சாந்திப்பிரியா
அந்த அந்தணர் அவன் தேர் இருந்த இடத்தின் அருகில் காரியங்களை செய்து கொண்டு இருந்ததினால் அவர் காரியங்களை முடிக்கும் வரை அவன் அங்கேயே காத்திருந்தான். ஆனாலும் மனதில் இருந்த சந்தேகம் மறையவில்லை. காரியம் முடிந்து கிளம்பிய அந்தணர் அருகில் சென்று ராவணன் கேட்டான் ‘அந்தணரே, நீங்கள் யாருக்காக இங்கு இறுதிக் காரியங்களை செய்துள்ளீர்கள்…இடை இடையே கைகேசி, கைகேசி என்ற பெயரைக் உச்சரித்தீர்களே . அவர் யார்?’
அதையே எதிர்பார்த்துக் காத்திருந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணு பகவான் கூறினார் ‘ ஐயா, நான் பல இடங்களுக்கும் சென்று சிவ தர்சனங்களை செய்து கொண்டு இருக்கிறேன். அப்போது திருகோனீஸ்வரர் ஆலய மகிமையைக் கேள்விப்பட்டு இலங்கை வழியாக இங்கு வந்து கொண்டு இருந்தபோது அங்கு யாரோ ராவணன் எனும் மன்னனாம், அவரது தாயாரான கைகேசி என்பவர் அவரது மகன் ராவணன் கடலில் விழுந்து இறந்து விட்டான் என கேள்விப்பட்டு அப்படியே மயக்கம் அடைந்து விழுந்து மரணம் அடைந்து விட்டாளாம். அவளுக்கு திதிகளை செய்ய அவளுடைய பிள்ளை இல்லை என்பதினால் திருகோனீஸ்வரர்கடலில் திதி செய்வது பெரும் விசேஷம் என்றும், அங்கு சென்று அதை செய்தால் அவளது ஆத்மா நேரடியாக சொர்கத்துக்குப் போகும் என்று நினைத்த அவளது உறவினர்கள் திருகோனீஸ்வரர்ஆலயத்துக்கு வந்து கொண்டு இருந்த என்னிடம் அவளுக்கு திதி செய்யுமாறு கூறிவிட்டு அதற்கான தட்ஷணயையும் தந்தனுப்பினார்கள். ஆகவேதான் அவளுக்காக இதை இங்கு செய்தேன்’ என்று கூறவும் அதைக் கேட்ட ராவணன் விக்கி விக்கி அழத் துவங்கினான். அவரை தேற்றிய அந்தணர் அவன் அழுவதற்கான காரணத்தைக் கேட்டார்.
ராவணனும் அவர் திதி செய்தது அவருடைய தாயாருக்குத்தான் என்று கூறிவிட்டு, தான் யார் என்பதையும், தன்னைப் பற்றியும் விவரமாக எடுத்துரைத்தப் பின் எவளுக்காக தான் அத்தனைக் கஷ்டப்பட்டு அந்த சிவலிங்கத்தை எடுத்துப் போக முயன்றேனோ, அவளே இல்லை என்ற பின், அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது எனக் கூறி அழுததைக் கண்ட அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவும் அவனுக்காக பரிதாபப்படுவது போல பாசாங்கு செய்தப் பின் கூறினார் ‘ ராவணா, நீதான் கைகேசியின் மகன் என்பது தெரிந்து நான் மன ஆறுதல் அடைகிறேன். உன் தாயார் மீது உனக்குள்ள பாசமும், உன் தாயாருக்கு உன் மீது உள்ள பாசமும் இதில் இருந்து தெரியவில்லையா? நான் அவளுக்கு திதி கொடுக்க வந்த இடத்தில் நீயும் இருந்து அதைப் பார்த்துள்ளாய். போகட்டும், நல்லதே நடந்துள்ளது. நீ இந்த திருகோனீஸ்வரர் மலையின் மகத்துவத்தை அறிய மாட்டாய். இது குபேரன், அதாவது உன்னுடைய தம்பி முதல் அனைத்து தேவர்களும் இங்கு வந்து சிவபெருமானை வேண்டிக் கொண்டு யாகங்கள் செய்த இடம். இந்த ஆலயத்தின் அருகில் உள்ள கடலில் வந்து காரியங்களை செய்தால் இறந்தவர்கள் மோட்ஷம் அடைவார்கள். அதற்குக் காரணம் சிவபெருமானும், உமையும் இங்கே தங்கி இருப்பதினால் அந்த அருள் அவர்களது ஆத்மாக்களுக்குக் கிடைக்கிறது. மேலும் இங்கு வந்து தவம் செய்தாலோ, பூஜைகள் செய்தாலோ அதை விடப் பெரிய புண்ணியம் வேறு எங்கு செய்தாலும் யாருக்கும் கிடைக்காது. இங்கு பல யோகிகளும் முனிவர்களும் தவத்தில் இருக்கிறார்கள். இந்த மலையை சுற்றி பைரவர்களும், காளி தேவியும் காவலுக்கு உள்ளார்கள். இந்த மலையை சுற்றித்தான் சிவபெருமானின் மகனான கதிர்காமரும் தனது மனைவியோடு தங்கி இருக்கிறார்.அகத்திய முனிவர் போன்ற பெரும் முனிவர்கள் இங்கு வந்து சிவபெருமானை வணங்கி உள்ளார்கள். சிவபெருமானை தரிசிக்க பிரும்மாவும், விஷ்ணுவும் இங்கு அடிக்கடி வருவதுண்டு. இப்படிப்பட்ட சிறந்த இடத்தில் உன் தாயாருக்கு இறுதிக் கிரியை நடத்த பேறு பெற்றது உன் அதிருஷ்டமே. எந்த தாயாருக்காக நீ சிவலிங்கத்தை எடுத்துச் செல்கிறாயோ, அவளே இல்லை எனும்போது, அவளுக்கு கிரியை நடந்த இடத்தின் அருகில் அவள் சார்ப்பில் இதை இந்த ஆலயத்துக்கே தானம் செய்து விட்டு அவளுக்காக இறைவனை வணங்குவதே அவளுக்கு நீ செய்யும் மரியாதை ஆகும் ‘ என்று கூறினார்.
அவர் கூறியதை எல்லாம் கேட்ட ராவணன் உயிருடன் இல்லாத தாயாருக்காக இதை ஏன் கொண்டு செல்ல வேண்டும், அந்தணர் கூறியதே சரியானதாகும் என்று எண்ணிக் கொண்டு அதை அந்த அந்தணர் உருவில் இருந்த விஷ்ணுவிடம் ‘ அந்தணரே, நீர் கூறியதே சரியான வழி ஆகும். உம்முடைய அறிவுரையை நான் பரிபூரணமாக ஏற்றுக் கொள்கிறேன். இந்தாருங்கள். இதை என்ன செய்ய வேண்டுமோ அதன்படி என் தாயாரின் ஆத்மா சாந்தி அடைய நீங்கள் செய்யவும்’ என்று கூறிவிட்டு அதை அவரிடம் கொடுக்க அவரும் அதை திருகோனீஸ்வரர் மலையின் வடக்கு திக்கில் ஒரு இடத்தில் பிரதிஷ்டை செய்து விட்டு, மீண்டும் அவனை அழைத்துக் கொண்டு போய் அவன் கையினாலேயே எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்து வைத்து ஆலயத்துக்கு அழைத்துச் சென்று அவனை தானங்களை செய்யுமாறு கூறினார். ராவணனும் தனது தேரில் வைத்திருந்த பொருட்களை எல்லாம் எடுத்துக் கொண்டு போய் ஆலயத்துக்குள் இருந்த அனைத்து அந்தணர்களுக்கும் தானம் செய்தான். பாவம் அவனுக்கு அப்போது தெரியாது அங்கிருந்த அனைத்து அந்தணர்களும் விஷ்ணுவின் ஆலோசனைப் படி பல்வேறு அந்தணர்கள் வடிவில் வந்திருந்த பல்வேறு கடவுட்கள் என்பது.
ஆனாலும் ராவணன் உண்மையில் மிகப் பெரிய சிவபக்தன் என்பதினால் அவன் கொடுத்த தானத்தைப் பெற கடவுட்களே அந்தணர் உருவில் வந்திருந்தது அவன் பக்திக்கு சிறந்த எடுத்துக் காட்டாகவே இருந்தது. அதன் பின் ராவணன் அந்த அந்தணர் கூறியபடி ஆலயத்தின் மூன்று திசைகளிலும் மூன்று சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து விட்டு அங்கிருந்து கிளம்பி தன நாட்டை அடைந்தான். உண்மையில் அவன் இல்லாத நேரத்தில் அங்கு கைகேசி மரணம் அடைந்துதான் இருந்தாள்.ஆனால் அதற்குக் காரணம் சிவலிங்கத்தை தனக்காக கொண்டுவர கைலைக்கு சென்ற ராவணன் ஆயிரமாயிரம் வருடங்களாகியும் திரும்பி வரவில்லையே என்ற ஏக்கத்தில் அவள் தன்னைத் தானே வருத்திக் கொண்டு ராவணன் நல்லபடி திரும்பி வர வேண்டும் என்ற விரதம் இருந்து உயிர் துறந்து இருந்துள்ளாள் என்பதும் யாருக்கும் தெரியவில்லை. அவளுக்கு ராவணனுக்கு ஏற்பட்ட எந்த சம்பவமும் தெரியாது. இப்படியாக ராவணன் அதிபலசாலியாக யாருமே வெல்ல முடியாதவனாக இருக்க இருந்த நிலையை வினாயகரும், விஷ்ணுவும் தந்திரமாக முறியடித்து, அவனுக்கு சிவபெருமான் கொடுத்திருந்த ஆத்மலிங்கங்களை எடுத்துச் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தினார்கள்.