ஸ்ரீ சக்கரை அம்மா எனும்

ஸ்ரீ ஆனந்தம்மா

சாந்திப்பிரியா

இந்தியாவில் இரண்டு இடங்களில் பெரும்பாலான புகழ் பெற்ற சித்தர்கள் பலரும் சமாதி அடைந்து உள்ளார்கள். அந்த இடங்கள் சென்னை மற்றும் புதுச்சேரியாகும். அதன் காரணம் தெரியவில்லை. எங்கெல்லாமோ பிறந்த சித்தர்கள் பல இடங்களுக்கும் விஜயம் செய்து மகிமை பலவும் காட்டிய பின் சென்னை மற்றும் புதுச்சேரியில் வந்து தங்கி அங்கேயே சமாதி அடைந்து உள்ளார்கள். சித்தர்கள் என்றாலே ஆண் சித்தர்கள்தான் நினைவிற்கு வருவார்கள். ஆனால் ஆண் சித்தர்களை போலவே அரிய சக்தி பெற்ற சில பெண் சித்தர்களும் இருந்துள்ளார்கள். அவர்களில் ஒருவரே ஸ்ரீ சக்கரை அம்மா அவர்கள். இவரை பறவை சித்தர் என்றும் அழைத்திருக்கின்றார்களாம். இவர் சென்னையில் கலாஷேத்திரா மற்றும் பாம்பன் ஸ்வாமிகள் சமாதி ஆலயத்தின் இடைப் பகுதியில் சமாதி அடைந்துள்ளார். ஸ்ரீ சக்கரை அம்மா என அழைக்கப்பட்ட அந்த அன்னையாரின் இயற்கை பெயர் ஆனந்தம்மா என்பதாகும்.

அஷ்டமா சித்திகளில் மிக நுண்ணிய வடிவத்தை எடுக்கக்கூடிய சக்தி, உடலை லேசாக்கிக் கொள்வது, எடை அதிகமில்லாத, லேசான பொருட்களை கனமாக்குவது, செல்ல நினைக்கும் இடங்களுக்கு உடனே செல்ல முடிந்த சக்தி மற்றும் கூடுவிட்டு கூடு பாய்வது போல தனது ஆன்மாவை பிற உடம்பில் செலுத்தும் சக்தி போன்ற அனைத்து சக்திகளையும் இந்த அன்னையார் பெற்று இருந்தார் எனக் கூறுகின்றார்கள். அது மட்டும் அல்ல இவர் தனது இடுப்பில் நாகப்பாம்பு ஒன்றை கட்டி வைத்திருந்தார் என்றும் கூறுகின்றார்கள். இந்த ஸ்ரீ சக்கரை அம்மா யார்?

தெய்வீகப் பெண்மணியான ஸ்ரீ சக்கரை அம்மா அவர்கள் 1854 ஆம் ஆண்டில் வடஆற்காட்டில்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தேவிகாபுரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். பெரியநாயகி அம்மன் எனும் ஒரு ஆலயத்தில் அர்ச்சகராக இருந்த அவருடைய தந்தை சேஷ குருக்கள் மற்றும் அவர் மனைவி சுந்தராம்பாள் என்பவர்களுக்கு பிறந்த ஆனந்தம்மா இளம் வயதிலேயே வித்தியாசமான பெண்ணாக வளர்ந்தவர். அவர் ஆனந்தம் எனும் வருடத்தில் பிறந்ததினால் அவருடைய பெயரை ஆனந்தம்மா என வைத்தார்கள். இளம் வயதிலேயே தனது தந்தை மூலம் சிவஸ்துதிகளை கற்று அறிந்தார். அவருடைய வயதை ஒத்த சிறுவர்களும் சிறுமிகளும் விளையாடும்போதும் அவர் அவற்றில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி இருந்து கொண்டு, ஆலயத்துக்கு சென்று எந்நேரமும் சிவஸ்துதியை ஜபித்து வந்ததாக வாழ்க்கை வரலாறு தெரிவிக்கின்றது. அந்த அன்னையின் வீட்டின் அருகில் இருந்த ஆலயத்தில்தான் அவருடைய தந்தையும் பணி புரிந்து வந்தார். ஆகவே அவர் தனது தந்தையுடன் ஆலயத்துக்கு அடிக்கடி சென்று பல மணிநேரம் அமர்ந்திருந்து மூல தேவியை பார்த்தவாறு தியானத்தில் இருப்பாராம். இந்த அன்னையின் வாழ்க்கை வரலாறும், அவர் நிகழ்த்திய அற்புத மகிமைகளும் பின் நாளில் அவருடைய ஆத்மார்த்தமான சீடராக இருந்த திரு நஞ்சுண்ட ராவ் எனும் மருத்துவர் எழுதி வைத்துள்ள நாட்குறிப்பில் இருந்து தெரிய வந்ததாம்.

இப்படியாக இளம் வயதிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டவராக, சம்சார மற்றும் உலகப் பற்று இல்லாமல் வாழ்ந்து வருகையில் அந்த கால ஆச்சாரத்தின்படி அவருடைய ஒன்பது வயதிலேயே சிந்தாதிரிப்பேட்டையை சேர்ந்தவரும், அவருடைய தாயின் உறவினருமான திரு சாம்பசிவ சிவாச்சாரியார் என்பவருடன் திருமணமும் செய்து வைத்தார்கள். திரு சாம்பசிவ சிவாச்சாரியார் கோமளீஸ்வரன்பேட்டை மடம் என்பதில் சிவாச்சார்யராக இருந்தவராம். ஆனந்தம்மா மிகவும் இளம் வயதான நிலையில் இருந்ததினால் அவளது கணவர் விரும்பிய இல்லற சுகங்களை அவரால் கொடுக்க முடியவில்லை என்பதினால் அவளை தனது வீட்டில் பணிபுரியும் பெண்களை போல வைத்துக் கொண்டு பிற பெண்களை தேடி அலைந்து சுகம் கண்டு கொண்டு இருந்த அவருடைய கணவர் விரைவில் நோய் வாய்ப்பட்டு இறந்து போனார். அப்போது அந்த அன்னையாருக்கு வயது இருபது என்கின்றார்கள். ஏற்கெனவே திருமணமாகி மனைவியை இழந்து இருந்த கணவர் திரு சாம்பசிவ சிவாச்சாரியார் மறைந்து விட அந்த கால வழக்கப்படி விதவை எனக் கருதப்பட்ட அன்னையின் தலை முடியை மழுவி விட்டு பாட்டிமார் உடுத்தும் நிறத்திலான புடவைகளையே அணிய வைத்தார்கள். இது அந்த தெய்வீக அன்னைக்கு வசதியாகிவிட்டது. தன்னை முழுமையாக ஆன்மீகத்தில் இணைத்துக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொண்டார். வீட்டின் அருகில் இருந்த கோமளீஸ்வரர் எனும் சிவபெருமானின் ஆலயத்தில் சென்று அமர்ந்து கொண்டு மணிக் கணக்கில் தியானம் செய்து தனது காலத்தை ஓட்டினாள்.

இந்த நிலையில் கணவர் இறந்த  சில காலம் பொறுத்து போளூர் எனும் ஊரில் இருந்த தனது சகோதரர் வீட்டில் சென்று வசிக்கத் துவங்கியபோதுதான் அவரது வாழ்க்கையில் மாற்றம் நிகழத் துவங்கியது. அந்த ஊரில் நட்ஷத்திரக் குன்று என்ற சிறு மலை முகப்பு இருந்தது. அதன் மீது ஒரு ஆலயம். அந்த ஆலய மண்டபத்தில் தனிமையில் அமர்ந்தவாறு தியானத்தில் இருந்த குணாம்பா எனும் பெண் சன்யாசினியை அன்னை ஆனந்தம்மா சந்திக்க நேரிட்டது. இனம் தெரியாமல் அன்னை ஆனந்தம்மாவிற்கு அவர் மீது ஈடுபாடு ஏற்படவே சன்யாசினி குணாம்பாவையே தனது குருவாக ஏற்றுக் கொண்டு அடிக்கடி அவரை சந்திக்கலானார். சில காலத்திலேயே அவரிடம் இருந்து ஞான தீட்ஷை பெற்றார்.

சன்யாசினி குணாம்பா அவருக்கு மிகவும் ரஹஸ்யமான ஸ்ரீ சக்கர உபாசனை மந்திரத்தை உபதேசித்ததும் இல்லாமல் எங்கு இருந்தாலும் அவர் தன்னை வந்து சந்திக்கும் வகையில் உடலை லேசாக்கி பறவையைப் போல பறந்து செல்லும் லஹிமா எனும் மந்திர தீட்ஷையையும் கொடுத்தார். அதன் மூலம் அன்னை ஆனந்தம்மாவிற்கு எங்கு வேண்டுமானாலும் பறந்து செல்லும் சக்தி கிடைத்தது. சித்தர்கள் பலரும் ஆகாய மார்கமாக பறந்து செல்லும் வல்லமைக் கொண்ட சித்தியைக் கொண்டவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். பகவான் புத்தர் முதல் பல பௌத்த பிட்ஷுக்கள் புத்த கயா எனும் இடத்தில் இருந்து பறந்தே ஸ்ரீலங்கா எனும் அன்றைய லங்கைக்கு சென்று வந்தது சரித்திர பூர்வமான உண்மை. அதை போலவே போகரும், அகஸ்தியரும் கூட பறந்து சென்ற குறிப்புக்கள் உள்ளன. அந்த வகையில் அப்படி ஒரு சித்தியைப் பெற்று இருந்த ஒரே பெண்மணி அன்னை ஆனந்தா என்பதாக அறிகிறோம். இந்த அன்னை இப்படி ஒரு சக்தி பெற்றவராக இருந்ததை காணும் பாக்கியத்தைப் பெற்றவர்களில் திரு.வீ.கா என அழைக்கப்படும் திரு கல்யாண சுந்தர முதலியார் அவர்களே சாட்சி. அதற்கு ஆதாரமாக  இது குறித்து தமது நூலான ‘உள்ளொளி’ என்ற நூலில் குறிப்பிட்டு உள்ளாராம். ஒருமுறை அவர் இன்றைய புதுப்பேட்டை எனப்படும் இடத்தில் இருந்த வெஸ்லி காலேஜ் எனும் கல்வி நிலையத்தின் மாடியில் நின்று கொண்டு இருந்தபோது அந்த மொட்டை மாடியில்  ஆனந்தம்மா ஆகாய மார்கமாய் பறந்து வந்து அமர்ந்ததாக தனது உள்ளொளி எனும் புத்தகத்தில் எழுதி உள்ளார். அதைக் கேள்விப்பட்ட ஆராய்ச்சியாளர்களில் ஒருவரும் சென்னை மியூசியத்தில் தலமைப் பொறுப்பில் இருந்தவருமான ஐரோப்பியர் ஒருவர் அந்த அன்னைக்கு உடலளவில் பறவைகளின் பறக்கும் சக்தி இருந்ததாகவும், அவர் பறவை இனத்தை சார்ந்த உளவியல் அமைப்பையையும், தன்மையையும் கொண்டு இருந்ததாகவும் கூறினாராம்.

சன்யாசினி குணாம்பாவிடம் ஞான தீட்ஷை பெற்றுக் கொண்ட ஆனந்தம்மா, தனது வீட்டு மொட்டை மாடியில் தன்மையில் சென்று அமர்ந்து கொள்வதுண்டு. அப்படி அமர்ந்து இருக்கையில் பேரானந்த நிலையில் மூழ்கி போவார். அப்படி இருக்கையில் ஒருநாள் அவர் தன்னை நோக்கி பெரும் ஒளி வெள்ளம் வந்ததை போல உணர்ந்தாராம். அவ்வளவுதான் அடுத்து ஆனந்தம்மா, ஆனந்தமாக சிரிக்காத துவங்கினார். இப்படியாக அடிக்கடி தன்னை மறந்து மொட்டை மாடியில் அமர்ந்து கொண்டு பேய் போல சிரிப்பாராம். அதைக் கண்ட அவர் வீட்டினர் அவளுக்கு கணவர் மறைவினால் மனநோய் பிடித்துள்ளது என நினைத்து அவளை பொருட்படுத்தாமல் இருந்தார்களாம். இப்படியாக அவருடைய வாழ்க்கை ஓடிக் கொண்டு இருந்தபோது இன்னொரு முக்கிய நிகழ்வும் அவளது வாழ்க்கையில் நடந்தது. ஒருமுறை அவருடைய சகோதரர் நோயினால் பீடிக்கப்பட்டார். அவருக்கு வைத்தியம் பார்க்க அந்த காலத்தில் பிரபலமாக இருந்த ஆன்மீகவாதியும், மருத்துவருமான டாக்டர் எம்.சி. நஞ்சுண்டராவ் என்பவரை வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்கள்.

வீட்டுக்கு வந்தவர் வீட்டில் இருக்கையிலேயே மாடியில் ஆனந்தம்மா அட்டகாசமாக சிரித்துக் கொண்டு இருந்தார். அதைக் கேட்டு ஒரு கணம் திகைத்து நின்றவரிடம் அப்படி சிரித்துக் கொண்டு இருந்தவர் மன வியாதி பிடித்தவர் என அவர் வீட்டினர் கூறினாலும் அந்த மருத்துவர் மனதில் மட்டும் அது உண்மையாக இருக்காது எனும் ஒரு வித்தியாசமான உணர்வு தோன்றியது. அவளுடைய சிரிப்பு வெறும் சிரிப்பு அல்ல என்பதாக மனது கூறியது. அமைதியாகி விட்டார். இன்னும் சிலநாட்களில் ஆனந்தம்மாவை அதே சிரித்த கோலத்தில் கோமளீஸ்வரன் ஆலயத்திலும் அவர் சந்திக்க நேரிட்டது. சற்று நேரம் அதை கவனித்த மருத்துவர் நஞ்சுண்ட ராவ் அந்த அன்னையிடம் நேரடியாக சென்று அவர்கள் சிரிப்பதின் காரணம் என்ன எனக் கேட்டார். சிரிப்பதை சற்றே நிறுத்திய ஆனந்தம்மா ‘ஆன்மாவும் உடலும் வெவ்வெறானவை எனும் தத்துவத்தை கூறி, அவளது உடலுக்குள் உள்ள ஆன்மா பேரானந்த நிலையில் இருப்பதினால் அது ஆனந்தமாக உள்ள தனது நிலையை தன் உடல் மூலம் வெளிப்படுத்துகின்றது என்பதான அர்த்தத்தில் ஆன்மாவைக் குறித்து விளக்கினார். அப்போதுதான் அந்த பெண்மணி சாதாரணப் பெண்மணி அல்ல, அவள் தெய்வீக அன்னை என்பதை மனதார புரிந்து கொண்டு அவர் காலடியில் அப்படியே விழுந்து நமஸ்கரித்தார். அன்று முதல் அந்த ஆனந்தம்மாவையே தனது மானசீகமான குருவாக, தெய்வமாகவே ஏற்றுக் கொண்டார் நஞ்சுண்ட ராவ். அதுதான் தனது சகோதரர் வீட்டில் இருந்த ஆனந்தம்மா வாழ்வில் நடைபெற்ற இரண்டாம் முக்கிய திருப்பம்.

ஆன்மீகவாதியான திரு நஞ்சுண்டப்பாவிற்கு அந்த அன்னையின் தெய்வீக சக்தியை புரிந்து கொள்வதில் அதிக நாட்கள் தேவைப்படவில்லை. அவர் மனதில்  அன்னை ஒரு தெய்வீகப் பெண்மணியே என்பது ஆழமாக பதிய அது முதல் அவர் அந்த அன்னையின் பக்தரும், ஆத்மார்த்த சீடருமாகி விட்டார். ஆனந்தம்மாவைப் பார்த்த முதல் நாளிலேயே அவர் மீது தன்னை அறியாத ஒரு பிடிப்பு ஏற்பட்டதை உணர்ந்தார். அவர் மற்றவர்கள் கூறுவது போல பைத்தியம் அல்ல என்பதை முழுமையாக நம்பியவர், அவர் சிரிப்பதின் உண்மையான காரணம் என்ன என்பதை கண்டறிய முனைந்தார். பல ஆலயங்களுக்கும் தானே அந்த அன்னையை அழைத்துச் சென்றார். பின்னாளில் அவரே அந்த அன்னையின் புகழ் அனைவரிடமும் பரவக் காரணம் ஆகி இருந்தார். மெல்ல மெல்ல சிவபெருமானின் பூஜையோடு ஸ்ரீ சக்கர ஆராதனை சேர்ந்து செய்து வந்த ஆனந்தம்மாவின் பெயரும் ஸ்ரீ சக்கர அம்மா என அழைக்கப்பட அதுவும் பின் நாளில் ஸ்ரீ சக்கரையம்மா என மருவி விட்டது. ஒருமுறை ரமணா மகரிஷியை சந்தித்த அன்னை தன்னை ஆசிர்வதிக்குமாறு கேட்டுக் கொள்ள, அவரோ அந்த அன்னை ஏற்கனவே தெய்வத்தால் பரிபூரணமாக ஆசிர்வதிக்கப்பட்ட தெய்வ அன்னை எனக் கூறி விட்டாராம். ரமணா மகரிஷியை சந்திக்க ஆனந்தம்மா வானத்தில் பறந்தே சென்றார் என்றும் சில தகவல்கள் உண்டு. மெல்ல மெல்ல திரு நஞ்சுண்டராவைத் தவிர வேறு பலரும் அன்னையின் சீடர்களாகி இருந்தனர்.

ஆனந்தம்மாவை சந்தித்த பக்தர்கள் பலரும் பல மகிமைகளையும் அற்புதங்களையும் அந்த அன்னையிடம் கண்டு இருக்கின்றார்கள். ஆனந்தம்மாவைக் குறித்து விளம்பரப்படுத்தத் தேவை இன்றி, அவர் புகழ் பக்தர்களின் வாய்மொழி செய்திகள் மூலமே பல இடங்களிலும் பரவலாயின. இன்றும் அந்த அன்னையின் சமாதிக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் பெண் பக்தர்களாக உள்ளதைக் காணலாம். உலக இன்பங்களில், கோலாகலங்களில் அன்னைக்கு ஈடுபாடு இருந்ததில்லை. ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்தது இல்லை. மிகவும் எளிமையானவர். ஜாதி பேதம் கிடையாது. ஏழை மற்றும் பணக்காரர் என்ற பாகுபாடு இல்லாமல் அவரை யார் வேண்டுமானாலும் சென்று சந்திக்க முடியும். யாருடைய வீட்டுக்கும் சென்று அவர்களுடன் குடும்பத் தொடர்ப்பு வைத்திருக்கவில்லை. கேளிக்கை, விருந்து மற்றும் கோலாகலங்கள் என எதிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதான செய்திகளே கிடையாது. ஆன்மிகம், ஆன்மிகம் என முழுவதும் தெய்வீக எண்ணங்களுடன் மட்டுமே வாழ்ந்து வந்திருந்தார். தெய்வீக பிறவி என்ற பெயரால் உலக சுகபோகங்கள் அனைத்தையும் மற்றவர்கள் செல்வத்தில் அனுபவித்துக் கொண்டு, ஆசாபாசங்களுடன் ஆடம்பரமான வாழ்க்கை நடத்தி வருபவர்களை போல அல்லாது உண்மையான தெய்வமாக வாழ்ந்தவர் அன்னை ஆனந்தம்மா. பூமியிலே பிறந்திருந்த உண்மையான தெய்வங்களுக்கு இந்த குணங்கள் மட்டுமே அடையாளம் என்பதினால் அவரை பிரதிஷ்ட தெய்வம் என்றே  பக்தர்கள் கூறினார்கள். பல ஆன்மீகப் பெரியோர்களுடன் ஆன்மீகத் தொடர்ப்பில் அந்த அன்னை இருந்தார்கள். கௌதம முனிவரின் சீடரான அடிமுடி முனிவர் இவருக்கு முக்தியை அடையும் வழிமுறைகளை கற்றுக் கொடுத்தாராம்.

1899 ஆம் ஆண்டு இறுதியில் அல்லது 1900 ஆம் ஆண்டுவாக்கில் திரு நஞ்சுண்ட ராவ் அன்னை அவர்களை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் ஆலயத்திற்குச் அழைத்துச் சென்றார். திரும்பி வரும்போது சக்கரையம்மா அந்தப் பகுதியில் அமைந்த ஓர் இடத்தை நஞ்சுண்டராவிடம் காட்டி அந்த நிலத்தை வாங்கி விடுமாறும் தான் தனது பூத உடலைவிட்டு நீங்கியதும் தன் உடலை அங்கேயே அடக்கம் செய்ய வேண்டும் என்றும் அதன் பின் தான் அதே சமாதியில் என்றென்றும் இருந்து கொண்டு அனைவருக்கும் அருள் புரிந்து வருவேன் என்றும் உறுதி மொழி தந்து அந்த இடத்தை விலைக்கு வாங்கச் செய்தார். 1901 பிப்ரவரி 28 ஆம் நாள் ஸ்ரீ சக்கரையம்மா சமாதி அடைந்ததும் அந்த இடத்திலேயே அவரை அடக்கம் செய்து, அதை ஆலயமாக மாற்றி விட்டார்கள். அவர் சமாதிக்கு சென்று வழிபடும் பக்தர்களுக்கு அளவில்லா அருளாசிகளை வழங்கி வருகின்றார். அந்த ஆலயம் கலாட்சேத்திரா சாலையும் காமராஜர் சாலையும் சந்திக்கும் இடத்திற்கு அருகிலேயே அமைதியான சூழலில் காணப்படுகின்றது.

ஆலய விலாசம்

Sri Sakkarai Amma Temple
Late Dr. MCN Pvt Religious Trust
# 75 Kalkshetra Road Thiruvanmiyur Chennai 600 041 India
Tel: +91-44-2452 1236
Contact Person: Smt. Sumana Suresh
E-mail: trustee@srisakkaraiamma.com