குதிரை தலைக்  கொண்டு, அபய கரங்களைக் காட்டியபடி, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் பகவான் ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது. அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியை  தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டிப் புண்ணியம் எனும் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் மட்டுமே காணலாம். ஆயிரத்துக்கும் முற்பட்ட வருடத்தை சேர்ந்த ஆலயம் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தில் பகவான் யோகஹயக்ரீவரை கல்வி ஞானம் பெற, தேர்வுகளில் வெற்றி பெற, தொழிலில் வெற்றி பெற, நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற என அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் வேண்டி வணங்குகின்றார்கள்.

பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில் ஒருமுறை பல அசுரர்களுடன் கடுமையான யுத்தம் செய்து அவர்களை அழித்த பின் அந்தக் களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் பகவான் மகாவிஷ்ணு. அதற்கு முன்னர்தான் பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா, நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு தந்தப் பின் தனது படைப்புத் தொழிலையும் துவக்கி இருந்தார்.

பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா படைப்புத் தொழிலில் ஈடுபட்டு இருந்தபோது பகவான் விஷ்ணு படுத்து இருந்த ஆயிலையில் இருந்த இரண்டு நீர் திவலைகளில் இருந்து மது மற்றும் கைடபன் எனும் இரண்டு அசுரர்கள் வெளி வந்து பகவான் பிரும்மா செய்து வந்திருந்த படைப்புத் தொழிலை தாமே செய்ய ஆசை கொண்டு அவரிடம் இருந்த வேதங்களை திருடிக் கொண்டு ஓடி விட்டார்கள். அந்த வேதங்களை திருடிக் கொண்டு சென்றவர்கள் அவற்றை பாதுகாப்பாக வைத்து இருக்க வேண்டும் என்று எண்ணி அதை கடலுக்கு அடியில் பாதாள உலகில் கொண்டு சென்று அங்கு ஒளித்து வைத்தப் பின் குதிரை வடிவ முகம் கொண்டு அதற்கு காவலாக அங்கேயே இருந்தார்கள்.

வேதங்களை திருடிச் சென்ற அசுரர்கள் கடலின் அடியில் பாதாள உலகில் அதை பாதுகாப்பாக வைத்துக் கொண்டு இருந்ததும் அல்லாமல் தமக்கு இறவாமை எனும் வரம் வேண்டும் என அங்கேயே கடுமையான தவம் செய்து அந்த வரத்தை பகவான் சிவபெருமானிடம் இருந்தும் பெற்றார்கள். அந்த வரத்தின்படி அவர்களை அழிக்க குதிரை தலைக் கொண்ட கடவுள் அவதரித்தால் மட்டுமே முடியும். அதை அறிந்து கொண்ட பகவான் மகாவிஷ்ணு வருத்தம் அடைந்தார். வேதங்களை மீட்டு அசுரர்களை முற்றிலும் அழிக்க வேண்டும் என்பதற்காக பகவான் சிவபெருமானுடன் கலந்து ஆலோசனை செய்தபின் ஒரு நாடகம் நடத்தினார். அந்த நாடகத்தின் ஒரு காட்சியாக தனது தலை பகுதியில் வைத்து இருந்த ஒரு வில்லின் நாண் மூலம் தமது தலை அறுபட்டு விழுமாறு செய்து கொண்டார். பதறிப் போன தேவர்கள் பகவான் சிவபெருமானிடம் சென்று நடந்ததைக் கூறி பகவான் விஷ்ணு மீண்டும் உயிர் பெற வேண்டும் என வேண்டிக் கொண்டார்கள். அவரோ தொண்ணூறு  நாழிகைக்குள் அறுபட்ட தலையை எடுத்து வந்து பகவான் விஷ்ணுவின் தலை பகுதியில் வைத்தால் மட்டுமே அவர் உயிர் பெறுவார் எனக் கூறி விட அறுபட்ட தலையை அனைத்து இடங்களிலும் தேடினார்கள். தலை கிடைக்கவில்லை. என்ன செய்வது எனது தெரியாமல் தெய்வீக விஸ்வகர்மாவிடம் உடனடியாக சென்று ஏதாவது ஒரு தலையை எடுத்து வந்து தலை இல்லாமல் கிடந்த பகவான் விஷ்ணுவின் உடலில் பொருந்துமாறு வேண்டிக் கொள்ள, காலத்தைத் தாழ்த்தாமல் அவரும் தலை அறுபட்டுக் கிடந்த ஒரு குதிரையின் முகத்தை எடுத்து வந்து அதை பொருத்தினார். அடுத்த கணம் பகவான் விஷ்ணு குதிரை தலைக் கொண்ட புதிய அவதாரமாக உருமாறினார். எவருக்குமே நடந்த  அனைத்துமே பகவான் விஷ்ணு மற்றும் பகவான் சிவபெருமானின் லீலை என்பதோ, அந்த லீலையின் மூலமே குதிரை தலை கொண்ட புதிய அவதாரத்தைப் படைத்து அந்த இரண்டு அரக்கர்களையும் அழிக்க ஏற்பாடு செய்து இருக்கின்றார்கள் என்பது தெரியாது. ஹயம் என்றால் குதிரை என்பது அர்த்தம் என்பதினால் குதிரையின் தலை பொருத்தப்பட்ட   பகவான் விஷ்ணுவும் பகவான் ஹயக்ரீவர் என்ற பெயரை பெற்றார். அடுத்த கணம் அவர் குதிரை முகத்தோடு கடலுக்குள் புகுந்து சென்று அந்த அசுரர்களுடன் போரிட்டு அவர்களை கொன்று வேதத்தை மீட்டு வந்தார். அசுரர்களுடன் போரிட்ட குதிரை தலையுடன் இருந்த பகவான் ஹயக்ரீவர் உக்ரமாக இருந்ததினால் அவர் கோபத்தை தணிக்குமாறு தேவர்கள் அன்னை மகாலட்சுமி தேவியிடம் சென்று வேண்டிக் கொள்ள அவரும் பகவான் ஹயக்ரீவர் மடியில் சென்று அமர்ந்து கொண்டு அவரை சாந்தப்படுத்தினாள்.  அதன் பின்னர் பகவான் ஹயக்ரீவர் லட்சுமி தேவியை  தன் மடியில் இருந்து இறங்கச் சொல்லியபின் சற்றே கண்களை மோடிக்கு கொண்டு  காலை மடித்துக் கொண்டு யோக நிலையில் அமர்ந்தார். அவர் முகத்தில் சலனம் இல்லை, அமைதியே குடி கொண்டு இருந்தது.  ஆகவே அந்த நிலையில் காட்சி தந்த பகவானை அது முதல் யோக ஹயக்ரீவர், அதாவது அமைதியான (யோக) நிலையில் காட்சி தரும் பகவான் ஹயக்ரீவர்என அழைத்தார்கள்.

இப்படியாக தசாவதார அவதாரங்கள் எடுக்க இருந்த காலத்துக்கு முன்னரே விஷ்ணு பகவான் எடுத்த முதல் அவதாரம் அது ஆகும். அதற்கும் பத்து அவதாரங்களை எடுத்த தசாவதாரத்துக்கும்  சம்மந்தம் இல்லை என்று பண்டிதர்கள் கூறுவார்கள். பின்னர் பகவான் ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்திருந்த உருவமே அன்னை லட்சுமி ஹயக்ரீவர் எனும் வடிவம் ஆயிற்று. அந்த கோலத்தில் அவர்கள் இருந்தபோது அங்கு வந்த அன்னை சரஸ்வதி தேவி, வேதங்களை கையில் வைத்திருந்த பகவான் ஹயக்ரீவரிடம் தனக்கு ஞானத்தை உபதேசிக்குமாறு வேண்டிக் கொள்ள, அவரும் அன்னை சரஸ்வதிக்கு ஞானத்தை உபதேசித்து அவருக்கே குருவானார். ஆகவே பகவான் ஹயக்ரீவரை வணங்கித் துதித்தால் அன்னை சரஸ்வதியை வணங்கித் துதித்து பெற்ற அருளை விட பல மடங்கு அருள் கிட்டும் என்பார்கள். தேர்வுகளில் வெற்றி பெற்று நல்ல கல்வி அறிவு கிடைக்க அன்னை சரஸ்வதியை வணங்க வேண்டும் என்றாலும் அதன் பின்னர் அன்னை சரஸ்வதியின் குருவான பகவான் ஹயக்ரீவரையும் வணங்கித் துதித்தால்தான் அன்னை சரஸ்வதி தேவியிடம் இருந்து பெற்ற கல்வி ஞானம் முழுமை அடையும், இன்னும் அதிக கல்வி ஞானத்தை முழுமையாகப் பெற்று வெற்றி மேல் வெற்றியும் அடையலாம் என்பது ஐதீகம் ஆயிற்று. ஆனால் அங்கும் சின்ன நிபந்தனை இருந்தது. கல்விக்காக அன்னை சரஸ்வதியை வணங்காமல் பகவான் ஹயக்ரீவரை மட்டுமே வணங்கினால் முழுமையான பலன் கிட்டாது. அவருடைய சீடரான சரஸ்வதிக்கும் மரியாதை தர வேண்டும் என்பதினால் அன்னை சரஸ்வதியை வேண்டிய பின்னர்தான் பகவான் ஹயக்ரீவரின் அருளாசியைப் பெற வேண்டும் என்பதே பகவான் ஹயக்ரீவரின் தத்துவம் என்பார்கள். ஆனால் மற்ற வேண்டுதல்களுக்காக அவரவர் நம்பிக்கைக்கு ஏற்ப பகவான் ஹயக்ரீவரை நேரடியாக துதிக்கலாம் .

இத்தனை மகிமை வாய்ந்த பகவான் ஹயக்ரீவருக்கு தமிழ்நாட்டில் செட்டிப்புண்ணியம் எனும் கிராமத்தில் ஒரு ஆலயம் அமைந்தது. அவரை அங்கு சென்று  வணங்கித் துதித்தால் அளவற்ற ஞானத்தையும், கல்வி அறிவையும் தந்து அனைத்து தேர்வுகளிலும் வெற்றி அடைய வைப்பார் என்பது நம்பிக்கையின் அடிப்படையிலான ஐதீகம் ஆயிற்று. அத்தனை மேன்மை வாய்ந்த சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்த ஆலயம் எழுந்த வரலாறும், அந்த ஆலயத்தின் மேன்மையும் மகத்தானது.

ஒரு காலத்தில் தென் இந்தியாவின் பல பகுதிகளும் முகலாய மன்னர்களின் பிடியிலும், அவர்களைத் தொடர்ந்து போர்த்துகீசியர் மற்றும் ஆங்கிலேயர் பிடிகளிலும் இருந்தபோது அன்னியர்கள் பல இடங்களிலும் இருந்த இந்துக்களின் ஆலயங்களில் இருந்த நகைகளையும் ஆபரணங்களையும் கொள்ளையடித்து ஆலய மூர்த்திகளையும் நாசப்படுத்தி வந்தார்கள். இந்துக்களின் ஆலயங்கள் குறிவைத்து நாசப்படுத்தப்பட்டதினால் பல இடங்களிலும் இருந்த பக்தர்கள் ஆலயங்களை மறைவிடத்தில் அமைத்து அதில் வழிபட்டு வந்திருந்தார்கள். அதுமட்டும் அல்லாமல் காலம் காலமாக வழிபடப்பட்டு வந்திருந்த ஆலயங்களில் இருந்த தெய்வீக மூர்த்திகளை அந்நியர்களிடம் இருந்து காப்பாற்றுவதற்காக விக்ரகங்களை இடம் பெயர்த்து எடுத்துச் சென்றார்கள். முக்கியமாக எளிதில் கண்டு பிடிக்க முடியாத மற்றும் எளிதில் செல்ல முடியாத வனப்பிரதேசங்களில் வழிபாட்டு தலம் அமைத்து அங்கு அந்த விக்ரகங்களை வைத்து வழிபட்டு வந்திருந்தார்கள். ஆங்கிலேய, போர்த்துகீசிய மற்றும் முகலாய மன்னர்களினால் அந்த இடங்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை. மீறிச் சென்றாலும் அவர்கள் படையினரை எதிரிகள் எளிதில் வழிமறித்துக் கொல்ல முடிந்தது என்பதினால் மலை முகட்டுக்களிலும், அடர்ந்த காடுகளிலும் மறைந்திருந்த ஆலயங்களையும் வழிபாட்டுத் தலங்களையும் அன்னியர்களினால் அழிக்க முடியவில்லை.

இந்த பின்னணியில்தான் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் இருந்த திருவஹந்திபுரம் எனும் ஊரில் பக்தர்களினால் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் பகவான் ஹயக்ரீவர் போன்ற தெய்வங்களின் சிலைகள் அன்னியர்களினால் நாசம் அடையாமல் இருக்க 1848 ஆம் ஆண்டில் அன்றைய திவானாக இருந்த திரு ரங்காச்சார் என்பவரால் பரம ரகசியமாக செட்டிப் புண்ணியத்தில் உள்ள இந்த ஆலயத்துக்கு கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டன. அந்த காலத்தில் சரியான சாலைகள் இல்லாத, போக்குவரத்து வசதிகள் குறைவாக இருந்த மற்றும் மக்கள் நடமாட்டம் மிகக் குறைந்த அளவிலேயே இருந்த செங்கல்பட்டு அருகே இருந்த இடமே செட்டிப்புண்ணியம் என்பது. அந்த இடமும் உயர்ந்திருந்த மலையின் உச்சியில் அடர்ந்த காடுகள் நிறைந்த பகுதியில் அமைந்திருந்தது என்பதினால் இந்த இடத்தில் விக்ரகங்களை வைப்பது பாதுகாப்பானது என்று கருதி அவற்றை இங்கு கொண்டு வந்தார்களாம். இங்கு அதிக அளவில் செட்டியார் சமூகத்தை சேர்ந்தவர்களே குடி இருந்ததாலும், அவர்களே ஆலய மூர்த்திகளை பாதுகாக்க அனைத்து விதங்களிலும் உதவி செய்ததினாலும் இந்த இடம் செட்டிப் புண்ணியம் என்ற பெயரைப் பெற்றது.

முதலில் பகவான் வரதராஜப் பெருமாளுக்காகவே இந்த ஆலயம் அமைக்கப்பட்டு இருந்ததாம். அதன் பின்னரே பகவான் தேவநாதப் பெருமாள் மற்றும் குதிரை தலையுடன்  யோக நித்திரையில் இருந்த பகவான் ஹயக்ரீவருடைய சிலை மற்றும் உற்சவ மூர்த்திகள் 1848 ஆம் ஆண்டுவாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு ரகசியமாக வைக்கப்பட்டன. அதன் பின்னர் அதே போல தஞ்சாவூரில் ரகசியமாக வழிபடப்பட்டு வந்திருந்த உற்சவ மூர்த்திகளான தெய்வங்கள் சீதா-ராம-லஷ்மண-ஹனுமான் மூர்த்திகளும் 1868 ஆம் வாக்கில் இங்கு கொண்டு வரப்பட்டு பூஜிக்கப்படலாயின.

இந்த ஆலயம் தோன்றிய காலம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என்று பொதுவாக கூறப்பட்டாலும் பலரும் நம்புவதைப் போல சுமார் 500 முதல் 600 ஆண்டுகள் பழமையான இங்குள்ள ஆலயத்தில் பகவான் தேவநாத பெருமானை பகவான் வரதராஜப்பெருமாள் என்ற பெயரில் மூலவராக வழிபடப்படுகிறார். ஆலயம் உள்ள இடமும், அதற்குள் உள்ள மூர்த்திகளின் மகிமைகளும் பரவலாக வெளியில் தெரிந்தால் மீண்டும் அந்த ஆலயத்துக்கு ஆபத்து ஏற்பட்டு விடுமோ என்று அந்த காலத்தில் இருந்த பக்தர்கள் அஞ்சியதினால் அந்த ஆலயம் குறித்த அனைத்து செய்திகளுமே செவி வழி வார்த்தைகளாகவே இருந்து விட்டதினால் வெகுகாலம்வரை பெருமளவிலான பொதுமக்களுக்கு செட்டிப் புண்ணியத்தில் மறைந்திருந்த தெய்வீக மகிமை மிக்க ஆலயத்தின் விவரமோ அல்லது மகிமையோ அதிகமாக தெரியாமலேயே இருந்தன.

ஆயினும் கூத்தனூரில் இருந்த அன்னை சரஸ்வதி ஆலய மகிமையைக் குறித்து மட்டுமே தெரிந்திருந்த மக்களுக்கு மெல்ல மெல்ல பகவான் ஹயக்ரீவரின் சக்தி மற்றும் மேன்மையும் வரலாறுகளும் தெரியவர கல்விச் செல்வத்தை அளவில்லாது வழங்கும் பகவான் யோக ஹயக்ரீவர் குடியேறி இருந்த ஆலயங்களை நோக்கிப் படையெடுக்கலாயினர். பல இடங்களிலும் பகவான் ஹயக்ரீவர் ஆலயமும் எழுந்தது. இந்த நிலையில்தான் மெல்ல மெல்ல செட்டிப் புண்ணியத்தின் பகவான் யோக ஹயக்ரீவர் ஆலய விவரங்களும் வெளித் தெரியவரத் துவங்கியதும் பக்தர்கள் அங்கு செல்லத் துவங்கினார்கள்.

அந்த காலத்தில் அதிக சாலை வசதிகளே இல்லாத, மலைப் பகுதியில் இருந்த இந்த ஆலயத்துக்கு சென்று பகவான் யோக ஹயக்ரீவரை தரிசித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் கொண்ட உண்மையான பக்தர்கள் மட்டும் தத்தம் குழந்தைகளுடன் செட்டிப் புண்ணியத்தை தேடி வருவது வழக்கமாக இருந்து வந்திருந்ததாம்.

இந்த ஆலயத்தில் குதிரை தலை கொண்ட பகவான் ஹயக்ரீவர் யோக முத்திரை கொண்டு தனியாகவே காட்சி தருவது அபூர்வமான காட்சி ஆகும். அனைத்து ஆலயங்களிலும் பகவான் யோக ஹயக்ரீவர் மடியில் அன்னை லஷ்மி தேவி அமர்ந்துள்ள காட்சியே இருக்கும். ஆனால் அதற்கு மாறாக இங்கு பகவான் ஹயக்ரீவர் குதிரை முகம் கொண்டு தனிமையில் யோக நிலையில் அபாய முத்திரைக் காட்டியபடி பகவான் தேவநாதன் எனும் பெயரில் தனி சன்னதியில் காணப்படுவது விசேஷ காட்சி ஆகும்.  அவர் சன்னதியின் அருகில் உள்ள சன்னதியில் அன்னை ஹோமப்ஜவல்லி எனும் பெயரில் அன்னை லஷ்மி தேவி காட்சி தருகிறார். சன்னதிக்கு எதிர் புறத்தில் சற்றே தள்ளி அமைந்துள்ள தனி சன்னதியில் தெய்வங்கள் ராம-சீதா-லஷ்மண சமேதகர்கள் காட்சி தந்து கொண்டு இருக்க பகவான் ஹனுமார் அவர்கள் முன் மண்டி இட்டபடி காணப்படுகின்றார். இந்த சன்னதியில்தான் மதியம் 12.00 மணிக்கு உச்ச கால ஆராதனை நடைபெறுகிறது. இந்த ஆலயத்தில் அனைத்து சன்னதியிலும் சன்னதிக்குள்ளேயே உள்ள மூல மூர்த்திக்கு முன்பாக வைக்கப்பட்டு உள்ள உற்சவ மூர்த்திகளுக்கு மட்டுமே ஏன் பூஜைகளை செய்கிறார்கள் என்பதற்கான காரணம் விளங்கவில்லை.

ஆலயத்தின் பின்புறத்தில் உள்ள அங்கோளம் அல்லது அழிஞ்சல் என்ற பெயருடைய தெய்வீக மரத்தில் தமது வேண்டுதலை நிறைவேற்றித் தர பக்தர்கள் தமது ஆடையில் இருந்து இரண்டு நூலை எடுத்துக் கட்டுகிறார்கள். சிலர் வீடு கட்ட அருள் வேண்டி அந்த மரத்தின் அடியிலேயே கல்லினால் ஆன சின்ன வீடு கட்டுகிறார்கள்.

பரிமுகன் என அழைக்கப்படும் பகவான் ஹயக்ரீவருடைய உருவ அம்சங்கள் என்னென்ன? சந்தியா தேவதைகள் நாசித் துவாரங்களாக இருக்க, குதிரை முகத்தில் உள்ள பிடரி மயிர்கள் சூரிய ஒளிக்கதிர்களால் அமைந்திருக்க, கங்கையும், அன்னை சரஸ்வதியும் அவரது புருவங்களாக அமர்ந்துள்ளார்கள். சந்திரனும் சூரியனும் அவரது கண்களாக அமர்ந்திருக்க அவருடைய பற்கள் பித்ரு தேவதைகள் ஆவர். பிரும்ம லோகம் இரண்டுமே மேலும் கீழுமாக அவர் வாயின் உதடுகளாக அமைந்தன என்பார்கள். அவருக்கு நான்கு கைகள். ஒரு கை கல்வி மற்றும் ஞானத்தைப் போதிக்கும் முத்திரை காட்டியபடி இருக்க, இன்னொரு கையோ சில புத்தகங்களை வைத்தபடி காணப்படும். அவை நான்கு வேதங்கள் ஆகும். ஆகவேதான் பகவான் ஹயக்ரீவர் கல்வி, ஞானம் மற்றும் விவேகத்தைக் கொடுப்பவர் என கருதப்படுகின்றார்.

கல்வியும் செல்வமும் பெருக இங்குள்ள யோக ஹயக்ரீவர் ஆலயத்துக்கு வந்து  பகவான் யோக ஹயக்ரீவரை வணங்குகிறார்கள். ஸ்வாமிக்கு ஏலக்காய் மாலை போட்டு வணங்கினால் கல்வியில் முன்னேற்றம் கிடைக்கும், ஞாபக சக்தி கூடும் என்பது நம்பிக்கை ஆகும். கூத்தனூர் சரஸ்வதி ஆலயத்தில் வழிபடும் முறையிலேயே தேர்வு எழுதும் மாணவர்கள் பெற்றோர்களுடன் பகவான் ஹயக்ரீவர் ஆலயங்களுக்குச் சென்று  பகவான் யோக ஹயக்ரீவரின் பாதத்தில் தாம் எடுத்து வரும் பேனா மற்றும் பென்சிலை வைத்து வணங்கிய பின் அதை எடுத்து செல்கின்றனர். அதன் காரணம் அவரே சரஸ்வதி தேவிக்கும் குருவானவர் என்ற உண்மைதான்.

சென்னையில் இருந்து செல்பவர்கள் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்து மகேந்திரா சிட்டியின் நேர் எதிரில் உள்ள சின்ன சாலையில் இறங்கி  ஆலயம் செல்லும் வழியைக் காட்டும்  பாதையிலேயே சென்றால் பகவான் தேவநாத ஸ்வாமி ஆலயத்தை அடையலாம். காலை 7.30 மணி முதல் மதியம் 1.00 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 7.30 மணி வரை திறந்திருக்கும்.

ஆலய படங்கள்