திருக்கடையூர்
அமிருதகடேஸ்வரர் சமேத 
அன்னை அபிராமி
ஆலய மகிமை
சாந்திப்பிரியா 

மயிலாடுதுறையில் இருந்து சுமார் 22 கிலோ மீட்டர்  உள்ளது திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் சமேத  அபிராமி ஆலயம்.  ஆலயம் சோழர் காலத்தை சேர்ந்தது என்றாலும் அவர்கள் காலத்தில் அது காட்டப்படும் முன்பே அங்கு  சிவனாலயம் இருந்துள்ளது. அந்த காலங்களில் ஆலயம் என்ற கட்டிடங்கள் இல்லாமல் அங்கும் இங்கும் வனங்களில் இருந்த சுயம்பு மூர்த்திகளை அங்காங்கே இருந்த மக்கள் வழிபடுவது வழக்கம். அங்குள்ள ஒரு மரம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும் அந்த மரத்துப்  பூவை மார்க்கண்டேயர் சிவபெருமான் பூஜைக்கு பயன்படுத்தினார் என்று புராணக் கதை உள்ளதினால் ஆலயம் உள்ள இடத்தில் இருந்த அமிர்தகடேஸ்வரர் 2000 ஆண்டுகளுக்கு முற்பட்டே வழிபட்டு வந்திருக்க வேண்டும்.

அந்த ஆலயம் இரண்டு காரணங்களுக்காக விசேஷமானது. முதலாவது இங்கு வந்து கால சம்ஹார மூர்த்தியையும் அமிருதகடேஸ்வரரையும் தரிசனம் செய்பவர்கள் ஆயுள் விருத்தி அடையும். அடுத்து அவர் அருகிலேயே குடி கொண்டு உள்ள ஞான தேவியான அன்னை அபிராமியை தரிசித்து அபிராமி அந்தாதியை சொல்லி வந்தால் ஞானம் மட்டும் அல்ல செல்வத்தையும் வாரி வாரி அவள் வழங்குவாள். ஆகவே ஆயுள் விருத்திக்காகவும், செல்வம் பெருகவும் வாழ்நாளில் ஒரு முறையாவது இங்கு செல்வது அவசியம்.

இந்த ஆலயத்தை ஒன்பது அல்லது பத்தாவது நூற்றாண்டை சேர்ந்தது என்கிறார்கள். சோழ மன்னர்கள் ஆண்ட காலம் அது. ஆனால் ஆலயம் எழுப்பப்படும் முன்னரே ஆலயம் இல்லாத  அந்த இடத்தில் கால சம்ஹார மூர்த்தியும் அபிராமியும், வில்வேஸ்வரரான சிவனும் பூஜிக்கப்பட்டு வந்துள்ளனர்.

ஆலயத்தில் மூன்று மண்டபங்கள் உள்ளன. உள் மண்டபத்தில் அமிருதகடேஸ்வரர் காட்சி தருகிறார். சிவலிங்க  உருவில் உள்ள அவர் சிலையில் பிளவு  போன்ற தோற்றமும், தழும்பு போன்றதும் காணப்படுவது யமராஜர் அவர் மீது வீசிய கயிற்றால் ஏற்பட்ட தழும்பு எனவும், அது மார்க்கண்டேயர் கதைக்கான ஆதாரம் எனவும் கூறுகிறார்கள். அந்த சன்னதியில் ஒரு பாதாள வழியும் காணப்படுகிறதாம். அதன் மூலம் சென்றுதான்  மார்க்கண்டேயர் கங்கை நீரை கொண்டு வந்தாராம்.
அதற்கு அடுத்த மண்டபத்தில் தெற்கு திசை நோக்கி நின்றவண்ணம் சிவபெருமான் கால தேவனை சம்ஹாரம் செய்யும் காட்சியில் காட்சி தருகிறார். அவருடைய இடது புறத்தில் பார்வதி தமது தேவதைகளுடன் காட்சி தர , மார்க்கண்டேயர் வலப் புறத்தில் நின்றபடி சிவபெருமானை வணங்கிக் கொண்டு நிற்க சிவனுடைய பாதத்தின் அடியில் யமராஜர் தலைகீழாக பூமியிலே கிடக்கின்றார்.

இந்த ஆலயத்தை சுற்றி அமிருத புஷ்கரணி, கால தீர்த்தம், மார்கண்டேய தீர்த்தம் போன்ற தீர்த்தங்கள் உள்ளன. மார்கண்டேய தீர்த்தத்தில் கங்கை தீர்த்தமும் உள்ளது என்பது ஐதீகம்.

         படம் நன்றி: Holi India divine .org

அது மட்டும் அல்ல இந்த ஆலயத்தில் இரண்டாயிரம் வருடங்களாக வளர்ந்து வரும் பின்சிலம் என்ற  ஒரு மரமும் உள்ளது என்பது ஒரு அதிசயமே. அந்த மரத்தில் 365 நாட்களும் பூக்கள் பூக்கின்றது என்பது  மட்டும் அல்ல அந்தப் பூவை அந்த ஆலயத்தில் உள்ள அமிருதகடேஸ்வரர் பூஜைக்கு மட்டுமே உபயோகிக்கின்றார்கள். மற்ற எந்த பூஜைக்கோ அல்லது வேறு எவருமோ  அந்த பூவை உபயோகிப்பதில்லை  என்பது என்னும் ஒரு அதிசயமான செய்தி. இனி ஆலய மகிமையையும், வரலாற்றையும் படிப்போம்.

அமிருதகடேஸ்வரர் 

 

ஒரு முறை தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைந்து அம்ருதத்தை எடுத்தவுடன் அதனால் ஏற்பட்ட சச்சரவினால்  அசுரர்கள் ஏமார்ந்து போய் தேவர்கள் அம்ருதத்தை அடைந்தார்கள்.  தேவர்கள் அதை பெற்றுக் கொண்டு செல்கையில் அங்கிருந்த விநாயகரை வழிபட மறந்து விட்டார்கள். ஆகவே கோபமுற்ற விநாயகர் தேவர்களுக்குத் தெரியாமல் அமிருத கலசத்தை எடுத்து வந்து திருக்கடையூரில் தற்போது ஆலயம் உள்ள இடத்தில் மறைத்து வைத்து விட்டார். அதைக் தேடி அலைந்து அங்கு வந்த  தேவர்கள்  பூமியில் புதைத்து வைக்கப்பட்டு இருந்த கலசத்தில் இருந்த அமிருததை எடுக்க முயன்றபோது அவர்களால் தூக்க முடியாத அளவு சிவலிங்கமே பாதாளம்வரை அங்கு பூமியில் புதைந்து இருந்ததைக் கண்டு விநாயகரிடம் மன்னிப்புக் கேட்டார்கள். அவர்கள் முன் தோன்றிய சிவபெருமான் அந்த இடத்தில் விநாயகரை வழிபட்டப் பின்னரே அவர்களுக்கு அமிருதத்தை தருவேன் எனக் கூறினார். அதன் பின் சிவன் அந்த அமிருததை தேவர்களுக்குக் கொடுத்தாலும் தன்னை  அங்கேயே  விநாயகர் பிரதிஷ்டை செய்து விட்டதினால் இனி தான் அங்கே இருந்தவாறு அமிருதகடேஸ்வரராக  பக்தர்களுக்கு காட்சி தருவேன் என்று கூறினார்.  அதனால்தான் அவரே அமிருதகடேஸ்வரர் என்ற பெயரில் ஆலயத்தில் உள்ளார். அங்குள்ள பிள்ளையாரை கள்ளவாரணப் பிள்ளையார்  என துதிக்கின்றனர். அமிருதத்தை உண்டால் நீண்ட ஆயுளும் இறவாமையும் கிடைக்கும் என நம்பப்பட்டதினால் அங்கிருந்த சிவலிங்கத்தை அனைவரும் வந்து அமிருதகடேஸ்வரர்  என பூஜிக்கலாயினர்.

கால சம்ஹார மூர்த்தி

 

அந்த காலத்தில் வசித்து வந்த  மிரிகண்டு மகரிஷியும் அவர் மனைவியும் தமக்கு மழலை செல்வம் கிடைக்கவில்லையே என ஏங்கி சிவனை ஆராதித்துத் துதித்தார்கள். நாளடைவில் அவர்களுக்கு சிவபெருமானின் அருளினால் அழகிய ஆண் குழந்தை பிறந்தது. அவனுக்கு மார்க்கண்டேயர் என்ற பெயரையும் சூட்டினார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அந்தக் குழந்தை தனது 16 ஆவது வயதில் மரணம் அடைந்து விடும் என்ற விதியுடன் பிறந்து இருந்ததினால்  அந்தக் குழந்தைக்கு உயிர் பிச்சைக் கிடைக்க  அந்த முனிவரும் அவர் மனைவியும் பல இடங்களிலும் சென்று பல கடவுட்களையும் பிரார்த்தனை செய்து கொண்டே வந்தனர்.  முடிவாக திருக்கடையூருக்கு அருகில் இருந்த கிராமம் ஒன்றில் வந்து தங்கி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரரை (அப்போது ஆலயம் இல்லாமல் சிவலிங்கம் திறந்த வெளியில் இருந்ததாம். ஒரு ஆறும் பக்கத்தில் ஓடிக்கொண்டு இருந்ததாம்) ஆராதித்து வந்தார்கள். அவர்களுடைய மகனான மார்க்கண்டேயனும் தினமும் அந்த சிவலிங்கம் இருந்த இடத்தின் கீழே இருந்த பாதாள மார்க்கம் மூலம் சென்று கங்கை தண்ணீரை எடுத்து வந்து சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தாராம். தினமும் கங்கை நதியின் நீரை வாரணாசியில்  இருந்து எடுத்து வர முடியுமா என வியக்காதீர்கள்.

சில படித்தறிந்த பண்டிதர்களின் கூற்றின்படி அந்த காலத்தில் பல இடங்களிலும் கங்கை நதி அந்தராத்மியாக பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டு இருந்ததாகவும், அந்த ஊரின் அருகிலேயே இருந்த திலதர்பண பூமி எனப்படும் சிவஸ்தலத்தில் சிவபெருமான் தங்கி இருந்தபோது அவருடன் வந்திருந்த கங்கை நதியானவள் சிவனுக்குக் காவலாக அந்த பூமியில் ஓடிய நதியில் அமர்ந்து கொண்டு இருந்ததினால் அங்கிருந்த பல நதிகளும் கங்கை நீரை பெற்று இருந்தன.

அது போலத்தான் சிவபெருமான் அந்த இடத்திலேயே அமிருதகடேஸ்வரராக பூமியில் புதைந்து இருந்ததினால் அவர்  தலை முடி மீது இருந்த கங்கை நதியும் அங்குள்ள பூமிக்கு அடியில் ஓடிக்கொண்டே இருக்க வேண்டி இருந்தது . அதனால்தான் மார்க்கண்டேயர் வாரணாசிக்கு சென்று கங்கை நீரை கொண்டு வர அவசியம் ஏற்படவில்லை.  மிரிகுண்டு முனிவரின் ஞான திருஷ்டியினால் அந்த இடத்தின் பூமிக்கு அடியில் ஓடிக் கொண்டு இருந்த கங்கை நதியின் நீரை மார்கண்டேயர் கண்டு பிடித்து நீரை எடுத்து  வந்தார்  என்றும் படித்த பண்டிதர்கள் அதன் மகத்துவத்தை விளக்கிக் கூறினார்கள்.

மார்க்கண்டேயர் சிவபெருமானுக்கு தினமும் கங்கை நீரை அபிஷேகம் செய்து பூஜை செய்து வந்தார். ஆற்றுக் கரை ஓரத்தில் கெட்டியான களி மணலினால் தான் பிடித்து வைத்து இருந்த சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்து பூஜித்து வந்தார். ஆனால் அவருக்கு அப்போது தெரியாது அந்த இடத்தில்தான் அமிர்தகதேஸ்வரர் என்ற சிவலிங்கம் புதைந்து மறைந்து இருந்தப் பகுதி என்பது. அவருடைய ஆயுள் நிறைவு பெற இருந்த நாளும் வந்தது. யமராஜர் பாசக் கயிற்றை எடுத்துக் கொண்டு மார்கண்டேயரை அழைத்துச் செல்ல வந்தார். மார்க்கண்டேயர் உயிர் போக இன்னும்  சில வினாடிகளே  இருக்கும்.  மார்க்கண்டேயர் சிவபெருமானை கட்டி அணைப்பது போல அந்த சிவ லிங்கத்தை கட்டி அணைத்துக் கொண்டு கதறினார் ” சிவா… சரீர ரூபத்தில் உள்ள என்னை எதுவரை என் தாய் தந்தை காப்பாற்றினார்கள், என் அறிவை என்னுடைய குருநாதர் காப்பாற்றி வருகிறார்….ஆனால் என் உயிரைக் காக்க உன்னைத் தவிர வேறு யாருமே இல்லையே….என்னைக் காப்பாற்று ” எனக் கதற  தனது பக்தனின் கதறலைக் கேட்ட சிவபெருமான் நேரிலே வந்தார் .

அங்கு நின்று கொண்டு இருந்த யமராஜரிடம் ‘இவன்  என்னுடைய பக்தன். இவனை  நீ அழைத்துப் போகக் கூடாது’ எனக் கட்டளை இட்டார். மார்க்கண்டேயரின் ஆயுள் முடிவுக்கு வந்தது. யமனோ ஆயுள் முடிந்துவிட்ட மார்க்கண்டேயனின் உயிரைப் பறித்துக் கொள்ளாமல் தன்னால் செல்ல  முடியாது எனக் கூறிவிட்டு பாசக் கயிற்றை மார்க்கண்டேயர் மீது வீச அந்தக் கயிறு சிவலிங்கத்தையும்  சேர்த்துக் கட்ட கோபமுற்றார் சிவபெருமான். தன் மீதே ஒருவன் கயிற்றை வீசுகிறானா?  நான் கூறியும் உனக்கு இத்தனை தலை கனமா என கோபமுற்று யமதர்மராஜரை தனது இடது காலால் எட்டி ஒரு உதை விட்டார். கீழே விழுந்த யமன் மீது தனது காலை வைத்து அவரை பூமியுடன் சேர்த்து அழுத்தினார். யமராஜரால் அந்த வலிமையை தாங்க முடியவில்லை. எழுந்திருக்கவும் முடியவில்லை. காலத்தை நிர்ணயிப்பவனே மரணம் அடையும் நிலை. அவ்வளவுதான் உலகம் முழுவதும் மரணம் நின்றது. பூமியால் தாங்க முடியவில்லை. பிரும்மாவோ தன்னுடைய ஜனன மரண கணக்கு தவிடு பொடியாகியதைக் கண்டு பயந்தார்.

  படம்  நன்றி    http://en.wikipedia.org/wiki/Markandeya 

பிரும்மாவுடன் எண்பதாயிரம் தேவர்களும் முனிவர்களும் ரிஷிகளும் சேர்ந்து வந்து சிவபெருமானை வணங்கித் துதித்து படைக்கப்பட்ட ஜீவன்களின் அளவு சரியான விகிதத்தில் இருக்க வேண்டும் எனில் யம ராஜரின் கடமை அவசியம். ஆகவே தனது கடமையை ஆற்ற யமனை விட்டு விடுமாறு வேண்டிக் கொள்ள, சிவபெருமானும் தனது காலின் கீழே அமுக்கி வைத்து இருந்த யமராஜரை விட்டு விட கீழிருந்து எழுந்த யமராஜர் சிவ பெருமானிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவரை வணங்கியப் பின் இனி சிவபெருமான் அனுப்பினால் ஒழிய தான் மார்க்கண்டேயரை எந்த காலத்திலும் அழைத்துச் செல்ல மாட்டேன் என உறுதி கூறி விட்டுச் சென்றார். அதனால்தான் மார்க்கண்டேயர் மரணம் என்பதையே அடையவில்லை.  இன்னமும் சிரஞ்சீவியாகவே தேவலோகத்தில் சிவகணமாக உள்ளார் என்று நம்புகிறார்கள். அங்கு வந்த அனைவரிடமும் சிவபெருமான் ” இனி இந்த தலத்தில் எவர் ஒருவர் வந்து என்னை வணங்குவார்களோ அவர்கள் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள், அவர்களது ஆயுள் கூடும் ” எனக் கூறி ஆசிர்வதித்தார்.

முழுவதுமாக மனக் கலக்கத்தில் இருந்த மார்கண்டேயர் உயிர் பிச்சை பெற்றதும்  தன்னை மறந்து, தான் உயிருடன்தான் இருக்கின்றேனா எனத் தெரியாமல் சிவ பெருமானை சுற்றி சுற்றி ஓடி பிரதர்ஷணம் செய்து வணங்கினார். வலமிருந்து இடமாக சுற்றியபோது முதலில் ஆறைக் கடந்து ஒன்றை கடக்க வேண்டி இருந்ததினால் (16 என்ற எண் ) 16 என்ற எண்  61 என அவருக்கு தோன்றியது.  என் வயது பதினாறா இல்லை அறுபத்தி ஒன்றா என்ற குழப்பம் அவருக்கே ஏற்பட்டது. பதினாறாக இருந்தாலும் அறுபத்தி ஒன்றாக  இருந்தாலும் இரண்டும் உனக்கு ஒன்றே என்றார் அங்கிருந்த பிரும்மா.  அதனால்தான் அறுபதைக் கடந்து அறுபத்தி ஒன்றாம் வயதை எட்டும் போது அங்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்வது வழக்கம் ஆயிற்று.

 சதாபிஷேக வைபவத்தில் ஆசி பெரும் குடும்பத்தினர்

அதாவது மார்கண்டேயர்  பிரதர்ஷனம் செய்து வணங்கியபோது தோன்றிய வயதைக் கடந்ததும் ‘எனக்கு ஆரோக்கியமும் ஆயுள் விருத்தியும் கொடு’ என சிவனை அங்கு வந்து வேண்டிக் கொண்டு பூஜை செய்வது வழக்கம் ஆயிற்று. அது போலவே அங்கு வந்திருந்த எண்பது கோடி தேவ, முனி, ரிஷிகளின் ஆசீர்வாதங்களைப் பெற்றுக் கொண்டு சிவனிடம் தனது ஆயுள் விருத்தி அடைய வேண்டிக் கொள்ள ஒவ்வொருவரும் தமது எண்பதாவது வயதில் அங்கு வந்து சதாபிஷேகம் செய்து கொள்வது சிறந்ததாம்.

பிரும்மா பெற்ற ஞானோபதேசம் 
 
படம் நன்றி: Holi India divine .org

அப்போது அங்கு கூடி இருந்த அனைவரிடமும் ஒரு நிகழ்ச்சியை பிரும்மா கூறினார் . ஒரு முறை பிரும்மா சிவபெருமானிடம் சென்று தனக்கு ஞானோபதேசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டார். அப்போது சிவபெருமான் அவரிடம் சிறிது வில்வ மரத்து விதைகளைக் கொடுத்து அந்த விதையை அவர் செல்லும் இடத்து மண்ணில் விதைத்தப் பின் ஒரு நாழி முகூர்தத்துக்குள் அந்த இடத்தில் வில்வ மரம் தோன்றினால் அந்த இடத்தில் வந்து தான்  ஞானோபதேசம் செய்வேன் எனக் கூறி இருந்தார். பிருமாவும் பல இடங்களிலும் சுற்றித் திரிந்து  அதில் இருந்து விதைகளை விதைத்து வந்தார். ஆனால் ஒரு நாழி முகூர்தத்துக்குள் எங்குமே விலவ மரம் வெளிவரவில்லை. கடைசியாக திருக்கடையூருக்கு வந்தவர் அந்த வில்வ விதையை அங்கு புதைக்க அங்கு வில்வ மரம் வனமே தோன்றியது. உடனே சிவன் வில்வவனேஸ்வரராக அவர் முன்னால் தோன்றி தான் வாக்கு தந்தபடி பிர்ரும்மாவுக்கு ஞானோபதேசம் செய்தார். பிருமாவும் வில்வமர வனப்பிரதேசத்தில் தோன்றிய சிவனை  வில்வவனேஸ்வரரை அங்கேயே வணங்கித் துதித்தார். இப்படியான செய்தியை பிரும்மா அங்கு கூடி இருந்த அனைத்து தேவ முனிவர்களிடமும் கூறிவிட்டு  அந்த மண்ணின் மகிமை அத்தனை புகழ் மிக்கதாக இருந்ததினால்  இனி அங்கு சிவபெருமான் கால சம்ஹாரனாக மட்டும் அல்ல ஞானம் தரும் வில்வேஸ்வரராகவும் இருப்பார் என்று கூறினார்.

அன்னை அபிராமி

அதைக் கேட்ட பிருமாவின் மனைவியான சரஸ்வதி தனக்கும் ஞானோபதேசம் கிடைக்க வேண்டும் என சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவர் தன்னுடைய மனைவியான பார்வதியும் அதே ஷேத்திரத்தில் அபிராமியாக அவளுக்கு அருளுவாள் எனவும் கூறினார். அதற்கேற்ப சரஸ்வதியும் பார்வதியிடம்  தனக்கு ஞானம் தருமாறு வேண்டுக் கொள்ள பார்வதி அவளுக்கு சில காலத்துக்குப் பின்னர் இந்த ஞானஸ்தலத்துக்கே வந்தால் ஞானோபதேசம் செய்வதாக வாக்கு தந்தாள். அதை ஏற்றுக் கொண்ட  சரஸ்வதியும் சில காலம் அங்கேயே தவம் இருந்து   பார்வதியிடம் ஞானம் பெற்றாள். அதனால்தான் அங்கு ஞானம் பெற்றுக் கொண்ட சரஸ்வதி  அந்த பூமியையே சேர்ந்த பூந்தோட்டம் என்ற இடத்திற்குச் சென்று அங்கு ஞானம் தரும் தேவியாக அமர்ந்தால்.அவளுக்கு ஞானம் தந்த பார்வதி தான் அங்கேயே அபிராமி என்ற பெயரில் தங்கி இருந்து  கொண்டு அங்கு வந்து தன்னை துதிப்பவர்களுக்கு அளவில்லா செல்வம் தருவேன் எனக் கூறினாள்.
வெகு காலத்துக்கு முன்னால் ஒரு அந்தணர் அந்த இடத்துக்கு வந்து தினமும் அபிராமியை தரிசித்து வந்தார். அவர் அங்கு வந்து சந்திரனைப் போல ஒளி தரும் அபிராமிக்கு முன்னால் அமர்ந்து கொண்டு தியானத்தில் இருப்பார். அப்படி அவர் வணங்கிக் கொண்டு வந்த பொது ஒரு நாள்  அம்மாவாசை. அந்த  தினத்தன்று அந்த நாட்டு மன்னனும் அங்கு வந்தார். அவர் வந்து நின்றதையும் கவனிக்காமல் தனது முழு மனதையும் இறைவியின்பால் செலுத்தி அமர்ந்து இருந்த அந்தணரை கண்டதும் தன்னை மன்னன் என்றும் மதிக்காமல் அமர்ந்து உள்ளார் என அவமானமாகக் கருதிய மன்னன் அவரிடம் ‘ ஐயா இன்று என்ன நாள்?’ எனக் கேட்க அந்தணர் முழுப் பொலிவுடன் காட்சி தந்து கொண்டு இருந்த அபிராமியை மனதில் நினைத்துக் கொண்டு அந்த சந்தோஷத்தை பிரதிபலிக்கும் விதமாக ‘பூரண சந்திரன்’ என்றார். அது போதுமே மன்னனுக்கு , உடனேயே தனது படையினரை அனுப்பி அந்த அந்தணரை எழுப்பி தன்னிடம் அழைத்து வருமாறு கூறினார். அந்தணர் வந்ததும் அந்த இடத்தில் அவருடன் சேர்ந்து தான் பூரண சந்திரனை அன்று மாலை தரிசிக்க விரும்புவதாகவும் அப்படி அன்று பூரண சந்திரன் வரவில்லை எனில் அவரை தீயில் போட்டு பொசுக்கி விடுவதாகவும் கூறினார்.

காலை கழிந்து மாலை நேரம் வந்தது. சந்திரன் தோன்றவில்லை. அந்தணரை கயிற்றிலே கட்டி தீக் குண்டத்தின் அருகில் அழைத்துச் செல்லலாயினர்.  அம்மாவாசை அன்று சந்திரன் எப்படிக் காட்சி அளிப்பார். தீக்க குழுயின் அருகில் கொண்டு செல்லப்பட்டுக் கொண்டு இருந்த அந்தணர் தேவியை பார்த்தவண்ணமே கதறிய அழுதார். மனமுருகி அன்னை அபிராமியை தோற்றி தனது மனதில் எழுந்த வார்த்தைகளைக் கொண்டு பாடத் துவங்கினார்.  ஒன்றன் பின் ஒன்றாக எழுபத்தி எட்டு பாடல்களை பாடி முடித்தும் சந்திரன் தோன்றவில்லை. மன்னன் அந்த அந்தணரை தீக்குண்டத்தில் தள்ளுமாறு படையினருக்கு ஆணையிட்டபோது தனது பரிபூரண பக்தரான அந்த அந்தணரின் துயரம் தேவியை உலுக்கியது. சந்திரன் தோன்றா விட்டால் என்ன, நான் சந்திர ஒளியைக் காட்டுகிறேன் என்று நினைத்தவள் தனது காதணியை எடுத்து ஆகாயத்தில் வீசினாள். அது பூரண சந்திர பிம்பம் போல ஒளி வீசியபடி உலகெங்கும் ஒளியைத் தர அதிர்ந்தான் மன்னன். ஓடோடிச் சென்று அந்தணரின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டான். தேவியின் கருணையை கண்டு மனம் நெகிழ்ந்த அந்தணர் அந்த பாடல்களை தொடர்ந்து பாடி முடித்தார். தேவி அங்கு பிரசன்னமாகி  இனி அந்த தன்னைப் போற்றி அந்த அந்தணர் பாடிய  பாடல்களை அங்கே வந்து பாடி துதிப்பவர்களுக்கு தான் பூரண ஆசிகளை வழங்கி ஞானம் மட்டும் அல்ல வறுமையை ஒழிந்து பெரும் செல்வத்தையும் தருவேன் எனக் கூறி விட்டு மறைந்தாள். அந்த அந்தணரும் அபிராமி பக்தர் என்ற பெயரைக் கொண்டு அந்த பாடல்களை அபிராமி அந்தாதி என அனைவருக்கும் கற்றுக் கொடுத்தார். கால ஓட்டத்தில் அவர் பெயர் அபிராமி பட்டர் என ஆயிற்று.

ஆலய விலாசம்
அருள்மிகு  அமிர்தகடேஸ்வரர்   தேவஸ்தானம்
திருக்கடையூர்- 609 311  
Phone: 04364-287429
   பூஜைகளுக்கு மற்றும் சதாபிஷேக வைபவங்களுக்கு 
தொடர்பு கொள்ள எனக்கு கிடைத்த சில விலாசங்கள்.
கீழே குறிப்பிட்டு உள்ளவர்களை தொடர்பு கொண்டு ஆவன செய்து கொள்வது அவரவர்கள் பொறுப்பே  .
திரு R. சுவாமிநாத குருக்கள், திரு  R. சுப்ரமணிய குருக்கள் மற்றும் 
திரு R.அமிர்தகடேச  குருக்கள் –  போன்  04364-287516, 287646  
———-
திரு .நாகராஜ்  குருக்கள்  –  போன்  04364 – 287349 
 ————
திரு ரவிச்சந்திர குருக்கள் 04364 – 287784 
———–
திரு G.S. ரவி   04964-287821