உருவத்தில் இருந்த நாரதர் தான் யார் என்பதைக்காட்டிக் கொள்ளாமல், அவளை பத்திரமாக அவள் வீட்டில் கொண்டு சேர்த்தார். போகும் வழி முழுவதும் வேண்டும் என்றே ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என கூறிக் கொண்டே அவர் சென்றபோது அவள் வயிற்றில் இருந்தக் குழந்தை அந்த மந்திரத்தை தம்மை அறியாமலேயே கிரகித்துக்  கொண்டது. அதன் நினைவெல்லாம் நாரயணராகி விட்டது.  வீடு திரும்பிய ‘காயாது’வும் நடந்த நிகழ்ச்சியைப்  பற்றி ஹிரண்யகசிபு வந்தால் கூற வேண்டும், அந்த ரிஷி உருவில் இருந்த நாரதர் உச்சரித்துக் கொண்டு இருந்தது சக்தி வாய்ந்த மந்திரம் என்பதை அறியாமல், அவர் எதோ முணுமுணுத்தார் என எண்ணிக் கொண்டு  அந்த வார்த்தையை நினைவு வைத்திருந்து ஹிரண்ய கஷிபுவிடம் கூற வேண்டும்  என்பதற்காக அவ்வப்போது ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா….ஓம் நமோ நாராயணா…என தன் மனதில் நினைவுபடுத்திக் கொண்டே கொண்டே இருக்க அவள் வயிற்றுக்குள் வளர்ந்து வந்த  பிரஹலாதனும்  அதை இன்னமும் நன்றாக கிரகித்துக் கொண்டான். அதனால்தான் அவன் விஷ்ணுவின் பக்தன் ஆனான்.