கொடிய விஷம் உள்ள கொட்டும் 
தேள்  கூட ஒரு தெய்வமே ? 
சாந்திப்பிரியா

நாம் கொடிய விஷம் உள்ள கொட்டும் தேளைக் கூட  ஒரு கொடிய ஊர்வனப் பிராணி என்றுதானே நினைக்கின்றோம். ஆனால் அந்த தேள் கூட ஒரு தெய்வமாக மதிக்கப்படுகிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும்? ஆமாம் உண்மைதான் கொடிய தேளை உலகில் சில இடங்களில் தெய்வமாகவே கருதி வணங்குகிறார்கள்.
நம் இந்தியாவில் கர்னாடகாவின் கோலார்  நகரில் மட்டும் அல்ல குல்பர்காவின் அருகில் உள்ள கண்டகூர் என்ற கிராமத்திலும் தேளை தெய்வமாக வணங்கி வருகிறார்கள். அவ்வளவு ஏன், எகிப்து நாட்டிலும் தேளை  ஒரு தேவதையுடன் சம்மந்தப்படுத்தி ஆராதிக்கின்றார்கள்.

 கோலாரம்மா ஆலயத்தின் வெளித்  தோற்றம் 

கோலார் பெங்களூரில் இருந்து சுமார் 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. அங்கு  வொக்க லிங்காயத்து  இன மக்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளார்கள். அங்குள்ள கோலாரம்மா மற்றும் சோமேஸ்வரா என்ற இரண்டு ஆலயங்களையும் சோழ மன்னர்கள்  கிட்டத்தட்ட 10 அல்லது 11 ஆம் நூற்றாண்டுகளில்  கட்டி உள்ளார்கள். அந்த கோலாரம்மா ஆலயத்தில் உள்ள பிரதான தேவி பார்வதி எனவும் துர்க்கை என்று கூறுகிறார்கள். அங்கு சப்த கன்னிகைகளான சப்த மாத்ரிகாவிற்கும் சன்னதி உள்ளது. அவளைத் தவிர அந்த ஆலயத்தில் உள்ள இன்னொரு தேவி செல்லம்மா என்பவள். அவளே கொடுமையான தேளுக்கு அதிபதியானவள். அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் கோலாரம்மாவைத் தவிர அந்த தேளின் அதிபதியான தேவி  செல்லம்மாவையும் சேர்த்தே வணங்க வேண்டும்.  அந்த செல்லம்மாவை வணங்குவத்தின் மூலம் எந்த வகையான பூரான் மற்றும் தேள் போன்றவை  அவளை வணங்குபவர்களை கடிக்காது , அவற்றின்  விஷம் உடம்பில் ஏறாது என்பது ஒரு ஐதீகமாகவே உள்ளது.  அது மட்டும் அல்ல வேறு எந்த   விதமான விஷப் பூச்சிகளும் , பாம்பும் கூட  நம்மை கடிக்காது, அப்படிக் கடித்தால் அந்த விஷமும் நம்மை பாதிக்காது என்பது நம்பிக்கை. 

அந்த ஆலயத்தில் உள்ள மற்றொரு விசேஷம் என்ன தெரியுமா? தேவி செல்லம்மாவின் சன்னதிக்கு பக்கத்தில் பூமியில் ஒரு கிணற்று உண்டியல் உள்ளது. அதில் நமது காணிக்கைகளை செலுத்த சிறிய ஓட்டை உள்ளதாம். அதில் அந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் குறைந்தது ஒரு ரூபாய் நாணயத்தை போட வேண்டுமாம். அந்த நாணயம் கீழே உள்ள பாதாளத்தில் சென்று விழும்போது நாணயம் விழும் ஓசை கேட்குமாம். ஆனால் அதிசயம் என்ன என்றால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் கடந்து விட்ட நிலையிலும்  இன்றுவரை அந்த உண்டி உள்ள கிணற்றை தோண்டி அதற்குள் எத்தனை பணம் உள்ளது என்பதையோ, என்ன என்ன காணிக்கைகள் போடப்பட்டு உள்ளன என்பதையோ  எவருமே பார்த்தது  இல்லையாம்!!!!

 கோலாரம்மா ஆலயத்தின் உள் தோற்றம்
 கோலாரம்மா ஆலயத்தின் உள்ளே உள்ள 
செல்லம்மாவின்  உருவச் சிலை 

காரணம் அதை செய்வது தெய்வ குற்றம் என்பதும், அது கோலாரம்மா மற்றும் செல்லம்மாவின் கஜானா என்றும் கருதுகிறார்கள். முன்னர் இருந்த மைசூர் மகராஜா இந்த ஆலயத்துக்கு அடிக்கடி வந்து வணங்கிச்  செல்வார் என்றும் இங்குள்ளவர்கள் கூறுகிறார்கள்.

அது போலவே கர்னாடகாவின் யட்கிர் தாலுக்காவில் உள்ள கண்டகூர் என்ற கிராமத்தின் மலைப் பகுதியில் என்னும் ஒரு ஆலயம் தேளை வழிபடுவதற்கென உள்ளது. அங்கு சிறு மலை மீது  கொண்டம்மை என்ற பெயரில் ஒரு ஆலயம் உள்ளது.  கோலாரம்மா என்ற பெயரே இங்கு கொண்டாம்மா என மருவி இருக்கலாம் என்றும் சிலர் கூறுகிறார்கள். கொண்டம்மை என்றால் கொண்டை உள்ளவள் என்று அர்த்தம் எனவும், அந்தக் கொண்டையில்தான்  தேளை அடக்கி வைத்து இருக்கின்றாள்  என்றும் நம்புகிறார்கள். இவை அனைத்துமே கிராமியக் கதையின் பெயரில் எழுந்த நம்பிக்கைகள்தான்.
அந்த ஆலயம் உள்ள மலையை தேள் மலை என்கிறார்கள். சாதாரண நாட்களில் அங்கு அதிகம் யாரும் செல்வது இல்லை. காரணம் அந்த ஆலயம் மிகப் பழமையானது மட்டும் அல்ல நல்ல நிலையிலும் இல்லை. ஒரு பாழடைந்த கட்டடம் போலத்தான் உள்ளது. ஆனால் அதன் மகிமையோ மிக அதிகம்.
மற்ற நாட்களில் எப்படியோ நாகபஞ்சமி தினத்தன்று அந்த மலையில் உள்ள நாகம்மா ஆலயத்தில் உள்ள நாகம்மாவை வணங்கிப் பூஜித்தப் பின் அங்குள்ள தேள் தேவதையும் வணங்கி பூஜிக்கின்றார்கள்.  தேள் உருவம் பொறிக்கப்பட்ட ஒரு பாறையையே  தேள் கடவுளாக வணங்குகிறார்கள். அது மட்டும் அல்ல அன்றைய தினம் அங்குள்ள மலைப் பகுதிகளில் பாறைகளுக்கு அடியில் தேடித் தேடி தேள்களை கண்டு எடுத்து தம் உடம்பின் மீது போட்டுக் கொள்வார்களாம். அப்படி செய்வதின் மூலம் விஷ ஜந்துக்களிடம் இருந்து தாம் ஆசிர்வதிக்கப்படுவதாக அங்குள்ள கிராமிய மக்கள் நம்புகிறார்கள்.   ஆனால் ஒரு தேள், பாம்பு  மற்றும் பிற கொடிய விஷ ஜந்துக்களும் கூட இதுவரை  எவரையும் கொட்டியது  இல்லை என்பது மட்டும் அதிசயம் அல்ல, மற்ற நாட்களில் மலையில் பாறைகளில் தேடினால் மருந்துக்குக் கூட ஒரு  தேள் கண்களில் படாது என்பது மிகப் பெரிய அதிசயம் !! அதனால்தான் அங்கு நாகம்மா என்ற பெயரில் பாம்பு தேவதையையும், தேளையும் ஒன்று சேர்த்து பூஜித்து வணங்குகிறார்களாம்.

கொண்டம்மை ஆலயத்தில் 
பூஜிக்கப்படும்  தேள் சிலை 

இந்தியாவில்தான் இப்படி ஒரு நம்பிக்கை என்றால் மேலை நாடான எகிப்து நாட்டிலும் நிலவும் புராணக் கதையின்படி  ‘செர்கிட்’ (Serqet) என்ற தேவதை தேளுக்கு அதிபதி என்றும்,  அவளை வணங்குவத்தின் மூலம் தேள்களினால்  ஏற்படும் ஆபத்துக்கள் இருக்காது எனவும் நம்புகிறார்கள். தேள் கொட்டினால் கடுமையான சூட்டை வைத்தது போன்ற உணர்வு இருக்கும். அதற்குக் காரணம் அவள் சூரிய பகவானின் பெண் என்பதினால்தான் அவள் அனுப்பும் தேள் கொட்டியதும் அத்தனை உஷ்ணம் ஏற்படுகின்றது. அந்த தேவி சூரிய பகவானின் பெண் என்பதினால் அவள் தேவகணமும் சூரியனின் வெட்பத்தை தன்னுள் அடக்கி வைத்துள்ளது. அதனால்தான் அது கொட்டினால் மின்சாரம் பாய்ந்தது போல தேள் கொட்டிய இடம் சுடும் என்கிறார்கள்.

அந்த தேவி  தவறு செய்பவர்களை தண்டிக்க தமது  கணங்களான  தேளை அனுப்பி  விஷத்தைக் கொட்டி மரணத்தை, கொடுமையான துன்பத்தை தருவாள். அதே சமயத்தில் அப்படி தண்டிக்கப்பட்டவர்கள்  மனமுருகி அவளை சரண் அடைந்தால் அந்த தேளின் விஷத்தை நீக்கி  அவர்களுக்கு உயிர் பிச்சை தருகிறாள் என்பது நம்பிக்கை.   அதனால்தான் ‘செர்கிட்’ என்ற அந்த தேவியின் உருவச் சித்திரங்களில் அவள் தலை மீது ஒரு தேள் அமர்ந்து உள்ளதைப் போல உருவம் உள்ளது. அதுமட்டும் அல்ல பல எகிப்தியர்கள் தேள் உருவம் பொறித்த மோதிரங்களை அணிகிறார்கள்.