மேல் மலையனூர்
அங்காள பரமேஸ்வரி

சாந்திப்ரியா 

மேல் மலையனூர் அங்காள பரமேஸ்வரி ஆலயம் ஜிஞ்சி  தாலுக்காவில் விழுப்புரத்தில் உள்ளது . இங்குள்ள அங்காள பரமேஸ்வரியை புற்று தேவி என்றே கூறுகிறார்கள்.தக்ஷ யாகத்தின் போது உயிர் துறந்த பார்வதியின் உடலை சிவபெருமான் சுமந்து கொண்டு ஆக்ரோஷமாக நடனமாடிக் கொண்டு அங்கும்  இங்கும்  அலைந்து கொண்டு இருந்தபோது அவருடைய கோபத்தை தணிக்க விஷ்ணுவானவர் பார்வதியின் உடலை பல துண்டுகளாக வெட்டி  எறிந்தார். அப்போது அவளது உடல் பாகங்கள் விழுந்த இடங்கள் அனைத்தும் சக்தி பீடங்களாக ஆயிற்று. அப்படி நடந்த நிகழ்ச்சியில் பார்வதியின் வலது கை விழுந்த இடமே இடத்தில் மேல்மலையனூரும் ஒன்றாம்.  அவளை அங்கு உருவமில்லாத நிலையில் இருக்குமாறும் தான் வந்து அவளை மனப்பதாகவும் சிவன் கூறியதாகவும் ஆகவேதான் பார்வதி புற்று உருவில் அங்கு வந்து தங்கினாள் என்ற ஒரு கதை உள்ளது.

இன்னொரு  கதையின்படி  ஒரு முறை தேவர்களை மிகவும் கொடுமைப் படுத்தி வந்த அசுரர்களை  அழிக்க விஷ்ணு பகவான் பார்வதியின் துணையை நாடினார். அப்போது புற்று உருவில் இருந்த பார்வதி அவர் வேண்டுகோளை ஏற்று ஒரு அகோர உருவான காளியாக வெளிவந்து அவருக்கு உதவி செய்து  அசுரர்களைக் கொன்றாள். ஆனால் அதன் பின்னும் அவள் ஆத்திரம் அடங்கவில்லை.  ரத்தவெறி பிடித்து அலைந்தாள். அதனால் அவளை சாந்தப்படுத்த விஷ்ணு பகவான் அவளை சமாதானப்படுத்த ஒரு ரதத்தில் ஏறி  வந்தார். பார்வதிக்கு விஷ்ணு பகவான் ஒரு சகோதரர் போல. ஆகவே விஷ்ணு பகவான் எங்கோ யுத்தத்திற்குச்  செல்ல மீண்டும் தன்னை துணைக்கு  அழைக்கின்றார் என எண்ணியவள்  அவர் வந்த ரத்தத்தில் ஏறிக் கொண்டாள். அவரோ அந்த ரதத்தை மேல்மலையனூர் மயானத்தின்  மேல் வழியாக செல்வது போலச் சென்று அந்த ரதத்தை மயானத்தின் நடுவில் கொண்டு சென்று அதை பூமிக்குள் இருந்த அவளது புற்றின் மீது விழ வைக்க தன்னிலைக்கு வந்தவள் அங்கேயே புற்று வடிவில் அமர்ந்தாளாம். அதனால்தான் அங்காள பரமேஸ்வரிக்கு வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கின்றது. அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள்.

இன்னொரு கதையின்படி ஒரு முறை தேவர்களை துன்புறுத்தி வந்த அரக்கர்களான சண்டோபி மற்றும் சுந்தரர் என்பவர்களை அழிக்க பிருமா யாகம் ஒன்றை செய்தார். அப்போது அதில் இருந்து அப்ஸராக்களும்  திலோத்தமையும் வெளி வந்தார்கள். திலோத்தமை என்பவள் பார்வதி எடுத்து ஒரு அவதாரம் ஆகும். அவள் அழகில் மயங்கிய பிரும்மா அவளை அடைய அவளை பின் தொடர்ந்து கைலாசம் வரை சென்றார். அப்போது பிரும்மாவிற்கு சிவபெருமானைப் போலவே ஐந்து தலைகள் உண்டு. தன்னை பின் தொடர்ந்து வந்தது  சிவனாரே என நினைத்தவள் இருட்டில் வந்து கொண்டு இருந்தவரைக் கண்டு நின்று   அவரை   கீழே விழுந்து வணங்கினாள். அதன் பின்னர்தான் தான் ஏமாற்றப்பட்டது தெரியவர சிவபெருமானிடம் அவள் அது குறித்துக் கூறினாள். கோபம் கொண்ட சிவ பெருமான் நேராகச் சென்று பிருமாவின் ஐதாவது தலையை கிள்ளி எறிந்து விட்டார் . அதனால் பார்வதி மீது கோபம் அடைந்த பிருமாவின் மனைவியான  சரஸ்வதி  பார்வதி அகோர உருவை அடையமாறு  சாபமிட்டாள்.  அது மட்டும் அல்லாமல் சிவபெருமானும் தாகத்தினாலும் பசியினாலும் சுற்றித் திரிய வேண்டும் என்றும்  அவர் கையில் விஷ்ணுவின் கிள்ளி எறியப்பட்ட தலை கபாலமாக ஒட்டிக் கொண்டு இருக்கும் என்றும், அந்த கபாலம் அவருக்கு கிடைக்க வேண்டிய அனைத்து உணவையும் உண்டு விடும் எனவும் அதனால் சிவன் ஒன்றும் கிடைக்காமல் பசியோடு அலைவார் என்றும் சாபமிட்டாள்.  சாப விமோசனம் பெற பார்வதி விஷ்ணுவை  வேண்டிக் கொள்ள அவரும் அவளை மேல்மலையனூரில் உள்ள நதிக் கரையில் சென்று ஒரு ஐந்து தலை நாகமாக புற்றில் இருந்தால் சிவ பெருமான் அங்கு வந்து அவளுக்கு  சாப விமோசனம்  தந்து  மீண்டும் மணப்பார் என்றார்.

அவர் கூறியது போலவே அங்கு வந்த பார்வதி வெகு காலம் சிவனுக்காக காத்திருந்தாள். சிவனும் பசியோடு அங்கும் இங்கும் அலைந்துகொண்டு  மேல்மலையனூரில் இருந்த நதியைத் தாண்டி வந்தபோது  அகோர உருவில் இருந்த பார்வதியும்  பாம்பு உருவில் இருந்து வெளிவந்து உணவை எடுத்துக் கொண்டு அவருக்கு தரச் சென்றாள். வேண்டும் என்றே சிவனுக்கு கொடுத்த உணவை அவள் தரையில் போட்டுவிட சிவன் கையில் இருந்த கபாலம் கீழே இறங்கி அதை சிவன் எடுக்காமல் இருக்க தனது வாயில் கவ்வியது.  அதையே எதிர்பார்த்து காத்து  இருந்த பார்வதி தனது உடலை மிகப் பெரியதாக்கிக் கொண்டு அந்த கபாலத்தை பூமியுடன் சேர்த்து மிதிக்க கபாலமும் சுக்கு நூறாக  உடைத்தது. கபாலமும் சுக்குநூறாக  உடைய சிவபெருமானும்  சாப விமோசனம் பெற்றார் . அவர் அவளை சிதம்பரத்து வருமாறும் அங்கு தான் அவளை மணப்பேன்  கூறினார். அகோர உருவில் இருந்த பார்வதி தன்னுடைய பழைய உருவை அடைய  தேவர்கள் மற்றும் முனிவர்கள் அவளை ஒரு தேரில் ஏற்றிக் கொண்டு  சிதம்பரத்துக்குச் செல்ல  அங்கு அவள்  சிவபெருமானை மணந்தார்.

அதே நேரத்தில் தான் மேல் மலையனூரில் அதே அதி பயங்கர உருவுடன் இருந்தவாறு  அங்கு வந்து அவளை வேண்டித் துதிக்கும் பக்தர்கள் சாப விமோசனம் மற்றும் அவர்களுக்கு ஏற்படும்  தீமைகளை அழித்து, பக்தர்களுக்கு ஏவப்படும் பில்லி சூனிய தீமைகளை ஒழித்து,   அவர்கள் நலனைக் காத்தருளிக் கொண்டு இருப்பேன்  எனவும் கூறிவிட்டு மறைந்தார்.  அதனால் பார்வதி அதே இடத்தில் பூமியில் புற்றில் பாம்பாக உள்ளதாக ஒரு ஐதீகமும் நம்பிக்கையும் உள்ளது.

அமாவாசை நாட்களில் ஆலயத்தில் கூட்டம் நிரம்பி வழியும். கருவறையில் உள்ள புற்றையே தேவியாக வழிபட்டு பூசிக்கின்றார்கள். வருடாந்திர உற்சவத்தின் போது கிராமத்தினர் புதிய தேரில் அவளை உட்கார வைத்து ஊர்வலமாக எடுத்துச் செல்கிறார்கள். பௌர்ணமி தினங்களில் அந்த ஆலயம் பக்தர்கள் வந்து வணங்க இருபத்தி நான்கு மணிநேரமும் திறந்து வைக்கப்பட்டு உள்ளது. பல கிராமத்திலும் இருந்து வரும் மக்கள் அங்கு வந்து பொங்கல் படைகின்றார்கள். பிப்ருவரி-மார்ச் மாதங்களில் அங்காள பரமேஸ்வரிக்கு நடைபெறும் வருடாந்திர திருவிழாவின்போது மயானக் கொள்ளை என்ற பெயரில் பெரிய விழாவே நடக்கும்போது பக்தர்கள் அங்கு பலதரப்பட்ட தானியங்களைக் கொண்டு வந்து உணவு சமைத்து அதை அங்காள பரமேஸ்வரிக்கு அற்பநிக்கின்றார்கள். அங்கு மயானத்தில் அவளை ஆராதிக்கின்றார்கள். பலர் சாமி ஆடிக்கொண்டே செல்வார்கள். அதைப் பார்கவே பயமாக இருக்கும். அங்காள பரமேஸ்வரிக்கு நாட்டின் பல இடங்களிலும் ஆலயங்கள் உள்ளன என்றாலும்  அவளுக்கு மேல்மலையனூர் ஆலயமே முக்கியமான ஆலயம்.

விழுப்புரத்தில் இருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அந்த ஆலய முகவரி:

The Executive Officer,
Sri Angala Parameshwari Temple,
Melmalaiyanoor,
Gingee Taluk,
Villupuram District,
Tamilnadu – 604204.
Phone Number : +91 4145 234291
Email : mail@angalammantemple