சித்தர்களைப் பற்றி  தெரியாத தகவல்கள்…..விளங்காத தத்துவம்
சாந்திப்பிரியா

சில நாட்களுக்கு முன்னர் முன் பின் தெரியாத ஒரு அன்பர் என்னுடன் பேசிக் கொண்டு இருக்கையில் புதுவையில் உள்ள மகான்களைப் பற்றிக் கூறிக் கொண்டு இருந்தார். இடையே அவர் பழனி சித்தர் என்ற ஒரு மகானைக் குறித்தும் குறிப்பிட்டார். நம்மை அறியாமலேயே பல சித்தர்கள் மனித உருவங்களில் நடமாடுவதாகவும், அவர்கள் தம்மை சில காரணங்களுக்காக வெளிப்படுத்திக் கொள்வது இல்லை என்றும், ஆனால் அவர்களையும் மீறி அவர்களது சக்தி வெளிப்படும்போது மட்டுமே அவர்கள் சித்த புருஷர்கள், அமானுஷ்ய சக்தி பெற்றவர்கள் என்பது தெரிய வருவதாகவும் கூறினார்.  அவர் மேலும் சில விஷயங்களைக் கூறினார். அவை எனக்கு தெரிந்திராதவை. இப்படித்தான் நான் பல புதிய விஷயங்களை தெரிந்து கொண்டு வரலாற்றிலும்  உள்ளனவா என தேடிய பின் எழுதுவதை வழக்கமாக கொண்டுள்ளேன்.   ஆகவே நான் கேட்டறிந்தவற்றை  மற்றவர்களும் அறிந்து கொள்ளட்டும், அதில் அவற்றைக் குறித்த மேலும் பல தகவல்கள் கிடைக்கலாம் என்றே அவற்றை வெளியிடுகிறேன். சித்தர்களைக் குறித்து  நான் பலரிடமும் எண்ணங்களை பரிமாற்றம் செய்து கொள்வது உண்டு.   அந்த நிலையில் நான் ஒருமுறை ஒரு பண்டிதரிடம் பேசிக்  கொண்டு இருந்தபோது   கிடைத்த சில தகவல்களை  கீழே தந்துள்ளேன்.

சித்தர்கள் என்பவர்கள் உண்மையிலேயே யார்? சித்தர்கள் தேவ கணங்களின் முன் பிறவிகள் என்கிறார்கள். அதாவது தேவ கணங்களாக மாற உள்ள நிலையின் முன் நிலையில்  உள்ளவர்களே சித்தியை அடைந்தவர்கள், அதாவது சித்தர்கள் (சித்தம் என்றால் புத்தி, தம் என்றால் சமிஸ்கிருதத்தில் முழு சக்தியுடன் இழுத்து வைப்பது என்பது பொருளாகும். ஆகவே அந்த நிலையில் உள்ளவர்களே சித்தத்தை இழுத்து அடக்கி வைத்துள்ள பிறவிகளான சித்தர்கள்) எனப்படுபவர்கள். உண்மையில் அவர்கள் அனைவருமே தமது இறுதி வாழ்வில் தேவ கணங்களாக மாறி சென்று விடுவதினால் அவர்கள் அவர்களுக்கு மேலுலகில் இருந்து கிடைக்கும் உத்தரவின்படி அங்காங்கே சென்று எந்தெந்த வழி முறையில் வசிக்க வேண்டுமோ அப்படியே வசித்தவாறு அங்காங்கே வாசம் செய்வது உண்டு. அதனால்தான் சித்தர்கள் சாதாரணமாக ஒரே இடத்தில் தங்கியது இல்லை, அவர்களின் தோற்றங்களும் மாறுபட்டு உள்ளன. சிலர் முனிவர் போல இருப்பார்கள். சிலர் சாதாரண மனித உருவில் இருப்பார்கள். சிலர் துறவிகளைப் போல காணப்படுவார்கள்.   சித்தர்கள் தேவகணங்களாக மாறி விடுவதினால்தான் சித்தர்களினால் வானிலே பறவைகளைப் போல பறக்கவும் முடிகிறது.   இயற்கை சீற்றங்களும், மாறுதல்களும் அவர்களை எந்த விதத்திலும் துன்புறுத்துவது இல்லை. மழை, காற்று என எந்த இயற்கை சீற்றங்களும் அவர்களை பாதிப்பதும் இல்லை. கண் எதிரிலேயே நம்முன் நிற்கும் சித்தர்கள் அடுத்தகணம் ஆயிரம் ஆயிரம் மைல் தொலை தூரத்தில் சென்று நிறைக்க முடியும்  எனும் ஆற்றலைப் பெற்றவர்கள். (இந்த நேரத்தில் கௌதம புத்தர் இந்தியாவில் இருந்து ஸ்ரீ லங்காவிற்கு தனது பரிவாரங்களுடன் பறந்து சென்ற  கதையும், போகர் பழனியில் இருந்து வானிலே  பறந்து சென்ற கதையையும்  நாம் நினைவு கொள்ள வேண்டும்) சித்தர்கள் ஏன் தேவகணங்களாகி விடுகிறார்கள்? அந்த தத்துவம் என்ன?

சித்தர்கள் இயற்கையிலேயே சித்தர்களாகப் பிறக்கின்றார்களா அல்லது பிறந்தவர்கள் சித்தர்களாக மாறுகிறார்களா, அவர்கள் எப்படி சித்த சக்தியைப் பெறுகிறார்கள்? என்றால் அதற்கு சரியான விடை எவரிடமும் இல்லை என்றாலும் பொதுவான கூற்றின்படி உண்மையில் சில குறிப்பிட்ட ஆத்மாக்களே சித்தர்களாக சில உருவங்களில் அவதரிக்கிறார்கள். அப்படி பிறப்பு எடுப்பவர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்துக்குப் பிறகே வெளி உலகிற்கு தம்மை சித்தர்கள் என்ற உண்மையை மெல்ல மெல்ல வெளிப்படுத்திக் கொள்வார்கள் என்கிறார்கள்.

சித்தர்கள் ஏன் பூமியில் வந்து சித்த அவதாரத்தை மேற்கொள்ள வேண்டும்? அந்த தத்துவம் விசித்திரமானது மட்டும் அல்ல, எளிதில் விளங்காத புதிரும் ஆகும். சித்தர்கள் யார்? சித்த பிறப்பின் தத்துவம் என்ன என்றால் தேவ கணங்களாக மாறவேண்டிய நியதியில் பிரபஞ்சத்தில் பிரும்மனால் ஒரு காலத்தில் படைக்கப்பட்ட ஆத்மாக்கள். அந்த நிலையை அடைய அதாவது ஆத்மாக்களின் சித்தம் சுத்தம் பெற வேண்டும் என்பதினால் சில நிலைகளில் வாழ வேண்டும். அதை சித்தம்  தவம் அதாவது சித்தவம் என்பார்கள். இது என்ன என்பதை கீழே  விளக்கி உள்ளேன்.  பூமியிலே சித்தர்களாக பிறந்து அங்கிருந்து தேவ கணங்களாக மாற வேண்டிய ஆத்மாக்கள் அதற்கு முன் பிறவிகளில் முனிவர்களாக, ரிஷிகளாக சில யுகங்களில் படைப்பைப் பெற்று தெய்வீக நிலை அடைய பக்குவப்படுத்தப்பட்ட தேவ கணங்களே. தேவ கணங்களாக மாற வேண்டிய ஆத்மாக்கள் சில யுகங்களில் வாழ்ந்து சில நியமங்களை கைக்கொள்ள வேண்டி உள்ளது என்பதற்காகவே அந்த ஆத்மாக்கள் நான்கு யுகங்களிலும் பிறப்பை எடுத்து அந்தந்த யுகங்களின் வாழ்வினில் இருந்தவாறு அங்கு அவர்களுக்கு விதிக்கப்படும் தெய்வ சோதனைகளில் வெற்றி பெற்று தேவ கணங்களாகி விடுவார்கள்.

அந்த தெய்வ சோதனையில் வெற்றி பெற்று தெய்வீக நிலை அடைய அல்லது ஆத்மாவாக மாற நான்கு நிலைகளில் அந்த ஆத்மா பயணிக்க வேண்டி உள்ளது. அதற்கு பல யுகங்கள் ஆகலாம். இங்கு கூறப்படும் நிலை என்பதும், யுகம் என்பதும் வெவ்வேறானது. இன்றைக்கு நம் முன் துறவியாக, முனிவராக, ரிஷிகளாக மற்றும் சித்தர்களாக காணப்படுபவர்களது ஆத்மா பல யுகங்களில் சஞ்சரித்து பல தெய்வீக சோதனைகளை அனுபவித்து விட்டு வந்துள்ளவை. அது நம் கண்களுக்கு தெரிவது இல்லை. மிக வியப்பான அந்த நியதி என்ன?

பிரும்மன் பிரபஞ்சத்தில் படைத்த ஆத்மாக்கள் அதனதன் பாவ புண்ணியங்களுக்கு ஏற்ப மனித, மிருக மற்றும் செடி கொடிகளாக பிறப்பு எடுக்கின்றன. அப்படி பிறப்பு எடுக்கும் ஆத்மாக்களில் சில ஆத்மாக்கள் மட்டும் மட்டும் தேவ கணங்கள் ஆக வேண்டும் என்ற நியதியுடன் படைக்கப்பட்டன. படைக்கப்பட்ட ஒவ்வோர் ஆத்மாவும் பல எண்ண அலைகளை உள்ளடக்கியவை. அவற்றில் நான்கு  யுகங்களின்  வாழ்நிலையும்  மற்றும் தெய்வீக மன நிலையும்  அடங்கியே இருக்கும். வாழ்நிலை எனும்போது மனித வாழ்நிலை கொண்ட எண்ண அலைகளும் தெய்வீக  எண்ண  ஓட்டங்களும் அடங்கும்.  தேவகணங்கள் என  ஆகி விட்டால் அவற்றுக்கு தெய்வீக எண்ண  நிலை மட்டுமே இருக்க வேண்டும். அப்போதுதான் அவை தெய்வங்களின் சில சக்திகளை அடைய முடியும். ஆகவே அப்படி தேவகணங்கள் ஆக வேண்டும் எனில் அந்த ஆத்மாக்கள் பூலோகத்தில் சென்று சில கடமைகளை செய்து முடிக்க வேண்டும். அதாவது மெல்ல மெல்ல உலக வாழ்வு எண்ணங்களின்  நிலை  மற்றும் மனித எண்ண அலைகளை அந்த ஆத்மாவானது முற்றிலுமாக அழித்துக் கொண்டு வர வேண்டும்.

இங்கு ஒரு கேள்வி எழக்கூடும். ஆத்மாக்களின் எண்ண அலைகளை தெய்வீக எண்ண அலைகளாக மாற்றிக்கொள்ள அவை ஏன் நான்கு யுகங்களில்  பிறப்பு எடுக்க வேண்டும்? அவற்றை படைத்த பிரும்மன் அந்த எண்ண அலைகளை தேவலோகத்திலேயே மாற்றி அமைக்கலாமே! அது முடியாது என்பதுதான் பிரும்ம ரகஸ்ய தத்துவத்தின் மிக முக்கியமான அம்சம்.  அந்த ஆத்மாக்கள் படைக்கப்பட்ட போதே அவை அனைத்து எண்ண அலைகளையும் தன்னுள் பதிவு செய்து கொண்டுதான் வெளிவரும். ஒவ்வொரு எண்ண அலைக்கும் இத்தனைக் காலம் முதல் இத்தனைக் காலம் என்ற ஒரு வாழ்வு காலம் உண்டு. அதை யுகங்களில் அவதரித்தே சில நியமங்களை அனுஷ்டித்து குறைத்துக் கொள்ள முடியும் என்பதும் அதில் ஒரு சின்ன விதிமுறையாக தரப்பட்டு உள்ளதாம். அதற்கு முன் அவற்றை அழிக்க முடியாது என்பதினால்தான் அவற்றை படைத்த பிரும்மனாலும் அதை உடனடியாக செய்ய இயலாது என்பது பிரும்ம நியதி. ஒவ்வொரு ஆத்மாவின் எண்ண அலைகளின் காலம் நாள் கணக்கில் வருடக் கணக்கில் ஒன்றல்ல, இரண்டல்ல, அது  பல யுகக் கணக்கில்  இருக்கும். அதனால்தான் பிரும்மனே  படைத்த ஆத்மாக்களின் எண்ண அலைகளை அந்த பிரும்மனால் கூட அந்த எண்ண  அலைகளின் காலத்தை எளிதிலே மாற்ற முடியாது.  ஆனால் அந்த காலக் கட்டத்தை அந்த ஆத்மாக்கள் சில யுகங்களில் அவதரித்தே சில நியமங்களை அனுஷ்டித்து குறைத்துக் கொள்ள முடியும் என்பது விதிமுறையாக தரப்பட்டு உள்ளதினால்தான் பக்தி மார்கத்தின் மூலம் சில நன்மைகளை அடைகிறார்கள் என்பது பிரும்ம  ரகஸ்யத்தின் விதி.

பிரும்மன் ஆத்மனை படைத்தபோது அவற்றுக்குள் தேவலோகத்தில் அழிக்க இயலாத உலகப் பற்றுக்கான எண்ண அலைகளை பதித்தே அனுப்பி இருந்தார் என்று கூறினேன் அல்லவா. அந்த உலகப் பற்றுடனான எண்ண அலைகள் முற்றிலும் அழிந்தால் மட்டுமே முழுமையான தெய்வீக எண்ண அலைகள் அந்த உயிரினங்களில் பதியும். பிரும்மன் படைத்த ஆத்மனில் உள்ள எண்ண அலைகளை ஒரு நாளில், ஒரு வருடத்தில் அல்லது ஒரு யுகத்தில் அழித்து விட முடியாது. அவற்றுக்குள் பதிக்கப்பட்டு உள்ள எண்ண அலைகள் அழிவதற்கும், மாறுதல் அடைவதற்கும் பல காலம் பிடிக்கும். ஒவ்வொரு யுகத்திலும்  அந்த ஆத்மாக்கள் பிறப்பு எடுத்து தமக்குள் பதிந்துள்ள எண்ண அலைகளை எந்த விதத்தில்  மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ள முடியும் என்பதும் அவற்றில் பதிக்கப்பட்டு உள்ளன.

அதனால்தான் பூமியிலே பிறந்து ரிஷி முனிவர்களானவர்கள் , ஏன் பூமியிலே அவதரித்த தெய்வங்கள் கூட எளிதில் தாம் வேண்டியதை அடைய முடியாமல் பல்லாயிரம் ஆண்டுகள் தவம் செய்தே வரங்களைப் பெற்றதாக வரலாறும், புராணங்களும் தெரிவிக்கின்றன. அதன் காரணம் எண்ண அலைகள் பதிக்கப்பட்ட ஆத்மாக்களின் நிலை மாறுதல் அடைய அத்தனைக் காலம் காத்துக் கிடக்க வேண்டி உள்ளது.  இப்படியாக யுக யுகமாக அவதரிக்கும் தேவ கணங்களாக மாற உள்ள ஆத்மாக்களின் எண்ண அலைகள் மாறுதல் அடைந்து தெய்வீக நிலையை அடைவதைத்தான் சித்த நிலை என்பார்கள். அந்த நிலையை அடைய வேண்டுமானால் அந்த ஆத்மாவானது உயிரினமாக பிறப்பு எடுத்து நான்கு யுகங்களிலும் வாழ்ந்து அந்த எண்ண அலைகளை தன்னுள் (உயிரினத்தில்) இருந்து மெல்ல மெல்ல விலக்கிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு கேள்வியும் எழும். அதென்ன நியதி தெய்வ கணமாக மாறுவதற்கு  சித்த அவதாரம் எடுக்க வேண்டும்? ஏன் ரிஷி மற்றும் முனிவர்கள் அந்த நிலையை அடைய முடியாதா?  இதுவும் பிரும்ம ரகஸ்யத்தின் ஒரு தத்துவமே. அதென்ன விதி என ஆச்சர்யமாக உள்ளதா? இதைப் படியுங்கள்.

தேவகணம் ஆவதற்கு முன்னர் ஆத்மாக்கள் கைகொள்ள வேண்டியது    நான்கு நிலைகள்.  அந்த நான்கு வழிமுறைகளே துறவித்தனம், முனித்தனம் (முனிவராதல்), ரிஷிபந்தனம் அதாவது முனிவர் நிலையில் இருந்து ரிஷியாக ஆகுதல், மற்றும்  கடைசி கட்டத்தில் தேவ கணத்தின் முன்னிலையான சித்தராகுதல் என்பன. அப்படி என்றால் ரிஷி முனிவர்களை விட சித்தர்கள் நிலை மேன்மையானதா என்ற கேள்வி எழக்கூடும். நீங்கள் யாரேனும் ரிஷிகளோ அல்லது முனிவர்களோ வானத்தில் பறந்து சென்றதாகவோ, ஒரு இடத்தில் இருக்கும்போதே இன்னொரு இடத்தில் அடுத்த கணத்தில் காணப்பட்டு இருந்ததாகவோ, இல்லை கூடுவிட்டு கூடு பாய்ந்து அற்புதங்களை செய்ததாகவோ படித்து இருக்கிறீர்களா? ரிஷி முனிவர்கள் தவத்தில் அமர்ந்து இருந்ததாகவும், முற்றிலும் உலக வாழ்வில் இருந்து தள்ளி இருப்பதாகவும் மட்டுமே கூறுவார்கள். அவர்கள் ராஜா மகராஜாக்களுக்கு யாகம் செய்பவர்களாக இருந்துள்ளார்கள், நற் போதனைகளை செய்துள்ளார்கள். அவர்கள் உருவமே வேறாக மாறிவிடும். அதன் பின் அவர்கள் துறவற வாழ்விலேயே இருப்பார்கள். குடும்ப வாழ்வில் திரும்ப மாட்டார்கள்.  ஆனால் சித்தர்கள் அப்படி அல்ல, அவர்கள்  மனித வாழ்விலும் இருக்கிறார்கள், குடும்பஸ்தனாகவும் இருப்பார்கள். அப்போது அவர்களது  ஆத்மா எந்த விதத்திலும்  உலக பந்ததினாலும், குடும்ப பந்ததினாலும் பாதிப்பை ஏற்படுத்திக் கொள்வதில்லை.  அவர்களது ஆத்மா  நிர்வாண நிலையில் இருக்கும். இந்த உண்மைகளை தத்தாத்திரேய சரித்திரத்தைப் படித்தால் தெரியும். அது போலவே சித்தர்கள் சிலர்  ரிஷி முனிவர்கள் உருவிலும் இருப்பார்கள்.  அதனால்தான் இந்த சந்தேகம் எழுவது இயற்கை ஆகும்.

அப்படி என்றால் சித்தர்கள் நிலையை ஆத்மாக்கள் எப்படி அடைகின்றன ? அவை தேவகணம்  ஆவது எப்படி?  நடப்பது இதுதான். தேவ கனமாக மாற வேண்டிய ஆத்மாக்கள் முதலில் ஒரு யுகத்தில் உலகில் பிறப்பை எடுக்கும். அந்த வாழ்க்கையில் வாழ்ந்தவாறு  மெல்ல மெல்ல தெய்வீக எண்ணங்களை தன்னுள் அடக்கத் துவங்கி துறவித்தனத்தை தன்னுள் ஏற்படுத்திக் கொண்டு தனக்குள் பதிந்துள்ள எண்ண அலைகளைக் கட்டுப்படுத்தத் துவங்கும் (மனிதர்களல்ல, இங்கு ஆத்மாவைப் பற்றிதான் பேசப்படுகிறது என்பதை கவனம் கொள்ளவும்). சாதாரண மனிதப் பிறவியாக பிறந்து இருந்த ஆத்மாவினால் உந்தப்பட்டவர்கள் தெய்வ அருளினால் துறவற வாழ்வில் நாட்டம் கொண்டு துறவறத்தை மேற்கொள்கிறார்கள். அந்த நிலையில் வாழ்ந்து வரும்போது ஆத்மாவிற்குள்  பதிந்துள்ள சில எண்ண அலைகள் அழியும். அதை அந்த ஆத்மா புகுந்துள்ள உடலினால் உணர முடியாது.  துறவியான அந்த நிலைதான் அந்த ஆத்மா சித்தராகும் முன்னர் நடைபெறும் முதல் கட்ட நிகழ்ச்சியாகும். அப்படிப்பட்ட ஆத்மாவைக் கொண்ட சிலர் துறவறத்தை விரும்பி ட்மனதில் துறவித்தனத்தை கொள்கிறார்கள்.  மெல்ல மெல்ல அந்த வாழ்நாளிலேயே தவம் மேற்கொள்ளத் துவங்கி முனிவர்கள் பாதையில் நுழைகிறார்கள். வெளியில் அவர்கள் முனிவர்களாகத் தெரிந்தாலும் சில வருடங்களிலேயே அதாவது அந்த யுகத்திலேயே அவர்கள் முழுமையான முனிவர்களின் நிலையை எட்டுவது இல்லை. துறவற வாழ்வை முடித்துக் கொண்டு அடுத்த பாதையில் நுழைந்து அங்கு பயணிக்கும் காலம் முதல் நிலை முனிவர் காலம் ஆகும்.

துறவி நிலையை எட்டிய ஆத்மன் அடுத்து தவம் செய்தபடி உலகப் பற்றில் இருந்து விலகி முனிவராகுதல் எனும் நிலையில் புகுந்தவுடன்   அதற்குள் உள்ள உலகப் பற்றின் மற்றும் இன்பங்களின் இன்னும் சில எண்ண அலைகள் அழிகின்றன. அந்த ஆத்மாவின் வாழ்வைப் பொருத்தமட்டில் உலக நாட்டம் இன்றி, அனைத்து சுகபோகங்களையும், உணவையும் துறந்து எப்போதுமே தெய்வீக எண்ணம் கொண்டு தாம் தங்கி உள்ள அந்த உடலை தவமிருக்க வைத்து முனி நிலையை எட்ட வைக்கும். வெளி உலகினர் அப்படி முனி நிலையை மேற்கொண்டவர்கள் அனைவரையுமே முனிவர்கள் என நினைப்பார்கள். அதாவது சராசரி மனிதர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் அந்த நிலையில் உள்ளவர்கள் முனிவர்கள். மனித நியதியில் அது முனிவ நிலை என்றாலும்  தேவ கணம் ஆகும் நிலையில் அவர்கள் முனிவர் பாதையில் நடக்கத் துவங்கிய ஆரம்பக் கட்ட நிலை ஆகும். அவர்கள் வாழ்ந்து கொண்டு இருக்கும் மற்றும் வாழ வேண்டிய தேவ லோக முறையிலான வாழ்கை நியதிப்படி நடக்க இன்னும் பல காலம் பிடிக்கும். அது அந்தந்த முனிவர்களின் உடலுக்குள் உள்ள ஆத்மாவுக்கு மட்டுமேதான் தெரியும். அதாவது அவர்கள் செல்ல வேண்டிய பயணம் நெடும் தொலைவானது. அப்படி இரண்டாம் கட்டத்தில் பிரவேசித்த ஆத்மாக்கள் மூலம் முனிவர்கள் ஆனவர்களின் முனிக் காலம் எனும் வாழ்வு முடிய குறிப்பிட்ட தேவலோக கால கட்டத்தைக்  கடக்க வேண்டி இருக்கும்.

துறவிக் காலத்தை முடித்தப் பின் முனிவராகி  அடுத்த யுகத்தில் சென்றதும் அங்கு உடனடியாக முனிவர்கள் ஆகிவிடுவார்களா? இல்லை. அதற்குக் காரணம் ஆத்மாக்களின் முனி நிலை  நீண்ட பயணத்தைக் கொண்டது.  ஆகவே தேவ கணங்களாக வேண்டிய ஆத்மாக்கள் இன்னொரு யுகத்தில் செல்லும் காலத்தில் அங்கும் முதலில் துறவறத்தை ஏற்று, அதை வெகு விரைவில் கடந்து முனிவ வாழ்வை மேற்கொண்டு முன் ஜென்மத்தின் மிச்சம் இருந்த முனி நிலையை தேவலோக நியதிப்படி வெற்றிகரமாக வாழ்ந்து வந்த பின் அடுத்த கட்டத்தில் நுழைகிறார்கள். ஆகவே முனிவராக முடிவு நிலையை கடந்தது இரண்டாம் கட்டத்தைக் கடந்த நிலை ஆகும். அந்த இரண்டாம் கட்ட நிலைக்கு (முனி நிலை) சென்று இருந்தபோது அந்த ஆத்மாக்கள் இரண்டாவது யுகத்தில் பிறவி எடுத்து இருக்கும். அந்த இரண்டாம் கட்ட நிலையான முனி நிலையை வெற்றிகரமாக முடித்துக் கொண்டப் பின் அடுத்த கட்டத்தில் நுழையும்.

அதற்கு அடுத்த கட்டம் என்பது என்ன நிலை? அதுவே மூன்றாவது கட்ட நிலையான ரிஷி நிலை. அது முனிவர்களுக்கு மேற்பட்ட நிலை ஆகும். அப்போது உலக பற்று எண்ண அலைகளும் பாதிக்கும் மேல் அழிந்திருக்கும். அந்த ரிஷி நிலையின் காலம் என்பதோ, நியமமோ நமக்கு புரியாது, தெரியாது. அது பிரும்ம ரகஸ்யம் ஆகும். அந்த காலகட்டமும், நியதியும் நமக்கு தெரிவது இல்லை. ஒரு முனிவருக்கும் இன்னொரு முனிவருக்கும் அது வெவ்வேறாக அமைந்து இருக்கும். அது படைக்கப்பட்டிருந்த ஆத்மாக்களைப் பொறுத்து அமைந்து இருக்கும்.  தேவ கணங்களாக வேண்டிய ஆத்மாக்கள்  முனித்துவ நிலையை கடந்து ரிஷி நிலைப் பாதையில் அடி எடுத்து வைப்பது மூன்றாம் நிலை ஆகும். இப்படியாக ரிஷி நிலையை அடைந்த பல காலத்துக்குப் பிறகே அவர்கள் சித்தர்கள் எனும் நிலையில் நுழைவார்கள். அந்த மூன்றாம் நிலையை எடுக்கும்போது அந்த ஆத்மாக்கள் மூன்றாம் யுகத்தில் இருக்கும்.

மூன்றாம் யுகத்தில் ரிஷி நிலையை வெற்றிகரமாக கடந்தப் பின் அடுத்த நிலையில் செல்லும் அந்த ஆத்மாக்கள் சித்த நிலையில்  பிறப்பார்கள். சித்த நிலை என்பது ரிஷி முனிவர்களின் சக்திகளையும் மீறி அமானுஷ்ய, தெய்வீக சக்தி பெற்ற  நிலை ஆகும்.  சித்தர்களாக இருந்து வாழ்ந்த நான்காம் நிலையின் முடிவில் அவர்கள் பெறுவதே கடைசியான அதாவது ஐந்தாவது நிலையான தேவகணம் ஆகும் நிலை. சித்த பிறவி எடுத்த நேரத்தில் தூய எண்ண அலைகள் அந்த உயிரினங்களில் பதிவாகத் துவங்கி  மேலும் சில தேவகண சக்திகள் கைகூடும். அந்த தேவகண சக்திகள் அதிகரிக்கத் துவங்கியதும் அவர்கள் தெய்வீக நிலைக்கு சென்று விடுவார்கள். அப்போதுதான் அவர்களை பூலோகத்தில் உள்ளவர்கள் அடையாளம் காணத் துவங்குவார்கள். அவர்கள் சித்தி அடைந்தவர்கள் எனும் சித்தர்களாக பார்க்கப்படத் துவங்குவார்கள்.  அது கடைசி யுகத்தில் அமையும் வகையில் இருக்கும். நான்காவது நிலையான சித்தர் நிலையில் தத்தம் கடமைகளை செய்த பின் அவர்கள் முடிவாக ஐந்தாவது நிலையில் செல்லும் நேரத்தில் தேவகணங்களாகி விடுவார்கள். மறு பிறப்பு எடுப்பது அந்த ஆத்மாவிற்கு இல்லை. அத்துடன் அந்த ஆத்மாவின் படைப்பு நின்றுவிடும்.

இப்படியாக ஒரு ஆத்மாவானது பூமியிலே நான்கு யுகங்களிலும் பிறந்து துறவியாகி, முனிவராகி, ரிஷியாகி பின்னர் சித்தராகி நான்காவது யுக முடிவில் தேவலோகத்தை அடைந்து தேவகணமாக மாறிவிடும் பிரும்ம ரகஸ்ய  தத்துவம் அல்லது நியதி  நமக்கு எளிதில்  புரியாது.  ஆனால் பிரும்மனால் படைக்கப்பட்ட அனைத்து ஆத்மாக்களுக்கும் அந்த கதி கிடைக்காது. அந்த நியதியை அடைய வேண்டும் என எத்தனை ஆத்மாக்களை பிரும்மன் படைத்திருந்தாரோ அந்த ஆத்மாக்கள் மட்டுமே இந்த நாடகத்தை நிறைவேற்றிக் கொண்டு இருக்கும். அந்த நாடகம் ஏன் நடைபெறுகிறது? அதற்குக் காரணம் இந்த பிரபஞ்சம் படைக்கப்பட்டபோது தெய்வங்களின் பிரதிநிதிகளாக சிலர் இருந்து மக்களை அவ்வபோது நல்வழிப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் தெய்வீகம் என்ன என்பது பூமியிலே உள்ளவர்களுக்கு தெரியாமல் போய்விடும் என்பதினால் இப்படிப்பட்ட துறவு நிலை ஆத்மாக்கள், முனிவ நிலை ஆத்மாக்கள், ரிஷி நிலை ஆத்மாக்கள் மற்றும் சித்த ஆத்மாக்கள் எனப் பிறப்பு எடுக்க வைக்கப்பட்டு தேவ லோகத்துக்கு தேவகணங்களாக திரும்ப அழைத்துக் கொள்ளப்படுகின்றன.