
மத்திய கோயம்பத்தூர் டவுன் ஹாலின் பக்கத்தில் உள்ள பெரியக் கடை வீதியில் உள்ளதே கோனியம்மன் ஆலயம். ஆலயம் அறுநூறு ஆண்டுகளுக்கு முற்பட்டதாம். அதை கட்டியவர்கள் இருளர்கள் அல்லது கோசர்கள் எனப்படும் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்கின்றனர் . அந்த காலத்தில் ஆலயம் உள்ள அந்த ஊர் கோவன்புத்தூர் என்ற பெயரில் இருந்தது. அதுவே பின்னர் கோயம்பத்தூர் என மருவியதாம். முன்னர் தென்னகத்தில் கோயம்பத்தூர் சில மன்னர்களின் தலை நகராக இருந்ததினால் அங்கு ஒரு கோட்டையும் இருந்தது. அந்த கோட்டைக்குள் இரண்டு ஆலயங்கள் இருந்தன. கோட்டைக்கு வெளியே சிறிய கோனியம்மன் ஆலயம் இருந்ததாம். ஒரு நேரத்தில் கோவன்புத்தூர் மற்றும் அந்தக் கோட்டை எதிர் தேச மன்னர்களின் படையெடுப்புக்கு ஆளாகி முற்றிலுமாக அழிந்தது. ஆனால் சிறிய அளவிலேயே இருந்த கோனியம்மன் ஆலயம் மட்டும் அழிக்கப்படவில்லை. காரணம் அந்த அம்மனின் சக்தியே. அதன் பின் இளங்கோசர் என்ற சமூகத்தினர் ஆட்ச்சியில் வந்தனர். அவர்கள் எதிரிகளின் படையெடுப்பில் இருந்து தம்மை காப்பாற்றிக் கொள்ள தடுப்பாக மீண்டும் அந்த இடத்தில் ஒரு கோட்டையை கட்டிக் கொண்டு அந்த கோட்டையின் வெளியில் கோனியம்மன் ஆலயம் அமைத்தனராம். அந்த மன்னர்கள் ஆட்சி முடிந்ததும் ஆலயம் நலிவுற்றது.
