இலங்கையில் கண்ணகி வழிபாடு 
புங்குடுத் தீவு 
கண்ணகி ஆலயம் 
 சாந்திப்பிரியா 
மதுரையை எரித்த கண்ணகிக்கு  இந்தியாவின் தென் பகுதியில் மட்டும் அல்ல இலங்கையிலும்  வழிபாடு உள்ளது. ஈழத்தில் முருகன் வழிபாடு எப்படி அதிகமாக உள்ளதோ, அதில் பாதி அளவாவது கண்ணகிக்கும் உள்ளது என்பது ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். இலங்கையில் பல இடங்களில் கண்ணகிக்கு ஆலயங்கள் உள்ளன. கண்ணகியை ராஜராஜேஸ்வரி, நாகபூசணி, முத்துமாரி அம்மன், நாச்சியம்மன், புவனேஸ்வரி, மீனாட்சி போன்ற பல பெயர்களில் வழிபடுகிறார்கள்.
கண்ணகி ஆராதனை என்பதைசுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கைக்கு கொண்டு வந்தது கி.பி 170 ஆம் ஆண்டுகளில் இலங்கையின் அனுராதபுரத்தை ஆண்டு வந்த கஜபாகு என்ற மன்னனே என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். கண்ணகியும் கோவலனும் தெய்வமாகி மேலுலகம் சென்றப் பின் இந்தியாவின் தென் நாட்டில் ஆட்சியில் இருந்த சேரன் செங்குட்டுவன் என்ற சேர மன்னன் கண்ணகிக்கு பெரும் விழாவை எடுத்தான். வாஞ்சி நகரில் அவன் நடத்திய கண்ணகி விழாவில் இமயமலையில் இருந்து கொண்டு வந்த கல்லில் செதுக்கிய கண்ணகி சிலையை வைத்து ஒரு ஆலயம் அமைத்து விழா நடத்தியபோது அவன் இலங்கையில் இருந்த தன்னுடைய நண்பரும் மன்னருமான கஜபாகு என்ற மன்னனுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தார். அதில் கலந்து கொள்ள வாஞ்சிக்கு வந்த கஜபாகு கண்ணகியின் மகிமையை அறிந்து கொண்டு அவளிடம் தன் நாட்டிற்கும் வந்து அருள் பாலிக்குமாறு கண்ணகி ஆலயத்தில் வேண்டிக் கொண்டார்.

கஜபாகுவின் விருப்பத்தை அறிந்து கொண்ட செங்குட்டுவன் விழா, முடிந்த கையோடு அவருக்கு கண்ணகியின் சிலம்பைப் போன்ற ஒன்றையும் ஆலய விழாவில் பயன்படுத்திய வெள்ளியில் ஆன மாம்பழம், சந்தனக் கட்டையினால் செய்த கண்ணகியின் சிலை போன்றவற்றைப் பரிசாகக் கொடுத்து அனுப்பினார். அதைக் கொண்டு வந்த கஜபாகு முதன் முதலாக கண்டியில் கண்ணகிக்கு ஒரு ஆலயம் அமைத்தார் என்று கூறுகிறார்கள்.

இன்னொரு செய்தியின்படி கஜபாகு  தமிழ்நாட்டின் தென் பகுதியில் படையெடுத்துச் சென்று அங்கு சோழ மன்னனால் சிறை பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டு இருந்த சிங்களவரை விடுதலை செய்து கொண்டு சேரன் செங்குட்டுவன் நடத்திய விழாவில் கலந்து கொண்டதாகவும், அப்போது கண்ணகி சிலையை எடுத்துக் கொண்டு வந்தபோது பெருமளவில் தென் இந்திய மக்களும் கஜபாகுவுடன் இலங்கைக்கு செல்ல விருப்பம் தெரிவித்ததினால் அவர்களையும் அழைத்துக் கொண்டு இலங்கைக்கு வந்து கண்ணகிக்கு ஆலயம் அமைத்ததாகவும் நம்பிக்கை உண்டு.

அதைத் தொடர்ந்து இலங்கையின் பல இடங்களிலும் கண்ணகிக்கு ஆலயங்கள் எழுந்தனவாம். அது மட்டும் அல்லாமல் மதுரையில் பாண்டிய நாட்டு மன்னனின் தலை நகரை அழித்த கற்புக்கரசி கண்ணகி இலங்கைக்கு வந்து சுமார் பத்து இடங்களில் தங்கி இருந்துள்ளதாக சில நம்பிக்கையும் இலங்கையில் உள்ளது. அதனாலும் கண்ணகிக்கு பல இடங்களிலும் ஆலயங்கள் எழுந்திருக்கலாம். கண்ணகியை சிங்களவர்கள் ‘பத்தினி தெய்யோ’ என வழிபாட்டு வருகிறார்கள். ‘தெய்யோ’ என்றால் ‘தெய்வம்’ என்று அர்த்தம்.

இப்படிப்பட்ட ஆலயங்களில் ஒன்றே யாழ்ப்பாணத்தில் உள்ள புங்கு தீவில் உள்ள கண்ணகி ஆலயமும். இந்த ஆலயம் சுமார் நானூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தை சார்ந்த ஆலயம் என்கிறார்கள்.  முன் ஒரு காலத்தில் இந்த தீவில் இருந்த சைவ வேளாளப் பிரிவை சார்ந்த ஒருவர் மாட்டுப் பண்ணை முதலாளியாக இருந்தவர். அவருடைய மாடுகளை தினமும் அவருடைய வேலையாட்கள் காடுகளில் மேய விட்டுத் திரும்புவார்கள். இப்படியாக இருக்கையில் ஒருநாள் காட்டில் மேய விட்டு இருந்த ஒரு மாட்டுக் கூட்டம் திரும்ப வரவில்லை. அவர்கள் உடனே யஜமானரிடம் சென்று நடந்ததைக் கூற அவரும் பல இடங்களுக்கும் தனது வேலையாட்களை அனுப்பி அந்த மாட்டு கூட்டத்தைத் தேடுமாறு கூறினார். அவர்கள் அந்த மாட்டு கூட்டத்தை தேடி அலைந்தபோது அந்த மாடுகள் கடற்கரைக்கு அருகில் ஒரு பெரிய கட்டைப் பெட்டியை சூழ்ந்து கொண்டு நிற்பதைக் கண்டார்கள். உடனே அங்கு சென்று அந்தப் பெட்டியை திறந்து பார்க்க முயன்றார்கள். ஆனால் அவர்களால் அந்தப் பெட்டியை திறந்துப் பார்க்கவே முடியவில்லை. ஆகவே  அந்தப் பெட்டியை தூக்கிக் கொண்டு சென்று சற்று தூரத்தில் இருந்த ஒரு பூவரச மரத்து நிழலில் வைத்து விட்டு அங்கேயே இளைப்பாறினார்கள். சற்று தூங்கி கண் விழித்தப் பின் மீண்டும் அதை திறந்து பார்க்க முயன்றபோது அந்தப் பெட்டி முன்னை விட அதிக கனமாக இருந்ததைக் கண்டு வியந்தார்கள். என்ன ஆயிற்று  இதற்கு? சற்று நேரத்துக்கு முன்னர்தான் கொண்டு வந்தோம், அப்போது இதை தூக்க முடிந்த எம்மால் இப்போது தூக்க முடியாமல் இப்படி கனக்கிறதே!,  என எண்ணியவாறு தமது கிராமத்துக்குச் சென்று இன்னும் அதிக ஆட்களை அழைத்து வந்து அதை மிகவும் கஷ்டப்பட்டு திறந்து உள்ளார்கள்.

திறந்ததும் அவர்கள் அதிசயிக்கும் வண்ணம் அதில் ஆபரணங்களும், சிலம்பும் அணிந்த ஒரு பெண்ணின் அற்புதமான கல் சிலை இருந்ததைக் கண்டார்கள். அந்த சிலையை வெளியில் எடுத்து வைத்ததுமே அங்கு கூட்டத்தில் இருந்த ஒரு பெண்ணுக்கு சாமி ஏறியது. அவள் மூலம் அந்த சிலையில் உள்ளவள் ‘தானே மதுரையை எரித்த கண்ணகி என்றும், தன்னை எடுத்து வைத்து வணங்கி பூஜித்தால் அவளை பூஜிப்பவர்களுக்கு பல ஐஸ்வர்யம் சேரும்’ என்று கூறினாள். அந்த சிலையை அவள் கூறியபடியே வெளியில் வைத்து ஆலயம்  அமைத்து பூஜிக்கலானார்கள். அதுவே இன்று புங்குடுத் தீவில் கண்ணகி ஆலயமாக உள்ளது.  புங்குடுத் தீவு என்பது யாழ்ப்பான மாவட்டத்தில் தென் மேற்கு தீவில்  உள்ள ஏழு தீவுகளில் ஒன்றாகும். சுமார் இருபத்தி ஒன்று சதுர மைல் பரப்பளவில் உள்ள இந்த தீவில் முதலில் பெட்டி இருந்த இடத்தில் மகாதேவர் ஆலயமும், இரண்டாவதாக அவர்கள் பெட்டியை இறக்கி வைத்த இடத்தில் நாச்சியார் ஆலயமும் மூன்றாவதாக பெட்டியை திறந்து பார்த்த இடத்தில் கண்ணகி ஆலயமும் எழுந்துள்ளது. இந்த புங்குடுத் தீவில் இருந்தவர்கள் தென் இந்திய மக்களுடன் நெருங்கிய தொடர்ப்பில் இருந்துள்ளனர் என்பதினாலும் கண்ணகி ஆலயம் முக்கியத்துவம் பெறுகிறது. பாண்டிய மன்னர்கள் ஆண்ட காலத்தில் இந்த தீவும் அவர்கள் வசம் இருந்துள்ள பூமியாகும் . இந்த தீவிற்கு புங்குடு என்ற பெயர் வரக் காரணம் இங்கு புங்கை மரங்கள் மிக அதிகமாகும்.