-2-
16) உண்மையில் தெய்வம் அல்லது தெய்வீகம் என்றால் என்ன? ஏதோவொரு தோற்றத்தில், மனிதர்களின் கண்களுக்கு புலப்படாத நிலையில் உள்ள, இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்ட எதோ ஒன்றுதான் இந்த உலகை இயக்குகின்றது என மக்கள் நம்புவதினால் அந்த எதோ ஒன்றை தெய்வம் என வழிபடுகிறார்கள். கடவுளை ‘தேவதா’ என இந்து மதத்தினர் கூறியதையே லத்தீன் மொழியில் கடவுள் எனக் குறிப்பிடப்படும் டியூஸ் (Deus)’ எனும் வார்த்தையை Deity (தெய்வம்) என்ற பெயரில் ஐரோப்பியர்கள் அழைத்தார்கள். சமஸ்கிருதத்தில் ‘தேவா’ என்பது தெய்வம் என்றும் ‘குல’ என்பது ஒரு பரம்பரையை குறிக்கும் சொல்லாக இருந்தது.
17) வாழ்க்கையில் முன்னேற்றம் அடைய வேண்டும், ஆன்மீக மேல் நிலையை எட்ட வேண்டும் மற்றும் குடும்ப பாதுகாப்பிற்காக தேவை என்ற பல்வேறு அடிப்படை எண்ணங்களைக் கொண்டுதான் பல வழிகளிலான தெய்வ வழிபாட்டை இந்து சமயத்தினர் கடைபிடித்து வந்துள்ளார்கள். அதில் ஒன்றுதான் குலதெய்வ வழிபாடும் ஆகும். ஒவ்வொரு குடும்பங்களை சார்ந்த தலைமுறையினரும் அந்தந்த குடும்ப முன்னோர்கள் தொடர்ந்து வணங்கி வந்திருந்த ஆண் அல்லது பெண் தெய்வத்தை வணங்கி வருகின்றார்கள் என்பதின் காரணம் அந்த குடும்பத்தினருக்கும், அவர்கள் வணங்கி வந்திருந்த அந்த குறிப்பிட்ட தெய்வத்திற்கும் இடையே எப்போதும் எதோ ஒரு வகையிலான பிணைப்பு இருந்துள்ளது என்பதே. ஒவ்வொரு குடும்பங்களை சார்ந்தவர்களும் அவர்களது வீடுகளில் நடைபெறும் பூஜை அல்லது வேறு எந்த சடங்குகளிலும் விநாயகப் பெருமானை துதித்தப் பின்னர் உடனடியாக அவர்களுடைய குலதெய்வத்தை வணங்கி ஆராதித்தப் பிறகே மூல பூஜைகளை அல்லது சடங்குகளை செய்யத் துவங்குவார்கள். அந்தந்த குடும்பங்களின் குலதெய்வங்கள் அந்தந்த குடும்பங்களின் முதல் அதிபதியாவார்கள் என்பதினால் அவர்களது அருள் கிடைத்தால் மட்டுமே பிற தெய்வங்களின் அருளையும் பெற முடியும், மற்றும் குலதெய்வங்களை ஆராதிக்காமல் ஒரு குடும்பத்தில் செய்யப்படும் சடங்கு அல்லது பூஜைகள் நிறைவு பெறாது என்ற ஆழமான நம்பிக்கைதான் அதன் காரணம் ஆகும். முன் காலங்களில் கிராமங்களில்தான் ஒவ்வொரு குடும்பத்தினரும் தத்தம் சந்ததியினருடன் வாழ்ந்து வந்துள்ளார்கள் என்ற காரணத்தினால்தான் பெரும்பாலான குடும்ப தெய்வ ஆலயங்கள் கிராமங்களிலேயே காணப்படுகின்றன.
18)முன் காலத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் அந்தந்த குடும்பத்தின் மூத்தவர் தலைவராக இருந்தார். அவரது கட்டளையை யாரும் மீற மாட்டார்கள். அதனால்தான் பிரும்மா வகுத்திருந்த திட்டத்தின்படி மூத்தோர் வணங்கி வந்திருந்த தெய்வத்தை தமது குல தெய்வமாக பின் வந்த சந்ததியினர் ஏற்றார்கள்.
19) வேத காலத்தில் குடும்பத்தின் தந்தையே அதன் தலைவராக இருந்தார். அவருடைய கட்டளைக்கு எதிராக எவரும் செயல்படமாட்டார்கள். அவரது கட்டளைகளை ஏற்பதை அவமானமாக கருத மாட்டார்கள். அதன் காரணம் அந்த காலத்தில் குடும்பத்தினரின் ஒற்றுமையே முக்கியமானதாகக் கருதப்பட்டது. குடும்ப ஒற்றுமையை மதிக்காத அல்லது ஒற்றுமைக்கு எதிராக செயல்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் சமூகத்தில் ஒதுக்கி வைத்தார்கள். அந்த கால நடைமுறை பழக்கம் என்னவென்றால், தந்தையின் மறைவுக்குப் பிறகு அந்தக் குடும்பத்தின் மூத்த மகன் அல்லது மறைந்து விட்ட குடும்பத் தலைவரின் மனைவி குடும்பத் தலைவர் என்ற அந்தஸ்தை பெற்று விடுவார். அந்த நடைமுறை பழக்கத்தில் இருந்ததினால்தான் அந்த குடும்பத்தின் மூத்த தாத்தா முதல் இளைய பேரன் வரை அனைவருமே ஒரே வீட்டில் தங்கி இருந்தார்கள். அவர்களது வீடு சிறியதாக இருந்தால் உறவினர்கள் அக்கம்பக்கத்து வீடுகளில் வசித்து வந்தார்கள். ஒரு சடங்கு அல்லது பூஜை எனும்போது அனைவரும் ஒன்றாகவே ஆலயத்திற்கு சென்று வழிபட்டார்கள்.
20) கூட்டுக குடும்பமாக வாழ்ந்திருந்த பெரிய தாத்தா முதல் பேரன் வரையிலான குடும்பத்தினர் குறிப்பிட்ட ஆலயத்திற்கு சென்று குறிப்பிட்ட தெய்வத்தையே வணங்கி வந்திருக்க அதுவே அவர்களது குடும்பத்தின் குல தெய்வம் ஆயிற்று. இப்படியாகத்தான் முதல் தலைமுறையை சேர்ந்த குடும்ப வம்சாவளியினரின் குலதெய்வ வழிபாடு பழக்கமும் அடுத்தடுத்த பரம்பரையினரால் தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வந்திருந்தது.
21) மானிடர்கள் அறிவு விரிவடையத் துவங்கிய காலத்தில், பெரும்பாலான குடும்பத்தினர் தத்தம் குடும்ப உறுப்பினர்களுடன் மற்றும் உறவினர்களுடன் கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள். அதன் காரணம் அவர்களில் சிலர் கிராமங்களில் இருந்த நிலங்களில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வந்திருந்தார்கள். இன்னும் சிலர் புரோகிதர்கள் அல்லது பண்டிதர்களாக தொழில் செய்து வந்தார்கள் என்றாலும் ஒருங்கிணைந்த குடும்பத்தினராக, ஒன்றாகவே அதே கிராமங்களில் வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு கிராமங்களிலும் பலதரப்பட்ட ஜாதியை சேர்ந்த மக்கள் வசித்து வந்திருந்தார்கள் என்றாலும் அந்த காலத்தில் ஜாதி மற்றும் மத வேறுபாடு என்பவை கிராமத்தினரின் ஒற்றுமையை பிரித்து வைக்கவில்லை. ஜாதி மத வேறுபாடின்றி கிராமத்தினர் அனைவருமே கிராமங்களில் நடைபெற்ற ஆலய பண்டிகைகள், ஆலய விழாக்கள் போன்றவற்றில் ஒன்றிணைந்து கலந்து கொண்டு ஒரே தெய்வத்தை வணங்கி வந்திருந்தார்கள். அவர்களில் சில குடும்பத்தினரின் குல தெய்வங்கள் வெவ்வேறாக இருந்தன. சில குடும்பத்தினருக்கு குலதெய்வமே இல்லை என்ற நிலை இருந்ததினால் அவர்கள் மனதிற்கேற்ப எதோ ஒரு தெய்வத்தை இஷ்ட தெய்வமாக வணங்கி வந்திருந்தார்கள்.
22) மேற் கூறிய பின்புலத்தில் குலதெய்வ வழிபாடு என்பது கிராமங்களில் இருந்து துவங்கியது. கிராமங்களில் வசித்து வந்தவர்கள் தங்களது குலதெய்வ சிலைகளை கிராம மரபின்படி தத்தம் கிராமங்களில் ஸ்தாபித்து வழிபட்டார்கள். கிராம தேவ சிலைகள் இல்லாத ஒரு கிராமத்தைக் கூட காண முடியாது என்ற நிலை உண்டானது.
23) 95% டிற்கும் அதிக அளவிலான பரம்பரையின் குலதெய்வம் அவர்களது மூதாதையர் வாழ்ந்திருந்த கிராமத்தில் காணப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும். அந்த 95% குல தெய்வங்களில் கூட 90% க்கும் அதிக அளவிலான தெய்வங்கள் இரண்டாம் அல்லது மூன்றாம் நிலை தெய்வங்களான கிராம தேவதைகளாகவே இருந்து உள்ளன. இது குறித்து பின்னர் விளக்கப்பட்டுள்ளது. காலப்போக்கில், கிராமங்களில் இருந்து நகரங்களுக்கு இடம் பெயர்ந்து சென்றவர்கள் தமக்கு முடிந்த நேரத்தில் தங்கள் சொந்த கிராமங்களுக்குச் சென்று, தங்கள் குல தெய்வத்தை வழிபடுவதை வாடிக்கையாகக் கொண்டு இருந்தார்கள்.
24. ஒருவரின் குல தெய்வத்தின் ஆசிகள் கிடைக்காவிடில் குடும்பத்தில் நல்லது எதுவும் நடக்காது என்று மூதையோர் கூறுவார்கள். அவர்கள் வேறு எந்த இஷ்ட தேவதை அல்லது அவர்களின் குருமார்களிடம் {மடாதிபதி) சென்று பிரார்த்தனை செய்தாலும் எந்த பலனும் கிடைக்காது நம்பிக்கையாக உள்ளது. தென்னிந்தியாவில் சில காரணங்களால் தமது குல தெய்வம் யார் என்பது தெரியாத நிலையில் இருந்தவர்கள் வைத்தீஸ்வரன் ஆலயத்தில் உள்ள ஸ்ரீ வைத்தியநாத ஸ்வாமியையோ அல்லது திருப்பதியில் உள்ள ஸ்ரீ வெங்கடாசலபதியையோ தங்கள் குல தெய்வமாக ஏற்றுக் கொண்டு வணங்குவது வழக்கம் ஆகும். அதன் காரணம் விஷ்ணுவின் அம்சமான ஸ்ரீ வெங்கடாசலபதி பரப்பிரும்மனின் ஆண் சக்திகளான பிரம்மா, விஷ்ணு மற்றும் சிவன் போன்றவர்களின் சக்திகளையும் பரபிரும்மனின் பெண் சக்தியான சக்தி தேவியின் அம்சங்களையும் உள்ளடக்கிக் கொண்டுள்ளவர் என்பதினால் பக்தர்கள் எந்த வடிவத்தில் குலதெய்வத்தை வழிபட நினைக்கிறார்களோ அதே தெய்வமாகி அவர்களது கோரிக்கைகளை ஏற்கிறார் என்ற நம்பிக்கையில் வழிபடுகிறார்கள். அதேபோலத்தான் சக்திகளைக் கொண்டவர் சிவலிங்க வடிவில் இருக்கும், சிவபெருமானின் அவதார ரூபமான ஸ்ரீ வைத்தீஸ்வர ஸ்வாமியும் ஆகும்.
25) எந்த ஒருவரும் அவர்களது முன்னோர்கள் தலைமுறை தலைமுறையாக வழிபட்டு வந்த குலதெய்வ வழிபாட்டை திடீரென துறந்து விட்டு அவர்களின் விருப்பப்படி வேறு ஒரு தெய்வத்தை குலதெய்வமாக ஏற்றுக் கொண்டு ஆராதிக்க முடியாது. ஒரு பரம்பரையின் குறிப்பிட்ட குலதெய்வ வழிபாடு என்பது இயற்கையாகவே ஒரு பரம்பரையின் வாரிசுகளில் ஆண் உறுப்பினர்கள் இல்லாத நிலையிலும், குழந்தைகளே இல்லாத நிலைகளிலும் தானாகவே நின்று விடும்.26) மிகப் பழமையான வேத நூல்களான ரிக் வேத நூல் மற்றும் வேத காலத்திற்கு முந்தைய மற்றும் பிந்தைய கால புராண நூல்கள் பலவும் பனை மர இலைகளில் எழுதப்பட்டு இருந்ததாகவும் அவற்றில் பலவும் காணாமல் போய் விட்டதாகவும் , அவை இன்றுவரை கண்டுபிடிக்கப்படாமல் உள்ளன அல்லது இயற்கையால் அழிந்து இருக்கலாம் எனவும் நம்பப்படுவதினால் துரதிர்ஷ்டவசமாக படைப்பின் நியதியும் தத்துவங்களும் காலம் காலமாக வாய்வழி கதைகள், பிரசங்கங்கள், ஆன்மீக குருமார்கள் மற்றும் ஞானிகளின் சொற்பொழிவுகள், உரைகள் மூலமாக மட்டுமே தொடர்ந்து நமக்கு கிடைத்து வந்துள்ளது. படைப்பின் ரகசியங்களும் அனைத்து தெய்வீக செய்திகளும் குலதெய்வ வழிபாடும் வாய்மொழி செய்திகளாகவே உள்ளன என்றாலும் தொலைந்து போய்விட்டதாக கூறப்படும் அந்த நூல்களில் காணப்பட்ட குலதெய்வ செய்திகள் பல சமயங்களில் தெய்வீக முனிவர்களுக்கு தெய்வங்களினாலேயே உபதேசிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுவதினால் அவர்கள் கூறி வந்திருந்த வாய்மொழி கதைகள் மற்றும் போதனைகள் மூலம் மக்களிடம் பரவியிருக்கலாம் என நம்பப்படுகின்றது .
27) பிரம்ம குமாரி சமாஜ், காயத்ரி பரிவார், தத்தாத்ரேய பரிவார், திகம்பரர் போன்ற சில ஆன்மீக அமைப்புகளும், பல ரிஷி முனிவர்கள், சாதுக்கள் மற்றும் சன்னியாசிகளின் வாழ்க்கைக் கதைகளும் இந்தக் கருத்துக்களை எடுத்துரைக்கின்றன. “ரஹஸ்ய ஸ்துதி” எனும் நூலில் படைப்பின் நியதி குறித்து பகவான் விஷ்ணு நாரத முனிவருக்கு உபதேசம் செய்துள்ளதாக கூறப்பட்டு உள்ளதாம். ஆனால் துரதிஷ்டவசமாக அந்த நூலும் இன்றுவரை கிடைக்காமல் உள்ளதினால் அதில் இருந்ததாக கூறப்படும் செய்திகளும் நாடோடிக் கதைகள் மற்றும் வாய்மொழியாகக் கதையாகவே கூறப்பட்டு வருகிறது.
28)குல தெய்வத்தின் தோற்றம் மற்றும் அதன் வழிபாடு குறித்து தெரிந்து கொள்ளும் முன்பாக, இந்த பிரபஞ்சம் எப்படி உருவாயிற்று, அது தோன்றி பலநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு பகவான் பிரும்மா மூலம் தெய்வங்கள் மற்றும் மானிடப் பிறவிகள் எப்படி தோன்றினார், அதில் குலதெய்வ வழிபாடு எனும் கருத்து எப்படி உருவாயிற்று என்பவற்றை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.
—————————————————-
தொடர்கிறது …..3
அடிப்படை ஆதாரம் :- மேற்கண்ட கட்டுரையில் காணப்படும் சில செய்திகள் கீழ்கண்ட இணையதளங்கள், கிராமியக் கதைகள், ஆலய பண்டிதர்கள் மூலம் கிடைத்த செய்திகள் மற்றும் சில மூத்த குடிமகன்கள் மூலம் கிடைத்த செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை ஆகும்.
(1)https://en.wikipedia.org/wiki/Kuladevata
(2) https://shrigurumaharishi.org/2019/10/03/why-should-we-worship-our-kuladeivam-family-deity
(3)https://www.epoojastore.in/index.php?route=news/article&news_id=1100
(4)https://thtsearch.com/content/Kuladevi/
(5) https://www.historydiscussion.net/history-of-india/early-vedic-period/the-early-vedic-period/6244
(6)https://ramtarak.com/5-amazing-facts-to-pray-kuladevata/
(7) https://karaikudiexpress.wordpress.com/2020/08/02/kula-deivam
(8) https://en.wikipedia.org/wiki/Household_deity
(9) https://www.indiamart.com/proddetail/worship-of-family-deity-helps-you-in-your-hardships-22258447648.html
(10) https://www.tamilbrahmins.com/threads/brahmins-kula-devatha.3111/
(11) https://en.wikipedia.org/wiki/God_in_Hinduism
(12) https://sound-hindu-god-photo.blogspot.com/2009/08/god-of-kuladevata.html
(13) https://www.toppr.com/ask/question/who-was-the-head-of-family-in-old-family-trend/
(14) https://core.ac.uk/download/pdf/334948462.pdf
(15) https://pune.gen.in/india/family-life-aryans-rig-vedic-period/4449/
(16) https://brainly.in/question/48649917
(17) https://blog.ipleaders.in/historical-perspectives-hindu-law-inheritance/
(18) https://en.wikipedia.org/wiki/Venkateswara
———————————–
நன்றி: அமெரிக்க நாட்டில் வசிக்கும் எனது நண்பரானவரும், மருத்துவ தொழிலில் உள்ளவருமான திரு Dr V. சங்கர் குமார் என்பவர் எனது கட்டுரையை ஆய்வு செய்தபின் அதில் இருந்த தவறுகளை சரி செய்த பின் சில செய்திகளை திருத்தி அமைக்க ஆலோசனை வழங்கி உதவி செய்தார். அவருக்கு எனது மனமார்ந்த நன்றியை தெரிவிக்கின்றேன். அவர் பல இணைய தளங்களில், முக்கியமாக சீரடி ஸ்ரீ சாயிபாபா தளத்தில் தமிழ் கட்டுரைகளை எழுதி உள்ளார், ஆங்கில கட்டுரைகளை பெயர்த்து உள்ளார். (https://shirdisaibabatamilstories.blogspot.com/-) — N.R. Jayaraman