பூவரசன்குப்பம் 
லஷ்மி நரசிம்மர் ஆலயம்
சாந்திப்பிரியா

விழுப்புரத்தின் அருகில் உள்ள பூவரசன் குப்பத்தில் உள்ள லஷ்மி நரசிம்மர் ஆலயம் தெற்கு அபிலோகம் எனக் கூறப்படும் அளவுக்கு புகழ் பெற்றது. இது 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்ட காலத்தின் ஆலயம் என்கிறார்கள். இங்கு ஏழு முனிவர்களான சப்த ரிஷிகளுக்கு நரசிம்மர் காட்சி தந்தாராம்.
ஹிரண்யகசிபுவைக் கொன்ற பாதி மனித பாதி மிருக உடலைக் கொண்ட நரசிம்மர் தன்னை வேண்டி தவம் இருந்த முனிவர்களுக்குக் காட்சி தர தெற்கு நோக்கி வந்தபோது பூவரசன்குப்பத்தின் அருகில் அவர்களுக்குக் காட்சி தந்தார். ஆனால் அவர்களால் உக்ரஹ அவதாரத்தில் இருந்த நரசிம்மரை தரிசிக்க முடியவில்லை. காரணம் அத்தனை சூடாக அந்த பூமியே தகித்ததாம். ஆகவே அவர்கள் அவரது துணைவியாரான அமிருதவல்லித் தாயாரிடம் பெருமானை தாங்கள் தரிசனம் செய்ய வசதியாக இருக்க அவர் கோபத்தை தணிக்குமாறு வேண்டிக் கொள்ள தாயாரும் அவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டாள். ஒரு கண்ணால் நரசிம்மரையும் இன்னொரு கண்ணால் முனிவர்களையும் பார்த்துக் கொண்டு இடது தொடை மீது அமர்ந்து கொண்டு தன்னைப் பார்த்துக் கொண்டு இருந்த தாயாரை நரசிம்மரும் நோக்க அவர் உக்ரஹத்தை தாயார் அப்படியே உறிஞ்சிக் கொண்டு விட நரசிம்மரின் கோபம் அடங்கியது. முனிவர்கள் ஆனந்தம் அடைந்து அவரை மனமார தரிசித்தார்கள். அது முதல் நரசிம்மர் அதே கோலத்தில் இருந்தபடி அங்கேயே ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டு பக்தர்களுக்கு காட்சி தருகிறார்.

 பூவரசன் ஆலயத்து லஷ்மி நரசிம்மர் 

இந்த ஆலயம் இந்த இடத்தில் எழும்பக் காரணமாக இருந்த சம்பவத்தைக் கூறும் ஒரு புராணக் கதை இது. 5 ஆம் நூற்றாண்டில் ஆட்சியில் இருந்த ஒரு பல்லவ மன்னன் ஜைன மதத்தை தழுவத் துவங்கி தென் நாட்டில் இருந்த சிவன் மற்றும் விஷ்ணு ஆலயங்களை இடித்துத் தள்ளத் துவங்கினார். அரசவை பண்டிதர்கள் எவ்வளோ தடுத்தும் அதை அவன் கேட்கவில்லை. அப்போது பூவரசன்குப்பப் பகுதியையும் சேர்த்து ஆண்டு வந்த அந்த மன்னன் தான் மேற்கொண்டு இருந்த சைவ, வைஷ்ணவ வழிபாட்டுத் தலங்களின் எதிர்ப்பு நிலையைக் கண்டித்த நரஹரி என்ற முனிவரை சிறை வைத்து விட்டதும் அல்லாமல் அவரைக் கொன்று விடவும் உத்தரவு இட்டான். அதனால் கோபமுற்ற . அந்த முனிவரும் அவனுக்கு பிரும்மஹத்தி தோஷம் ஏற்படட்டும் என சாபமிட்டப் பின் அங்கிருந்து தமது யோக சக்தியால் மறைந்து விட்டார்.
காலம் ஓடியது . அதன் பின் பல பிரச்சனைகள் அந்த மன்னனை சூழ்ந்து கொள்ள அவனுடைய ராஜ ரிஷிகள் இதுவே தக்க தருமணம் என நினைத்து அவனிடம் அவன் மேற்கொண்டு இருந்த சைவ, வைஷ்ணவ ஆலய எதிப்பு நிலையை எடுத்துக் காட்டி அதைக் கைவிடுமாறு மீண்டும் அறிவுறுத்தினார்கள். பிரச்சனைகள் தலைக்கு மேல் சென்று கொண்டிருந்த நிலையில் தான் செய்த தவறுகளை அந்த மன்னன் எண்ணிப் பார்க்கத் துவங்கினான். தன்னுடைய தவறை உணர்ந்தவன் தான் செய்த தவறுகளை மன்னிக்குமாறு சைவ மற்றும் வைஷ்ணவ ஆலயங்களுக்குச் சென்று அங்கு இருந்த இறைவனிடம் வேண்டிக் கொண்டான்.

  பூவரசன் ஆலயத்து ஹனுமான் சன்னதி 

இப்படியாக இருக்க ஒரு நாள் படுத்து உறங்கிக்கொண்டு அவன் கனவில் தோன்றிய நரசிம்மர் அந்த முனிவரே நேரில் வந்து அவனை ஆசிர்வதித்தால்தான் அவனுக்கு ஏற்பட்ட சாபம் களையும் என்று கூறி விட்டு மறைந்தார். ஆகவே அந்த மன்னனும் அந்த முனிவரை தானே தேடி அலையத் துவங்கினான். அப்படி அலைந்தபோது ஒருநாள் இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்த ஒரு பூவரச மரத்தடியில் உறங்கிக் கொண்டு இருந்த மன்னனின் மீது அந்த மரத்தில் இலை பொத் என்று விழுந்தது. பயந்துபோய் எழுந்த மன்னன் அதில் லஷ்மி நரசிம்மரின் உருவைக் கண்டான். அதைக் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தபடி அமர்ந்து கொண்டு இருந்த மன்னன் முன்னால் அந்த முனிவரும் எங்கிருந்தோ வந்து நின்றார். அப்படியே அந்த முனிவரின் கால்களில் விழுந்து வணங்கி மன்னிப்புக் கேட்ட மன்னனின் சாபத்தை அந்த முனிவரும் விலக்கி விட அதே இடத்தில் அந்த மன்னன் இந்த லஷ்மி நரசிம்மரின் ஆலயத்தையும் அமைத்தான்.

அற்புதமான லஷ்மி நரசிம்மர் தஞ்சாவூர் படம்  நன்றி :

இந்த ஆலயம் விழுப்புரத்தில் இருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அல்லது பாண்டிச்சேரி நெடுஞ்சாலையில் கோலியனூர் சாலையை அடைந்து அங்கிருந்து வளவனூர் எனும் சிறு ஊரை அடைந்து இந்த ஆலயம் உள்ள பூவரசன்குப்பத்தை அடையலாம். நல்ல சாலை உள்ளதினால் காரிலேயே செல்ல முடியும். விழுப்புரத்தில் இருந்து பூவரசன் குப்பம் செல்ல நேரடி பஸ்களும் நிறையவே உள்ளன. கடலூரில் இருந்து சென்றால் 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்தை விரைவாகவே அடையலாம். ஆலயம் காலை 8 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 8 மணிவரையும் திறந்து இருக்கும்.

ஆலய விவரங்களுக்கு தொடர்பு கொள்ள
Parthasarathy Bhattar @ 94439 59995 or 0413 2698191