சாந்திப்பிரியா 
பாகம்-5

அந்த பூமியை வெட்டிய உடனேயே அதைக் கண்டு அஞ்சிய தேவர்கள் மீண்டும் ஓடிச் சென்று நாராயணனிடம் அவர்களுடைய அச்சத்தை எடுத்துக்  கூற அவரும் உடனே அவர்களுடன் கிளம்பிச் சென்று திருகோணிஸ்வரர் மலையில் உமையுடன் இருந்த சிவபெருமானை சந்தித்து ராவணனின் செயலைக் கூறி அவன் அந்த லிங்கத்தை  எடுத்துச் சென்று விட்டால் பிறகு அவனை யாராலுமே அடக்க முடியாமல் போய் விடுமே என்று கூற அவர்களுக்கு ஆறுதல் கூறினார் சிவபெருமான்.

அந்த நேரத்தில்தான் அவன் பிளந்து எடுத்த பர்வதப் பகுதியுடன் இருந்த சிவலிங்கத்தை தன் கைகளில் ஏந்திக் கொண்டு நாடு செல்லக் கிளம்பினான் ராவணன். அவன் பர்வதத்தை தனது கைகளில் தூக்கியவுடன் அந்த மலையை தன் நுனிக் காலினால் அழுத்தினார் சிவபெருமான். அவ்வளவுதான், ராவணன் அருகில் இருந்த தேர் உடைந்து விழுந்தது. அவன் இடையில் வைத்திருந்த வாளும் இரண்டாக உடைந்து விழ, உடைந்து விழுந்த மலையின் அடிப்பகுதியில் அதை தாங்கிக் கொண்டு இருந்த ராவணனின் கைகள் சிக்கிக் கொள்ள,  கைகளை விலக்கிக் கொள்ள பிரயர்த்தனம் செய்தபோது அடிப்பட்ட கைகளில் இருந்து ரத்தம் ஆறாக ஓட, அப்படியே மயங்கி கடலுக்குள் விழுந்தான் ராவணன். அவன் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியும் சிவலிங்கத்துடன் சேர்ந்து அந்த கடலுக்குள் முழுகி மறைந்தது.

அதைக் கண்ட தேவர்கள் ஆஹா..,ராவணன் மரணம் அடைந்து விட்டான் என்று மகிழ்வு கொண்டு சிவபெருமானுக்கு நன்றி கூறி விட்டு தத்தம் இடங்களுக்கு திரும்பிச்  சென்றார்கள். ஆனால் கடலில் விழுந்த ராவணனோ மரணம் அடையவில்லை. கடலுக்குள் விழுந்தவன் கடல் நீரினால் மயக்கம் களைய, மெல்ல நீந்திக் கொண்டு வந்து கடல் ஓரத்தில் விழுந்து அப்படியே நெடுநேரம் மயங்கிக் கிடந்தான். அவன் பெற்று இருந்த வரங்களினால் அவன் உயிர் பிரியவில்லை. பல நாட்கள் அப்படியே கிடந்தவன் ஒருநாள் மயக்கம் முற்றிலும் தெளிந்து எழுந்தான்.

மயக்கம் தெளிந்து எழுந்தவன் அங்கும் இங்கும் தான் பெயர்த்து எடுத்த மலைப் பகுதியில் இருந்த சிவலிங்கத்தை தேடினான். மலைப் பகுதியும் காணவில்லை, சிவலிங்கமும் கண்களுக்கு தெரியவில்லை.  நடந்ததை நினைத்துப் பார்த்தான். ஆனால் தனக்கு ஏற்பட்ட நிலைக்கு காரணத்தை அவனால் அறிந்து கொள்ள முடியவில்லை. ஆகவே மீண்டும் தவறு செய்து சிவலிங்கத்தை இழந்து விட்டோமே என நினைத்து வருந்தியவன் விடா முயற்சியாக மீண்டும் ஒருமுறை சிவபெருமானிடம் இருந்தே நேரடியாக சிவலிங்கத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தீர்மானித்து,  அங்கேயே தன் தலைகளில் ஒன்றை வெட்டி எடுத்து அதை வீணையின் சுரைப் பகுதியாகவும் இருபது கைகளில் ஒன்றை வெட்டி எடுத்துக் கொண்டு அதை இசைக்கும் பகுதியாகவும், அதன் நரம்புகளை அறுத்தெடுத்து வீணை நாண்களாகவும் மாட்டி  ஒரு வீணையை செய்தான். கடற்கரையிலேயே அமர்ந்து கொண்டு  சிவபெருமானை துதித்து சாமகான வேதப் பாடலை உரத்தக் குரலில் பாடத் துவங்கினான்.

சிவபெருமான் இசைக்கு மயங்குபவர். அதுவும் இனிமையான சாமகான வேதப் பாடல்களில் மனதை பறி கொடுப்பவர். கண்களை மூடிக் கொண்டு, ராவணன் வீணையை மீட்டியபடி, மனதை உருக்கும் வகையிலான சிவனார் மீதான பாடல்களை  பாடப்பாட இன்னிசையில் மயங்கிய சிவனார் தனது ஒரு கணத்தை அனுப்பி திருகோணிஸ்வரர் ஆலயத்தின் அடிவாரத்தில் இருந்த கடற்கரையில் வெட்டப்பட்ட கை மற்றும் திருகி எடுத்த தலையில் இருந்து ரத்தம் கொட்டியக் கொண்டு இருந்த நிலையிலும் அந்த வலியையும் பொறுத்துக் கொண்டு பாடிக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே தூக்கி வருமாறு கூறினார். சிவகணங்கள் தன்னை மறந்து கண்களை மூடிக்க் கொண்டு இசைத்துக் கொண்டு இருந்த ராவணனை அப்படியே அந்த இடத்தோடு தூக்கிக் கொண்டு வந்து திருகோணிஸ்வரர் ஆலயத்தின் உள்ளே அமர்ந்திருந்த சிவனார் முன் கிடத்தினார்கள். அப்போதுதான் ராவணனுக்கு தன் சுய நினைவே வந்தது.  சுயநினைவுக்கு  வந்தவன்  சிவபெருமானைப் பார்த்தான். அப்படியே சிவன் முன் விழுந்து வணங்கினான். அவன் நிலையைக் கண்ட சிவனாரும் அவனுக்கு அருள் புரிய அவன் மீண்டும் பத்து தலைக் கொண்டவனாகவும், இருபது கைகள் கொண்டவனாகவும் பழைய நிலைக்கு மாறினான். மீண்டும் மீண்டும் சிவபெருமானையும், உமையையும் கீழே விழுந்து விழுந்து நமஸ்கரிக்க, அவன் கேட்டபடி அவனுக்கு மூன்றாவது ஆத்ம லிங்கத்தை தந்தருளினார்.

அப்போது கூறினார் ‘ராவணா, இனிமேலும்  என்னால் உனக்கு ஆத்ம லிங்கம் கொடுக்க இயலாது. ஆகவே இதை பத்திரமாகக் கொண்டு சென்று உன் தாயாரிடம் கொடுத்து பூஜை செய்யச் சொல். இதை உன்னால் தூக்க முடியாமல் கீழே வைத்தாலும் ஒன்றும் ஆகாது.  நீயே விரும்பினால் ஒழிய இது பூமியில் புதைந்து போகாது. ஆனால் நீயே அதை விரும்பி இங்கேயே புதைந்து இருக்கட்டும் என கீழே வைத்தால் மட்டுமே அங்கேயே எடுக்க முடியாமல் அங்கேயே  இருந்து விடும் ‘. இப்படியாகக் கூறியவர் உடைந்து போன வாளுக்கு பதிலாக இன்னொரு வாளையும், உடைந்து போன தேருக்கு பதிலாக இன்னொரு தேர் ஒன்றையும் அவனுக்கு தந்தார்.

ஆத்ம லிங்கத்தை பெற்றுக் கொண்ட ராவணன் பெரும் மகிழ்ச்சியுடன் அங்கேயே இன்னும் சில நாட்கள் அமர்ந்து கொண்டு மேலும் சிவ பூஜைகளை செய்து விட்டு இலங்கைக்குக் கிளம்பினான். நடந்தது அனைத்தையும் மறைந்து நின்றவாறு நாராயணன் பார்த்துக் கொண்டே இருந்தார். ராவணன் இலங்கைக்குப் போகும் முன்னர் அவனை தடுத்து நிறுத்த என்ன வழி செய்யலாம் என யோசனை செய்தார். அவருக்கு ஒரு உபாயம் தோன்றியது. அதற்கேற்ப ராவனணன் இலங்கைக்கு கிளம்பிய உடனேயே  அவசரம் அவசரமாக ஒரு அந்தணர் உருவில் கடல் கரைக்குச் சென்று, அவனது தேருக்கு அருகிலேயே   சென்று அமர்ந்தவாறு  சிரார்த்தம் செய்வது போல ஒரு சடங்கை செய்யத் துவங்கினார். ஆலயத்தில் இருந்து வெளிவந்த ராவணன் தேரில் ஏறிக்கொள்ள கடற்கரைக்கு வந்தான். அங்கு ஒரு அந்தணர் சிரார்த்தம் செய்வதைக் கண்டு, இதென்ன கிளம்பும் நேரத்தில் அபசகுனம் போல இருக்கிறதே, சரி சிரார்ததைப் பார்த்து விட்டதினால், அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள கடலில் குளித்து விட்டுப் போய் விடலாம் என எண்ணியவன் கடலில் குளிக்கையில், அந்த அந்தணர் கைகேசி என்ற  பெயரைக் கூறி  சிரார்த்தம் செய்து கொண்டு இருந்ததைக் கண்டு துணுக்குற்றான்.

……..தொடரும்