ஸ்ரீ த்ரினேத்ர சதுர்புஜ மற்றும்
ஸ்ரீ த்ரினேத்ர தசபுஜ
வீர ஆஞ்சனேய ஆலயங்கள்
சாந்திப்பிரியா
நாங்கள் சமீபத்தில் மாயவரத்தை சுற்றி உள்ள ஊர்களில் இருந்த பழைய காலத்து ஆலயங்களை சுற்றிப் பார்க்க சென்று இருந்தோம். அப்போது நாங்கள் திருக்கடவூர் ஆலயத்தில் இருந்து மாயவரத்தில் இருந்து நாகப்பட்டினம் செல்லும் வழியில் வரும் நாகை மாவட்டத்தில் உள்ள சிற்றூரான அனந்தமங்கலம் என்ற இடத்தில் இருந்த இரண்டு ஆஞ்சனேய ஆலயங்கள் சென்று இருந்தோம். இரண்டு ஆலயங்களுமே ஒன்றுடன் ஒன்று சம்மந்தப்பட்டது. அந்த இரண்டிலுமே உள்ள மூல தெய்வங்கள் ஆஞ்சநேயர் ஆவார். ஒன்றில் சதுர்புஜ ஆஞ்சநேயராகவும் மற்றதில் தசபுஜ ஆஞ்சநேயராகவும் அவர் காட்சி தருகிறார்.
அந்த இரண்டில் உள்ள மூலவர் ஆலயத்து ஆஞ்சநேயர் இராமாயண காலத்தை சேர்ந்தவர் என்று கூறுகிறார்கள். மூலவர் ஆலயத்தில் ஆஞ்சநேயர் வடக்கு நோக்கி பார்த்தபடி நின்று கொண்டு உள்ளார். மேலும் அந்த ஆலயத்தில் சுவற்றோடு ஒட்டி உள்ள குகை போன்ற பகுதியில் ஒரு பாறையில் காணப்படும் சிலை சுயம்புவாகத் தோன்றியது என்கிறார்கள். அந்த ஆஞ்சநேயருக்கு மூன்று கண்கள் மற்றும் நான்கு கைகளே தெரிகின்றன. அந்த ஆலயத்தில் ஒரே ஒரு பிராகாரம் மட்டுமே உள்ளது. அதற்குள் உள்ள குகைப் பகுதியில் ஆஞ்சநேயர் காட்சி தருகிறார். அந்த ஆலயம் தோன்றிய வரலாறு பற்றி அங்குள்ள பண்டிதர் கூறிய கதை இது.
” சீதையை மீட்க ஸ்ரீலங்காவுக்குச் சென்றுவிட்டு வெற்றியுடன் ஸ்ரீ ராமபிரான் தனது பரிவாரங்களுடன் அயோத்தியாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அவர்கள் வரும் வழியில் இருந்த பாரத்துவாஜ முனிவரின் ஆசிரமத்தில் தங்கி இளைப்பாறினார்கள் . அந்த நேரத்தில் அங்கு வந்த நாரத முனிவர் நடந்து முடிந்துவிட்ட யுத்தத்தில் பல அரக்கர்களும் மடிந்துவிட்டாலும், இன்னமும் சில அரக்கர்கள் தப்பி வந்து கடலுக்கு அடியில் அமர்ந்து கொண்டு தேவர்களை துன்புறுத்தி வந்தவாறு தமக்கு மேலும் அரிய சக்தியைப் பெற தவத்தில் இருக்கிறார்கள். அவர்கள் மீண்டும் சக்தியைப் பெற்றுவிட்டால் அவர்களை அடக்க முடியாமல் போய்விடும் என்பதினால் கடலுக்கு அடியில் அமர்ந்துகொண்டு தவம் செய்பவர்கள் தவ வலிமை பெறு முன் அவர்களை அழித்து விட வேண்டும் என்று விண்ணப்பித்துக் கொண்டார் . ஆனால் ராமபிரானோ அந்த நேரத்தில் முக்கியமானது பரதனுக்கு வாக்கு கொடுத்ததே எனவும் அந்த வாக்கின்படி யுத்தம் முடிந்த கையோடு அயோத்தியாவுக்கே முதலில் சென்று அரசை ஏற்கின்றேன் என்று தான் கொடுத்த வாக்கை மீறுவது குற்றம் என்பதினால் அந்த அரக்கர்களை அழிக்க தான் வேறு உபாயம் செய்வதாக உறுதி அளித்தார். அதன் பின் அனைவருடனும் ஆலோசனை செய்தப் பின் அந்த அரக்கர்களை அழிக்க ஹனுமாரை அனுப்புவது எனவும் முடிவு செய்தனர்.
ஏற்கனவே செய்து இருந்த தவத்தினால் பல வலிமைகளை பெற்று இருந்தவர்களை அழிப்பது சுலபம் அல்ல என்பதினால் அனைத்து தெய்வங்களின் சக்தியை ஒருமித்துக் கொண்டே அவர்களை அழிக்க வேண்டும் என்பதினால் பிரும்ம பிரும்ம கபாலத்தையும், ருத்த்ரர் மழுவையும், ராமர் தனது வில் அம்புகளையும், விஷ்ணு சங்கு மற்றும் சக்கரத்தையும், இந்திரன் வஜ்ராயுதம் போன்றவற்றை அளிக்க முடிவாக வந்த சிவ பெருமான் தனது மூன்றாவது கண்ணையே அவருக்குக் கொடுத்தார். வானேறிச் செல்ல அங்கு இருந்த கருடாழ்வாரோ தனது சிறகுகளையே ஹனுமாருக்குக் கொடுக்க விண்ணிலே பறந்து சென்ற ஹனுமார் கடலில் முழுகி அங்கு இருந்த அரக்கர்களை வெளியே இழுத்து வந்து அவர்களுடன் யுத்தம் செய்து அழித்தார். நவகிரகங்களும் அவருக்கு துணை புரிந்தனராம். அந்த யுத்தம் முடிந்ததும் கடலில் குளித்துவிட்டு மீண்டும் ராமபிரானை காண ஆனந்தத்துடன் வந்து அருகில் இருந்த வனப் பிரதேசத்தில் தங்கி சற்று நேரம் கண் அயர்ந்தார். அந்த இடமே ஆனந்த மங்கலமாயிற்று.”
அவர் கண் அயர்ந்த இடத்தில் அவர் சோழர்கள் காலத்தில் ஒரு ஆலயம் எழுந்தது. அது ஆழ்வார்கள் காலத்துக்கு பின்னர் தோன்றியதாம். சோழர்கள் காலத்தில் அந்த மூலவர் ஆலயத்தின் எதிரிலேயே இன்னொரு ஆலயம் அமைக்கப்பட்டது. அதில் மூலவராக வாசுதேவப் பெருமான் தனது மனைவிகளுடன் அற்புதமாகக் காட்சி தந்து கொண்டு இருக்கின்றார். அருகில் உள்ள கருவறையில் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி தனது மனைவிகளான ருக்மணி மற்றும் சத்தியபாமாவுடன் காட்சி தருகிறார். அதே ஆலயத்தில் த்ரினேத்ர தசபுஜ ஆஞ்சநேயர் எனும் பத்து கைகளைக் கொண்ட ஹனுமானும் தெற்கு நோக்கி பார்த்தவாறு எழுந்து அருளி உள்ளார். அவரை முதல் ஆலயத்தின் உற்சவ மூர்த்தி என்கிறார்கள். அங்குள்ள ஹனுமார் தனது பத்து கைகளிலும் அனைத்து கடவுட்களும் கொடுத்த ஆயுதங்களுடனும் கருடாழ்வார் தந்த சிறகுடனும் காட்சி தருகிறார். ஆலயத்தில் பூதேவியார் மற்றும் கருடாழ்வாருக்கும் சன்னதிகள் உள்ளன.
அனந்தமங்கலத்துக்கு செல்பவர்கள் முதலில் மூலவர் ஆலயத்தில் உள்ள த்ரினேத்ர சதுர்புஜ புஜ ஆஞ்சநேயரை வணங்கியப் பிறகு , அதன் எதிரில் அமைந்து உள்ள ஸ்ரீ ராஜகோபாலப் பெருமாள் ஆலயத்தில் அமர்ந்துள்ள த்ரினேத்ர தசபுஜ புஜ ஆஞ்சநேயரையும் சென்று வணங்க வேண்டும். அமாவாசைகளில் ஆஞ்சநேயருக்கு திருமஞ்சனம் சாற்றி விசேஷ பூஜைகள் செய்கிறார்கள். இந்த ஆலயங்களில் வந்து ஹனுமானை வழிபட்டால் அவருக்கு ஆயுதங்களையும் தனது கண்ணையும் தந்த சிவன், விஷ்ணு, பிரும்மா, ராமர், இந்திரன், ருத்திரன், கருடாழ்வார் போன்ற அனைவரையும் ஒரு சேர வழிபட்ட பலன் கிடைக்குமாம். மேலும் உடல் வலிமை, நீண்ட ஆயுள், எதிரிகள் நாசம், நோய் நொடிகள் விலகி மனத் தெளிவு ஏற்படுவது திண்ணம் என்கிறார்கள். முக்கியமாக மூல நட்ஷத்திரத்துடன் வரும் அம்மாவாசையில் அல்லது கேட்டை நட்சத்திர காலத்திலும் இங்கு வந்து அவருக்கு துளசி இலை மாலை, அல்லது வடை மாலை சாற்றி வழிபட்டால் அனைத்து தீமைகளும் விலகுமாம். அதற்கும் மேலாக அவர் வாலில் அனைத்து நவகிரகங்களும் அமர்ந்து உள்ளன எனவும் நவகிரக தோஷங்கள் விலக இங்கு வழிபடுவது சிறந்ததாம்.
த்ரினேத்ர சதுர்புஜ ஆஞ்சநேயசுவாமி ஆலயம் மற்றும் ஸ்ரீ ராஜகோபாலசுவாமி ஆலயம்,