ஆலமரத்து அடியில் கேட்ட கதைகள்- 18
பரசுராமர் நிறுவிய
மகாதேவர் ஆலயம்
சாந்திப்பிரியா
கோட்டயம் மற்றும் திருவனந்தபுரத்துக்கு இடையே கோட்டயத்தில் இருந்து சுமார் நாற்பது கிலோ தொலைவில் உள்ளதே மகாதேவர் ஆலயம். அது சிவபெருமானின் ஆலயம். கொச்சினில் இருந்து சுமார் முப்பது கிலோ தொலைவில் இருக்கும். ஆலயத்தில் நான்கு பிராகாரங்கள். அனைத்தும் கறுப்புக் கல்லில் கட்டப்பட்டு உள்ளன. ஆலயத்தில் உள்ள சிவ லிங்கத்தின் உயரம் ஐந்து அடியாம். அந்த ஆலயத்தில் உள்ள சிவலிங்கத்தைப் பற்றி இரண்டு விதமான கதைகள் உள்ளன.

அந்த சிவலிங்கமும் அதைப் போலவே மேலும் இரண்டு சிவ லிங்கங்களும் காரா என்ற முனிவருக்கு அவர் நதியில் குளித்துக் கொண்டு இருந்தபோது கிடைத்தன எனவும், அதை எடுத்து வந்தவர் வைகோம், காடுதுரோத்தி மற்றும் இட்டமனூர் என்ற மூன்று இடங்களில் வைத்து வழிபட்டார் எனவும் கூறுகிறார்கள். சிலர் அது அப்படி இல்லை அது காரா என்கின்ற அசுரனுக்கு சிதம்பரத்தில் சிவ பெருமானே தந்து அதில் தான் உள்ளதாகவும் அதை வணங்கினால் பெரும் நன்மை கிட்டும் எனக் கூறியதாகக் கூறுகிறார்கள். முனிவருக்கு கிடைத்ததை கொண்டு வந்து மூன்று இடங்களில் சிவன் ஆலயம் எழும்பியது எனவும் கூறினாலும், அந்த அசுரன் தன்னுடைய இரண்டு கைகளிலும் அந்த மூன்று லிங்கங்களையும் எடுத்து வந்து ஒரு இடத்தில் இளைப்பாற எண்ணி தன் தலையில் வைத்து எடுத்து வந்த லிங்கத்தை வைகோம் என்ற இடத்தில் கீழே வைக்க அதை மீண்டும் எடுக்க முடியாமல் போக அவன் அங்கேயே தங்கி அதை வழிபட்டானாம்.

அதற்கு முன்னால் தன்னுடைய இரண்டு கைகளிலும் வைத்து இருந்த மற்ற இரண்டு லிங்கங்களை காடுதுரோத்தி மற்றும் இட்டமனூர் என்ற இடங்களில் வைத்து வணங்கிய பின்னர், தான் மரணம் அடையும் தருவாயில் அந்த மூன்று லிங்கங்களுக்குமான பூஜையை தொடருமாறு ஒரு முனிவரிடம் தந்துவிட்டுச் சென்றானாம். பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அந்த இடத்தில் இருந்த லிங்கங்களை கண்டு பிடித்த பரசுராமர் அவற்றை வெளியில் எடுத்து ஆலயம் அமைத்தாராம். முக்கியாமாக வைகோமில் இருந்த சிவ லிங்கத்தை விசேஷமாகக் கருதி பூஜித்ததினால் அது மகிமை வாய்ந்ததாக இருந்தது என்பதின் காரணம் மற்ற இரண்டு சிவ லிங்கத்தின் சார்பாகவும் வைகோமில் உள்ள ஆலயத்தில் உள்ள சிவபெருமான் மூன்று வேளைகளிலும் மூன்று தோற்றங்களில் தோன்றி அருள் பாலிக்கின்றாராம். இப்படியாகத்தான் சற்று தள்ளித் தள்ளி அங்கு மூன்று சிவன் ஆலயம் வந்ததாகவும் கூறுகிறார்கள்.
எது எப்படியோ அந்த ஆலயம் , ராமாயண காலத்தை சேர்ந்தது என்பதினாலும் , பரசுராமர் நிறுவியது என்பதினாலும் அதற்கு முன்னரேயே  அதை அங்கேயே இராமாயண காலத்தை சேர்ந்த அசுரன் காரா வைத்து வழிபட்டதாகக் கூறுவதினாலும் நிச்சயமாக ஆலயம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.