இது ஒரு புராணக் கதை – 2

பித்ருக்களின் பிண்ட

கர்மா ஸ்ரார்ததை
காயாவில் செய்வது

ஏன் புனிதமானது?

சாந்திப்பிரியா

சாதாரணமாக காசிக்குச் சென்று முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்தாலும் பித்ருக்களுக்கு கயாவில் சென்று பிண்டம் போட்டுவிட்டு வந்தால்தான் அவர்கள் ஆத்மா சொர்க்கம் செல்லும் அங்கு அவர்களுக்கு உணவு கிடைக்கும் என்ற நம்பிக்கை உண்டு. ஏன் எனில் அங்குதான் பிரும்மாவும் விஷ்ணுவும் பிற தேவர்களும் வந்து அசுரனின் உடல் மீது அமர்ந்து கொண்டு பித்ரு யாகம் ஒன்றை செய்ததாக ஒரு கதை கூறப்படுகின்றது . அந்தக் கதை என்ன?

முன்னொரு காலத்தில் கயாவில் கயாசுரன் என்ற பெரிய அசுரன் இருந்தான். அவன் ஒருமுறை தனக்கு மேலும் அதுக சக்தி வேண்டும் என வேண்டிக்கொண்டு தவத்தில் அமர்ந்தான். அவன் செய்த கடுமையான தவத்தின் வலிமையினால் அவனுடைய சக்தியும் பெருகிக்கொண்டே போயிற்று. அவனை யாராலும் வெல்ல முடியவில்லை. அவனுடைய தொல்லையும் தாங்க முடியாமல் போயிற்று. அவன் தேவர்களைவிட அதிக சக்தி வாய்ந்தவனாக ஆகிக்கொண்டே இருந்ததினால் தேவர்கள் கவலை அடைந்தனர். அவர்கள் விஷ்ணுவிடம் சென்று அவரிடம் தமது அச்சத்தை தெரிவிக்க அவர் பிரும்மாவை அழைத்து அவரை கயாசுரனிடம் சென்று தேவலோகத்தின் கீழுள்ள பித்ருக்கள் மோட்ஷம் அடைய ஒரு யாகம் செய்ய உள்ளதாகவும் அதை ஆகாயத்தில் செய்யக்கூடாது , பூமியில்தான் செய்ய வேண்டும் என்பதினால் பூமியில் உள்ள கயாசுரன் உடல் மீது தம்மை யாகம் செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் எனவும் வேண்டுமாறும் அதன் பின் மற்றதை தான் பார்த்துக் கொள்வதாகவும் கூறினார். அதன்படி பிரும்மாவும் கயாசுரனிடம் சென்று அப்படியே வேண்டிக்கொள்ள அவன் கயாவில் சென்று பூமியில் படுத்துக் கொண்டான். அவன் தலை மீது பிரும்மா பித்ரு யாகத்தை துவக்கினார். ஆனாலும் அவன் அடிக்கடி அசைந்து கொண்டே இருந்ததினால் மிரிச்சி என்ற முனிவரை அனைத்து தேவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து அந்த கயாசுரன் உடல் மீது ஒரு கல்லை வைத்துவிட்டு அமருமாறு விஷ்ணு கூறினார். அவர்களும் பித்ரு யாகத்தில் கலந்து கொள்வது போல வந்து அவன் மீது அமர்ந்தனர். பித்ரு யாகம் நடக்க நடக்க அவனுடைய சக்தி அதில் கரைந்து கொண்டே போயிற்று. முடிவில் விஷ்ணு அந்த கல்லின் மீது ஏறி அமர அனைவரது சக்திகளும் ஒன்று சேர்ந்தது. யாக சக்தியும் அவர்களது சக்தியுடன் ஒன்று சேர அந்த கயாசுரன் எழுந்திருக்க முடியாமல் அங்கேயே மடிந்தான். ஆனாலும் அவன் மீதே பித்ருக்களின் யாகம் நடந்ததினாலும், திருப்ப்தியடைந்த ஆத்மாக்கள் அவனை ஆசிர்வதிததினாலும் அவனுக்கு நல்ல கதி கிடைத்து பித்ருக்கள் வசிக்கும் மோட்ஷம் சென்றான். ஆகவே காயா பித்ரு லோகம் எனப் பெயர் பெற்றது. ஆகவேதான் விஷ்ணுவே மோட்ஷம் தந்த அந்த இடத்தில் சென்று பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்தால் அவர்களுடைய ஆத்மாவுக்கு வைகுண்டம் செல்லும் பேறு கிடைக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

இதற்கு ஒரு முன் உதாரணமாக ஒரு கதை உண்டு. கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது? இந்திரனிடம் அது குறித்துக் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை, ஏன் அவனுடைய பித்ருக்களுக்குக் கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால்தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு ஸ்ரார்தம் செய்து  பிண்டம்  போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.