
சாந்திப்பிரியா
முன்னொரு காலத்தில் ஹயக்கிரீவன் என்றொரு அசுரன் இருந்தான். அவன் பெற்றிருந்த ஒரு சாபத்தின் காரணமாக அவன் தலை மட்டும் குதிரையின் தலையாக இருந்தது. அவன் கஷ்யபிரஜாபதியின் மகன் இன்று கூறுவார்கள். அவன் அசுரனாக இருந்தாலும் நல்லவனாகவே இருந்தான். ஒரு முறை அவன் சரஸ்வதி நதிக்கரைக்குச் சென்று தேவியை நினைத்து ஆயிரம் ஆண்டுகள் தவம் இருந்து தன்னை எவராலும் எளிதில் அழிக்க முடியாத வரத்தை வேண்டிப் பெற்றான். அந்த வரத்தின்படி அவனை எவராலும் அழிக்க முடியாது. ஆனால் எவர் ஒருவருடைய தலை குதிரையாக உள்ளதோ அவரால் மட்டுமே அவனைக் கொல்ல முடியும். அதுவரை நல்லவனாக இருந்தவன் அந்த வரம் கிடைத்ததும் நல்ல குணத்தைத் துறந்தான். தேவர்களை கொடுமை படுத்தலானான். அனைவரையும் கொல்லத் துவங்க தேவர்கள் விஷ்ணுவிடம் சென்று அவரிடம் முறையிட்டனர். அவரும் தமது படையினருடன் சென்று அவனுடன் போர் புரிந்தார். ஆனால் அவனை அழிக்க முடியவில்லை. யுத்தம் பல ஆண்டுகள் தொடர்ந்தது. களைப்படைந்த தேவர்கள் தேவியிடம் சென்று வேண்டினர். அவளும் அவர்களுக்கு ஒரு வில் அம்பை தந்து அதை விஷ்ணு உபயோகிக்க வேண்டும் எனவும் அதை அவர் தன்னுடனேயே வைத்து இருக்க வேண்டும் எனவும் அவருடன் பக்கத்தில் ஒரு குதிரையும் வைத்துக் கொண்டு இருக்க வேண்டும் எனவும் கூறினாள். அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறி அனுப்பினாள். அவர்களும் அதைக் கொண்டு போய் விஷ்ணுவிடம் தர அவர் வைகுண்ட தீர்த்தத்தில் சென்று பத்மாசனத்தில் அமர்ந்தவாறு வில்லை தலையில் வைத்துக் கொண்டு உறங்கினார். அதுவே சமயம் என கருதிய தேவி கரையான்களை அழைத்து அந்த வில்லின் நாணை கடிக்குமாறு கூறினாள். அந்த கரையான்களும் அப்படியே செய்ய அந்த வில்லின் நாண் அறுந்து விஷ்ணு மற்றும் அவர் பக்கத்தில் இருந்த குதிரை தலைகளை அறுத்து விட இருவர் தலையும் பூமியில் விழுந்தது. அதை எதிர்பார்த்து காத்திருந்த தேவி, அஸ்வினி குமாரர்களை அனுப்பி அந்த விஷ்ணுவின் உடலில் குதிரையின் தலையைப் பொறுத்துமாறு கூறினாள்.

அவர்களும் அதை செய்ய விஷ்ணு குதிரை தலையுடன் ஹயக்கிரீவராக மாறி எழுந்தார். அந்த அசுரனைக் கொன்றார். அதன் பின் அவர் சிவ பெருமானைத் துதித்து தவம் இருந்து தன்னுடைய பழைய தலையை மீண்டும் பெற்றார். விஷ்ணுவிற்கு குதிரைத் தலை வந்ததின் முதல் காரணம் ஒருமுறை பிரும்மா கோபத்தில் விஷ்ணுவின் தலை மிருகத்தின் தலையாக மாற வேண்டும் என தந்த சாபத்தினால்தானாம்.