தெய்வீக நாகமான ஆதிசேஷனே மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்தார் என்பது நம்பிக்கை. பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த  தெய்வீக நாகமான ஆதிசேஷன் பூமியிலே பகவான் சிவபெருமான் ஆட இருந்த நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்ததாராம். யோகக்கலையில் மகரிஷி பதஞ்சலிக்கு நிகர் எவரும்  இல்லை என்ற அளவில் அதில் நிபுணத்துவம் பெற்ற மகரிஷி, அதை அனைவரும் எளிய முறையில் புரிந்து கொண்டு கடைபிடிக்கும் வகையில் இருக்குமாறு யோகக் கலையை அமைத்து இருந்தார். அவர் வாழ்ந்த காலம் கி.மூ 500 முதல் கி. மூ 200 வரை இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். யோகக் கலையைத் தவிர சமிஸ்கிருத இலக்கணம் (ஆத்மா, உயிர்) மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கலையிலும் ஆய்வுக் கட்டுரைகளை தந்து இருக்கின்றார். அவர் பிறப்பு குறித்தோ அவருடைய பெற்றோர் குறித்தோ எந்த விவரமும் எவருக்கும் தெரியவில்லை. அவரைக் குறித்த அனைத்துமே வம்சவம்சமாக வாய் மொழி மூலம் பரவிய செய்திகளாகவே உள்ளது. அவர் வானத்தில் இருந்து ஒரு யோகினியின் கையில் குதித்து மனித உருவை அடைந்தார் என்பதாக ஒரு பழமைக் கதை உண்டு. ஆனால் அதே நேரத்தில் அவரைப் பற்றிக் கூறப்படும் பல செய்திகள் அனைத்துமே ஒன்றுடன் ஒன்று மாறுபட்டதாக உள்ளது.

பதஞ்சலி மகரிஷி பூமிக்கு மனித உருவில் வந்ததாகக் கூறப்படும் கதையில் ஒன்று   இது. ஒரு காலத்தில் பகவான் மஹாவிஷ்ணு கடலில் தெய்வ நாகமான ஆதிசேஷனின் உடம்பின் மீது படுத்தபடி உறங்கிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் உடல் அவ்வப்போது துள்ளிக் குதித்ததும் இல்லாமல் கனத்துக் கொண்டே போனது. பகவான் மஹாவிஷ்ணுவின் உடல் அப்படியும் இப்படியுமாக அசைந்து கொண்டே இருந்தது தெய்வ நாகமான ஆதிசேஷனுக்கு வேதனையை தந்தது. அவரால் சரிவர மூச்சு கூட விட முடியாமல் இருந்தது. உண்மையில் அப்படி பகவான் விஷ்ணு ஆடிக்  கொண்டே இருந்ததின் காரணம் அவர் சிவபெருமானின் அற்புதமான நடனத்தை மனக்கண்ணில் கண்டு களித்தபடி இருக்க அந்த நடனத்தின் அசைவுகளுக்கு ஏற்ப அவர் உடலும் அசைந்தது. அந்த ஆனந்தத்தில் அவரது உடலின் எடையும் கூடியது. அதை அறிந்திடாத தெய்வ நாகமான ஆதிசேஷனும் ‘சரி பகவான் விஷ்ணு கண் விழித்ததும் அவர் எடை எதனால் கூடிக்கொண்டே போயிற்று என்பதைக் கேட்கலாம்’ என எண்ணியபடி அமர்ந்து இருந்தது. பகவான் விஷ்ணு கண் விழித்ததும் அதை பற்றி அவரிடம் கேட்க, அவரும் சிவபெருமானின் அற்புதமான நடனத்தை விவரித்து அந்த ஆனந்தத்தைக் கண்டு களித்தபடி இருந்ததினால்தான் அப்படி நடந்தது எனக் கூற, அவர் கூறிய விவரங்களை கேட்ட தெய்வ நாகமான ஆதிசேஷனும் அந்த நடனத்தை தானும் கண்டு களிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டது. அதற்கான அருளும் ஆசியும் தனக்குத் தர வேண்டும் என தெய்வ நாகமான ஆதிசேஷனும் பகவான் விஷ்ணுவிடம் கேட்க அவரும் கூடிய விரைவில் பகவான் சிவபெருமான் பூமியில் சிதம்பரத்தில் நடனம் ஆட உள்ளதாகவும், அதைக் கண்டு கழித்திட அந்த தெய்வ நாகமான ஆதிசேஷனும் மனித உருவில் பூமியில் பிறக்கட்டும்  என அருள் புரிந்தார்.

தெய்வீக நாகமான ஆதிசேஷன் விஷ்ணுவை சுமந்தபடியே இருந்தாலும் தனது குறிக்கோளை அடைய தவம் செய்தவண்ணம் இருந்தது. அதே நேரத்தில் பூமியிலே இன்னொரு சம்பவம் நடந்து கொண்டு இருந்தது.  பூமியிலே வாழ்ந்து கொண்டிருந்த பெரும் ஞானம் மற்றும் விவேக நிலையை எட்டி இருந்த கோனிகா என்றொரு தபஸ்வினி இருந்தாள். அவள் அற்புதமான பல தெய்வீக அனுபவங்களைக் கொண்டவள்.  ஆன்மீகத்தில் உன்னதமான நிலையை அடைந்திருந்தவள். அவளுடைய காலம் முடியும் தருமணம் வந்து விட்டதை உணர்ந்தவள் தன்னுடைய அனைத்து  ஞானங்களையும் மனித மேம்பாட்டின் நன்மைக்காக பூமியில் எவருக்காவது  தந்துவிட்டு செல்ல நினைத்தாள். அதற்காக நதியில் நின்று கொண்டு தினமும் சூரிய பகவானை பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கையில், தான் பூமியிலே மனிதப் பிறவி எடுக்க அதுவே நல்ல தருமணம் என்பதை பகவான் விஷ்ணுவின் செய்கை மூலம் உணர்ந்து கொண்ட தெய்வீக நாகமான ஆதிசேஷன் அவளிடம் தஞ்சம் அடைய முடிவு செய்தார். அவள் மூலம் பூமியிலே மனித உருவெடுத்து பகவான் சிவபெருமானின் ஆனந்த நடனத்தைக் கண்டு களிக்கலாம் என எண்ணினார்.

நதியில் நின்று கொண்டு சூரியபகவானை தியானித்தபடி நின்று கொண்டு இருந்த யோகினி கோனிகாவின் நீட்டி இருந்த கரங்களில் ஒரு நாள் சிறிய பாம்பாக உருமாறி அமர்ந்து கொண்டார். தியானம் முடிந்து கண் விழித்த யோகினி தனது கையில் சிறு பாம்பு நெளிவதைக் கண்டு அதிசயித்தபடி இருக்கையில், அடுத்த வினாடி அது மனித உருவெடுத்தது. அவள் கால்களில் விழுந்து வணங்கி தன்னை அவளுடைய பிள்ளையாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. அவள் தபஸ்வினி என்பதினால் அனைத்தும் மனதில் புரிந்தது.  ஆகவே அவளும் அதைக் கண்டு மிரளவில்லை. தனது ஞானம் அனைத்தையும் அந்த மனித உருவில் இருந்த தெய்வீக நாகமான ஆதிசேஷனுக்கு அளித்துவிட்டு மறைந்து விட்டாள். அவள் பாதத்தில் விழுந்து வணங்கி அதாவது பாதத்தில் விழுந்து அஞ்சலி (கும்பிடுவது) செய்து ஞானத்தை அடைந்ததினால் அவருக்கு பாதாஞ்சலி எனப் பெயர் ஏற்பட அதுவே நாளடைவில் பதஞ்சலி என மருவியது. இன்னொரு கதையின்படி அந்த யோகினி தன்னிடம் வேண்டுகோள் விடுத்த தெய்வீக நாகமான ஆதிசேஷனை தனது சிஷ்யராக ஏற்றுக் கொண்டு ஞானத்தை தந்ததாக கூறுகின்றது

அதன் பிறகு அவர் அனைவராலும் மகரிஷி பதஞ்சலி என அழைக்கப்படலானார். அவர் அதே உருவில் சிதம்பரத்துக்குச் சென்று பகவான் சிவபெருமானின் தெய்வீக நடனத்தைக் கண்டு மனா மகிழ்ச்சி அடைந்தார். அவர் மனிதப் பிறவி எடுத்ததில் குறிக்கோள் நிறைவேறியதும் மீண்டும் மேல் உலகுக்கு சென்று பகவான் விஷ்ணுவின் படுக்கையாக மாற முடிவு செய்தார். ஆனால் அதற்கு முன் ஞானத்தின் மூலம் அவர் கற்றிருந்த யோகக் கலையை மக்களுடைய மேம்பாட்டுக்கு பயனளிக்கும் தன்னிடம் இருந்த யோக சூத்திரங்களைக் கற்றறிய குறைந்தது ஆயிரம் சீடர்கள் தாம் கூறும் இடத்துக்கு வந்தால் அதை அவர்களுக்கு கற்றுத் தருவதாக செய்தியை பரப்ப அவர் குறிப்பிட்ட விந்திய மலையின் அடிவாரத்தில் அவர் கூறியது போலவே ஆயிரம் சீடர்கள் வந்து அமர்ந்தார்கள்.

வந்தவர்களிடம் இன்னொரு நிபந்தனை விதித்தார். அதன்படி தாம் யோக சூத்திரத்தைக் கற்றுத் தரும்போது யாரும் எழுந்து செல்லக் கூடாது. தமக்கும் சீடர்களுக்கும் இடையே துணியாலான ஒரு தடுப்பு இருக்கும். அதன் பின்னால் அவர் அமர்ந்து இருந்தவாறு அனைவருக்கும் போதனை செய்வார். யாரும் திரையை விலக்கி அவரை காண முயற்சிக்கக்  கூடாது.  மீறினால் கடுமையான விளைவுகள் ஏற்படும். போதனை துவங்கியது. எந்த சப்தமும் எழவில்லை. ஆனால் சீடர்கள் மனதில் போதனைகள் அனைத்தும் ஊடுருவிச் சென்றது.

போதனை தொடர்ந்து கொண்டு இருக்கையில் ஒரு சீடருக்கு அவசரமாக இயற்கை உபாதை எழ, திரை இருக்கின்றதே, யாருக்கும் தெரியாமல் வெளியே சென்று விட்டு வந்து விடலாம் என எண்ணி எழுந்து சென்றார். இன்னொருவனோ திரைக்குப் பின்னால் குரு எப்படி அமர்ந்திருக்கிறார், என்னதான் நடக்கின்றது என்பதைக் காணலாம் என எண்ணிக் கொண்டு மெதுவாகச் சென்று திரையை விலக்க அடுத்த கணம் அதன் எதிரில் இருந்த அனைத்து சீடர்களும் பஸ்பமாகி விட்டார்கள்.

அதே சமயம் இயற்கை உபாதையை கழிக்கச் சென்ற சிஷ்யரும் திரும்பி வந்தார். அவராக கண்ட மகரிஷி பதாஞ்சலி கோபம் அடைந்தார். அவரை பிரும்ம ராக்ஷசனாக மாறி அங்கிருந்த மரத்தில் ஒட்டிக் கொண்டு இருக்குமாறு சாபம் இட்டார். உடனே அவனும் பிரும்ம ராக்ஷசனாகி மரத்தின் மீது ஒட்டிக் கொண்டான். மகரிஷி பதாஞ்சலி அதன் பின் மறைந்து விட்டார். அந்த ராக்ஷஸனும் பொழுதைக் கழிக்க தான் கற்ற கலையை அந்த மரத்தின் இலையில் எழுதி ஒவ்வொன்றாக    . அந்த மரத்தின் அடியில் அமர்ந்து இருந்த ஆடு ஒன்று அவன் போட்ட அத்தனை இலைகளையும் தின்று விட்டது.  இப்படியாக மகரிஷி பதஞ்சலி போதித்ததாக  கூறப்படும்  மூல போதனைகள் அடங்கிய சுவடிகள் யாருக்கும் கிடைக்காமல் போய்விட்டதாக அறிஞர்கள் கூறுகின்றார்கள்.

இந்தக் கதையில் பல மர்மங்கள் அடங்கி உள்ளன.

  • அந்த ஆடும் சீடர்களும் யார்?
  • தவறே செய்யாத அனைத்து சிஷ்யர்களும் ஏன் ஒட்டு மொத்தமாக எரிந்து போனார்கள்?
  • அதில் ஒருவர் மட்டும் ஏன் பிரும்ம ராக்ஷஸன் ஆனார்?
  • அந்த தடுப்பு துணி எதனால் போடப்பட்டது ?
  • கற்றதை மரத்தின் இலையில் எழுதுமாறு பிரும்ம ராக்ஷஸஷனுக்கு யார் கூறினார்கள்?
  • மகரிஷி பதஞ்சலி போதித்ததாக  கூறப்படும்  மூல போதனைகள் அடங்கிய, பிரும்ம ராக்ஷஸன் எழுதி  கீழே போட்ட அனைத்து இலைகளையும் அந்த ஆடு ஏன் தின்று  அழித்து விட்டது?
  • குருவால் எப்படி வார்த்தைகளை உச்சரிக்காமல் தனது போதனைகள் அனைத்தையும் (1000) சிஷ்யர்களுக்கு போதிக்க முடிந்தது?

இந்த மர்மங்களை தத்துவார்த்தமாக பல விதங்களிலும் அறிஞர்கள் விளக்கினாலும், அவை அனைத்தும் வெவேறான கருத்துக்களை கொண்டவர்களாகவே உள்ளன. எவரும் பொதுவான விளக்கத்தை அளிக்கவில்லை என்பதின் காரணம் எவருக்கும் உண்மையான காரணம் தெரியவில்லை என்பதேயாகும்.  இப்படியாக மகரிஷி பதஞ்சலியின் மறைவும்  வாழ்வும்   மர்மம் நிறைந்த ஒன்றாகி விட்டது.