சாந்திப்பிரியா 
மனபாஸ குருபார் அல்லது குருபார ஓஷா என்பது லஷ்மியை பெண்கள் ஆராதிக்கும் பண்டிகை ஆகும். அந்த தினத்தன்று விடியற் காலையில் பெண்கள் எழுந்து, குளித்தப் பின் வீட்டின் முன்புறத்தில் சாணம் தெளித்து அலம்பியப் பின் அரிசி மாவினால் கோலமிட்டு, அதில் பூக்களை வைத்து லஷ்மியை வீட்டிற்குள் அழைப்பார்கள். வீட்டிற்குள் வந்த லஷ்மியை பூஜை செய்து ஆராதிப்பார்கள். பூஜை இடத்தில் நெற்களை தூவி வைத்து அதன் நடுவில் கோலமிட்டு அந்த கோலத்துக்கு மத்தியில் சிறு மேசை மீது அரிசியை அளக்கும் மூங்கில் கூடையில் நெல்லை நிறப்பி வைப்பார்கள்.
நவம்பர் மற்றும் டிசம்பர் மாதத்தின் இடையில் வரும் ‘மார்கசிற்சா’ அல்லது ‘அக்ரஹாயனா’ எனப்படும் மாதத்தில் ஒவ்வொரு வியாழர் கிழமையும் வீட்டுப் பெண்கள் விரதம் இருந்து , லஷ்மி பூஜை செய்து, லஷ்மி புராணம் எனும் புனித பாராயணத்தைப் படிப்பார்கள். அதை படித்து முடித்ததும், பிரசாதங்களை நெய்வித்தியம் செய்து வீட்டில் உள்ளவர்கள் உண்பார்கள். இந்த பூஜையில் வேத மந்திரங்கள் ஓதி பூஜைகள் செய்யப்படுவது இல்லை, பண்டிதர்கள் கிடையாது. வீட்டில் உள்ள பெண்களே இதை செய்வார்கள். பூஜை முடிந்ததும் லஷ்மி புராணத்தை பக்தியுடன் படித்து முடித்தப் பின்னரே பூஜை முடிந்ததாக கருதப்படும். ‘மார்கசிற்சா’ மாதத்தில் அதை ஏன் செய்கிறார்கள் என்றால் அந்த மாதமே விஷ்ணுவிற்கு உகந்த மாதம் ஆகும். ஆகவேதான் விஷ்ணுவின் ஆளுமைக்கு உட்பட்ட அந்த மாதத்தில் அவர் மனதிற்கு ஏற்ற அவருடைய மனைவியான லஷ்மி தேவியை ஆராதித்து பூஜை செய்கிறார்கள். அந்த பூஜை செய்வதற்கும் இன்னொரு காரணம் உள்ளது. அது லஷ்மி புராணத்தில் கூறப்பட்டு உள்ளது.
பலராம தாஸ் எழுதிய லஷ்மி புராண்

லஷ்மி புராணம் என்பது ஒரிஸ்ஸாவின் புகழ் மிக்க கவிஞரான பலராம தாஸ் என்பவரினால் பதினைந்தாம் நூற்றாண்டில் எழுதப்பட்டுள்ளது. பாடல் வடிவில் எழுதப்பட்டு உள்ள இந்தப் புராணம் ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா எல்லைகளில் உள்ள ஆந்திராவின் பகுதிகள் போன்ற இடங்களில் பெண்களினால் புனிதப் புராணமாக கருதப்படுகிறது. வயல்களில் அறுவடை முடிந்ததும், செல்வத்தை அள்ளித் தரும் நல்ல அறுவடைக் கிடைக்கக் காரணமாக இருந்த லஷ்மி தேவிக்கு தமது நன்றியை செலுத்த – பெண்கள் இந்த புராணத்தை பாராயணம் செய்கிறார்கள்.

லஷ்மி தேவியானவள் செல்வத்தை மட்டும் கொடுப்பதில்லை, அவள் குடும்பங்களில் மகிழ்ச்சியைக் கொடுக்கிறாள், அழகைத் தருகிறாள், மேலும் அன்பையும் தருகிறாள் என்றே நம்புகிறார்கள். பாராயண காலத்தில் ஒவ்வொரு வியாழற் கிழமை அன்றும் லஷ்மி பூஜையை செய்கிறார்கள். சாதாரணமாக வெள்ளிக் கிழமைகளில்தான் லஷ்மிக்கு பூஜைகள் செய்வது விசேஷம் என தென் மற்றும் வடநாட்டின் பல பகுதிகளிலும் கருதப்பட்டாலும் லஷ்மி புராண பாராயணம் மற்றும் அதை சேர்ந்த லஷ்மி பூஜையை வியாழர் கிழமைகளில் செய்வதே விசேஷம் என்று ஒரு நம்பிக்கை ஒரிஸ்ஸா, சத்தீஸ்கர், மேற்கு வங்கம் மற்றும் ஒரிஸ்ஸா எல்லைகளில் உள்ள ஆந்திராவின் பகுதிகள் போன்ற இடங்களில் உள்ளது.

இந்தப் புராணம் மிகப் புனிதமாக போற்றப்படுவதின் காரணம் லஷ்மி விரத முறையை லஷ்மி தேவியே தனது வாயினால் ஒரு பெண்ணிற்குக் கூறினாள். அதற்கான காரணமும் அதே லஷ்மி புராணத்தில் உள்ளது.

லஷ்மி புராணம் என்பது லஷ்மியின் பிறப்பையும் அவளது மகாத்மியத்தையும் விரிவாக எடுத்துக் கூறும் நூல் அல்ல. ஆனால் இது லஷ்மியின் பெருமையை அதாவது லஷ்மி ஆராதனை இல்லை என்றால் வீடு வறுமையில் ஆழ்ந்து விடும் என்பதை விளக்கும் ஒரு புராணக் கதை ஆகும். ஒரு விதத்தில் பார்த்தால் இந்தக் கதை பூரி ஜகன்னாதர் ஆலயத்துடனும் பாலபத்திரர் எனும் பாலராமருடனும் சம்மந்தப்பட்டது என்று கூடக் கூறலாம். லஷ்மி புராணம் என்பது என்ன?

லஷ்மி புராணம்

ஒருமுறை நாரத முனிவரும், பராசர முனிவரும் பூலோகத்தில் இருந்த ஒரு கிராமத்திற்கு சென்றார்கள். அது ‘மார்கசிற்சா’ மாத வியாழர் கிழமை ஆகும். அந்த கிராமத்து மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து லஷ்மி பூஜையை செய்து கொண்டு நடனம் ஆடிக்கொண்டு இருந்தார்கள்.

அப்போது நாரதர் பராசர முனிவரைப் பார்த்துக் கேட்டார் ‘ முனிவரே, இது என்ன விசித்திரமான கொண்டாட்டம்? எப்போதுமே ஒத்துப் போகாமல் இருந்த பிராமணர்களும் சண்டாளர்களும் இன்று அதிசயமாக ஒன்றாக இணைந்து நடனம் ஆடிக் கொண்டு, லஷ்மி பூஜையை செய்து கொண்டு இருக்கிறார்கள் ?’.

அதைக் கேட்ட பராசர முனிவர் கூறினார் ‘ நாரத மா முனிவரே, இந்தப் பண்டிகை லஷ்மி தேவியின் அருளை வேண்டிப் பெறுவதற்காக ‘மார்கசிற்சா’ மாதத்தில் பெண்கள் விரதம் இருந்து செய்வதாகும். இது பெண்களின் மகத்துவத்தைக் காட்ட ஏற்பட்ட பண்டிகை ஆகும். இதில் ‘மார்கசிற்சா’ மாதத்தில் வரும் முதல் வியாழற் கிழமை முக்கியமான நாளாகும். அந்த மாதத்தின் பத்தாவது நாளன்று அந்த வியாழற் கிழமை வந்தால் அன்று விசேஷமான சுதாஷா என்ற விரதத்தையும் செய்வார்கள்’ என்று கூறினார். அதைக் கேட்ட நாரத முனிவருக்கு லஷ்மி புராணத்தைக் கேட்க ஆவல் ஏற்பட அந்த விரதம் குறித்த கதையை  தனக்குக் கூறுமாறு அவரிடம் கேட்டதும் பராசரர் அந்த புராணத்தை கூறத் துவங்கினார்.

”ஒருநாள் தனது கணவரான பூரி ஜகன்னதரின் அவதாரத்தில் இருந்த விஷ்ணுவிடம் சென்று லஷ்மி தேவி கேட்டாள் ‘பிரபோ, இன்று என்னுடைய விரத நாள் ஆகும். பூமியில் பலரும் என்னை ஆராதிப்பார்கள். ஆகவே அவர்கள் என்னை எவ்வாறு ஆராதிக்கிறார்கள் என்பதைப் பார்க்க  நான் வெளியில் சென்று விட்டு வருவதற்கு எனக்கு உங்கள் அனுமதி வேண்டும்’ என்று கேட்டாள் . அதைக் கேட்ட ஜகன்னாதரும் மனம் மகிழ்ந்து அதற்கு அனுமதி கொடுத்தார்.

அவருடைய அனுமதியைப் பெற்றுக் கொண்ட லஷ்மி தேவி தன்னை நன்கு அலங்கரித்துக் கொண்டு ஒரு வயதான பெண்மணியின் உருவில் பூமிக்கு சென்றாள். அங்கு சென்றதும் முதலில் அவள் ஒரு பிராமணரின் வீட்டிற்குச் சென்றாள். ஆனால் அவர்கள் வீட்டின் முன்னால் கோலமோ பிற   அலங்காரமும் காணப்படவில்லை. லஷ்மி பூஜையும் நடைபெறுவதாகத் தெரியவில்லை. ஆகவே அந்த வீட்டிற்குள் நுழைந்து வீட்டுப் பெண்மணியை அழைத்த லஷ்மி தேவி ‘ஏனம்மா, நீங்கள் லஷ்மி பூஜை செய்யவில்லையா?’ என்று அக்கறையுடன் கேட்டாள். அந்தப் பெண்மணி கூறினாள் ‘ அம்மா, எனக்கும் அந்த பூஜையை செய்ய ஆசையாகதான்  உள்ளது. ஆனால் அதன் விதி முறைத் தெரியவில்லை. ஆகவே நீங்கள் எனக்கு அந்த முறையை கற்றுக் கொடுத்தால் நானும் அதை செய்ய முடியும்’ என்று அந்த வயதான பெண்மணியின் உருவில் இருந்த லஷ்மியிடம் கேட்டாள். அதைக் கேட்டு மகிழ்ந்து போன லஷ்மி தேவியும் அவளுக்கு அந்த விரத முறையைக் கூறலானாள்.

‘அம்மா, காலையில் எழுந்து குளித்து விட்டு, வீட்டை நன்கு சுத்தம் செய்தப் பின் , வாயிலில் பசு சாணத்தை தெளித்து துடைத்ததும், அதில் வெள்ளை நிற அரிசி மாவு கோலமிட்டு, வண்ணப் பொடிகளைத் தூவி நன்கு அலங்கரிக்க வேண்டும். அது போல ஸ்வாமி கூடத்தில் ஒரு இடத்தை ஈரத் துணியால் சுத்தம் செய்து விட்டு, அறுவடை செய்த நெல்லைத் தூவி, வண்ணக் கோலமிட்டு, அதன் மீது ஒரு சிறு மேஜையை வைத்து அதன் மீது அரிசியை அளக்கும் ஒரு கூடையை வைத்து அதில் அரிசி நெல்லை நிறப்பி வைக்க வேண்டும்.

மூன்று வெற்றிலைகளை மஞ்சள் ஜலத்தினால் சுத்தம் செய்து அந்த மேஜை மீது வைக்கவும். அதை சுற்றி உள்ள இடங்களில் காய்கறிகள், கனிகள் மற்றும் மலர்களைக் கொண்டு நன்கு அலங்கரிக்க வேண்டும். அதன் பின் ஊதுபத்தி மற்றும் நெய் விளக்கை ஏற்றி மகாலஷ்மியை வீட்டிற்கு அழைக்க வேண்டும். மூன்று வகைகளினால் ஆன அரிசி உணவை செய்து நெய்வித்தியமாக படைத்தப் பின் இனிப்புக்களையும் வைத்து பூஜை செய்தப் பின், லஷ்மியின் பெருமையை விளக்கும்  புராணத்தைப் படித்தப் பின் நெய்வித்தியத்தை வீட்டினர் உண்ண வேண்டும். இதில் ஒரு விஷயத்தைக் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். பிரசாதங்களை வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே உண்ண வேண்டும். அக்கம் பக்கத்தினருக்கோ, விருந்தாளிகளுக்கோ, அவ்வளவு ஏன் திருமணம் ஆகி விட்ட சொந்த பெண்ணுக்குக் கூட- திருமணம் ஆனப் பின் அவள் வேறு வீட்டை சேர்ந்தவள் ஆகி விடுவதினால்- தரக் கூடாது. அப்படி தந்தால் பூஜையின் பலன் கிடைக்காது.

மேஜை மீது மூங்கில் கூடையில்
நிரப்பி வைக்கப்பட்டு உள்ள நெல் 
அந்த மாதம் முழுவதுமே, முக்கியமாக விரத தினங்களில் வீட்டில் உள்ள குழந்தைகளை கடுமையாக கடிந்து கொள்ளக் கூடாது, இருட்டிலே அமர்ந்து கொண்டு உணவு அருந்தக் கூடாது, மாலையில் தலைக்கு எண்ணை தடவிக் கொண்டு வாரிக் கொள்ளக் கூடாது, மாமியார்- மாமனாரை அவமரியாதை செய்யக் கூடாது.  இரவு ஆடைகள் இன்றி படுத்து உறங்கலாகாது. கணவரிடம் சண்டைப் போடக் கூடாது. எந்த வீட்டில் உள்ளப் பெண்கள் கணவன் எழுந்து கொண்டப் பின் எழுந்து சோம்பேறியாக உள்ளார்களோ, யார் தன் கணவருடன் சண்டை இட்டுக் கொண்டும், அவரை அவமானப்படுத்தும் விதத்திலும் நடக்கிறார்களோ அவர்கள் வீடுகளை விட்டு லஷ்மி தேவி உடனடியாக வெளியேறி விடுவாள். அதன் பின் அங்கு உள்ளே செல்ல மாட்டாள். இவற்றை எல்லாம் உன்னால் கடை பிடிக்க முடியும் என்றால் நீ விரதத்தை இன்றே துவக்கு’ என்று அறிவுறுத்த அந்த பிராமணப் பெண்மணியும் சந்தோஷமாக அதை உடனே செய்வதாகக் கூறி வயதான பெண்மணி உருவில் இருந்த லஷ்மி தேவிக்கு நன்றி கூறி அவளை அனுப்பி வைத்தாள்.
அடுத்ததாக லஷ்மி தேவி இன்னொரு பகுதிக்குச் சென்றாள். அது பிராமணர்கள் அல்லாத கீழ் ஜாதியை சேர்ந்தவர்கள், முக்கியமாக சண்டாளர்கள் என்று அந்த காலத்தில் கூறப்பட்ட மக்கள் வசித்தப் பகுதியாகும். அங்கு நுழைந்ததுமே ஷ்ரியா என்ற சண்டாளப் பெண்மணி அவள் வீட்டில் வாயிலில் சாணம் தெளித்து, துடைத்தப் பின் வண்ணமயமான அரிசி கோலத்தைப் போட்டு அதன் மீது தாமரை மலர்களையும் வரிசையாக அடுக்கி வைத்து இருந்ததைக் கண்டாள். அந்த மலர்கள் அவளுடைய  வீட்டின் உள்ளே பூஜை அறை வரை வரிசையாக வைக்கப்பட்டு இருந்தது. அந்த தாமரை மலர்களைக் கண்டதுமே லஷ்மி தேவிக்கு அந்த வீட்டிற்குள் நுழைய வேண்டும் என்ற ஆவல் தோன்றியது. ஆகவே அவள் அந்த தாமரை மலர்கள் மீது காலை வைத்துக் கொண்டவாறே நடந்து சென்று சண்டாளன் வீட்டிற்குள் நுழைந்து விட்டாள். உள்ளே சென்றவள் ஷ்ரியா லஷ்மி பூஜையை செய்து கொண்டு இருப்பதைப் பார்த்து அவள் எதிரில் சென்று தரிசனம் கொடுத்து விட்டு ‘ உனக்கு என்ன வேண்டும்?’ என்று கேட்டாள்.
லஷ்மி தேவி தரிசனம் தந்தாள்
லஷ்மி  திடீர் என தன்  எதிரில் நிற்பதைக் கண்டதும் ஷ்ரியாவுக்கு காலும் ஓடவில்லை. கையும் ஓடவில்லை. அப்படியே அவள் முன் குனிந்து  நமஸ்கரித்தாள் .  அவள் பாதங்களைப் பிடித்துக் கொண்டு அதில் தன் தலையை வைத்து வணங்கியவள் ‘எனக்கு ஆயிரம் பசுக்கள், நிறைய செல்வம், கொஞ்சி மகிழக் குழந்தை, மற்றும் பல நகைகளும் வேண்டும்’ என்று கேட்க அவை அனைத்தையும் தந்து அவளுக்கு லஷ்மி தேவி அருள் புரிந்தாள். இப்படியாக லஷ்மி தேவி வேறு சில சண்டாளர்கள் வீடுகளுக்கும் சென்றாள்.
அப்போது ஜகன்னாதரும், அவரது சகோதரர் பலராமர் எனும் பாலபத்திரரும் காட்டில் வேட்டை ஆடிக் கொண்டிருந்தார்கள். லஷ்மி தேவி சண்டாளன் வீட்டிற்குள் சென்றதை அவர்களுக்கு உடனே ஓடிச் சென்று ஒற்றன் கூறினான். அதைக் கேட்ட பலராமர் கோபமடைந்து தனது சகோதரர் ஜகன்னாதரிடம் கூறினார் ‘ அண்ணா, பார்த்தீர்களா, உங்கள் மனைவி ஒரு சண்டாளன் வீட்டிற்குள் சென்று தோஷமாகி இருக்கிறாள். அங்கு சென்று விட்டு குளித்து தன்னை பவித்திரம் ஆக்கிக் கொள்ளாமல் ஆலயத்துக்கும் வந்து கொண்டு இருக்கிறாள். அது தவறு. அவள் நம் வீட்டிற்குள் (ஆலயத்துக்குள்) நுழையும் யோக்கிதையை இழந்து விட்டாள்’ .
அதற்கு ஜகன்னாதர் கூறினார் ‘பாலபத்ரா, என்னுடைய மனைவியை யார் வழிபடுகிறார்களோ அவர்களுக்கு அருள் புரிவது அவள் கடமையல்லவா.  இதில் அவளை வணங்குபவர் யார், சண்டாளனா இல்லை பிராமணனா என்று பேதம் பார்க்க முடியுமா. ஜாதி பேதம் பார்த்து அருள் புரிவது  தெய்வ நீதிக்கு எதிரானது அல்லவா ?’ என்று கேட்டதும், பாலபத்திரர் அதிக கோபம் அடைந்தார். அவர் கூறினார் ‘ அண்ணா, உங்களுக்கு உங்கள் மனைவிதான் முக்கியமாகத் தோன்றினால் அவளுக்கு சண்டாளர்கள் வசிக்கும் இடத்தில் சென்று ஒரு மாளிகையை அமைத்துக் கொடுங்கள். எனக்குக் கவலை இல்லை. ஆனால் அவள் இனி நம் ஆலயத்தில் தங்க முடியாது. அவளை அடித்து விரட்டுங்கள்’.
ஜகன்னாதர் மீண்டும் கூறினார் ‘ இதோ பார். நாம் வீட்டுப் பெண்ணை  இப்போது விரட்டி விட்டால் அவளைப் போல இன்னொருவள் நமக்குக் கிடைக்க மாட்டாள். வீட்டுப் பெண்ணை விரட்டி விட்டால் செல்வத்தை இழந்து விடுவோம். அவளை மீண்டும் நம்முடன் அழைத்துக் கொள்ள தேவலோகத்தில் உள்ளவர்களுக்கு பல கோடி தட்ஷணைகளை கொடுத்து பரிகாரம் செய்து  அவளை மீண்டும் நம்முடன் இணைத்துக் கொள்ளலாம். மீண்டும் அதே தவறை அவள் செய்தால் அவளை ஆலயத்தை விட்டு துரத்தி விடலாம்’.
ஜகன்னாதரும், பாலபத்திரரும்
ஆனால் அவர் கூறியதை பாலபத்திரர் ஏற்கவில்லை. அவர் கூறினார் ‘ அண்ணா, நீங்கள் உங்கள் மனதுக்கு என்ன தோன்றுகிறதோ அதை செய்யுங்கள். உங்களுக்கு சகோதரன் வேண்டும் என்றால் நான் உங்களுடன் இருக்கிறேன். உங்களுக்கு ஒரு லட்ஷ மனைவிகள் கூட கிடைக்க முடியும். ஆனால் உங்களுக்கு இந்த மனைவிதான் முக்கியம் என்றால் தாராளமாக அவளை அழைத்துக் கொள்ளுங்கள். நான் வீட்டை விட்டு வெளியே சென்று விடுகிறேன். என்னால் பாவம் செய்தவள் உள்ள வீட்டில் தங்க முடியாது ‘. பலராமனின் கோபத்தைக் கண்ட ஜகன்னாதாரால் மேலும் பலராமரை சாந்தப்படுத்த முடியவில்லை.
அந்த இடம் அமைதியாயிற்று. ஆகவே இருவரும் கிளம்பிச் சென்று ஆலய வாயிலில் அமர்ந்து கொண்டார்கள். இதற்கு இடையே ஷ்ரியாவிற்கும் தன்னை ஆராதித்த மற்ற சண்டாள  குடும்பங்களுக்கும்   வேண்டிய அனைத்தையும் செய்து தந்தப் பின் லஷ்மி தேவி ஆலயத்துக்கு திரும்பி வந்தாள். அவளை உள்ளே விட மறுத்த ஜகன்னாதார் ‘ சண்டாளன் வீட்டிற்குச் சென்று விட்டு வந்துள்ள உனக்கு உள்ளே நுழைய அதிகாரம் இல்லை. நீ செய்த தவறை நான் மட்டும் பார்த்திருந்தாலும் பரவாய் இல்லை. என் சகோதரனுக்கும் அது தெரிந்து விட்டது. ஆகவே உன்னால் நாங்கள் அவமானத்தால் நிற்கிறோம். ஆகவே நீ இங்கிருந்துக் கிளம்பி வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள் ‘.
அதைக் கேட்ட லஷ்மி கூறினாள் ‘ நாதா, உங்களுக்கு என்னைப் பிடிக்கவில்லை என்றால், நம் திருமணத்தை முறித்து விட்டு என்னை தள்ளி வைத்து விடுங்கள். ஆனால் நான் என்ன தவறை செய்தேன் என்று  கூறுங்கள்’. ஜகன்னாதர் கூறினார் ‘ திருமணத்தை முறித்து விட்டு உன்னை வெளியேற்ற  நம்முடைய தேவ தர்மத்தில் வழி இல்லை. நீ ஒரு சண்டாளன் வீட்டிற்குள் நுழைந்து விட்டு வந்துள்ளதினால் உனக்கு இங்கு இடம் இல்லை’. லஷ்மி மீண்டும் கூறினாள் ‘நாதா அமிர்தம் எடுத்தபோது கடலில் இருந்து வெளி வந்த என்னை திருமணம் செய்து கொண்ட நீங்கள் நான் தவறு செய்தால் மொத்தம் பத்து தவறுவரை பொறுத்துக் கொண்டு என்னை மன்னித்து விடுவீர்கள் என்று என் தந்தைக்கு ஒரு வாக்கு கொடுத்தீர்கள். அதன்படி பார்த்தால்  நான் இப்போது ஒரே ஒரு தவறுதான் செய்துள்ளேன். ஆனாலும் அதை நீங்கள் பொறுத்துக் கொள்ள மறுக்கிறீர்கள். இது நியாயமா?’.
ஜகன்னாதர் கூறினார் ‘ உன் தந்தை நாள் முழுவதும் போடும் கூச்சல் என்னால் தாங்க முடியவில்லை. ஆகவே எங்கள் அரண்மனையை சுற்றி அரண் எழுப்பக் கூட முடிவு செய்துவிட்டோம். நீ என்னடா என்றால் அவரை துணைக்கு அழைக்கிறாய். உன்னை என்னால் ஏற்க முடியாது. உனக்கு வேண்டிய அனைத்தையும் செய்து தருகிறேன். நீ வேறு எங்காவது சென்று வாழ்ந்து கொள்’.
அதைக் கேட்ட லஷ்மியும் கோபமுற்றாள். ‘நாதா, கடவுளுக்கு ஜாதி பேதம் உண்டா? மனித குலத்துக்கே நீங்கள் செய்யும் அநீதி அல்லவா அந்த பேதம் . நான் செய்தது தவறு என்றால் நீங்கள் ஏன் யாதவ குலத்தில்  பிறந்து பெண் எடுத்தீர்கள்? இடையர்களோடு சென்று நீங்கள் தங்கவில்லையா? தாழ்ந்த ஜாதியை சேர்ந்த நிமா என்பவளின் வீட்டில் நீங்கள் உணவு அருந்தவில்லையா? சாரா மீதி வைத்த உணவை நீங்கள் உண்ணவில்லையா? மனைவி தவறு செய்தால் அதை கணவன் பொறுத்துக் கொள்ள வேண்டுமே தவிர அவளை உதாசீனப்படுத்தக் கூடாது’.
அதைக் கேட்ட ஜகன்னாதரும் கூறினார் ‘இதோ பார் லஷ்மி, என் சகோதரனுக்கு எதிராக உன்னை என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது. வேண்டுமானால் உனக்கு நான் ஆறு மாத கால உணவிற்கு தேவையான அனைத்தையும் செய்து தருகிறேன். எங்காவது சென்று வாழ்ந்து கொண்டு இரு. அதற்கு இடையில் என் சகோதரனை நான் சமாதானப்படுத்த முயலுகிறேன். அவன் சமாதானம் ஆகிவிட்டால்  உன்னை திரும்பவும் அழைத்துக் கொள்கிறேன். அவ்வளவுதான் என்னால் இப்போது செய்ய முடியும் ‘.
லஷ்மியினால் அதற்கு மேல் அவமானத்தை தாங்க முடியவில்லை. தன் உடலில் அணிந்திருந்த நகைகள் அனைத்தையும் கயற்றி அவரிடம் கொடுத்து விட்டுக் கூறினாள் ‘ சரி நான் போய் சண்டாளர்களுடன் வாழ்கிறேன். நம் தர்ம நெறிப்படி, மனைவியை விலக்கி வைத்தால் அவளுக்கு ஆறுமாத உணவிற்கு வழி செய்யும் வகையில் கணவன் ஏற்பாடு செய்தப் பின்னரே வீட்டை விட்டு அவளை அனுப்ப வேண்டும். ஆனால் இன்று நான் உங்களிடம் எதையும் பெற விரும்பவில்லை. மாறாக  நீங்கள் கொடுத்த அனைத்து ஆபரணங்களையும் திரும்ப உங்களிடமே  தந்துவிட்டு செல்கிறேன். போகும் முன் உங்களுக்கு ஒரு சாபம் கொடுக்கிறேன். நீங்கள் இருவரும் பன்னிரண்டு வருடம் சாப்பிட வழி இன்றி, நல்ல உடைகள் இன்றி அவதிப்படுவீர்கள். மீண்டும் நீங்கள் சண்டாளனாக உள்ள என் கையால் உணவு அருந்தினால் மட்டுமே உங்கள் சாபம் விலகும்’ என்று கூறி விட்டு கோபமாக அங்கிருந்து கிளம்பிச் சென்று விட்டாள் .
அடுத்த நாள் அவள் விஸ்வகர்மாவை அழைத்தாள். அவரை தனக்கு தங்கத்தினாலும், வைர வைடூரியங்களிளுமான குடிசைக் கட்டித் தருமாறு கூறினாள். அவரும் அப்படிப்பட்ட குடிசை ஒன்றை  சண்டாளர்கள் இருந்தப் பகுதியில் அமைத்துத் தந்தார். அடுத்து லஷ்மி தேவி எட்டு வேதாளங்களை அழைத்தாள். யாருக்கும் தெரியாமல் ஆலயத்துக்குள் சென்று தான் வைத்து இருந்த அனைத்து செல்வங்கள் மற்றும் சமையல் அறையில் இருந்த அனைத்தையும் எடுத்து வந்து விடுமாறும், அவர்கள் படுக்கக் கூட கட்டில் இல்லாமல் அனைத்தையும் எடுத்து வருமாறும் கூறி அனுப்பினாள். சரஸ்வதியை அழைத்தாள். அந்த ஊரில் உள்ள அனைவரிடமும் சென்று ஜகன்னாதரும், பாலபத்திரரும் வந்தால் உணவு மட்டும் அல்ல குடிப்பதற்கு தண்ணீர் கூடத் தரக் கூடாது என்று கட்டளை இடுமாறு கூறி அனுப்பினாள் .
அன்று இரவு சகோதரர்கள் அயர்ந்து தூங்கிக் கொண்டு இருந்த போது வேதாளங்கள் அங்கு சென்று அந்த சகோதரர்களுக்கே தெரியாமல் அவர்களைக் கட்டிலில் இருந்து இறக்கி கீழே படுக்க வைத்து விட்டு ஆலயத்திலும் அவர்கள் தங்கி இருந்த வீட்டிலும் இருந்த அனைத்தையும் எடுத்துக் கொண்டு சென்று விட்டார்கள்.
மறுநாள் கண் விழித்த சகோதரர்கள் வீட்டில் எதுவுமே இல்லை என்பதையும், தாங்களே கீழே ஒரு துணி கூட விரிக்காமல் தரை மீது படுத்துக் கிடந்ததையும் கண்டு திடுக்கிட்டார்கள். அதைப் பார்த்த ஜகன்னாதர் கூறினார் ‘பலராமா, இதற்குதான் நான் முன்னரே கூறினேன். வீட்டில் இருந்து லஷ்மி சென்று விட்டால் தரித்திரமே நிலைக்கும் என்று. நீ அதைக் கேட்கவில்லை’.
அதைக் கேட்ட பலராமர் கோபமுற்றுக் கூறினார் ‘அண்ணா, ஒரு மனைவி என்பவள் தன் கணவர் பட்டி கிடந்து அவதிப் படட்டும் என்று விட்டு வைப்பாளா? அப்படி செய்பவள் நல்ல மனைவியாக இருக்க முடியுமா?’.
இப்படியாக இருவரும் மாற்றி மாற்றி எதையெதையோ  விவாதித்துக் கொண்டே சமையல் அறையில் சென்று பார்த்தார்கள். அங்கோ குடிக்கத் தண்ணீர்க் கூட இல்லை, ஒரு குவளையைக் கூட காணவில்லை. பாத்திரங்கள், பண்டங்கள் என எதுவுமே இல்லை. நேரம் செல்லச் செல்ல பசி, தாகம் எடுக்க ‘இன்ரதும்னா’ என்ற குளத்துக்கு தண்ணீர் கொண்டு வரச் சென்றால் அந்தக் குளமும் வற்றி இருந்தது. கிழிந்த ஆடைகளை அணிந்து கொண்டு பூணூல் உடலில் தெரிய பிராமணர்கள் இருந்தப் பகுதிகளுக்குப் போய்  வீடு வீடாகச் சென்று பிட்ஷைக் கேட்டார்கள். ஆனால் அவர்களை அடையாளம் கண்டு கொள்ள முடியாத பிராமணர்களோ அவர்கள் கொள்ளைக்காரர்கள் , பிராமணர்களைப் போல வேஷம் போட்டுக் கொண்டு திருட வந்துள்ளார்கள் என்று நினைத்துக் கொண்டு அவர்களை அடித்து விரட்டினார்கள். ஒரே ஒரு இடத்தில் அவர்கள் நிலையைக் கண்டு பரிதாபம் கொண்ட ஒரு பிராமண பெண் அவர்களுக்கு உணவு தர பாத்திரத்தை எடுத்தாள். உடனேயே அது அவள் கையில் இருந்து மாயமாய் மறைந்து போயிற்று. இன்னொரு இடத்தில் கஷ்டப்பட்டு அவர்களுக்கு உணவு கிடைத்தது. அதை உண்ணப் போனபோது பெரும் காற்று வீச  அத்தனையும் பறந்து சென்று மண்ணில் விழுந்தது.
ஆகவே அவர்கள் கடலுக்குச் சென்று வேதங்களை ஓதி பிரார்த்திக்க லஷ்மி அவர்களிடம் தனது வேலைக்காரியை அனுப்பினாள். அவளிடம் அவர்கள் தம் பசிக்கு உணவு கேட்க லஷ்மி தேவி அவர்கள் சண்டாளர்கள் வீட்டில் உணவு அருந்த முடியாது என்பதினால் உணவு தர மறுத்ததாகக் கூறுமாறு செய்தி அனுப்பினாள். அவர்களோ விடாப் பிடியாக தமக்கு உணவு தராவிடிலும் பரவாய் இல்லை, தமக்கு பாத்திரங்களையும், சிறிது அரிசியையும் தந்தால் அக்னியை மூட்டி அதில் தாமே சமைத்து உண்பதாகக் கூறினார்கள். அக்னிபட்டால் எந்த தோஷமும் விலகும் என்பதினால் அப்படிக் கேட்டார்கள். அவளும் அவர்களுக்கு அனைத்தையும் தந்து அனுப்பிவிட்டு அக்னியிடம் அவர்கள் உள்ள இடத்துக்கு செல்லக் கூடாது என்று தடுத்து விட்டாள். சகோதரர்கள் உணவை தயாரிக்க அடுப்பை மூட்டினால் என்ன செய்தும் தீ பற்றவே இல்லை.
 
பிராமண உருவில் இருந்த பலராமரும்
ஜகன்னாதரும் சண்டாளர் வீட்டில் உணவு அருந்தினார்கள்
ஒரு மாதம் ஆயிற்று. பசியின் கொடுமை தாங்க முடியவில்லை. உணவையும் சமைக்க முடியவில்லை. என்ன செய்வது என்று தெரியாமல் இரு சகோதரர்களும் சண்டாளர் வீட்டில் லஷ்மி இருந்தாலும் அவள் வீட்டில் உணவு அருந்த சம்மதிக்க லஷ்மியும் நல்ல உணவு சமைத்து அனுப்பினாள். அதை அவள் சண்டாளப் பெண்களின் கையில் கொடுத்து அனுப்பி அவர்களே அதை பரிமாற்ற வேண்டும்  என்று கூறி அனுப்பினாள்.  வேறு வழி இன்றி அந்த சகோதர்களும் சண்டாளர்கள் வீட்டில் அதை உண்டார்கள்.  அது   ‘மார்கசிற்சா’ மாதத்தின் வியாழர் கிழமை ஆகும். இருவரும் பசி அடங்கியப் பின்னரே  தம் தவறை உணர்ந்தார்கள்.
அவமானத்தினால் தலை குனிந்த பலராமர் தன் சகோதரர் ஜகன்னாதரிடம் கூறினார் ‘நீங்கள் சென்று உங்கள் மனைவி லஷ்மியின் கையைப் பிடித்து  அழைத்து வாருங்கள்., நடந்த தவறுகளுக்கெல்லாம் நான்தான் காரணம். இனி அவளை விட்டுப் பிரியாதீர்கள்’ என்று கூறி அவரை அனுப்ப லஷ்மியும் ஜகன்னாதரை வரவேற்று அவர் பாதங்களில் விழுந்து வணங்கினாள். அதன் பின் அவர் பாதங்களை கழுவி அந்த நீரில் சிறிது தான் அருந்திவிட்டு தன் மீதும் அந்த புனித நீரை தெளித்துக் கொண்டாள். அவரிடம் கூறினாள் ‘ என்னை சண்டாள பெண்ணாகக் கருதி வெளியே அனுப்பினீர்கள். ஆனால் அதே பெண்ணின் வீட்டில் மீண்டும் உணவு உண்ண வந்துள்ளீர்கள் . ஆகவே நீங்கள் இருவருமே இப்போதுதான் ஜாதி பேதத்தை  கடந்து நிற்கிறீர்கள். உங்கள் சபதம் என்ன ஆயிற்று? நீங்கள் போட்ட சபதத்துக்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும். உங்கள் சகோதரனை எண்ணியும் நீங்கள் வெட்கப்பட வேண்டும். இனியாவது மனிதர்களில் பேதம் பார்க்காதீர்கள். உங்களை வணங்குபவர்களை அவமானப்படுத்தாதீர்கள். சரி போகட்டும், இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கூறுங்கள்?’.
அதற்கு ஜகன்னாதர் கூறினார் ‘லஷ்மி தேவியே, எங்களை மன்னித்து விடு . நங்கள் நீ இல்லாமல் பெரும் அவதிப்பட்டோம். லஷ்மி இல்லை என்றால் என்ன ஆகும் என்பதை உலகிற்கு எங்கள் மூலம் உணர்த்தி விட்டாய். இனி வியாழர் கிழமையில் உன்னை பூஜித்து உணவு அளிப்பவர்களுக்கு அனைத்து பாபங்களும் விலகி, செல்வம் பெருகி உன் விரதத்தை செய்பவர்கள் சொர்கத்தை அடைவார்கள்.
அதற்கு லஷ்மி தேவி கூறினாள் ‘ இனி உங்களைப் பொறுத்தவரை ஏழைப் பணக்காரன், ஜாதி என்ற பேதம் எதுவுமே உங்கள் ஆலயத்தில் இருக்கக் கூடாது. யார் வேண்டுமானாலும் வந்து உங்களை வணங்கலாம். யார் வேண்டுமானாலும் வந்து உங்களுக்கு பிரசாதம் படைக்கலாம் என்று எனக்கு வாக்குறுதி தந்தால் மட்டுமே நான் அங்கு வருவேன் ‘ என்றாள். அதைகேட்ட ஜகன்னாதரும் உடனடியாக அவள் கூறியதை ஏற்றுக் கொண்டார்.
அதைக் கேட்ட பலராமர் கூறினார் ‘ அம்மா, எந்த ஒரு வீட்டிலுமே ஒரு பெண் இருந்தால்தான் வீடும் நலமாக இருக்கும். ஒரு பெண்ணாகவே லஷ்மி தேவியான நீ இருப்பதினால் உன்னை சந்தோஷமாக வைத்துக் கொள்ளாத வீடு என்ன ஆகும் என்பதை எங்கள் மூலம் உலகிற்கு விளக்கி விட்டாய். நீ வெளியே சென்று விட்டால், எதுவுமே கிடைக்காது என்பதை இந்த சம்பவம் மூலம் உலகம் புரிந்து கொள்ளும். நாங்கள் பட்ட கஷ்டங்களை விளக்கும் இந்த ‘மார்கசிற்சா’ மாதத்தின் வியாழர் கிழமைகள் இனி புனிதமாக போற்றப்படும். அன்று உன்னை பெண்கள் வணங்கி பூஜிப்பார்கள். அப்படி பூஜிப்பவர்களுக்கு நீயும் அளவாற்ற செல்வத்தை தருவாய்”.
இந்தக் கதையைக் கேட்ட நாரதர் லஷ்மியின் அருள் இல்லாமல் யாருக்கும் ஒன்றும் கிடைக்காது என்பதைப் புரிந்து கொண்டப் பின் கூறினார் ‘யார் இந்த புனிதமான புராணத்தை இதய பூர்வமாக பாராயணம் செய்து விரதம் இருக்கிறார்களோ அவர்கள் ஆயிரம் கோடி பசுக்களை தானம் செய்தப் பலனை அடைவார்கள் என்பது மட்டும் அல்ல மோட்சமும் பெறுவார்கள்’.
இப்படியாக பலராம் தாஸ் அவர்கள் எழுதிய லஷ்மி புராணம் முடிவுற்றது.