பில்லி  சூனியம் என்பது   உண்மையா  அல்லது  பொய்யா  ?……..
எனக்கு விடை கிடைக்காத ஒரு உண்மை சம்பவம்  -1
சாந்திப்பிரியா 
மற்றவர்கள் மீது ஏவப்படும் ஆவிகள் இரவில்தான் 
சுற்றுகின்றன என்பது உண்மையா? 
படம்  நன்றி  :http://en.wikipedia.org/wiki/Ghost
ஆவிகளைப் பற்றி நான் வெளியிட்டு உள்ள கட்டுரையைக் படித்தப் பின் எனக்கு என் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம் நினைவுக்கு வருகின்றது. இந்த சம்பவத்தில் சம்மந்தப்பட்டவர்களின் பெயர்களும், நடந்த இடங்களும் நிஜமானவை.  இன்று வரை அந்த சம்பவத்தை என்னால் மறக்க முடியவில்லை. இன்று நினைத்தால்  கூட அந்த காட்சிகள் இப்போது  நடந்தது போலவே தெரிகின்றது.
அது 1966 அல்லது 1967 ஆம் ஆண்டு இருக்கும் என்று நினைக்கின்றேன் . ஆண்டு மட்டும் சரிவர நினைவில்லை.  மத்திய அமைச்சகத்தின் ஒரு பிரிவில் CSIR என்ற  ஆராய்ச்சி மையம் இருந்தது. அதற்கு நாடெங்கும் பல கிளைகள் இருந்தன.  பெங்களூரிலேயே அதற்கு பல பிரிவுகள் உள்ளன.
அவற்றில் ஒன்றான  CSIR  கீழ் இருந்த  INSDOC எனும்   அலுவலகத்தில்  நான் வேலை பார்த்து வந்தேன். என் அலுவலகமோ   மல்லேஸ்வரம்   ‘இந்தியன்  இன்ஸ்டிட்யூட் ஆப் சையன்ஸ் ‘ வளாகத்துக்குள் இருந்தது. சுமார் 20 பேர்கள் அந்த அலுவலகத்தில் பணி ஆற்றி வந்தோம்.  நானும் என்னுடைய இரண்டு நண்பர்களும் அதன் அச்சடிக்கும் பிரிவில் இருந்தோம்.  நாங்கள் மூவருமே தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள்.   மூவரும்  சென்னை மின்ட் சாலையில் இருந்த பாலிடெக்னிக்கில் வேறு வேறு ஆண்டுகளில் அச்சு தொழில் படித்தவர்கள்.   எங்களுக்கு உதவ ஒரு பியூன் இருந்தான்.  அவன் பெயர் போரையா.  கர்நாடகத்தை சேர்ந்தவன். எங்களுடைய புகைப் பட மற்றும், புத்தகத் தொகுப்புப்  பிரிவுகளும் அலுவலகத்தின் நிர்வாகப் பிரிவும் IISc யின் மத்தியக் கட்டிடத்தில் இருக்க அச்சுப் பிரிவோ சற்று தொலைவில் இருந்த கட்டிடத்தின் பின் பகுதியில்  இருந்தது. அங்கு எங்களைத் தவிர வேறு எவரும் இல்லை.  தனிமையில் இருந்த அந்த இடமோ அம்போ என்று இருக்கும்.
நான் மல்லேஸ்வரம் 18 ஆம் கிராசில்  ஒரு  ஹோட்டலில் தனி அறையில் வசித்து வந்தேன். என்னுடைய இன்னொரு நண்பன் அதே சாலையில் குமார பார்க்  என நினைகின்றேன், அதன் அருகில் அன்று கிருஷ்ணா பார்க் என்று இருந்த  இடத்தின் எதிரில் இருந்த ஹோட்டலில் தனி அறையில்  இருந்தான். மூன்றாமவன் சிவாஜி நகரில்  தன் வீட்டிலேயே இருக்க பியூனோ மல்லேஸ்வரத்தை தாண்டி எங்கோ இருந்தான். எங்கள் அலுவலக வேலை விசித்திரமானது. வேலை இருந்தால் இரவு வெகு நேரம் வரை வேலை செய்து  முடித்து விட்டு நடு இரவு  வீடு திரும்புவோம்.  இல்லை என்றால் பல நாட்களில் வேலைக் கூட இருக்காது.

இரவில் அந்த சாலை வெறிச்சோடிக் கிடக்கும். அந்த காலத்தில் அந்த மல்லேஸ்வரம் பகுதி  ஆட்கள் அதிகம் நடமாடாதப் பகுதி.  இருபுறமும் ஓங்கி வளர்ந்த மரங்கள்  சாலையை இருட்டாகவே வைத்து இருக்கும். விளக்கு கூட சரியாகக் கிடையாது.  இரவில் IISc யில் இருந்து அந்த சாலையில் நடந்து செல்லும்போது  18 டாவது கிராஸ் சாலையை அடையும்வரை ஒருவித அச்ச உணர்வையே அந்த சாலை தரும். அதன் பின் சாலை விளக்குகள் நல்ல வெளிச்சத்தை தந்தாலும், சில இடங்கள் இருண்டே கிடக்கும். ஆட்கள் நடமாட்டமே இருக்காது. நடு இரவில் பஸ் கிடையாது என்பதினால் நாங்கள் இருவர்  நடராஜா சர்விஸ்தான்.   ஒருவருக்கு ஒருவர் துணையாக பேசிக்கொண்டே நடந்து செல்வோம். மற்ற இருவரும் சைக்கிளில்  செல்வார்கள்.

 நமது கண்களுக்குப் படாமல்தான் ஆவிகள்  
சுற்றித் திரியுமாம். அவற்றின் அருகில் நாம் நம்மை 
அறியாமல் செல்லும்போதுதான் அவை நம் மீது 
ஆக்ரமித்துக் கொள்ளுகின்றன
என்பது என்பது உண்மையா ?

ஒரு முறை  எப்போதும் போல வேலை முடிந்தப் பின்  இரவு வீடு திரும்பினோம்.  மறு நாள் அலுவலகத்துக்கு என்றும் போல அனைவரும் வந்தோம்.  ஆனால் போரையாவோ  ஒரு மாதிரி இருந்தான்.   அலுவலகத்துக்கு வந்ததும் சைக்கிளில் சென்று எங்களுக்கு தினமும்  ‘தேநீர்’ அல்லது ‘காப்பி’ வாங்கி வருவான்.  அன்று தேநீர் வாங்கி வரச் சொன்னபோது திடீர்  என்று எங்கள் அருகில் வந்து நின்றவன்  ‘சார் பயமாக இருக்கின்றது, என்னை அதோ நிற்கின்றாளே அந்தப் பெண் என்னை மிரட்டுகிறாள்’  என்று கூறிவிட்டு வரண்டாவில் இருந்த சைக்கிளைக்  காட்டினான்.  வரண்டாவில்தான் சைக்கிளை வைத்து இருப்பார்கள். நாங்கள் அவனை ஏதோ விளையாடுகிறான் என எண்ணி திட்டி அனுப்பினோம். ஆனால் அவன் வெளியில் செல்ல மறுத்தான். அவனை தள்ளாதக் குறையாக வெளியில் அனுப்ப   சைக்கிளை எடுத்தவன் திரும்பி ஓடி வந்தான். ‘சார் அந்த சைக்கிளில் அவள் உட்கார்ந்து இருக்கின்றாள்.  தள்ளிவிடுகிறாள் என்று அழுதான்.’  இப்படியே இரண்டு மூன்று நாட்கள் அவன் நடத்தை தொடர்ந்தன. அவன் முகத்தில் பீதி களை தெரிந்தது. உடம்பும் வாடி இருந்தது.  அவன்  வழியில் அந்தப் பெண்ண வந்து சைக்கிளில் உட்கார்ந்து கொண்டு தன்னை தள்ளிவிட முயலுவதாகக் கூறினான்.
நாங்கள் சற்று பீதி அடைந்தோம். என்ன நடக்கின்றது என்று தெரியவில்லை. அவனை வைத்துக் கொண்டு எப்படி வேலை வாங்குவது ? இரண்டு மூன்று நாட்கள் கழிந்தன. ஒரு நாள் போரையா சென்று சைக்கிளை எடுத்தால் அது நகர மறுத்தது.  அவன் எங்கள் எதிரிலேயே அதை இழுத்தும் பார்த்தான், சைக்கிள் நகரவில்லை. யாரோ எதிர்புறத்தில் இருந்து இழுப்பது போல அது தரையில் உராசிக் கொண்டே சிறிது தூரம் நகர்ந்தது.  இரண்டு அல்லது மூன்றுமுறை  அவன் இழுத்தும் சைகிள் நகரவில்லை. யாரோ எதிர்புறத்தில் இருந்து இழுப்பது போல அது தரையில் உராசிக் கொண்டேதான் இருந்தது.   சைக்கிளை அவனால் எடுக்க முடியவில்லை என்றவுடன் பயந்து ஓடி வந்து ‘சார் அந்த சைக்கிளில் அவள் உட்கார்ந்து இருக்கின்றாள்.  என்னை தள்ளிவிடுகிறாள்’ எனக் கூறி   அழுதான்.  சைக்கிளின் அருகில்  யாரும்  இருப்பது போல எங்களுடைய கண்ணுக்கு தெரியவில்லை.  ஆனால் அவன் சைக்கிளை இழுக்க முடியாமல் யாரோ அதை எதிர்புறத்தில் இழுப்பது போல அது உரசிக் கொண்டே நகர்ந்ததை எங்கள் கண்களின் முன்னால் பார்த்தோம். அது எப்படி நடந்தது என்பது இன்றுவரை எனக்குத் தெரியவில்லை.
எங்கள் மூவரில் எனக்கு மேல் இருந்தவர் கம்யூனிச கொள்கை கொண்டவர் . கடவுள் பக்தி அத்தனைக் கிடையாது. நானோ ஓரளவு கடவுள் பக்தியுடன் இருந்தவன்.  ஆனால் தைரியம் கிடையாது. மூன்றாவதாக ராமன் என்பவர் இருந்தார். (தற்போது அவர் உயிருடன் இல்லை)      அவர்  சற்று  தைரியசாலி.  முருக பக்தன்.  நாங்கள் இருவரும் நின்று கொண்டே நடப்பதை பார்த்துக் கொண்டு இருக்கையில் ராமன்  சற்றும் தயங்காமல் உடனே கந்தர் சஷ்டி  கவசத்தை உச்சரித்த வண்ணம்  சைக்கிள் அருகில்  சென்று அதை இழுக்க அது சாதாரணமாக நகர்ந்தது.  நாங்கள் போரையா ஏதோ பீதி அடைந்து உள்ளான் என நினைத்தோம். ஆகவே அவனை மறுநாள் முதல் சிறிது நாட்கள் அலுவலகம்  வர வேண்டாம் எனக் கூறி அனுப்பி விட்டோம்.
அதன் பின் அவன் வீட்டிற்கு ஆளை அனுப்பி விசாரித்தோம். அவன் வீட்டில் அனைவரும் கலங்கி இருந்தனராம். வீட்டில்  அவன் சாப்பிட முடியாமல் தலை முடி கொத்தாக அவன் உணவில் கிடைக்குமாம். அல்லது கரித் துண்டு , மண் போன்றவை சாப்பாட்டில் விழுந்து கிடைக்குமாம்.  சில நேரம் அவனை யாரோ உதைப்பது போல இருக்குமாம், மற்றும் வீட்டின் மீது யாரோ கல் எரிவது போல சப்தம் கேட்குமாம்.
அவன் கூறியதாக மேலும் ஒரு செய்தியை அவன் வீட்டினர் கூறினார்கள். நாங்கள் நடு இரவு வேலை முடிந்து சென்ற அன்று மல்லேஸ்வரம்  18 ஆம் கிராசை தாண்டி ( நான் இருந்த ஹோட்டலைத் தாண்டி சிறிது தூரத்தில்) அவன் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தபோது வழியில் ஒரு இளம் பெண் அவனைக் கைகாட்டி நிறுத்தினாளாம்.  தன்னுடைய தந்தை மசாலா தோசை வாங்கி வருமாறு கூறி உள்ளதினால் அருகில் இருந்த ஒரு ஹோட்டலைக் கூறி  தன்னை அங்கு இறக்கி விடுமாறு கேட்க அவளை அவன் பின் சீட்டில் அமர வைத்துக் கொண்டு அந்த இடத்தை அடைந்தானாம்.  அவன் அப்போது யோசிக்க வில்லை அந்த நேரத்தில் எந்த ஹோட்டல் திறந்து இருக்கும் என. சைக்கிளின் பின்புறத்தில் அமைந்து கொண்டு சென்றவள் வழியில் அவனுடன் ஏதேதோ பேசிக்கொண்டு வந்தாளாம். திடீரென சைகிளின் கனம் குறையவே சைகிளை நிறுத்தி விட்டு பின்னால்  பார்த்திருக்கின்றான். அவளைக் காணவில்லை. எங்காவது விழுந்து விட்டாளா  என பயந்துபோய் திரும்ப பின்னால்   வண்டியை ஓட்டிக் கொண்டு வந்து பார்த்து இருக்கின்றான்.  அவள் தென்படவே இல்லை .
பயந்து போய் வீடு சென்று விட்டான். மறு நாள் முதல் அவன் சைக்கிளில் வரும்போது வழியில் எங்கிருந்தாவது அவள் அவனை நோக்கி ஓடி வந்து அவன் சைக்கிளில் பின்னால் அமைந்து கொண்டு அவனை பயமுறுத்தத் துவங்கினாளாம்.  அது முதல் அவன் பைத்தியம் பிடித்தவன் போல ஆகி விட்டான். அவர்கள் அவனுக்கு எத்தனையோ சிகிச்சை தந்தும் அவன் குணமாகவில்லை. தாந்ரீகர்களோ யாரோ அவனுக்கு பில்லி சூனியம்  வைத்து இருந்ததாகக் கூறினார்கள்.   அவனை மாந்த்ரீகள் மூலம் குணப்படுத்த முயன்று கொண்டு இருந்தார்கள் அவன் பெற்றோர்கள். அவன் மிகவும் மெலிந்து கொண்டே போனான்.  எங்களில் சிலர்  அந்த இடத்தில் இருந்தவர்களிடம் அது பற்றி விசாரித்தபோது , போரையா எந்த இடத்தில் அந்தப் பெண்ணை  தன்னுடைய சைக்கிளில் ஏறிக் கொண்டானோ  அந்த இடத்தின் அருகில் இருந்த ஒரு வீட்டில் ஒரு பெண் தற்கொலை செய்து சம்பவம் நடந்து உள்ளது என்றார்கள்.  ஒரு வேளை அவள் ஆவிதான்  அவனைப் பிடித்துக் கொண்டு விட்டதோ என்று  நாங்கள் சிலர் நினைத்தோம். அவன் வெகு நாட்களுக்கு வேலைக்கே வரவில்லை. அதற்கு இடையே  எனக்கு வேறு இடத்திற்கு மாற்றலாகி விட நான் டெல்லிக்கு சென்று விட்டேன். ஆனால் அவனுக்கு பல விதங்களில் வைத்தியம் செய்தப் பின்  (மந்திர வைதியங்கள்தான்)  பல மாதங்களுக்குப் பிறகு அவன் குணம் அடைந்து அலுவலகத்தில் மீண்டும் சேர்ந்தானாம்.
ஆனால் இன்றும் நான் அவன் நிலையை நேரில் பார்த்த காட்சிகள் , அவன் நடத்தை போன்றவை  என் கண்களை விட்டு மறையவில்லை.  அவன் சைக்கிளை எடுக்க முடியாமல் என் கண்ணெதிரில் தவித்தது இன்றும் கூட பசுமையாக மனதில் உள்ளது. என்னால் மறக்க முடியாமல் உள்ளது.  அது  ஏதோ  அமானுஷ்ய  சக்தியாக  இருந்து  இருக்க  வேண்டும் . அவனை ஆட்டிப் படைத்தது ஆவியா, பேயா இல்லை அவன் மனப் பீதியா என்று இன்னமும் என்னால் முடிவு செய்ய முடியவில்லை. என் வாழ்க்கையில் நான் நேரடியாக பார்த்த  , அதற்கான காரணம் விளங்காத ஒரு சம்பவம் இது. 

நான் பார்த்த மற்றும்  ஒரு  அதிசய  சம்பவம் – நாளை  மறுநாள் …………..