சாந்திப்பிரியா                                                        –  14

ஹரிசித்தி   ஆலயம்

அடுத்து அங்கிருந்துக் கிளம்பி ஒய்வு எடுத்தப் பின் மாலையில் நாங்கள் சென்றது ஹரிசித்தி எனும் ஆலயம். இதுவும் தாந்த்ரீக சித்திகளைத் தரும், நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும் ஆலயம். பகலாமுகி ஆலயம் போலவே மிகவும் சக்தி வாய்ந்தது.மத்தியப் பிரதேசத்தில் தந்திர, மந்திர சக்தியை உள்ளடக்கிய ஆலயங்கள் பல உள்ளன. முன்னர் நான் கூறியது போல மன்னன் விக்ரமாதித்தியன் ஆண்ட இடங்களில் மந்திர, தந்திர சக்திகள் அடங்கிய பல ஆலயங்களை அவர் நிறுவி உள்ளார்.  அப்படிப்பட்ட  ஆலயங்களுக்கு  சென்று பூஜைகள் செய்து வழிபடுவது அவரது வழக்கமாம். அப்படி அவர் நிறுவிய ஆலயங்களில் ஒன்றே உஜ்ஜயினியில் உள்ள  ஹர்சித்தி மாதா ஆலயம் ஆகும். இந்த ஆலயம் 51  சக்தி பீடங்களில் ஒன்று என்பதாக  கூறப்படுகின்றது.  சிவபெருமான் தனது மனைவியை தூக்கிக் கொண்டு போனபோது பார்வதியின் முழங்கையின் எலும்பு இங்குதான் விழுந்ததாம்.

உலகின் பல இடங்களிலும் ஹர்சித்தி மாதாவின் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயத்தின் கருவறையில் மூன்று தேவிகள், ஒருவருக்கு கீழே ஒருவராக பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளார்கள். மேலே உள்ள தேவி மஹா சரஸ்வதி ஆகும். அதன் கீழ் உள்ள தேவி சற்றே பெரிய உருவத்தில் செதுக்கப்பட்டு உள்ள ஹர்சித்தி தேவியாகும். மூன்றாவதாக  கீழே உள்ள தேவி  காளி தேவியாகும். ஹர்சித்தி தேவி சற்றே கருமையான செந்தூர நிறத்தில்  காணப்படுகிறாள். கருவறைக்குள் நுழைவதற்கு முன்  உள்ள நுழை மண்டபத்தில் துர்கா தேவியின்  ஒன்பது வடிவங்களைக் குறிக்கும்  ஸ்ரீசக்கர யந்திரம்  உட்பட ஐம்பது தாந்த்ரீக, மந்திர சக்தி வாய்ந்த  தெய்வங்கள் அதன் மேற்கூரையில்  பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளன. இது இந்த ஆலயத்தின் ஒரு சிறப்பு அம்சம் ஆகும்.

இந்த ஆலயம் அன்றைய  உஜ்ஜையினி பேரரசனாக இருந்த விக்ரமாதித்யனால் அமைக்கப்பட்டதாக  கூறப்படுகிறது, அவர் புத்திசாலித்தனம், வீரம் மற்றும் மேன்மையான குணத்தைக் கொண்டவர். அவர் ஒருமுறை கோய்லா துங்கர் எனும் இடத்தில் உள்ள ஹர்சித்தி மாதாவின் மூல ஆலயத்திற்கு விஜயம் செய்தபோது அங்கு அவருக்கு அந்த தேவியின் அருள் கிடைத்தது.  அப்போது அந்த தேவி  உஜ்ஜயினிக்கு  வந்து,  தான் அமைக்க உள்ள ஆலயத்தில் குடி இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு மந்திர, தந்திர சக்திகளைக் கொண்ட இந்த ஆலயத்தை  கட்டியுள்ளார் என்று கூறுகின்றார்கள்.  இன்னும் சிலர்   விக்ரமாதித்தியன்  விஜயம் செய்த அந்த ஆலயம் மினால்பூர் என்று சொல்லப்படும் மியானி என்னும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் கட்டப்பட்டு அவரால் பூஜை செய்யப்பட்டு வந்திருந்த  ஹர்சித்தி தேவி  ஆலயம் என்று கூறுகின்றார்கள். அதன் பிறகே  உஜ்ஜயினியில் ஸ்வயம்புவாகத் தோன்றி இருந்த பகவான் கிருஷ்ணர் பூஜித்த அதே ஹர்சித்தி தேவியை பிரதிஷ்டை செய்தே இந்த ஆலயத்தை மன்னன் விக்ரமாதித்தியன் காட்டினார் என்றும் சொல்கிறார்கள். மியானி மற்றும் கோய்லா துங்கர் எனும் இரு இடங்களும்  குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரிலிருந்து முப்பது கி.மீ. தொலைவில் உள்ளன  என்பதாக கூறுகின்றார்கள். எப்போதெல்லாம் தனக்கு பிரச்சனைகள் ஏற்படுமோ அப்போதெல்லாம் மன்னன்  விக்ரமாதித்தியன் பகலாமுகி மற்றும் ஹர்சித்தி ஆலயங்களுக்கு சென்று பூஜைகளை செய்ய அவரது  பிரச்சனைகள் தீர்த்து வந்தனவாம்.

அதன் பிறகு அந்த ஆலயம் 1447 ஆம் ஆண்டு மராட்டிய பேரரசர்களின் ஆட்சியின் போது புதுப்பிக்கப்பட்டு உள்ளது என்பதாக கூறுகின்றார்கள். இந்த கோவிலில் 1008 எண்ணெய் விளக்கு ஏற்றி வைக்கும் வகையில் இரண்டு உயரமான ஊசி இலை வடிவைப் போன்ற தூண்கள் உள்ளன. அந்த எண்ணெய் விளக்குகளை திருவிழா காலங்களில், முக்கியமாக நவரத்தாரி காலத்தில்  ஏற்றுவார்கள்.

இந்த கோவில் அமைக்கப்பட்டதைக் குறித்த  இரண்டு கதைகள் உள்ளன. சிவ புராணத்தின்படி, மனைவியின் உடலை யாக நெருப்பிலிருந்து சிவபெருமான் தூக்கிக் கொண்டு  சென்றபோது, அவளுடைய  முழங்கையின் எலும்பு தற்போது உள்ள கோயில் தளத்தில் விழுந்ததாம்.  இதனால்தான் இங்கு ஹர்சித்தி  தேவியின் ஆலயம் எழுந்துள்ளதாம்.    இரண்டாவது கதை ஸ்கந்த புராணத்தில் காணப்படுகின்றது.   ஒருமுறை சிவனும் பார்வதியும் கைலாஷ் மலையில் தனியாக தாயம் விளையாடிக் கொண்டு இருந்தபோது, சந்த் மற்றும் பிரச்சந்த் என்ற இரண்டு அசுரர்கள்  அங்கு வந்து உள்ளே    செல்ல முயன்றனர். சிவபெருமானின்  தெய்வீக வாகனமான  நந்தியை அசுரர்கள் தாக்கி படுகாயப்படுத்தினார்கள். அவர்கள் பெற்று இருந்த அசாதாரண வரங்களினால் சிவபெருமானால் அவர்களை அழிக்க முடியவில்லை என்பதினால்  தனது மனைவியை ஹர்சித்தி  தேவியின் உருவை எடுக்கச் சொல்லி அவர்களை அழிக்குமாறு கூறினார் . பார்வதியும்   மூன்று தெய்வங்களின் அதாவது  அன்னபூர்ணா தேவி, மற்றும் காளி தேவியுடன் சேர்ந்த சக்திகளை தம்முள் அடக்கிக் கொண்டு அந்த அசுரர்களை அழித்தாள். சாண்டி தேவி  தன்னுள் அடக்கிக் கொண்டு இருந்த மூன்று தேவிகளின் சக்திகளும் அந்த அசுரர்களுக்கு வரங்களினால் கிடைத்து இருந்த  சக்தியை அழிக்கும் வகையிலான சக்திகளை பெற்று  இருந்தன. ஆகவே, சிவபெருமான் அவளை ஆராதிப்பவர்களுக்கு அனைத்து வெற்றிகளும் கிடைக்கும் என்ற அர்த்தத்தில்  ஹர்சித்தி மாதா என்று பெயர் சூட்டினார்.

க்ஷத்திரிய, பிராமண, ராஜ்புத் மற்றும் வைஷ்ய சமூகங்கள் போன்ற சில சமூகங்களுக்கு அந்த தேவியே  குடும்ப தெய்வமாக இருக்கின்றாள். மீனவர்கள் மற்றும் கடல் சம்மந்தப்பட்ட தொழிலில் உள்ள பிற பழங்குடியினர் சிலரும் கடலில் கப்பலில் செல்லும் தமக்கு அவளே பாதுகாவலராக இருக்கின்றாள் என நினைத்து   அவளை  வணங்குகின்றார்கள்.

ஹர்சித்தி மாதா ஆலயத்தில் உள்ள மஹாமாயா எனும் தேவியின் சன்னதியும் சக்தி வாய்ந்தது. தரை மட்டத்துக்கு கீழே ஒரு சிறு அறையில் அமைக்கப்பட்டு உள்ள அவளது சன்னதியில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது இல்லை. பூசாரி மட்டுமே செல்வார். ஆனால் அந்த தேவியை அந்த சன்னதியை சுற்றி மேலே எழுப்பட்டு உள்ள சுவற்றின் துவாரம் வழியேதான் தரிசிக்க முடியும். மஹாமாயா துர்கையின் அம்சம். அவளை அங்கு வணங்கித் துதிப்பதின் மூலம் திருஷ்டி தோஷங்கள் விலகுமாம். அந்த சன்னதியில் இடைவிடாது எரியும் அகண்ட ஜ்யோதியும் வைக்கப்பட்டு உள்ளது. அதன் எதிரில் வினாயகர் சன்னதியும் உள்ளது.

ஹர்சித்தி ஆலயத்தில்  ஸ்ரீ கர்கோடேஷ்வர் மகாதேவ் ஆலயமும் உள்ளது. ஒருமுறை பாம்புகளுக்கு கிடைத்த சாபத்தின்படி  அனைத்து பாம்புகளும் ஜனமேஜயா நடத்திய யாகத்தில்  விழுந்து எரிந்து போக இருந்தன. ஆகவே  தம்மை காப்பாற்றிக் கொள்ள அவை பலவும் இமயமலைக்கு தவம் செய்யச்  சென்று விட்டன.  அப்போது பாம்புகளின்  தலைவரான கார்கோடன் பிரம்மாவிடம் சென்று அதற்கு பரிகாரம் கேட்க, அவரும்   உஜ்ஜயினியில் இருந்த  மஹாகால் காட்டுக்கு சென்று அங்கு சிவபெருமானை துதித்து  தவம் இருந்தால் விமோசனம் கிடைக்கும் என்று கூற, கார்கோடன் அனைத்து பாம்புகளையும் அழைத்துக் கொண்டு   மஹாகால் காட்டுக்கு சென்று   தவம் இருக்க, அவர்களது தவத்தினால் மனம் மகிழ்ந்து போன சிவபெருமானும் அவர்கள் முன் தோன்றி  இனி யாராலும் அவர்கள் வம்சத்தை அழிக்க முடியாது என்ற வரத்தை தந்தார்.  அதுமட்டும் அல்லாமல் கார்கோடனை அங்கேயே ஒரு ஆலயத்தில் கார்கோடேஸ்வர மஹாதேவ் எனும் பெயரில் தங்கி இருக்குமாறும்   அவரை அங்கே வந்து ஆராதிப்பவர்களுக்கு நாக தோஷம் தீரும் என்றும் கூறினார். அதனால்தான் ஹர்சித்தி ஆலய வளாகத்தில் ஸ்ரீ கர்கோடேஷ்வர் மகாதேவ் ஆலயம் உள்ளது.  உலகில் உள்ள அனைத்து நாகங்களின் மந்திரத்தையும் உச்சாடனம் செய்து கார்கோடன் பிரதிஷ்டை  செய்யப்பட்டு உள்ளார் என்பதினால் அவர் சன்னதியில் சென்று நாக தோஷ நிவாரண யாகம் செய்தால் பூர்வ ஜென்ம சர்ப தோஷ பாபங்கள் அனைத்தும் நீங்கும் என்பதும் நம்பிக்கை

இந்த ஆலயத்தின் மகிமையை பலரும் பல விதமாகக் கூறுகிறார்கள். அதை உண்மையிலேயே அனுபவித்தவர்கள் நாங்கள். இந்த ஆலய மேன்மைப் பற்றி எழுதும்போது எங்கள் வாழ்க்கையில் திருப்பு முனையாக அமைந்த முக்கியமான ஒரு சம்பவத்தையும் அதற்குக் காரணமாக இருந்த எங்கள் வாழ்கையின் ஒரு சிறு பகுதியையும் கூறாமல் இருக்க முடியாது.அதனால்தான் இந்த ஆலயத்துக்கு கட்டாயம் சென்றே ஆக வேண்டும் என்பதற்காக நாங்கள் இம்முறை உஜ்ஜயினிக்கு சென்றோம். அது ஒரு அற்புதமான ஆனந்தமான அனுபவம். ஆகவே நாங்கள் ஏன் இந்த ஆலயத்தை உயர்வாக கருதினோம் என்பதை விளக்கும் என் வாழ்வில் நடைபெற்ற சிறு பகுதியை படித்தால்  இந்த  ஆலய மகிமையை புரிந்து கொள்ள முடியும்.

சில வருடங்களுக்கு முன்னால் நான்  தேவாஸ் நகரில் பணி புரிந்து கொண்டு இருந்தபோது பல விதமான பிரச்சனைகளை சந்தித்து வந்தேன். அவற்றை எப்படியோ சமாளித்துக் கொண்டு வந்த நான்  பணியில் இருந்து ஒய்வு பெறுவதற்கு சில ஆண்டுகளுக்கு முன்னால் இன்னொரு அலுவலகத்தில் கிடைக்க இருந்த நல்ல வாய்ப்பை  சில காரணங்களினால் வேண்டாம் என ஒதுக்கியதினால் ஏற்பட்ட பின் விளைவுகளைக் கண்டு நான் எடுத்த முடிவுகள் எத்தனை மடத்தனமானது என்பதை பல காலம் பொறுத்து புரிந்து கொள்ள முடிந்தது. எனக்குக் கிடைக்க இருந்த உயர் பதவியை தவறான அறிவுறைகளினால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போனதினால்  வாழ்க்கையில் பின்னர் பெரிய சறுக்கலை சந்திக்க வேண்டியதாயிற்று. அந்த முடிவினால் என்னை விட கீழ் நிலையில் இருந்தவர்கள் கூட என்னைத் தாண்டி உயரத் துவங்கினார்கள்.  நான் அப்படியே இருந்தது மட்டும் இல்லாமல் மேலும் பல அவமானங்களை சந்திக்க வேண்டியதாயிற்று. துரதிஷ்டவசமாக சிலர் செய்த சதியினால் அலுவலகத்திலும் எனக்குக் கிடைக்க இருந்த உயர் பதவி என் கையை விட்டுப் போயிற்று. நான் அலுவலகத்தில் பட்ட அவமானங்கள் அது மட்டுமா ?

பலமான காவலுடன் இருந்த குடியிருப்பில் இருந்த எங்கள் வீட்டில், முப்பத்தி ஐந்து ஆண்டுகளாக எந்தவித அசம்பாவிதமும் நடந்திராத அந்த குடி இருப்பில், அதுவரை கேள்விப்படாத ஒரு நிகழ்ச்சியாக பெரும் திருட்டு நடைபெற்றது. அந்த திருட்டும் முதன் முதலாக எங்கள் வீட்டில்தான் நடைபெற்றது என்பது அந்த குடியிருப்பின் முப்பத்தி ஐந்து  ஆண்டுகளின் சரித்திரமாக அமைந்தது.

அன்றுதான் எனக்கும் சம்பளம் வந்திருந்தது. ஏற்கனவே வீட்டில் அலமாரியில் பணமும் நிறையவே வைத்து இருந்தோம். அத்தனைப் பணத்துடன் எங்கள் வீட்டில் இருந்த அனைத்து நகைகளும் கொள்ளை போயிற்று. ஆடிப் போய் விட்ட நாங்கள் எப்படியோ சமாளித்துக் கொண்டோம். அந்த வேளையில் ஆறுதலை மட்டுமே எதிர்ப்பார்த்து நின்ற எனக்கு  நான் மலைப்  போல நம்பி இருந்தவர்கள் ஆறுதல் கூடக் கூறாமல், என்னுடன் பேசுவதைக் கூட தவிர்த்து அது பற்றி ஒரு வார்த்தைக் கூட கூறாமல் ஒன்றுமே தெரியாதது போல ஒதுங்கிக் கொண்டது பெரிய இடியாகவே இருந்தது !!!நாங்களும் வாழ்க்கையில் எதிர்நீச்சல் போட்டபடி பயணத்தை தொடர்ந்து கொண்டே இருந்தோம்.

மேலும் மேலும் சில துயர நிகழ்சிகள் எங்களை தொடர்ந்தபோது எங்களை உஜ்ஜயினி ஹரிசித்தி ஆலயத்தின் அருகில் இருந்த ஒரு பிரபல ஜோசியரான திரு சுரேந்திர வியாஸ் என்பவரிடம் ஒரு நண்பர் அழைத்துக் கொண்டு சென்றார். அவர் உஜ்ஜயினியில் பிரபலமான ஜோதிடர். ஹரிசித்தி ஆலயத்தில் பரிகார பூஜைகளை செய்து கொடுப்பவர். தேவி உபாசகர். அனைவருக்கும் ஜோதிடம் பார்க்க மாட்டார். பெரும் பெயர் பெற்றவர். அவர் ஜாதகத்தைப் பார்த்து பலன் கூறுவதில்லை. ஒருவரது கையைப் பிடித்துக் கொண்டாலே அவர்களுடைய பிரச்சனைகளை அறிந்திடுவார். அத்தனை ஆன்மீக சக்தி கொண்டவர் அவர். அவரை நாங்கள் சந்தித்தபோது அவர் என் கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு கணம் தியானத்தில் ஆழ்ந்தப் பின் எங்களுடைய குடும்பத்தைப் பற்றி நான் கூறாமலேயே குடும்ப சம்மந்தப்பட்ட சில முக்கியமான விஷயங்களை தெளிவாகக் கூறத் துவங்கினார். அவை அதிர்ச்சியாக இருந்தன.


ஹரிசித்தி தேவியின் சன்னதியில் மூன்று தேவிகள் 


ஆலய முகப்பில் உள்ள வாசகக் கல்வெட்டு
………தொடரும்