கிருஷ்ணர் நடத்திய நாடகம்
சாந்திப்பிரியா

என்றும் போல அன்றும் சூதக முனிவரை சுற்றி ரிஷி முனிவர்கள் அமர்ந்து இருந்தார்கள். அவர்களில் ஒரு முனிவர் கேட்டார் ‘ சூத முனிவரே, ஹஸ்தினாபுர பூமி என்பது நியாயத்திற்கும் நேர்மைக்கும் பேர் போனது என்கிறீர்களே, அதை விளக்கும் ஒரு கதையை இன்று நீங்கள் கூறுவீர்களா?’ என பவ்வியமாக கேட்க சூதக முனிவர் ஒரு கதையைக் கூறலானார்.

முன்னொரு காலத்தில் ஹஸ்தினாபுரத்தில் ருத்ர சர்மா என்ற ஒரு பிராமணன் வாழ்ந்து வந்தான். அவர் ப்ரோகிதம் செய்து பிழைத்து வந்தார். மனைவியின் பெற்றோர்கள் இறந்து விட்டதினால் அவளது தங்கை அனாதை ஆயினாள். ஆகவே அந்த அனாதை பெண்ணை (மனைவியின் தங்கை) வளர்க்கும் பொறுப்பும் ருத்ர சர்மா மீது விழுந்தது. அவளுக்கோ திருமணம் செய்து கொடுக்க முடியாமல் ஏழ்மை நிலை தடுத்ததினால் அவளைக் காப்பாற்றும் விதமாக அவரது மனைவியின் அறிவுரையை ஏற்றுக் கொண்டு மனைவியின் தங்கையையும் தானே மணந்து கொண்டார். இப்படியாக அவருக்கு இரண்டு மனைவிகள் அமைந்தார்கள். இருவருமே நல்ல ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தார்கள்.

அவர்களின் பெயர்கள் மதுமதி மற்றும் இந்திரவதி என்பது. இருவரும் ஒரே வீட்டில் தங்கி  இருந்தார்கள்.   காலப் போக்கில் இருவருக்கும் ஒவ்வொரு ஆண் மகன்கள் பிறந்தார்கள் . சில காலம் பொறுத்து நோயுற்ற முதல் மனைவி மதுமதி மரணம் அடைந்து விட இரண்டு குழந்தைகளையும் வளர்க்கும் பொறுப்பு இந்திரவதியின் மீது விழுந்தது.  வீட்டில் ஏழ்மை நிலை என்பதினால் போதுமான அளவு உணவு இல்லை. ஆகவே தினமும் வீட்டில் செய்து வந்த உணவில் இந்திரவதி அதிகம் பசி…பசி என அலைந்த தனது மகனுக்கு அதிக உணவு கொடுத்தும் மூத்தவள் மகனுக்கு குறைவான அளவில் உணவும் கொடுத்து வந்தாள். அது மட்டும் அல்லாமல் மூத்தவள் மகனை கொடுமைப்படுத்தி வந்தாள்.

மதுமதியின் குழந்தைக்கோ உணவு போதவில்லை. ஆகவே  ஆலயங்களுக்குச் சென்று அங்கு கிடைத்த அன்னதானத்தை உண்டு தனது பசியைப் போக்கிக் கொண்டது.  தினமும் பக்கத்து தெருவில் இருந்த கிருஷ்ணர் ஆலயத்துக்கு சென்று அவரிடம் வேண்டிக் கொண்டு தான் படும் கஷ்டத்தைக்  கூறி அழும். வீட்டில் நடப்பது எதுவுமே சர்மாவுக்குத் தெரியாது. இரண்டு சிறுவர்களும் ஓரளவு வளர்ந்தன. மதுமதியின் மகன் மிகவும் சுட்டியாகவே வளர்ந்தான்.  தினமும் தன்னுடைய ஆலயத்துக்கு வந்து அழும்  குழந்தையின்  நிலையைக் கண்ட கிருஷ்ணர் அந்தக் குழந்தை மீது இறக்கம் கொண்டு அந்த நிலையை மாற்ற அவனுக்கு அவன் பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பிராமணர் மூலம் ஒரு உபாயம் சொல்லிக் கொடுத்தார். அந்தக் குழந்தைக்கு அந்த உபாயத்தை பக்கத்து வீட்டு பிராமணருக்கு  கிருஷ்ண பகவானே சொல்லிக் கொடுத்து இருந்தது தெரியாது.

அடுத்த வீட்டு பிராமணர் கூறியபடியே அந்த சுட்டிப் பயலும் அன்று மதியம் புரோகிதம் முடிந்து வந்த தந்தையின் மடியில் அமர்ந்து கொண்டு கொஞ்சி விளையாடிக் கொண்டு இருக்கையில், ‘என் இரண்டு தந்தைகளுமே நல்லவர்கள்’ என ஆசையாக அவரைக் கட்டிக் கொண்டு கொஞ்சி விட்டு சென்று விட்டது.  அந்த சுட்டிப் பயலின்  அதே போன்ற கொஞ்சலும், வார்த்தையும் இரண்டு மூன்று நாட்களும் தொடர்ந்து கொண்டே இருக்க ருத்ர சர்மா துணுக்குற்றான். ‘குழந்தைகள் எப்போதுமே பொய் சொல்லாது. என் இரண்டு தந்தையுமே நல்லவர்கள் என்று மீண்டும் மீண்டும் கூறுகிறதே. எனக்குத் தெரியாமல் இளையவள் வேறு யாருடனாவது தொடர்பு வைத்துக் கொண்டு இருக்கின்றாளா? ‘ என குழம்பினான். ஆனால் அதைப் பற்றி  குழந்தையிடம்  நேரடியாக கேட்பது தவறு என்பதினால் அவனிடம் எதுவும் கேட்கவில்லை. மனதில் எழுந்த சந்தேகம் வேகமாக வளரத் துவங்க மெல்ல மெல்ல ருத்ர சர்மா தன் மனைவியிடம் இருந்து ஒதுங்கத் துவங்கினார். முன்பு போல அவளிடம் பேசுவதை தவிர்த்தார். ஆனால் மதுமதியின் மகன் மீது அதிக ஆசையும் அபிமானமும் அதிமாக்கிக் கொள்ளத் துவங்க இந்திரவதிக்கு மூத்தவளின் மகன் மீது சந்தேகம் வந்தது .

அவனுக்கு குறைந்த அளவே உணவு தருவதையும் கொடுமைப் படுத்துவதையும்  தந்தையிடம் கூறி விட்டதோ, அதனால் அவர் தன் மீது கோபம் கொண்டு விட்டாரோ என நினைத்தவள் அடுத்த வீட்டு பிராமணரிடம் சென்று தன் நிலையைக் கூறி அழுதாள். அவரும் அந்த சிறுவன் தந்தையிடம் ஏதாவது தவறாக சொல்லி விட்டதா என்பதை தெரிந்து கொள்ள அந்தக் சிறுவனிடமே அன்புடன் கேட்குமாறு கூறி அனுப்பினார். கிருஷ்ணரும் தான் போட்ட திட்டத்தின்படி இனி அந்த சிறுவனின் நிலைமை சீராகிவிடும் என நம்பினார். இந்திரவதியும் மூத்தவளின் மகனிடம் நயமாக அதைப் பற்றிக் கேட்க  அந்த சுட்டிப் பயலோ , தனக்கும் இனி அவளுடைய மகனைப் போலவே உணவு தந்தால் அதற்கான காரணத்தைக் கூறுவேன் என்றது. அவளும் வேறு வழி இன்றி அதற்கு சம்மதித்தாள். அன்று மதியம் தான் தந்தையின் மடியில் அமர்ந்து இருக்கும்போது தன்னை உணவு அருந்த அழைத்தால் அதைப் பற்றிக் கூறுவேன் என்றது.

அன்றும் மதியம் தந்தை வந்ததும் அவர் மடியில் அமர்ந்து இருந்த சிறுவனை உணவு  அறுந்து  இந்திரவதி அழைத்தாள். உடனே அந்த சிறுவனும் உரத்தக் குரலில் ‘ஆகா…என்னுடைய இரண்டு தந்தையும் நல்லவர்கள்’ என்றது.  இனி இதை மேலும் வளர விடக் கூடாது என நினைத்த ருத்ர சர்மா, ‘என்னடா..இரண்டு தந்தைகள், இரண்டு தந்தைகள் என சில நாட்களாக கூறி வருகிறாய்… யாரடா உனது இரண்டாவது தந்தை’ எனக் கோபமாகக் கேட்க அந்த சுட்டிப் பயல் கூறினான் ‘அப்பா, உங்கள் எதிரில் உள்ள அந்தக் கண்ணாடியைப் பாருங்கள், அதிலும் என் அப்பாதான் இருக்கிறார். அதனால் கண்ணாடிக்கு எதிரில் ஒரு அப்பா….கண்ணாடியில் இன்னொரு அப்பா….இரண்டு அப்பாக்களுமே நல்ல அப்பாக்கள்தானே ‘ என்று கூற அப்போதுதான் தான் கொண்டிருந்த சந்தேகம் வீண் என்பதை ருத்ர சர்மா புரிந்து கொண்டார். அதைக் கேட்டுக் கொண்டு இருந்த அவரது மனைவி இந்திரவதிக்கும் தான் செய்து வந்த தவறு புரிந்தது.  இனியும் குழந்தைகளை சரியாக நடத்தாமல் ஓரவஞ்சனை செய்தால் சந்தேகப் பேய் குடும்பத்தை அழித்து விடும் என்பதை உணர்ந்தவள் ஓடிச் சென்று கணவனிடம் கால்களில் விழுந்து தான் அதுவரை தான் செய்து வந்த ஓர வஞ்சனைக் கூறி விட்டு அவரிடம் மன்னிப்புக் கேட்டாள். அது முதல் அவள் இரண்டு மகன்களையும் சமமாக நடத்தி வரலானாள்.

இதைக் கூறிய சூதக முனிவர் ‘இப்போது புரிகின்றதா ஹஸ்தினாபுர பூமியின் தெய்வீக மகிமை’ என்றார். முனிவர்கள் மெளனமாக புன்முறுவல் செய்தார்கள்.

நீதி
குழந்தைகளுக்கு இழைக்கப்படும் அநீதியை தெய்வம் பொறுத்துக் கொள்வது இல்லை.