இந்திரனின் மகன் ஜெயந்தா 
மற்றும் நரசிம்மர் மகிமை
சாந்திப்பிரியா
 
தேவேந்திரனின் மகனே ஜெயந்தா என்பவன்.  தேவேந்திரனுக்கு ஜெயந்தா, மிதுசா, நீலம்பரா, ராஸ்ப்பா, சித்திரகுப்தா என்ற  பல மகன்கள் உண்டு. தேவேந்திரனின்  மனைவியான  சாச்சி தேவி என்பவள் மூலம் ஜெயந்தா பிறந்தாலும் அவன் நல்ல குணங்களைக் கொண்டவன் அல்ல. பாவம் சாச்சி தேவியோ நல்ல குணங்களைப் பெற்றவள். ஜெயந்தாவினால் பல கஷ்டங்களை இந்திரன் ஏற்க வேண்டி இருந்தது.
கேளிக்கையில் மூழ்கிக் கிடக்கும் ஜெயந்தா

ஜெயந்தா  தேவலோகத்தில் கேளிக்கைகளில் மூழ்கிக் கிடப்பவன். ரதி ரம்பைகளின் ஆட்டங்களில் மனதை மயக்கிக் கொண்டு நிற்பவன். பெண்களின் விஷயத்தில் தீய எண்ணம் கொண்டவன். தான் தேவேந்திரனின் மகன் என்பதினால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று நினைத்தவன்.  ஜெயந்தா எப்படிப்பட்டவன் என்பதற்கு ஒரு கதை  ஆத்யந்த ராமாயணத்தில் உள்ளது.
ஒருமுறை வனவாசத்தில் இருந்த ராமர்-சீதை இருவரும் தமது பரிவாரங்களுடன் சித்ரகுடா எனும் இடத்தில் சென்று  தங்கினார்கள். அப்போது ஒருநாள் ராமபிரான்  களைப்படைந்து சீதாபிராட்டியின் மடியில் அமர்ந்து கொண்டு உறங்கிக் கொண்டு இருந்தார்.  வெகுநாட்களாகவே சீதையின் அழகில் மயங்கிக் கிடந்த ஜெயந்தா அந்த நேரம் பார்த்து ஒரு காக்கை உருவைக் கொண்டு, சீதை  ராமபிரானின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தவாறு அமர்ந்து கொண்டு  இருந்த போது அவள் தோளில் வந்து அமர்ந்து கொண்டு அவள் மார்பை தனது அலகால் சீண்டினான்.

 காக்காய் உருவில் வந்த ஜெயந்தா
சீதை தோள் மீது அமர்ந்தான் 
 

ஜெயந்தா காக்காய் பறவைகளை  தன்  ஆதிக்கத்தில் வைத்து இருந்தான். திடீர் என நிகழ்ந்த அந்த சம்பவத்தைப் பார்த்து சீதை பயந்து போய் அலறினாள். அவளுடைய அலறலைக் கேட்டு விழித்து எழுந்த ராமபிரான்  அவள் தோளில் அமர்ந்து இருந்த காக்கை பறந்து செல்வதைக் கண்டு அதன் மீது பிரும்மாஸ்திரத்தை ஏவினார். பிரும்மாஸ்திரம் தன்னைத் துரத்துவதைக் கண்ட ஜெயந்தன் தனது ரத்தத்தில் ஏறிக் கொண்டு உலகம் முழுவதையும் சுற்றி அனைத்து கடவுட்களிடமும் தஞ்சம் அடைந்தான். ஆனால் அவானை யாருமே ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஓடினான்…ஓடினான்…ஓடிக் கொண்டே இருந்தான். பிருமாஸ்திரமும் அவனை விடாமல் துரத்திக் கொண்டு செல்ல அவன் மும்மூர்த்திகளிடம் சென்று சரண் அடைந்தான். ஆனால் அவர்களும்  அவன் செய்த பாபச் செயலை மன்னிக்கத் தயாராக இல்லை என்பதினால் வேறு வழி இன்றி, அவன் மீண்டும் வந்து ராமரின் பாதங்களில் விழுந்து தன்னை மன்னித்து  விடுமாறு கதறினான். ஆனால்  ராமரோ தான் ஒருமுறை தீமையை அழிக்கும் காரணத்துக்காக  ஏவிய பிரும்மாஸ்திரத்தை  திரும்பப் பெற முடியாது என்பதினால் அந்த பிரும்மாஸ்திரத்தை  அவனுடைய ஒரு கண்ணை குத்தி எடுத்து விட்டு   திரும்ப வருமாறு கூற அவன் தனது வலது கண்ணை இழந்தான். வாய்மொழிக் கதையின்படி அதனால்தான் அது முதல்  தீயதை தமது உருவில் இருந்து செய்த அவனை விட்டு காக்காய் பறவைகள் விலகி அவன் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டன, அவை ஒரு கண்ணால் பார்க்கின்றது என்பார்கள். அதனால்தான் அதுமுதல் தீமைகளுக்கும் தண்டனைத் தரும் சனி பகவானின் வாகனமாக காக்காய் மாறியதாம்.

ஜெயந்தாவைப்  பற்றிய இன்னொரு கதை நரசிம்ம புராணத்தில்  காணப்படுகிறது.
ஒரு காலத்தில் யமுனை மற்றும் கங்கை நதிகளுக்கு இடையே இருந்தது அந்தர்வேதி என்ற இடம். அங்கு நரசிம்மரின் பக்தர் ஒருவர் பெரிய தோட்டத்தை உருவாக்கி இருந்தார். அதில் துளசி செடிகளைக் கொண்ட பிருந்தாவனமும், பிற மலர்களும் பூத்துக் குலுங்கின. அவர் அந்த பூக்களில் சிலவற்றை முதலில் நரசிம்மருக்கு போட்டு அர்ச்சனை செய்தப் பின்னரே மற்ற பூக்களை விற்று ஜீவனம் செய்து வந்தார். அவர் நரசிம்மருக்கு மாலையைத் தொடுக்க சில முக்கிய அற்புதமான பூச்செடிகளை  வளர்த்து இருந்தார். அவற்றை நரசிம்மருக்கு மட்டுமே முதலில் மாலையாகப் போடுவார். அந்த பூக்கள் வேறு எங்குமே கிடைக்காது என்ற அளவு அற்புதமானவை, நல்ல  மணம் கொண்டவை.  ஆகவே அவர் தனது தோட்டத்தில் இருந்து யாரும் பூக்களை திருடி எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது என்பதற்காக அந்த தோட்டத்தை சுற்றி  குடிசைப் போன்ற தடுப்புப் பரணை  அமைத்து இருந்தார்.

நரசிம்மரின்  பூஜைக்கு  பூக்களை கொடுக்க அவர் பக்தர் வளர்த்த தோட்டம் 

 
அதற்குள்தான் அவர் தன் குடும்பத்தினருடன் வாழ்ந்து வந்தார். அந்த தோட்டத்துக்குள் எளிதில் நுழையவே முடியாது. அதற்குள் நுழைய வேண்டுமானால் அந்த குடிசைப் போன்ற தடுப்புப் பரண் வழியே வந்து ஒரே ஒரு கதவின்  மூலமே உள்ளே நுழைய முடியும் என்ற முறையில் அதை உருவாக்கி இருந்ததினால் அந்த தோட்டத்தில் இருந்து யாராலும்  பூக்களை  எளிதில் பறித்துச் செல்ல முடியாது.
ஒரு நாள் அந்த வழியே சென்ற ஜெயந்தா அந்த தோட்டத்தில் பூத்துக் குலுங்கிய பூக்களைக் கண்டான். அவற்றை கொண்டு போய் தனது பெண் தோழிகளுக்கு கொடுத்து அவர்களை உற்சாகப்படுத்த எண்ணினான். அவனோ பெண்களை சுற்றித் திரிந்தவன் . ஆனால் உள்ளே நுழைய முடியாத அளவு காவல் கடுமையாக இருந்ததினால், நாடு இரவில் யாருடைய கண்களிலும் தெரியாத   மாய  பறக்கும் குதிரையில் ஏறி வந்து அந்த தோட்டத்தில் இறங்கி பூக்களை திருடிக்கொண்டு செல்லத் துவங்கினான்.

மாயக் குதிரையில் வந்தான் ஜெயந்தா 

நாட்கள் தொடர்ந்தன. நரசிம்மருக்குப் போடும் பூக்கள் தினமும் குறைவதைக் கண்ட பக்தன் ஒருநாள் இரவு முழுவது கண் விழித்திருந்து நடப்பவற்றைப் பார்த்தான். ஜெயந்தாவை தன்னால் சண்டைப் போட்டு ஜெயிக்க முடியாது என்பதினால் நரசிம்மரையே மனம்  உருகி வேண்ட அவர் அவனது கனவில் தோன்றிக் கூறினார் ‘ பக்தா கவலைப் படாதே, அந்த பூச் செடிகளை சுற்றி தினமும் எனக்கு போடப்படும் பூக்களை போட்டுவிடு.  நீ பூ பறிக்கச் செலும்போது அவற்றை எடுத்துவிட்டு பூக்களை பறித்து வா . மீண்டும் தோட்டத்தைப் பாதுகாக்க  அந்த அர்ச்சனைப் பூக்களை போட்டு விடு’.
கனவில் நரசிம்மர் கூறியபடி அவனும் மறுநாள், அர்ச்சிக்கப்பட்ட பூக்களை  எடுத்து வந்து தோட்டத்தில் இருந்த செடிகளை சுற்றி  பல இடங்களில் அரண் போலப் போட்டு விட்டான்.  அதை அறியாத ஜெயந்தா அன்று இரவும் வந்து தோட்டத்தில் இறங்கினான். நரசிம்மரின் அர்ச்சனைப்  பூக்கள் போடப்பட்டு இருந்ததை அறியாமல் அந்த  பூக்களை மிதித்தபடி தோட்டத்தில் இறங்கினான். அவ்வளவுதான் அவன் தன் பலம்  அனைத்தையும் இழந்தான் .

 தீமையை அழிக்கும் நரசிம்மர் 

 
கால்கள் வீங்கி நடக்க முடியவில்லை. மாயக் குதிரையோ நரசிம்மரின் அர்ச்சனைப்  பூக்களை மிதி விட்ட அவனை மீண்டும் தன் முதுகில் ஏற்றிக் கொள்ள மறுத்து விட்டது.  அவன் குதிரையிடம் கெஞ்சினான். ‘ எனக்கு மீண்டு தேவலோகம் செல்ல தயவு செய்து வழி கூறுவாயா’ எனக் கெஞ்சிக் கேட்க அந்த தேவ குதிரையும், அருகில் இருந்த குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமர் ஷேத்திரத்தின் நடைபெறும்  பன்னிரண்டு வருட யாகத்தில் சேவை செய்தால் விமோசனம் கிடைக்கும் எனக் கூறி விட்டு  சென்று விட அவன் செய்வதறியாது திகைத்தான்.  பறித்தப் பூக்களை  அப்படியே போட்டு விட்டு தன்னை மன்னித்து விடுமாறு  மனதார அந்த தோட்டத்தின் முதலாளியான  நரசிம்ம ஸ்வாமியின்  பக்தரிடம்  சென்று வேண்டிக் கொண்டு  அவருடைய உதவியைப் பெற்றுக் கொண்டு மெல்ல தட்டுத் தடுமாறி குருஷேத்திரத்தை அடைந்தான். அங்கு பன்னிரண்டு காலம் உணவைக் கூட அருந்தாமல் கடுமையான விரதம் பூண்டு அந்த யாகசாலையை தினமும்  பெருக்கி சுத்தம் செய்தது கொண்டு இருக்க பன்னிரண்டாவது வருட முடிவில் அவன் சாப விமோசனம் அடைந்து தேவலோகத்தை அடைந்தான். அதுமுதல் தீய பழக்கங்கள் அவனைவிட்டு மறைந்தன.
அந்த அர்ச்சனை செய்யப்பட்ட பூக்களுக்கு அத்தனை வலிமையா என்பதைக் குறித்து நாரதர் விளக்கியதான ஒரு கதையும் உள்ளது . ஒருமுறை மன்னன் சந்தனு தவறுதலாக அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்கள் மீது நடந்து சென்றுவிட்டான். அவ்வளவுதான் அவன் தனது அனைத்து சக்திகளையும் இழந்து விட்டான். அவனால் தன் ரத்தத்தில் கூட ஏற முடியவில்லை. அங்கு இருந்த நாரதரை அது குறித்துக் கேட்க நடந்ததை அறிந்த நாரதர் கூறினார் ” மன்னா, நீ செய்தது வேண்டும் என்றே தெரியாமல் செய்துள்ள தவறுதான். ஆனால் அர்ச்சிக்கப்பட்ட நரசிம்மரின் பூக்களை மிதித்து விட்டதினால் அந்த பாவம் உன்னை சும்மா விடாது. அதற்கு ஒரே வழி, குருஷேத்திரத்துக்கு சென்று அங்கு பரசுராமரின் பர்ணசாலையில் நடைபெறும் யாகசாலையை பன்னிரண்டு வருடம் சுத்தம் செய்து சேவை செய்தால் உன் சாபம் விலகும்’. சந்தனுவும் நாரத முனிவர் கூறியது போல அந்த வேலையை செய்து சாப விமோசனம் பெற்று தான் இழந்த அனைத்தை செல்வத்தையும், சக்தியையும்  மீண்டும் பெற்றுக் கொண்டான். ஆக நரசிம்மர் விஷயத்தில் மிக ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அதனால்தான் நரசிம்மர் ஆலயங்களுக்கு செல்லும்போது மிகவும் சுத்தமாகவும், பக்தி பூர்வமாகவும் இருக்க வேண்டுமென்பார்கள்.