திக்குவாய் முனிவர்

சொன்ன நீதிக் கதை – 4

சாந்திப்பிரியா

முன்னொரு காலத்தில் அஷ்தகா என்றொரு முனிவர் இருந்தார். அவர் விஸ்வாமித்திர முனிவரின் புதல்வர். மெத்த ஞானம் பெற்றவர், ஆனால் கர்வம் கொண்டவர். அவருக்கு உடன் பிறந்தோர் மூவர் உண்டு. அவர்களில் ஒருவர் சிபி சக்ரவர்த்தியாவர். ஒரு முறை அஷ்தகா ஒரு பெரிய யாகம் செய்தார். பலரையும் அதற்கு அழைத்து இருந்தார். அதில் நாரத முனிவரும் வந்து கலந்து கொண்டு இருந்தார். யாகம் முடிந்தது. தன்னுடைய செல்வாக்கு எந்த அளவு பரந்து விரிந்து  உள்ளது என்பதை நாரத முனிவருக்கும் தமது மற்ற சகோதரர்களுக்கும் காட்ட வேண்டும் என எண்ணிய அஷ்தகா இந்திரனிடம் தாம் தம் நாட்டை சுற்றி வர புஷ்பக விமானத்தை அனுப்புமாறு கேட்டுப் பெற்று அதில் நாரதரையும் தமது மற்ற சகோதரர்களையும் ஏற்றிக் கொண்டு வானில் பறந்தார்.  வழியில் அஷ்தகா நாரதரிடம் புஷ்பக விமானத்தில் ஏறிக் கொண்டு வந்துள்ள நான்கு சகோதரர்களில் சிறந்தவர் யார் என்பதை வரிசை கிரமமாகக் கூறுமாறு கேட்டுக் கொண்டார். நாரதர் கூறினார் “நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும்  வரிசையில் நான்காவதாக சிறந்தவர் அஷ்தகா என்கின்ற நீதான். காரணம் ஒரு முறை நான் உனது ஆசிரமத்திற்கு வந்தபோது பல விதமான பசுக்கள் அங்கு இருந்தன. அவை அனைத்தும் எப்படி பலரிடம் உள்ளது எனக் கேட்டேன். அவற்றை நான்தான் தானமாகக் கொடுத்தேன் என்றாய். அப்போது உன் அகந்தையே உன்னை மிஞ்சி நின்றது. ஆகவே மனதில் உன்னை அறியாமலேயே அகந்தை பெற்றுள்ள உனக்கு முதல் இடம் அல்ல.

அடுத்து மூன்றாம் இடத்தில் உள்ளவர் உன் பெரிய சகோதரர்.  அவர் ஒரு முறை என்னை தேரில் ஏற்றிக் கொண்டு சென்றார். அப்போது வழியில் அவரைக் கண்ட பிராமணர்கள் அவரிடம் யாசகம் கேட்டு தேரை ஓட்டிச் சென்ற நான்கு குதிரைகளில் மூன்றை தானமாகப் பெற்றுச் சென்று விட்டனர். ஆனால் நான்காம் முறையாக இன்னொரு பிராமணர் வந்து நான்காவது குதிரையை யாசகம் கேட்டு பெற்றுச் சென்றதும் அந்த தேரை அவரே இழுத்துக் கொண்டு சென்றாலும் வழி முழுவதும் அந்த பிராமணரை மனதில் திட்டிக் கொண்டே சென்றார். ஆகவே அவரும் நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் மனதில் ஆத்திரத்தை வளர்த்துக் கொண்ட அவர் உங்களுக்குள் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

அடுத்து உன்னுடைய இளைய சகோதரர் பலரை தன்னுடைய அரண்மணைக்கு வரவழைத்து தாம் பயன்படுத்தும் அற்புதமான தமது தேரைக் காட்ட அனைவரும் அதை வெகுவாகப் புகழத் துவங்க அவர் மனதில் கர்வம் அடைந்தார்.அதை எதிர் பார்த்து நின்றது போலவே இருந்தது அவர் செய்கை . அதனால்தான் அவரும் நிறைய தான தருமங்கள் செய்து வந்தாலும் அவருக்கு முதல் இடம் இல்லை.

உன்னுடைய கடைசி தம்பியான சிபியோ மாய உருவை எடுத்து வந்த பிரும்மன் என்பதைக் கூடாது தெரிந்து கொள்ளாமல் அவர் கேட்ட அனைத்தையுமே, அவ்வளவு ஏன்,   தன்னுடைய மகனின் உடலைக் கூட தயங்காமல் வெட்டித்தர, பிரும்மனோ  அதையே உணவாக  உண்ணச் சொன்னபோது, அதற்கும்  தயங்காமல் அவருக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்ற மகனின் உடலையே உணவாக உண்ணத் துவங்க  உடனடியாக அவர் முன் தன சுய ரூபத்தில் பிரும்மா தோன்றி பாராட்டி விட்டுச் சென்றார். ஆகவே  அவனே தன்னலமற்றவன், போற்றுதலுக்கு உரியவன், உங்கள் அனைவரையும் விட உயர்ந்தவன்  என்றார்.  அஷ்தகாவும் மற்ற சகோதரர்களும் அவமானத்தினால் தலை குனிந்து கொண்டனர்.

நீதி:-  அறை குடம் தளும்பும், ஆனால் நிறை குடம் தளும்பாது.