

கும்பகோணத்தில் இருந்து சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஸ்ரீ சாரங்கபாணி ஆலயம். இதை சார்ரங்கபாணி ஆலயம் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சார்ரங்கபாணி என்பதே சரியான பெயர் என்பதின் காரணம் சார் என்றால் வில் என்று பொருள். இந்த ஆலயத்தில் உள்ள பெருமாளிடம் சங்கு மற்றும் சக்கரத்தைத் தவிர வில்லும் உள்ளதினால் இந்த ஆலயத்தின் பெயர் ஸ்ரீ சார்ரங்கபாணி ஆலயம் என ஆயிற்றாம். இந்த ஆலயம் திருப்பதி ஆலயத்துக்கு நிகரானது என்பார்கள். அதன் காரணம் திருப்பதி ஏழுமலையானின் திருமணத்துடன் ஒருவிதத்தில் சம்மந்தப்பட்டது இந்த ஆலயம்.
திருப்பதி வெங்கடசலபதி கதைக்கும் இந்த சாரங்கபாணி ஆலய கதைக்கும் என்ன சம்மந்தம் என்று யோசனை செய்யத் தோன்றுகிறது அல்லவா? திருப்பதி வெங்கடசலபதி லஷ்மியை பிரிந்த சோகத்தில் சில காலம் கும்பகோணத்தில் வந்து தங்கி இருந்ததான நம்பிக்கைக் கதை ஒன்று உள்ளது. அதனால் இங்கு வந்த அந்த நேரத்தில் இங்கு மகாவிஷ்ணு பிருகு முனிவரின் மகளாக இருந்த லஷ்மியை மணந்து கொண்டதற்கான ஐதீகக் கதை உள்ளது.


மகாவிஷ்ணு பாதாளத்தில் ஒளிந்து கொண்ட இடமே பாதாள ஸ்ரீனிவாசர் சன்னதி ஆயிற்று. இந்த ஆலயம் கோமளவல்லித் தாயாரின் பிறந்த வீடு என்பதினால் இந்த ஆலயத்துக்கு செல்பவர்கள் முதலில் தாயாரை தரிசனம் செய்தப் பின்னரே (மரியாதைத் தர ) பெருமாளை தரிசிக்க வேண்டும் என்பது விதி ஆயிற்று.
இந்த ஆலயம் திவ்ய தேச 108 ஆலயங்களில் முக்கியமான ஒன்றாகும். இந்த ஆலயத்திற்கு இன்னொரு பெருமை உண்டு. நாலாயிர திவ்யப் பிரபந்தம் உருவாகக் காரணமாக இருந்துள்ளது இந்த ஆலயத்தின் பெருமாளின் லீலை . அதன் பின்னணிக் கதை இதுவாகும்.
ஒருமுறை நாதமுனி என்பவர் இந்த ஆலயத்துக்கு வந்து வழிபாடு செய்து கொண்டு இருந்தபோது அங்கிருந்த ஒரு பக்தர் இறைவனைக் குறித்து ஒரு பாடலைப் பாடிக் கொண்டு இருந்தார். அதன் பொருளைக் கேட்டு வியந்த நாதமுனி அந்த பாடல் எங்கிருந்து கிடைத்தது என்று கேட்டார். ஒரு பாடலைப் பாடியவரோ அது இன்னும் ஆயிரம் பாடல்களைக் கொண்டது என்றும் அதை தமக்கு நம்மாழ்வார் என்பவர் கற்றுக் கொடுத்ததாகக் கூறவும், அந்த ஆயிரம் பாடல்களையும் கூறுமாறு நாத முனி கேட்டார். ஆனால் அவை தனக்குத் தெரியாது எனக் கூறி விட்டார் அதைப் பாடியவர்.
அன்று இரவு நாதமுனியின் கனவில் தோன்றிய பெருமாள், ஆழ்வார் திருநகருக்குச் சென்று, நம்மாழ்வரை சந்தித்துக் கேட்டால் மீதி பாடல்கள் கிடைக்குமென்றார். அதன்படியே திருநகருக்குச் சென்று அவர் நம்மாழ்வாரை வணங்கினார். அவரிடம் தான் வந்ததற்கான காரணத்தைக் கூற ஆயிரம் பாடல்கள் கிடைக்குமென வந்த இடத்தில், நாலாயிரம் பாடல்கள் கிடைத்தது. இவற்றை நாதமுனி ஒன்றாகத் தொகுத்தார். அதுவே நாலாயிர திவ்ய பிரபந்தம் என்று ஆயிற்று . ஆழ்வார்களின் பாடல்களை தொகுக்க காரணமாக இருந்தவர் என்பதால் இத்தலத்து சாரங்கபாணிக்கு, ஆராவமுதாழ்வார் என்ற பெயரும் உண்டானது.

மற்ற விஷ்ணு ஆலயங்களைப் போல இந்த ஆலயத்தில் சொர்கவாசல் என்பது கிடையாது. அதற்குக் காரணம் வைகுண்டத்தில் இருந்து மகாவிஷ்ணு நேரடியாக இந்த ஆலயத்துக்கு வந்து லஷ்மி தேவியை திருமணம் செய்து கொண்டதினால் இந்த ஆலயமே சொர்கமாகும் என்பது ஐதீகம். மேலும் சயன கோலத்தில் உள்ள பெருமாள் தமது பக்தரான திருமழிசை ஆழ்வார் வந்து தம்மை வந்து வணங்கியபோது சற்று எழுந்து அவரைப் பார்த்தார் என்றும், அதனால்தான் மற்ற சயன கோலத்தில் உள்ள சிலைகளில் சற்று மாறுபட்டு, இங்குள்ள சயனப் பெருமாள் தலையை சற்றே தூக்கிப் பார்ப்பது போல சிலை அமைந்து உள்ளது. ஏழு ஆழ்வார்களினால் மங்களாசாசனம் பாடப்பட்ட ஆலயம் இது.

இங்குள்ள ஆலய சுவர்பலகை செய்தியின்படி, இந்த ஆலயத்தைக் கட்டிய பிரும்மச்சாரியான ஸ்ரீ லஷ்மி நாராயணஸ்வாமி என்பவர் இறந்தப் பின் அவருக்கு ஈமக்கிரியைகள் செய்ய சந்ததிகள் இல்லாததினால் பெருமாளே அவருக்கு மனித உருவில் வந்து ஈமக் கிரியைகள் செய்ததாக ஆலயத்தில் கதை காணப்படுகிறது.
