201) அதே சமயம், தண்டிக்கப் பட்ட ‘B’ பிரிவை சேர்ந்தவர் தமது தவறை உணர்ந்து, தண்டனையினால் ஏற்பட்டுள்ள பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் கோரி, தங்களது குல தெய்வத்தை வேண்டிக் கொண்டு நியாயமான முறையில் பிரார்த்தனை செய்து வந்தால், எந்த தெய்வம் மூலம் அவர்கள் தண்டனை பெற்றார்களோ அந்த தெய்வம் சம்மதித்தால், அவர்களது தண்டனையை சில காலத்திற்குப் பிறகு ரத்து செய்யும் அதிகாரம் ‘B’ பிரிவை சேர்ந்தவர் வணங்கி வரும் குல தெய்வத்திற்கு உண்டு. இப்படியாக உள்ளுக்குள்ளேயே தெய்வங்களுக்கான பல விதி முறைகள் உள்ளன. அவை அனைத்துமே எதற்காக வைக்கப்பட்டு உள்ளன என்றால் எந்த ஒரு தெய்வங்களும் சக தெய்வங்களை அவமதிக்கும் விதத்தில் நடந்து கொண்டு விடக்கூடாது என்பதினால்தான். இப்படிப்பட்ட பிரும்ம நியதி முறைகள் அனைத்துமே மானிடர்களின் சிந்தனை எல்லைகளுக்கு அப்பாற்பட்டவை, விளங்காதவை .
202) தெய்வங்களின் கண்ணியத்தையும் மரியாதையையும் நிலை நிறுத்துவதற்காக, தெய்வ செயல் முறைகளில் பிரும்மா இது போன்ற பல விதிமுறைகளை வைத்து உள்ளார். ஏன் எனில் அனைத்து தெய்வங்களும் பரப் பிரும்மனின் தெய்வ கதிரலையில் இருந்து வெளி வந்தவர்களே என்பதினால் அவர்களை அவமானப்படுத்துவது, அல்லது குல தெய்வங்களின் அதிகாரத்தை குறைக்கும் வகையில் பிற தெய்வங்கள் செயல்படுவது போன்ற செயல்கள் அனுமதிக்கப்பட்டால் பரப் பிரும்மனின் தெய்வ தோற்றங்களின் செயலை இழிவு படுத்தும் விதத்தில் அமைந்து விடும் என்பதினால்தான் இத்தகைய கண்டிப்பான விதி முறைகள் உள்ளன.
203) மேலே உள்ள அனைத்தும் வெளிப்படுத்துவது என்ன என்றால், மனிதர்களைப் போலவே, தெய்வங்களும் சில நியதிகளுக்கு கட்டுப்பட்டவை என்பதை எடுத்துக் காட்டவும், நியாயமும், நேர்மையும், தர்மமும் பூலோகத்து மக்களுக்கு மட்டும் அல்ல தெய்வங்களுக்கும் பொருந்தும் என்பதைக் காட்டுவதற்கும்தான்.
204) தற்கால கணினியைப் போலவே, பிரும்மாவிடமும் சூப்பர் (மிக நேர்த்தியான) கம்யூட்டர் இருந்திருக்க வேண்டும் என்பதினால்தான் பரந்து விரிந்துள்ள இந்த பிரபஞ்சத்தில் எந்தெந்த இடத்தில் என்னென்ன தெய்வம் அவதரிக்க வேண்டும் என்பதையும், தெய்வங்களின் செயல்பாடுகளை தெரிந்து கொள்ளவும், தாம் வெளிப்படுத்திய ஆத்மாக்களின் ஜனன மரண விவரங்களை நுணுக்கமாக பதிவு செய்து வைத்துக் கொள்ளவும் அது அவருக்கு தேவையாக இருந்துள்ளது.
205) அனைத்து தெய்வங்களும், குல தெய்வங்களும் அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே சென்று அவதரிக்க வேண்டும் என்பது நியதி. அதனால் எந்த இடத்தில் அவர்கள் அவதரிக்க வேண்டுமோ அவற்றைக் குறித்து குழப்பமடையக் கூடாது என்பதற்காக பிரம்மா இந்த விதி முறையை நிறுவி உள்ளார்.
206) தெய்வங்கள் தமக்கு ஒதுக்கப்பட்ட நிலப்பரப்பில் சென்று அவதரித்தப் பின்னர், அந்த பூமியில் உள்ள ஆலயம் அல்லது வேறு எந்த இடத்தில் தாம் குடி கொள்ள வேண்டுமோ அந்த இடத்தை தேர்வு செய்த பின், அங்கு தமது தெய்வ சக்திகளை இறக்கி வைத்து விட்டு, அந்த ஊரில் உள்ள யாராவது கனவில் தோன்றியோ அல்லது சாமியாடிகள் மூலமோ தாம் இன்ன இடத்தில் இருப்பதாக தெரிவிப்பார்கள். அவர்களது கட்டளைகளுக்கு ஏற்ப உள்ளூர் ஜனங்களும் அந்த தெய்வம் கனவில் கூறிய அதே இடங்களில், அந்த தெய்வங்கள் கூறிய அதே உருவில், சிலைகளை செய்து வைத்து வழிபடுவார்கள்.
207) பிரம்மாவின் நியதியின்படி, தெய்வங்கள் எங்கு வெளிப்படுகிறார்களோ, அந்த இடத்தை புனிதமாகி, தமது தெய்வ சக்திகளை அங்கு இறக்கி வைக்க வேண்டும். அப்போதுதான் அங்கு அவர்களின் வழிபாட்டு தலம் அல்லது ஆலயம் எழும்பும். அந்த இடத்தில் சென்று பிரார்த்தனை செய்பவர்களுக்கு, அங்கு மிதந்து கொண்டிருக்கும் கண்ணுக்குத் தெரியாத அந்தந்த தெய்வங்களின் ஆற்றல் மிக்க தெய்வ சக்திகள், அவர்களது உடலை சூழ்ந்து கொண்டு ஒரு பாதுகாப்பு கவசத்தை போல அவர்களை பாதுகாக்கும். மேலும் அங்குள்ள தெய்வம் அவர்களது வாழ்க்கையில் இருந்து கொண்டு அவர்களை பாதுகாத்து வழி நடத்தி வருவார்கள்.
208) தெய்வங்கள் தாம் எங்கு வெளிப்பட வேண்டுமோ அந்த இடங்களில் கண்ணுக்குத் தெரியாத வடிவத்தில் அங்கேயே பூமிக்குள் சிலையாக மறைந்து இருந்தார்கள். தமது கனவுகளில் கூறப்பட்ட அதே இடங்களுக்கு உள்ளூர்வாசிகள் சென்று, பூமிக்குள் புதைந்து இருந்த அந்த சிலைகளை தோண்டி எடுத்து அதே இடத்தில் சிறிய ஆலயம் அல்லது வழிபாட்டு தலம் எழுப்பி அதற்குள் அந்த சிலைகளை பிரதிஷ்டை செய்து வணங்கினார்கள்.
209) இப்படியாக தாம் எங்கு வெளிப்பட வேண்டுமோ அந்த இடங்களில் எல்லாம் குல தெய்வங்கள் எவராவது மூலம் தம்மை வெளிப்படுத்திக் கொண்டு, தமக்கு ஒரு ஆலயத்தை நிறுவ வைத்த பின்னர், அங்கு சிலையாக பிரதிக்ஷை செய்யப்பட்டு இருந்த தம்மை வழிபட்டவர்களுக்கு, காலபோக்கில் அவர்களே குலதெய்வமாக மாறினார்கள்.
210) தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் முதலில் வெளிப்பட்ட தெய்வம் மீண்டும் இன்னொரு இடத்தில் சென்று வெளிப்பட முடியுமா? இந்த கேள்வி எழக் காரணம் ஒரு குறிப்பிட்ட இடத்தில், ஒரு குறிப்பிட்ட உருவத்தில் தோன்றிய அதே தெய்வங்களின் சிலைகள் பல இடங்களில் உள்ள ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளதினால், பண்டிதர்கள், அந்த குல தெய்வத்தை எந்த ஆலயத்தில் சென்று ஆராதித்தாலும் தவறில்லை என்பார்கள்.
211) ஆனால் அந்த கூற்று குறிப்பிட்ட ஆலயங்களில், குறிப்பிட்ட முறையில் விசேஷ மந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள குல தெய்வத்தை வணங்குவதற்கும், பிற தெய்வங்களை வணங்குபவர்களுக்கும் பொருந்தாது. ஆனால் வெவ்வேறு இடங்களில் காணப்படும் ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அதே தெய்வங்களின் சிலைகளுக்கு பூஜை செய்வதையோ அல்லது வழிபடுவதையோ பிரும்ம நியதி தடை செய்யவில்லை.
212) பிற ஆலயங்களுக்கு சென்று தாம் பூஜிக்கும் அதே தெய்வங்களை (குல தெய்வங்களை) வணங்கி துதிக்கும் போது மற்ற பக்தர்களுக்கு கிடைக்கும் அதே விதத்திலான அருள் அவர்களுக்கு கிடைக்கும் என்றாலும், மூல ஆலயத்தில் அதாவது எங்கு அந்த தெய்வம் முதலில் தோன்றி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்ததோ அந்த ஆலயத்தில் சென்று அந்த தெய்வத்தை வணங்கித் துதிக்கும்போது கிடைக்கும் பலன்கள் பிற ஆலயங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள அதே தெய்வத்தை சென்று வணங்கும்போது கிடைக்காது. காரணம் அங்கு வெளிப்படும் தெய்வீகக் கதிர்களின் சக்திகள் மூல ஆலயத்தில் வெளிப்படும் தெய்வீகக் கதிர்களின் சக்திகளின் அளவில் இருக்காது.
213) கீழ் கண்ட உதாரணத்தின் மூலம் இதை புரிந்து கொள்ளலாம். தமிழ்நாட்டில் பரவியுள்ள பல்வேறு கிராமங்களில் ஐயனாருக்கு பல சன்னதிகள் இருந்தாலும், சுந்தர் என்பவரின் குடும்பத்தினர் நாமக்கல் கிராமத்தில் (நீல நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஒரு ஐயனாரை தங்கள் குல தெய்வமாக வழிபட்டு வந்தனர்.

214) அதே ஐயனார் ஆலயங்கள் மேலும் (ஒரே உருவம் மற்றும் அனைத்து அம்சங்களிலும் அதே தன்மைகளைக் கொண்டவை) வேறு சில கிராமங்களில் இருந்தன (மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, அடர் மஞ்சள் போன்ற பிற வண்ணங்களில் காட்டப்பட்டுள்ளன). சுந்தரின் குடும்பத்தினர் நீல நிறத்தில் காட்டப்பட்டு உள்ள கிராமத்தில் இருந்து அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு குடி பெயர்ந்து சென்று விட்டார்கள். அங்கிருந்த ஆலயத்தில் இருந்த தமது குல தெய்வத்தைப் போன்ற ஐயனாரை தனது குல தெய்வமாகக் கருதி வழிபட்டு வரத் துவங்கி, தனது மூல குல தெய்வ ஆலயத்திற்கு (நீல நிறத்தில் உள்ள கிராமத்தின் ஆலயம்) சென்று பிரார்த்தனை செய்வதை நிறுத்தி விட்டார்.
215) அப்படிப்பட்ட நிலையில் அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள கிராம ஆலயத்தில் சுந்தர் குடும்பத்தினர் செய்யும் பிரார்த்தனைகளை மூல ஆலயத்தில் (நீல நிறத்தில்) உள்ள அவரது குல தெய்வம் ஏற்குமா? அவர்களுக்கு மூல ஆலயத்தில் கிடைத்து வந்த அதே அளவிலான அருளாசி கிடைக்குமா? நிச்சயமாக அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள கிராம ஆலயத்தில் சுந்தர் குடும்பத்தினர் செய்யும் பிரார்த்தனைகளை அவர்களது குல தெய்வம் ஏற்கும் என்றாலும், அங்கு அவர்களுக்கு கிடைக்கும் அருளின் பலன்கள் மூல ஆலயத்தில் கிடைக்கும் பலனைப் போன்ற முழுமையான அளவில் இருக்காது.
216) ஆனால் அதில் ஒரு சின்ன விதி விலக்கு உள்ளது. சுந்தரின் குடும்பத்தினர் ஒரு சில வருடங்களில் ஒரு முறையாவது மூல ஆலயத்திற்கு சென்று வழிபட்டு வந்தார்கள் என்றால், அடர் மஞ்சள் நிறத்தில் உள்ள கிராம ஆலயத்தில் சுந்தர் குடும்பத்தினர் செய்யும் பிரார்த்தனைகளை அவர்களது குல தெய்வம் முழுமையாக ஏற்றுக் கொண்டு முழுமையான ஆசிகளை வழங்கும். அதன் காரணம் நீல நிறத்தில் உள்ள கிராம மூல ஆலயத்தில்தான் சுந்தரின் குல தெய்வத்தின் அனைத்து சக்திகளும் அடங்கி உள்ளது.
217) மற்ற கிராமங்களில் உள்ள ஆலயங்களில் அதே தெய்வம் முறைப்படியான சக்தி மந்திரங்களுடன் பிரதிஷ்டை செய்யப்பட்டு வைக்கப்பட்ட இருந்தாலும், அதன் தன்மை மூல ஆலயத்தில் உள்ள குல தெய்வத்தின் சக்திக்கு இணையாக இருக்க முடியாது.
218) மூல ஆலயத்தில்தான் அந்தந்த குல தெய்வங்களின் முழுமையான சக்திகளும் அடக்கி வைக்கப்பட்டு உள்ளன என்பதினால் அங்கு சென்று அவரவர் குல தெய்வத்தை வணங்குகையில், அங்கு மிதந்து கொண்டிருக்கும் தெய்வீக சக்திகள், அங்கு சென்று தமது குல தெய்வத்திடம் பிரார்த்தனை செய்பவர்களின் உடல்களுக்குள் ஊடுருவுகின்றன. குறிப்பிட்ட இடத்தில் பிரார்த்தனை செய்யும்போது பல பக்தர்கள் உணரும் அதிர்வு எனப்படுவது இதுதான். நீல நிறத்தில் உள்ள ஆலயத்தில் உள்ள குல தெய்வம், மஞ்சள், அடர் மஞ்சள், பச்சை மற்றும் ஆரஞ்சு நிறப் பகுதிகளில் உள்ள ஆலயங்களுக்கு சென்று வணங்கும், தமது கட்டுப்பாட்டில் உள்ள குடும்பத்தினரை ஆசீர்வதிக்க மாட்டார்கள் என்பது அர்த்தம் அல்ல. தொலை தூரத்தில் உள்ளவர்களால் பயணங்களை மேற்கொள்ள முடியாத நிலை ஏற்படும் போதும் மற்றும் பிற காரணங்களால், பக்தர்கள் தமது குல தெய்வத்தை வழிபட அதன் மூல ஆலயத்திற்கு செல்ல முடியாத போதும், அதே தெய்வத்தை அருகில் உள்ள ஆலயத்தில் சென்று வழிபட்டால் குல தெய்வங்கள் அவர்களை கைவிட்டு விடாது. ஆனால் அந்த குடும்ப உறுப்பினர்கள் தங்கள் வாழ்நாளில் குறைந்தது ஒரு முறை அல்லது இரண்டு முறையாவது மூல பிரதான கோவிலுக்குச் சென்று அங்கு பிரார்த்தனை செய்ய வேண்டும்.

219) சில சமயங்களில் பல தெய்வங்கள் எங்கு தாம் குடி இருக்க வேண்டுமோ அந்த இடத்தில் உள்ள பாறைகள், எறும்பு புற்றுக்கள் அல்லது பிற ஜடப் பொருட்களுக்குள் ஊடுருவி அமர்ந்து விடும் (ஒவ்வொன்றிலும் கண்ணுக்குத் தெரியாத உயிர்கள் இருந்தாலும் வெளித் தோற்றத்தில் ஜடத் தன்மை கொண்டவை). இவ்வாறு தெய்வங்கள் அந்தந்த பொருட்களுக்குள் நுழைந்தவுடன் அந்த தெய்வங்களின் தெய்வீக ஆற்றல்கள் அங்கு இறக்கி வைக்கப்படும்போது, அவை அனைத்துமே அவர்கள் விரும்பும் தோற்றத்திலான வடிவத்தை அடைந்து புனிதமாகி விடும். பல நூற்றாண்டுகளுக்கு பிறகு, அந்தந்த தெய்வங்களின் கட்டளைகளின்படி அந்த தெய்வங்களின் சிலைகள் தோண்டி எடுக்கப்பட்டு ஆலய சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டு வழிபடப்படும். மூல விக்கிரகங்கள் நிறுவப்பட்டுள்ள அந்த ஆலயங்களில் சக்தி வாய்ந்த தெய்வீக அலைகள் மிதந்து கொண்டிருப்பதை அங்கு செல்பவர்களால் உணர முடியும். தெய்வங்கள் நேரடியாக வெளியிடும் சக்தி வாய்ந்த தெய்வீக ஆற்றல் அலைகள் அந்த தெய்வத்தைப் போன்ற தெய்வீக சிலைகள் நிறுவப்பட்ட மற்ற ஆலயங்களில் இருக்க முடியாது.
220) Deleted
221) சில தெய்வங்கள் பூமியில் சாப விமோசனத்தை பெற்றுக் கொள்ள பூமிக்கு வந்து தவம் செய்துவிட்டு தேவலோகத்துக்கு திரும்பிச் செல்லும் வரை தங்கள் அடையாளத்தை வெளிப்படுத்துவதில்லை. தவம்
222) காலப்போக்கில் அந்த கிராமங்கள் நகரங்களாக மாறியபோது அந்த தெய்வங்களின் தெய்வ சக்திகளைக் கேள்விப்பட்ட மன்னர்கள் சிலர் தமது ஆட்சியின் போது அந்த சிறிய கிராம ஆலயங்கள் சிலவற்றை பெரிய ஆலயங்களாக மாற்றி அமைத்தார்கள். பண்டைய காலங்களில் பூமியில் கிடைத்த தெய்வங்களை பிரதிஷ்டை செய்த (சிறிய கிராம ஆலயங்களில் இருந்த தெய்வங்களை) சில குடும்பத்தினர் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபாட்டு வந்தார்கள். இதனால்தான் பெரும்பாலான குடும்பத்தினரின் குல தெய்வ ஆலயங்கள் இன்றும் தொலைதூர கிராமங்களிலும், வனப் பகுதிகள், மலைகள், வயல் வெளிகள் நிறைந்த இடங்களில், எளிதில் செல்ல முடியாத இடங்களிலும் உள்ளன.
223) கிராம தேவதைகளைக் குறித்து நான் ஏற்கனவே கட்டுரை வெளியிட்டு உள்ளேன். அவற்றை கீழ்கண்ட தளங்களில் படிக்கலாம் :
224) a) https://santhipriya.com/2013/03/கிராம-தேவதைகளும்-வைதீக-த-3.html in English
b) https://santhipriya.com/2013/03/கிராம-தேவதைகளும்-வைதீக-த-4.html in Tamil language.
225) ஆலயங்கள் மற்றும் வழிபாட்டு தலங்கள் எந்த காலகட்டத்தில் கட்டப்பட்டன என்பது உறுதியாக தெரியாத நிலையில் உள்ளன. வரலாற்றாசிரியர்களின் கூற்றுப்படி, வேத காலத்தில் ஆலயங்களோ வழிபாட்டு தலங்களோ காணப்படவில்லை. ஆனால் AD 1500 ஆண்டு முதல் AD 1600 வரையிலான காலகட்டத்தில் முதன் முதலில் ஆப்கானிஸ்தானில் சில ஆலயங்கள் இருந்ததை கண்டு பிடித்தார்களாம்.
226) அதை போலவே கம்போடியா, தாய்லாந்து, ஈரான், பாகிஸ்தான், மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஆப்பிரிக்கா போன்ற ஆசியாவின் பல பகுதிகளிலும் ஆலயங்கள் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டாலும், ஆச்சரியப்படும் விதமாக, அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் அவற்றைப் போன்ற ஆலயங்கள் காணப்படவில்லை அல்லது சிலை வழிபாடு இருந்ததாகத் தெரியவில்லை. இருப்பினும், வேத கால பிற் பகுதியில், நகரங்களில் இருந்து மிகத் தொலை தூரத்தில் இருந்த கிராம ஆலயங்களில் மந்திரங்கள் ஓதப்பட்டு சிலை வழிபாடு நடைபெற்று வந்ததாக கூறுகின்றார்கள். அப்படி வழிபடப்பட்ட தெய்வங்களை கிராம தேவதைகள் அல்லது காவல் தெய்வங்கள் எனக் கூறினார்கள். அத்தகைய வழிபாட்டுத் தலங்களில் வழிபடப்பட்டு வந்திருந்த தெய்வங்கள் பெரும்பாலானவை மேல் கூரையின்றி மூன்று பக்கமும் சேற்றால் கட்டப்பட்ட சுவர்களுடன் காணப்பட்டன அல்லது ஆங்காங்கே இருந்த சிறிய குகை போன்ற இடங்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டன .
227) குலதெய்வங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டு இருந்த ஆலயங்களில் மிதந்து கொண்டு இருக்கும் தெய்வங்களின் தெய்வீக சக்திக் கதிர்கள் பக்தர்களின் உடல் மீது ஒரு கவசம் போல சுற்றிக் கொண்டு விடும். அந்த பாதுகாப்பு கவசம் சில காலம் நீடிப்பதினால் (அந்த தற்காலிகப் பாதுகாப்பு எவ்வளவு காலம் நீடிக்கும் என்பது தெரியவில்லை) எதிர்மறை ஆற்றல்கள் சக்திகள் அவர்களது உடலில் சென்று ஊடுருவுவதைத் தடுக்கின்றன. அதனால்தான் அந்த காலத்தில் அப்படி ஒரு பாதுகாப்பு கவசத்தை பெற்றுக் கொள்ள மூதையார்கள் அவர்களது வீட்டின் அருகில் இருந்திருந்த குலதெய்வ ஆலயத்திற்கு தினமும் சென்றார்கள். வெளியூரில் இருந்தால் வருடத்திற்கு ஒரு முறையாவது அந்த ஆலயத்திற்கு சென்று தரிசனம் செய்வதை ஒரு நடைமுறையாகவே வைத்துக் கொண்டு இருந்தார்கள்.
228) ஒரு சிலருக்கு ஒரு ஐயம் உண்டாகலாம், ஒவ்வொரு குல தெய்வத்திற்கும் பல்வேறு இடங்களிலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் உள்ள நிலையில் ஒவ்வொருவரிடமும் நேரடியாக சென்று அவர்களை எப்படி பாதுகாத்து வர முடியும்? குல தெய்வம் எவரிடமும் நேரடியாக சென்று அவர்களை வழி நடத்தி பாதுகாக்க முடியாது. அவர்கள் அதை கண்களுக்குத் தெரியாமல் தம்மிடம் உள்ள தமது கணங்களின் மூலம் செய்வார்கள். மேலும் ஒவ்வொரு குல தெய்வங்களின் உடல்களில் இருந்தும் தமது பக்தர்களை பாதுகாக்கும் தெய்வீக கதிர்கள் வெளியாகிக் கொண்டே உள்ளன, அவைகளும் அவர்களை பாதுகாத்தவண்ணம் இருந்தவாறு நல்வழியில் செல்ல வழி வகுக்கின்றன.
229) ஒவ்வொரு குடும்பத்திலும் மரணம் அடைந்து விட்டவர்களது ஆத்மாக்கள் பித்ரு லோகத்தில் சென்று அங்கு தெய்வ (பித்ரு) கணங்களாக வசித்து வரும். அந்த பித்ருக்கள் வணங்கி வந்திருந்த குல தெய்வத்தை அவர்களது குடும்பத்தினர் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு விடும்போது, அந்தந்த குடும்பங்களை சேர்ந்த பித்ரு கணங்கள், அந்தந்த குல தெய்வங்களினால் அழைக்கப்பட்டு, தமது சக்திகளை அவர்களுக்கு தந்து அவற்றை தமது தெய்வ கணங்களாக மாற்றிய பின்னர், அவர்கள் மூலம் அவர்களது குடும்பத்தினரை வழி நடத்தி வரும்.
230) இப்படியாக குல தெய்வங்கள் மட்டும் அல்ல பிற தெய்வங்களும் ஒவ்வொரு குடும்பங்களின் பித்ரு கணங்கள் மூலமே தமது அருளாசிகளை தம்மை வேண்டித் துதிப்போர்க்கு தருகின்றன. அதன் காரணம் ஒரு குடும்பத்தின் பித்ருக்களால் மட்டுமே அந்தந்த குடும்பத்தினரை அடையாளம் காண முடியும் என்பதாகும். இதனால்தான் ஒவ்வொரு குடும்பத்தினரும் தமது பித்ருக்களை மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் வகையில் அவர்களுக்கு செய்ய வேண்டிய வருடாந்திர சடங்குகளை தவறாமல் செய்து வர வேண்டும் என்பதாக கூறுவார்கள்.

231) பொதுவான தத்துவம் என்ன என்றால் மூன்று முதல் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறையாவது குடும்ப உறுப்பினர்களில் யாராவது ஒருவர் அவரவர்களது குல தெய்வ ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு திரும்ப வேண்டும். அப்போது அவர்களது உடலுக்குள் கண்களுக்கு புலப்படாத குல தெய்வ பாதுகாப்புக் கவசங்கள் ஊடுருவிக் கொண்டு விடுகின்றன. அவர்களை அறியாமலேயே அவற்றை உள்வாங்கி கொண்டு வந்து விடும்போது அவர்களை அறியாமலேயே பிற குடும்ப உறுப்பினர்களையும் அவற்றை உளவாக்கிக் கொள்ள வைத்து விடுகின்றார்கள். அந்த குடும்பத்தை சேர்ந்தவர் எத்தனை தூரத்தில் இருந்தாலும், அங்கெல்லாம் செல்லக் கூடிய சக்தி கொண்டவை அந்த தெய்வங்களின் தெய்வ சக்திக் கதிர்கள் என்பதினால் ஒரு குடும்ப உறுப்பினர் உள் வாங்கிக் கொண்டு வந்திருந்த பாதுகாப்பு தெய்வ சக்திக் கதிர் அலைகள் குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் சென்றடையும். இதுதான் குல தெய்வ சக்தி ஆகும்.
232) குல தெய்வ ஆலயங்களுக்கு செல்லும் அந்தந்த குல தெய்வ பக்தர்களுக்கு மட்டுமே அந்த தெய்வங்களின் அருளாசிகளால் ஆன தெய்வ கதிர்களின் பாதுகாப்பு கிடைக்கும் என்பது அர்த்தம் இல்லை. அங்கு சென்று வழிபடும் பிற பக்தர்களுக்கும் அந்தந்த ஆலய தெய்வங்களின் தெய்வீக கதிர் அலைகளின் பாதுகாப்பு கிடைக்கும் என்றாலும் ஆனால் அவை தாற்காலிகமாகவே இருக்கும். அந்த தெய்வங்களை குல தெய்வமாக ஏற்று அங்கு சென்று வணங்கும் பக்தர்களுக்கு அந்த தெய்வீக கதிர்களின் பாதுகாப்பு நிரந்தரமாகவே உள்ளது.
233) ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை தங்கள் குல தெய்வமாக வைத்திருந்து வழிபட்ட குடும்பம் எதோ ஒரு காரணத்திற்காக குல தெய்வ வழிபாட்டைப் புறக்கணிக்கத் துவங்கினால், அந்தச் செயல் தெய்வ குற்றமாக கருதப்படும். அப்படி குல தெய்வ வழிபாட்டை உதாசீனம் செய்த குடும்பத்தின் ஏழு தலை முறைகளும் தெய்வ சாபத்தை பெறுவார்கள். அந்த சாபத்தை விலக்கிக் கொள்ள அடுத்தடுத்த தலை முறையை சேர்ந்த குடும்ப உறுப்பினர்கள் பல சிறப்பு வழிபாடுகள் மற்றும் பிரார்த்தனைகளை செய்து, குல தெய்வத்தின் கோபத்தை அடக்கி அதன் அருளுடன் சாபத்தை விலக்கிக் கொள்ள வேண்டி வரும்.

234) 90% க்கும் அதிகமான குலதெய்வங்கள் கிராமப்புறங்களில் காணப்படுகின்றன என்பதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருக்கிறது. முன்பு கூறியது போல், அந்த தெய்வங்களின் தெய்வ சக்திகள் பிரதான தெய்வங்களுக்கு எந்த விதத்திலும் குறைந்தது இல்லை. அவர்களது பக்தர்களுக்கு நேரடியாக அருள் புரியும் அளவிலான சக்திகளைக் கொண்டவை. அது மட்டும் அல்ல அதே தெய்வங்கள் எந்த ஒருவருக்கு குல தெய்வம் இல்லையோ, எவர் ஒருவர் அந்த தெய்வத்தை தமது இஷ்ட தேவதையாக கொண்டு வழிபடுவார்களோ அவர்களது பிரார்த்தனைகளுக்கும் பதிலளிக்கும் விதத்திலான அதிகாரமும் பெற்றுள்ளன. ஆனால் அதே சமயத்தில் அப்படிப்பட்ட பக்தர்களுடைய பிரார்த்தனைகளுக்கு அருள் புரியும்போது தம்மை குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வழிபடும் குடும்பத்தினருக்கு எந்த வகையிலான பாதிப்பும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதும் நியதி ஆகும்.
235) முதல் மூன்று யுகங்களில் வெளிப்பட்ட தெய்வங்களின் எண்ணிக்கை, கலி காலத்தில் தோன்றிய தெய்வ எண்ணிக்கையை விட மிக குறைவாகவே உள்ளது. வேத சாஸ்திரங்கள், ராமாயணம் மற்றும் மகாபாரதம் மற்றும் இந்து மதத்தில் உள்ள பல நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை விட தற்போதைய கலியுகத்தில் காணப்படும் தெய்வங்களின் எண்ணிக்கை மிக அதிக அளவில் உள்ளது.
236) இந்த உலகை செயல்படுத்த வைக்கும் முன்பாகவே பிரும்ம தேவர் ஒவ்வொரு நிலத்திற்குமான தன்மைகளையும், குல தெய்வங்கள் உட்பட என்னென்ன தெய்வங்களை படைக்க வேண்டும், அவர்கள் எங்கெங்கு தோன்ற வேண்டும் என்பவற்றையும் மிக நேர்த்தியாக கணக்கிட்டு வைத்திருக்கின்றார் என்றே தெரிகின்றது.
237) ஒரு இடத்தில் எத்தனை குலதெய்வங்கள் மற்றும் கிராம தெய்வங்கள் வெளிப்பட வேண்டும் என்பதற்கு விதிமுறை உள்ளதா? பிரும்மா தெய்வங்களை பூமிக்கு அனுப்பியபோது குறிப்பிட்ட எண்ணிக்கையிலான குடும்பங்களுக்கு இத்தனை குல தெய்வங்கள், இத்தனை கிராம தெய்வங்கள் மற்றும் காவல் தெய்வங்கள் தேவை என்பதை கணக்கிட்டே அவர்களை பூமிக்கு அனுப்பி அவதரிக்கச் செய்தார். ஆனால் அது குறித்து விரிவான விளக்கத்தை பண்டிதர்களால் தர முடியவில்லை.
238) குலதெய்வ வரலாற்றில், மிக முக்கியமான மற்றும் சுவாரஸ்யமான அம்சம் என்னவென்றால், பிரதான தெய்வங்களான சிவபெருமான், விஷ்ணு மற்றும் பார்வதி தேவி போன்ற தெய்வங்கள் குல தெய்வமாக வழிபடப்படவில்லை.
239) தெய்வ வழிபாடு தொடங்கிய பண்டைய காலத்தில் வழிபடப்பட்ட தெய்வங்கள் யார்? கிராமங்களின் நல் வாழ்வோடு தொடர்புடைய தெய்வங்கள், முக்கியமாக பெண் தெய்வங்கள், வன்முறை தோரணையிலோ அல்லது கருணை உள்ள வடிவிலோ வணங்கப்பட்டன. அப்போது கிராமங்களில் பிராமணர்கள் மற்றும் பிராமணரல்லாதவர்கள் போன்ற எந்தப் பிரிவும் இல்லை. கிராமத்தில் இருந்த அனைவரும் ஒரே வழிபாட்டுத் தலங்களில் சென்று, ஒரே தெய்வத்தை வணங்கினர். அவை கிராம தெய்வமாகவோ, காவல் தெய்வமாகவோ அல்லது கற்கள் அல்லது ஆவிகள் வடிவில் அறியப்படாத தெய்வமாகவோ இருந்துள்ளது என்பதாக தெரிகின்றது.
240) குல தெய்வமாக வணங்கப்பட்டு வந்துள்ள தெய்வங்களை நாம் கவனமாக ஆராய்ந்தால், சுமார் 85% தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளதை பார்க்கலாம். அவர்கள் அனைவருமே பெரும்பாலும் பார்வதியின் அவதாரங்களாக இருந்துள்ளார்கள். 10% ஆண் அவதாரங்களில் விஷ்ணு அல்லது சிவன் போன்ற தெய்வங்களின் நிழல் அவதாரங்கள், மற்றும் 5% பிரிவில் சில முதல்நிலை தெய்வங்கள் உள்ளார்கள். விநாயகர், ஹனுமான், விஷ்ணு, சிவன், பிரம்மா, சரஸ்வதி, மகாலட்சுமி அல்லது சந்திரன், சூரியன், சனீஸ்வரன் மற்றும் கிருஷ்ணர் போன்றவர்கள் குல தெய்வமாக வழிபடப்பட்டதாக தெரியவில்லை.
241) இந்த பிரபஞ்சத்தின் பல நாடுகளிலும் பல்வேறு மதங்கள் உள்ளன. அவர்கள் அனைவருக்கும் தெய்வங்கள் உண்டு. ஒவ்வொரு பிரிவினருக்கும் அவரவர் நம்பிக்கைகள் உள்ளன என்பதை எல்லாம் பார்க்கும்போது நமக்கு முன் எழும்பும் முக்கியமான கேள்வி என்ன என்றால் இந்த பிரபஞ்சத்தில் எத்தனை தெய்வங்கள் உள்ளன?
242) யஜுர் வேத கூற்றின்படி 33 கோடி தெய்வங்கள் உள்ளனர். (Ref : https://en.wikipedia.org/wiki/Hindu_deities). மற்றொரு கருத்தின்படி 33 கோடி தெய்வங்கள் அல்ல மொத்தம் 33 மில்லியன் கடவுள்கள் அதாவது 33,000,000 உள்ளனர் என்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது (Ref: https://www.huffpost.com/entry/the-33-million-demigods-o_b_1737207).
243) அந்த கணக்கில் ஆண் மற்றும் பெண் தெய்வங்கள், துணை தெய்வங்கள், தேவ கணங்கள், தேவதைகள், மோகினிகள் மற்றும் யோகினிகள் ஆகியோர் அடங்கி இருக்கலாம். பிற மதத்தினர் வணங்கும் தெய்வங்கள் கணக்கில் எடுக்கப்படாமல் விடப்பட்டு இருக்கலாம். அதன் காரணம் யஜுர் வேதம் எழுதப்பட்ட காலத்தில் இந்து மதத்தைத் தவிர வேறு எந்த மதமும் இருந்திருக்கவில்லை.
244) இருப்பினும், மொத்தம் எத்தனை தெய்வங்கள் இருந்துள்ளன என்பதைக் குறித்து கூறப்பட்டு உள்ள இரண்டு புள்ளி விவரங்களும் தவறானவை என சில ஆய்வாளர்களால் கூறப்படுகின்றன. அவர்கள் கூற்றின்படி வேதங்களில் குறிப்பிடப்பட்ட 33 கோடி கடவுள்கள் என்ற சொல் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, 33 கோடி என்பது 33 வகைகளைக் குறிக்கிறது என்பதே அவர்களது வாதம் ஆகும்.
245) ஒரு ஆய்வாளரின் கருத்தின்படி ‘’33 கோடி கடவுள்கள் என்பது முற்றிலும் தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு உள்ளது. வெளிநாட்டு அறிஞர்கள் சமஸ்கிருதத்தை தவறாக மொழி பெயர்த்துள்ளனர். அதர்வண வேதம், யஜுர் வேதம் மற்றும் சதபத-பிரம்மாணா எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ‘த்ரயஸ்த்ரீம்சதி கோடி’ என்ற சொல் 33 கோடி அல்ல முப்பத்தி மூன்று (33) கடவுள்கள் என்று சரியாக மொழி பெயர்க்கப்பட்டு இருக்க வேண்டும். சமஸ்கிருதத்தில் கோடி என்ற சொல்லுக்கு இரண்டு அர்த்தம் உண்டு, ஒன்று ‘வகை’ மற்றொன்று கோடி என்பதாகும். (Ref : http://www.thenewsnow.co.in/newsdet.aspx?q=7208). எனவே கோடி என்ற சொல் எத்தனை வகைகளிலான தெய்வங்கள் என்பதை குறிக்கின்றது என்று கூறுகின்றார்.
246) இன்னொரு கருத்தின்படி பதிவு செய்யப்பட்ட வரலாற்று செய்திகளின்படி 8,000 முதல் 12,000 தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்துள்ளதைக் காண முடிகின்றது. அவை அனைத்துமே ஒன்பது வகைகளிலான தெய்வங்கள். அவற்றில் 5 வகைகளிலான தெய்வங்கள் இந்துக்களால் வணங்கப்பட்டவை ஆகும். (Ref: https://lisbdnet.com/how-many-gods-are-there-in-the-world/).
247) மானுடவியலாளர்கள் கூற்றின்படி இந்த பிரபஞ்சத்தில் குறைந்தது 18,000 வகைகளிலான தெய்வங்கள் வணங்கப்பட்டு வந்துள்ளன. பிரபஞ்சத்தில் இன்றைய ஜனத் தொகையில் சுமார் 80 சதவிகிதம் மக்கள் ஏதாவது ஒரு வகையிலான தெய்வ வழி/ஆன்மீக மார்கத்தை சார்ந்தவர்கள் என்று கூற முடியும் (ref: https://www.psychologytoday.com/us/blog/your-brain-food/202107/why-do-humans-keep-inventing-gods-worship). அவர்கள் பலதரப்பட்ட தெய்வங்களை வணங்குபவர்களாகவும் இருக்கின்றார்கள்.
248) தெய்வங்களாக கருதப்படும் கிராம மற்றும் காவல் தெய்வங்கள் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டனவா என்பது தெரியவில்லை. நிச்சயமாக, நாம் வணங்கும் தெய்வங்களின் எண்ணிக்கை 33 கோடியாகவோ அல்லது 33 மில்லியனாகவோ அல்லது வெறும் 33 என்பதாகவோ இருக்க வாய்ப்பில்லை.
249) பல்வேறு பதிவு கணக்குகள் குழப்பத்தை உருவாக்குவதால், அவை அனைத்தையும் புறக்கணித்து விட்டு, உண்மை நிலையை மற்றொரு கோணத்தில் ஆய்வு செய்வது நல்லது.
250) 2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் பரந்த நிலப்பரப்பில் மட்டும் 6,40,930 கிராமங்கள் பரவியுள்ளன (Ref: https://testbook.com/question-answer/how-many-villages-are-approximately-there-in-ind–5e1d7f7cf60d5d2d6cf1c8ee).
251) தெய்வ வழிபாடு இல்லாத ஒரு கிராமம் கூட இந்தியாவில் இல்லை. பெரும்பாலான கிராம தெய்வங்கள் அவர்களது தோற்றத்தில் ஒன்றுடன் ஒன்று மாறுபட்டு உள்ளன. எனவே, நியாயமான மதிப்பீட்டின்படி இந்தியாவில் மட்டும், 50% கிராமங்களில் உள்ள மக்கள் ஏதோ ஒரு வகையான தெய்வத்தை வணங்கி வரலாம் என்பதை பார்க்கும்போது சுமார் மூன்று லட்ச தெய்வங்கள், அதாவது ஒரு கிராமத்திற்கு ஒன்று என்ற கணக்கில் உள்ளூர் மக்களால் வழிபடப்பட்டு வருகின்றன என்பதை ஒரு அனுமானமாக கூறலாம்.
252) நான் எழுதி உள்ள அனைத்து செய்திகளையும் படிக்கும் போது, இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு லட்சத்துக்கும் குறையாமல் பல தெய்வங்கள், பல வடிவங்களிலும், தோற்றங்களிலும் இருக்கலாம் என்பது தெரியும். அவை அனைத்துமே வெவ்வேறு நாடுகளைச் சேர்ந்த வெவ்வேறு மதத்தினர் வணங்கித் துதிக்கும் தெய்வங்கள் ஆகும்.
253) ஆப்பிரிக்காவில் உள்ள பல பழங்குடியினர் பல தெய்வங்களை வழிபடுகிறார்கள். 1989 ஆம் ஆண்டில், எழுபது மில்லியனுக்கும் அதிகமான அளவிலான ஆப்பிரிக்க மக்கள் ஆப்ரிக்காவில் சிறந்த மதமாக காணப்பட்ட யோருபா மதத்தின் ஏதாவது ஒரு பிரிவை கணக்கிடப்பட்டது. யோருபா மதம் பரவலாக ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா மக்களை ஈர்த்து இருந்தது.
254) நைஜீரியாவின் மூன்று முக்கிய இனக் குழுக்களில் ஒன்றான யோருபா, ஒரே இன மற்றும் கலாச்சார தோற்றம் போன்றவற்றைக் கொண்டு இருந்தாலும், அவை மூன்றுமே வெவ்வேறு மாநிலங்களில் ஊன்றி இருந்தன. யோருபாவில், கிராம தேவதைகளையும் சேர்த்து ஆறாயிரம் தெய்வங்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. (Ref : https://www.encyclopedia.com/history/news-wires-white-papers-and-books/deities-yoruba-and-fon-religions).
255) தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜூலு பாரம்பரிய மதம் பொதுவாக விலங்குகள் அல்லது இயற்கை நிகழ்வுகளின் தொடர்புடைய ஏராளமான தெய்வங்களைக் கொண்டுள்ளது. மூதாதையர்கள் அன்குலுங்குலு (பெரியவர்களுக்கும் பெரியவர்கள்) எனப்படுவோர் ஆவி உலகில் வசிப்பதாக அவர்கள் நம்புகிறார்கள். மேலும் அவர்களே அனைத்து உயிர்களுக்கும் ஆவி உலகத்திற்கும் இடையில் இடைத் தரகர்களாகக் செயல்படுகிறார்கள் மற்றும் கடவுளுடன் கைகோர்த்து வேலை செய்கிறார்கள் என்பதாக நம்புகின்றார்கள். இன்று வடக்கு குவாசுலு-எனும் நாட்டினரால் ஸ்தாபிக்கப்பட்ட இடத்தில் ஜூலு ஒரு முக்கிய குலமாக இருந்தனர்.
256) பண்டை காலத்தை சேர்ந்த கிரேக்கியர்கள் பல கடவுள்களை வழிபட்டனர், ஒவ்வொன்றும் ஒரு தனித் தன்மைகளைக் கொண்ட தெய்வங்கள். கிரேக்க புராணங்களில் அந்த தெய்வங்களின் தோற்றம் மற்றும் அவை எந்த வகையில் மானிடர்களுடன் தொடர்ப்பு கொண்டு இருந்தன என்பதை விளக்கும் வரலாற்று கதைகள் காணப்படுகின்றன.
257) உலக மதங்களின் எண்ணிக்கை மற்றும் அளவைக் கண்காணிக்கும் ஒரு சுயத் தன்மையான, மத சார்பற்ற நிறுவனமான Adherents என்பதின்படி (Ref: https://www.theregister.com/2006/10/06/the_odd_body_religion/) இந்த உலகில் சுமார் 4,300 மதங்கள் உள்ளன என்பதாக தெரிகின்றது. ஒரு மதத்திற்கு ஒரு தெய்வம் எனக் கணக்கிட்டாலும் 4300 மதங்களுக்கு 4300 எண்ணிக்கைக்கு குறைவான அளவில் தெய்வங்கள் இருக்க முடியாது.
258) எனவே இந்த உலகில் எத்தனை தெய்வங்கள் வழிபடப்படுகின்றன என்பதற்கு யாராலும் தீர்க்கமான பதிலைக் கூற முடியாது. தெய்வங்களின் எண்ணிக்கையைக் குறித்து நாம் கேட்கும் மற்றும் படிக்கும் அனைத்தும், அனுமானங்களை அடிப்படையாகக் கொண்டவை. உலகில் பல வகைகளிலான தெய்வ வழிபாட்டு முறைகள் உள்ளன, அவற்றின் எண்ணிக்கை எத்தனை என்பதை உறுதியாக கூற முடியாது என்பதை நாம் நம்ப வேண்டும்

.…………அடுத்த பாகம் –கட்டுரையின் அடிப்படை ஆதாரங்களுக்கான சில செய்திகளின் விவரம்