பிள்ளையார் எறும்பும் 
சங்கடஹர சதுர்த்தியும்
சாந்திப்பிரியா
விநாயகரை வேண்டிக் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையான சங்கடஹர சதுர்த்திப் பற்றிய கர்ணபரம்பரைக் கதை ஒன்று உண்டு. அது என்ன?
ஒரு முறை கைலாயத்தில் பரமசிவனுடன் வேடிக்கையாக விளையாடிக் கொண்டு இருந்த பார்வதிக்கு ஒரு குறும்பு விளையாட்டு தோன்றியது. அன்றைக்கு  அவள் பிள்ளையான விநாயகருக்கு விசேஷமாக கொழுக்கட்டைகளை தயார் செய்து வைத்திருந்தாள். அந்தக் கொழுக்கட்டைகளை சுற்றியபடி கருப்பு நிற எறும்புகள் அங்கும் இங்கும் சென்று கொண்டு மற்ற தின்பண்டங்களை மொய்த்துக் கொண்டு இருந்தன. இத்தனை சிறிய எறும்புகள் ஒரு நாள் சாப்பிடாமல் பட்டினி கிடந்தால் அவை அப்போதும் எப்படியே சுறுசுறுப்பாக இருக்குமா என பார்க்கலாம் என அவளுக்கு ஒரு விளையாட்டு எண்ணம் தோன்றி விட அனைத்து எறும்புகளையும் பிடித்து ஒரு பெரிய காலி டப்பாவில் அடைத்து வைத்து விட்டாள். அவள் அவற்றை டப்பாவில் போட்ட தினம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி .
இரண்டு நாட்கள் கழிந்தன. டப்பாவைத் திறந்து விட்டவளுக்கு ஒரே ஆச்சர்யம். எறும்புகள் அப்படியே இருந்தது மட்டும் அல்லாமல் வாயில் வெள்ளையாக எதையோ தூக்கிக்  கொண்டு தூரத்தில் அமர்ந்து இருந்த விநாயகரை நோக்கி ஓடி அவரை சுற்றி வணங்கியப் பின்  தம் புற்றை நோக்கி ஓடத்  துவங்கியதைக் கண்டாள் . ‘காலி டப்பாவில் ஒன்றுமே இல்லாமல் அவற்றை வைத்து இருந்தேன், அவற்றின் வாயில் எப்படி  வெள்ளையாக எதோ இருந்தது ‘ என வியந்து அவற்றைப் பார்த்துக் கொண்டு இருந்தவள் தனது மகனிடம் சென்றாள். ஆனால் அங்கு  வாடிய முகத்துடன் வினாயகர் அமர்ந்து இருந்ததைக்  கண்டாள். வினாயகரின் வயிறு ஒட்டி இருந்தது.
 ‘அய்யய்யோ, எப்போதுமே பானை வயிறாக இருக்கும் இவருக்கு என்ன ஆயிற்று’ என பரிதவித்து தவித்தபடி அவரை  அது பற்றிக் கேட்க வினாயகர் கூறினாராம், ‘அம்மா, நீங்கள் எறும்புகளைப் பிடித்து டப்பாவில் அடைத்து வைத்து விட்டீர்கள். நான் உண்ணும் உணவுகளை எப்போதும் அவைகளும்  ருசித்து சாப்பிடும். ஆனால் நேற்றுக் காலை நான் கொழுக்கட்டைகளை தின்ன வந்தபோது என்னை சுற்றித் திரியும் அவைக் காணவில்லையே என நான் வருந்தியபடி அவற்றைத் தேடியபோது என்னை துதித்து வேண்டியபடியே மூடப்பட்டு இருந்த டப்பாவில் இருந்ததைக் கண்டேன் . ஆனால் அதே சமயம் நீங்கள் மூடி வைத்த டப்பாவை நான் திறக்க விரும்பவில்லை. ஆகவே நான் சாப்பிடும் அனைத்தும் அவற்றின் வயிற்றுக்கே போகட்டும் என என் வயிற்ருக்கு எனக்கு நானே கட்டளை இட்டு நீங்கள் எனக்கு கொடுத்த அனைத்தும் எறும்புகளின் வயிற்றுக்குப் போய் விட்டன. ஆனால் அவை அவற்றை தம்  வாயில் வைத்துக் கொண்டு என்ன வந்து வணங்கியப் பின் உண்பதற்காக என்னை சுற்றி வந்துவிட்டு தமது புற்றுக்கு சென்றுவிட்டன. இப்படியாக நான் என்னை வேண்டிக் கொண்ட எறும்புகளின் சங்கடத்தை விலக்கினேன்’ என்று கூறவும் பார்வதி தன் தவறை உணர்ந்தாள்.
ஆகவே அவள் ஒவ்வொரு கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்றும் எவர் பிள்ளையாருக்கு கொழுக்கட்டை நெய்வித்தியம் செய்து பூஜிப்பார்களோ அவர்களுக்கு வினாயகரின் கடாஷம் அளவில்லாமல் கிடைக்கும், அவர்கள் வீடுகளில் என்றுமே உணவுக்குப் பஞ்சம் இருக்காது, அவர்கள் வேண்டியது நிறைவேறும் என ஆசிகளைத் தர அது முதல் மாதா மாதம் கிருஷ்ண பக்ஷ சதுர்த்தி அன்று கொழுக்கட்டை செய்து அவரை வணங்கும்  சங்கட ஹர சதுர்த்தி கொண்டாடப்பட்டது. அது முதல் வாயில் வெள்ளையாக எதையோ வைத்துக் கொண்டு செல்லும் கருப்பு நிற எறும்புகளை பிள்ளையார் எறும்பு எனக் கூறி அதை அடிக்க மாட்டார்கள்.