தெரிந்த ஆலயம் – பலரும் அறிந்திராத தல வரலாறு -9

பாலுஜிஸ்தான் 

ஹிங்லஜ் மாதா ஆலயம் 

சாந்திப்பிரியா

 

ஹிங்லஜ் மாதா எனும் சக்தி தேவி பற்றிய கதை பரசுராமர் காலத்தை சேர்ந்தது. இது பலுஜிஸ்தான் -பாகிஸ்தான் எல்லையில் கராச்சி நகரில் இருந்து சுமார் 250 கி.மீ தொலைவில் உள்ளது. திரேதா யுகத்தில் பரசுராமர் அவதாரம் எடுத்த காலத்தில் ஆலயம் உள்ள பகுதியை உள்ளடக்கிய தேசத்தை விச்தார் என்ற மன்னன் ஆண்டு வந்தானாம். அவருக்கு ஹிங்கோல் மற்றும் சுந்தர் என்ற இரு மகன்கள் உண்டு. சுந்தர் பதவி ஏற்றதும் அண்டை நாடுகளில் படையெடுத்து அவர்களது பொருட்களைக் கொள்ளையடித்து அங்கிருந்த மக்களுக்கு சொல்ல முடியாதத் துயரங்களைத் தர அங்கிருந்த மக்கள் தம்மை காத்தருளுமாறு சிவபெருமானை வேண்டினார்கள். ஆகவே தன் மகன் வினாயகரை அனுப்பி சுந்தரை அழித்தார்.

அதனால் கோபமுற்ற சுந்தரின் சகோதரன் ஹிங்கோல் கடுமையான தவத்தில் அமர்ந்து கொண்டு சிவனிடமே தன்னை எளிதில் அழிக்க முடியாத வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின்படி அவனை மூவுலகிலும் உள்ள எந்த ஆயுதத்தினாலும் மட்டும் அல்ல  மனிதர்கள், ஜீவராசிகள், மிருகங்கள் என எவராலும் தன்னை அழிக்க முடியாது. ஆனால் சூரிய ஒளியே புக முடியாத இடத்தில்தான் அந்த வரம் பலிக்காது, அவனுக்கும் மரணம் வர முடியும் என்ற வரத்தைப் பெற்றான்.  அந்த வரங்களைப் பெற்றவன் கொடுமையான ஆட்சியைத் தொடர்ந்தான். தன்னையே கடவுள் எனக் கூறிக் கொண்டான்.

அவனுடைய கொடுமையை தாள முடியாமல் சிவபெருமானின் மனைவியான சக்தியை மக்கள் துதித்து யாகம் செய்து அவளிடம் அவனை அழிக்குமாறு வேண்டினர். அவளும் அந்த கொடுங்கோலனை அழிப்பதாகக் கூறிய பின் தற்போது பலுஜிஸ்தானில் உள்ள மலைக் குகையில் மறைந்து கொண்டாள். அவளை அழிக்கப் பின் தொடர்ந்து சென்றவனை அந்த தேவி சூரிய ஒளியே புக முடியாத அந்த குகைக்குள்ளேயே கூர்மையான மரக் கட்டையினால் குத்திக் கொன்றாள்.

ஆகவே அந்த குகையிலேயே அந்த தேவிக்கு ஆலயம் அமைந்தது. அது ஹிங்லஜ் என்ற நதிக்கு அருகில் இருந்ததாலும், ஹிங்கோலனைக் கொன்று துயர் தீர்த்தாலும் ஹிங்லஜ் மாதா என்ற பெயர் பெற்றாள்.  இன்னொரு கதையின்படி அந்த கதையின் அடிப்படையில் அங்கு ஆலயம் அமைந்ததில் காரணம்  தஷ்ய யாகத்தில் மரணம் அடைந்த மனைவியின் உடலை தூக்கிக் கொண்டு உலகம் முழுவதும் பயங்கர நடனம் ஆடிக் கொண்டு சிவபெருமான் சென்றபோது அவர் கோபத்தை அடக்க பார்வதியின் இறந்த உடலை 51 துண்டுகளாக விஷ்ணு வெட்டிப் போட்டபோது அது பல இடங்களில் விழுந்து சக்தி ஆலயங்கள் தோன்றின. அதில் ஒன்று விழுந்த இடமே ஹிங்லஜ் ஆலயம் உள்ள இடம் என்றும் கதை உண்டு.

அதுபோல ஷத்ரியர்களை அழிக்க  புறப்பட்ட விஷ்ணுவின் அவதாரமான பரசுராமர் பல இடங்களுக்கும் சென்றபோது சௌராஷ்டிரத்தில் இருந்த பவாசிங் மற்றும் சர்சிங் என்ற இரு மன்னர்களும் ஹிங்லஜ் மாதாவிடம் வேண்டிக் கொண்டபோது அங்கு வந்த பரசுராமரை தேவி அழைத்து இனி அவர்களும் ( ஷத்ரியர்களும்) பரசுராமரைப் போலவே அவளுடைய மகன்கள் என்பதினால் அவர் அந்த செயலை விட்டு விடுமாறும் கூறி அவரை சாந்தமடையச் செய்து அனுப்பியதாக பவசார் சமூகத்தின் வரலாற்றில் குறிப்பு உள்ளது.