திருக்கண்ண மங்கை ஆலயம்
சாந்திப்பிரியா
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருக்கண்ண மங்கை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் மகிமை வாய்ந்தது. இதுவும் இன்னொரு திவ்ய தேச ஆலயமே. இங்குதான் திருக்கண்ண மங்கை என்ற பெயரில் லஷ்மி தேவியானவள் திருமாலை மணந்து கொண்டார் என்பது தல வரலாறு. இந்த தலத்தை ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் ஆலயம் என்றும் சப்தமித்ர ஷேத்ரம் என்றும் கூறுகிறார்கள். இந்தத் தலம் ஜீவாத்மா மற்றும் பரமாத்மா எனும் தத்துவத்தை விளக்கும் தலமாம். இந்த ஆலயம் உள்ள இடத்தில் நைமிசாரண்யம் மற்றும் பத்ரினாதுக்கு இணையாக ஒரு காலத்தில் பெரிய வனம் இருந்ததாம். இந்த ஆலயத்தின் பக்கத்தில் காவேரி நதி ஓடுகின்றது.
முன்னொரு சந்தர்பத்தில் தாம் பெற்ற சாபத்தின் காரணமாக விஷ்ணு பகவானைப் பிரிந்து இருந்தார் மகாலஷ்மி தேவி. ஆகவே அவரை மீண்டும் கணவராக அடைய வேண்டும் என்பதற்காக இந்த ஆலய வனப் பகுதியில் வந்து அங்கு ஓடிக் கொண்டு இருந்த புஷ்கரணி எனும் நதியில் குளித்து விட்டு மகாவிஷ்ணுவை நினைத்து ஒரு கல்லையே மகாவிஷ்ணுவாக பாவித்து அதற்கு அபிஷேகம் செய்து கடுமையான தவத்தில் அமர்ந்து இருந்தாராம். அப்போது அவளுக்குத் துணையாக பல முனிவர்களும் ரிஷிகளும் அங்கு தங்கி இருந்தார்களாம். அவள் தவத்தை கண்டு மனம் மகிழ்ந்த பெருமாள் இங்கு உருவமற்ற பக்தவத்சலப் பெருமாளாக வந்து அவளை மணம் முடித்தாராம். அதற்குப் பின்னரே அங்கு பக்தவத்சலப் பெருமாளாக மனைவி சகிதம் ரிஷி முனிவர்களுக்கு காட்சி தந்தார். பரமாத்மா மற்றும் ஜீவாத்மா இரண்டும் கலந்த இந்த தலம் முக்தி அடைவதற்கு ஏற்றத் தலமாக இருக்கும் என அங்கிருந்த அனைவருக்கும் கூறியதினால் ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றிணைந்த அந்த தலத்தில் இருந்த ரிஷிகள் அவளை விட்டுப் பிரிய மனம் இல்லாமல் அங்கேயே தேன் கூடுகளாகத் தங்கி விட்டார்களாம்.
நமது கண்களுக்குப் புலப்படாமல் நமக்குள்ளேயே உள்ளது நமது ஜீவனின் ஆத்மாவான ஜீவாத்மா என்பது. இந்த தலத்தில் மனித உருவில் வந்த லஷ்மி தேவியானவள் தபம் செய்து தனது உடலில் இருந்த, மற்றவர் கண்களுக்கும் புலப்படாத ஜீவாத்மாவை கண்களுக்குப் புலனாகாத பரமாத்மாவுடன் இணைந்ததினால் இது ஜீவபரமாத்ம தலம் என்றும் இங்கு வந்து ஒரு இரவு தங்கினால் கூட அவர்களது ஜீவாத்மா பரமாத்மனுடன் சேர்ந்து மோட்ஷம் பெறும் என்றும் கூறுகிறார்கள். இதற்கான அர்த்தம் இங்கு வந்து ஒரு இரவு தங்கினால் மறுநாள் மரணம் அடைந்து விடுவார்கள் என்பது அல்ல, அவர்களுடைய ஜீவாத்மா என்பது பரமாத்மனின் அருளைப் பெற்று விடும் என்றும், அந்த ஜீவாத்மா தன்னுடைய விதிப்படி எப்போது மரணம் அடையுமோ அப்போது அது நேராக மோட்ஷ கதியை அடையும் என்பது தாத்பர்யம். இங்குள்ள தாயாரை அபிஷேகவல்லி என்று அழைக்கின்றார்கள். நின்ற நிலையில் நின்றான் எனப்படும் மூலவரை பக்தவத்சலப் பெருமாள் என்கிறார்கள்.
அபிஷேகவல்லி மற்றும் பக்தவத்சலப் பெருமாள்
இந்த ஆலயப் பெருமையைக் கூறுகையில் இவற்றைக் கூறுகிறார்கள்.
- சிவபெருமான் இந்த ஆலயத்தைப் பாதுகாத்தபடி நான்கு பக்கங்களிலும் இருக்கின்றாராம்.
- ஒரு முறை மாற்றான் மனைவி மீது மையல் கொண்டதினால் தனது அழகை இழந்த சந்திர பகவான் பெற்ற சாபத்திற்கு விமோசனம் பெறுவதற்கு இங்கு வந்து இங்குள்ள குளத்தில் குளித்து விட்டு தவம் இருந்து சாப விமோசனம் அடைந்தாராம்.
- வருணனும், மகாபாரத யுத்தம் நடந்த காலத்தில் வாழ்ந்ததாகக் கூறப்படும் ரோம ரிஷி போன்றவர்களும் இந்த தலத்துக்கு வந்து வணங்கியதான ஐதீகம் உள்ளது.
- இந்த ஆலய தெய்வங்கள் இங்கு ஸ்வயம்புவாக வந்த காலத்தைக் குறிப்பாக கணக்கிட முடியவில்லை. ஆனால் ஆலயம் சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பது பொதுவான கருத்து.
ஆலய திருவிழாவின்போது கருட வாகனத்தில்
பக்தவத்சலப் பெருமாள் சவாரி
ஆலயம் செல்லும் வழி
தஞ்சாவூர் மாவட்டத்தின் நன்னிலத்தில் இருந்து சுமார் 18 கிலோ மீட்டர் தொலைவில் இந்த ஆலயம் உள்ளது. திருவாரூரில் இருந்து சென்றால் சுமார் பத்து கிலோ மீட்டர் தொலைவில் இது உள்ளது. நன்னிலத்தில் இருந்து மானில நெடுஞ்சாலை SH 67 சில் சென்று சன்னானலூராய் அடைந்ததும் அங்கு வலதுபுறம் மானில நெடுஞ்சாலை SH 23 நில் செல்லவும். அங்கிருந்து ஆண்டிபந்தால் வழியே சோரக்குடிக்குப் போய் சேர்ந்ததும் வலதுபக்கம் வரும் கங்கலாச்சாரி டாம் (Kangalachari Dam) பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம். திருவாரூரில் இருந்து சென்றால் மானில நெடுஞ்சாலை SH 65 ஜில் புகுந்து GRT கார்டன்- கட்டூர் போன்றவற்றை தாண்டி அதே சாலையில் சென்று கொண்டே இருக்க வேண்டும். வடகண்டம் என்ற சிற்றூரை அடைந்து சிறிது தூரம் போனதும் இங்கும் வலதுபுறம் உள்ள கங்கலாச்சாரி டாம் (Kangalachari Dam) பாதையில் சென்றால் இந்த ஆலயத்தை அடையலாம்.
ஆலய விலாசம்
Bhaktavatsala Perumal Koil,
Thiru Kannamangai,
Kudaivaasal Taluk,
Thiruvarur District, Pin: 610 104.
Contact No: P.K. Ramaswamy Bhattar
Tel No. : 92454 89881 or 98424 65956
Thiru Kannamangai,
Kudaivaasal Taluk,
Thiruvarur District, Pin: 610 104.
Contact No: P.K. Ramaswamy Bhattar
Tel No. : 92454 89881 or 98424 65956