மனு வழி மன்னனைப் போலவே ஆரிய வம்சத்தை சேர்ந்த இன்னொரு மன்னன் ஆரிய நாட்டில்** இன்னொரு காலத்தில் வாழ்ந்திருந்தான். அவன் பெயர் ஆர்யராஜா என்பதாகும். அவன் நாடும் ரத்னகிரீஸ்வரர் மலையின் அருகில்தான் இருந்தது. அவனும் சிவபக்தி நிறைந்தவனே. அந்த மன்னனிடம் அபூர்வமான நவரத்தினக்கல் பதித்த மணிமுடி இருந்தது. அந்த மணிமுடி அந்த மன்னனுக்கு மிக முக்கியமானது. வாழ்க்கையில் பல நன்மைகளை பெற வேண்டும், தான் பலமிக்க அரசனாக இருக்க வேண்டும் என்பதற்காக ராஜகுருக்களின் ஆலோசனைப்படி விசேஷ பூஜைகளை செய்து அதை செய்திருந்தான். தினமும் அந்த மணிமுடியை அணிந்து கொண்டுதான் அரச சபைக்கும் செல்வான். ஒருமுறை அவனது பக்தியை சோதிக்க எண்ணிய சிவபெருமான் அவனுடைய நவரத்தினம் பதித்த மணி முடியை காணாமல் போகச் செய்தார். காலை எழுந்து குளித்தப் பின் மன்னன் அரச சபைக்கு கிளம்பினான். மணிமுடியை தேடினான். அதைக் காணாமல் திகைத்து நின்றான்.
மணிமுடி எங்கு தேடியும் கிடைக்கவில்லை. அரண்மனையில் யார் வந்து அதை திருடிச் செல்ல முடியும்? என்ன மாயம் இது என அரண்மனையில் இருந்த அனைவரும் பிரமித்துப் போனார்கள். அனைத்து இடங்களுக்கும் சென்று அந்த மணிமுடியை தேடி அலைந்தார்கள். இரவுவரை அது கிடைக்கவே இல்லை. மனம் குழம்பிக் கிடந்த மன்னன் கவலையில் உறங்கி விட்டான். நடு இரவு. அவன் அறையை யாரோ வந்து தட்டினார்கள். இந்த நேரத்தில் யார் வந்து கதவைத் தட்டுகிறார்கள் என யோசனை செய்தவாறு மன்னன் கதவைத் திறக்க அங்கு ஒரு அந்தணர் நின்று கொண்டு இருந்தார். மன்னன் எதையும் கேட்கும் முன்னரே அந்த அந்தணர் மன்னனிடம் இருந்து களவு போய் உள்ள நவரத்தினம் பதித்த மணிமுடி அருகில் உள்ள மலை மீதுள்ள சிவலிங்கத்தின் மீது காணப்படுவதாகவும், அங்கு சென்று அதை எடுத்துக் கொள்ளுமாறும் கூறிவிட்டு அவசரம் அவசரமாக அங்கு நிற்காமல் சென்று விட்டார். வாட்போக்கி மலை* உள்ள இடத்தின் அடையாளத்தையும் குறிப்பிட்டு சென்று விட்டார்.
{ * இன்று வாட்போக்கி எனப்படும் இடம் அன்று அந்தப் பெயருடன் இருக்கவில்லை. அது ஒரு மலைமுட்டாகவேதான் இருந்தது .
** ஆரிய நாடு என்பது ஆரியர்கள் ஆண்ட வட இந்தியப் பகுதியில் இருந்த நாட்டைக் குறிப்பிடுவது அல்ல. இதில் வரும் அனைவருமே ஆரியர்கள் வருகை தரும் முன்னரே இருந்த தென் பகுதி நிலத்தை சேர்ந்த தமிழ் மக்கள். கிராமங்களில் முத்துப்பட்டன் கதை என்ற ஒரு வில்லுப்பாட்டு உண்டு. அதில் முத்துப்பட்டன் என்பவரைப் பற்றிய கதைக் கூறப்படும். அவர் வாழ்ந்த நிலப்பரப்பு அன்றைய திருநெல்வேலி மாவட்டம் மற்றும் கேரளா மானிலத்தை சேர்ந்த எல்லைப் பகுதிகளில் இருந்த சிற்றூர்களை இணைத்த நிலப்பரப்பாகும். அந்த நிலப்பரப்பையே , பெரும்பாலும் மலைத்தொடர்களால் சூழப்பட்டு இருந்த பகுதிகளையே ஆரியநாடு என்று கூறி உள்ளார்கள். இந்த உண்மை குற்றாலங் குறவஞ்சி எனும் நாட்டுப்புறப் பாடலிலும் காணப்படுகிறது. அந்தப் பகுதியில் ஆட்சியில் இருந்தவனே இந்தக் கதையில் கூறப்பட்டு உள்ள மன்னன் ஆவார் }
மன்னன் சுயநினைவுக்கு வந்து, தன்னை சுதாகரித்துக் கொண்டு அந்த நேரத்தில் வந்தது யார் என்பதை அறிய முற்படும் முன்னரே அந்தணர் சென்று விட்டார். வந்தது யார், அவர் எப்படி வந்தார் என்பதும் யாருக்கும் தெரியவில்லை, புரியவும் இல்லை. என்ன இது நடப்பது அனைத்துமே மாயமாக உள்ளதே, மணிமுடி களவு போயிற்று, யாரோ அந்தணர் எங்கிருந்தோ வந்தார், அவரும் காணாமல் போய்விட்டார். இது எப்படி சாத்தியம் ஆகும்? குழப்பத்துக்கு மேல் குழப்பம். ஆனாலும் அந்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் இருக்க முடியாத நிலையில் விடியற்காலை எழுந்து குளித்து விட்டு தனது பரிவாரங்களுடன் அந்த மன்னன் தன்னிடம் நடு இரவில் வந்து அந்தணர் கூறிய இன்றைய வாட்போக்கி எனும் மலைப் பகுதியை சென்றடைந்தார். அங்கு ஆச்சர்யமாக ஒரு சிவலிங்கம் இருந்ததையும் அதன் அருகிலேயே அவரிடம் வந்து விவரம் கூறிய அதே அந்தணர் இருந்ததையும் கண்டார். சிவலிங்கத்தின் தலையில் அந்த நவரத்தின மணிமுடி ஜொலித்தது.
கடவுளே …அரண்மனையில் களவு போன மணிமுடி இங்கு எப்படி வந்தது என அனைவரும் வியந்து அந்த சிவலிங்கத்தைப் பார்த்தபடி நின்றிருக்க, அந்த அந்தணர் மீண்டும் கூறினார் ‘மன்னா இன்று விடியற்காலை சிவபெருமான் எனக்குக் காட்சி தந்து இந்த மணிமுடியை மன்னன் வந்தால் அவரிடம் கொடுத்து விடு என்று கூறினார். ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையும் போட்டு உள்ளார். அது என்ன என்றால் இதோ சிவலிங்கத்தின் அருகில் உள்ளதே சின்ன பாத்திரம் அதை நீர் ஊற்றி நிறப்ப வேண்டும். அந்த நீரை எங்கிருந்து கொண்டு வர வேண்டும் தெரியுமா ? அதோ தெரிகிறதே காவேரி ஆறு, அதில் இருந்து நீரை எடுத்து வந்து பாத்திரம் நிறைய நீரை ஊற்றி நிறப்பிய பின்னரே மணிமகுடத்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என்றார். ஆகவே இந்த பாத்திரத்தில் நீரை ஊற்றி நிறப்பிய பின் மணிமுடியை எடுத்துச் செல்லலாம்’ என்று கூறிவிட்டு சிவலிங்கத்தின் அருகில் அமர்ந்து கொண்டார்.
இதென்ன பெரிய காரியம் என எண்ணிய மன்னன் தனது பரிவாரங்களை அனுப்பி காவேரி ஆற்றில் இருந்து தண்ணீரை குடங்களில் எடுத்து வரச் செய்து அந்த பாத்திரத்தில் ஊற்றினான். ஆனால் குடம் குடமாக நீரை எடுத்து வந்து எத்தனைக் குடம் நீரை ஊற்றியும், மன்னன் எவ்வளவோ முயன்றும் அந்தப் பாத்திரத்தை நீரால் நிறப்ப முடியவில்லை. அதனால் கோபங் கொண்ட மன்னன் தனது உடைவாளை உருவி எடுத்து அந்த அந்தணரை வெட்ட முயன்றான். அடுத்த கணம் அந்த அந்தணன் அப்படியே சிவலிங்கத்தில் நுழைந்து மறைய அந்த சிவலிங்கத்தின் தலைப் பகுதியில் இருந்து ரத்தம் பீரிட்டு வந்தது. ஐயோ நான் தவறு செய்துவிட்டேனே என பதறிய மன்னன் ஓடிச் சென்று சிவலிங்கத்தின் மீதிருந்து வழிந்த ரத்தத்தை தடுத்து நிறுத்த தன் உடலால் அதைக் கட்டிப்பிடித்து அணைத்தபடி நின்று கொண்டு தன்னை மன்னித்து விடுமாறு கதற அவன் பக்தியை மெச்சி அவன் முன் காட்சி தந்த சிவபெருமான் அவனுக்கு அருள் புரிந்து மணிமகுடத்தை தந்தார். அதே சமயம் அவன் அந்தணரை வெட்ட முயன்ற அவனுடைய கையில் இருந்த வாளும் மறைந்து போயிற்று. இதனாலும் அந்த இடத்துக்கு வாள் போக்கி அதாவது வாளைத் தொலைத்த இடம் என்ற பெயர் ஏற்பட்டது.
சிவபெருமான் மன்னனுக்கு மணிமுடியை தந்ததும் இல்லாமல், அது முதல் அவனது குலத்தை சார்ந்தவரே மட்டுமே காவேரி ஆற்றில் இருந்து நீரை எடுத்து வந்து தன்னை அபிஷேகம் செய்ய வேண்டும் என்றும் அவன் குலத்தினரைத் தவிர வேறு யாரும் அபிஷேகம் செய்தால் அதற்குப் பலன் இருக்காது என்று அருள் புரிந்தார். அதனால்தான் காலம் காலமாக இன்றுவரை அந்த ஆரிய மன்னன் ஆர்யராஜாவின் குலத்தவர் எனப்படும் பன்னிரண்டாம் செட்டியார் எனும் மரபினர் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து தண்ணீரைக் குடங்களில் நிறப்பிக் கொண்டு கால்நடையாகவே இங்கு வந்து சிவலிங்கத்தை அபிஷேகித்து வணங்கி வருகிறார்கள். அந்த குலத்தினரைத் தவிர வேறு யாருக்கும் அந்த அபிஷேகம் செய்யும் உரிமைத் தரப்படவில்லை. அந்த ஆலய வாயிலிலும் மன்னனின் உருவம் செதுக்கப்பட்டு உள்ளது. அது முதல் இந்த சிவலிங்கத்தை மணிமுடி மற்றும் திருமுடித் தழும்பர் அதாவது இறைவனின் திருமுடியில் வாள் வெட்டுபட்டதினால் ஏற்பட்ட தழும்பைக் கொண்டவர் என்பதாக கூறப்பட்டார். அந்த சிவலிங்கத்தில் இன்றும் அதைக் குறிக்கும் விதத்தில் தழும்பு போன்று காணப்படுவதாகக் கூறுகிறார்கள்.