எரிந்து போன 
போன பச்சை மரம்   ?……..
 
எனக்கு விடை கிடைக்காத 
இன்னொரு  உண்மை சம்பவம்  -2
 

நான் நேரிலே  பார்த்த   இந்த சம்பவமும் அதிசயமான சம்பவமாகவே எனக்கு உள்ளது.  ஆனால் இதில் சம்மந்தப்பட்டு உள்ளவரின் பெயரை வெளியிட விரும்பவில்லை. ஏன் எனில் அவர் இன்றும் ஒரு உயர் அதிகாரியாக மத்திய அரசாங்கத்தின் ஒரு அலுவலகத்தில் உள்ளார் என்பதினால் அவர் பெயரைக் கூற விரும்பவில்லை .

இந்த சம்பவம் நடந்து 10 அல்லது 15 ஆண்டுகள் ஆகி இருக்கும்.  அப்போது நான் மத்தியப் பிரதேசத்தில்  மத்திய அமைச்சகத்தின் கீழ் இருந்த காகித நோட்டுக்கள் அச்சடிக்கும் அலுவலகத்தில் பணி ஆற்றிக் கொண்டு இருந்தேன். ஒரு முறை நான் வேலை விஷயமாக  மைசூருக்கு சென்று இருந்தேன் . என்னுடன் இதில் சம்மந்தப்பட்டு உள்ள என் நண்பரும்  வந்து இருந்தார்.  அவர் எப்போதுமே சற்று மன வருத்தத்துடன் காணப்பட்டார் . நான் அது அவருடைய சொந்த விஷயம்  என நினைத்து அதைப் பற்றிக் கேட்காமல் இருந்தேன். நாங்கள் தாசப்பிரகாஷ் என்ற ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தோம். அந்த ஹோட்டலில்  கீழ்  பகுதியில் ஒரு ஜோதிடர் ஒரு அறையை  நிரந்தரமாக எடுத்துக் கொண்டு குடி இருந்தார்.  அவர் பெயர்  நாராயண மூர்த்தி என எழுதி இருந்ததாக நினைவு. தினமும் அவர் அறைமுன் சிலர் நின்று கொண்டு இருப்பார்கள் என்பதினால் எனக்கு என்னுடைய வரும் காலத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆசையாக இருந்தது. அவரை சந்திக்கலாமா என் என் நண்பரிடம் கேட்க அவரும் உடனே அதற்கு ஒப்புக் கொண்டார்.

அன்று மாலை முதலில் நான் அந்த ஜோதிடரை சென்று பார்த்தேன். அவர் என்னுடைய கை ரேகைகளைப் பார்த்தார். முகத்தைப் பார்த்தார். பின்னர் என்னைப் பற்றிய பல செய்திகளைக் கூறினார். அந்த செய்திகள்  மிகவும் சரியாக இருந்தன.  ஆனால் வரும் காலத்தைப் பற்றியும் சில செய்திகளைக் கூறி அது  எப்படி பல விதங்களிலும் தடைப்படும் என்று கூறி விட்டு அவை நிறைவேற வேண்டுமானால் சில பரிகாரங்களை செய்யுமாறு கூறினார். நான் அவர் கூறியதை அன்று அலட்சியமாக எடுத்துக் கொண்டேன் என்பதின் காரணம்  எனக்கு வேறு ஒரு மூட நம்பிக்கை இருந்ததுதான். அதனால்  நான்  அதைப் பிறகு பார்த்துக் கொள்ளாலாம் என்று கூறி விட்டு வந்து விட்டேன்.  ஆனால் நடந்த பலவும் அவர் கூறிய பாணியிலேயே  அமைந்து இருந்தது.  கையிலே கிடைத்தவை மண்ணிலே விழுந்தன என்ற உண்மையை என் வாழ்கையில் நிதர்சனமாகக் கண்டேன். அவை கரைந்து போன காலத்தின் அழிக்க முடியாத கறைகளாக என் வாழ்கையில் அமைந்து விட்டன.

அடுத்து என்னுடைய நண்பர் சென்றார். அவர் வெளியில் வர பல மணி நேரம் பிடித்தது. அவர் வந்ததும் இரவு சாப்பிடச் சென்றோம். மெல்ல பேசிக் கொண்டு இருந்த என்னிடம் என்  நண்பர்   முதன் முறையாக தன்னுடைய ஒரு  ஒரு சொந்த பிரச்சனைப் பற்றிக்  கூறினார். அவருக்கு திருமணம் ஆகி சில ஆண்டுகள் ஆகி விட்டனவாம்.  சில குழந்தைகளும் இருந்தனர். மனைவி நன்கு படித்தவள். நல்ல குணம், அழகும் கூட.  அமைதியாக வாழ்ந்து கொண்டு இருந்தவர்களுக்கு வாழ்கையில் பிரச்சனை தோன்றியது. அவர்கள் குடும்பத்தில் ஏற்பட்ட சொத்து தகராற்றில் தன்னுடைய மனைவிக்கு யாரோ பில்லி சூனியம் வைத்து உள்ளதாகவும் அதனால் அவர்களுடைய திருமண வாழ்கையே நாசமாகி விட்டதாகவும் தெரிவித்த அவர்  அதில் இருந்து எப்படி மீள்வது எனத் தெரியாமல் தான் தவித்துக் கொண்டு இருந்த நேரத்தில்தான் இங்கு ஜோதிடரை சந்திக்க தான்  விரும்பியதாகக் கூறினார்.

நன்கு வாழ்ந்து கொண்டு இருந்தக் குடும்பத்தில் சூறாவளி வீச திடீர் என சில நாட்களாக அவர் மனைவி யாருடனும்  பேசுவதை  தவிர்த்தாள். அப்படி பேசினாலும் அதிகம்  பேசுவது  இல்லை. வீட்டில் திடீர் திடீர் என கோபமடைவாள்.  அந்த நேரங்களில் உடல் நலமின்றி படுக்கையில் விழுந்து விடுவாள்.  கை கால்களை  அசைக்க முடியாமல் அவதிப்பட்டாள்.  அந்த வியாதி என்ன என்றே மருத்துவர்களாலும் கண்டு பிடிக்க முடியவில்லை.  உடலில் என்ன கோளாறு என்றே தெரியவில்லை எனும்போது என்ன மருத்துவம் செய்வது. மற்ற நேரங்களில் மிகவும் சாந்தமாக இருப்பாள். உடல் நிலையும் நன்றாகவே இருக்கும். வீட்டில் சிரித்து மகிழ்ந்தவாறு இருப்பாள்.  மருத்துவம் பலனின்றிப் போக  அவர்  மந்திர தந்திரக்காரர்களையே நம்பி வாழ வேண்டி இருந்தது.  அப்படிப்பட்ட வாழ்கையில் எப்படி ஒருவரால் நிம்மதியாக இருக்க முடியும்?

அந்த நிலையில் அந்த ஜோதிடரிடம் சென்றவர் அந்த ஜோதிடர் அவர் கை ரேகைகளை பார்த்த  உடனேயே அவர் பிரச்சனையை  கூறி விட்டு மேலும் சில தகவல்களைக் கூறினார் எனவும் அதைக் கேட்ட தான் ஆச்சர்யம் அடைந்ததாகவும் கூறினார்.  அவரால் எப்படி உடனே அதை கண்டு பிடிக்க முடிந்தது என்று தன்னால் நம்ப முடியவில்லை என்றார். மேலும் அந்த  சூனியத்தை விலக்க தான் ஒரு யந்திரம் தயாரித்துத் தருவதாக கூறியதினால் அவருக்கு பணம் தர வேண்டும் எனக் கூறி என்னிடம் சிறிது  பணத்தையும் வாங்கிக் கொண்டு யந்திரத்துக்கு பணம் தந்து விட்டு வந்தார். அடுத்த இரண்டு மூன்று நாட்கள்  தன் மனைவிக்கு நேர்ந்த சில  வேதனைகளை அவர் மேலும் கூறினார்.  அப்படியே பேசிக்கொண்டு இருந்தோம்.

நாங்கள் வேலையை  முடித்துவிட்டு அவரவர் ஊருக்கு கிளம்பிச் சென்றோம். என்னுடைய பணத்தையும் அவர் திருப்பி அனுப்பி விட்டார். சில வருடங்கள் கழிந்தன. எப்போதாவது இருவரும் போனில் பேசுவோம். சில நேரங்களில் அவள் குணம் அடைந்து வந்ததாகவும் ஆனால் சில நேரங்களில் மீண்டும் மீண்டும் உடல் நலமின்றி படுத்தப் படுக்கையாக உள்ளாள் என்றும் அவர் கூறி வந்தார்.  அந்த எந்திரம் ஓரளவு  பலனை தந்து உள்ளதாகவும் கூறினார்.  அந்த நிலையில் ஒரு முறை நான் மீண்டும் வேலை விஷயமாக மகாராஷ்ரா மாநிலத்தில்  அவர் வேலைப் பார்த்து வந்த  ஊருக்கே செல்ல வேண்டி இருந்தது. அங்கு சென்றதும் மறுநாள் அவர் குடும்பத்தைப் பார்க்க அவர் வீட்டிற்கு சென்றேன்.

அவர் வீடு பெரிய தோட்டத்துடன் இருந்தது. தனி வீடு. அரசு குடியிருப்பில் பல வீடுகளுக்கு மத்தியில் இருந்தது. அவர் இருந்தப் பகுதியும் அரசு காவலர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது.  எவரும் கண்டபடி அங்கு நுழைய முடியாது. அவர் மனைவியும் நல்ல முறையில் பழகினாள்.  அவர்கள் வீட்டிற்கு வெளியில் நுழை வாயிலில் நிழலைத் தந்தபடி பெரிய மரம் இருந்தது.  அவர்கள் வீட்டில் நுழைந்த  எனக்கு என்னை அறியாமலேயே ஏதோ பீதி உள்ளுக்குள் இருந்தது.  பேசிவிட்டுத் திரும்பினேன். மறு நாள்  வேலை முடிந்து மீண்டும் அவர் வீட்டிற்கு சென்றேன். அன்று அவள்  உடல் நலமின்றி இருந்தாள்.  பேசி முடித்து விட்டு வெளியில் நாங்கள் வந்ததும்  என்னை வழி அனுப்ப வாயில் கதவு வரை வந்தவர் என்னிடம்  வருத்தத்துடன் நுழை வாசலில்  இருந்த அந்தப் பெரிய மரத்தைக் காட்டிக் கூறினார், ‘ இந்த மரத்தைப் பார் ஜெயராம், நேற்று பச்சையாக இருந்த இந்த மரம் இன்று எப்படி உள்ளது என.

அந்த மரத்தைக் கண்ட நான் திடுக்கிட்டேன். நேற்று மாலைவரை பச்சையாக இருந்த மரம்  யாரோ அதற்கு தீ வைத்து எரித்து இருந்தது போல இன்று கருகிக் கிடந்தது. இது எப்படி நடந்து இருக்க முடியும்? அது தீயினால் எரிந்தால் அந்த பகுதியில் உள்ள காவலர்களும் பார்த்து இருப்பார்கள். தீயணைப்புப் படையும் வந்து இருக்கும். ஆனால் தீயே வெளியில் தெரியாமல் எப்படி மரம் கருகிக் கிடக்கின்றது?

அவர் கூறினார் ‘ நான் விடியற் காலை எப்போதும் போல தோட்டத்து கதவை திறக்கப் போனால் இந்த மரத்தை யாரோ தீ வைத்து பொசுக்கி  உள்ளதைப் போல இருந்ததைக் கண்டேன்.  இதை யாரிடம் போய் சொல்வது? ஏதோ தீய சக்திதான்  ஏன் வீட்டில் நுழைய முயன்று இதை செய்து இருக்க வேண்டும். நேற்று இரவில் இருந்து மீண்டும் என்னுடைய மனைவி உடல் நலமின்றிப் போய் நடக்க முடியாமல் அவதிப்படுகிறாள்” கண்ணீர் வேடாதக் குறையாக அவர் அதைக் கூறியபோது அதைக் கேட்ட நான் மனதில் பயத்தினால் உறைந்து போனேன். கடவுள் நாமத்தை மனதில் உச்சரித்தபடி அவர் கூறியதை யந்திரம் போலக் கேட்டுக் கொண்டு இருந்தேன். நான்  முதல் நாள்   பார்த்த பச்சை  மரம் இன்று எப்படி பொசுங்கி காய்ந்து கிடக்கின்றதே   என நினைத்தேன்.  அது எப்படி எவருக்குமே தெரியாமல் நடந்து உள்ளது?  மரம் எரிந்தால் யாருக்காவது தீ கண்ணில் படாதா? இல்லை அருகில் இருந்த செடிகள் சிலவாவது பட்டுப்போய் இருக்காதா? அந்த தனி மரம் மட்டும் எப்படி கருகி நின்றது?  தானாகவே தீப்பிடித்து, தானாகவே அணைந்ததா? அந்த சம்பவம் நடக்கவும் அன்று இரவே அவர் மனைவி மீண்டும் உடல் நலமின்றி போய் நடக்க முடியாமல் அவதிப்பட்டது ஏன்?  ஆனால் முதல் நாள் மாலை நான் பார்த்த பச்சை மரம் அதே இடத்தில் மறு நாள் கருகிக் கிடந்ததை நான் நேரில் பார்த்தேன் என்பது சத்தியமான உண்மை.  அந்த மரமும் சின்ன அளவிலான மரம் அல்ல. சுமார் 15 அல்லது 20 அடி உயரம் இருக்கும். அதை சுற்றி இருந்த வேறு எந்த செடிக்கும் ஒன்றும் ஆகவே இல்லை.  அது  எப்படி நடந்தது? இன்று வரை அதற்கு விடை கிடைக்கவில்லை. பில்லி , சூனியம், ஏவல், வினை என்பதெல்லாம் நிஜமோ?

அதன்பின் அவர் மேலும் பல இடங்களுக்கும் சென்று அந்த பிரச்சனையை தீர்க்க பூஜைகள் செய்து உள்ளார். நாளடைவில் அவர் மனைவி நன்கு குணம் அடைந்து விட்டாள். அவர்களின் வீட்டுப் பிரச்சனைகளும் தீர்ந்து விட்டன என நினைகின்றேன். தற்போது அவர்  வேறொரு மாநிலத்தில் உயர்ந்த பதவியில் இருக்கின்றார் . அவர் மனைவியும் சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் அனைவருடனும் நன்கு பழகிக் கொண்டு பெண்கள் கிளப்பிற்கும் தலைவியாக இருந்து வழிகாட்டி வருகிறாள். அவர்களின் வாழ்கை  நல்லபடியாகவே உள்ளது. இன்றும் அவர் எனக்கு நல்ல நண்பராகவே இருக்கின்றார். என்னை தன்னால் மறக்கவே முடியாது என்கின்றார்.