ஒரு புராணக் கதை – 4
நாரத  முனிவர் 
தேவர்களை  காத்த  கதை
சாந்திப்பிரியா
முன்னொரு காலத்தில் ஹுண்டா என்ற ஒரு அசுரன் இருந்தான். அவன் மிகவும் பலசாலி. அவனை தேவர்களால் வெற்றி கொள்ள முடியவில்லை. அடிக்கடி தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை எழுந்து கொண்டே இருந்தது. ஒரு முறை ஹுண்டாவுக்கும்  தேவர்களுக்கும் எழுந்த சண்டையில் யுத்தம் பல வருடங்கள்  தொடர்ந்து நடந்தது. அதில் நஹுஷா தேவர்களுக்கு தலைமை தாங்கி யுத்தத்தை நடத்தினான். ஹுண்டா யுத்தத்தில் மரணம் அடைந்தாலும் அவன் மகன் அந்த யுத்தத்தை தொடர்ந்தான்.  அவனும் தந்தையைப் போல மகா பலசாலிதான்.  அது மட்டும் அல்ல தனக்கு இன்னும் அதிக சக்தி வேண்டும் என்பதற்காக கடுமையான தவத்தில் அமர்ந்து தன்னை எவரும் அழிக்க முடியாத சக்தியைப் சிவ பெருமானிடம் இருந்து பெற்றான். அவனை அழிக்க வேண்டுமானால் சிவபெருமானின் மனைவியான பார்வதியாலேயே முடியும் எனவும், அதுவும் அவன் சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது மட்டுமே  நடக்க முடியும் என்றவாறு வரம் பெற்றான். சிவனின் காலடியில் பூஜை செய்யும்போது யார் எதற்காக அவனுடன் போய் சண்டை போட முடியும் ?
அதைக் கேட்ட தேவர்கள் பயந்து போய் நாரதரை அணுகினார்கள். ஆகவே அவனை எப்படி தோற்கடிப்பது என எண்ணிய நாரதர் ஒரு தந்திரம் செய்தார். விஷ்ணுவை ஒரு பெண் உருவில் சென்று ஹுண்டாவின் மகனை  மயக்கச் செய்தார். பெண் உருவில் இருந்த விஷ்ணுவை அவன் மணக்க விரும்பினான். விஷ்ணுவோ அவனிடம் ஒரு குறிப்பிட்ட மலரின் பெயரைக் கூறி அதை எடுத்து வந்து சிவபெருமானின் காலடியில் போட்டப் பின் அதை எடுத்து வந்து தனக்கு மாலை போட்டால்தான் அவனை மணக்க முடியும் எனக் கூறினார். அவனும் அவர் கூறிய மலரைத் தேடி இடம் இடமாக அலைந்தான். மலர் கிடைக்கவில்லை.
அப்போது அவன் சுக்ராச்சாரியாரை சந்திக்க அவரும் அது மலரல்ல, பாற்கடலில் இருந்து வெளி வந்த விஷ்ணுவின் பரம பக்தையான ஒரு தேவதை எனவும், அவள் சிரித்தால் அவள் வாயில் இருந்து  விழும் வெள்ளை மலர்களே  அவை  எனவும், அழுதால் சிவப்பு மலர்கள் விழும் எனவும் கூறினார். ஆனால் விஷ்ணு கேட்டது வெள்ளை மலரல்லவா என யோசனை செய்தான். அவர் சென்றதும் நாரதர் அங்கு வந்தார். அந்த தேவதையை எப்படி பார்ப்பது என அவன் அவரிடம் கேட்க அவரும் அவள் ஹிமயமலையின் வாயில் இருப்பதாகவும் அங்கு செல்வது கடினம் எனவும், அவள் சிரிக்கும்போது விழும் மலர்கள் கங்கை நதியில் மிதந்து வரும் எனவும் சிவப்பு மலர்கள் சில மணி நேரத்தில் வெள்ளையாக மாறிவிடும் எனவும் கூற அதை நம்பியவன் கங்கை கரைக்கு சென்று அமர்ந்தான். அதற்குள் நாரதர் அந்த தேவதையிடம் சென்று விஷ்ணுவை ஒரு அசுரன் பெண் உருவில் மாற்றி விட்டான் என பொய் கூறினார். அதைக் கேட்ட அந்த தேவதை அழுது புலம்ப அவள் வாயில் இருந்து சிவப்பு மலர்கள் விழுந்தன. அதை எடுத்துக் கொண்டு சிவபெருமானின் இருப்பிடத்துக்குப் போனான்.
சிவனுக்கு வெள்ளை மலர்களைத் தவிர வேறு நிற பூக்களைக் கொண்டு பூஜிப்பதை பார்வதி விரும்பவில்லை. ஆகவே அவள் அந்த அசுரன் சிவப்பு மலர்களைக் கொண்டு வருவது பிடிக்காமல் வெள்ளை பூக்களைக் கொண்டு சிவனுக்கு பூஜை செய்யத் துவங்கினாள். அசுரன் வந்தான். இன்னொரு பக்கத்தில் அமர்ந்து கொண்டு சிவப்புப் பூக்களை சிவன் பாதத்தில் போட்டு பூஜிக்க ஆரம்பிக்க  பார்வதி சிவப்பு மலர்களால் அவரை அன்று பூஜிக்கக் கூடாது என்றாள். அவனோ என்னும் சில மணி நேரத்தில் சிவப்புப் பூக்கள் வெள்ளையாகிவிடும் என்றான். ஆனால் அவ்ளோ அதை ஏற்கவில்லை. வாக்குவாதம் தொடர்ந்து   சண்டையில் முடிய கோபமடைந்த பார்வதியின் ஆயுதத்தினால் அவன் அங்கேயே கொல்லப்பட்டான். தேவர்கள் நாரத முனிவருக்கு நன்றி கூறினார்கள்.