சாந்திப்பிரியா
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/06/Image2a.jpg)
படம் நன்றி: http://en.wikipedia.org/wiki/Devanahalli_Fort
பெங்களூரில் விமான நிலையத்துக்கு செல்லும் பாதையில் உள்ள தேவனஹல்லியில் உள்ள ஒரு வைஷ்ணவ ஆலயமே ஸ்ரீ வேணுகோபலஸ்வாமி ஆலயம். இந்த ஆலயம் வந்த வரலாறு சுவையானது.
பல ஆண்டுகளுக்கு முன்னால் ரணபேர கௌடா என்பவர் காஞ்சிபுரத்தில் வாழ்ந்து வந்தார். அதன் பின் அவர் பெங்களூருக்கு வந்து அவதி என்ற கிராமத்தில் குடியேறினார். அவர் தங்கி இருந்த இடம் மழை காலத்தில் வெள்ளம் போன்ற நிலையை ஏற்படுத்துமாம். சுற்றிலும் வெட்ட வெளியாக இருந்ததினால் அங்கு தங்கி இருந்தவர்களின் வீடுகளும் அவ்வப்போது பழுதடைந்து விடும். அப்படி இருக்கையில் ஒருநாள் பெரும் மழை வந்து சூறாவளியும் வீசியது. அதில் அவர்கள் தங்கி இருந்த இடமும் நாசம் அடைய வேறு வழி இன்றி தம்மால் எடுத்துச் செல்ல முடிந்த அளவு பொருட்களை எடுத்துக் கொண்டு ஒரு பெரிய மரத்தடியில் ஒதுங்கினார்கள். அந்த மரத்தடியை சுத்தம் செய்து அங்கே தங்கி இருக்க துடைப்பத்தையும் சேர்த்தே எடுத்துக் கொண்டு செல்ல முயன்றார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக மழையினால் அவர்கள் வீட்டில் இருந்த விழுந்திருந்த துடப்பத்தை எடுக்க முடியாமல் போயிற்று. வேறு வழி இன்றி அந்த மரத்தடியிலேயே இரவைக் கழித்தார்கள். அன்று இரவு ரணபேர கௌடா கனவில், அந்த துடைப்பம் இருந்த மண் புற்றில் ஏழு குடம் தங்க நகைகள் உள்ளது போலவும், மேலும் வேணுகோபால ஸ்வாமி மற்றும் திம்ம்மராயன ஸ்வாமியின் சிலையும் புதைந்து கிடப்பதும் போன்ற காட்சி வந்தது. அதைக் கண்டு திடுக்கிட்டு முழித்து எழுந்தவர் கனவு என்று தெரிந்ததும் மீண்டும் படுத்து உறங்கினார். ஆனால் மீண்டும் அதே கனவு தொடர்ந்தது. ஆகவே மறுநாள் சூறாவளி அடங்கி மழையும் நின்றதும், அவர் கனவில் வந்த இடத்தில் போய் தோண்டிப் பார்த்தபோது அவர் கனவில் வந்ததைப் போன்ற பொருட்களே அங்கு இருந்தன. அவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு தேவனஹல்லிக்கு வந்து அங்கு ஒரு கோட்டைக் கட்டி அதற்குள் ஆலயத்தை பிரதிஷ்டை செய்ய முடிவு செய்தார்கள். அங்கு ஏற்கனவே இருந்த மண் கோட்டையை கல்கோட்டையாக்கி அதற்குள் ஆலயத்தை 500 அல்லது 550 ஆண்டுகளுக்கு முன்னர் அமைத்ததாக ஆலயக் கதை உள்ளது.
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/06/Image3-2.jpg)
ஆலயம் பெரும் உயரத்திலான ராஜ கோபுரத்துடன் , பெரிய பிராகாரத்துடன் உள்ளவாறு கட்டப்பட்டு உள்ளது. இந்த ஆலயத்துக்குள் உள்ள கர்பக்கிரகத்தில் காணப்படும் வேணுகோபலஸ்வாமி அதாவது விஷ்ணு பகவான் படுத்த நிலையில் இல்லாமல், நின்ற நிலையில் காட்சி தருகிறார். ஆலயத்தின் பத்மாவதி தாயாரின் சன்னதி, நவக்கிரகங்கள் போன்றவையும் உள்ளன.
ஆலயத்திற்குள் காணப்படும் தூண்களில் உள்ள சிற்பங்கள் ஹொய்சாலா கட்டிடக் கலையில் கட்டப்பட்டு உள்ளது. ஆலய நுழைவாயிலில் இரண்டு விஷ்ணுவின் சிலைகள் உள்ளன. அந்த இரண்டு சிலைகளிலும் காணப்படும் ஆயுதங்களும் , கையில் உள்ள பொருட்களும் வெவ்வேராக உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் நடைபெறும் வருடாந்தர உற்சவத்திற்கு முன்னால் அந்த ஆலயம் முழுவதையுமே , தூண்கள், சுவர்கள், அங்குள்ள சிலைகள் என அனைத்தையுமே தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்கிறார்கள். சாதாரணமாக ஆலயங்களில் தரைகளை மட்டுமே சுத்தம் செய்வதைக் கண்டு உள்ளோம். ஆனால் சுவர்கள், தூண்கள் மற்றும் ஆலயம் என அனைத்தையுமே விழா துவங்கும் முன்னால் தண்ணீரால் கழுவி சுத்தம் செய்யப்படுவதை இங்குதான் கேள்விப்படுகிறோம். அந்த ஐதீகத்தை ஏன் கடைபிடிக்கின்றார்கள் என்பது தெரியவில்லை.
![](https://santhipriya.com/wp-content/uploads/2012/06/Image1-4.jpg)
இந்த ஆலயம் உள்ள கோட்டையில் இன்னும் சில சிறிய ஆலயங்களும் உள்ளன. இந்த கோட்டை திப்பு சுல்தான் மற்றும், ஹைதர் அலியின் கோட்டையாக இருந்தது என்றும் இந்தக் கோட்டையில்தான் திப்பு சுல்தான் பிறந்ததாகவும் கூறுகிறார்கள்.
விமான நிலையத்துக்கு செல்லும் வழியில் வரும் தேவனஹல்லியின் வெளிப்புறப் பகுதியை அடைந்ததும் இடதுபுறம் திரும்பிச் சென்றால் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஆலயத்து கோட்டையை அடையலாம். ஆலயம் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் 8 மணி வரை மட்டுமே திறந்து இருக்கும்.
Archakar
Sri Venugopala SwamyTemple,
Fort, Devanahalli :562110.
Cell: 98865 36673