நவகிரஹ ஆலயம் :- சனி பகவான்
ஆலயத்தின் பெயர்: அகஸ்தீஸ்வரர்
சாந்திப்பிரியா
வழி:- பூந்தமல்லி மின் சாலையில் வந்து குன்றத்தூர் போகும் சாலையிலேயே சென்றால் முதலில் மௌலிவாக்காம் அடுத்து கெருகம்பாக்கம் பஸ் ஸ்டாப்புக்கள் வரும். அங்கு சென்றவுடன் பொழிச்சலூர் செல்ல சிறிய பாதை உள்ளது. யாரைக் கேட்டாலும் கூறுவார்கள். வளைந்து வளைந்து செல்லும் குறுகலான அந்த பாதையில் சென்றால் ஒரு ஆறு வரும். (அது அடையாறு ஆறு என்கிறார்கள்). அதன் மீது ஒரு சிறிய பாலம் உள்ளது. அந்த பாலத்தைக் கடந்து அந்த ஒட்றை பாதையிலேயே சென்றால் அரை கிலோ தொலைவில் சனீஸ்வரர் ஆலயமான ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலயம் வரும். இல்லை என்றால் பல்லாவரம் திரிசூலம் சாலையில் சென்று பல்லாவரத்தைத் தாண்டியதும் யாரைக் கேட்டாலும் பொழிச்சலூர் செல்லும் பாதையைக் காட்டுவார்கள்.
ஆலய வரலாறு:- பொழிச்சலூர் ஸ்ரீ ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம் ஒரு தனி சிறப்பு பெற்ற ஆலயம். நவகிரக ஸ்தலங்களில் சனி பகவானுக்கு பரிகார ஸ்தலம் இது. அந்த ஆலயத்தில் சனீஸ்வர பகவான் சிவனை நோக்கி நின்றபடி சன்னதிக்கு உள்ளயே உள்ளார். ஆலய தல வரலாற்றின்படி சனிபகவான் பலவிதத்திலும் பக்தர்களுக்கு துன்பம் கொடுத்து வந்ததால், அவருக்கு தோஷம் ஏற்பட்டதாம். ஆகவே தன்னுடைய தோஷங்களை விலக்கிக் கொள்ள அவர் இந்த தலத்துக்கு வந்து ஒரு தீர்த்தத்தை அமைத்து அதில் நீராடி சிவ பெருமானை துதித்து தன்னுடைய தோஷங்களை போக்கிக் கொண்டாராம். தன் பாவங்களை போக்கிக் கொண்டு தோஷம் நீங்கி பாவ விமோசனம் கிட்டியதால் சிவ பெருமான் இங்கு சனீஸ்வரரின் அவதாரத்தில் தோஷ நிவர்த்தி செய்கிறார். ஆனாலும் இவ்வாலயத்தில் சனிபகவான் திருநள்ளாருக்கு அடுத்ததாக தனியாக காட்சியளிக்கின்றார்.
இன்னொரு வரலாறும் கூறுகிறார்கள். சிவபெருமான் தான் திருமணம் செய்து கொண்ட போது அகஸ்திய முனிவரை பூமியில் சென்று ஒரு பக்கத்து பாரத்தை தாங்கிக் கொண்டு நிற்குமாறு கூறினாராம். அதனால் அகத்திய முனிவர் வந்து பூமியில் தங்கினார். ஆலயம் உள்ள இந்த இடத்தில் வந்து சுயம்பூவாக எழுந்து அருளிய சிவலிங்கத்தை மையமாக வைத்து சிவபெருமானை பூசித்தாராம். ஆகவே சிவபெருமான் அவருக்கு பெருமை சேர்க்கும் வகையில் தானே அகத்தீஸ்வராகவும் இறைவி ஆனந்தவல்லியாகவும் காட்சியளிக்கின்றனர் எனக் கூறுகிறார்கள்.
இவ்வாலயத்தில் சிவபெருமான் கிழக்கு பார்த்திருப்பதும் ஆனந்தவல்லி தெற்கு பார்த்திருப்பதும் தனிச் சிறப்பு. மேலும் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதம் ஏழு முதல் ஒன்பதாம் தேதிவரை மட்டும் சூரியன் உதயம் ஆகும்போது சூரிய ஒளி உள்ளே இருக்கும் சிவலிங்கம் மீது மட்டும் விழும் அமைப்புடன் கட்டப்பெற்றதாகும். மேலும் சன்னதியைவிட்டு வெளியே வந்தால் அங்கு தனி சன்னதியில் உள்ள ஹனுமாரையும் வணங்க வேண்டுமாம். ஏன் எனில் சனி பகவானிடம் ஹனுமார் எவருக்காவது நீ தொல்லை தந்தால் சும்மா விட மாட்டேன் எனக் கூறி இருந்ததினால் அந்த ஆலயத்துக்கு வந்து தோஷ நிவத்தி பெற்றுக் கொண்டப் பின் மீண்டும் சனி பகவான் அவர்களுக்கு தொல்லை தர மாட்டார் என்பதினால் ஹனுமாருக்கு நன்றி கூறத்தான் அந்த நடைமுறையாம்.
சனிபகவானே இவ்வாலயத்தில் வந்து சிவனை வணங்கி தான் செய்த பாவங்களை போக்கிக்கொண்டு, தோஷநிவர்த்தி பெற்று பாபவிமோசனம் பெற்றதினால் இவ்வாலயத்தில் வந்து சிவன், சக்தி, சனிபகவான், ஆஞ்சேநேயரை வணங்கி தோஷநிவர்த்தி பரி்காரங்கள் செய்து கொண்டால் சனி தோஷத்தினால் ஏற்பட்டுள்ள கஷ்டங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.