பட்டீஸ்வரம்  துர்க்கை  ஆலயம் 
சாந்திப்பிரியா 
பட்டீஸ்வரம் என்ற ஊர் கும்பகோணத்தில் இருந்து பத்து கிலோ மீட்டார் தொலைவிலேயே உள்ளது. பட்டீஸ்வரம் என்றாலே அங்குள்ள துர்க்கை அம்மன் ஆலயம்தான் அனைவர் மனதிலும் வரும் . காரணம் ராகு தோஷம் உள்ளவர்கள் தமது தோஷத்தை களைந்து கொள்ள அந்த ஆலயத்துக்குதான் செல்கிறார்கள். ஆனால் அந்த ஆலயத்தின் முக்கியமான மற்றொரு மகிமை குறித்து பலரும் அறிந்திருக்கவில்லை. அந்த ஆலயத்தில்தான் மிகப் பெரிய பைரவர் சன்னதி உள்ளது.  சோழ மன்னர்கள் அரசாண்ட காலத்தில் அவர்கள் தமது அரண்மனைப் பாதுகாக்க நான்குபுறங்களிலும்  துர்க்கை, விநாயகர், முருகன் மற்றும் பைரவர் என்பவர்களுக்கு சன்னதிகளை அமைத்து பூஜை செய்து வந்தனராம். அவர்களே இந்த ஆலயத்தில் தாம் வணங்கி வந்த துர்கையின் சிலையைக் கொண்டு வைத்ததாக நம்புகிறார்கள். இந்த பட்டீஸ்வரம் தோன்றியதே பட்டீஸ்வரருக்காக என்றாலும் துர்க்கை உருவில் உள்ள பார்வதியே அதிக முக்கியத்துவம் பெற்று உள்ளாள். இந்த ஐந்து கோபுரங்களை உள்ளடக்கிய மாபெரும் ஆலயம் தோன்றியது ஏழு அல்லது ஆறாம் நூற்றாண்டில் இருக்கலாம். பல காலங்களில் இந்த ஆலயம் பல்லவர்கள். சோழர்கள் மற்றும் நாயக மன்னர்களால் விரிவாக்கப்பட்டுக் கொண்டே இருந்துள்ளது.

துர்க்கை அம்மனின் சன்னதிக்குப் பின்புறமாக ஞானவாபி குளம் உள்ளது. அதன் கரைகளில் நாக தோஷத்தை நீக்கிக் கொள்ள நாகர்கள் (நாகங்களின் சிலைகள்) அமர்ந்து உள்ளனர். அதன் எதிரில்தான்  கொடிமர விநாயகரும் சன்னதியில் அமர்ந்து உள்ளார். அதன் பின்புறத்தில் உள்ள நுழை வாயில் வழியே சென்றால் ஞானாம்பிகை மற்றும் பட்டீஸ்வரர்  தனி ஆலயங்கள் உள்ளன.  ஆனால் இரண்டுமே பட்டீஸ்வரர் ஆலயத்து  நான்கு பக்க சுவர்களுக்கு உள்ளேதான் அமைந்து உள்ளன. அப்படி என்றால் அந்த ஆலயத்தின் மொத்த பரப்பளவை எண்ணிப் பாருங்கள்.

துர்க்கை  அம்மன்  வரலாறு
   
 
படம் நன்றி:- http://Hinduism.wall.fm/forum

வேத காலத்தில் பார்வதி தனக்கு ஏற்பட்ட ஒரு சாபத்தை விலக்கிக் கொள்ள இந்த ஆலயம் இருந்த இடத்துக்கு வந்தாள். அவள் இந்த இடத்தில் வந்து தனிமையில் தவம் இருக்கத் துவங்கியபோது அவளுக்கு உதவுவதற்காக தேவேர்கள் அந்த இடத்தில் மரம், செடிகள், கொடிகள் என அமைத்து வனபிரதேசமாக அதை ஆக்கினார்கள். பார்வதிக்கு உதவியாக இருக்க காமதேனு தனது பெண்ணான பட்டியையும் அனுப்பி வைத்தது. பார்வதி நின்று கொண்டே பரமேஸ்வரரை நினைத்து  தவம் இருந்தாள். பார்வதியின் கடுமையான தவத்தைக் கண்ட சிவனார் அவள் வேண்டுகோளை ஏற்று அவளுக்கு சடை முடியுடன் காட்சி தந்து அவளை அங்கேயே துர்கையாக இருந்து கொண்டு மக்களின் துயரங்களை துடைத்து அருளுமாறு கூறினார். ” இங்கு நீ வந்து தவம் செய்ததினால் இது தவ வலிமை பெற்ற பூமி ஆனது.  நீ செய்துள்ள தவத்தினால் உனது சக்தியை உள்ளடக்கிய பூமி ஆகிவிட்டது இது.  இந்த இடமே அனைத்து தேவர்களாலும் உனக்காக உருவாக்கப்பட்டு உள்ளதினால் இது தெய்வ பூமி ஆயிற்று.  நீயே என்னிடம் சாப விமோசனத்தை இந்த இடத்தில் பெற்றுள்ளாய். அதனால்தான் ராமரும் இங்கு  வந்து  என்னை பூஜித்து தனது தோஷங்களை விலக்கிக் கொண்டு தனுஷ்கோடி கடலுக்கு சமமான  புனித தீர்த்ததையும் ஏற்படுத்தி உள்ளார்.  இங்கு வந்து உன்னை ராகுவும் கேதுவும் வணங்குவார்கள். நீ  அவர்களால் ஏற்படும் தோஷங்களைக் களைந்து கொண்டு இருப்பாய்.  இத்தனை பெருமைகளையும் பெற்ற இந்தத் தலமே  என்னுள் பாதியாக உள்ள  உனக்கு பெருமை சேர்க்கும் தலமாக அமைந்து இருக்கும்.  ” எனக் கூறினார்.

அது  முதல்  இங்கு உள்ள துர்க்கை மகிஷாசுரன்  தலை மீது நின்று கொண்டு, சிம்ம வாகனத்துடன் சாந்த முகத்தோடு  எட்டு கைகள் மற்றும்  நான்கு கண்களையும் கொண்டு காட்சி தருகிறாள்.  அவள் கைகளில் சங்கு, சக்கரம், கத்தி, கிளி, வில், அம்பு போன்றவை உள்ளன. ஒரு கையால் அபாய முத்திரை  மற்றொரு கையில் கேடயம் கொண்டு காட்சி தருபவள்  எப்போதுமே ஒன்பது கஜப் புடவையுடனே காட்சி அளிக்கின்றாள்.

  படம் நன்றி:- http://Hinduism.wall.fm/forum

(ஒன்பது கஜப் புடவையை மிகவும் ஆசாரமான வைதீகமான   குடும்பத்துப் பெண்கள் அல்லது வயதான தாயார்களே கட்டிக் கொள்வார்கள். முக்கியமாக அனைத்து வைபவங்களிலும் பூஜைகளிலும் ஒன்பது கஜப் புடவை அணிவதே விசேஷமானது என்பார்கள். அது போலத்தான் ஆண்களும் ஒன்பது முழ வேஷ்டிகளை உடுப்பது பழக்கம்.  இதற்கான காரணம் இரண்டு உள்ளதாக பெரும் பண்டிதர்கள் கூறுகிறார்கள்.
நமது நாபியில்  இருந்து வெளியாகும்  சக்தி நமது பின்புற முதுகுத் தண்டில் போய்  அங்கிருந்து மூளையை சென்றடையும்போது ஞானம் பிறக்கும் ,குண்டலினி சக்தி மேலும்பிச் செல்லும் என்ற  தாத்பர்யத்தை வெளிப்படுத்துவது ஒரு காரணம். அதனால்தான் புடவை மற்றும் வேஷ்டிகளின் ஒரு நுனி நாபிப்பகுதியிலும் மற்றொரு நுனி  இரண்டு கால்களிடையே சென்று பின்புற முதுகின் கீழ் பகுதியில் ஒரு பாதை போல அமைக்கப்பட்டு பின்னால்  வைக்கப்படுகின்றது .  இன்னொரு முக்கியக் காரணம்  இந்த துணிகளின் மடித்து மடித்து வைக்கப்பட்டு உள்ள  பகுதி இரண்டு கால்களின் இடையே புகுந்து செல்வதினால் ஆண் பெண் இருவரின்  காமத்தை  தடுத்து  நிறுத்தி விடுகின்றது என்பதே. காமத்தை தொலைத்து விட்டே நாம் இறைவனின் சன்னதிக்கு செல்ல வேண்டும்  என்பதை எப்போதுமே நினைவுறுத்திக் கொண்டு இருக்கும்  காட்சி  அது ).

 

துர்கையின் சன்னதியை சுற்றி வலம்  வரவும்,  தரையில் உருண்டு அங்கப் பிரதர்ஷணம் செய்ய உதவியாகவும் இருக்க  மேற்கூரை போடப்பட்ட பளிங்குக் கல்லால்  தரை போடப்பட்டு மண்டபம் உள்ளது. சன்னதியின் வலதுபுறம் ஹோம சாலையும் இடது புறம் துர்க்கைக்கு தீபம் ஏற்றும் ஒரு தனி இடமும் அமைக்கப்பட்டு உள்ளது.
ஆகவே இங்கு தாயாராக காட்சி அளிப்பவளுக்கு ஒன்பது கஜப் புடவையே சாத்தப்படுகின்றது. இப்படிப்பட்ட இந்த அம்மனின் சன்னதிக்கு வந்தாலே மனதில் உள்ள காமம், குரோதம் அடங்கி ஞானம் பெருகுமாம். இங்கு நமது தாயாராக காட்சி அளிப்பவள் ராகு பகவானுக்கும் தாயாராகவே காட்சி தருகிறாளாம். ஆகவே ராகு பகவான்  தினமும் இங்கு வந்து தனது அன்னையான துர்காவை பூஜிப்பதினால் ராகு பகவானின் பூஜை காலமான  அந்த ராகு காலத்தில் வந்து எவர் ஒருவர் துர்கையை பூஜிக்கின்றார்களோ அவர்களை தனது தாயாரான துர்கையின் பூசையுள் தன்னுடன் கலந்து கொள்ளும் பக்தர் எனக் கருதும் ராகு பகவான்   அவர்களுக்கு எந்தக் கெடுதல்களையும் செய்யாது நல்லதே செய்வாராம். அதனால்தான் இந்த தளத்தில் ராகு காலத்தில் வந்து பூஜைகளை செய்து துர்கை வேண்டுவது வழக்கமாக உள்ளது. அது மட்டும் அல்லாது செய்வாய் கிரகமும் இங்கு வந்து அன்னைக்கு சிவப்பு பூக்களைப் போட்டு பூஜிக்கின்றாராம். அதனால்தான் இந்த துர்க்கைக்கு சிவப்பு மாலை சாத்தி வேண்டிக் கொண்டால் செய்வாய் தோஷமும் விலகுமாம்.

இங்கு வந்து துர்கை வணங்குவதினால் கிடைக்கும் பலன்கள்:-
1. ராகு மற்றும் செய்வாய் தோஷம் நீங்கும்
2.  மன துக்கம் விலகும்
3. காரிய  வெற்றி கிடைக்கும்
4.  பசு நெய் அல்லது நல்லெண்ணெய் விளக்கு ஏற்றி குங்கும அர்ச்சனை செய்தால் திருமணத் தடைகள்- பெண்களுக்கு- விலகும்
5.  குடும்ப வாழ்கை அமைதியாகும்
6. எழுமிச்ச மாலை அணிவித்து வேண்டிக் கொள்வதின் மூலம் தீராத நோய்களும் தீரும்.

 பட்டீஸ்வரர்   வரலாறு 

பார்வதியின் தவம் , அதனால் அவள் அடைந்த பலன் போன்றவற்றைக் கண்ட பசுவான பட்டியும் தான் ஒரு சிவலிங்கத்தை அங்கு அமைத்து, தினமும் அதன் மீது தனது மடியில் இருந்து பாலை சுரந்தும் ஞானவாவியின் நீரை கொண்டு வந்தும் அபிஷேகம் செய்தும்  சிவனை வழிபட்டது. அதன் பக்தியைக் கண்ட சிவனார் அதற்கும் காட்சி அளித்து அருள் செய்தார். அது கேட்டுக் கொண்டபடி பார்வதிக்கு துணையாக தானும் அங்கேயே இருக்க முடிவு செய்து பசுவின் பெயரைக் கொண்டு பட்டீஸ்வரராக அமர்ந்தார். இங்குள்ள  பட்டீஸ்வரர்  கேட்டவர்களுக்கு  கேட்டதை  தருவதினால்  தேனுபுறீஸ்வரர்    என்றும்  அழைக்கப்படுகிறார்

விஷ்ணுவின் அவதாரமாக மனிதப் பிறவி எடுக்க வேண்டி இருந்த ராமபிரான் தனது மனிதப் பிறவியில் மூன்று தோஷங்களை பெற்றார். இராமாயண யுத்தத்தில் அவர் ராவணனைக் கொல்ல வேண்டி இருந்தது. ராவணன் அசுர குலத்தை சேர்ந்தவர் என்றாலும் பிறப்பால் அவர் ஒரு பிராமணர். மகா வித்வான். சிவ பக்தர். ஆகவே பிராமணரான ராவணனைக் கொன்றதற்காக பெற்ற பிரும்மஹத்தி தோஷத்தை விலக்கிக் கொள்ள அவர் ராமேஸ்வரத்துக்குச் சென்று அங்குள்ள மணல்கரையில் சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை பூஜை செய்து தனது பிரும்மஹத்தி தோஷத்தைக் களைந்து கொண்டார்.
அடுத்து ராவணன் மாபெரும் வீரன், வீணை வாசிப்பதில் அபார திறமை கொண்டவன், சிவ பக்தன். ஒரு மாபெரும் வீரனைக் கொன்றதினால் ஏற்பட்ட வீரஹட்டி என்ற தோஷத்தைப் போக்கிக் கொள்ள  வேதாரண்யம் சென்று அங்கு ஒரு சிவ லிங்கத்தை பிரதிஷ்டை செய்து சிவனை பூஜித்து அந்த தோஷத்தில் இருந்து விடுதலை அடைந்தார்.

அதுபோல வீரன், கலைஞர், சிவ பக்தர் போன்ற மிக நல்ல அம்சங்களை கொண்டவர் ராவணன் அல்லவா. அந்த நல்ல அம்ச குணங்களை சாயை என்பார்கள். சாயை என்றால் நிழல் அல்லது ஒளி என்றும் பெயர் உண்டாம்.  அந்த நல்ல அம்சங்களைக் கொண்டு அனைவர் முன்னும் வாழ்கையில் ஒரு ஒளி  வீசியபடி இருந்தவரே ராவணன். (சீதை விஷயத்தை தவிர  வேறு  எதிலுமே  களங்கம் அடையாதவர்). அப்படிப்பட்ட நல்ல அம்சத்தைக் கொண்ட வீரனைக் கொன்ற பாவத்துக்காக சாயஹத்தி தோஷம் ஏற்பட்டது. மேலும் ராவணனைக் கொல்லச் சென்ற ராமர்  வாலியை மரத்தின் பின்னால் நின்று அம்பு எய்திக் கொன்றார். ஒரு பெரிய வீரனை தனது வீரத்தைக் காட்டி நேரிலே நின்று கொல்ல முடியாமல் மர நிழலில் மறைந்து கொண்டு வாலியைக் கொன்றதினாலும் இன்னமும் அதிக  அளவில் சாயஹத்தி (நிழல்) தோஷத்தை ஏற்படுத்தியது .

ஆகா இரண்டு விதங்களில் சாயஹத்தி தோஷத்தைப் பெற்றவர் பட்டீஸ்வர ஆலயத்துக்கு வந்து அங்கு ஒரு சிவலிங்கத்தை நிறுவி சிவனை பூஜித்து சாயஹத்தி தோஷத்தை விலக்கிக் கொண்டார். அப்போது அங்கு அபிஷேகம் செய்ய தண்ணீர் கிடைக்காததினால் தனது வில்லின்  நுனியால் ஒரு இடத்தைக்  கீறி அங்கு தண்ணீரை  தோற்றுவித்து அபிஷேகம் செய்தாராம். ராமேஸ்வரத்தில் இருந்த தனுஷ்கோடி தீர்த்தத்தை அங்கு அவர்  வரவழைத்ததாகவே நம்பப்படுகின்றது. இப்படியாக அந்த ஆலயத்தில் ராம தீர்த்தமும் அமைந்தது.

பட்டீஸ்வரர் மகிமை

ஒரு முறை திருஞான சம்மந்தர்  திருவலஞ்சுழியில்  சிவபெருமானை வணங்கித் துதித்தப் பின் தமது பரிவாரங்களுடன் பட்டீஸ்வறரை காண இங்கு வந்து கொண்டு இருந்தார். கடுமையான வெயில். கால்கள் சுட்டுப் பொசுக்கின.  அவருடைய  பக்தியை மெச்சிய சிவபெருமான் தனது  பூத கணங்களை அனுப்பி அவர் வரும் வழியில்  அவர் தலை மீது ஆகாய மார்கத்தில் பூக்களை தூவிக்கொண்டே இருக்குமாறு ஆணையிட்டார். அந்த கணங்களும் அப்படியே செய்ய வெயில்  திருஞான சம்மந்தர் மீது படவே  இல்லை.  அனைவரும் வியந்து நின்றனர். அது மட்டுமா அவர் தனது சன்னதிக்கு வந்ததும் தன்னை நேரிலே பார்க்கட்டும் என்பதற்காக தனது நந்தியை வழியை விட்டு விலகி இருக்குமாறு சிவன் ஆணையிட நந்தியும் விலகி நின்றது.  பட்டீஸ்வரர் சன்னதிக்கு வந்த சம்மந்தர் ஈசனை நேரிலே கண்டார் , ஆனந்தக் கண்ணீர் விட்டார். இதனால்தான் இந்த ஆலயத்தில் மட்டும் சிவனுடைய சன்னதிலும் சரி, அதன் நுழை வாயிலிலும் சரி சிவலிங்கத்தை நந்தி மறைத்தபடி நிற்காமல்  ஒரு பக்கமாக அமர்ந்து உள்ளது.

இந்த ஆலயத்தில்தான் ஞானவாபியில் குளித்து விட்டு தமது பூர்வ ஜென்ம தோஷத்தை  நாய் உருவில் இருந்த ஒரு முனிவர் விலக்கிக்  கொண்டு அங்கேயே மீண்டும் மனித உருவை அடைந்தாராம்.

பட்டீஸ்வரர் இந்த ஆலயத்தில் தனது மனைவியான பார்வதியை ஞானாம்பிகை என்ற உருவில் இருக்க வைத்து பக்தர்களை ரட்சித்து வருகிறார். பட்டீஸ்வரரையும் இங்குள்ள ஞானாம்பிகையை வணங்குவத்தின் மூலம் அனைவருடைய பூர்வ ஜென்ம பாவங்கள் மெல்ல மெல்ல மறையுமாம். எத்தனை முறை அவரை அங்கு வந்து பூஜித்து வணங்குவோமோ அத்தனை பாவங்கள் விலகும்.

 பைரவர்  சன்னதி  பூஜை மகிமை 

ஆனாலும் சிவபெருமான் அங்கு தனது அம்சமாக விளங்கும் பைரவர் உருவில் தனி சன்னதியில் இருந்தவாறு பல நன்மைகளை பக்தர்களுக்கு செய்து வருகிறார். தமிழ்நாட்டில் பைரவருக்கு வேறு எந்த ஆலயத்திலும் அத்தனை பெரிய சிலை அமைக்கப்பட்டு வணங்கப்படுவதாகத் தெரியவில்லை. பைரவருக்கு எதிரில் நந்தியும் உள்ளது ! அந்த பைரவர் வேண்டியதைக் கொடுப்பவர். மிகவும் சக்தி வாய்ந்தவர். அற்புதமானவர் அவர் சன்னதியில் என்ன  செய்தால் என்ன பலன் கிடைக்கும் என்பதை கூறி உள்ளேன். அந்த பூஜைகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை அங்குள்ள பண்டிதர்கள் மூலம்  அறிந்து கொள்ள வேண்டும்.

1 . தேய்பிறைகளில்   அர்ச்சனை :- குழந்தை பேறு கிட்டும்.

2 . வளர்பிறைகளில்   அர்ச்சனை :- வறுமை நீங்கும் .

3 . பதினோரு அஷ்டமிகளில் வைரவ தீபம் ஏற்றுவது    ( சிறு மிளகுகளை சிறு மூட்டையாக துணியில் கட்டி அதை திரியாக உபயோகித்து நெய் அல்லது எண்ணை விளக்கு ஏற்றுதல்)

4:-  இழந்த சொத்துக்கள் கிட்டும்.

5 .  ஒன்பது சனிக்கிழமைகளில் நான்கு நான்கு பைரவ தீபம்  :- சனி தோஷம் நீங்கும் .

6 . பயம் அச்சம் விலக  :- ஒன்பது அஷ்டமிகளில் அர்ச்சனை .

7 . தீராத நோய்கள் தீர  :- பைரவர் ஹோமம் செய்து அபிஷேக தீர்த்தத்தை உட்கொள்ள வேண்டும்

 ஆலய  விலாசம் மற்றும் அமைப்பு அமைப்பு
 
அருள்மிகு  தேனுபுரீஷ்வர்  திருக்கோவில் ,
ஸ்ரீ  துர்கா  ஸ்தலம் ,
பட்டேச்வரம்
கும்பகோணம் ,
தஞ்சாவூர்  மாவட்டம்
போன் :0435-2416976
e-Mail: patteeswaramdurga@gmail.com