திருமீயச்சூர்
லலிதாம்பிகை ஆலயம்
சாந்திப்பிரியா
 
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் பாதையில் சுமார் இருபது கிலோ தொலைவில் உள்ளது திருமீயச்சூர் என்ற சிறிய கிராமம். மயிலாடுதுறைக்கு பக்கத்தில் உள்ள நன்னிலம் மற்றும் பேரளத்தில் இருந்து மிகவும் அருகில் உள்ளது. இந்த ஆலயமும் சோழர்கள் காலத்தில் ராஜேந்திர சோழன் என்பவரால் கட்டப்பட்டதுதான். ஆலயத்தில் மேகநாதர் சமேதமாக லலிதாம்பிகை உள்ளார். இந்த ஆலய வரலாறும் சுவையானது.
ஒருமுறை காஷ்யப முனிவர் அங்கு இருந்தார். அவருக்கு இரண்டு மனைவிகள் உண்டு. சிவபெருமான் பிரசாதமாகத் தந்த முட்டையில் இருந்து அவர்களுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தனர் . ஒருவளுக்கு கருடனும் மற்றவளுக்கு அருணனும் பிறந்தனர். ஆனால் ஒருநாள் மோகினி போல தன்னை உருமாற்றிக் கொண்டு திரிந்த அருணனை சூர்யா பகவான் கெடுத்து விட அருணன் சிவபெருமானிடம் சென்று முறையிட்டார். ஆகவே கோபமடைந்த சிவபெருமானும் சூரியனாரின் ஓளி மறையுமாறு சாபமிட பயந்து போன சூரியனார் சிவபெருமானிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவர் கூறியபடி இந்த ஆலயம் உள்ள இடத்தில் வந்து சிவபெருமானை துதித்து ஏழு மாதம் தவம் இருந்து சாப விமோசனம் அடைந்தாராம். அப்போது ஒரு நாள் சூரியனார் துக்கம் தாங்காமல் அழுதவாறு ஓலம் எழுப்ப சிவபெருமானின் மனைவியான பார்வதி கோபமடைய ,அதைக் கண்ட சிவபெருமான் அவளிடம் சூரியனின் அவஸ்தையைக் கூறி அவளை சாந்தப்படுத்தினாராம்.
அப்போது அவள் வாயில் இருந்து வாசினிகள் என்ற தேவதைகள் வெளிவந்து பாட அதுவே லலிதா சஹஸ்ரநாமம் ஆயிற்று எனக் கூறுகிறார்கள். அதனால் பார்வதியும் அந்த இடத்தில் சாந்தநாயகியான லலிதாம்பிகை என்ற ரூபத்தில் இருந்தாள். இந்த இடத்தில் அகஸ்திய முனிவரும் வந்து லலிதா நவரத்னமாலா எனும் பாடலை தானே இயற்றிப் பாடினாராம்.
லலிதா நவரத்னமாலாவை   இயற்றிய   அகஸ்திய   முனிவர்
கருவறையில் ஸ்ரீ சக்கரத்தின் மீது ஐந்து அடி உயர லலிதாம்பிகை வலது காலை மடித்து வைத்துக்கொண்டுகம்பீரமாக அமர்ந்து உள்ளாள். ஆலயம் லலிதாம்பிகைக்கு என்றாலும், மூலவர் மேகநாதர் எனப்படும் சிவ பெருமானே. ஆலய விலாசம்:
அருள்மிகு மேகநாதர் திருக்கோயில்
திருமீயச்சூர்
திருமீயச்சூர் அஞ்சல்
வழி பேரளம்
நன்னிலம் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN – 609405