அக்கல்கோட் ஸ்ரீ ஸமர்த்த
மகராஜ் ஸ்வாமிகள்
-சாந்திப்பிரியா-
உலகத்தில் எப்போதெல்லாம் பாபச் செயல்கள் தலை தூக்கி நிற்குமோ அப்பொழுதெல்லாம் கடவுள் பல ரூபங்களிலும் தோன்றி அதர்மங்களை அழிக்கின்றார், மக்களை காப்பாற்றுகின்றார் என்பது சத்திய வாக்கு. இப்படிப்பட்ட அவதாரங்களில் ஒன்றே ஸ்ரீ தத்தாத்திரேயர் எடுத்த ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகள் அவதாரம் ஆகும்.
அக்கல்கோட் ஸ்வாமிகளின் பிறப்பு பற்றிய முழு விவரமும் தெரியவில்லை. ஆனால் அவர் 1275 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடக மாநிலத்தில் கரஞ்சா நகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மாதவா-அம்பாவாணி என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தார் என்பதாக தெரிகின்றது. அந்த பிராமணத் தம்பதியினர் கடவுள் பக்தி மிகுந்தவர்கள். பிறந்த குழந்தை சில நாட்களிலேயே வாய் ஓயாமல் ஓம் , ஓம் என உச்சரித்தவண்ணம் இருந்ததாம்.
இன்னொரு செய்தியின்படி 875 ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகள் உத்தரப் பிரதேசத்தின் சிலேக்ஹெடா எனும் கிராமத்தில் எட்டு வயதான சிறுவனாக இருக்கும்போது அவரை அங்குள்ள மக்கள் பார்த்ததான கதையும் உள்ளது. ஆனால் அவர் பிரபலமானது மகாராஷ்டிராவில் உள்ள அக்கல்கோட் எனும் கிராமத்தில்தான்.வயதாக வயதாக அவரது குணமே மற்றவர்களிடம் இருந்து மாறுபட்டு இருந்ததாம். மற்ற சிறுவர்களின் நடத்தையும் இந்தக் குழந்தையின் நடத்தையும் முற்றிலும் மாறுபட்டு இருந்தது. உனக்கு எந்த ஊர் என அவரைக் கேட்டால் தத்த நகரம் என்பாராம். அதாவது மறைமுகமாக தான் ஸ்ரீ தத்தாத்திரேயரின் அவதாரம் என்பதை அப்படிக் கூறி வந்துள்ளார்.
நாட்கள் செல்லச் செல்ல குழந்தை பக்தி மார்கத்தில் செல்லத் துவங்கியது. அதைக் கண்ட அவருடைய பெற்றோர்கள் அந்த சிறுவனை ஸ்ரீ கிருஷ்ண சரஸ்வதி என்ற மகானிடம் அழைத்துச் சென்றார்கள். அவரரும் அந்த சிறுவன் சன்யாச மார்கத்தில்தான் செல்ல வேண்டியவன் என்பதை புரிந்து கொண்டதினால் அந்த சிறுவனுக்கு ஸ்ரீமத் நரசிம்ம சரஸ்வதி என்ற பெயரை சூட்டி அவருக்கு தீஷையும் அளித்தார். நாளடைவில் ஸ்ரீமத் நரசிம்ம சரஸ்வதி பெரும் புகழ் பெற்றவராக மாறிக் கொண்டு இருந்தார். அவரை சுற்றி ஒரு பக்தர் கூட்டம் தோன்றியது. மெல்ல மெல்ல அவர் தானே ஸ்ரீ தத்தாத்ரேயரின் அவதார புருடர் என்பதை பலருக்கும் பல விதங்களிலும் புரிய வைக்க துவங்கினார். அதனால் மக்கள் அவரை ஸ்ரீ தத்தரின் அவதாரமாகவே நாளடைவில் ஏற்றுக் கொண்டார்கள். அவர் செய்து காட்டிய அற்புதங்கள் அனைவரையும் வியப்பளிக்க வைக்கும் விதத்தில் அமைந்து இருந்தது. மெல்ல மெல்ல அவர் புகழ் அனைத்து இடங்களிலும் பரவியது.
அப்படி வாழ்ந்து கொண்டு இருந்தபோது ஒரு நாள் அவர் தனது நான்கு சீடர்களுடன் படல்கோட் எனும் நதிக் கரைக்குச் சென்றார். தன்னுடைய பாதுகைகளை தனது சீடர்களிடம் தந்து விட்டு, மல்லிகை மலர்களினால் ஆன படகு ஒன்றை தயாரிக்கச் சொன்னார். அதாவது மல்லி மலர்களை தொடுக்கச் சொல்லி அதை ஒரு பெரிய தட்டுப் போல ஒன்றாக்கினார். அதை அதை அந்த நதியில் வைத்து விட்டு அதன் மீது அமர்ந்து கொண்டார். எதிர் சூழல் இருந்த பகுதியில் அதை செலுத்தினார். அனைவரும் வியந்து நின்றார்கள். மல்லிகை மலரினால் வேயப்பட்ட தட்டுப் போன்ற பூ மாலை மீது அவர் அமர்ந்தும் அது நதியில் முழுகாமல் படகு போல செல்கிறதே என வியந்தார்கள். அனைவரும் பார்த்துக் கொண்டே இருக்கையில் அவர் மறைந்தே போனார். இனி அவர் எப்போது வருவார்? வருவாரா என்பதே தெரியவில்லையே என அனைவரும் குழம்பினார்கள்.
நீரிலே மிதந்து சென்ற மல்லிகை பூவின் படகு கர்டாலி என்ற இடத்தின் வனப் பகுதியை அடைந்தது. அந்த வனப் பகுதியில் இறங்கியவர் அந்த அடைந்த காட்டுக்குள்ளே சென்றார். அங்கு சுமார் 150 வருட காலம் தவத்தில் அமர்ந்து இருந்தார். அந்த தவத்தை முடித்துக் கொண்ட அவர் வனத்தில் இருந்து வெளி வந்து அங்கிருந்தே வெளி நாடுகளுக்குச் செல்லத் துவங்கினார். இந்திய எல்லையில் இருந்த சீனாவில் நுழைந்தவர் ஜப்பான் ஆஸ்திரேலியா, ஜாவா, சுமத்ரா போன்ற நாடுகளுக்கு எல்லாம் ஆன்மீகப் பயணத்தை மேற்கொண்டார். அந்தப் பயணத்தை முடித்துக் கொண்டவர் மீண்டும் இமய மலை வழியே இந்தியாவுக்குள் வந்தார். அங்கு இமயமலை அடிவாரத்தில் இருந்த வனத்தில் இருந்த ஆதிவாசிகளுடன் தங்கினார்
(சிறு குறிப்பு: –
ஸ்வாமிகளின் வாழ்கை வரலாற்றைப் பற்றிக் கேட்ட பலரும் எழுப்பிய ஒரு கேள்வி இது. ” எவரும் அவருடன் செல்லாமல் தனியே வனத்துக்கு சென்ற ஸ்வாமிகள் 150 வருட காலம் வனத்தில் தவம் இருந்ததாகவும் இமய மலை அடிவாரத்தில் 300 ஆண்டுகள் தவம் இருந்ததாகவும் அவர் புரிந்து உள்ள மகிமைகளையும் பற்றிக் கூறப்படுவதை எப்படி நம்புவது ?”
இது நியாயமான கேள்விதான். இதற்கு பதில் தந்தனராம் ஸ்வாமிகளின் வரலாற்றை ஆராய்ந்தவர்கள். அவர்கள் கூறியது இதுதான்:- ” ஸ்வாமிகள் மல்லிகைப் பூ மலர் படகில் தனிமையில் சென்றபோது அவர் வனப் பகுதியில் இருந்த கரையில் இறங்கினார். அதைப் பார்த்த அங்கிருந்த வன வாசிகள் அதிசயித்தார்கள். மல்லிகைப் பூ மலர் படுக்கையில் நதியில் மிதந்து வந்தவரை மாபெரும் மகான் என்றே நம்பியவர்கள் அவருக்கு தேவையான உதவிகளை செய்தார்கள். அவர் வனத்தில் தவம் இருந்தபோது அவரை பாதுகாத்து வந்தவர்களும் அவர்களே. அவர்களே ஸ்வாமிகள் அங்கிருந்தபோது அவர் வாழ்கை பற்றிய தகவலை மற்றவர்களுக்கு தெரியப்படுத்தத் துவங்க ஸ்வாமிகளைப் பற்றிய செய்தி மெல்ல மெல்ல அனைத்து இடங்களுக்கும் பரவியது.
எந்த ஒரு மகான்களுடனும் அவர்கள் சமாதி நிலை அடையும்வரை அவர்களோடு வாழ்ந்து கொண்டு இருந்தவார்கள் இன்னார், இன்னார் எனக் கூற முடியாத நிலை உள்ளது. அது சாத்தியமும் இல்லை. காரணம் மகான்கள் பல இடங்களுக்கும் சுற்றித் திரிந்து கொண்டே கிடைத்ததை உண்டு வாழ்ந்தவர்கள். ஆகவே அனைத்து மகான்களும், அவரவர்கள் வாழ்ந்த இடங்களில் அவரை வணங்கித் துதித்தவர்கள் கொடுத்த செய்திகளைக் கொண்டே, அந்தந்த மகான்களின் வாழ்கை வரலாறுகள் எழுதப்பட்டு உள்ளன. மேலும் பெரும்பாலான மகான்களைப் பற்றிய செய்திகள் வாய் வழிச் செய்திகளாகவே வந்துள்ளன. அந்த செய்திகளின் நம்பகத் தன்மைகள் அவர்கள் வாழ்ந்திருந்த இடங்களை சென்றடைந்து ஆராயந்து பார்த்தே வரலாற்று வடிவம் பெற்றுள்ளன . மேலும் எந்த ஒரு மகானைப் பற்றிய வரலாறுமே ஒருவரால் மட்டுமே எழுதப்பட்டவை அல்ல. பலரும் பல விதங்களில் எழுதி உள்ளார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் அவர்களைப் பற்றிய செய்திகளை பல இடங்களிலும் கேட்டறிந்தே எழுதுகிறார்கள். அதுவே பின்னர் யாரேனும் ஒருவரால் ஒரே வரலாறாக தொகுக்கப்படுகின்றது. ஆகவே அவை நம்பத் தகுந்தவைகளே. அதுவே இந்த ஸ்வாமிகளுக்கும் பொருந்தும் ).
வனவாசம் முடிந்து, வெளிநாடுகளுக்கு சென்று விட்டுத் திரும்பிய ஸ்வாமிகள் இமய மலைக்கு அடிவாரத்தில் வந்து அங்கு இருந்த ஆதிவாசிகளுடன் தங்கி இருந்தார். அவருக்கு தவத்தின் தாகம் குறையவில்லை. ஆடைகளை துறந்தார். கோவணத்துடன் சுற்றித் திரிந்தார். மக்களின் நல் வாழ்க்கைக்காக தாம் இன்னும் பல காரியங்களை செய்ய வேண்டும். தான் ஒரு அவதாரப் புருடர் என்பதை உலகம் உணர வேண்டும். தனக்கு தவ வலிமை அதிகரிக்க வேண்டும். இதை எல்லாம் எண்ணிய அவர் மீண்டும் இமய மலை அடிவாரத்திலேயே சென்று அமர்ந்து தவம் இருக்க முடிவு செய்தார். ‘பைன்’ (Pine) எனும் மர வகையை சேர்ந்த ‘டியோடனர்’ என்ற ஒரு மரத்தின் அடியில் சென்று அமர்ந்தார். அப்படியே தவத்தில் ஆழ்ந்துவிட்டார்.
250 ஆண்டுகளுக்கு மேல் ஆயின. அமர்ந்த இடத்தை விட்டு நகரவில்லை. அவரை சுற்றி கரையான் புற்று எழுந்து அவரை முற்றிலுமாக மூடிவிட்டது. ஆனாலும் அவரை காப்பாற்றவோ அல்லது கரையான் புற்றைக் கலைக்கவோ எவருக்கும் தைரியம் வரவில்லை. காரணம் அவர் மாபெரும் மகான். அவரால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முடியும் என்றே நம்பினார்கள். அதே நேரத்தில் ஸ்வாமிகளும் தனது தவத்தைக் கலைத்துக் கொள்ளவில்லை.
காலம் ஓடியது. அவர் தவம் கலைக்கப்பட வேண்டிய காலம் வந்தது. ஆகவே அனைத்து முன் ஏற்பாடுகளும் முன்னரே செய்து வைத்து இருந்தது போல ஒரு நாள் ஒரு மரம் கொத்திப் பறவை அந்த புற்றின் மீது வந்து அமர்ந்தது. அந்த புற்றை மோதி கலைத்து விட்டு பறந்து விட்டது. புற்று கலைந்ததும் அதை எதிர்பார்த்து அமர்ந்தது போல இருந்த ஸ்வாமிகள் கண் விழித்தார். புற்றை விட்டு எதுவுமே நடக்காதது போல வெளியில் வந்தார். அனைவருக்கும் ஆச்சர்யம் என்ன என்றால் 250 வருடங்களுக்கும் மேலாக அந்த இடத்தில் புற்றில் தவம் இருக்க வெயிலும் மழையும் சூறாவளியும் கூட அந்த கரையான் புற்றை கலைக்கவில்லையே!?!?. அங்கிருந்த ஒவ்வொரு குடும்பத்தினரின் வம்சாவளியினருக்கும் அந்த புற்றில் உள்ளது என்ன என்பதை அவரவர் குடும்பத்தினர் தொடர்ந்து கூறி வந்து கொண்டே இருந்ததினால் ஸ்வாமிகள் வெளி வந்ததும் அங்கிருந்த வனவாசிகள் அவரை அடையாளம் கண்டு கொண்டு அவரை வணங்கித் துதித்தார்கள். ஸ்வாமிகள் புற்றை விட்டு வெளி வந்தபோதும் அவர் தினமும் குளித்துவிட்டு எப்படி சுத்தமாக இருப்பாரோ அப்படியே ஜொலித்தார்.
புற்றில் இருந்து வெளியே வந்தவர் மீண்டும் ஒரு யாத்திரையை மேற்கொண்டார். நெற்றியில் நாமம். கழுத்தில் ஒரு மாலை. இடுப்புக்கு கீழே கோமணம். சில நேரங்களில் அதுவும் கிடையாது. நிர்வாணம் என்பது நமக்குத்தானே ஒழிய மகான்களுக்கு அல்ல. அவர்கள் மனம் நிர்வாணம் ஆகி விட்டால் அவர்கள் சுமக்கும் உடலுக்கு ஏது மரியாதை? அவரை அனைவருமே திகம்பர சாமியார் என அழைக்கத் துவங்கினார்கள். சிலர் அவரை சன்ச்சல் பாரதி எனவும் அழைத்தார்கள். ஸ்வாமிகளின் புகழ் திக்கெட்டும் பரவியது. அவரை சுற்றி கூட்டம் அலை மோதத் துவங்கியது. சென்ற இடங்கள் எல்லாம் அவர் செய்து காட்டிய அற்புதங்களை மக்கள் பேசத் துவங்கினார்கள். அவரது தெய்வீக லீலை அனைவரையும் பரவசத்துக்கு உள்ளாக்கியது.
ஸ்வாமிகளின் பயணம் தொடர்ந்தது. பாதையும் நீண்டு கொண்டே போயிற்று. இந்த நெடிய பயணத்தின் போது ஸ்வாமிகள் மும்பை நகரை அடைந்தார். அங்கு பன்னிரண்டு வருட காலம் தங்கி இருந்தவாறு தன்னிடம் வந்து ஆசி கேட்ட மக்களுக்கு அருள் மழை பொழிந்தார். மும்பையில் இருந்து ரஜோரி , மகிரி, மகோல் மற்றும் ஷோலாபூர் போன்ற இடங்களுக்கும் சென்றார்.
பெரும்பாலும் தனியாகவே அங்கும் இங்கும் சுற்றித் திரிந்த ஸ்வாமிகள் ஷோலாபூரை வந்து அடைந்ததும் அங்கு இருந்த ஸ்ரீ தத்தாத்ரேயர் ஆலயத்துக்கு சென்றார். அங்கு சென்றவர் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டார். அப்போது பூஜை முடிந்து மகா பிரசாத விநியோகம் நடந்து கொண்டு இருந்தது. கோவணத்துடன் முன் வரிசையில் சென்று அமர்ந்த ஸ்வாமிகளை அங்கு அமர்ந்து இருந்த பக்தர்கள் கேவலமாக பார்த்தார்கள். முணுமுணுத்தார்கள். அதை அங்கிருந்த ஆலய பூசாரி பார்த்தார். ஒரு கோவணாண்டி அசிங்கமாக இங்கு வந்து அமர்ந்து கொண்டு உள்ளாரே என கோபமாக அவரிடம் சென்று அவரை அங்கிருந்து எழுந்து போய் கடைசியில் அமருமாறு கடிந்து கொண்டார்.
அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாத ஸ்வாமிகள் அங்கிருந்து எழுந்தார், அந்த ஆலயத்துக்கு பக்கத்தில் இருந்த மடத்திற்கு சென்று அங்கிருந்த ஒரு தூணின் அருகில் அமர்ந்து கொண்டு அங்கேயே விளையாடத் துவங்கினார். அப்போது அங்கு ஒரு பெண்மணி வந்தாள். தூணின் அருகில் விளையாடிக்கொண்டு இருந்த ஸ்வாமிகளை பார்த்தவள் திக்கிட்டு நின்றாள். சாத்ஷாத் ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வாமிகள் அங்கே காட்சி தந்தவண்ணம் நின்று கொண்டு இருந்தார். ஸ்ரீ தத்தாத்ரேய ஸ்வாமிகளை கண்ட அந்தப் பெண்மணி ” ஸ்ரீ தத்தாத்ரேயா…….ஸ்ரீ தத்த பகவானே………ஆனந்த தரிசனம் தந்தாயே………..எனக்கு இதை விட என்ன பேறு வேண்டும்……..ஓ ……….ஸ்ரீ தத்தாத்ரேயா..” எனக் கத்திக் கொண்டே அங்கேயே சாஷ்டாங்கமாக அவர் காலில் விழுந்து வணங்கினாள். ஆவலுடன் ஓடிச் சென்று பக்கத்தில் இருந்த ஆலயத்தில் அனைவரிடமும் தான் கண்ட தெய்வீக காட்சியைக் கூறி குதூகலித்தாள். அதைக் கேட்ட அனைவரும் அங்கு ஓடோடி வந்தார்கள். அங்கிருந்த ஸ்வாமிகளின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பண்டிதரும் தான் அவரிடம் நடந்து கொண்ட முறைகேட்டிற்கு மன்னிப்புக் கேட்டார். புன்முறுவலித்த ஸ்வாமிகள் அனைவரையும் ஆசிர்வதித்தார்.
‘அனந்த பாரதி’ என்பவர் மீன் பிடிக்கும் தொழிலாளி. மகாராஷ்டிராவின் சாஷ்டி என்ற பகுதியில் இருந்தவர். ஸ்வாமிகளின் பரம பக்தர். தினமும் அவர் கடலில் சென்று மீன் பிடித்து வருவார். ஒரு நாள் மழைக் காலம். கடல் கொந்தளித்துக் கொண்டு இருந்தது. ஆனாலும் கடலில் சென்று மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டு வந்தார்கள். அதுவே அவர்களின் ஜீவனம். ‘அனந்த பாரதியும்’ அவர்களில் ஒருவன். மீன் பிடித்துக் கொண்டு திரும்பி வந்து கொண்டு இருந்தவனின் படகு திடீரென கடல் கொந்தளிப்பினால் கடலில் கவிழ்ந்தது. ”ஸ்வாமி என்னைக் காப்பாற்று” என அலறினான்.
அந்த நேரத்தில் அக்கல்கோட்டில் ஸ்வாமிகள் ஆலயத்தில் பக்தர்கள்களுக்கு அருள் உரை ஆற்றிக் கொண்டு இருந்தார். திடீரென அவர் தன்னுடைய இரண்டு கைகளையும் மேலே தூக்கி எதோ ஒரு கனத்த பொருளை கையில் வைத்துக் கொண்டு இருந்தது போல முனகிக் கொண்டே இருந்தவாறு காட்சி அளித்தார். அவர் உடல் முழுவதும் நனைந்து இருந்தன. அவர் அருகில் இருந்தவர்கள் காரணம் புரியாமல் திகைத்தார்கள். ஸ்வாமிகளுக்கு என்ன ஆயிற்று ? ஏன் அவர் உடல் முழுவதும் நீரில் மூழ்கி எழுந்தது போல உள்ளது?? ஸ்வாமிகள் மெல்ல மெல்ல அமைதியானார். தன் உடலை துடைத்துக் கொண்டவரின் ஆன்மீக உரை தொடர்ந்தது.
அதே நேரத்தில் முழுகிக் கொண்டு இருந்த படகை பிடித்தவாறு கத்திக் கொண்டு இருந்த ‘அனந்த பாரதி’ ஷணப் பொழுதில் தன்னை ஸ்வாமிகள் வந்து படகுடன் தூக்கி நின்று உள்ளதைக் கண்டான். கடல் கொந்தளிப்பு நிற்கும் வரை ஸ்வாமிகள் படகுடன் அவனை தன் கையால் கடலுக்கு மேலே தூக்கிப் பிடித்தபடி கடல் மீது நின்று கொண்டு இருந்தார். கடல் கொந்தளிப்பு நின்றதும் ஸ்வாமிகள் மறைந்து விட்டார். படகை கரைக்கு ஓட்டி வந்தவன் நேராக ஸ்வாமிகளிடம் ஓடினான். அவர் கால்களில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதான். அங்கு கூடி இருந்த ஜனங்களிடம் ஸ்வாமிகளின் அற்புதம் குறித்துக் கூறியபோதுதான் அவர்கள் முதல் நாள் ஆன்மீக உரையின் போது நடந்ததை நினைத்து வியந்தார்கள்.
இன்னொரு சம்பவம். ராம்பூரை சேர்ந்தவர் ‘ராவாஜி’ என்பவர். அவரும் ஸ்வாமிகளின் பக்தர்தான். ஒரு முறை ஸ்வாமிகள் தனது ஊருக்கு வருவதை கொண்டாட எண்ணி அதை குறிக்கும் வகையில் சுமார் ஐம்பது பேர் உணவருந்தும் வகையில் உணவு படைத்து வைத்து அவரை வரவேற்றார். ஸ்வாமிகள் அங்கு வருகை தர இருப்பதைக் கேள்விப்பட்ட அந்த கிராமத்தினர் அனைவரும் ‘ராவாஜி’ வீட்டிற்கு அவர் அழைக்காமலேயே வந்து விட்டார்கள். அங்கு வந்தவர்கள் ஸ்வாமிகளை தரிசித்தார்கள். வந்தவர்கள் அனைவரையும் ஸ்வாமிகள் மதியம் உணவு அருந்திவிட்டுப் போகுமாறு கூறிவிட்டார். ‘ராவாஜி’ கதி கலங்கி நின்றார். ஆயிரக்கணக்கானவர்கள் மத்திய உணவு அருந்த வேண்டும். சமைத்து வைத்து உள்ள உணவோ அதிகபட்சமாக அறுபது பேர்களுக்கு மேல் போதாது…….. . என்ன செய்வது….நிலைமையை எப்படி சமாளிப்பது ?
தயங்கியபடியே ஸ்வாமிகளிடம் சென்று அனைவருக்கும் உணவு தர இயலாத நிலைமையைக் கூறி தன்னை மன்னிக்குமாறு கேட்டார். ஸ்வாமிகள் சிரித்தபடிக் கூறினார் ‘கவலைப்படாதே. ஒரு பெரிய காலி அண்டாவைக் கொண்டு வா’ என்றார். அவரும் ஒரு பெரிய காலி அண்டாவைக் கொண்டு வந்ததும் அண்டாவிற்குள் அன்னபூரணி, கண்டோபா (சிவன் ) போன்றவர்களின் சிறு விக்கிரங்களைப் போட்டு அதற்கு மேல் சிறிது ரொட்டி மற்றும் அன்னைத்தையும் போட்டு மூடி அதை ‘ராவாஜி’யிடம் தந்தார். ‘இதை எடுத்துக் கொண்டு போய் அதோ தெரிகின்றதே அந்த துளசி மாடத்தை மூன்று முறை சுற்றி விட்டு அங்கேயே அண்டாவை வைத்துக் கொண்டு வந்திருக்கும் அனைவரையும் வரிசையாக உட்கார வைத்து அதில் இருந்து உணவை எடுத்து வழங்கு’ எனக் கூறினார்.
‘ராவாஜிக்கு’ ஒன்றுமே தோன்றவில்லை. அந்த அண்டாவில் அதிகபட்சமாக இருபது பேருக்கே உணவு சமைக்க முடியும். ரொட்டியை எதில் சுடுவது? சரி நடப்பது நடக்கட்டும். ஸ்வாமிகள்தான் இங்கு இருக்கின்றாரே என்ற தைரியத்தில் அந்த அண்டாவை தனது தலை மீது வைத்துக் கொண்டு துளசி மாடத்தை மூன்று முறை சுற்றி வந்ததும் அதைக் கீழே வைத்தார். பாத்திரம் கனத்தது. அதற்குள் வந்திருந்த அனைவரும் வரிசையாக உட்கார்ந்து கொண்டார்கள். ஒருவர் பின் ஒருவருக்காக வரிசையில் வந்தவர்களது தட்டில் உணவை போடப் போட அந்த அண்டாவிற்குள் இருந்து ரொட்டியும் வந்தது, உணவும் வந்தது. அந்த அண்டாவில் இருந்த உணவோ வற்றவே இல்லை. கண்களில் ஆனந்தக் கண்ணீர் ஓட, ஓட அனைவருக்கும் தொடர்ந்து உணவை அவர்கள் போதும் போதும் என்ற அளவிற்குப் போட்டார். ஆயிரக்கணக்கானவர்கள் உணவை அருந்தி விட்டுச் சென்றார்கள். ஐம்பது பேர்களுக்கு மட்டுமே செய்யப்பட்ட உணவை ஆயிரம் பேர்களுக்கு மேல் சாப்பிட்டார்கள் என்றால் அந்த அதிசயத்தை எப்படி சொல்வது ? ஸ்வாமிகளின் மகிமையை எப்படி விவரிப்பது? ‘ ராவாஜி’ தம்பதியினர் ஸ்வாமிகளை வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள்.
1872 ஆம் ஆண்டு. பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சிம்ஹஸ்தா என்ற கும்ப மேளா விழாவிற்காக ஸ்வாமிகளின் பக்தரும், அந்த ஊரில் பிரபலமானவருமான ‘வாமன் புவா படேகர்’ என்பவர் நாசிக்கின் த்ரியம்பகேஸ்வரரில் இருந்த ஜகதாம்பா தேவியின் ஆலயத்திற்கு சென்று பூஜை புனஸ்காரங்களை செய்தார். அவர் தன்னுடன் பாண்டுரங்க பகவானின் சிலையையும் பூஜைக்காக எடுத்துச் சென்றார். அந்த ஆலய பண்டிதருக்கு எப்போதுமே ஸ்ரீ அக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகளை காரணம் இல்லாமல் ஏளனம் செய்வதில் அலாதி இன்பம் உண்டு. பூஜை முடிந்ததும் ‘வாமன் புவா படேகர்’ அந்த பூசாரியிடம் ஜகதாம்பா தேவியின் மீது இருந்த வெற்றிலை மாலையை தனக்கு பிரசாதமாக தர முடியுமா எனக் கேட்டார். அதுதானே நல்ல சந்தர்ப்பம் என்பதை கண்டு கொண்ட பூசாரி ஒரு ஏளனப் புன்னகை புரிந்தவாறு அவரிடம் கூறினார் ‘ ஐயா, நீங்கள் போற்றித் துதிக்கின்றீர்களே, அந்த ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகள் உண்மையில் தெய்வப் பிறவி என்றால் இந்த ஜகதாம்பா தனது கழுத்தில் உள்ள வெற்றிலை மாலையை உங்களிடம் தூக்கி எறியட்டுமே” என்றார். கூடி இருந்த அனைவரும் கொல் என சிரித்தார்கள். பண்டிதரும் ஒ…ஓஹோ என அட்டகாசமாக சிரித்தார்.
அதைக் கண்ட ‘ வாமன் புவா படேகருடன்’ வந்து இருந்த அவர் நண்பர் ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகளை தியானித்தபடியே ஜகதாம்பாளை துதித்து அவள் மீதான ஸ்லோகத்தைக் கூறினார். ‘வாமன் புவா படேகரும் ‘தயங்காமல் அதை கூற என்ன அதிசயம், அனைவரும் திடுக்கிடும் வகையில் ஜகதாம்பாள் கழுத்தில் இருந்த வெற்றிலை மாலை பறந்து வந்து ‘வாமன் புவா படேகர்’ கழுத்தில் விழுந்தது. அவரை ஏளனம் செய்த அனைவரும் தலை குனிந்து நின்றனர். பூசாரி அவரிடம் தன்னை மன்னித்து விடுமாறு கேட்டார்.
‘வாமன் புவா படேகர்’ அந்த வெற்றிலை மாலையை எடுத்துக் கொண்டு பண்டார்பூருக்கு திரும்பிச் சென்றார். அங்கு நதிக்கரையில் சென்று குளித்தப் பின் பையில் இருந்த ஸ்ரீ பாண்டுரங்கனின் சிலையை பூஜை செய்வதற்காக எடுத்தவர் பயந்து விட்டார். அதில் இருந்தது ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகளின் சிலை! சரி , இதுவும் ஸ்வாமிகள் தந்ததுதானே என அதற்கு பூஜை செய்துவிட்டு, ஸ்வாமிகளை தரிசனம் செய்யச் சென்றார். அவர் உள்ளே நுழைந்ததுமே ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகள் அவரிடம் கேட்டார் ‘ என்ன வாமன், இன்று நீ சென்ற இடங்களில் எல்லாம் பிரச்சனை செய்து விட்டாய். ஜகதாம்பா ஆலயத்தில் வெற்றிலைக் கேட்டு அவமானப்பட இருந்தாய். நான் அங்கு வந்து உனக்கு அதை தர வேண்டியதாயிற்று. இப்போது நதியில் குளித்துவிட்டு என்னுடைய சிலைக்கு பூஜை செய்துவிட்டு வந்துள்ளாய். நான் உனக்குக் கொடுத்த பாண்டுரங்கனின் சிலை ஏங்கே?
அடடா….., நடந்தது அனைத்தும் ஸ்வாமிகளுக்கு எப்படித் தெரியும் என பிரமித்து நின்ற ‘வாமன்’ பையில் கையை விட்டு சிலையை எடுத்தார்….அவர் கையில் கிடைத்தது ஸ்ரீ பாண்டுரங்கனின் சிலை !!!!! இதென்ன அதிசயம், நான் நதியில் பூஜித்தது ஸ்ரீ அக்கல்கோட் ஸ்வாமிகளின் சிலை ஆயிற்றே, இப்போது அது எப்படி ஸ்ரீ பாண்டுரங்கனில் சிலையாக மாறி உள்ளது என வியந்தார். அவருக்கு பின்னால்தான் புரிந்தது, அன்று அவரை ஸ்வாமிகள் பின் தொடர்ந்து சென்று அவமானப்படாமல் காப்பற்றி , தனக்கு அவர் மகிமையை மேலும் புரிய வைத்து உள்ளார் என்பது.
பாபா சாஹேப் ஜாதவ் என்ற குயவன் ஸ்வாமிகளின் பெரிய பக்தன். அவன் அடிக்கடி ஸ்வாமிகளை வந்து தரிசனம் செய்து விட்டுப் போவது பழக்கம். ஒரு முறை அவன் ஸ்வாமிகளை பார்க்க வந்து இருந்தான். அப்போது ஸ்வாமிகள் அவனைப் பார்த்து ‘ உனக்கு ஓலை வந்து விட்டதா ?’ என்று கேட்டார். ஸ்வாமிகளை நன்கு அறிந்திருந்த குயவன் அவர் கூறியதற்கான அர்த்தத்தை உடனேயே புரிந்து கொண்டான். அவர் காலடியில் விழுந்து தான் தனது குடும்பத்திற்கு தேவையானவற்றை சேர்த்து தரும் வரை தனக்கு சில நாட்கள் உயிர் பிச்சை தருமாறு அவரை கெஞ்சினான். அவனது குடும்ப நிலையை ஸ்வாமிகள் நன்கே அறிந்து வைத்து இருந்தார். ஆகவே கருணை உள்ளம் படைத்த ஸ்வாமிகள் ஆகாயத்தை நோக்கி எவருடனோ உரத்த குரலில் சண்டைப் போடத் துவங்கினார். அந்தக் குயவனை தன்னுடைய ஒரு கையால் பிடித்துக் கொண்டு இருந்தவாறு கைகளையும் கால்களையும் ஆட்டிக் கொண்டு யாரையோ தடுத்து நிறுத்துவது போல அவர் செயல் அமைந்து இருந்தது. அப்போது அங்கு ஒரு மாடு வந்து நின்றது. ஆகாயத்தில் யாரிடமோ அந்த மாட்டைக் காட்டி எதோ கூற அந்த மாடு அடுத்த கணம் இறந்து விழுந்தது.
ஸ்வாமிகள் அமைதியானார். பின்னர் அந்தக் குடியானவரிடம் கூறினார் ‘ சரி இந்த முறை உனக்காக யமனிடம் பேசி உனக்கு பதிலாக அந்த மாட்டின் உயிரைத் தந்து விட்டேன். அடுத்த முறை உனக்கு ஓலை வந்தால் என்னிடம் வராதே’ என அவனிடமும் கடிந்து கொள்ள அங்கு கூடி இருந்தவர் அனைவரும் வியந்து நின்றார்கள். அதன் பின் வெகு காலம் அந்துக் குயவன் சுவாமிகளுக்கு பணிவிடை செய்வதிலேயே தமது வாழ்நாளைப் போக்கி வந்தான். அதற்குள் அவனுடைய குடும்பமும் ஸ்திர நிலைக்கு வந்துவிட்டது. இப்படியாக ஒரு மரணத்தையும் மாற்றி அமைத்தவர் ஸ்வாமிகள்.
ஒரு நாள் ஸ்வாமிஜி ஒரு ஆலயத்தின் கூடத்தில் தனது சிஷ்யர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அப்போது அவரிடம் வந்த ஏழை பிராமணத் தம்பதியினர் ஸ்வாமிகளை நமஸ்கரித்து விட்டு தாம் மிகவும் ஏழை எனவும், தமக்கு உள்ளது ஒரே ஒரு வாரிசான குருட்டு மகன்தான் என்பதினால் தமக்கு பிற்காலத்தில் ஆறுதலாக இருக்க வேண்டும் என்பதற்காக எப்படியாவது தமது மகனுக்கு பார்வை கிடைக்க அவர் அருள் புரிய வேண்டும் என அழுதவாறு கெஞ்சிக் கேட்டுக் கொண்டார்கள். அவர்களின் வேண்டுகோளைக் கேட்ட ஸ்வாமிகள் அவர்களை அமைதிப்படுத்தி அங்கேயே சிறிது நேரம் அமர்ந்து இருக்குமாறு கூறினார்.
அப்போது அந்த ஊரை சேர்ந்த சில பிராமண பண்டிதர்கள் அங்கு வந்தார்கள். எப்போது ஸ்வாமிகளை அவமதிக்கலாம் என தினமும் நேரம் பார்த்துக் கொண்டு திரிந்தவர்களுக்கு அங்கு ஸ்வாமிகளைக் கண்டதும் குஷி பிறந்தது. அவர்கள் தாம் மெத்த பாண்டித்தியம் படித்தவர்கள் என்றும் தம்மை எந்த வாதத்திலும் ஸ்வாமிகளின் சிஷ்யர்களினால் தோற்க அடிக்க முடியாது என்பதையும் கூறிக் கொண்டு கேலி செய்தவாறு இருந்தார்கள். அவர்கள் வேண்டும் என்றே தாம் பேசும் ஏளனப் பேச்சுக்கள் ஸ்வாமிகளின் காதில் விழும்படி இருக்க வேண்டும் என்பதற்காக சற்றே உரத்த குரலில் பேசினார்கள்.
அதைக் கேட்ட ஸ்வாமிகள் தன் எதிரில் அமர்ந்து இருந்த குருட்டுப் பையனை அருகில் அழைத்தார். அவனைக் கட்டி அணைத்துக் கொண்டு அவன் காதில் எதோ ஓதினார் . தனது கழுத்தில் இருந்த மாலையை எடுத்து அவன் கழுத்தில் போட்டு விட்டுக் கூறினார் ‘போ…அந்த பண்டிதர்கள் முன்னால் போய் அமர்ந்து கொண்டு அவர்களுடன் வாதம் செய்’ என்றார். அந்தப் பண்டிதர்களுக்கோ இன்னும் குஷியாகி விட்டது. கண் பார்வை அற்றவன், ஏழை, அவன் என்ன படித்து இருக்க முடியும். நம்முடன் வாதம் செய்ய சிறுவனை அனுப்பி உள்ளாரா,வரட்டும் ஒரு கை பார்க்கலாம் என அகங்காரமாக அமர்ந்து இருந்தார்கள்.
கண் பார்வை அற்றவனின் பெற்றோர்கள் ஸ்வாமிகள் ஏன் அதை செய்தார் எனப் புரியாமல் திக்கிட்டு அமர்ந்து இருந்தபோதே, அந்த சிறுவன் எழுந்து அந்த பண்டிதர்களிடம் சென்றான். அனைவரும் ஆச்சர்யமாக அவனைப் பார்த்தார்கள். கண் பார்வை இல்லாதவன் எப்படி அட்டகாசமாக நடந்து செல்கிறான் என அவன் அருகில் சென்று பார்த்தால் அவன் பார்வை பெற்று இருந்ததைப் பார்த்தார்கள். அந்த அதிசயம் அடங்கும் முன்னரே, அந்த பண்டிதர்கள் எதிரில் சென்று அமர்ந்தவன், ஊம் ….உங்கள் வாதத்தை எடுத்து வையுங்கள் எனக் கூறி அவர்கள் கேட்ட அனைத்து கேள்விகளுக்கும் காட்டாற்று வெள்ளம் போல பகவத் கீதை, மகாபாரதம், ராமாயணம், வேதங்கள், இதிகாசம் என அனைத்தில் இருந்தும் உதாரணங்களை எடுத்துக் காட்டி சமஸ்கிருத வார்த்தைகளின் பாடல்களையும், செய்யுள்களையும் ஒப்பித்துக் காட்டி அவர்களின் வாயை அடக்கினான். அனைவரும் வியந்து வாயடைத்து நின்றார்கள். என்ன நடக்கின்றது என்றே அவர்களுக்கு விளங்கவில்லை.
இவன் எங்கிருந்து பார்வை பெற்றான்? இவனுக்கு எங்கிருந்து இத்தனை ஞானம் கிடைத்தது. தவறை உணர்ந்த ஏளனம் பேச வந்த பண்டிதர்கள் ஓடிச் சென்று ஸ்வாமிகளின் கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டார்கள். பார்வை அற்றவன் பார்வை பெற்று பெற்றோருடன் ஆனந்தமாக திரும்பிச் சென்றான். ஸ்வாமிகளின் தெய்வீகத்திற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
அக்கல்கோட்டில் ஒரு பண்டிதர் வாழ்ந்து வந்தார். அவர் ஸ்வாமிகளின் சிஷ்யர். ஒருமுறை அவரை ஒரு பேய் பிடித்துக் கொண்டது. நன்றாக இருந்தவர் பித்துப் போல ஆனார். தன்னையே மறந்து பைத்தியம் போல அங்கும் இங்கும் சுற்றித் திரிய பாண்டியத்தில் வந்து கொண்டு இருந்த வருமானமும் நின்றது. பிச்சை எடுத்தே வாழ்கையை ஓட்ட வேண்டிய நிலைமை அவர் மனைவிக்கு ஏற்பட்டது.
நாளாக நாளாக அந்த பித்து பிடித்த பண்டிதரை தெருவில் சென்றவர்கள் கல்லால் அடித்துத் துன்புறுத்தியும் அடித்து விரட்டியும் இருக்க அதைக் கண்டு மனம் உடைந்து போன அவர் மனைவி ஒரு நாள் அவரை இழுத்துக் கொண்டு அந்த ஊருக்கு விஜயம் செய்து இருந்த ஸ்ரீ ஸ்மர்த்த ஸ்வாமிகளிடம் சென்று தனது கணவனின் நிலை மற்றும் தமது குடும்ப நிலையைக் கூறி அழுதாள். அவர் அந்த பண்டிதரை தனது அருகில் அழைத்தார். ஆனால் அந்த பண்டிதரின் உடம்புக்குள் இருந்த பேயோ முதலில் அந்தப் பண்டிதரை ஸ்வாமிகள் இருந்த இடத்திற்கே செல்ல மறுக்க வைத்தது. ஆனாலும் ஸ்வாமிகள் மகிமை வாய்ந்தவர் அல்லவா. அவர் அந்தப் பேய் அவனை பிடித்து இருந்ததின் காரணத்தை அறிந்து இருந்தாலும் மற்றவர்களும் அவன் பித்து பிடித்து உள்ளதற்கான காரணத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அந்தப் பண்டிதரை தாம் தங்கி இருந்த இடத்திலேயே கட்டி வைக்குமாறு கூறினார்.
சில நாட்கள் கழிந்தது. அந்தப் பண்டிதனை தனது அருகில் அழைத்து வரச் சொல்லி அவனை ஒரு தடியினால் ஓங்கி அடித்தார். அவன் ‘என்னை விட்டு விடுங்கள், என்னை விட்டு விடுங்கள்’ எனக் கத்தினான். ஸ்வாமிகள் கோபமாக அவனைப் பார்த்துக் கூறினார் ‘ சரி இவனை விட்டு விட்டு நீ ஓடிப் போ’….
பண்டிதரின் உடலில் இருந்தப் பேய் கத்தியது…’நான் போக மாட்டேன்…போன ஜென்மத்தில் இவன் என்னிடம் பணத்தை வாங்கிக் கொண்டு எமாற்றி விட்டான்……..அதனால் மனம் உடைந்து போன நான் தற்கொலை செய்து கொள்ள வேண்டியதாயிற்று.. என் குடும்பம் நடுத் தெருவில் நின்றது’ என்று கூற ஸ்ரீ ஸ்வாமிகளோ ‘சரி……போனது போகட்டும்…….அவன் இப்போது தண்டனைப் பெற்று விட்டான் ……..இப்போது இவனை விட்டு ஓடிப் போ…..’
‘…மாட்டேன்……..மாட்டேன்’ எனப் பேய் கத்தத் துவங்க (அந்தப் பண்டிதன்தான் அனைத்தையும் பேசினான் ஆனால் தன நிலையை மறந்து அப்படியெல்லாம் அவனை கூற வைத்தது அவனுக்குள் இருந்தப் பேயேதான் ) ஸ்வாமிகள் எழுந்து வந்தார். அந்த பண்டிதனின் கையில் ஒரு துணியை கட்டினார் . அந்த துணியின் மற்றொரு முனையை ஒரு குழலுக்குள் நுழைத்து இழுக்கத் துவங்க அவன் கத்தினான்……….’என்னை விட்டு விடுங்கள்…..என்னை விட்டு விடுங்கள்….நான் ஓடிப் போய் விடுகிறேன்…..’ இப்படி சில நிமிடங்கள் அனைவர் முன்னிலையிலும் அந்தக் காட்சி அரங்கேற அந்த பண்டிதன் திடீரென மயங்கி கீழே விழுந்தான். அவன் வாயில் நுரை தள்ளியது. ஸ்வாமிகள் ஆகாயத்தைப் பார்த்துக் கத்தினார் ‘ போ……ஓடிப் போய் அதோ தூரத்தில் தெரியும் மைத்தானத்தில் உள்ள அந்த புளிய மரத்தில் சென்று அமர்ந்து கொள்…….’.
அதன் பின் சிறிது நேரம் அமைதி. கீழே விழுந்து கிடந்த பண்டிதர் தூங்கி எழுவது போல எழுந்தார். ஸ்வாமிகளைக் கண்டார். ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தவர் அவர் கால்களில் விழுந்து வணங்கி ஆனந்தக் கண்ணீர் விட்டு அழுதார். அவர் முகமே ஒரு உண்மையான பண்டிதரைப் போல தெளிவாக இருந்தது. அவை அனைத்தையும் பார்த்துக் கொண்டு இருந்தவர்களுக்கு பிறகுதான் புரிந்தது அந்தப் பண்டிதரின் உடலில் ஒரு பேய் புகுந்து கொண்டு இத்தனை நாளும் அட்டகாசம் செய்து வந்துள்ளது என்ற உண்மை. நாளடைவில் அந்தப் பண்டிதர் மீண்டும் நல்ல நிலைக்கு ஆளானார். அவர் வீடும் கலகலத்தது
அன்று ஒரு விசேஷ தினம் பலரும் ஸ்வாமிகளை தரிசனம் செய்ய வந்து இருந்தார்கள். அவரவர்கள் பலவிதமான பிரசாதங்களையும் கொண்டு வந்து ஸ்வாமிகளுக்கு தந்தவண்ணம் இருந்தார்கள். சிலர் கொண்டு வந்ததை தொட்டு ஆசிர்வதித்தார். சிலரது பிரசாதத்தில் ஒரு கை விரல் நுனியளவு எடுத்து சாப்பிட்டு அவர்களை திருப்தி செய்து அனுப்பியவாறு இருந்தார். அலை மோதும் வண்ணம் அளவு கூட்டம் அங்கு இருந்தது. ஒருவர் பின் ஒருவராக ஸ்வாமிகளை அருகில் சென்று தரிசித்து விட்டு சென்று கொண்டு இருந்தார்கள்.
அந்தக் கூட்டத்தில் ஒரு ஏழைப் பெண்மணியும் வந்து இருந்தாள். சாயம் போன சேலை…ஆனால் ஸ்வாமிகளைக் காண வேண்டும் என்ற உறுதி… தன் வீட்டில் இருந்து தான் கொண்டு வந்திருந்த எளிய பிரசாதத்தை கொடுக்க வேண்டும் என்ற ஆவல். ஆனால் அவள் மனதில் பயம். தானோ பரம ஏழை. ஆகவே அதை ஸ்வாமிகள் அதை தீண்டுவாரோ மாட்டாரோ. அவரை நெருங்கக் கூட அங்கிருந்தவர்கள் தன்னை அனுமதிக்க மறுக்கின்றார்களே என வருந்தியவாறு ஒரு கோடியில் மூலையில் அமர்ந்து ஸ்வாமிகளை பார்த்தபடி இருந்தாள். சிறிது நேரம் ஆயிற்று. கூட்டம் என்னும் கலையவில்லை. அமர்ந்து இருந்த ஸ்வாமிகள் எழுந்து நின்றார்.
கோடியில் அமர்ந்து இருந்த அந்த ஏழைப் பெண்மணியை தன் அருகில் வருமாறு அழைத்தார். ஸ்வாமிகள் யாரை அழைக்கின்றார் எனத் தெரியாமல் அங்கு இருந்த பணக்காரர்களும், வசதியாக இருந்த மனிதர்களும் நானா….நானா…..என ஒவ்வொருவராக கேட்க, ஸ்வாமிகளும் அவர்களிடம் நீ இல்லை….நீ இல்லை எனக் கூறிவிட்டு, மீண்டும் மீண்டும் அந்த ஏழைப் பெண்மணியை நோக்கி தன் கையைக் காட்ட அனைவரும் ஒரே வியப்பு. எதற்காக அந்த ஏழைப் பெண்மணியை அவர் அழைக்கின்றார்?
ஸ்வாமிகள் அழைத்ததினால் அவர் அருகில் சென்று அவரை வணங்கினாள் அந்தப் பெண்மணி. அவள் எதுவுமே கூறும் முன் அவர் ‘ நீ கொண்டு வந்துள்ள பிரசாதத்தைக் கொடு’ என்றார். வெட்கத்துடன் தான் கொண்டு வந்திருந்த சிறிதளவு பிரசாத பாத்திரத்தை ஸ்வாமிகளிடம் அவள் காட்ட அவர் அந்த பாத்திரத்தை வாங்கிக் கொண்டு அமர்ந்து கொண்டார். அதில் இருந்த சாப்பாட்டை எடுத்து உண்ணத் துவங்கினார். அதில் இரண்டு கவளம் எடுத்து உண்டப்பின் மீதி இருந்த இரண்டு கவளத்துடன் அதை அவளிடம் திருப்பித் தந்தார். ‘விரைவில் உனக்கு நல்ல குறும்புக்காரப் பிள்ளைப் பிறப்பான்’ என அவளை ஆசிர்வதித்தார்.
நாற்பத்தி ஐந்து வயதான அந்தப் பெண்மணி திகைத்து நின்றாள். தனக்கு குழந்தை இல்லை என்ற மனவருத்தம் இவருக்கு எப்படித் தெரிந்தது? தான் ஏழை என்பதையும் பார்க்காமல் அத்தனைக் கூட்டத்திலும் தன்னை அழைத்து தான் கொண்டு வந்து இருந்த மிக சாதாரமான பிரசாதத்தை ஆசையுடன் அனைவர் முன்னிலையிலும் உண்டாரே….ஸ்வாமிகளின் அன்புதான் என்னே…… கண்களில் கண்ணீர் வழிந்தோட அவள் ஸ்வாமிகளின் காலடியில் விழுந்து சிறிது நேரம் அழுது புலம்பினாள்.
அங்கு நடந்தவற்றை பார்த்தபடி நின்று இருந்த அனைவரும் அதிர்ந்து போனார்கள். ஒவ்வொருவரும் தான்தான் ஸ்வாமிகளின் உண்மையான பக்தர் என எண்ணிக் கொண்டு பெருமையுடன் பலவிதமானா திரவியங்கள் போட்ட மணக்கும் பிரசாதத்தை ஸ்வாமிகளிடம் தந்தாலும் ஒரு ஏழையின் எளிய பிரசாதத்தை வாங்கிக் கொண்டு அதை ஆசையுடன் அவர் உண்டது அவர் ஏழை – பணக்கார பந்தங்களைக் கடந்த உண்மையான தெய்வமே என்பதை அல்லவா காட்டியது! ஸ்வாமிகளின் ஆசிகளைப் பெற்ற அந்தப் பெண்மணிக்கு அடுத்த ஆண்டே அழகிய குழந்தை பிறந்தது என்பது அதைவிட ஆச்சர்யமான செய்திதானே.
தர்வார் பகுதியில் இருந்த சிறிய இடமே ஹவேரி எனும் சிறிய ஊர்.அங்கு பாலப்பா என்ற நகைக் கடை அதிபர் இருந்தார். அவருக்கு செல்வத்திற்கு பஞ்சமில்லை. மனைவி மற்றும் குழந்தைகளும் அன்புடன் இருந்தனர். ஒற்றுமையான குடும்பம் அது. காலம் ஓடியது. பாலப்பாவிற்கு சம்சார வாழ்கை அலுத்தது. இறை வழிப்பாட்டில் மனம் அதிகம் செல்லச் செல்ல தனக்கு ஒரு நல்ல குரு கிடைப்பாரா என தேடி அலைந்தார். மகளுக்கு திருமணம் செய்து வைத்தார். மகனுக்கு பூணூல் போட்ட பின் பல இடங்களில் இருந்த ஆலயங்களுக்கும் மடங்களுக்கும் செல்லத் துவங்கினார். வீட்டை விட்டு வெளியேறி விட்டு இப்படியாக சுற்றிக் கொண்டு இருந்தவர் கனகாபுரியை அடைந்தார். அங்கு சில காலம் தங்கி அங்கிருந்த தத்தாத்திரேயர் ஆலயத்தில் சேவை செய்யத் துவங்கினார். அப்போது ஒரு நாள் அவர் கனவில் ஒரு முதியவர் தோன்றிக் கூறினார் ‘ நீ அக்கல்கோட்டிற்குச் சென்று ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமியிடம் அடைக்கலம் ஆகி விடு’. கனவு கலைந்தது. அதன் பின் அவர் அதுபற்றி மறந்து விட்டார்.
இரண்டு மாதங்கள் கழிந்தன. ஆனால் சில நாட்களாக அவருக்கு அந்தக் கனவைப் பற்றிய எண்ணம் வலுக்கத் துவங்கியது. ஏன் அங்கு போக மறுக்கின்றாய் என்று உள் மனம் அடிக்கடி கேள்வியை எழுப்பத் துவங்கியது. எனக்கு ஏன் அப்படி ஒரு கனவு வந்தது என சிந்திக்கத் துவங்கினார். அக்கல்கோட்டில் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமி என்பவர் உண்மையில் இருக்கின்றாரா? மற்றவர்களிடம் விசாரித்ததில் அக்கல்கோட்டில் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமி உள்ளதும் அவரைப் பற்றிய விவரமும் கிடைக்க உடனே அங்கு கிளம்பிச் சென்றார்.
1870 ஆம் ஆண்டு. ஸ்வாமிகளைக் கண்டார். ஓடிச் சென்று அவர் கால்களில் விழுந்தார். பாலப்பாவைக் கண்ட ஸ்வாமிகள் அவரை அன்புடன் வரவேற்றதும் இல்லாமல், ‘என்னுடைய சிஷ்யன் வந்துவிட்டான் பாருங்கள்’ என அனைவரையும் அழைத்துக் காட்டினார். எதற்காக இது நடக்கின்றது என பாலப்பவிற்கே புரியவில்லை. தான் அவர் சிஷ்யரா? எது எப்படி இருந்தால் என்ன எனக்கு நான் தேடிக்கொண்டு இருந்த குரு கிடைத்து விட்டார் என மகிழ்ந்த பாலப்பா அங்கு தங்கியவாறே ஸ்வாமிகளுக்கு சேவை செய்யத் துவங்கினார். ஸ்வாமிகள் பாலப்பாவிற்கு பக்தி மார்கத்தையும், ஆன்மீகத்தையும் நிறையவே போதித்தார். ஸ்வாமிகள் சமாதி அடைவதற்கு சில நாட்களுக்கு முன்னால் திடீரென அனைவருக்கும் ஸ்வாமிகள் சில பொருட்களை தனது பரிசாக தந்தார். ஆனால் பாலப்பாவிற்கு ஒன்றும் தரவில்லை. அதனால் பாலப்பா மன வருத்தத்தில் இருந்தார். ஆனால் அதை யாரிடமும் கூறவில்லை. குரு சேவையும் குறைக்கவில்லை.
ஒரு நாள் ஸ்வாமிகள் பாலப்பாவை அருகில் அழைத்தார். தன் கழுத்தில் இருந்த மாலையைக் கயற்றி அவர் கழுத்தில் போட்டார். அது மட்டும் அல்ல தனது பாதுகைகளை கயற்றி அவரிடம் தந்து விட்டுக் கூறினார் ‘ இவை உன்னை ரட்சிக்கும். மக்களுக்கு நன்மை செய்ய நீ ஒரு மடத்தைத் துவக்கு ‘. குருவின் ஆணையை ஏற்ற பாலப்பா தன் ஊருக்குச் சென்று குரு மந்திர் என்ற மடத்தை நிறுவி ஸ்வாமிகளின் பாதுகைகளை அங்கு வைத்து அதை பூஜித்து வந்தார். சில மாதங்களில் ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். பாலப்பா புழுவாய் துடித்தார், அழுதவண்ணம் இருந்தார்.
அப்போது ஒரு நாள் அவர் கனவில் தோன்றிய ஸ்வாமிகள் கூறினார் ‘ நீ எதற்காக அழுகிறாய்?. இந்தப் பாதுகையில் உள்ள நான் உன்னுடன்தானே என்றும் இருக்கின்றேன். நீ பாதுகைக்கு பூஜை செய்வது எனக்காகத் தானே. அதைதான் நான் மகிழ்ச்சியுடன் தினமும் ஏற்றுக் கொள்கின்றேன் அல்லவா?. ஆகவே கவலைப் படாதே. இந்த பாதுகைகள் என்றுமே உன்னை ரட்ஷித்தவாறு இருக்கும்’ . இதைக் கூறிவிட்டு ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் கனவில் இருந்து மறைந்தே போனார்.
அதன்பின் பாலப்பா தனது பெயரை ஸ்ரீ பிரும்மானந்தஸ்வாமி என மாற்றிக் கொண்டு சன்யாசத்தை ஏற்றுக் கொண்டார். ஸ்ரீ அக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகளின் புகழைப் பரப்பியவண்ணம் சுற்றித் திரிந்து வந்தவருக்கு நிறைய பக்தர்கள் சேர்ந்தார்கள். அதன் பின் 1910 ஆம் ஆண்டு அவரும் குரு மந்திரின் உள்ளேயே அமர்ந்து இருக்கையில் சமாதி ஆகி தனது ஆசானுடன் கலந்தார்.
ஸ்வாமிகளின் பிறப்பு பற்றிய விவரங்கள் யாருக்குமே சரிவரத் தெரியவில்லை .அவர் பிறப்பு பற்றி அவரவர் கூறியவை, பல்வேறு ஹேஷ்யங்கள் கட்டுக் கதைகள் என இருந்ததினால் ஸ்வாமிகளை தரிசித்த ஒரு ஜோதிடர் அவரது ஜாதகத்தைக் கணிக்க அனுமதி கேட்டார். ஸ்வாமிகளும் அந்த ஜோதிடருக்கு தமது ஜாதகத்தைக் கணிக்க அனுமதி கொடுத்தார். ஸ்வாமிகள் தந்த தகவலை ஒட்டி அந்த ஜோதிடர் ஸ்வாமிகளின் ஜாதகத்தைக் கணித்து ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளிடம் தர, ஸ்வாமிகள் அதை அவரிடமே தந்துவிட்டு அதை ஜாக்கிரதையாக வெட்ட வெளியில் வைத்து விட்டு அங்கு நடந்து கொண்டு இருந்த பஜனையில் கலந்து கொள்ளுமாறு கூறினார். பஜனையும் பூஜையும் நடந்து கொண்டு இருந்தது. அந்த காகிதம் பறக்காமல் இருக்க அதன் மீது ஒரு கல்லை வைத்து இருந்தார். அதே இடத்தில் நடந்த பஜனை முடிந்ததும் ஸ்வாமிகள் அந்த காகிதத்தை எடுத்து வருமாறு கூறினார். அதை எடுக்கச் சென்ற ஜோதிடர் திகைத்து நின்றார். அதன் மீது யாரோ குங்குமம், மலர்கள் போன்றவற்றைத் தூவி அர்ச்சனை செய்து இருந்ததைப் போல அங்கு காட்சி இருந்தது. தாம் அங்கேயே அமர்ந்து இருக்க, அனைவரும் பூஜையில் கலந்து கொண்டு இருந்தபோது அத்தனை பேர்களின் கண்களுக்கும் புலப்படாமல் யார் அந்த காகிதத்திற்கு அர்சனை செய்து இருக்க முடியும்? அனைவரும் ஸ்வாமிகளின் அற்புதத்தை எண்ணி திகைத்தார்கள். அதில் கணிக்கப்பட்டு எழுதப்பட்டு இருந்த ஸ்வாமிகளின் ஜாதகமும் இல்லை என்பது அடுத்த அதிர்ச்சி. ஆகா உண்மையான தெய்வப் பிறப்பாக யாரேனும் இருந்தால் அவர்களின் ஜாதகத்தை யாராலும் கணிக்க முடியாது என்பதே உண்மை.
எங்கெங்கு சென்றாலும் அங்கெல்லாம் அற்புதங்களை நிகழ்த்திய வண்ணம் மக்களின் துயரங்களை துடைத்துக் கொண்டு இருந்த ஸ்வாமிகள் செய்து காட்டிய மகிமைகளும் அற்புதங்களும் எழுதி மாள முடியாதவை. ஒன்றா இரண்டா அவற்றை எழுத. இறந்தவர் பிழைத்து எழுந்தது, ஒரு ஊரைப் பற்றிய கல்வெட்டு இருந்த இடத்தைக் காட்டியது, வானத்திலே பறந்து சென்றது, இழந்த செல்வத்தை மீட்டுத் தந்தது, எலும்புகளை தங்கமாக்கியது போன்ற பல கதைகள் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் வாழ்க்கையில் உண்டு.
ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் வாழ்ந்திருந்த காலத்தில் அவருடைய பல பக்தர்கள் அவரவர் குலதெய்வங்களை தேடி அலைந்து கொண்டிருந்தது உண்டாம். அதனால் அவர்களுக்கும் மன மகிழ்ச்சியைக் கொடுக்கும் வகையில் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் தாமே அவர்களுடைய குலதெய்வமாக காட்சி அளிப்பாராம். இது அவருடைய வாழ்க்கை வரலாற்றில் காணப்படுகின்றது.
ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளின் வாழ்க்கையில் அவர் பெண்ணாக காட்சி கொடுத்து இருப்பதை பலரும் பார்த்து உள்ளார்களாம். உண்மையில் அவர் ஸ்ரீ தத்தாத்திரேயரின் உண்மையான உருவை அதாவது ஆண் பெண் சக்திகளைக் கொண்டிருந்த பரபிரும்மனாக அவதரித்து இருந்ததினால்தான் அவர் பெண்ணாக காட்சி அளித்த நிலையில், பச்சைப் புடவை அணிந்திருந்த கோலத்தில் உயரமான ஒரு வயதான பெண்மணியின் தோற்றத்தில் காட்சி தருவது உண்டாம். சற்றே அந்த பெண்மணியை உற்று நோக்கினாலும் ஸ்வாமி சமர்தர் ஒரு பெண் உருவில் நிற்பதை போல காண முடிந்ததாம்.
ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் சில நேரங்களில் தன் கையில் ஒரு கோலி உருண்டையை வைத்துக் கொண்டு அதை தன் கையில் உருட்டிக் கொண்டே இருப்பாராம் . பலருக்கும் அது ஏன் என்பது தெரியாது. ஆனால் ஒருமுறை ரத்னகிரியில் இருந்த சவர்டே எனும் கிராமத்திற்கு ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் சென்றிருந்தபோது அவருடைய பிரதான சீடரான ஸ்ரீ திகம்பர்பாபா என அழைக்கப்பட்ட ஸ்ரீ ராமச்சந்திர நரசிம்ம வஹால்கர் என்பவர் குடிலுக்கு திடீர் என விஜயம் செய்தார். ஸ்வாமிகளை சுற்றி பெரும் ஒளிவண்ணம் வீசியது. ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் கையில் இருந்த ஒரு கோலி உருண்டை மீது இருந்து எழுந்த அந்த தெய்வீக ஒளிதான் ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகளை சுற்றி வீசியபடி இருந்தது. அடுத்து ஸ்ரீ ஸமர்த்த ஸ்வாமிகள் தெய்வீக ஒளியை வீசிக் கொண்டு இருந்த அந்த கோலி உருண்டையை ஒரு சிறு பெட்டியில் வைத்து அதை ஸ்ரீ திகம்பர்பாபா மஹாராஜிடம் தந்து விட்டாராம். அதன் அர்த்தம் எவருக்கும் தெரியவில்லை. ஒருவேளை தன்னுடைய தெய்வீக சக்தியை அவருக்கு கொடுத்துவிட்டாரோ என்னவோ தெரியவில்லை.
இப்படியாக வாழ்ந்து கொண்டு இருந்த ஸ்ரீ ஸ்வாமிகள் முடிவாக அக்கல்கோட்டில் வந்து தங்கினார். 1854 ஆம் ஆண்டு முதல் 1878 ஆம் ஆண்டு வரை அங்கு தங்கி இருந்த ஸ்வாமிகள் 03 -04 -1878 ஆம் தேதியன்று சமாதி அடைந்தார். தான் சமாதி அடைய இருந்த தினத்தை முன் கூட்டியே பக்தர்களுக்கு அறிவித்து விட்டே ஸ்வாமிகள் சமாதி அடைந்தார். அவர் பூவுலகில் 400 ஆண்டுகள் வாழ்ந்து இருந்தார், இல்லை , இல்லை அவர் 600 ஆண்டுகள் வாழ்ந்து வந்தார் என அவர் வாழ்ந்த காலத்தைப் பற்றிக் கூறினாலும் அவர் பல நூற்றாண்டுகள் வாழ்ந்து இருந்தார் என்பது அவர் தவம் செய்த இடங்களில் இருந்து கிடைத்த செய்திகளில் இருந்து தெரிய வந்துள்ளது
ஸ்வாமிகளின் கடைசி ஆண்டுகள் ஒரு ஆலமரத்தடியில் கழிந்தன. அதன் அடியில்தான் அவர் இறுதியாக சமாதி அடைந்தார். அவர் சமாதி அடைந்தபோது , அவரது ஆன்மா இரண்டாகப் பிளந்தது – அதில் ஒரு பகுதி அவரது சமாதி என்று வணங்கப்படும் ஆலமரத்துடன் இணைந்தது. மற்றொரு ஆத்மா சீரடி சாய்பாபாவுடன் இணைந்தது என்பதாக சில ஆன்மீகவாதிகள் கூறுகின்றார்கள். “நான் சமாதி அடைந்து விட்டாலும் அக்கல்கோட்டில் இருந்தபடி உங்களை ரட்சித்து வருவேன் . அழிவு என் தேகத்திற்குத்தான், ஆனால் நான் அழியவில்லை. என்னை நாடி வருபவர்களை நான் கைவிடமாட்டேன். அவர்களை என்றுமே காத்துக் கொண்டவாறே இருப்பேன்” என்ற அர்த்தத்தைக் குறிக்கும் பகவத் கீதை வரிகளைக் கூறியவாறே விடை பெற்றார். இன்றும் அந்த ஆலயத்தில் அவர் சூஷுமமாக வாழ்ந்து கொண்டு உள்ளதை அங்கு சென்று அவரை வணங்குபவர்கள் உணருகிறார்கள். வரும் பக்தர்களின் கூட்டத்திற்கு குறைவும் இல்லை. அவரை வேண்டி வணங்குபவர்கள் பெரும் நன்மைகளை பலரும் கூறக் கூற அதை கேட்பது அதிசயமாக உள்ளது என்று அந்த ஊரில் உள்ள அன்பர்கள் கூறுகின்றார்களாம்.
ஆலய விலாசம்
Akkalkot-Niwasi Shree Swami Samarth Mandir
Shree Swami Samarth Nagar,
Off Four Bunglows,
Andheri (West),
MUMBAI
Pin Code : 400 053
Maharashtra State
INDIA
Phone : 022 – 2 633 30 30
Timings : 06.00 A.M. to 11.00 A.M. and 04.00 P.M. to 09.00 P.M. (IST).
Temple of Akkalkot Niwasi Shree Swami Samarth Maharaj
———————-
Shree Sadguru Baba Maharaj Sahasrabuddhe Samadhi Mandir
&
Shree Sadguru Digambardas Maharaj Samadhi Mandir
937/ D, Chatushrungi Road,
Near Dnyaneshwar Paduka Chowk,
Shivajinagar,
PUNE
Pin Code : 411 016.
Maharashtra State
INDIA
Phone : 020-25655021
Timings : 06.30 A.M. to 11.00 A.M. and 03.30 P.M. to 06.00 P.M. (IST)
——————–
அக்கல்கோட் ஸமர்த்த ஸ்வாமிகளின் சரித்திரம் முடிவுற்றது