கனகதாசா மற்றும் புரந்தரதாசர் போன்றவர்களுக்கும் குருவான வியாச முனிவர் ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பாக வாழ்ந்தவர் . அவர் பல இடங்களிலும் ஹனுமான் ஆலயங்களைக் கட்டி உள்ளவர். அவரை பிரும்மா படைத்த ஸ்ரீ சங்கரகுமார்களின் வம்ச வழியில் வந்த முனிவர் என்றும், ஸ்ரீ சங்கரகுமாரர்களில் ஒருவரின் அவதாரம் என்றும் கூறுகிறார்கள். அந்த வியாச முனிவர் அதாவது வியாச ராயா எனவும் கூறப்படுபவர், நிறுவிய ஆலயமே கெங்கல் ஆஞ்சேநேயர் ஆலயம். ஹோசலா மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டு உள்ளதாக கூறப்படும் இந்த ஆலயம் பெங்களூரில் இருந்து மைசூருக்குச் செல்லும் வழியில் வரும் சென்னப்பட்டினத்திற்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் முன்னதாகவே வரும் வண்டரகுப்பே எனும் கிராமத்தில் உள்ளது. ஆலயம் பிரதான சாலையின் சிறிது தூரத்திலேயே உள்ளது . யாரைக் கேட்டாலும் அந்த ஆலயத்திற்குச் செல்ல வழி காட்டுவார்கள். பெங்களூரில் இருந்து இந்த ஆலயம் உள்ள இடம் சுமார் 55 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.
சாதாரணமாக அனைத்து நகரங்களிலும் உள்ள அனைத்து ஹனுமார் சிலைகளுக்கும் செந்தூரம் பூசி அதை செந்தூர வண்ணத்திலேயே வைப்பது வழக்கம். ஆனால் விசித்திரமாக இந்த சிலை சிவப்பு நிறப் பாறைக் கல்லிலேயே அமைந்து உள்ளது. கெங்கல் ஹனுமான் சுயம்பு மூர்த்தி என்றும் அவர் பாறைப் பகுதியில் புதைந்து இருந்தார் என்றும், அந்த ஹனுமார் சிலை அங்குள்ளது என்பதை வியாசராயரே கண்டு பிடித்தார் என்றும் கூறுகிறார்கள். ஒரு முறை அந்த வழியே சென்று கொண்டிருந்த வியாசராயருக்கு ஒரு பாறை ஹ்னுமானின் தோற்றத்தில் இருப்பது தெரிந்தது. உடனே அங்கு சென்று அதை தோண்டி எடுக்க ஏற்பாடு செய்து அதை வெளியில் எடுக்க, ஒரு சிவப்பு பாறைக் கல்லிலேயே அந்த செதுக்கப்பட்டு இருந்த சிலைக் காணப்பட்டதைக் கண்டு வெளியில் எடுத்த அதற்கு முறைப்படி சடங்குகளை செய்து ஆலயம் அமைத்தாராம். வியாசர் இந்தியா முழுவதிலும் பல்வேறு இடங்களிலும் 732 ஆஞ்சநேயரின் ஆலயங்களை அமைத்துள்ளாராம். கெங்கல் என்றால் சிவப்பு என்று கன்னட மொழியில் அர்த்தம் உண்டாம். ஆகவே சிவப்புக் கல்லில் அமைந்து இருந்த அந்த ஹனுமாரின் பெயரும் கெங்கல் ஹனுமார் அதாவது சிவப்பு வண்ண ஹனுமார் என ஆயிற்றாம். சுமார் ஐந்தரை அடி உயரமான சுயம்பு சிலையான அந்த ஹனுமான் இன்னொரு மகிமையைக் காட்டியபடி உள்ளார். சாதாரணமாக ஹனுமாருக்கு மீசை இருக்காது. ஆஅனால் இந்த ஹனுமாரின் சிலையிலோ அவர் இயற்கையாகவே அமைந்துள்ள மீசையுடன் காட்சி தருகிறார். ஆகவே அவரை மீசை ஹனுமார் என்றும் அழைக்கின்றார்கள்.
இரண்டாவதாக அந்த சிலை முன்னர் வடக்கு பார்த்தபடி ஒரு கண் மட்டுமே தெரியும் வகையில் இருந்ததாம். இப்போது அது கிழக்கு நோக்கி தானாக தன்னைத் திருப்பிக் கொண்டுள்ளது என்பது இன்னோர் அதிசயம். அது மட்டும் அல்ல அது இயற்கையாகவே தன்னை திரும்பிக் கொண்டு, தற்போது இரண்டு கண்களைக் கொண்டவராக காட்சி தருகிறது என்பது உண்மையில் மகிமையாக உள்ளது.
இன்னொரு விசித்திரம் என்ன என்றால், இந்த ஆலய அமைப்பு மகரசங்கராந்தி -ஜனவரி மாதம்- அன்று மட்டுமே காலையில் தோன்றும் சூரியனின் ஒளி ஹனுமார் மீது விழும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளது என்பதே. மற்ற எந்த நாட்களிலும் சூரிய ஒளி ஹனுமார் மீது விழுவது இல்லை.
இந்த ஆஞ்சநேயர் தனது கையில் சீதாபிராட்டி தன்னுடைய அடையாளமாகத் தந்த சூடாமணியை வைத்துக் கொண்டுள்ளதாகவும் நம்புகிறார்கள். ஆகவே இந்த ஆலயத்துக்கு ஒரே ஒருமுறை சென்று நியாயமான கோரிக்கையை வைத்தாலும், உடனடியாக நிறைவேறுகிறது என்று பண்டிதர்கள் கூறுகிறார்கள். காலம் சென்று விட்ட கர்னாடகாவின் முதலமைச்சராக இருந்த கெங்கல் ஹனுமந்தப்பா இந்த ஊரை சேர்ந்தவர்தான். அவரும் இந்த ஆலயத்து பெரும் பக்தராக இருந்தவராம். ஒரு முறையாவது பார்க்க வேண்டிய ஆலயம் இது.
ஆலய விலாசம்
Vandaraguppe village,
Kengal,
Channapatna Taluk ,
Ramnagar,
Karnataka,
India.