தெரிந்த ஆலயம் – பலரும் அறிந்திராத தல வரலாறு-5

ஆனந்தமங்கலம்

ஆஞ்சனேயர் ஆலயம்

சாந்திப்பிரியா

நம்மில் பலரும் அது நடக்கும் இது நடக்கும் என்ற நம்பிக்கையில்தான் எந்த ஒரு ஆலயத்திற்கும் செல்கின்றோம்.  ஆனால் அங்கு அந்த ஆலயம் எப்படி வந்தது  அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. ஒரு ஆலயத்துக்குச் சென்றால் அதன் தலவரலாற்றை தெரிந்து கொண்டு வழிபடுவதின் மூலம் நம்பிக்கைகள் இன்னமும் ஆழமாகப் பதியும். அதன் விளைவாக எழுந்ததே இந்த சுருக்கமான தல வரலாறு.

சிதம்பரம் மற்றும் காரைக்காலுக்கு மத்தியில் ஆனந்தமங்கலம் என்ற இடத்தில் பத்து கைகளும், மூன்று கண்களும் கொண்ட கோலத்தில் ஆஞ்சனேயர் ஆலயம் உள்ளது. அந்த ஆஞ்சனேயர் தன்னுடைய பத்துக் கைகளில் சிவன்,  விஷ்ணு மற்றும் பிரும்மா கொடுத்த ஆயுதங்களுடனும் நின்று கொண்டு மூன்று கண்களுடனும் காட்சி தருகின்றார்.

ஆலய தல வரலாறு :-

இராவணனுடனான யுத்தம் முடிந்தது.  இராவணன் கொல்லப்பட்டு இராமர் தனது பரிவாரங்களுடன் அயோத்தியாவுக்கு திரும்பிக் கொண்டு இருந்தார். அயோத்தியாவில் இராமரை வரவேற்க பரதன் அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டு இருந்தார். இராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தியாவுக்கு திரும்பி வரும் வழியில் ஆனந்தமங்கலம் என்ற இடத்தை வந்தடைந்த  இராமரை நாரத முனிவர் சந்தித்தார். அவர் இராமரிடம் அசுரர்கள் வதம் செய்யப்பட்டு விட்டாலும் இன்னமும் இராவணன் வம்சத்தை சேர்ந்த சில அசுரர்கள் கடலுக்கு அடியில் பெரும் தவத்தில் ஈடுபட்டு உள்ளனர் எனவும், அவர்கள் தவம் வெற்றி பெற்று அவர்கள் விரும்பும் சக்தி அவர்களுக்குக் கிடைத்து விட்டால்  அவர்களை வேறு எவராலும் வெல்ல முடியாது. அவர்கள் இராமரையும்,அவரது சந்ததியினர் அனைவரையும் பூண்டோடு அழிக்க கங்கணம் கட்டிக் கொண்டு உள்ளனர் எனவும், ஆகவே அனைவரது நலன் கருதியும் அவர்களின் தவத்தைக் கலைத்து அவர்களைக் கொன்று விட வேண்டியது மிகவும் அவசியம் எனக் கூறினார். மேலும் அவர்களை மும்மூர்த்திகளின் சக்தி பெற்றிருந்த அவரோ அல்லது இராமரின் முழு சக்தியை பிரயோகிக்கக் கூடிய  ஆயுதத்தினால் மட்டுமே வதம் செய்ய முடியும் என்றார். இராமரோ தன்னால் இனி யுத்தத்தில் கலந்து கொண்டு நேரத்தை வீணடிக்க முடியாது எனவும், அப்படி யுத்தத்தில் ஈடுபட்டு காலத்தைக் கடத்தினால் தன்னை எதிர்நோக்கி இருக்கும் பரதன் தற்கொலையே செய்து கொண்டு விடுவான் எனவும், தன்னால் இல்மணரை பிரிந்து தனியாக இருக்க முடியாது எனவும் கூறி அதற்கு மறுத்து விட்டார்.  அனைவரும் ஆலோசனை செய்தப் பின் அவர்களை அழிக்க அனைத்து சக்திகளையும்  ஹனுமாருக்குத் தந்து அவரை அனுப்பலாம் என முடீவு செய்து ஹனுமாரிடம் அவர் சம்மதத்தைக் கேட்க  அனுமாரும் இராமருக்காக தான் எதையும் செய்யத் தயார் எனக் கூறினார்.

அதற்கு ஏற்ப இராமபிரான் வேண்டிக் கொண்டபடி சிவபெருமான் தன்னுடைய மூன்றாவது கண்ணையும், விஷ்ணு சங்கு மற்றும் சக்கரத்தையும், பிரும்மா அங்குசத்தையும், பார்வதி பாஷம் எனும் தடியையும், இலஷ்மி பத்மமையும், கருடன் தன் இறகுகளையும் தர இராமரும் தனது ஆயுதமான கோதண்டத்தைத் தந்து தம் அனைவரது சக்திகளையும் அந்த யுத்தத்தில் பயன் படுத்திக் கொள்ளும் வகைக்கு ஏற்பாடுகளும் செய்தனர். அந்த ஆயுதங்கள் அனைத்தையும் வைத்துக் கொள்ள ஆஞ்சனேயருக்கு பத்து கைகளையும் கொடுத்தனர். அவற்றை எடுத்துக் கொண்டு கடலுக்கு அடியில் சென்று அந்த அசுரர்களை அழித்து வந்தார் ஹனுமார். அதைக் கண்டு பெரும் ஆனந்தம் அடைந்த மும்மூர்த்திகளும் மற்றவர்களும் அவருக்கு ஆசிகள் தந்து இனி எவர் ஒருவருக்கு வாழ்வில் வசந்தம் வேண்டுமோ அவர்கள் அந்த இடத்தில் வந்து அவரை வழிபட்டு வருவார்கள் எனக் கூறினர். அதைக் கேட்டு அந்த இடத்திலேயே ஆனந்தக் கூத்தாடினார் ஹனுமார்.

ஆகவே அந்த இடத்திலேயே ஆனந்த மங்கலமான ஹனுமான் என பத்து கைகளையும், மூன்று கண்களையும் கொண்டு ஆனந்தக் கூத்தாடிய அவருக்கு ஸ்ரீ இராஜகோபலஸ்வாமி ஆலயத்துக்குள்ளேயே தனி சன்னதி எழுப்பி மக்கள் வணங்கலாயினர். உலகில் வேறு எங்குமே ஹனுமாருக்கு பத்து கைகளும், மூன்று கண்களும் கொண்ட காட்சியில் உருவம் கிடையாது. பின்னர் அந்த இடமும் ஆனந்தமங்கலம் என்ற பெயர் பெற்றது. அந்த ஆலயம் ஏற்பட்ட கால வரலாறும் இல்லை. ஆனால் அதை விஜயநகர மன்னன் ஒருவரின் சேனாதிபதியே கட்டி உள்ளதாகக் கூறுகிறார்கள்.