தமிழ்நாட்டின் கரூர் மற்றும் திருச்சி மாவட்டத்தில் இருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள குளித்தலை எனும் சிற்றூருக்கு அருகில் உள்ள ஐயர் மலை எனும் இடத்துக்கு சென்றால் காவேரி கரைப் பகுதியில் உள்ள மலை மீது உள்ள ரத்னகிரீஸ்வறரை தரிசிக்கலாம்.
இந்த ஆலயம் இரண்டாம் குலோதுங்க சோழனால் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்துக்கு இரதினகிரி என்ற பெயரைத் தவிர மாணிக்க மலை, சிவாய மலை, ஐயர்மலை என்று வேறு பெயர்களும் உண்டு. தற்போது மக்கள் வழக்கில் இந்த மலைப் பகுதி ஐயர்மலை என்று வழங்கப்படுகிறது. பாண்டவ சகோதரர்கள் ஐந்துபேரும் தமது வனவாசத்தின்போது இந்த மலையில் வந்து தங்கியதினால் இந்த மலைக்கு ஐவர் மலை அதாவது ஐந்து சகோதரர்கள் என்ற பெயர் வந்ததாம். அதுவே காலப்போக்கில் ஐயர் மலை என்றாயிற்று.
மலை உச்சியில் அமைந்துள்ள ரத்னகிரீஸ்வரர் ஆலயத்துக்கு செல்ல வேண்டும் எனில் சுமார் 1017 படிகளில் ஏறிச் செல்ல வேண்டும். ரத்னகிரீஸ்வரர் ஆலயம் பல கதைகளை உள்ளடக்கிக் கொண்டது. புராணப் பெருமை பெற்றுள்ள ஸ்தலமாகும். ‘காலைக் கடம்பர், மத்தியான சொக்கர், அந்தி திருவேங்கி நாதர்’ என்பது கிராமியப் பழமொழி ஆகும். அது ஏன் அப்படிக் கூறப்படுகிறது என்றால் காலை வேளையில் குளித்தலையில் கடம்பவனநாதரை தரிசனம் செய்தப் பின், மதியம் சிவாயமலை எனப்படும் ஐயர் மலையில் சொக்கநாதரை தரிசனம் செய்தப் பின், அந்திப் பொழுதில் (மாலை) ஈங்கோய் மலையில் வேங்கிநாதரை சென்று வணங்க வேண்டும் என்பது ஐதீகம் ஆகும்.
இந்த ஆலயத்தின் மேன்மையை இப்படியாக கூறலாம்:-
1) தமது குல தெய்வம் யார் என்பது தெரியாதவர்கள் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை தமது குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு பூஜிக்கலாம். இறைவன் அதற்கு அப்படிப்பட்ட சக்தியை தந்துள்ளாராம்.
2) இங்குள்ள சன்னதியில் பாலைக் காய்ச்சாமல் நெய்வித்தியம் செய்தப்பின் ஸ்வாமிக்கு முன் வைத்து விட்டுச் சென்றால் மறுநாள் அந்தப் பால் கெடாமல், மாறாக தயிராக உறைந்து இருக்குமாம். இந்த அதிசயத்தை வேறெங்கும் காண முடியாதாம்.
3) இந்த மலை மீது யாரையாவது பாம்பு தீண்டினாலும் அதன் விஷம் உடலுக்குள் ஏறாதாம். இது இன்னொரு அதிசயம்.
4) இந்த மலை மீது எந்த ஒரு காகங்களையும் காண முடியாது. அதற்கான காரணக் கதை ஒன்று உள்ளது.
இங்குள்ள சிவபெருமானை ஐயர்மலை ரத்னகிரீஸ்வரர் என்றும் அழைக்கிறார்கள். பொதுவாக இந்த ஆலயம் நாட்டார்கள் எனப்படுபவர்களில் பன்னிரண்டாம் செட்டியார் எனப்படும் பிரிவினர் தமது குல தெய்வ ஆலயமாகவே கருதி போற்றி வணங்கும் ஆலயம் என்றாலும், ஜாதிப் பிரிவினை இன்றி பிற பிரிவினரும் இங்குள்ள ரத்னகிரீஸ்வறரை வழிபட்டு வணங்கி வருகிறார்கள். ஒரு காலத்தில் சமண முனிவர்கள் பலர் காவிரிபூம்பட்டினம் என அன்று கூறப்பட்டு வந்திருந்த இந்த பகுதியில் வந்து மலைகள் மீதிருந்த பல குகைகளில் தவத்தில் இருந்துள்ளார்கள் என்பது வரலாறு. அதனால்தானோ என்னவோ இந்த மலையிலும் சமண முனிவர்கள் தவமிருந்த குகைகள் சில காணப்படுகின்றன.
இந்த மலை தோன்றிய வரலாறும் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டதுதான். ஒருமுறை வாயுதேவனுக்கும் ஆதிசேஷனுக்கும் கடும் போர் மூண்டது. அப்போது ஆதிசேஷன் தன்னைப் பாதுகாத்துக் கொள்ள மேரு மலையை சற்றே அசைத்து அங்கு ஒரு இடத்தை அமைத்துக் கொண்டு அந்த மேரு மலையின் அடியில் மறைந்து கொண்டது. அதைத் தேடி வந்த வாயுதேவன் அந்த மலையை பிளக்க அந்த மலை ஐந்தாக உடைந்து ஒவ்வொன்றும் ஒவ்வொரு இடத்துக்கு பறந்து சென்று விழுந்தன. அதில் ஒரு பகுதியே இந்த ரத்னகிரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ள மலை என ஆயிற்று. மேரு மலை சிவபெருமானை சார்ந்தது என்பதினால் அதை உடைத்த குற்றத்தை செய்த வாயுதேவன் சிவபெருமானின் சாபத்தைப் பெற்றார். ஆகவே அந்த சாபத்தை போக்கிக் கொள்ள தமக்கு உதவிடுமாறு வாயுதேவன் சிவபெருமானை வேண்டிக் கொள்ள அவரும் வாயு தேவனை வாட்போக்கி (அப்போது இதன் பெயர் வாட்போக்கி என்பதல்ல. அந்தப் பெயர் வந்ததின் காரணக் கதை வேறு உண்டு) எனப்படும் இந்த இடத்துக்குச் சென்று அங்கு வந்து தம்மை வணங்கி துதிக்குமாறு கூற வாயுதேவனும் வாட்போக்கிக்கு வந்து அங்கு ஒரு தீர்த்தம் அமைத்து அதில் பல காலம் நீராடி அங்கேயே தவமிருந்து சிவபெருமானை துதித்து அவர் அருளைப் பெற்று சாப விமோசனம் பெற்றார். இப்படியாக வாயு பகவான் அமைத்த தீர்த்தம் ஒன்று அங்கு உருவானது.
வாட்போக்கி என இந்த இடத்துக்கு ஏன் அந்தப் பெயர் வந்தது? அது இரண்டு காரணங்களினால் ஏற்ப்பட்டது என்கிறார்கள். முன்னொரு காலத்தில் மனு வம்சத்தை சேர்ந்த மன்னன் ஒருவன் நீதி தவறாது ஆட்சி செய்து வந்தான். அவன் பக்தி மார்கத்தில் சிறந்தவன். ஆனால் அவன் நாட்டில் தூம்ரலோசனன் என்ற ஒரு அசுரனும் வாழ்ந்து வந்தான். மிக்க பலசாலியான அந்த அரக்கன் பிரும்மாவிடம் இருந்து பல அறிய வரங்களையும் பெற்று இருந்தான். அந்த செருக்கினால் அந்த அரக்கன் அவ்வப்போது அந்த நாட்டில் இருந்த மக்களிடம் வேண்டும் என்றே வம்புக்குச் சென்று அவர்களை அடித்து உதைத்து அவர்களை துன்புறுத்துவான். அந்த நாட்டு அரசனால் கூட அந்த அரக்கனை அடக்க முடியவில்லை. நாளுக்கு நாள் அவன் அட்டகாசம் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு இருக்க வேறு வழித் தெரியாமல் கலங்கிய மன்னன் கைலாயத்துக்குச் சென்று அங்கு வாயிலில் அமர்ந்து கொண்டு சிவபெருமானை வேண்டித் துதித்தான். அந்த காலத்தில் ஆட்சி செய்து வந்தவர்கள் தேவலோக மனிதர்கள். அவர்கள் ஏதாவது ஒரு விதத்தில் தேவலோகத்துடன் சம்மந்தப்பட்டவர்களாகவே இருந்தார்கள். அவர்களால் தெய்வங்களின் இருப்பிடங்களுக்கு செல்ல முடிந்தது. அதனால்தான் அந்த மன்னனும் கைலாயத்துக்கு செல்ல முடிந்தது. கைலாய வாயிலில் அவன் அமர்ந்து கொண்டு தன்னை துதித்து தவத்தில் இருந்த மன்னனின் தவத்தை மெச்சிய சிவபெருமான் அவனுக்கு காட்சி கொடுக்க அவனும் தனது நாட்டில் அந்த அரக்கனால் ஏற்பட்டு வந்துள்ள துன்பங்களை எடுத்துரைத்தான். அவற்றைக் கேட்டு கோபமுற்ற சிவபெருமான் அவரது துணைவியான பார்வதியை அழைத்து அவனை அழிக்குமாறு கட்டளை இட்டார். பார்வதியும் துர்க்கை வடிவு எடுத்து சவளது யுத்த தேவதைகளான சப்த கன்னிமார்களுடன் வந்து அரக்கனுடன் போரிட்டு அவனை இரண்டாகப் பிளந்து அவனை அழித்தாள்.
இப்படியாக அரக்கன் என்றாலும் தெய்வ பக்தி கொண்டிருந்தவனைக் கொன்ற காரணத்தினால் துர்க்கை வடிவில் இருந்த பார்வதிக்கு பிரும்மஹத்தி தோஷம் பிடித்தது. ஆகவே கவலையுற்ற பார்வதி அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள என்ன செய்ய வேண்டும் என சிவபெருமானிடம் கேட்டாள். சிவபெருமானும் அந்த தோஷத்தைக் களைந்து கொள்ள எந்த இடத்தில் அந்த அரக்கனை வதம் செய்தாலோ அதே இடத்துக்கு சென்று அங்குள்ள மலை பகுதியை ஒரு வாளினால் இரண்டாகப் பிளந்து அதற்குள் அவனுக்கு மோட்ஷம் கிடைக்க வழி செய்யுமாறு கூறிவிட்டு அவளுக்கு மலையைப் பிளக்கும் வாள் ஒன்றையும் தந்தார். அவளும் அதே மலையில் சிவாயம் என இன்று அழைக்கப்படும் மலைப் பகுதிக்கு சென்று மலையைப் பிளந்து அந்த அரக்கனின் ஆன்மாவுக்கு சாந்தி கொடுத்தாள். அந்த மலைப் பிளவில் இரண்டு பாறைகள் எதிரெதிரே பிளவுபட்ட நிலையில் காணப்படுகிறது. அந்த அரக்கனும் அங்கேயே அவளை எழுந்தருளுமாறு வேண்டிக் கொள்ள துர்கையும் அவளது தேவ கணங்களான சப்த கன்னிகைகளும் அந்தப் பிளவுபட்ட பாதை நடுவிலேயே சில காலம் தங்கி இருக்க, இப்போதும் அங்கு பிளந்து உள்ள பாறையின் நடுவில் சப்த கன்னிகைகளுடன் துர்கையும் காட்சி தருவதைக் காணலாம்.