பிரதோஷம் – சில முக்கியமான செய்திகள் 

பிரதோஷம் என்பது என்ன ? பிரதோஷம் என்பது பாவங்களை தொலைத்துக் கொண்டு மோட்ஷத்தை அடைய செய்யப்படும் வழிபாடு ஆகும்.  பிரதோஷம் அதாவது பிரதி + தோஷம் என இரு வார்த்தைகளைக் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு பாபத்தையும் தொலைத்துக் கொள்ளும் வழிபாடு ஆகும்.

பிரதோஷம் என்பதை எப்போது செய்யலாம்? ஒவ்வொரு மாதமும் சுக்ல  மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் திரியோதசியன்று சாயங்காலத்தில், சிவபெருமான் ஆனந்தநடனமாடும் நேரத்தில் அவரை வணங்கினால் நம் வேண்டுதல்களுக்கு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 ஆம் திதியன்று வருவது பிரதோஷ தினம்.

பிரதோஷ தினத்தன்று சாயங்கால வேளையில் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?  அன்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கித் துதித்தால் வாழ்வின் அனைத்து வளமும் பெருகுமாம். அதுமட்டும் அல்ல அன்றுதான் சாயங்காலத்தில் அனைத்து தேவர்களும், தெய்வங்களும் பூமிக்கு வந்து சிவபெருமானை வணங்கித் துதிக்கின்றார்களாம். அப்போது நாமும் ஆலயத்துக்கு சென்று சிவ வழிபாடு செய்யும்போது  அங்கு  கண்களுக்கு புலப்படாமல் அனைத்து இடங்களிலும் நிறைந்துள்ள  தெய்வங்களின் ஆசிகளும் அங்கு செல்லும் ஒருவருக்கும் கிடைக்கின்றது.  தொடர்ந்து 120 பிரதோஷ தினங்கள் எவர் ஒருவர் சிவ வழிபாடு செய்வாரோ அவருக்கு மீண்டும் பிறவாமை எனும் பலன் கிட்டுமாம்.

பிரதோஷம் குறித்து ஒரு புராணக் கதை காலம் காலமாக கூறப்பட்டு வருகின்றது. அந்த கதையின்படி ஒருமுறை தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்து அமிர்தத்தை எடுத்தபோது கயிறாக பயன்படுத்தப்பட்ட வாசுகி நாகத்தின் உடல் முழுவதும்  காயம் ஏற்பட, அந்த காயத்தின் வலியினால் அது கக்கிய கொடிய விஷத்தினால்  உலகமே அழிந்து விடும் அளவு வெப்பம் ஏற்பட தேவர்கள் அனைவரும் சிவபெருமானிடம் ஓடிச் சென்று அழிவில் இருந்து உலகைக் காக்குமாறு வேண்டிக் கொண்டார்கள்.

ஆகவே அந்த கொடிய விஷத்தின் தன்மையை  தணிக்க அந்த விஷம் பூமியில் விழுவதற்கு முன்பாகவே அதை தமது கையில் ஏந்திக் கொண்ட சிவபெருமான் அந்த விஷத்தை தானே உண்டு அனைவரையும் காப்பாற்றினார். ஏகாதசி பதினோராம் நாள் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அவரே உலகை படைத்தவர் என்றாலும் கூட  அந்த குறிப்பிட்ட விஷம் அவரது உடலுக்குள் சென்று இருந்தால் அவர் மரணம் அடைந்து இருப்பார். அது இயற்கையின் நியதியாகும். ஆனால் அந்த விஷத்தை சிவபெருமான் விழுங்கிய பின் அதை பற்றிக் கவலைப்படாத தேவர்கள் மீண்டும் தமது காரியத்திலேயே கண்ணாக இருந்து விட்டார்கள் (அமிர்தம் கடைதல்). அதைக் கண்ட பார்வதி தேவியானவள் தனது கணவருக்கு அந்த விஷத்தினால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டுவிடக்   கூடாது என பதறிப்  போய் அவர் அருகில் சென்று அவர் தொண்டையை தடவிக் கொடுக்க அந்த விஷம் அப்படியே உறைந்து கட்டியாகி அங்கேயே தங்கி நிற்க, அதன் நச்சுத் தன்மையையும் இழந்தது. ஆனால் அந்த விஷத்தின் வெப்பத்தினால் சிவபெருமானின் தொண்டை  காய்ந்து போய் நீல நிறமாகி விட்டது. ஆகவேதான்  அவருக்கு நீலகண்டன் அதாவது நீல நிற தொண்டையைக் கொண்டவர் என்ற பெயர் ஏற்பட்டது.

அவை அனைத்துமே திரியோதசி அன்று சாயங்கால வேளையில் நடைபெற்றது. சற்றே நேரத்தில் தம் சுய நினைவுக்கு வந்த தேவர்களும் அசுரர்களும் நடந்தவற்றைக் கேள்விப்பட்டு  பதறிப்போய் தமக்காக விஷத்தை உண்ட சிவபெருமானின் நிலை என்ன ஆயிற்று என்பதை கவனிக்காமல் இருந்து விட்டோமே என வருந்தி அவரிடம் ஓடிச் சென்று தாம் அறியாமையினால் அவருக்கு நன்றி கூறாமல் இருந்து விட்டதற்கு வருந்தி மன்னிப்புக் கேட்க சிவபெருமான் அவர்களை மன்னித்தார். அவர்களுக்கு அதனால் ஏற்பட்டு இருந்த அனைத்து பாபங்களையும்  விலக்கினார். அந்த ஆனந்தத்தில் அவர் நந்தியின் கொம்புகளுக்கு இடையே அற்புதமான நடனமான களி நடனம்  எனும் நடனத்தை ஆடினார். பார்வதி தேவியும் அவர் அருகில் நின்றவாறு அவர் ஆடிய நடனத்தை ஆனந்தமாக ரசித்துக் கொண்டு இருந்தார். அதனால்தான் சுக்ல  மற்றும் கிருஷ்ண பட்சத்தில் திரியோதசையின் சந்தியா காலம் பிரதோஷ காலம் என பெயர் பெற்றது. அன்றைக்கு அந்த நேரத்தில் சிவபெருமான் மற்றும் பார்வதியை நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே இருந்து பார்த்து வணங்கி பூஜை செய்தால் வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்பது நம்பிக்கை ஆயிற்று.

பிரதோஷ காலத்தின்போது விரதம் இருந்தோ அல்லது சிவபெருமானின் புராணத்தை படித்தோ அல்லது பிரதோஷ  கால கதையை படித்தோ அல்லது 108 முறை மிருத்துஞ்ஜெய  மந்திரத்தை உச்சரித்தோ வழிபாடு செய்தால் பிள்ளை இல்லாதவர்களுக்கு  புத்திர பாக்கியம், செல்வம்  மற்றும் வாழ்வின் வளம் பெருகும் என்பதாக பண்டிதர்கள் கூறுவார்கள். முக்கியமாக மழலை செல்வம் அற்ற பெண்கள் இவற்றை எதையாவது ஒன்றை கடை பிடித்தால் நிச்சயம் பலன் கிட்டும் என்கின்றார்கள்.

பிரதோஷ பூஜையின் பயன் கிடைக்க சிவபெருமானுக்கு செய்யப்படும் அபிஷேகத்தில் பயன்படுத்த வேண்டிய முக்கியமான சில பொருட்கள்:

 • நீண்ட ஆயுள்பெற பால் அபிஷேகம் செய்யலாம்
 • மோட்ஷம் கிடைக்க நெய் அபிஷேகம் செய்யலாம்
 • பாடகர்கள் அற்புதமான குரல் வளம் பெற தேன் அபிஷேகம் செய்யலாம்
 • கடன் தொல்லை விலக அரிசி மாவினால் அபிஷேகம் செய்யலாம்
 • தீராத நோய் தீர கரும்புச் சாறைக்  கொண்டு அபிஷேகம் செய்யலாம்.
 •  நிறைவான செல்வம் பெற பஞ்சாமிருத அபிஷேகம் செய்யலாம்
 • மரண பயம் விலக எலுமிச்சை சாறைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம்
 • எதிரிகள் தொல்லை குறைய சக்கரையைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம்
 • மன  நிறைவு கிடைக்க இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம்
 • மேன்மையான வாழ்க்கை பெற சமைத்த சாதத்தைக் கொண்டு அபிஷேகம் செய்யலாம்
 • லட்சுமி தேவியின் கடாட்ஷம் பெற சந்தன அபிஷேகம் செய்யலாம்

அனைத்து நாட்களிலும் பலவிதமான பழங்களை நெய்வித்தியமாகப் படைத்தும் மற்றும் மலர்களைக கொண்டு பூசிப்பதும் சந்தனக் காப்புப் அல்லது சந்தன அபிஷேகம் போன்றவை செய்வது வழக்கமானதுதான் என்றாலும் சில குறிப்பிட்ட திரவியங்களினால் அபிஷேகம் செய்து ஆராதிப்பதும் குறிப்பிட்ட தினங்களில் வரும் பிரதோஷ தினங்களில் ஆலயத்துக்கு சென்று பிரதோஷ வழிபாடு செய்வதும் அதிக பலன் தரும் என்பது ஐதீகம்.

திங்கள் கிழமை :- இந்த தினத்தில் வரும் பிரதோஷத்தை சோம பிரதோஷம் என்பார்கள்.  திங்கள் கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதின் மூலம் மன சஞ்சலங்கள் நீங்கி மன அமைதி கிடைக்கும். நல்ல ஆரோக்கியம் கிட்டி வாழ்வில் வளம் கிடைக்கும்.

செவ்வாய் கிழமை : இந்த தினத்தில் வரும் பிரதோஷத்தை பௌவ்ம பிரதோஷம் என்பார்கள்.  செவ்வாய் கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதின் மூலம் வருமானம் அதிகரிக்கும்.  இந்த தினத்தில் சிவலிங்கத்திற்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து  பூஜிப்பவர்கள் பெரும் நன்மை பெறுவார்கள் என்பார்கள்.

புதன் கிழமை :- இந்த தினத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் புத்திர பாக்கியம் கிடைக்கும், ஆத்ம ஞானம் அதிகரிக்கும். இளநீரைக் கொண்டு அபிஷேகம் செய்தால் நல்ல புத்திசாலியான மக்கள் பேறு உண்டாகும்.

வியாழன் கிழமை :- குரு பிரதோஷம் எனப்படும் இந்த தினத்தில் சிவபெருமானை வழிபாடு செய்தால் பகைவர்கள் அழிவார்கள், எதிரிகள் வலு இழப்பார்கள்.

வெள்ளிக் கிழமை :- பகை விலகும். குடும்ப உறவு பலம் பெரும். உறவினர்கள் அனுசரணையாக இருப்பார்கள். இந்த தினத்தில் சக்கரையினால் சிவலிங்கத்தை அபிஷேகம் செய்து பூஜிப்பதின் மூலம் அனைத்து எதிர்ப்புக்களும் குறையும்.

சனிக்கிழமை:- சனிப் பிரதோஷம் என்பது தனிப் பிரதோஷம் ஆகும். அன்று சிவபெருமானை வணங்குவதினால் சகல பாக்கியங்களும் கிடைக்கும். சனிக்கிழமைதான் சிவபெருமான் வாசுகி கக்கிய விஷத்தை விழுங்கினார் நவக்கிரகத்தில் சனி பகவான்  மிகவும் முக்கியமானவர். அவர் யாரை தண்டிக்க விரும்புவாரோ அவர்களுக்கு அவர் தரும்  தொல்லைகளும், தண்டனைகளும் கடுமையாக இருக்கும்.  ஆகவே ஜாதகத்தில் சனி தசை உள்ளவர்கள் அவரது கருணை கிடைக்க அவரை வேண்டிக் கொண்டு சனிக்கிழமைகளில் விரதம் இருப்பார்கள். அது மட்டும் அல்ல, சனி பகவானின் கடுமை விலக சனிப்பிரதோஷத்தின் அன்று சிவபெருமானை வணங்கி வருவதின் மூலம் சனி பகவானின் தொல்லைகள் குறையும் என்பது நம்பிக்கை.

ஞாயிற்றுக் கிழமை :- வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.

பல ஆலயங்களிலும் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை  வழிபட கருவறையை முழுமையாக சுற்றி வந்து பிரதர்ஷணம் செய்வது போல,கருவறை இல்லாமல்  வெளியே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள சிவலிங்கத்தை  முழுமையாக சுற்றி வந்து பிரதர்ஷணம் செய்யக் கூடாது என்ற ஐதீகம் உண்டு. அதற்கு பல காரணங்களையும் பண்டிதர்கள் கூறுவார்கள்.

ஆவுடையாரின் கோமுகம் மூலம் சிவலிங்கத்தை அபிஷேகித்த  நீர் வெளியேறி  பூமியில் ஓடி அதற்குள் சென்று விடுவதினால்  கோமுகத்துக்கு எதிரில் உள்ள பகுதியின் மீது கால்களை வைத்து நடந்து செல்வதின் மூலம்  சிவபெருமானின் அபிஷேக நீரை  அவமதிக்கும் செயல் ஏற்படும்.   இதனால்தான் சிவபெருமானின் நீண்ட கோமுகம் போன்ற பகுதி  தாண்டிச் செல்ல இயலாத வகையில்  அதன் எதிரில் தடுப்பு போடப்பட்டு குறுகலாக அமைக்கப்பட்டு இருக்கும்.  எவராவது முழு சுற்று பிரதர்ஷணம் செய்ய விரும்பினால் அவர்கள் கோமுகத்தைத் தாண்டிச் செல்ல வேண்டி இருக்கும்.  எவருக்கும்  கோமுகத்தை தாண்டிச் செல்ல தைரியம் இருக்காது. ஆகவே அவர்கள் அரை வட்ட வடிவில்தான் பிரதர்ஷணம் செய்ய இயலும்.

மேலும் கங்கை நீரை பூமிக்கு  அனுப்ப வேண்டும் என்ற பகீரதனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட சிவபெருமானின் தலைப் பகுதியில் இருந்து பூமிக்கு கங்கை நதி பாய்ந்தோடிய தினம்  பிரதோஷ தினம் ஆகும்  என்ற நம்பிக்கை உள்ளது. சிவபெருமானின் தலையில் இருந்து வழிந்து ஓடி வரும் கங்கை நதியின் நீர்தான் கோமுகத்தில் இருந்து வெளிவந்து பூமி மீது சற்று ஓடி பூமிக்குள் புகுந்து மறைகின்றது.  கோமுகத்தில் இருந்து வெளியேறும் நீர் பூமியில் வழிந்து ஓடும்போது அதன் மீது நடந்து செல்வது மஹா பாவச்  செயல் ஆகும்.அது மட்டும் அல்ல, அன்று அனைத்து தேவ கணங்களும், தெய்வங்களும் சிவபெருமானை வணங்கித் துதித்தபடி  நிற்பதும் அதே கோமுகப் பகுதியில்தான். கோமுகத்தில் இருந்து வழிந்து வரும் அபிஷேக நீரை பிரசாதமாக பெற்றுக் கொள்ளும்  அனைத்து தேவ கணங்களும், தெய்வங்களும் கோமுகத்தின் எதிரில் சற்று தொலைவில் நின்று கொண்டு நந்தி தேவரின் கொம்புகளுக்கு இடையே நடைபெறும் சிவபெருமானின் நடனத்தை ரசிக்கிறார்கள்.  ஆகவே அந்த நேரத்தில் கோமுகத்தின் எதிரில் நடந்து செல்வத்தின் மூலம் பக்தர்கள் அவர்களது கவனத்தை திசை திரும்புவார்கள். ஆகவே அது தவறு என்பதும் இன்னொரு காரணமாக கூறப்படுகின்றது.

பிரதோஷ தினத்தன்று எந்த முறையில் சிவலிங்க வழிபாடு செய்ய வேண்டும்?  கீழே தரப்பட்டு உள்ள படத்தைப் பாருங்கள். பிரதோஷ பிரதர்ம் செய்வதற்கு முன் சிவபெருமானின் சன்னதியில் நந்தியின் கொம்புகள் வழியே அவரை வணங்க வேண்டும். அதன் பின் முதலில் சன்னதியின் இடப்புறம் உள்ள கோமுகத்தின் அருகில் சென்று அதை தாண்டிச் செல்லாமல் அங்கிருந்தே சண்டிகேஸ்வரரை தரிசித்தப் பின் (கையினால் சப்தம் எழுப்பிய பின்), அப்படியே திரும்பி முதல் சுற்றை துவக்க வேண்டும். சுற்றிக் கொண்டு கோமுகத்தின் அந்த பக்கத்தின் அருகில் வந்த பின் அதை தாண்டி பிரதர்ஷம் செய்யாமல், மீண்டும் அப்படியே திரும்பி சன்னதிக்கு  முன்னால்  வந்து நந்தி தேவரின் கொம்பின் வழியே சிவ பெருமானை தரிசனம் செய்த பின், மீண்டும் சன்னதியின் இடப்புறம் உள்ள கோமுகத்தின் அருகில் சென்று அதை தாண்டிச் செல்லாமல் அங்கிருந்தே சண்டிகேஸ்வரரை தரிசித்தப் பின் (கையினால் சப்தம் எழுப்பிய பின்), அப்படியே திரும்பி இரண்டாம் முறை சன்னதியை சுற்றி வரவேண்டும். கோமுகத்தின் அந்த பக்கத்தின் அருகில் வந்த பின் அதை தாண்டி பிரதர்ஷம் செய்யாமல், மீண்டும் அப்படியே திரும்பி சன்னதிக்கு  முன்னால்  வந்து நந்தி தேவரின் கொம்பின் வழியே சிவபெருமானை இரண்டாம் முறை தரிசனம் செய்த பின், மீண்டும் சன்னதியின் இடப்புறம் உள்ள  கோமுகத்தின் அருகில் சென்று அதை தாண்டிச் செல்லாமல் அங்கிருந்தே சண்டிகேஸ்வரரை தரிசித்தப் பின் (கையினால் சப்தம் எழுப்பிய பின்), அப்படியே திரும்பி வந்து மூன்றாம்  முறை சன்னதியை சுற்றி வரவேண்டும். அதன் பின் கோமுகம் வரை சென்று திரும்பிய பின் சிவபெருமானை மூன்றாம் முறை வணங்கிய பின் திரும்பி வந்து விட வேண்டும். இப்படியாக பிரதர்ஷம் செய்வதை சோம சூத்திர பிரதர்ஷம் என்பார்கள்.  இப்படி சுற்றி வரும் பிரதர்ஷணத்தை  நன்கு கவனித்தால் அது அரைவட்ட வடிவிலான, அதாவது சந்திரனின் பிறை வடிவ தோற்றத்தில் இருப்பதைக் காணலாம். அதனால்தான் சந்திரனைக் குறிக்கும் இதை சோம  என்கின்றார்கள். 

சிவலிங்கத்தின் கோமுகத்தை தாதாண்டிச் செல்லக் கூடாது என்பதினால்தான் பண்டைய காலம் தொட்டு ஆலயங்களில் சிவலிங்கத்தை மூன்று பக்கமும் சுவர் உள்ள கருவறையில் பிரதிஷ்டை செய்து உள்ளார்கள்.  இப்படியாக கோமுகத்தை தொட்டபடி உள்ள பூமியின் பகுதியின் மீது நடக்க முடியாமல் சுவர் எழுப்பட்டு உள்ளதினால் அறைக்குள் உள்ள கோமுகத்தில் இருந்து வெளியேறும் அபிஷேக நீரும் வெளியேறும் வழி மூலம் பூமிக்குள்  சென்று விடும் வகையில் அமைந்து உள்ளது. அந்த நீரை  பக்தர்கள் மிதித்துக் கொண்டு செல்ல இயலாது என்பதினால் கருவறைக்குள் உள்ள சிவலிங்கத்தை முழு பிரதர்ஷணம் செய்ய முடிகின்றது. ஆனால் அதே சமயம் எங்கெல்லாம் கருவறையில் இல்லாமல் திறந்த வெளியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்குமோ அங்கு சிவலிங்கத்தை முழு பிரதர்ஷணம்  செய்யக் கூடாது. சோம சூத்திர முறையிலான பிரதர்ஷணமே  செய்ய வேண்டும்.

சோம சூத்ர

பிரதர்ஷணம் செய்யும் முறை

  சிவ லிங்கத்தை பிரதர்ஷணம்
செய்யும் பொதுவான முறை