பத்ரினாத் ஆலயத்தின் எதிரே அமைந்துள்ள இரண்டு பர்வதங்களில் நர மற்றும் நாராயணன் என்ற இரண்டு முனிவர்கள் தவம் இருந்தார்கள் அவர்கள் வேறு யாரும் அல்ல கிருஷ்ணரின் இரண்டு அவதாரங்களே. மகாபாரத யுத்தத்தில் கிருஷ்ணராக அவதரித்தவரும் அந்த யுத்தத்தில் பங்கு கொண்ட அர்ஜுனனுமே அவர்கள் ஆகும். அந்த இருவரும் தவம் இருந்த அந்த இந்த இரண்டு மலைகளையும் நர நாராயண மலையென்று அழைக்கின்றனர். நரநாராயணர்கள் என்பவர்கள் ஒருவரே ஆவார். அவரே விஷ்ணு பகவான்.
அவர் பத்ரினாத்தின் மலையின் அடிவாரத்தில் வெகு காலமாக தவத்தில் இருந்தபோது அவரை வெயிலும் மழையும் பாதிக்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக அவர் தலை மீது ஒரு குடையைப் பிடித்துக் கொண்டு பாதுகாப்பாக நின்று கொண்டு இருந்தாள். ஒவ்வொரு யுகத்திலும் நல்லவற்றைக் காக்க தாம் அவதாரம் எடுப்பேன் என பெருமாள் கிருஷ்ணாவதாரத்தில் கூறி இருந்தார். ஆகவே தானே கிருஷ்ணராகவும் அர்ஜுனனாகவும் ஒரே நேரத்தில் இரு அவதாரங்களை எடுத்த மகாவிஷ்ணு மகாபாரத யுத்தத்தின் பேரழிவுகளை கண்டப் பிறகு இந்த உலகில் உள்ள மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்று எண்ணி இங்கு வந்து தவம் இருந்தார். அந்த இடத்தை சுற்றி பத்ரி மரங்கள் வனம் போல வளர்ந்து இருந்ததினால் அந்த இடத்துக்கு பத்ரினாத் எனும் பெயர் வந்தது என்றும், அங்கு வாசம் செய்யும் பெருமாளை பத்ரி எனவும் அழைப்பதாக ஐதீகம் உள்ளது. விஷ்ணு பெருமான் தவக் கோலத்தில் அமர்ந்து இருந்ததினால்தான் இந்த ஆலய பிரதான சன்னதியில் அவர் தியான நிலையில் காட்சி தருகிறார்’.
மகாவிஷ்ணு அங்கு தவத்தில் இருந்தபோது அங்கு வந்த பிரும்மா மற்றும் பிற முனிவர்கள் முன் தனது சுய உருவில் தோன்றிய மகாவிஷ்ணு ‘தான் நாரத குண்டத்தில் மறைந்து இருக்க உள்ளதாகவும், மறைந்து இருக்கும் தம்மை பல காலத்துக்குப் பிறகு அனைவரும் போற்றி வணங்கும் தூய்மையான ஆன்மீக மனிதர் வந்து கண்டெடுத்து ஆலயம் அமைப்பார் என்றும், கலி யுகத்தில் பலவிதமான தீமைகளை செய்யும் மக்களின் தீய மன நிலையை அழித்து அவர்களை நல்வழிக்கு அழைத்துச் செல்வேன் என்றும், ஆனால் அதனை அடைய அவர்கள் தம்மை தரிசிக்க இந்த புண்ணியத் தலத்துக்கு மிகுந்த சிரமப்பட்டே வர வேண்டி இருக்கும்’ என்றும் கூறினார். அதற்கு முன்னோடியாக பிரும்மா தன்னுடைய சிலையை வடித்து அங்கே பிரதிஷ்டை செய்ய வேண்டும் என்றும் கூறினார்’. இப்படியாக வசிஷ்ட முனிவர் தனது மனைவியான அருந்ததிக்குக் கூறிய பின் அவளும் அந்தக் கதையைக் கேட்டு மகிழ்வுற்று அவரை விழுந்து வணங்கினாள் .
அப்படி பிரும்மா வடிவமைத்த சிலையே பின்னர் ஆதி சங்கரரால் கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்டது என்று புராணக் கதை உள்ளது. விஷ்ணுவின் அறிவுரையின்படி பிரும்மாவும் விஷ்ணுவின் சிலையை பத்ரினாத்திலேயே படைத்து பிரதிஷ்டை செய்தார். ஆனால் பின்னர் புத்தமதம் தழைத்தபோது அந்த சிலையை பௌத்தர்கள் எடுத்து நாரத குண்டத்தில் தூக்கி எரிந்து விட்டார்கள். அதையே பின்னர் ஸ்ரீ ஆதி சங்கரர் வெளியில் எடுத்து ஆலயத்தை நிறுவினார்.
பத்ரினாத் ஆலயத்தின் உள்ளே ஆதி சங்கர மடமும் உள்ளது. மடத்தின் இடப்புறத்தில் உள்ள சிறிய குகையில்தான் ஆலயத்தை ஸ்தாபித்த ஸ்ரீ ஆதி சங்கரர் தியானம் செய்ததாகப் புராணங்கள் மூலம் அறிகிறோம். அதே மடத்தில் காணப்படும் கற்பக விருட்ச மரத்தின் கீழ் அமர்ந்து கொண்டு ஸ்ரீ ஆதி சங்கரர் ஞானம் பெற்றார் என்றும் சிலர் கூறுகிறார்கள் .
ஸ்கந்த புராணத்தின்படி இந்த உலகில் எத்தனையோ புண்ணிய பூமிகள் இருந்தாலும், பத்ரினாத் ஆலய தலத்தைப் போன்ற புண்ணிய பூமி கிடையாது. ஒன்பதாம் நூற்றாண்டில் ஸ்ரீ ஆதிசங்கரரால் கண்டெடுக்கப்பட்டு அமைக்கப்பட்ட பத்ரினாத் ஆலயம் பலமுறை பல்வேறு ஆட்சியாளர்கள் காலத்தில் மாறுதலுக்கு உள்ளாகி உள்ளன. வருடத்துக்கு ஆறு மாதங்கள் அந்த பகுதி முழுவதுமே பணியால் மூடப்பட்டு இருக்கும் என்பதினால் வருடத்துக்கு ஆறு மாதம் மட்டுமே இந்த ஆலயம் திறந்து இருக்கும். அதற்கும் காரணம் உண்டு.
இமயமலையில் உள்ள இந்த ஆலயமே வைகுண்டத்தின் நுழைவாயிலாக உள்ளதினால் பூமியில் உள்ள பக்தர்கள் தொடர்ந்து இங்கு வந்து பத்ரினாதரை தரிசித்தபடியே இருப்பார்கள். அதனால் தேவலோகத்தில் உள்ளவர்களினால் அவர்களது தேவரை வணங்க முடியாத நிலை ஏற்பட்டது. ஆகவேதான் வருடத்துக்கு ஆறு மாதங்கள் மனிதர்கள் பத்ரிக்குச் சென்று பத்ரினாதரை வணங்கும் வகையிலும், மனிதர்களே செல்ல இயலாத நிலையில் ஆறு மாதங்களில் இயற்கையாக அங்கு செல்லும் அனைத்துப் பாதையிலும் பனி மழையைப் பொழிய வைத்து மனிதர்களினால் செல்ல முடியாத அந்த ஆறு மாத காலத்தில் தேவர்கள் அங்கு வந்து பத்ரினாதரை வணங்குகிறார்கள் என்பது ஐதீகம். அது மட்டும் அல்ல இன்னொரு கதையின்படி அந்த ஆறு மாத காலத்தில் நாரதர் ஆலயத்துக்கு வந்து பகவானை வேண்டித் தவம் இருப்பதாகவும், அவரது தவத்துக்கு இடையூறு இருக்கக் கூடாது என்பதினால் அந்த ஆறு மாத காலமும் ஆலயம் மூடப்பட்டு இருக்கும் நிலையில் வைக்கப்பட்டு உள்ளதாகவும் புராணக் கதை ஒன்று உள்ளது.
ஆலயத்தின் அருகில் உள்ள கங்கை கரையில் பிரும்ம கபாலம் என்ற பாறை உள்ளது. அங்கு இறந்து போன பித்ருக்களுக்கு இங்கு, பித்ருக்களுக்கு சிராத்தம் செய்தால் ஏழேழு தலைமுறை அவர்களது ஆத்மாவும் மோக்ஷமடைவதாகவும் நம்பிக்கை உள்ளது. அது மட்டும் அல்ல பத்ரிநாத்தில் ஒரே ஒரு முறை பித்ருக்களுக்கு சிரார்த்தம் செய்தால் அதன் பின்னர் அவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் சிரார்த்தம் செய்யத் தேவை இல்லை என்பது இந்த தலத்தின் இன்னொரு விஷேஷம் ஆகும். ஆலயத்தின் உள்ளே இரண்டு அடி உயரத்தில் பத்ரினாராயனராக தியான நிலையில் காட்சி தர அவரது வலது பக்கத்தில் நின்றுள்ள நிலையில் நரநாராயணர்கள் இருக்க, பெருமாள் முன்னிலையில் நாரதர் அமர்ந்திருக்க, இடது புறத்தில் குபேரனும் விநாயகரும் காட்சி தர மேல்புறத்தில் சந்திரனும் சூரியனும் உள்ளார்கள். ஆலயத்தில் ஸ்ரீ மகாலஷ்மி தாயாரின் சன்னதியும் இந்த ஆலயம் ஸ்தாபிக்க காரணமான ஸ்ரீ ஆதி சங்கரருக்கும் தனி சன்னதி உள்ளன.
அலகநந்தா நதிக்கரையோரத்தில் அமைந்திருக்கும் பத்ரிநாத் கோவிலுக்கு சற்று தொலைவில் நாரதர் குளம் உள்ளது. அதன் அருகில் ஐந்து பாறைகளைக் கொண்ட பஞ்சசீலா என்ற இடமும் உள்ளது. அந்த ஐந்து பாறைகளையும் நாரதர், நரசிம்மர், வராஹர், கருடர், மார்கண்டேயர் என்று கூறுகிறார்கள் .
ஆறுமாத காலம் ஆலயம் மூடப்படுவதற்கு முன் பிரதான சன்னதியில் ஏற்றி வைக்கப்படும் நெய் விளக்கு அணையாமல் எரிந்து கொண்டிருப்பது இந்தக் ஆலயத்தின் தனிச் சிறப்பாகும் .