தெரிந்த ஆலயம், தெரியாத வரலாறு – 8

மாங்காட்டு அம்மன் ஆலயம்

சாந்திப்பிரியா 
முன்னொரு காலத்தில் தேவ லோகத்தில் சிவபெருமானும் பார்வதியும் அமர்ந்து கொண்டு விளையாடிக்கொண்டு இருந்தனர். அப்போது விளையாட்டாக பார்வதி சிவனின் இரண்டு கண்களையும் தமது கைகளினால் மூடினாள். அவ்வளவுதான் உலகமே இருண்டது. ஜீவராசிகள் மடியத் துவங்கின. அதைக் கண்டு பயந்து போன பார்வதி தன் கைகளை எடுத்து விட்டாள். ஆனாலும் அதுவரை பல தீய செயல்கள் நடந்து விட்டன. சிவபெருமானிடம் வந்த தேவர்கள் பூமியில் ஏற்பட்ட துயரத்தை அவரிடம் எடுத்துக் கூற அதற்கான காரணத்தை சிவபெருமான் ஆராய்ந்தார். அவருக்கு பார்வதி தன்னுடைய கண்களைப் பொத்தியதும் அதுவே காரணம் எனவும் தெரியவர கோபமடைந்த அவர் அவளை பூமியிலே போய் பிறந்து அங்கு தன்னை துதித்து தவம் செய்தால்தான் அங்கு வந்துதான் அவளை மணப்பதாகக் கூறினார்.
அந்த சாபத்தின் விளைவாக பார்வதி பூமியிலே ஒரு பெண்ணாக அவதரித்தாள். இப்போது மாங்காடு உள்ள இடத்தில் இருந்த கிராமத்தில் சென்று பிறந்தவள் எவருக்கும் தெரியாமல் காட்டுக்குள் போய் புதர்களும் செடிகளும் மண்டிக் கிடந்த இடத்தில் பூமிக்குள் நெருப்பு நுனி மீது தனது கட்டை விரலை மட்டும் வைத்துக் கொண்டு நின்றபடி தவம் இருந்தாள். அவளை எவராலும் கண்டு பிடிக்க முடியவில்லை. நெருப்பு நுனி மீது இடது கால் கட்டை விரலை வைத்துக் கொண்டு கடுமையான தவத்தில் அவள் இருக்க அதைக் கண்டு மகிழ்ந்து போன சிவபெருமான் அவளுக்குக் காட்சி தந்து மணம் முடிக்க கயிலையில் இருந்து வந்தார். அவருடன் பகவான் விஷ்ணுவும் பல தேவர்களும் வந்தனர். வரும் வழியில் அதே இடத்தில் சுக்ராச்சாரியா தன்னைத் துதித்தபடி தவத்தில் இருந்ததைக் கண்டார். சுக்ராச்சாரியாருக்கு திருமாலினால் ஒரு கண் பார்வை போய்விட அந்த சாபத்தை விலக்கி மீண்டும் கண் ஒளி பெற அங்கு வந்து சிவபெருமானை துதிக்க வேண்டி இருந்தது. ஆகவே அங்கு அவனது கொண்டு இருந்த சிவபெருமான் சுக்ராச்சாரியாருக்கு காட்சி தந்து அவர் கேட்டுக் கொண்டதின் பேரில் அருகில் இருந்த இடத்தில் வெள்ளீஸ்வரராக சிவலிங்க உருவில் காட்சி தந்தார். வந்த காரியமான திருமணம் நடக்கவில்லை. ஆகவே அசரீயாக பெண் உருவில் தவம் இருந்த பார்வதிக்கு தான் காஞ்சிபுரம் செல்வதாகவும் அங்கு வந்து அவள் தவத்தைத் தொடர்ந்தால் அவளை மணப்பதாக உறுதி கூறினார்.
சிவபெருமான் திரும்பிச் சென்றதும்தான் சிவ பார்வதியின் திருமணத்துக்கு தான் தடையாக இருந்து விட்டதையும், பார்வதியே பெண் உருவில் தவம் இருப்பதையும் அறிந்து கொண்ட சுக்ராச்சாரியார் காட்டில் தவமிருந்த பார்வதியை தேடிச் சென்று அவளிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டு அவளை வெள்ளீஸ்வரர் ஆலயத்துக்கு அழைத்துச் சென்று சிவ பெருமானை வணங்கிய பின் காஞ்சிபுரத்துக்கு அழைத்துச் சென்றார். அங்கு சென்று மீண்டும் பார்வதி தவம் இருக்க சிவ பெருமான் வந்து அவளை மணமுடிந்தார்.
அதன் பின் பார்வதி மாங்காட்டில் நெருப்பின் மீது ஒற்றைக் காலில் நின்று கடுமையான தவம் புரிந்ததினால் ஏற்பட்ட வெப்பத்தினால் மக்கள் அவதிப்பட்டதைக் கண்டு அந்த வெப்பத்தை தணிக்க ஆதி சங்கரர் அங்கு வந்து அவளது சக்தியை உள்ளடக்கி ஸ்ரீ சக்கர பிரதிஷ்டை செய்து வைக்க பூமியில் வெப்பம் தணிந்தது. அங்கு பார்வதியை மாங்காட்டு காமாட்சி அம்மன் என்ற பெயரில் ஆலயம் அமைத்து மக்கள் வணங்கினார்கள். பார்வதி ஒற்றைக் காலில் தவம் இருந்த அதே கோலத்தில் அமைந்த அந்த ஆலயத்தில் ஒரு மண்டலம் குறிப்பிட்ட ஏதாவது ஒரு கிழமையில் அதாவது ஏழு வாரம் சென்று எலுமிச்சை பழம் வைத்து வேண்டிக்கொண்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்ற நம்பிக்கை உள்ளது.
ஆலயம் எழுப்பப்பட்ட காலம் சரிவரத் தெரியவில்லை. ஆனால் அது நிச்சயமாக ஏழு அல்லாத எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாகவே இருந்து இருக்க வேண்டும் என்றே நம்புவதற்கு கல்வெட்டு ஆதாரங்கள் உள்ளன.