பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளின் ஷீரடி  பயணம்

பூஜ்யஸ்ரீ ஸ்வாமிகளின் மனதில் ஒரு வகையான வெறுப்பு உணர்வு இருந்ததினால் அந்த பதானுடன் பேச்சை தவிர்க்க எண்ணினார். ‘1918 ஆம் ஆண்டிலேயே,   சமாதி அடைந்து விட்டவரின் சமாதிக்கு சென்று எனக்கு என்ன கிடைக்கப் போகிறது,  அதனால் எனக்கு எந்த பலனும் ஏற்படப் போவது இல்லை.    தர்காக்களுக்கு சென்றேன்; சமாதிகளுக்கு சென்றேன்; சாது, சன்யாசிகளிடம் வாழ்ந்தேன். என்ன பயன்? இன்றுவரை எனக்கு குரு யார் என்பதும் தெரியவில்லை, அவர் எங்கே உள்ளார் என்றும் தெரியவில்லை.

ஏற்கனவே நான் நிறைய காலத்தை அங்கும் இங்கும் அலைந்தபடி இருந்து வீணடித்து விட்டேன்.  எவர்களிடம் இருந்தும் எனக்கு நிலையான மன அமைதியோ அல்லது எனது ஆன்மீகப் பயணத்தின் நிறைவோ கிடைக்கவில்லை.    எவராலும்  எனக்கு எந்த வழிகாட்டுதலும் தர முடியவில்லை. அவர்களை எல்லாம் என் மனதும் ஏற்றுக் கொள்ளவில்லை என்பதினால் நான் எனது ஊருக்கே செல்ல முடிவு செய்து விட்டேன். உங்கள் அறிவுரைக்கு நன்றி’ என்று கூறி விட்டு சென்னைக்கு செல்ல ரயில் நிலையத்தை நோக்கி நடக்கலானார்.

நடந்து கொண்டே இருந்தவர், தான் ஷீரடியை நோக்கி சென்று கொண்டிருக்கின்றோம் என்பதே தெரியாமல், ரயில் நிலையத்திற்கு செல்வதாக எண்ணிக் கொண்டு, எங்கு செல்கின்றோம் என்ற எண்ணமே மறந்து விட்ட நிலையில் தன்னையும் அறியாமல் ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இருந்த  ஷீரடி  நோக்கி சென்று கொண்டு இருந்தார்.

அவர் ஷீரடியை அடைந்த பொழுது சுமார் பதினோரு மணி இருக்கும்.  மனம் திக்கிட தான் வந்த இடத்தை மீண்டும், மீண்டும் பார்த்தார். ஆஹா…. தான் வந்துள்ளது ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் சமாதி இருந்த இடத்திற்கு  அல்லவா என்று அறிந்து கொண்டதும்  திடுக்கிட்டார்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் ஆத்ம நெருடல்

அப்போதுதான் அவருக்கு ஸ்ரீ ரமண மஹரிஷிகள் கூறிய அறிவுரை நினைவிற்கு   வந்தது.  ஸ்ரீ ரமண மஹரிஷிகள் ஆஸ்ரமத்தை விட்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் வெளியேறிபோது ஸ்ரீ ரமண மகரிஷி அவரிடம் தீர்கமாகக் கூறி இருந்தாராம் ‘நீ உனது குருவைத் தேடி வேறு எங்கேயும் போக வேண்டாம் , ஷீரடிக்கு போ, அங்கே உனக்கு ஸ்ரீ சாயிபாபா குரு தீட்ஷை தருவார், அவரது சரித்திரத்தை எழுது, அவரது புகழை அனைத்து இடங்களிலும் பரவச் செய்’.

ஆனால்  ஏற்கனவே சமாதி அடைந்து விட்டவர்  எங்கே தனக்கு ஆத்ம ஞானத்தை அளிக்க  முடியும் என்று நினைத்துக் கொண்டு, அதை ஸ்ரீ ரமண மஹரிஷிகளிடம் வெளிப்படையாகக் கேட்காமல் தவறு   செய்து விட்டு, அந்த விஷயத்தில் சற்றே அலட்ஷியமாக  இருந்து விட்டோமோ என்ற குற்ற உணர்வு  சகோரியில் இருந்து தன்னை அறியாமல் ஷீரடிக்கு  சென்றவுடன், தனக்கு இருந்த தனது உள் மன வேதனையை   வேறு எவருக்கும் கூறாமல் தனது மனதிலேயே புதைத்து வைத்து இருந்தார். இந்த ரகசியத்தைத்தான்  பின்னாளில் அவர் சந்தித்த திரு  T P ராமச்சந்திர ஐயர் என்பவரிடம் பகிர்ந்து கொண்டார். அவர் அந்த செய்தியை  ரமணாஷ்ரமத்தில் இருந்த பிற பக்தர்களிடம் பகிர்ந்து கொண்டாராம்.

விரக்தியில் சகோரியில் இருந்துக் கிளம்பி சென்னைக்கு  கிளம்பிச் சென்ற பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தன்னை அறியாமலேயே ஷீரடியில் கால் எடுத்து வைத்ததும் தன் மீதே சற்று கோபம் வந்தது.  தனது விதி எப்படி வேலை செய்து உள்ளது என்பதை நினைத்து மனம் வேதனைப்பட்டது. ஸ்ரீ ரமண மகரிஷி கூறியவுடனேயே நேராக ஷீரடிக்கு சென்று இருக்கலாம், தேவை இல்லாமல் அங்குமிங்கும் இருந்த இடங்களுக்கு சென்று பல மஹான்களையும், ஸ்வாமிகளையும் சந்தித்து அவர்களுடனேயே தங்கி இருந்து நேரத்தை வீணடித்துக் கொண்டு  விட்டோமோ என்று மனதில் ஒரு நெருடல் ஏற்பட்டது.

ஆனால் அவை அனைத்துமே விதியின்  விளைவால்தான் ஏற்பட்டு இருக்க வேண்டும்.  அவர்களை எல்லாம் சந்தித்து இருக்காவிடில்    தனக்கு  வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய பாடங்கள் கிடைத்து இருக்காது. ஷீரடி  ஸ்ரீ சாயிபாபா எளிதில்  எவருக்கும்  ஆத்ம ஞானத்தை கொடுத்தது இல்லை. அதற்கு சாட்சியாக ஸ்ரீ உபாசினி மஹராஜ் இருந்துள்ளார் என்றே நினைத்தார்.

ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் கடுமையான சட்ட திட்டங்களை எதிர்கொள்ள முடியாமல் ஸ்ரீ உபாசினி மஹராஜ் அவரிடம் இருந்து பிரிந்து வந்து விட்ட நிகழ்ச்சிகளை ஸ்ரீ உபாசினி மஹாராஜே தனக்கு கூறியவற்றை நினைவு கூர்ந்தார்.  தனக்கு அவை பல விதங்களிலான பாடங்களாக இருந்துள்ளன. அதனால்தான் எளிதில் ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவை தன்னால் சந்திக்க முடியவில்லை, அவர் தனக்கு பலவாறு  உடல் உபாதைகளைக் கொடுத்து, உணவு கிடைக்காமல் தடுத்து நிறுத்தி, உறங்க இடம் இல்லாமல், உடை மாற்றிக் கொள்ள வேறு உடைகள் இல்லாமல்,  பல விதங்களில் சோதனை செய்து பார்த்து இருக்கின்றார், தனது மன உறுதியை உரசி, உரசி பார்த்து உள்ளார் என்று  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் எண்ணினார்.

தன்னை சந்தித்த பதான் யார்? எதற்காக அவரே சம்மந்தம் இல்லாமல் வலிய தன்னிடம் வந்து  ஷீரடி  பாபாவை ஒருமுறை சந்தித்த பின்னர் சென்னைக்கு  செல் என்று கூற வேண்டும்? ஒருவேளை ஷீரடி  ஸ்ரீ  சாயி பாபாவே  பதான் உருவில் வந்து தன்னை சந்தித்தாரா என்றெல்லாம் குழம்பியவாறு ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் சமாதிக்கு முன்னால் சென்று நின்றார்.

1936 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 29 ஆம் தேதி ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் சமாதியை பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அடைந்தபோது அந்த இடம் மயான அமைதியில் இருந்தது. மயில் இறகால் சமாதியை வருடியபடி ஸ்ரீ  அப்துல்லா பாபா அமர்ந்து கொண்டு இருந்தார். அவர் பாபாவை ஆராதனை செய்து கொண்டிருக்க வேண்டும் என்றே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மனதில் நினைத்தார் .  முதலில் ஷீரடிக்கு செல்லுமாறு ஸ்ரீ ரமண மஹரிஷிகள் கட்டளையிட்டார்; அது மனதில் நிற்கவில்லை; ஆனால் அதையே மீண்டும் ஸ்ரீ உபாசினி மஹராஜ் கூறினார். அதன் பின் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவே ஒரு பதான் உருவில் வந்து தன்னை ஷீரடிக்கு  அழைத்து வந்து விட்டாரோ என்ற எண்ணங்கள் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் நெஞ்சில் நிழலாடியது.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளும் ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவும்

விதியின் விளையாட்டினால்  1936-ம் ஆண்டு ஷீரடிக்கு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் வந்து சேர்ந்தார். ஷீரடி பாபா சமாதி முன்பு போய் நின்றார்.  அவர் மனம் அதுவரை இல்லாத அமைதியைப் பெற்றது. மனதுக்குள் இனம்  புரியாத சாந்தமான உணர்வு பரவியது. பாபா தம்மிடம் மவுன மொழியில் பேசுவது போன்று பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் உணர்ந்தார். அப்போதே, ‘இதுநாள் வரை நாம் தேடிய குரு இவர்தான்’’ என்று பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் மனம் சொல்லியது. அவர் மனம் மகிழ்ச்சியால் நிறைந்தது.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி பாபா சமாதி முன்பு போய் நின்றபோது மதியம் பதினொரு மணி அளவில் இருந்தது.  சமாதி முன்பு சென்று நின்று  கொண்டு கண்களை மூடிக் கொண்டார். சில நிமிடங்கள் கழிந்தன. மனம் முழுவதும்   பூரண அமைதி. சமாதியில் இருந்து எதோ சில ஒளி கிரணங்கள் வெளி வந்து தனது உடலுக்குள் செல்வதை உணர்ந்தார்… ஆமாம் ஷீரடி சாயிபாபாவே தனக்குள் புகுந்து கொண்டு விட்டார் என்பதை பரிபூரணமாக அவரால் உணர முடிந்தது.   மெல்ல மெல்ல மனதிற்குள் இனம் புரியாத சாந்தமான உணர்வு பரவியது. ஷீரடி ஸ்ரீ சாயி பாபா தன்னுடன் எதோ மௌன மொழியில் பேசுவதை போல உணர்ந்தார்; இவரே நாம் தேடிய  குரு என்ற எண்ணமும் மனதில் ஆழமாகப் பதிந்தது.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தனது மனதில் நினைத்துக் கொண்டார்  ‘இந்த க்ஷணம் முதல் என்னுடைய ஒவ்வொரு ஆன்மீக குழப்பத்தையும் உன்னிடம் சமர்ப்பித்து விட்டேன், இனி உன்னுடைய வழி காட்டுதலில்தான் நான் நடக்கப் போகின்றேன், என்னையே உன்னிடம் தந்து உன்னை சரண் அடைந்து விட்டேன், எனக்கு ஆத்ம ஞானத்தை தருவாயா’ என எண்ணியவாறு சமாதி முன்னால் நின்று கொண்டிருந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தன்னை அறியாமல் பரிபூரண அமைதி தன்னை சூழ்ந்து கொண்டு விட்டதைக் உணர்ந்தார்.

தனது தேடுதல் அங்கேயே முடிந்து விட்டது என்பதை உணர்ந்தார், உடல் நடுங்கியது; உள்ளம் குமுறியது; மனம் பதபதைத்தது; தான் வேறு எதோ ஒரு உலகில் சென்று விட்டதை உணர்ந்தார். தனக்கு கிடைக்க வேண்டியதை விட அதிக அளவிலான பாக்கியம் கிடைத்து விட்டது என்பதை உணர்ந்தார். அனைத்துமே சில க்ஷணங்கள்தான்.

அடுத்த நொடி பரவசத்தில் பதைபதைத்தது.  பாபாவே தன்னை ஆட்கொண்டு விட்டதை பரிபூரணமாக உணர்ந்தார்.  அவருக்கு பாபா ஆத்ம ஞானத்தை அளித்து விட்டார். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஞான நிலையை அடைந்த மஹாபுருஷர் ஆனார். பாபாவுடன் மௌன மொழியில் பேசி ஆன்மீகத்தின் பேரின்ப நிலையை அடைந்து விட்டதில் எத்தனை ஆனந்தம் இருந்திருக்கும். அதுவே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் முக்கியமான காலகட்டம் ஆகும்.

பின்னாளில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் மற்றவர்களிடம் பேசும்போது கூறினாராம், அந்த மௌனத்தில் ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவிடம் இருந்து   தெய்வீக ஞானத்தை தாண்டிய போதனைகளை தான்  பெற்றதாக தெரிவித்தார்.

அந்த நிலையில் ஷீரடி  ஸ்ரீ சாய்பாபா தனது உடலுக்குள் வந்து புகுந்து கொண்ட நிலை தனக்கு தெரிந்தது  என்றவர்  ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவுடனான சில சம்பாஷணைகளை  விளக்க மறுத்து விட்டார். காரணம் அவை அனைத்துமே அவருக்கும் ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவிற்குமான தனிப்பட்ட  சம்பாஷணைகள் என்று கூறி விட்டார்.

ஆத்ம ஞானத்தை அடைந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் ஷீரடி  ஸ்ரீ சாயிபாபா சேவைகள்

ஆத்ம ஞானத்தை அடைந்து விட்ட  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடியிலேயே பல நாட்கள் தங்கி இருந்தார். அங்கு வந்த, தங்கி இருந்தவர்களிடம் இருந்து ஷீரடி   ஸ்ரீ சாயிபாபா குறித்த பல செய்திகளைக் கேட்டறிந்தார்.

அதன் பிறகு ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவின் பெரும் பக்தர்களான நீதிபதி  P.R. ரீகே, நீதிபதி பிரவாஸ்தே,  எச்.வி.சாத்தே, பேராசிரியர் ஜி.ஜி.நார்கே, ரகுவீர்  பாஸ்கர்  புரந்தரே,   தத்தாத்ரேய தாமோதர் ரசானே, கெட்கானின்  நாராயண மகாராஜ், ஷாமா, தாத்யா, அப்துல் பாபா, லட்சுமி பாய் ஷிண்டே, மார்த்தாண்ட் மஹல்சபதி, பாலாசாகேப் பாட்டே, பி.வி.தேவ், மார்தண்ட் மகாராஜ், ராமச்சந்திர பாட்டீல், காகா மகாஜனி (லக்ஷ்மண் கணேஷ்), மற்றும் பாபாவின் ஏராளமான பக்தர்களையும், பல்வேறு இடங்களிலும் சென்று பேட்டி கண்டு ஸ்ரீ சாயி பாபாவைப் பற்றிய ஏராளமான தகவல்களை பெற்றார்.

அந்த காலக் கட்டத்தில்  மராட்டிய மாநிலத்தில் பல கிராமங்களில்  கதா காலட்சேபங்கள் நடத்தி  ஸ்ரீ சாயி பாபாவின் புகழை ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் பரப்பி வந்த வண்ணம் இருந்தார்.   ஷீரடி   ஸ்ரீ சாயிபாபா  வெளிப்படுத்திய அற்புதங்களை எல்லாம்  துல்லியமாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளிடம் ஸ்ரீ தாஸ்கணு மஹராஜ் கூறினார். அது போல மகல்சாபதி, சந்தோர்கர், பட்டீல் குடும்பத்தினரும் ஸ்ரீ சாயி பாபா பற்றிய பல தகவல்களை தெரிவித்தனர்.  அவற்றை குறிப்புகளாக எழுதி வைத்துக்  கொள்வது  அத்தனை எளிதான காரியமாக இருக்கவில்லை. ஆனாலும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு மராட்டிய மொழி நன்கு தெரியும் ஆகவே மகராஷ்டிரா மானிலத்தில் ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவை பார்த்தவர்கள், பேசியவர்கள், பழகியவர்கள் என பல இடங்களிலும் இருந்த பல தரப்பட்ட மக்களிடமும் பேசினார். பாபாவைக் குறித்த செய்திகளை சேகரித்துக் கொண்டார்.

ஷீரடி   ஸ்ரீ சாயி பாபாவைக் குறித்த அறிய தகவல்களை ஒரு கட்டுரை வடிவில் ‘சண்டே டைம்ஸ்’  எனும் பத்திரிகையில் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் உரிய ஆதாரங்களுடன் தொடர் கட்டுரைகளாக எழுதினார். 1936 மற்றும் 1937-ம் ஆண்டுகளில் அந்த கட்டுரைகள் வாரந்தோறும் வெளியாயின. அதனால்  ஷீரடி   சாயி பாபாவின்  புகழ் இந்தியா முழுவதும் பரவியது.  அதன்  பிறகுதான்  ஷீரடி  ஸ்ரீ  சாயி பாபாவின் புகழ் உலகெங்கும் பரவலாயிற்று. பல அமெரிக்க, ஐரோப்பிய எழுத்தாளர்கள் ஷீரடி  ஸ்ரீ  சாயி பாபாவின் பக்தர்கள் ஆயினர், அவரைக் குறித்து எழுதினார்கள்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி  சாயிபாபாவைக் குறித்த செய்திகளை கேட்டறிந்த சில முக்கியமான சாயி பக்தர்களின் படங்கள்  மேலே உள்ளன. மேல் இருந்து வலப்புறம், இரண்டாவது வரிசை மீண்டும் வலப்புறம் என்ற வரிசையில்  ரகுவீர் புரந்தரே, ராவ் சாஹேப் யஸ்வந்த் ஜனார்தன், M.W. பிரதான், ரிகே,   தாஸ்குணு மஹராஜ், தத்தாத்ரேயா தாமோதர் ரசனே, ஷ்யாமா மாதவ்ராவ், தேஷ்பாண்டே, அப்துல்லா பாபா,   லட்சுமிபாய் ஷிண்டே H.V.சாதே, நானா சாஹேப் சந்தோர்கர்,   மோரேஸ்வர் பர்தான் போன்றவர்கள்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், ஷீரடி  ஸ்ரீ  சாயி பாபாவின் ஆன்மீகப் போதனைகளை தொடர்ந்து நாடெங்கும் பரப்பி வரலானார்.  ஷீரடி ஸ்ரீ  சாயி பாபா செய்த பல அற்புதங்களையும் கட்டுரைகள் மூலம்  வெளிப்படுத்தினார். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் சமாதிக்கு சென்ற கால கட்டத்தில் ஷீரடிக்கு வந்து கொண்டிருந்த பக்தர்கள் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தது. ஷீரடியைச் சேர்ந்த சுமார் ஒரு டஜன் உள்ளூர் கிராமவாசிகள் மட்டுமே ஆரத்திகளில் கலந்து கொள்வார்கள்.  ஆனால் சண்டே டைம்ஸ் பத்திரிகையில்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  எழுதிய கட்டுரைக்குப் பின்னர் பெரும் அளவிலான பக்தர்கள் அங்கு வரத் துவங்கினார்கள்.

அது போதாது என்று எண்ணிய  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  ஷீரடி சாயி பாபாவின் புகழ் உலகம் முழுவதும் பரவ வேண்டும் என்று எண்ணி பாபாவின் ஆலயத்தில் இருந்து வந்திருந்த நடைமுறை  பழக்க, வழக்கங்களை ஆராய்ந்தார். பக்தர்களின் வசதிக்காக அதில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்ற ஆவல் கொண்டார். தாமே ஸ்ரீ சாயி அஷ்டோத்திரம் என்ற உச்சாடனையை இயற்றி அதை மந்திரங்களுடன் கூடிய பூஜையாக தினமும் செய்ய ஏற்பாடு செய்தார்.

ஸ்ரீ சாயி பாபா அஷ்டோத்திரம்  என்பது பகவான் ஸ்ரீ சாயி பாபாவின் அருளும் தன்மை மற்றும் தெய்வீக குணங்களை விளக்கும் 108 பெயர்களின் மாலையாகும். ஒவ்வொன்றும் அவரது எண்ணற்ற தெய்வீக பண்புகள் மற்றும் சக்திகளில் ஒன்றை விவரிக்கிறது. பின்னர் ஸ்ரீ சாயி பாபா வழிபாட்டை நடத்துவதற்கான ஒரு முறையான வழியை வகுக்க வேண்டியது அவசியம் என்று அவர் நினைத்தார். எனவே, ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த அஷ்டோத்திரத்துடன் கூடுதலாக ‘ஸ்ரீ சாய்நாத் பூஜா விதி’ மற்றும் ‘சாய் சஹஸ்ரநாமம்’ ஆகியவற்றை எழுதினார். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் இந்த முயற்சிகள் அனைத்தின் விளைவாக ஏராளமான மக்கள் ஆரத்திகளில் கலந்து கொள்வார்கள்.

1936 ஆம் ஆண்டில் குளிர் காலத்தில்    மூட்டு வீக்க நோய் ஏற்பட்டு  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி அவதிப்பட்டாலும் பாபாவின் மீது பாரத்தைப் போட்டு விட்டு தமது கடமையை செய்து வந்தார்.

இடமிடமாகச் சென்று பாபா தன் பக்தர்களின் துயர் துடைக்க செய்த அற்புத லீலைகளைக் கேட்டு அறிந்தார். அந்த அனுபவங்களை  கேட்டறிந்த பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள், உண்மையிலேயே பாபா பிற தெய்வங்களான கிருஷ்ணர், ராமர் போன்றவர்களின் அவதாரமாக மனித உருவில் வந்து இருந்தார் என்பதை உணர்ந்து கொண்டார்.  பக்தர்களுக்கு எப்படியெல்லாம் உதவி உள்ளார் என்பதையும் கேட்டு குறிப்புகள் எடுத்தக் கொண்டார். ஸ்ரீ சாய் பாபா தனக்கு அளித்த ஆத்மானுபவம் மற்றும் பக்தர்களுக்கு அளித்த அனுபவங்களைக் கொண்டும் பக்தர்களின் அனுபவங்கள் என்ற தலைப்பில் புத்தகமாக தமிழ் மட்டும் ஆங்கிலத்தில் மூன்று பாகமாக வெளியிட்டார்.

ஷீரடி ஸ்ரீ  சாயி பாபா உயிருடன் இருந்திருந்தால் அவரை உண்மையான தெய்வமாகவே போற்றி இருப்பார்கள் எனப் புரிந்து கொண்டார். ஒவ்வொரு நகரத்திலும், கிராமத்திலும் சுற்றுப்பயணம் செய்து பாபாவின் நோக்கம், அற்புதங்கள் மற்றும் செய்திகளைப் பற்றிப் பரப்புவதன் மூலம் நாட்டின் அனைத்து இடங்களுக்கும் ஷீரடி ஸ்ரீ  சாயி பாபாவின் செய்தியை எடுத்துச் செல்ல அவர் முடிவு செய்தார். நீதிபதி எம்.பி. ரீகே மற்றும் நீதிபதி அவஸ்தே ஆகியோருடன், அவர் மகாராஷ்டிராவில் பல இடங்களுக்குச் சென்று ஆங்கிலம் மற்றும் மராத்தியில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி ஸ்ரீ  சாயி பாபா பற்றிய புத்தகங்களை எழுதினார். ‘சாய்பாபா- ஓர் அறிமுகம்’ என்பது அவர் எழுதிய முதல் புத்தகம், பின்னர் அவர் ‘சாய்பாபா யார்’ என்பதை 1939 இல் எழுதினார். ‘ஸ்ரீ சாய்நாத் மனனம்’ என்ற தலைப்பில் சமஸ்கிருதத்தில் கீர்த்தனைகளை இயற்றினார்,

அகில இந்திய சாயி சமாஜம் தோற்றம்

இப்படியாக பல வழிகளிலும் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் புகழைப் பரப்பி வந்தவர்,  தனது 66 வயதில், ஷீரடி ஸ்ரீ  சாயி பாபாவின்  நோக்கம், மகிமைகள், அற்புதங்கள் மற்றும் அவரது தெய்வீக தன்மையை மக்களிடையே பரப்பும் நோக்கத்துடன், 1940 ஆம் ஆண்டு சென்னையில் அகில இந்திய சாயி  சமாஜம் என்ற அமைப்பைத் துவக்கினார்.

1941 ஆம் ஆண்டுகளில் முதலில் அது சென்னையில் திருவல்லிக்கேணி எனும் ஒரு பகுதியில்  ஒரு வாடகை வீட்டில் சாயி  சமாஜம் துவக்கப்பட்டது. அதன் பின்னர்  இரண்டு இடங்களுக்கு மேல் சாயி  சமாஜம் மாற்றப்பட்டு முடிவாக தற்போது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா ஆலயம் உள்ள மயிலாப்பூர் எனும் இடத்தில் நிறுவப்பட்டது. அப்படி இடமிடமாக மாற்றப்பட்ட போதிலும்  ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் பஜனைகளும் சொற்பொழிவுகளும் வாரந்தோறும் வியாழக் கிழமைகளில் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர்கள் ஒன்று கூடி பஜனை நிகழ்ச்சியை நடத்துவார்கள். துவக்க காலத்தில் இந்த முறையில்தான் ஷீரடி ஸ்ரீ சாயி பாபா குறித்த பிரச்சாரம் விரிவடையத் துவங்கியது.

பிறகு மெல்ல மெல்ல பல ஊர்களிலும் அகில இந்திய சாயி  சமாஜத்தின் கிளைகள் அமைக்கப்பட்டன. அங்கெல்லாம்  தலைமை சமாஜத்தில் கடை பிடிக்கப்பட்ட அதே  நியமங்களும் நெறி முறைகளும் கடைபிடிக்கப்படலாயின.

ஆனாலும் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவின் பக்தி இயக்கத்தை அதோடு விட்டுவிட எண்ணவில்லை. அது மேலும் பரவலாக விரிவடைய வைக்கப்பட வேண்டும் என்ற குறிக்கோளுடன்  பல்வேறு யுக்திகளையும்  கடைப் பிடித்தார்.

வாராந்திர பஜனைகளைத் தவிர அவர் ஷீரடி ஸ்ரீ சாயி பாபா படங்கள் அடங்கிய காலண்டர்கள், லாக்கெட் மற்றும் கி செயின் போன்றவற்றை தயாரித்து விற்பனை செய்தார். ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் புகழை எடுத்துரைக்கும் விதமாக பல புத்தகங்கள் வெளியிடப்பட்டன.

ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் புகழை பரப்பிய  பஜனை மண்டலிகள்

1944 ஆம் ஆண்டுகளில் அகில இந்திய சாயி பஜனை மண்டலி ஏற்படுத்தப்பட்டது. அதில் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் உருவப்படம் வைக்கப்பட்டு பஜனைகள் நடைபெற்றன. மெல்ல மெல்ல  சென்னை பஜனை மண்டலியின் அமைப்பிலேயே பல ஊர்களிலும் பஜனை மண்டலிகள் தோன்றலாயின. அதில் பல பக்தர்கள் கலந்து கொண்டார்கள்.

அது பின்னர் வீடுகளில் நடைபெறும் வாராந்திர பூஜை மற்றும் பஜனை மண்டலிகள் என ஆயிற்று. அங்கங்கே ஷீரடி  ஸ்ரீ சாயி பாபா தியான மையங்களும் தோன்றத் துவங்கின. இப்படியாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் துவக்கி வைத்த ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவின் பெருமை, மேன்மை மற்றும் அற்புதங்களை பரப்புரைக்கும்  இயக்கம் விரிவடைந்து கொண்டே செல்லலாயிற்று.

ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் ஆலயங்கள்

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  சீரிய தொண்டு காரணமாக பல ஊர்களில் பாபாவுக்கு ஆலயங்கள் தோன்றத் துவங்கின. சென்னையில் மைலாப்பூர் எனும் பகுதியில்   ஷீரடி ஸ்ரீ  சாயி பாபாவுக்காக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் அழகான ஆலயத்தை நிர்மாணித்தார்.

ஷீரடியில் உள்ளது போன்ற கோபுர அமைப்புடன் அந்த ஆலயம் கட்டப்பட்டது. 1953  ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. சென்னையில் மிகப் பெரிய ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயத்தை அமைத்ததின் மூலம் அதுவே மற்ற ஆலயங்களுக்கு முன்னோடியான ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின்  ஆலயமாக அமையக் காரணமாயிற்று. மயிலாப்பூர் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயம், ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் புகழ் மற்றும் பக்தர்களின் ஆன்மீக தேவைகளை பூர்த்தி செய்ய பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளினால் நிறுவப்பட்ட இந்த ஆலயம் ஒரு முக்கிய வழிபாட்டுத் தலமாக விளங்குகிறது

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளினால் நிறுவப்பட்ட இந்த ஆலயத்தில் துவக்க காலங்களில்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  வழிபட்ட அதே  ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் படம்தான் அனைத்து பக்தர்களும் வழிபடுவதற்காக கருவறையில் வைக்கப்பட்டது. ஆனால் மெல்ல மெல்ல அங்கு திரளத் துவங்கிய பக்தர்களின் ஆசைகளை நிறைவேற்றுவதற்காக, ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின்  ஆலயத்தில் அமைக்கப்பட்டு இருந்த அதே போன்ற வடிவமைப்பிலான  ஸ்ரீ சாயி பாபாவின் சிலையை, வெள்ளி நிற பளிங்குக்  கல்லில் செய்து 1987  ஆம் ஆண்டு வாக்கில் ஸ்தாபனம் செய்தார்கள்.

துவக்க காலங்களில் பக்தர்கள் அந்த சிலையின் அருகில் சென்று அதை தொட்டு ஆராதிக்க முடிந்தது. ஆனால்  பெருகிக் கொண்டே இருந்த பக்தர்களின் எண்ணிக்கையினால் அந்த வழிபாட்டு முறை நிறுத்தப்பட்டு விட்டது. அந்த ஆலயத்திற்கு லட்ஷக் கணக்கான பக்தர்கள் வருகை தருவதினால் பாபாவை சற்று தொலைவில் நின்று கொண்டேதான்  தரிசனம் செய்ய  வேண்டி உள்ளது; அதற்கே கூட நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி உள்ளது.

அகில இந்திய சாயி சமாஜம் அதற்குள் நானூறுக்கும் மேற்பட்ட உப சமாஜங்களை தன்னுள் அடக்கிக் கொண்டது. இந்தியாவின் பல இடங்களில் சாயி ஆலயங்கள் தோன்றிய வண்ணமே இருந்தன. ஒவ்வொரு நாளும் நாளும் சாய் பக்தர்களின் எண்ணிக்கை பெருகிக் கொண்டே இருந்தது. ஆயிரக்கணக்கானவர்கள் சாய் இயக்கத்தில் தொண்டர்களாக சேர்ந்தனர்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் இதர பணிகள் 

1940 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி  ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் புகழைப் பரப்புவதற்காக ஆங்கிலம், தமிழ், சமஸ்கிருதம் மற்றும் தெலுங்கு பதிப்புக்களில்  ‘சாய் சுதா’ எனும் மாத இதழைத் தொடங்கினார். சாய் சுதா பத்திரிகை கட்டுரைகளில், ஸ்ரீ சாய் பாபா தொடர்பான அற்புதங்கள் மற்றும் கவிதைகள் பக்தர்களால் ஆங்கிலம், தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பகிரப்பட்டன.

ஷீரடியில் ஸ்ரீ சாயி பாபாவின்  மூல ஆலயத்தில் கொண்டாடப்பட்டு வந்திருந்த விழாக்களை ஒரு முன் மாதிரியாகக் கொண்டு  மயிலாப்பூர் ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயத்தில் நடைபெற துவங்கிய  ஸ்ரீ ராம நவமி, குரு பூர்ணிமா மற்றும் பாபாவின் மகா சமாதி தினம் ஆகிய மூன்று வருடாந்திர விழாக்களும், பல்வேறு இடங்களிலும் அமைக்கப்பட்டு இருந்த அனைத்து சாயி ஆலயங்களிலும்  கொண்டாடப்படத் துவங்கின.    சென்னையில் நிறுவப்பட்ட  ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயத்தில்தான்  முதன் முதலில் பத்து நாட்கள் பக்தி இசை, பாடல்கள் மற்றும் மதச் சொற்பொழிவுகளுடன் அந்த நிகழ்ச்சிகள்  கொண்டாடப்பட்டன. ஆனால் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சமாதி அடைந்த சில ஆண்டுகள் பின்னரே ஷீரடியிலிருந்து கொண்டு வரப்பட்ட துனியுடன் (நெருப்புக்  கட்டை) கூடிய துவாரகா மாய் கட்டப்பட்டது.

திரு சேஷாத்ரி என்பவர் செயலாளராகவும், திரு ஜே.டி. பன்னாலால் என்பவர் பொருளாளராகவும் இருந்த சாய் சமாஜத்தால் தொடங்கப்பட்ட முயற்சிகள் மூலம் மயிலாப்பூர் சாயிபாபா ஆலயம்   கட்டப்பட்டவுடன், ”பாபாவின் பக்தரான திரு வி.எஸ். ராமசாமி ஐயங்கார் என்பவர் சிறப்பு அனுமதி பெற்று, ஷீர்டியிலிருந்து ஒரு பகுதி துனியின் தீயை  கொண்டு வந்து  1958 ஆம் ஆண்டு மயிலாப்பூர் சாயிபாபா ஆலயத்திலும் துனி எனும் அணையா நெருப்பு குண்டத்தை துவக்கி வைத்தார். அந்த நெருப்புதான் இன்று வரை இங்கே எரிந்து கொண்டிருக்கிறது’’ என்பதாக ஒருமுறை திரு சேஷாத்ரி கூறினாராம்.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தனது வாழ்நாளின் இறுதிவரை அந்த ஆலயத்து வளாகத்திற்குள்தான் தங்கி இருந்தார். அவருடைய சமாதி ஆலயத்தின் பின்புறம் அவர் தங்கி இருந்த அதே ஒரு குடுசை போன்ற அமைப்பிலான கட்டிடத்தில் அமைந்து உள்ளது.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  இறுதி கால கட்டங்கள்;  சமாதி  

1953 ஆம் ஆண்டு பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள்  குளியலறையில் தவறி விழுந்தார். இதனால் 1954 ஆம் ஆண்டின் நடுப்பகுதி வரை அவர் கடுமையாக நோய் வாய்ப்பட்டார். அதற்குப் பிறகு முன்பைப் போல அவரால்  கடுமையான பிரசார பணிகளை மேற்கொள்ள முடியவில்லை 1956 செப்டம்பர் 12 ஆம் தேதி, பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின்  83 வது பிறந்த நாள் சென்னை சாயி சமாஜத்தில் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் அருளால்  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் சில அற்புதமான தெய்வீக சக்திகளை பெற்று இருந்தாலும் அந்த சக்திகள் அனைத்தையுமே அவர் பொது மக்களின் நலனுக்காகவே பயன்படுத்தினார்.

அக்டோபர் 1956 முதல் பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தனது கடுமையான நோயின் காரணமாக படுக்கையில் இருந்து நகர முடியவில்லை  என்பதினால் தனது படுக்கையில் இருந்து தனது பிரச்சாரக் பணியைத் தொடர்ந்தார், மற்ற வேலைகளில் ஈடுபட்டார், மீதமுள்ள நேரத்தை ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவை தியானிப்பதில் செலவிட்டார். 20 ஆண்டுகளாக பாபாவின் செய்தியைப் பரப்பினார்.

ஆனாலும்  அக்டோபர் 19, 1956 அன்று, பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தனது பூத உடலை துறந்து  ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் பாதங்களில் இணைந்து விட்டார். தான் மரணம் அடையும் முன்னால் தமது தெய்வீக சக்திகள்  அனைத்தையும் பெங்களுர் சாய் ஆன்மீக மையத்தின் தலைவர் ஸ்ரீ ராதாகிருஷ்ண ஸ்வாமிஜி அவர்களுக்கு சென்னையில் இருந்தே –  எண்ணங்கள் அல்லது கருத்துக்களை  மனதில் இருந்து இன்னொரு மனதிற்கு மாற்றிடும் டெலிபதி எனும் சக்தி மூலம் அனுப்பி விட்டார். அப்படிப்பட்ட சக்திக்கு  உடல் தொடர்பு தேவை இல்லை.

மரணம் யாருக்குத்தான் வருவது இல்லை? ஒவ்வொரு மனிதனும்  அச்சம் கொள்கின்ற ஒன்றே மரணம். மரணம் நம் உடலுக்கா அல்லது  நமது ஆத்மாவிற்கா? விடை தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரிகின்றது நம்மை படைத்தவன் நம்மை இறுதியில்  பணிய வைக்கும் கடைசி அஸ்திரம், மரணம். வாழ்க்கை என்னவென்று அறிந்த பருவத்திலிருந்து எவ்வளவோ வலிகள், ஆசைகள், கனவுகள் என அனைத்துமே பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு இருந்திருக்கும். பாவம் அவர். வாழ்க்கையில் வெளியில் கூற முடியாத, மனதின் ஏமாற்றங்களும், வலிகளும்,  வேதனைகளும், துக்கங்களும், மற்றவர்களால் ஏற்பட்ட  காயங்களும் அவருக்கு எத்தனை எத்தனை இருந்திருக்கும்?  அவற்றைக் கூட அவர் விதியின் விளையாட்டு என்றல்லவா கருதி  வாழ்ந்து வந்துள்ளார்.

குருவை தேடி அலைந்ததில் எத்தனை, எத்தனை ஏமாற்றங்கள். ஒரு கட்டத்தில் வாழ்க்கை வேண்டாம்,  மரணமே நீயாவது எனக்கு உண்மையாக இருந்து என்னை அழைத்து செல்ல மாட்டாயா என்று எண்ணிய அளவில் பசி, பட்டினி, ஏமாற்றங்கள். அவர் அனுபவித்த  கிடைத்த  வலிகளுக்கும், அவர் கண்களில் இருந்து வழிந்த   கண்ணீர் துளிகளுக்கும் அவர் தேடிய குரு அல்லவா பதில் கூற வேண்டும்.

ஆனாலும் அவற்றைக் கொடுத்து அவரது மன உறுதியை சோதனை செய்தாலும்,  இறுதியில் அதே குரு அவரை தன்னோடு இணைத்துக் கொண்டு விட்டார் என்பது பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளுக்கு எத்தனை பெருமை.

ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் பக்தர்களே,  பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் கல்லறையின் அருகில் நின்று கொண்டு அழாதீர்கள்; அவர் அதற்குள்   மீளா தூக்கத்தில் படுத்து உறங்கி கொண்டு இல்லை; அவர் இன்றும் நம்மிடையே, நமது மனதில் மரணம் அடையாமல் வாழ்ந்து கொண்டுத்தான் உள்ளார் என்பதை நினைக்கும்போது எத்தனை இனிமையாக உள்ளது.   கீழே உள்ள பாடல் அவருக்கே காணிக்கை.

கொடுத்தவன் எவனோ, எடுத்தவனும் அவனேதான் .
அண்டக் கோள்கள் அழியும் வரை
நிலைத்திராது எந்த ஒரு உயிரும்.
பூமிக்குள் புதைந்திருந்தாலும்
அழிவில்லை எனக்கு.
உடலை தொட்டுச் செல்லும் காற்றாக,
பூமி மீது விழும் மழைத்துளி போல,
மின்னும் சூரிய ஒளியாய்,
என்றென்றும் நான் இருப்பேன் இவ்வுலகில்.
எனவேதான் கூறுகிறேன்
கல்லறையில் நின்று அழாதே.
நான் அங்கு உறங்கி கொண்டிருக்கவில்லை
-நாடோடிப் பாடல்-

ஷீரடி ஸ்ரீ  சாயி பாபா ‘உதி’யின்  மகிமை என்ன?

ஷீரடி ஸ்ரீ சாயி பாபா  மண்டலிகள்  மற்றும் ஷீரடி ஸ்ரீ சாயி பாபா ஆலயங்களிலும் ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட வீபூதி போன்ற  பொருள் ‘உதி’ என்ற பெயரில் வழங்கப்படுகிறது.  துவாரகாமாயில்  ஷீரடி ஸ்ரீ சாயிபாபா உயிருடன் இருந்த காலத்தில் பாபாவினால் ஏற்படுத்தப்பட்டு இன்றளவும் பராமரிக்கப்படும் நிரந்தர நெருப்பு குண்டலத்தில்  (துனி) இருந்து சேகரிக்கப்பட்டு அளிக்கப்படும்  புனித சாம்பல் ‘உதி’  என்பது  ஆகும்.  ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் முன்பாக ஒரு புனித நெருப்பு எரிந்து கொண்டே இருக்குமாம். அதை அணைய விடாமல் விறகுக் கட்டைகளை அதில் அவர் போட்டபடியே இருப்பாராம்.

தன்னிடம் வருகை தரும் பக்தர்களின் துயரை தீர்க்க பாபா அந்த நெருப்பு  குண்டத்தில்  இருந்து வெளி வந்த  சாம்பலை எடுத்து   ‘உதி’ எனும் பெயரில்  தருவாராம். அதை தண்ணீரில் கலந்து குடிக்கும்போது அல்லது நெற்றியில் வீபூதியைப் போல பூசிக்  கொள்ளும்போது  உடல் உபாதைகளும் நீங்கின, மன அமைதியும் கிடைத்தன என்பதினால் ‘உதி’யை பெற்றுக் கொள்வதில்  பக்தர்கள் இடையே ஒரு பெரிய ஆர்வம் இருந்தது.

அதனால்தான் எந்த நிரந்தர நெருப்பு குண்டலத்தில்  (துனி) இருந்து பாபா   ‘உதி’ யை எடுத்துக் கொடுத்தாரோ அதே நெருப்புக் குண்டத்தில்  இருந்து   ‘உதி’ (சாம்பல்) எடுத்து வரப்பட்டு அனைவருக்கும் தரப்பட்டு வந்தது.   பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் தான் நிறுவிய சென்னை ஆலயத்திலும் அதே போன்ற துனி ஒன்றை நிறுவி, மூல ஷீரடி ஸ்ரீ சாயி ஆலயத்தில் இருந்து துனியின்  நெருப்பைக் (நெருப்புக் கட்டையை) கொண்டு வந்து, அணையா நெருப்புக் குண்டத்தை நிறுவி, அதன் மூலம் பாபாவின் ‘உதி’யை அனைவருக்கும் கிடைக்க வழி செய்ய ஆசைக்  கொண்டாராம். அப்படிப்பட்ட மகிமை வாய்ந்த துனி எனும் நெருப்பு குண்டத்தை ஷீரடி  சாயிபாபாவின் ஒவ்வொரு ஆலயத்திலும் வைக்க வேண்டும் என்பதாக பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் விரும்பினாராம்.

ஆனால் அவர் உயிருடன் இருந்த காலத்தில் அதை செய்ய இயலவில்லை என்றாலும் அவரது ஆசை அவர் மறைந்த பின்னரே நிறைவேறியது. அதன் பின்னர்தான் அனைத்து ஸ்ரீ சாயி ஆலயங்களிலும்  மூல ஷீரடி ஸ்ரீ சாயி ஆலயத்தில் இருந்து துனியின்  நெருப்பைக் (நெருப்புக் கட்டையை) கொண்டு வந்து அணையா நெருப்புக் குண்டத்தை அமைத்து ‘உதி’  பிரசாதம் தரப்படத் துவங்கின. அதில் இருந்து எடுக்கப்படும் சாம்பல்  ‘உதி’  என்ற பெயரில் வினியோகிக்கப் படுகின்றது. அந்த நெருப்பு குண்டத்திற்கான தீயை  ஷீரடி  ஸ்ரீ சாயிபாபாவின் ஆலயத்தின் நெருப்பு குண்டத்தில் இருந்தே கொண்டு வந்து  வைத்து அதன் மீதே துனியை அமைக்கிறார்கள். அதனால்தான் சாயியின் அனைத்து ஆலயத்திலும் உள்ள ‘உதி’ என்பது புனிதமானது.

‘உதி’ அல்லது அந்த  சாம்பல் என்பது  தூய்மையான பொருளாகும். அது  மகத்தான சக்திகளைக் கொண்டுள்ளது, ஒருவருக்கு ஏற்படும் தீய கர்மாக்களை அழிக்கின்றது என்பதான நம்பிக்கை உண்டு.  இந்த ‘உதி’ மிகவும் சக்தி வாய்ந்தது. எல்லா வித ஊழ் வினைகளையும், வியாதிகளையும்,  பாவங்களையும் போக்கவல்லது என்பதாக நம்பிக்கை உள்ளது.

ஷீரடி ஸ்ரீ சாயி பாபா காலத்தில் இருந்தே வினியோகிக்கப்பட்ட வந்த ‘உதி’யின் தத்துவம் மேலானது.  பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே  சாம்பலைப் போன்று நிலையற்றவை, அழிந்து போகும் தன்மைக் கொண்டவை. ஐம்புலன்களினால் ஆன நமது உடல் ஒரு மரக் கட்டையைப் போன்றது. அனைத்து இன்ப துன்பங்களை வாழ்க்கையில் அனுபவித்த பின்னர் அந்த ஜடமான உடல்  எவருக்கும் பயன்படாமல்  சாம்பலாகி விடுகின்றது என்பதை நினைவூட்டுவதற்காக, பாபா அவர்கள்  ‘உதி’யை  வினியோகித்தார் என்பதாக கூறப்பட்டது.

பிரம்மன் மட்டுமே உண்மை, பிரபஞ்சம் நிலையற்றது, இந்த உலகில் யாருமே யாருக்கும் சொந்தம் அல்ல, ஒவ்வொருவரும் (ஆத்மா)  தனியாக வருகிறோம்,  தனியாக வெளியே செல்ல வேண்டும். அப்படி செல்லும்போது மிஞ்சுவதே  சாம்பல் என்ற உன்னதமான வாழ்க்கையின் தத்துவத்தை வெளிப்படுத்துவதே ‘உதி’ ஆகும்.

ஸ்ரீ  சாயி பாபாவின் பளிங்குக் கல்சிலை வந்த வரலாறு

எதனால் அனைத்து ஸ்ரீ சாயி பாபாவின் ஆலயங்களிலும் உள்ள ஸ்ரீ சாயி பாபாவின் சிலை   பளிங்குக் கல்லினால் செய்யப்படுகின்றது என்பதற்கு காரணமாக ஒரு செய்தி உள்ளது.

துவக்க காலங்களில்  ஸ்ரீ சாயி பாபாவின் சமாதிக்கு முன்பு, அவரது பெரிய புகைப்படம் ஒன்றை வைத்து, ஆரத்தியுடன் நித்திய பூஜைகள், நடந்து வந்தன. அதே நிலைதான் ஷீரடி  ஸ்ரீ சாயி பாபாவின் துவக்க கால ஆலயத்திலும் இருந்ததாம். பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகள் கட்டிய  சென்னை  ஸ்ரீ சாயி  பாபாவின் ஆலயத்திலும்  அதே   நிலையே இருந்ததாம்.  விசேஷ நாட்களில் சிறப்பு பூஜைகளும்,  ஸ்ரீ சாயி பாபாவின் படத்தோடு ஊர்வலங்களும், அன்ன தானங்களும் விமரிசையாக நடந்துள்ளனவாம்.  அனைத்து  ஸ்ரீ சாயி பாபா ஆலயங்களிலும் பல வருடங்களாக ஸ்ரீ சாயி பாபாவின் புகைப்படத்தை வைத்துதான் பூஜை செய்து வந்தனர்.

அப்பொழுது ஒரு நாள் இத்தாலியில் இருந்து அருமையான, உயர்ந்த வகை வெள்ளை பளிங்குக் கல் ஒன்று பம்பாய் துறைமுகத்திற்கு இறக்குமதி ஆனது. அது அப்பொழுது எதற்கு வந்தது, என்று யாருக்கும் தெரியவில்லையாம். அதை இறக்குமதி செய்தவரும் அதை வாங்க வரவில்லை. உடனே துறைமுக அதிகாரிகள் அதனை ஏலத்தில் விட ஏற்பாடு செய்தனர். இந்த விஷயம், ஷீரடி ஸ்ரீ சாயி சமஸ்தான் அதிகாரிகளுக்குத் தெரிய வந்தது. உடனே   ஸ்ரீ சாயிபாபா சமஸ்தான் அதிகாரிகள் அந்த கல்லை ஏலத்தில் எடுத்து வந்து அதை பம்பாயில் உள்ள  பாலாஜி தலிம் என்னும் சிற்பியிடம் கொடுத்து ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சிலையை செய்யச் சொன்னார்களாம். சிலை செய்ய   தேவையான ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் தோற்றத்தைக் காட்டிய  கருப்பு வெள்ளை புகைப்படமே  கொடுக்கப்பட்டதாம்.  அந்த படம் ஷீரடி ஸ்ரீ சாயிபாபாவின் நேர் முக பாவனையில் இருந்தது. ஆனால் சரியான முகத்தோடு கூடிய சிலை வடிக்க வேண்டும் எனில் பக்கவாட்டு முக பாவனைப் படமும் அதி அவசிய தேவை ஆகும். ஆகவே நேர் முக பாவனைக்  காட்டிய அந்தப் புகைப்படம் தெளிவாக இல்லாததால் சிற்பி பாலாஜி தலிம் சிலை செய்ய மிகவும் சிரமப்பட்டாராம்.

பாலாஜி தலிம்

அப்பொழுது ஷீரடி ஸ்ரீ சாயிபாபா சிற்பியின் கனவில் தோன்றி தன்னுடைய முகத்தை பலவித கோணங்களில் காட்டி சிற்பியின் கஷ்டத்தைப் போக்க,   சிற்பி தெளிவு பெற்று ஸ்ரீ சாயிபாபா உயிருடன் இருந்தபோது  அமர்ந்து இருந்த அதே தோற்றத்திலான      சிலையை மிகவும் அழகாகச் செய்து கொடுத்தார்.

அந்த சிலை ஸ்ரீ  சாயி பாபா சமாதி அடைந்து  36 ஆண்டுகளுக்கு பின்னால்  1954-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், 7ஆம் தேதி, விஜயதசமி தினத்தன்று ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் சமாதிக்கு முன்னால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாம். அந்த சிலையே இன்றளவும் தினமும் பல லட்ஷக்கணக்கான பக்தர்களால் அன்புடனும், பக்தியுடனும் வழிபடபட்டு வருகின்றது. அது முதல் அனைத்து ஷீரடி ஸ்ரீ சாயி பாபா ஆலயங்களிலும் பளிங்குக்  கல்லில்தான்  ஷீரடி ஸ்ரீ சாயி பாபாவின் சிலை செய்யப்பட்டு வைக்கப்படுகின்றது.

பூஜ்யஸ்ரீ நரசிம்ம ஸ்வாமிகளின் வாழ்க்கை வரலாறு முடிவுற்றது