ஜீவாத்மாவின் பயணம் -6 (a)
தகனம் செய்ய கிளம்பும் வீட்டில் செய்யப்படும் சடங்குகள் – அவற்றின் காரணங்கள்
143) எதனால் தீ சட்டியை சடலத்திற்கு முன்னால் கர்த்தாக்கள் எடுத்துச் செல்கின்றார்கள் என்றால், இறந்து போனவருடைய ஜீவாத்மா, அது வாழ்ந்த வீட்டில் இருந்து மயானத்திற்கு செல்லும் பாதை அதற்கு விளங்க வேண்டும் என்பதற்காக ஒரு ஒளி விளக்கைப் போல அதை சம்பிரதாயமாக எடுத்துச் செல்கின்றார்கள். அப்போதுதான் மயானத்தில் இருந்து வீட்டிற்கு திரும்பி வருவதற்கு ஜீவாத்மாவிற்கு வழி தெரியுமாம். மயானத்தில் இருந்து ஜீவாத்மா வசுக்கள், ஆதித்யர்கள் மற்றும் ருத்திரர்களுடன் மீண்டும் திரும்பி வந்தால்தான் அடுத்த பன்னிரண்டு நாட்களும் அது வாழ்ந்த வீட்டில் தங்கி இருந்தபடி இறந்தவருக்கு செய்யப்படும் சடங்குகளில் பங்கேற்ற பின்னர் அங்கிருந்து யமபுரிக்கு பன்னிரண்டாம் நாள் அது தனது பயணத்தை துவக்க முடியும்.
144) இறந்தவரின் பேரன்கள் தீப்பந்தம் தூக்கிச் செல்லும் பழக்கம் இறந்தவரது குடும்பத்து சிறுவர்களும் சுடுகாட்டுக்கு செல்லும் உடலுக்கு தீ மூட்டி எரிக்க தானும் உரிமை உள்ள கர்த்தா என்பதை காட்டவும், மேலுலகம் செல்லும் ஜீவாத்மாவுக்கு மரியாதைக் கொடுத்து அனுப்ப வேண்டும் என்பதற்காகவும் செய்யப்படும் ஐதீகமே தவிர அதற்கு வேறு எந்த விஞ்ஞான பூர்வமான அல்லது சாஸ்திர காரணமோ கிடையாது. சில குடும்பங்களில் பிள்ளைகளோ மற்ற கர்தாக்களோ இல்லை என்றால் இறந்தவரது பேரன்கள் கர்மாவை செய்ய உரிமை உள்ளவர்கள் ஆகின்றார்கள்.
145) முன் காலங்களில் பேரப் பிள்ளைகளும் சுடுகாடுவரை சென்று சிதைக்கு கொள்ளி வைக்கும் பழக்கம் இருந்தது. தற்போது பலரது வீடுகளிலும் சிறு பிள்ளைகளை சுடுகாட்டிற்கு அழைத்துச் செல்வது இல்லை. சுடுகாட்டில் பிணங்களைக் கண்டு அவர்கள் பயந்து விடுவார்கள் என்பதே அதன் காரணம். மேலும் அந்த சிறுவர்களும் பின் வரும் நாட்களில் தாம் பெரியவர்கள் ஆகும்போது இறந்து போக உள்ள தமது தாய் தந்தைக்கு சடங்குகளை எப்படி செய்ய வேண்டும் என்பதை எடுத்துக் காட்டும் போதனையாக இருக்கவே சாஸ்திர சம்பிரதாயமாகவும் அவற்றைக் காட்டி உள்ளார்கள்.
146) முன் காலங்களில் சுடுகாடு எத்தனை தூரம் இருந்தாலும் பிணத்தை மாறி மாறி நான்கு பேர் தூக்கிக் கொண்டு நடந்தே சுடுகாடுவரை செல்வார்கள். அந்த காலத்தில் சவங்களை தோளில் மட்டுமே சுமந்து கொண்டு செல்வது நடைமுறையில் இருந்தது என்பதின் காரணம் மனிதர்களும் திடகார்த்தமாக இருந்தார்கள் என்பதே.
147) சுடுகாடுகள் நீண்ட தூரத்தில் இருந்ததினாலும், இயற்கையின் நியதியினால் சவத்தின் எடை அதிகரிக்கத் துவங்கும் என்பதினாலும், நேரமாக நேரமாக, உடல் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கும் சவத்தை அத்தனை தூரமும் சுமந்து கொண்டே செல்ல கஷ்டமாக இருந்ததினாலும் பாதி தூரம் சவத்தை தோளிலே வைத்துக் கொண்டு சம்பிரதாயமாக நடந்து சென்றதும், பாடைகளுடன் கட்டப்பட்ட சவங்களை ஒரு கட்டை வண்டியில் வைத்து இழுத்துச் செல்வார்கள்.
148) அந்த பழக்கம் தற்போது வாகன வண்டிகளில் எடுத்துச் செல்வதில் வந்துள்ளது. இரண்டு முறைகளுமே தவறல்ல. சாஸ்திரத்துக்கு எதிரானதும் அல்ல. காரணம் சவத்தை தோளில் மட்டுமே சுமந்து கொண்டு செல்ல வேண்டும் என்று எந்த சாஸ்திரங்களிலும் கூறப்படவில்லை.
149) தோளில் தூக்கிக் கொண்டு செல்வது இறந்தவரது குடும்பத்தினருக்கு தாமும் தோளோடு தோள் கொடுத்து துணையாக நின்று இருப்போம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாயமே ஆகும்.
150) வழியில் மூன்று முறை பிரேதத்தை கீழே வைத்து பலி கொடுக்க வேண்டும். பலி என்பது வீட்டில் செய்து எடுத்து வந்திருந்த பாதி சமைத்த அரிசியாகும். வழியில் மூன்று முறை அதை செய்யாவிடில் மயானத்திலாவது மூன்று முறை கீழே வைத்து பலி கொடுக்கா விட்டால் வழியிலுள்ள ஜீவன்கள் இந்த ஜீவாத்மாவை துன்புறுத்தும் .
151) பிணத்தை தகனம் செய்வதற்கு முன் அதன் வாயில் சிறிதளவு அரிசி தானியங்களைப் போடுவதற்கான தத்துவார்த்த காரணம், யமபுரிக்கு பயணிக்க உள்ள ஜீவாத்மாவானது பசி தாகம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் செய்யப்படுகின்றது; மேலும் உறவினர்களுக்கும் அதுவரை இறந்து போனவருக்கு தாம் உணவு தரவில்லை எனில், அந்த கடைசி நேரத்திலாவது அவருக்கு உணவு கொடுத்தோமே என்ற மன நிறைவு இருக்கட்டும் என்பதற்காக போடப்படும் சம்பிரதாயமே தவிர அதன் தத்துவம் வேறு எதுவும் இல்லை.
152) ஆன்மீகத்தில் அரிசியை தெய்வீகத் தன்மைக் கொண்டதாகக் கூறுவார்கள். ஹோமம் ஆனாலும் சரி, பூஜைகள் ஆனாலும் சரி அவற்றில் அரிசி முக்கிய இடம் பெறுகிறது. அரிசி மீதுதான் பூஜை கலசங்களைக் கூட வைத்திருப்பார்கள். மஞ்சள் அரிசியைத்தான் பூஜைகளிலும் உபயோகிப்பார்கள். ஹோம குண்டத்தில் அரிசியைப் போடுவது முக்கியமான சடங்கு ஆகும்.
153) எந்த நாடாக இருந்தாலும் சரி, எங்கு மரணம் நிகழ்ந்தாலும் சரி, இந்துக்கள் அங்கெல்லாம் மரணம் அடைந்தவர் வாயிலே கடைசியாக போடுவது அரிசி தானியமே தவிர பருப்புக்களோ, கோதுமையோ அல்லது பிற தானியமோ இல்லை. இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியும் அவர் உடலை தகனம் செய்யும்போது எரிந்து போகும். இறந்தவர் உடலை தகனம் செய்யும் சடங்கு ஒரு விதத்தில் அந்த புனித ஜீவாத்மாவுக்கு செய்யப்படும் ஹோமம் போன்றது. எப்படி ஹோம குண்டத்தில் அரிசியைப் போடுவது முக்கியமாக உள்ளதோ அது போலவேதான் இறந்தவரது வாயையும் ஹோம குண்டமாகக் கருதி அதில் அரிசியைப் போட்டு உடலை தகனம் செய்கிறார்கள் என்பதே ஐதீகம்.
154) சாஸ்திர நம்பிக்கையின்படி இறந்தவரது வாயில் போடப்படும் அரிசியானது அவர் உடலை விட்டு வெளியேறிய ஜீவாத்மாவினால் ஆவாகிக்கப்பட்டு அந்த குடும்பத்தின் ஏழு தலை முறைக்கான ஜீவாத்மாக்களுக்கும் பங்கிட்டு தரப்படும், அதன் மூலம் அந்த பித்ருக்களின் மனம் சாந்தி அடையும் என்பதாக புராணங்களில் கூறப்பட்டுள்ள செய்திகளின் அடிப்படையிலும் நம்பிக்கைகளின் அடிப்படையிலும் அந்த சடங்கு செய்யப்படுகிறது. அதை செய்வதின் மூலம் வாய்க்கரிசி போட்டவர்களது குடும்பத்துக்கு மேலுலகில் உள்ள ஜீவாத்மாக்களின் ஆசிகள் வந்து சேரும், அது அவர்களுடைய குடும்பத்தைக் காப்பாற்றும் என்பார்கள்.
155) முன் காலங்களில் பொதுவாக, மரணச் சடங்கு நடைபெறும் வீடுகளில், பசுவின் சாணத்தால் சுத்தம் செய்யப்பட்ட தரை மீது ஒரு கூடாரம் அமைக்கப்படும்; சுகாதாரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் பசுவின் சாணத்தால் தரை சுத்தம் செய்யப்படும். சடங்கில் கலந்து கொள்ளும் உறவினர்கள் வசதியாக அமர்ந்து கொள்ள இந்த வசதி செய்யப்பட்டு வந்திருந்தது. கூடாரத்தின் முன் பகுதி மா இலைகள் மற்றும் பூக்களால் தொடுக்கப்பட்ட மாலைகளால் அலங்கரிக்கப்படும். பண்டைய காலங்களில் நிலவிய இத்தகைய பாரம்பரியம், அடுக்குமாடி குடியிருப்புகளுக்குள் உள்ளவர்களால் செய்யப்பட முடிவது இல்லை. காரணம் அத்தகைய ஏற்பாடுகள் பிற குடியிருப்பாளர்களிடமிருந்து ஆட்ஷேபணைகளை பெறுகின்றது. ஆகவே தற்போது கிராமப்புறங்களில் மட்டுமே இந்த முறை இன்றும் பின்பற்றப்படுகிறது.
156) மரணம் அடைந்து விட்டவர் வீட்டு வாயிலில் அடுத்த பன்னிரண்டு நாட்களும் கோலங்களை போட்டு அலங்கரிக்கக் கூடாது. நமது இல்லத்திற்கு தினசரி நாம் ஆராதிக்கும் தெய்வங்களும் தேவர்களும் வருகிறார்கள் என்று ஐதீகம் உள்ளது. ஆகவே அவர்களை வரவேற்கும் விதமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே மங்களச் சின்னமாக கோலத்தைப் போடுவார்கள். ஆனால் இறந்தவர் வீட்டில் தற்காலிகமாக மங்கள காரியங்கள் நடைபெறாமல் இருக்கும் என்பதாலும், இறந்தவர்களின் ஜீவாத்மா அங்கிருந்து செல்லும்வரை தெய்வங்களோ அல்லது தேவர்களோ அங்கு நுழைய மாட்டார்கள் என்பதாலும் சடலத்தை எடுத்த பின்னர் கூட அடுத்த பன்னிரண்டு நாட்களும் இறந்தவர்கள் வீடுகளில் கோலங்களை போடக் கூடாது.
157) இறந்தவர்கள் வீடுகளில் முதல் நாளிலிருந்து பன்னிரண்டு நாட்கள் துக்க காலத்தில், வீட்டில் எந்த சமையல் சாதனத்தையும் பற்ற வைத்து சமைக்க கூடாது. இறந்தவர்களின் நெருங்கிய உறவினர்களின் வீடுகளிலிருந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கான உணவு தினமும் அனுப்பப்படுகின்றது. அதற்கான காரணங்கள் இறுதியில் கொடுக்கப்பட்டுள்ளன.
ஜீவாத்மாவின் பயணம் -7
பிணத்தை எரிக்கும் முன் செய்யப்படும் சடங்குகள்
158) மயானத்தை அடைந்ததும் மயானத்தில் விறகுகளை அடுக்கி வைத்து தயார் செய்யப்பட்டுள்ள சிதை மேடையை புரோஹிதர் கூறியபடி சுற்றிய பின் பூத உடலின் தலைப் பகுதி தெற்கு திசையில் இருக்கும்படி பாடையை சிதை மேடை மீது வைப்பார்கள். அதாவது உடலின் தலைப் பகுதியானது மயானத்தை நோக்கி வைக்கப்படும். சிதையில் பூதவுடல் வைக்கப்பட்டதும் பாடையுடன் சேர்த்துக் கட்டி இருந்த கட்டுகள் எல்லாம் அவிழ்க்கப் பட, அந்த உடலில் உள்ள மேற்போர்வையைத் தவிர அதன் கீழ் உள்ள அரைஞாண் கயிறு வரை அனைத்தையும் எடுத்து விடுவார்கள். அதாவது போர்வையின் கீழ் உள்ள உடல், நிர்வாண நிலையில் வெற்றுடம்பாக இருக்கும்.
159) அதன் பின் அங்குள்ள புரோகிதர் மந்திரங்கள் ஓதி சில சடங்குகளை செய்த பின், பங்காளிகள் மீண்டும் சவத்தின் வாயில் வாய்க்கரிசி போடுவார்கள். கர்மாவை செய்ய வந்துள்ளவர் தனது இடது தோளில் சுட்ட களி மண்ணினால் செய்யப்பட்ட தண்ணீர் நிறம்பிய மண் குடத்தை ஏந்திக் கொண்டு முதலில் சிதையை இடப் பக்கமாக சுற்றி வந்து, குடத்தை தலைப் பக்கத்தில் வைத்து அதில் கும்ப நீரை கொட்டிய பின், மேலும் சவத்தின் மீது அரிசி, சின்ன தங்கக் காசு அல்லது நாணயங்களை வைத்தப் பின் சவத்தின் வாயில் அரிசியைப் போடுவார். இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும்.
160) உடலை சிதையில் வைத்த பின் வாய், வலது கண், இடது கண், வலது மூக்கு, இடது மூக்கு, வலது மற்றும் இடது காது ஆகிய ஏழு இடங்களில் சிறிது நெய்யை விட வேண்டும், பண்டை காலத்தில் அந்த இடங்களில் சின்ன தங்கம் வைக்க வேண்டும் என்பதாக எழுதி இருக்கிறார்கள். ஆனால் காலம் மாற மாற தங்கத்திற்கு பதில் நெய் விடத் துவங்கினார்கள். இப்படியாக அந்த ஏழு துவாரங்களில் நெய் விடுவதின் காரணம் அந்த ஏழு துவாரங்களும் உடலில் இருந்து வெளியேறும் ஜீவாத்மா வெளியேறிச் செல்லும் புனித வழிகள் மற்றும் உடலில் உள்ள ஏழு சிறிய ஹோம குண்டங்கள் என்பதாகும்.
161) பிறகு பிரேதத்தின் மீதோ அதன் வாயிலோ எள்ளுடன் கலந்த அரிசியை (வாய்க்கரிசி) அங்குள்ள பந்துக்கள் போட வேண்டும்.
162) அதன் பின் முன் போல மீண்டும் மண் குடத்தை இடதுபுற தோளில் வைத்துக் கொண்டு ஒரு சந்தனக் கட்டையை பின் பக்கமாக ஏந்திய வண்ணம் சவத்தை இடப் புறமாக மூன்று முறை சுற்றி வருவார். ஒவ்வொரு சுற்றின் போதும் அவர் பின்னால் செல்பவர் சிறு கல்லினால் மண் குடத்தில் ஒரு சின்ன ஓட்டை இட அந்த ஓட்டை வழியே விழும் தண்ணீர் சவத்தின் மீது விழும். அதை இறந்தவரது உடலுக்கு செய்யும் கடைசி அபிஷேகம் என்பார்கள்.
163) அதற்கு முன்பாக தர்ப்பைகளால் செய்த ஐந்து தர்பை கொத்துக்களை ஆவாஹனம் செய்து பூஜித்து தஹன சமயத்தில் பிரேதத்தின் தலை, கண், வயிறு, நாபி, கால் ஆகிய ஐந்து இடங்களில் வைக்க வேண்டும். அவை எரிந்து போக உள்ள உடலை தூய்மைப்படுத்துவதான அர்த்தம் ஆகும்.
164) கர்மாவை செய்பவர் துவாரம் இடப்பட்ட மண் குடத்தை ஏந்திக் கொண்டு சீதை மீது வைக்கப்பட்டு உள்ள சடலத்தை மூன்று முறை சுற்றி வந்த பின்னர் சிதையை பார்க்காமல் சிதையின் எதிர் திசையைப் பார்த்து நின்றபடி ‘ஓம்’ எனக் கூறிக் கொண்டே சந்தனக் கட்டையை (அதில் சிதையை எரிக்க நெருப்பு இருக்கும்) சிதையின் தலைப் பகுதியில் வைத்தப் பின் குடம் உடையும் வகையில் முன் புறமாக குடத்தை கீழே போட்டு உடைத்து விடுவார். இந்த சடங்கும் குடும்பத்துக்கு குடும்பம் மாறுபட்டு இருக்கும். சில குடும்பங்களில் கர்த்தா சிதையை பார்த்தபடி நின்றவாறு சந்தனக் கட்டை கொள்ளியை சிதை மீது வைக்கும் பழக்கமும் உண்டு.
165) அதன் பின்னர் கர்த்தா சிதைக்கு தர்பை மூலம் கொள்ளி வைத்து விட்டு உடல் முழுவதும் எரியும் வரை அங்கேயே நின்று கொண்டு இருப்பார்கள். சிதைக்கு தீ வைக்க பயன்படுத்த வேண்டிய பல வகைகளிலான அக்னி தர்பையை எப்படி தயார் செய்வது என்பதை மயானத்திலேயே அந்தந்த குடும்ப புரோகிதர் கூறுவார்.
166) ‘உத்தபனாக்னி’:- இது மூன்று தர்பை கொத்தை கொளுத்தி அதிலிருந்து ஏற்படுத்தப்படும் அக்னி ஆகும். அதாவது முதலில் ஒரு கொத்து தர்பையை அக்னியில் காட்டி, அந்த தர்பையில் உண்டாகும் அக்னியில் இருந்து இரண்டாவது தர்பை கட்டில் அக்னியை மூட்டி, அதில் இருந்து வெளியாகும் அக்னியில் இருந்து மூன்றாவது தர்பைக் கட்டில் தீ மூட்டி, அந்த அக்னி தர்பையை சீதை மீது வைத்து தீ மூட்டுவார்கள்.
167) அதன் பின்னர் கர்த்தா சிதைக்கு தர்பை மூலம் கொள்ளி வைத்து விட்டு பிரேதத்தின் பாதங்கள் உள்ள பகுதிக்குச் சென்று தன் விரலில் அணிந்திருந்த தர்பைப் புல்லினால் ஆன பவித்திரம், பூணூல் போன்றவற்றை கழற்றி சிதையில் போட்டு வணங்குவார்கள்.
168) மனைவியை இழந்த கணவனுக்கும், கணவனை இழந்த மனைவிக்கும் ‘உத்தபனாக்னி’ அக்னி மூலமே தஹன ஸம்ஸ்காரம் செய்வார்கள்.
169) ‘கபாலாக்னி’:- பிரும்மச்சாரிகளை தகனம் செய்யும்போது மண் பாத்திரத்தை அக்னியில் வைத்து நன்றாக சூடாக்கி, அதில் கொஞ்சம் வரட்டி தூளை போட்டு தீ பிடிக்க வைத்து அதை தகனத்துக்கு பயன்படுத்துவார்கள். அதை ‘கபாலாக்னி’ என்பார்கள்.
170) ‘துஷாக்னி’: ஒரு மண் பாத்திரத்தை தீயில் நன்றாக சூடாக்கி, அதில் சிறிதளவு உமியை போட்டு அக்னியை உண்டு பண்ணி, அந்த அக்னியை சிதையில் வைக்கப்பட்டு உள்ள உபனயனம் ஆகாத ஆணுக்கும், திருமணம் ஆகாத பெண்ணின் தகனத்துக்கும் பயன்படுத்துவார்கள்.
171) ஒளபாசனாக்னி : தம்பதிகளில் ஒருவர் இறந்தால் ஒளபாசனாக்னி எனும் அக்னியை உபயோகிக்க வேண்டும். ஒளபாஸனம் என்பது உபாஸனையைக் குறிக்கும். ஆகவே பல தேவதைகளைப் பூஜை, மந்திரம், தியானம் முதலியவற்றால் உபாசித்து ஏற்படுத்தப்படும் அக்னியே ஒளபாசனாக்னி எனப்படுகின்றது.
172) முன் காலங்களில் விறகுகளை அடுக்கி அதன் மீது பிணத்தை வைத்து எரித்தது போல் இல்லாமல் இந்த காலத்தில் மின்சாரத்தில் இயங்கும் மின்னடுப்பில் பிணங்களை எரித்து விடுவதினால் சிதை பீடத்தில் வைத்த சவத்திற்கான சடங்குகளை செய்து முடித்தப் பின் பாடையுடன் கூடிய உடலை எடுத்து வந்து மின்சார யந்திரத்தின் மேடை மீது வைத்தப் பின் சம்பிரதாயமாக கொள்ளிக் கட்டையை அதில் வைப்பார்கள். அதன் பின் அங்குள்ள தொழிலாளி பாடையுடன் உள்ள உடலை யந்திரத்தின் உள்ளே தள்ளி கதவை மூடி விடுவார். உடல் சற்று நேரத்திலேயே எரிந்து சாம்பலாகி விடும்.
ஜீவாத்மாவின் பயணம் -7 (a)
சுடுகாட்டில் பிணத்தை எரிக்கும் முன் செய்யப்படும் சடங்குகள் – அவற்றின் காரணங்கள்
173) இறுதி புனித அபிஷேக பூஜை செய்வதற்கான முதல் காரணம் – குடத்தின் துளையிலிருந்து சடலத்தின் மீது தண்ணீர் பாய அனுமதிப்பது – இறந்தவரின் பாவங்களை நீக்கி, ஆன்மா சாந்தியடைய வழி வகுக்கும். ஒரு நபர் பல தீய செயல்களைச் செய்திருந்தாலும், அவர் தனது வாழ்நாளில் சில நல்ல செயல்களையும் செய்திருக்கலாம் என்று தர்ம சாஸ்திரம் கூறுகிறது; எனவே, இறந்தவருக்கு குறைந்தபட்சம் அந்த நல்ல செயல்களுக்கு மரியாதை காட்ட வேண்டும் என்பதினால் அவருக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த செயல் மூலம் ஆன்மாவை கங்கை நதியில் நீராட்டுவதைக் குறிக்கிறது.
174) இரண்டாவது தத்துவம் என்ன என்றால் அந்த ஜீவன் தீயில் எரிந்து போனாலும், அதன் ஜீவாத்மா தாகத்தோடும் பசியோடும் இருக்கக் கூடாது என்பதற்காக அடுத்த பன்னிரண்டு நாட்களும் அந்த குடத்தில் சமையல் செய்து ஜீவனின் பசியைப் போக்கி (பிண்டம்), குடிப்பதற்கு தண்ணீரும் தருகிறோம் என்பதை எடுத்துக் காட்டும் சம்பிரதாய செயல் அது.
175) மூன்றாவது தத்துவம் என்ன என்றால் இறந்தவரது உடலை தொடர்ந்து வந்திருந்த ஜீவாத்மா அந்த மயானத்தில் பிண்ட தண்ணீரை மானசீகமாக பருகத் துவங்கி தனது தாகத்தை தீர்த்துக் கொள்ளத் துவங்குமாம்.
176) அதாவது கர்த்தா படைக்கும் பிண்ட தர்ப்பணத்தை – தனது தாகத்தை தீர்க்க செய்யப்படும் அந்த செயலை மயானத்தில் கர்த்தா செய்யும்போது- அதைக் காணும் ஜீவாத்மாவின் மனதில் மகிழ்ச்சி ஏற்படுமாம். அது மனமார தனது சந்ததியினரை ஆசிர்வதிக்குமாம். நமது உடல் மண் குடம் போன்றது, மண் குடம் கீழே விழுந்தால் எப்படி உடைந்து விடுமோ அது போலவேதான் நமது வாழ்க்கையும் நிரந்தரம் அல்ல என்பதினால் வாழும்போது மற்றவர்களுக்கும் பயனுள்ளவர்களாக வாழ வேண்டும்.
177) உடலை எதற்காக எரிக்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம். மயானத்தில் வசிப்பவர் சிவபெருமான். அவர் தனது உடலில் பூசிக் கொள்வது சாம்பல். ஆரம்பமும் அவரே (பரபிரும்மன்), முடிவும் அவரே என்பதை பிரதிபலிக்கும் விதத்தில் சிவசக்தியாக படைப்பையும், ருத்திரராக அழிக்கும் செயலையும் தன்னுள் அடக்கி வைத்துக் கொண்டு உள்ளவர் அவர். ஆகவே மயானத்தில் எரிக்கப்படும் உடல் சிவபெருமான் பூசிக் கொள்ளும் சாம்பலாக உருமாறுவதின் மூலம் ஜீவன் சிவபெருமானையே சென்று அடைந்து விடும் தத்துவத்தை வெளிப்படுத்துகின்றது.
178) பூமியில் போடப்படும் ஒரு விதை செடியாகவோ அல்லது மரமாகவோ மாறி, அதிலிருந்து பறிக்கப்படும் பழங்கள் இறைவனுக்கு நைவித்தியமாக கொடுக்கப்படுவது போல, மனிதர்களும் பூமியில் பிறவி எடுத்து, வாழ்க்கையின் பல்வேறு நிலைகளை அனுபவித்த பிறகு, அதற்கு நன்றி செலுத்தும் விதமாக, தங்கள் உடலை இறுதியில் சாம்பலாக மாற்றி அந்த தெய்வத்திற்கே அர்ப்பணிக்கிறார்கள்.
179) சாஸ்திரங்களில் மரணம் அடைந்தவரின் உடலை தஹனம் செய்வதை ‘அந்த்யேஷ்டி’ அதாவது ‘இறுதி வேள்வி’ என்றே ரொம்பவும் உயர்வாக கூறி உள்ளார்கள். யாகங்களை வேள்வி என்பார்கள். அது போலவேதான் ஒரு புனித ஜீவாத்மா குடி இருந்த பதினாறு தெய்வீக ஆற்றல்களை கொண்ட உடல் எனும் ஜடப் பொருளும் தெய்வீகமானது என்பதினால், அந்த உடலை எரிப்பதும் ஒரு புனிதமான வேள்வி போன்றதுதான், என்பதாகவே சாஸ்திரங்கள் கூறி உள்ளன. அந்த பிரேத சம்ஸ்காரம் செய்தால்தான் அந்த உடலின் கண்ணில் ஸூர்யன், வாயில் அக்னி, கையில் இந்திரன் என்றெல்லாம் இருக்கின்ற தெய்வாம்சங்கள் அதனதன் மூலஸ்தானத்துக்கு திரும்பப் போகும்.
180) எவன் இந்த உடம்பைக் கொடுத்தானோ அவனிடமே அதைத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என்கின்றது சாஸ்திரம் என்பதினால்தான் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும், அவர்கள் என்ன சமயத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் எதோ ஒரு வகையில் இறந்தவர்களது சடலத்தை மரியாதையுடன் தகனம் செய்தோ,அடக்கம் செய்தோ அல்லது மௌனக் கோபுரத்தில் உள்ள பறவைகளால் உண்ணும்படி தூக்கி எறியப்பட்டோ (ஜோராஸ்ட்ரியனிசம்-பாரசீகர்கள்), உடலை தந்தவரிடமே தமது உடலை தந்து விடுகின்றார்கள்.
ஜீவாத்மாவின் பயணம் -7 (b)
இறந்து போனவர்களை எரிப்பது அல்லது புதைப்பது
181) இறந்து போனவர்களை தகன சடங்குகள் செய்து நெருப்பில் போட்டு சாம்பலாக்கி விடுகின்றார்கள், அல்லது உடலை புதைத்தும் விடுகின்றார்கள்.
182) முன் காலங்களில் கர்ப்பவதி பெண் மரணம் அடைந்து விட்டால், வயிற்றில் இருக்கும் கருவை, தாயை எரிக்கும் முன்னர், தனியாக எடுத்து புதைத்து விடுவார்கள். அதை போலவேதான் குழந்தை பிறந்தவுடன் இறந்து விட்டால் அல்லது இறந்தே பிறந்து விட்டாலும் அதை வீட்டு தோட்டத்தில் அல்லது நதிக் கரைகளில் யாருக்கும் தெரியாமல் புதைத்து விடுவார்கள். அதன் காரணம் குழந்தையின் மண்டையோடு சக்தி வாய்ந்தது என்பதே ஆகும். பிறக்காமல் இறந்த எந்த ஒரு உயிராக இருந்தாலும், அந்த உடலை தீ மூட்டி எரிக்கக் கூடாது, புதைக்க வேண்டும் என்று சாஸ்திரங்களில் கூறப்பட்டு உள்ளதாம்.
183) சிறு குழந்தைகளின் மண்டையோடு சில குறிப்பிட்ட தேவதைகளின் தெய்வீக சக்தியை உள்ளடக்கிக் கொண்டு இருக்கும். இது தெய்வ நியதி; நமது கற்பனைகளுக்கும் அப்பாற்பட்ட காரணங்களைக் கொண்டுள்ள உண்மையாகும். மண்டை ஓடு நமது உடலில் உள்ள பத்தாவது மிக உயர்ந்த ஆற்றல் மையம் அல்லது சக்கரம் என்று நம்பப்படுகிறது, இது ஆன்மா உடலில் நுழைந்து வெளியேறும் நுழை வாயிலாகும்.
184) இறந்து போய் விட்ட குழந்தைகளை மயானத்தில் சென்று எரித்து விட்ட பின்னர் யாரும் அந்த சடலம் முழுவதும் எரிந்து சாம்பலாகும்வரை சுடுகாடுகளில் பல மணிநேரம் காத்திருக்க மாட்டார்கள். சடலத்திற்கு தீ மூட்டி அது நன்கு எரிய ஆரம்பித்ததும் அடுத்த சடங்கை துவக்கக் கிளம்பிச் சென்று விடுவார்கள். அங்கு அதற்காகவே காத்திருக்கும் மந்திரவாதிகள், அந்த குடும்பத்தினர் அனைவரும் சென்று விட்டதும், எரியும் நெருப்பில் இருந்து குழந்தைகளின் மண்டை ஓட்டை வெளியே எடுத்து கொண்டு சென்று விடுவார்கள்.
185) குறிப்பிட்ட தெய்வீக சக்தியை உள்ளடக்கிக் கொண்டு இருக்கும் சிறு குழந்தைகளின் மண்டையோடு மந்திரவாதிகளின் கைகளில் கிடைத்து விட்டால் அதைக் கொண்டு அவர்களால் சில தவறான சக்திகளை பெற முடியும்.
186) அதனால்தான் முன் காலங்களில் எந்த சந்தர்ப்பத்திலும் குழந்தைகளை சுடுகாட்டிற்கு கொண்டு சென்று தகனம் செய்ய மாட்டார்கள். குழந்தைகளை யாருக்கும் தெரியாமல்தான் வீட்டின் பின்புறத்தில் புதைத்தோ அல்லது தகனமோ செய்து விடுவார்கள்.
187) குழந்தைகளின் புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து மண்டை ஓடுகளை எடுக்க மாட்டார்கள், காரணம், புதைத்து விடப்படும் பிணத்தின் மண்டை ஓட்டின் தெய்வ சக்தி அழிந்து விடும் என்பதினால்தான் புதைத்த பிணங்களை தோண்டி எடுத்து மண்டை ஓட்டை எடுப்பது இல்லை. இது போன்ற பண்டைய கால பாரம்பரிய நம்பிக்கை செய்திகள் காலப்போக்கில் வாய்மொழிக் கதைகள் மூலம் தெரிய வருகின்றது.
188) ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் எந்த முறையில் மரணம் அடைந்தாலும்- தற்கொலையோ, இயற்கை மரணமோ அல்லது கொலை செய்யப்பட்டு இறந்து போனாலும், மரணம் அடைந்தவர்களுக்கு செய்ய வேண்டிய நியமத்தை அவரவர் குல வழக்கத்தின்படி கடைபிடிக்க அந்தந்த வீட்டு புரோஹிதர்கள் கூறுவார்கள்.
189) ஒரு மனிதன் துர் மரணத்தை அடைந்தாலும், தற்கொலை, கொலை செய்யப்பட்டவர் மற்றும் விபத்துக்களில் பலியானவர்கள் என எவராக இருந்தாலும் பொதுவாக அவர்களை தகனம் செய்ய வேண்டும் என்பதே சரியான சாஸ்திர முறை என புரோஹிதர்கள் கூறுகின்றார்கள்.
190) ஆனால் இந்து மத நம்பிக்கையின்படி குழந்தைகளின் உடல் புதைக்கப்பட வேண்டும் எனவும் பதினெட்டு வயதை தாண்டியவர்களின் உடல் தகனம் செய்யப்பட வேண்டும் எனவும் ரிக்வேதம் (10:16) அறிவுரைக்கின்றது.
191) ஆனால் தற்காலத்தில் குழந்தைகளின் உடலையும் மயானங்களில் எடுத்துச் சென்று எரித்து விடுகின்றார்கள். சுடுகாடுகளில் எவரும் அனுமதி இன்றி நுழைய முடியாது என்பதினாலும், மின்சார எரியூட்டிகள் உள்ளத்தினாலும் முன் காலங்களை போல மந்திரவாதிகளின் பயம் இல்லை.
ஜீவாத்மாவின் பயணம் -8
நதிக்கரையில் அஸ்தி கரைப்பு, சடங்குகள்
192) மயானத்தில் மின் அடுப்பில் பூதவுடல் எரிந்து போன அரை மணி நேரத்திலேயே அங்குள்ள தொழிலாளி யந்திரத்தில் இருந்து சாம்பலையும் எலும்பையும் எடுத்து கர்த்தா செய்பவரிடம் தருவார்கள்.
193) மயானத்தில் மின் அடுப்பில் உடலை எரிக்காமல் விறகுக் கட்டை மீது வைத்து மயான பூமியிலேயே சாதாரண முறையில் தகனம் செய்பவர்கள் பிணத்தை தகனம் செய்த மறுநாள் மயானத்திற்கு சென்று சாம்பலையும் எலும்பையும் எடுத்து வருவார்கள்.
194) பிணம் எரிக்கப்பட்ட இடத்தில் சாம்பல் மீது பாலை ஊற்றி அதில் கிடக்கும் எலும்புகளை பொறுக்கி எடுத்து, அங்கு சில சடங்குகளை செய்த பின் அந்த சாம்பலையும் எலும்பையும் பால் நிறப்பிய மண் குடத்தில் போட்டு கடற்கரை அல்லது நதிக்கு கொண்டு சென்று அதில் அவற்றைக் கரைத்தப் பின் அங்கேயே அந்த நதி அல்லது கடலில் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள். இப்படியாக எலும்பை கடலிலோ நதியிலோ கரைக்கும் சடங்கை சஞ்சயனம் என்று கூறுவார்கள். சஞ்சயனம் எனும் சடங்கு முடிந்த பின்னர் கர்த்தா அங்கு பண்டிதரால் தரப்படும் தர்ப்பை புல்லில் செய்யப்பட்ட மோதிரத்தை விரலில் அணிந்து கொள்வார்.
195) இறந்தபின் பிரேதத்தை எரித்து அதன் அஸ்தியை கடலிலோ அல்லது நதிகளிலோ கரைத்து விட வேண்டும் என்கிறது வேதம். எந்த ஒரு பிரேதத்திற்கு அந்திம கிரியை எனும் பிரேத ஸம்ஸ்காரங்கள் சரியான முறையில் செய்யப்படவில்லையோ அந்த ஜீவாத்மா மயானத்தில் தன்னுடைய எரிக்கப்பட்ட உடலில் உள்ள எலும்பை சுற்றி, சுற்றியே வந்தபடி இருக்கும்.
196) எதற்காக சஞ்சயனம் செய்கின்றார்கள். முதல் காரணம், எம லோகத்துக்கு செல்லும் வழியில் ஜீவாத்மா பசியாலும் தாகத்தாலும் அவதிப்படக் கூடாது என்பதினால் சடங்குகளை முறைப்படி செய்து விட்டு அதன் எலும்புகளை நதிகளில் கரைத்து விடுவார்கள். அந்த வேண்டுகோளை ஏற்றுக் கொள்ளும் அந்த நதிகளின் நீரானது ஜீவாத்மா தாகம் இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக அதன் சூட்சும உடலில் ஈரப் பதத்தை வைத்து விடும்.
197) நதிகளுக்கு அத்தனை சக்தி உள்ளதா என்றால் உண்டு என்பதே உண்மை. காரணம் நதிகள் தெய்வங்களினால் ஏற்படுத்தப்பட்டவை, இந்த உலகில் ஓடும் அனைத்து நதிகளின் தெய்வங்களும் கங்கை தேவியின் தெய்வீக கணங்களே என்பதினால் அந்த தெய்வங்களால் ஏற்படுத்தப்பட்டு உள்ள நதிகளும் கங்கை நதியின் கணங்கள்தான். கர்த்தா ஒரு பிரார்த்தனை செய்வார், ‘உடலை விட்டு வெளியேறிய ஜீவன் எங்கு சென்றாலும், யாராக பிறந்தாலும், வாழ்க்கையின் அத்தியாவசிய தேவையான தண்ணீரைப் போல அனைவருக்கும் பயனுள்ளவாறு இருக்க வேண்டும்’
198) வசதி உள்ளவர்கள் அஸ்தியை காசிக்கு கொண்டு சென்று கங்கை நதியில் கலப்பது வழக்கம். கங்கைக்கு செல்ல முடியாதவர்கள் எந்த ஒரு நதியிலாவது அஸ்தியை கரைப்பார்கள்.
199) எதற்காக பாலில் எலும்புக்களைப் போட்டு எடுத்துச் செல்கின்றார்கள்? பிறந்த குழந்தையின் முதலில் உணவு அதை பெற்று எடுத்த தாயின் தாய்பால் ஆகும். இறந்தவர்களது ஜீவாத்மாவும் அதனதன் விதிப்படி எங்கோ சென்று குழந்தையாக பிறப்பு எடுக்கும். இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைவருமே, மனிதர் முதல் அனைத்து ஜீவராசிகளுக்கும் மூல மற்றும் முதல் தாய் சக்தி தேவியே என்பதினால் அவளது குழந்தையாகவே பாவிக்கப்படும் ஜீவாத்மாவும் எம லோகத்தை சென்று அடையும் அளவிலான உடல் சக்தியுடன் இருக்க வேண்டும் என்பதற்காக தத்துவார்த்தமாக செய்யப்படுகின்றது.
200) மயானத்தில் எலும்புகளை எடுத்து மண் குடத்தில் உள்ள பானையில் போட்டதுமே அந்த மயானத்தில் கர்த்தாக்களுடன் வந்திருந்த அந்த எலும்பின் சொந்தக்காரரான ஜீவாத்மா, அந்த பாலை மானசீகமாக ஆவாகித்துக் கொள்ளுமாம். எலும்புகளை எடுத்ததும் கர்த்தாக்கள் முக சவரம் செய்து கொண்டு தாடி மீசைகளை எடுத்து விடுவார்கள். சிலர் மொட்டை அடித்துக் கொள்வார்கள். சுடுகாட்டில் தலை முடி மற்றும் முக ஷவரம் செய்து கொள்வது இறந்தவர்களுக்காக செய்யும் அடுத்த 12 நாட்களுக்கான காரியங்களை இனி முக மலர்ச்சியோடு செய்வேன் என்பதைக் எடுத்துக் காட்டும் ஒரு பாவனை ஆகும்.
201) மொட்டை அடித்துக் கொள்வதற்கு இன்னொரு காரணமும் உள்ளது. தீய ஆவிகள் ரோம துவாரங்கள் வழியே சென்று உடலில் அமர்ந்து கொண்டு விடும். சுடுகாட்டில் சடங்குகள் செய்யப் போகும்போது இறந்து போனவர்களின் ஜீவாத்மாக்கள், வஸுக்களிடம் இருந்து தப்பி ஓடி அவர்களது ரத்த சம்மந்தம் உள்ளவர்களது, அதாவது அவர்கள் மீது அதிக அளவு பாசம் வைத்துள்ளவர்களது முடியில் சென்று அமர்ந்து கொண்டு வீடு திரும்ப முயலுமாம். அதனுடன் சுடுகாட்டில் உள்ள பிற ஜீவாத்மாக்களும் சேர்ந்து அமர்ந்து கொண்டு விடும். இதனால்தான் அந்த காலங்களில் மயானங்களில் சென்று திரும்பும் அனைத்து உறவினர்களும் அங்கேயே மொட்டை அடித்துக் கொள்வது வழக்கமாக இருந்துள்ளது.
202) இன்னமும் சில கிராமங்களில் அந்த ஊரில் உள்ள அனைவருமே ஒருவரது இறப்பில் மொட்டை அடித்துக் கொள்ளும் பழக்கம் உள்ளது என்பதன் காரணம் ஒருவர் மரணம் அடைந்து விட்டால் கிராமத்தினர் அனைவருமே சடங்குகளில் பங்கு கொள்வார்கள் என்பதே.
203) இறந்தவரின் உடல் தகனத்திற்கு எடுத்துச் செல்லப்படும்போது, உடலை விட்டு வெளியேறிய ஜீவாத்மாவும் அதனுடன் சுடுகாடு வரை பயணித்து, தனது உடல் தகனத்தை நேரடியாக பார்க்கின்றது. அந்த சடங்குகளில் திருப்தி அடைந்ததும், அது தனது அடுத்த கட்ட பயணத்தை அமைதியோடு எதிர்கொள்ள தயாராகி விடும்.
204) இவை அனைத்தும் முதல் நாள் சடங்கு என்றாலும், பிணத்தை எடுத்த அடுத்த நாள் வரை தொடர்கிறது. அதன் காரணம் மின் அடுப்பில் உடனடியாக உடல் எரிந்து விடுவதைப் போல விறகுக் கட்டையில் அத்தனை விரைவாக உடல் எரிந்து விடாது. ஆகவே மறுநாள் தான் எலும்பை எடுக்க மயானத்துக்கு செல்ல வேண்டும். சில வீடுகளில் அந்த சடங்கு முடிந்தப் பின்னரே, மூன்றாம் நாள் கல் ஊன்றி கர்மாவின் பிற காரியங்களை செய்யத் துவங்குவார்கள்.
ஜீவாத்மாவின் பயணம் -9
பன்னிரண்டு நாள் சடங்குகள் (2 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை)
205) இனி அடுத்த பன்னிரண்டு நாட்களும் செய்ய வேண்டிய சடங்குகள் என்னென்ன என்பதையும் அவற்றின் தத்துவங்களையும் ஆராயலாம் .
206) மரணம் சம்பந்தமான வைதீக காரியங்களை அபர காரியம் அதாவது சுபம் அற்ற காரியம் என்று புரோஹிதர்கள் கூறுவார்கள். பரம்பொருள் என்றால் அழிவற்ற நிலையான ஜீவன் என்பது பொருள் ஆகும். அதற்கு எதிர்மாறான சொல்லான அபரம் என்பது நிலையற்ற அழியும் தன்மை கொண்ட ஜீவனைக் குறிக்கும். அதனால்தான் இறந்து போன சடலத்துக்கு சடங்கு செய்வது என்பதினால் அபர காரியம் என்பதாக கூறப்படுகின்றது. அதையே சாஸ்திரமும் கூறுகிறது.
207) இறுதிச் சடங்குகளை முடித்துக்கொண்டு கர்த்தா வீடு திரும்புவதற்கு முன்பு, வீட்டிற்குள் புரோகிதர் சென்று பிரேதம் கிடந்த அறையிலும், வீட்டிலும் முதல் நாளைய புண்யாஜனம் செய்து வைத்து இருப்பார். சுத்தம் சுத்தம் செய்யப்பட்டு, அடுத்த பன்னிரண்டு நாட்கள் சடங்கைத் நடத்தத் தயாராக வைக்கப்படும். அதன் பின்னர் பாஷாண ஸ்தாபனம் எனப்படும் கல் ஊன்றுதல் சடங்கு நடைபெறும்.
208) வீட்டின் பின் பகுதியில் தகனத்திற்குப் பிந்தைய சடங்குகள் செய்யப்படும் இடத்தில், சுத்தமான இடத்தில் ஒரு சிறிய கல் நிறுவப்படும். இது முதல் நாளன்று மயானத்தில் நடைபெற்ற இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு அன்றே செய்யப்படுகிறது. இறந்தவரின் ஆன்மா ஓய்வெடுக்கும் இடமாக நம்பப்படும் அந்த சிறிய கல்லின் முன்னிலையில்தான் பன்னிரண்டு நாட்கள் சடங்குகளும் செய்யப்படும். அதன் அருகில் இரண்டு சிறிய யாகக் குண்டங்ககளும் அமைக்கப்படும்.
209) முதல் நாளன்று கல்லை ஊன்றி பாஷாண ஸ்தாபனம் செய்யாவிடில் மூன்றாம் நாளன்று கல்லினால் சம்பிரதாயமாக இரண்டு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வார்கள். இப்படியாக கல் ஊன்றி செய்யப்படும் சடங்கை முதல் நாளில் ஆரம்பிக்காவிடில் ஒற்றைப் படையில் ஒன்று, மூன்று, ஐந்து, ஏழு அல்லது ஒன்பதாம் நாளன்று துவக்கி அனைத்து முந்தைய நாட்களுக்குமான சடங்கையும் சேர்த்து அன்றே செய்து முடிப்பார்கள்.
210) கருட புராணத்தின்படி, இறந்தவரின் உடலை விட்டு வெளியேறிய ஜீவாத்மா, முதல் பன்னிரண்டு நாட்களுக்கு விண்வெளியில் ‘பிரேதம் ‘ எனப்படும் புதிய உடலுடன் இருக்கும், இது கர்த்தாவினால் செய்யப்படும் பத்து நாட்கள் சடங்குகள் மூலம் உருவாகிறது. இந்த புதிய உடல் – பிரேதம் என்பதை அந்த ஜீவாத்மாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வசுக்கள், ருத்திரர்கள் மற்றும் ஆதித்தியர்களினால் அடையாளம் காண முடியும். அந்த உடலோடுதான் ஒரு ஜீவாத்மாவானது யமபுரியை நோக்கி பயணிக்க முடியும்.
211) சடங்குகளை செய்யும் கர்த்தா ஒவ்வொரு நாளும், குறிப்பிட்ட மந்திரங்களை உச்சரித்து ஆன்மாவை, பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள கல்லில் நுழைந்து, தாம் தரும் படையல்களை (பிண்டம்) ஏற்றுக் கொள்ளும்படி வேண்டுவார். கர்த்தாவை வழி நடத்தும் புரோஹிதர், இறந்த ஆன்மாவை முறையாக மதிக்கவும், சடங்கின் செயல் திறனை உறுதிப்படுத்த சரியான மந்திரங்களை உச்சரிப்பதை உறுதி செய்கிறார்.
212) இறந்தவர்களுடைய பெண் அல்லது மருமகள் கல் ஊன்றிய இடத்தில் வந்து, அங்குள்ள ஸ்நான அறையில் ஸ்நானம் செய்து விட்டு, சொட்ட சொட்ட ஈரத்துடன் வந்து அங்கு வைக்கப்பட்டு உள்ள அடுப்பை மூட்டி, பிண்டம் (அரிசி போட்டு பொங்கிய சாதம்) தயாரித்து, புரோஹிதர் கூறியபடி சடங்குகளை செய்து விட்டு அந்த அடுப்பையும் பாத்திரங்களையும் தேய்த்து அலம்பி அங்கேயே வைக்க வேண்டும். அந்த பாத்திரங்களை வேறு எந்த சடங்கிற்கும் பயன்படுத்தக் கூடாது
213) வசுக்கள், ஆதித்யர்கள் மற்றும் ருத்ரர்களின் காவலில் இருக்கும் பிரேத வடிவிலான ஜீவாத்மா சடங்குகள் நடைபெறும் இடத்திற்கு தினமும் அழைத்து வரப்பட்டு, தற்காலிகமாக கல்லுக்குள் நுழைந்து அமர்ந்து கொண்டு அங்கு நடைபெறும் சடங்குகளை ஏற்றுக் கொள்ள அனுமதிக்கப்படும்.
214) பத்தி 219 இல் கூறப்பட்டு உள்ளபடி (கருட புராணம்), சடங்கின் முதல் பத்து நாட்களில், பிரேதமானது தண்ணீரும் எள்ளும் கலந்த அரிசியை (பிண்டம்) மனதார ஏற்றுக் கொள்கிறது. பிண்டத்தை தற்காலிகமாக பிரேதம் தங்கியிருக்கும் கல்லின் முன் வைத்தவுடன், அவற்றை பிரேதம் ஏற்றுக் கொள்ளத் துவங்கும்போது அது ஒரு உருவை- பிரேதம்- அடையத் துவங்கும். அந்த உருவில்தான் அதனால் பிண்டத்தை ஆவாஹிக்க முடியும். பிரேதம் எனப்படும் அந்த உடலை அந்த ஜீவாத்மாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள வசுக்கள், ருத்திரர்கள் மற்றும் ஆதித்தியர்களினால் அடையாளம் காண முடியும்.
215) அதே சடங்கை பன்னிரண்டு நாட்களும் அதே முறையில் செய்வார்கள். அந்த கர்மாக்களின் தொடர்ச்சியாக பதிமூன்றாம் நாளன்று குடும்பத்தினரின் துயரத்தை நீக்கிக் கொள்ள சுபஸ்வீகாரம் எனும் சடங்கு செய்து முடிக்கப்படுகின்றது. அதாவது அபர காரியம் என்பது சுப காரியத்துடன் முடிவடைகிறது.
216) கல் ஊன்றிய பிறகு அந்த கல்லையே ஜீவனாக பாவித்து தினமும் வாஸோதகம் எனப்படும் துணி பிழிந்த ஜலத்தாலும், திலோதகம் எனப்படும் எள்ளு தண்ணீராலும் தர்ப்பணம் செய்வார்கள்.
217) கர்மாவைத் துவக்கிய முதல் நாள் முதல் அடுத்த பத்து நாட்களும் அதன் குடும்பத்தினரால் போடப்படும் எள்ளையும் தண்ணீரையும், பிண்டத்தையும் அங்கிருந்தவாறே அது பெற்றுக் கொண்டு மெல்ல மெல்ல முழுமையான சூட்சும உடலை அடையத் துவங்கும். அதை பிண்ட உடல் என்றும் கூறுவார்கள்.
218) முதலில் குடும்பத்தின் இளையவர்தான் பிண்டம் போடத் துவங்க வேண்டும். அவரைத் தொடர்ந்து எத்தனை சகோதரர்கள் இருந்தார்களோ அத்தனை சகோதரர்களும் விட வேண்டும்.
219) வாஸோதகம் மற்றும் திலோதகத்தில் எள்ளும் தண்ணீரும் தர்பைப் புல்லின் மீது பட்டவாறு சமர்பிக்கப்படுகிறது.
220) வசுவோதகம் மற்றும் திலோதகம் சடங்கு முடிந்த பின்னரே சாதத்திலான பிண்டம் சமர்ப்பிக்க வேண்டும். தினமும் ஒரு இளநீர் காயும் அவற்றோடு வைக்க வேண்டும். அப்படி செய்யப்படும் தர்ப்பணத்தால் ஜீவாத்மாவின் தாகம் அடங்கும். கர்மாவில் அரிசி சாதம், தர்பை, எள் மற்றும் தண்ணீர் என்பன இந்த சடங்கில் முக்கியமானவை ஆகும்.
221) பிண்டம் போடும் இடமே மந்திர சக்திகளினால் ஆன புனிதமான இடமாக, தெய்வீக பூமியாக இருக்கும். ஆகவேதான் அங்கு தர்பை புல்லையும் போட்டு வைத்து இருப்பார்கள். தர்பையைப் பயன்படுத்தாத சடங்குகளே கிடையாது.
222) ஒரே இடத்தில் தான் பத்து நாட்களும் பிண்டம் போட வேண்டும். முதல் நாள் எந்த தானியத்தில் பிண்டம் செய்தோமோ அதே தானியத்தில் தான் பத்து நாட்களும் செய்ய வேண்டும் என்றாலும் அரிசியில் சமைத்த சாதத்தையே போடுவது நல்லது. பிண்டம் போட்டு முடித்தப் பின்னர் மறுபடியும் ஸ்நானம் செய்து விட்டு தான் வீட்டிற்குள் செல்ல வேண்டும்.
223) ஒரு விளக்கு அங்கு பத்து நாட்களும் 24 மணி நேரமும் எரிந்து கொண்டிருக்க வேண்டும். நாய், பூனை போன்ற பிராணிகள் அங்கு வராமல் பார்த்து கொள்ள வேண்டும். குண்டத்தின் மீது இறந்தவரின் பழைய வேட்டியையோ அல்லது புடவையையோ போட்டு மூடி வைக்க வேண்டும்.
224) முதல் நாளில் மூன்று தடவை, அடுத்த நாள் நான்கு தடவை, அதற்கு அடுத்த நாள் ஐந்து தடவை எனப் படிப்படியாக வாஸோதகம், திலோதகம் தர்ப்பணத்தை அதிகரித்துக் கொண்டே போய் தர்ப்பணத்தை செய்ய வேண்டும். பத்தாம் நாளன்று பன்னிரண்டு முறை செய்யப்படும் சடங்கை ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் என்பார்கள். ஏகோத்ர விருத்தி ஸ்ரார்தம் செய்வதன் மூலம், இறந்தவர்களின் ஆன்மா சாந்தியடைந்து, முக்தி அடையும் என்று நம்பப்படுகிறது. இதுவும் சிலர் குடும்பங்களில் மாறுபட்டு இருக்கும். அதையும் புரோகிதர் கூறுவார்கள்.
225) அதை போலவேதான் நவ சிராத்தம் எனும் சடங்கையும் 11 ம் நாள் வரை ஒற்றை படை நாட்களில் செய்வார்கள் (1,3,5,7,9,11 நாட்களில் செய்ய வேண்டும்). நவ சிராத்தம் செய்வதின் மூலம் இறந்தவர்களின் ஜீவாத்மா சாந்தி அடைந்து , பித்ரு லோகத்தில் மன நிறைவோடு இளைப்பாறுவார்கள் என்பது தாத்பர்யம். அதை செய்த பின் சடங்கு செய்த புரோகிதருக்கு அரிசி தானம் செய்வார்கள்.
226) இப்படியாக பதினோரு நாட்களும் தினமும் தர்பை மூலம் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஜீவாத்மா மானசீகமாக உண்டதும், கல்லில் ஆவாஹிக்கப்பட்டு இருக்கும் ஜீவாத்மா, அது வாழ்ந்திருந்த அதே தோற்றத்திலான சூட்சும உடலை படிப்படியாக அடைகிறது.
227) இதைக் குறித்து கருட புராணம் அழகாகக் கூறுகிறது. கர்த்தாவினால் (சடங்கு செய்பவர்) இறந்தவருக்கு முதல் நாள் படைக்கப்படும் பிண்டத்தினால் ஜீவாத்மாவிற்கு தலை உண்டாகிறது. இரண்டாம் நாள் போடும் பிண்டத்தில் கழுத்தும், தோளும் உண்டாகும்;
228) மூன்றாம் நாள் போடப்படும் பிண்டத்தால் கைகளும் மார்பும் உண்டாகும்; நான்காம் நாள் போடப்படும் பிண்டத்தால் வயிறு உண்டாகும்; ஐந்தாம் நாள் போடப்படும் பிண்டத்தால் உந்தி (தொப்புள்) உண்டாகின்றது.
229) ஆறாம் நாள் போடப்படும் பிண்டத்தினால் பின்புறம் உள்ள பிரஷ்டம் தோன்ற; ஏழாம் நாள் போடப்படும் பிண்டத்தினால் குய்யம் எனப்படும் ஆண் மற்றும் பெண் குறிகளும், எட்டாவது நாள் போடப்படும் பிண்டத்தினால் தொடைகளும் உண்டாகின்றன.
230) ஒன்பதாம் நாள் போடப்படும் பிண்டத்தினால் கால்கள் ஏற்பட, பத்தாவது நாள் போடப்படும் பிண்டத்தினால் பூரண சரீரம் உருவாகின்றது.
231) பதினோரு நாட்களும் தரப்படும் எள், தண்ணீர், பிண்டம் போன்றவற்றை இறந்து போனவரது ஜீவாத்மா மானசீகமாக உண்டதும் அங்குள்ள பித்ரு தேவதைகள், தேவலோகத்தில் உள்ள நம் மூதாதையர்களுக்கும் ஏற்ப ஆகாரமாக அவற்றை மாற்றி தேவலோகத்தில் கொண்டு சென்று கொடுத்து அவர்களை திருப்தி அடைய வைக்கிறது.
232) தனக்கு தரப்பட்ட பிண்டங்களால் முழுமையான உருவத்தைப் பெற்றிடும் ஜீவாத்மா பதினோராவது நாள், தான் வாழ்ந்திருந்த வீட்டிற்கு வந்து, உயிரோடு தான் இருந்தபோது வீட்டில் நிகழ்ந்த அனைத்து சம்பவங்களையும், நிகழ்வுகளையும் நினைத்துப் பார்க்குமாம்.
233) உடலின் மீதான பற்றற்ற நிலைக்கு சென்று மனம் சாந்தி அடைந்து, கர்மாக்களின் விளைவுகளை எதிர் கொள்ளும் மன நிலைக்கு சென்று விடும் ஜீவாத்மா பன்னிரண்டாம் நாள் கர்மாக்கள் முடிந்ததும் வஸுக்களிடம் இருந்து விலகி யமகணங்களின் கட்டுப்பாட்டிற்குள் சென்று விடும். அதன் பின்னரே அந்த ஜீவாத்மா யமலோகத்துக்கு அழைத்துச் செல்லப்படும்.
234) அந்த ஜீவாத்மா சூட்சும உடலை முழுமையாக அடையும்வரை ஏன் காத்திருப்பார்கள் என்றால், சொர்க்க நரகங்களில் அவை தமக்கு தரப்படும் தண்டனைகளையும், சுகபோகங்களையும் மனித உடல் அனுபவிக்கும் அதே உணர்வுகளுடன் இருந்தவாறு அனுபவிக்க வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்டு உள்ள நியதி ஆகுமாம்.
ஜீவாத்மாவின் பயணம் -9 (a)
பன்னிரண்டு நாள் சடங்குகள் (2 ஆம் நாள் முதல் 12 ஆம் நாள் வரை)
– அவற்றின் காரணங்கள்
235) இந்து சடங்குகளில், ஒற்றைப்படை நாட்கள் மங்களகரமானதாகக் கருதப்படுகின்றன. பாஷாண ஸ்தாபனம் முதல் நாளில் செய்யப்படாமல் வேறு எந்த ஒற்றைப்படை நாளுக்கும் ஒத்தி வைக்கப்பட்டால், தவற விட்ட நாட்களில் செய்யப்பட வேண்டிய அனைத்து சடங்குகளும் முதலில் செய்து முடிக்கப் படவேண்டும், அப்படி செய்வதின் மூலமே பாஷாண ஸ்தாபனத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக சடங்கின் எந்தப் பகுதியும் விடுபடாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள முடியும்.
236) எந்த ஒரு நிகழ்ச்சியிலும், காரியங்களிலும் முதலில் வணங்க வேண்டியது வினாயகர் பெருமானே. அவருக்கு பிறகே மற்ற தெய்வ ஆராதனைகள் துவங்கும். அதை போலவேதான் எண்களில் முதலில் துவங்குவது ஒன்று எனும் ஒற்றைப் படை எண் ஆகும், அதை தொடர்வதே பிற எண்கள். இதனால் ஒன்று என்பது வினாயகப் பெருமானுக்கு இணையான எண் எனக் கருதி, வைதீக காரியங்களில் ஒற்றைப் படை அல்லது அதன் அடிப்படையில் வரும் ஒற்றைப் படை எண் தினங்களில் காரியங்களை துவங்குவார்கள். முன் காலங்களில் கர்மாக்களில் இதை கடைபிடித்தார்கள் என்பதாக கருத்து உள்ளது.
237) முன் காலத்தில் வெளி தோட்டத்திலோ அல்லது வீட்டின் பின்புறம் இருந்த தனி அறையிலோ கல் ஊன்றி காரியங்களை செய்வார்கள். ஆனால் தற்காலத்தில் விஸ்தாரமான வீடுகள் இல்லாமல் அடுக்கு மாடி குடியிருப்புக்களில் இருப்பவர்கள், மற்றவர்களுக்கு ஆட்ஷேபணை இல்லை என்றால், படிக்கட்டுகளுக்கு கீழே உள்ள இடத்தில், அல்லது பின்புறம் தென்னை மரம் இருந்தால் அதன் அடியிலும் வைத்து சடங்குகளை செய்கின்றார்கள்.
238) ஆனால் மாடி குடியிருப்புக்களில் உள்ளவர்களால் ஏற்றுக் கொள்ளப்படுவதில்லை என்பதினால் ஒன்பதாம் நாளன்று சடங்கு செய்ய வாடகைக்கு இடம் தரும் ஏதாவது ஒரு மண்டபத்தில் பாஷாண ஸ்தாபனம் செய்து ஒன்பது நாட்களுக்குமான காரியங்களை ஒரே நாளில் செய்து விட்டு, 10, 11 மற்றும் 12 ஆம் நாள் காரியங்களையும் அங்கேயே சென்று செய்து விட்டு வருகின்றார்கள். 13 ஆம் நாள் சடங்கான சுபாசுவீகாரத்தை வீட்டில் செய்கின்றார்கள்.
239) கல் ஸ்தாபனம் செய்யப்பட்ட இடமே அந்த சடங்குகள் செய்து முடிக்கப்படும் வரை மந்திர சக்திகளினால் ஆன, தெய்வீகம் நிறைந்திருக்கும் வகையிலான புனித கைலாயம் மற்றும் இந்திர லோகமாக அந்த ஜீவாத்மாக்களுக்கு இருக்கும் என்பது ஐதீகம். இறந்து போனவருடைய ஜீவாத்மா அங்கு கல்லின் உள்ளே அமர்ந்திருக்கும். கல் ஊன்றிய இடத்தில் மந்திரங்களை ஓதி அந்த ஜீவாத்மாவை அதில் செலுத்தி வைத்ததும் அந்த இடமே அதன் அரண்மனை போல மாறி விடும். ஆகவே அங்கு செய்யப்படும் சடங்குகளை ஜீவாத்மா மனதார ஏற்றுக் கொள்கின்றது.
240) ஊன்றப்பட்டு இருக்கும் கல் ஜீவாத்மாவின் சிம்மாசனம் போன்றது ஆகும். அந்த கல் அதற்கு சிறை சாலை போன்றது அல்ல. அதனால் ஜீவாத்மாவினால் எங்கு வேண்டுமானாலும் சுற்றித் திரிய முடியும் என்றாலும், அது எங்கு சென்றாலும் வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர் என்கின்ற துவாதசாதித்யர் அதை சூழ்ந்து கொண்டவண்ணமே இருப்பார்கள். அவர்களை தாண்டி அந்த ஜீவாத்மாவினால் தனியாக எங்கும் செல்ல முடியாது.
241) அந்த ஜீவாத்மாவும் தமக்கு அந்தஸ்தை தரும் வகையில் செய்யப்படும் சடங்குகளை மனதார ஏற்றுக் கொண்டு தாம் வாழ்ந்திருந்த குடும்பத்துக்கு மனதார ஆசிகளை அளிக்குமாம்.
242) அந்த கல்லில் ஆவாஹனம் செய்யப்பட்ட ஜீவாத்மாவானது அந்த கல்லில் இருந்து வெளியேறிச் செல்லும் இடைப்பட்ட காலத்தில் அந்த கல்லுக்குள் வேறு எந்த ஜீவாத்மாவினாலும் புகுந்து கொள்ள முடியாது. ஆவாஹிக்கப்பட்ட அந்தக் கல் அதன் வீடு ஆகும்.
243) பெண்கள் எதனால் ஈரப் புடவையுடன் பிண்டம் சமைக்கிறார்கள்?
244) பண்டை காலங்களில் நதிக்கரையில் அல்லது வேறு நீர் நிலைகளில் கர்மாக்களை செய்வார்கள். அப்போது அவர்கள் அங்குள்ள நதியில் குளித்து விட்டு காரியங்களை செய்வார்கள். ஆகவே நதி அல்லது நீர் நிலைகளில் குளித்தப் பின் வீட்டில் இருந்து எடுத்து வந்திருந்த மாற்றுத் துணியையும் நனைத்து விட்டு காய வைத்து அதை உடுத்திக் கொண்டு காரியத்தை துவக்க கால தாமதம் ஏற்படும். உடைகளை மாற்றிக் கொள்ள மறைவிடங்களும் இல்லாத காலம் அது.
245) வீட்டில் இருந்து கொண்டு வந்த துணிகளை நனைக்காமல் மாற்றிக் கொள்வது கூடாது. ஏன் என்றால் தீட்டு வீட்டில் இருந்து வந்த பின் தீட்டோடு காரியங்களை செய்யக் கூடாது. அதனால் பிண்டம் சமைக்கும் முன் குளிப்பது அவசியம். ஆகவே இவை அனைத்தையும் மனதில் கொண்டே ஈரப் புடவையுடன் சடங்கை செய்ய வேண்டும் என்ற விதி வைக்கப்பட்டு உள்ளது.
246) இதற்கு ஓரளவுக்கு விஞ்ஞான அடிப்படைக் காரணமும் உள்ளது. மன வேதனையில், துக்கத்தின் விளைவாக ரத்தம் கொதிப்படைந்து உடல் சூடாகவே இருக்கும். கர்மாக்களை செய்யும்போது மனம் அமைதியாக இருக்க வேண்டும், மனக்கட்டுப்பாடும் தேவை. ஈரத்துடன் இருக்கையில் உடலின் சூடு குறையும், எண்ண அலைகள் கட்டுப்பாட்டில் இருக்கும் என்பதினால் இதை சாஸ்திரங்களில் ஒரு விதியாக வைத்து உள்ளார்கள்.
247) 11வது நாள் சடங்குகளில் ஜீவாத்மாவின் உணர்ச்சி பூர்வமான வருகை, ஜீவாத்மா யம லோகத்திற்கு செல்லும் இறுதி கட்டத்தில் பெறும் ஒரு முக்கியமான மன மாற்றத்தைக் குறிக்கிறது. 11 ஆம் நாள் சடங்கு முடிந்ததும், ஜீவாத்மா தனது முந்தைய பூமியிலான வாழ்க்கைக்கு இனி திரும்பிச் செல்ல முடியாது என்பதை உணர்ந்து கொள்ளும்; எனவே, அது தான் சுமந்து சென்ற உணர்வுகளை உதறி விட்டு, யம லோகத்தை நோக்கி கடினமான பயணத்தை மேற்கொள்ள மனதளவில் தயாராகி விடும்.
ஜீவாத்மாவின் பயணம் -10
பன்னிரண்டு நாள் சடங்குகளில் பத்தாவது நாளன்று நடைபெறும் சடங்குகள்
248) பத்தாம் நாள் காரியம் என்பது, ஒருவர் இறந்த பத்தாவது நாளில் செய்யப்படும் சடங்குகளைக் குறிக்கும். இதில், இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரைச் சார்ந்தவர்கள் துக்கத்தில் இருந்து மீண்டு வரவும் பல்வேறு சடங்குகள் செய்யப்படுகின்றன. இந்த நாளில், நித்திய விதி, பங்காளி தர்ப்பணம் (குழி தர்ப்பணம்), ப்ரபூத பலி, பாஷாண உத்தாபனம், சாந்தி ஹோமம், ஆனந்த ஹோமம், சாரு ஸம்பாவனை, அப்பம், பொரி ஓதியிடல் போன்றவை பத்தாவது நாளன்று நடைபெறும் சடங்கில் முக்கியமானவை ஆகும்.
249) மரணம் அடைந்தவரின் ஜீவாத்மா முதல் மூன்று நாள் தண்ணீரிலும், அதற்கு அடுத்த மூன்று நாட்களுக்கு அக்னியிலும், அதற்கு அடுத்த மூன்று நாட்கள் விண் வெளியிலும் வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களுடன் வசிக்கிறது. அது வசிக்கும் தண்ணீரும், அக்னியும் நமது கண்களுக்கு தெரிவதில்லை. அவை நமது கண்களுக்கு புலப்படாத வகையில், ஜீவாத்மாவிற்கு மட்டும் தெரியும் வகையில் விண்வெளியில் உள்ளன.
250) ஒன்பது நாட்களிலும், ஜீவாத்மா வந்து தங்கி சடங்குகளை ஏற்றுக் கொள்ள அமைக்கப்பட்ட கல்லில் தங்கி, பிண்டத்தை பெறுவதற்காக பூமிக்குக் அழைத்து வரப்பட்டு, வசுக்களுடன் மீண்டும் விண்வெளிக்குத் திரும்பி விடும். ஆனால் பத்தாவது நாள் பல மணி நேரம் அங்கு தங்கி, அன்று செய்யப்படும் அனைத்து சடங்குகளிலும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுகிறது. எனவே, பத்தாவது நாள் சடங்கு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.
251) முதலில் கர்த்தாக்கள் துணி பிழிந்த தண்ணீரால் செய்யப்படும் வாஸோதகமத்தை 30 முறையும், எள்ளு தண்ணீரால் செய்யப்படும் திலோதகம் எனப்படும் நித்ய விதியை 75 முறையும் செய்வார்கள்.
252) குழி தர்ப்பணம்:- பத்தாம் நாள் சடங்கு அன்று இறந்தவரின் பங்காளிகள் வந்து பத்து தினங்களுக்கான குழி தர்ப்பணம் செய்ய வேண்டும். குழி தர்ப்பணம் என்பது என்ன? கர்மா நடைபெறும் இடத்தில் தர்ப்பணம் செய்யும் பங்காளிகள் அந்த இடத்தில் கொட்டப்பட்ட மண் தரையில் சின்ன குழி போல கையால் தோண்டி, அந்த குழிக்குள் எள்ளும் தண்ணீரும் விட்டு தர்ப்பணம் செய்வார்கள். முந்தைய பத்தி ஒன்றில் கூறியது போல, இந்து பாரம்பரிய நம்பிக்கை என்னவென்றால், குழி தர்ப்பணம் செய்யப்படும் குழிகளில் ஊற்றப்படும் நீரின் உயிர் சக்திகள், தரையில் ஆழமாக ஊடுருவி, நிலத்தடி நீரில் கலக்கின்றன, அந்த நிலத்தடி நீர் பூமிக்குள் ஓடும் கடல் அல்லது நதியின் நீரில் கலக்கின்றது. அவற்றிலிருந்து ஆவியாகும் நீர், சடங்குகளில் செய்யப்படும் பிரார்த்தனைகளின் சக்திகளால், பித்ரு லோகத்தில் உள்ளவர்கள் மட்டுமே தங்கள் தாகத்தைத் தணித்துக் கொள்ளும் அளவிலான, நமது கண்களுக்கு தெரியாத நீர் சக்திகளாக மாறுகின்றது. இந்த நம்பிக்கைகள் அனைத்தும் சில ஆகமங்கள் மற்றும் வேத நூல்களை அடிப்படையாகக் கொண்டவை.
253) பண்டைக் காலத்தில் இறந்தவர்களின் பங்காளிகள் நதி மற்றும் நீர் நிலைகளில் தர்ப்பணம் செய்வார்கள். அனைத்து இடங்களிலும் நதிகளும் நீர் நிலைகளும் இருப்பது இல்லை. அதனால்தான் பண்டை காலத்திலும் கூட நதிக்கரை, கடற்கரை இல்லாத பல இடங்களில் பூமியிலே சின்ன குழியை தோண்டி பூமாதேவியிடம் அந்தக் குழியிலே ஊற்றப்படும் தர்ப்பண நீரை பூமிக்குள் ஓடும் நதியுடன் சென்று கலந்து விட வேண்டும் என வேண்டிக் கொண்டு செய்யப்படும் சடங்காக அதை வைத்திருந்தார்கள். அதன் விளைவாக பண்டை காலத்திலும் நீர் நிலைகள் இல்லாத இடங்களில் குழி தர்ப்பணம் செய்யலாம் என விதி இருந்தது.
254) சஞ்சயனத்தில் இறந்தவரது சாம்பல் மற்றும் எலும்பு இரண்டுமே நதி மற்றும் நீர் நிலைகளில் கரைக்கப்பட்டதும், கண்களுக்கு புலப்படாமல் இருக்கும், இறந்தவர் உடலின் ஜீவ அணுக்கள் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து பயணித்தபடி இருக்கும். அதே நேரத்தில் பங்காளிகளினால் குழி தர்பணத்தில் விடப்படும் நீரின் ஜீவ அணுக்களும் பூமிக்குள் ஊடுருவி அங்குள்ள நீரில் கலந்து விடும். பூமிக்குள் உள்ள நீரில் ஏற்கனவே பயணித்துக் கொண்டு உள்ள இறந்தவரது ஜீவ அணுக்களை, பங்காளிகள் விட்ட நீரின் ஜீவ அணுக்கள் ஸ்பரிசித்து அவற்றுக்கு தாக சாந்தி தரும்போது அந்த உணர்வுகள் வசுக்கள் கட்டுப்பாட்டில் உள்ள ஜீவாத்மாவின் தாகத்தை தணிக்கின்றது.
255) அதனால்தான் நதிகள் மற்றும் ஓடும் நீர் நிலையில்தான் இறந்தவர்களுக்கு தர்ப்பணம் செய்து எள்ளும் தண்ணீரும் ஊற்ற வேண்டும் என்பது சாஸ்திர விதியாக இருந்தது. இந்த நம்பிக்கைகளும் சில ஆகமங்கள் மற்றும் வேத நூல்களை அடிப்படையாகக் கொண்டவை.
256) தர்பண நீரின் உயிர் அணுக்கள் வான் வெளிக்கு சென்று, யமபுரியை நோக்கி பயணிக்கும் ஜீவாத்மாவின் தாகத்தை தணிப்பதோடு அல்லாமல், ஜீவாத்மா தான் தனி நபர் அல்ல, இறந்த பின்னரும் தனக்கு தன் குடும்பமும் தனது பங்காளிகளின் துணையும் உள்ளது என்ற மன தைரியத்தைப் பெறும். இது சாஸ்திரங்களில் கூறப்பட்டுள்ள இந்த சடங்கின் தாத்பர்யத்தில் உள்ள ஆழமான ஆன்மீக தத்துவம் ஆகும்.
257) வான் வெளியில் கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் மிதந்தபடி உள்ளன. அவற்றில் இருந்து எப்படி குறிப்பிட்ட ஜீவாத்மா குறிப்பிட்ட குடும்பத்தினரின் தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை கிரகித்துக் கொள்ள முடியும் என்ற கேள்வி எழலாம். உண்மை என்ன என்றால் இதுதான் தெய்வீகம் என்பது. காந்தத்தைப் போன்ற தன்மை கொண்ட கோடிக்கணக்கான ஜீவ அணுக்கள் வான்வெளியில் இருந்தாலும், குறிப்பிட்ட ஒரு ஜீவாத்மா அதன் குறிப்பிட்ட கர்மா செய்பவர் மற்றும் பங்காளிகளின் தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும், அவற்றால் மற்றவர்களுடைய தர்ப்பண நீரின் ஜீவ அணுக்களை அணுகக் கூட முடியாதாம்.
258) இது நமது எண்ணங்களுக்கு அப்பாற்பட்ட, நமக்கு புரியாத, விசித்திரமான தெய்வீக ஆற்றல் ஆகும்.
259) தர்ப்பணத்தில் தண்ணீர் ஊற்றும்போது அதை வலது கை ஆள் காட்டி விரல் மற்றும் கட்டை விரலின் இடுக்கு வழியே ஊற்றுகிறோம். ஒவ்வொருவரது கையிலும் வலது கை ஆள் காட்டி விரலுக்கும், கட்டை விரலுக்கும் இடையே உள்ள இடைப் பகுதியில் ஓடும் ரேகைகளை பொதுவாக பித்ரு பூம்ய ரேகைகள் என்பார்கள்.
260) பங்காளிகள் மந்திரங்களை ஓதி ஊற்றும் தர்ப்பண நீரானது அவர்களது கைகளில் உள்ள பித்ரு பூம்ய ரேகைகள் வழியே ஓடிச் செல்லும்போது அந்த பூம்ய ரேகைகளின் ஸ்பரிசங்களை தன்னுள் அடக்கிக் கொண்டு அது பித்ருக்களுக்கான நீராக மாறி விடுமாம். அதனால்தான் ஜீவ அணுக்கள் அதன் பங்காளிகளின் தர்ப்பண நீரை மட்டுமே தன்னுள் இழுக்க முடியும் என்ற தெய்வ நியதி நியாயமாகவே உள்ளது.
261) ப்ரபூத பலி:- ப்ரபூத பலி என்பது சாதம், அடை உருண்டைகள் மற்றும் அகத்திக் கீரை போன்றவற்றை ஜீவாத்மா தற்காலிகமாக குடி இருந்த கல் (பாஷாண உத்பாதனம் செய்யப்பட்ட கல்) முன்னால் கொட்டுவதாகும். அரிசியில் செய்த அன்னம், உப்பு போடாமல் செய்த 11 இட்லி 11 அடை, 11 அப்பம், 11 முறுக்கு, 11 வடை போன்றவற்றை கல் ஊன்றிய இடத்தின் அருகில் படைப்பதையே பத்து கொட்டுவது அல்லது ப்ரபூத பலி என்கிறார்கள். இந்த சடங்கில் தரப்படும் உணவுப் பொருட்கள் ஒவ்வொரு குடும்பத்துக்கும் மாறுபட்டு இருக்கலாம்.
262) ஒத்தைப்படை கோடுகள் வரும்படி கோலம் போட்டு (வீடுகளில் சாதரணமாக அப்படி கோலம் போடுவது இல்லை), துணியின் நுனிப் பகுதி தெற்கு நோக்கி இருக்குமாறு வைத்து, அதன் மீது தர்ப்பைகளை பரப்பி வைத்து, எள்ளும் நீரும் விட்டு, அதன் மீது அன்னம், அப்பம், கொழுக்கட்டை, லட்டு, முறுக்கு, நெய், தேன், தயிர் போன்ற அனைத்தையும் வைப்பர். அதன் மேல் மீண்டும் எள்ளும், நீரும் விட்டு, தமது குலத்தை தழைக்க வைக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்வார்கள். பாத்திரங்களை எள் நீரால் அலம்பி, நிமிர்த்தி வைத்து, தெற்கு முகமாய் பார்த்தபடி நமஸ்கரிக்க வீட்டு காரியங்கள் முடிவடையும்.
263) முதல் நாள் அன்று இரவு உப்பில்லாமல் சமைக்கப்பட்டு பத்தாம் நாளன்று அங்கு எடுத்து வந்துள்ள உணவை இறந்தவரின் பங்காளிகள் உப்பில்லாத சாப்பாடு எனும் பெயரில் அந்த கல் முன்பாக போடுவார்கள். அந்த உப்பில்லாத உணவை பெற்றுக் கொள்ளும் ஜீவனானது, ஐயோ இந்த உப்பில்லாத சாதத்தை உண்பதை விட வேறெங்காவது போய் விடலாம் என்று உலக பந்தத்தை அறுத்துக் கொண்டு செல்லும் மன நிலையை அதற்கு அளிக்கும் என்று இந்த சடங்கை வைத்து உள்ளார்கள். இந்த சடங்கும் ஒவ்வொரு குடும்பத்துக்கு, குடும்பம் மாறுபட்டு இருக்கலாம்.
264) பாஷாண உத்தாபனம்: அதன் பின்னர் கர்மா செய்பவரை தவிர அனைவரையும் வெளியே அனுப்பி விட்டு, கல்லை எடுக்க தானங்கள் செய்து, பித்ருவை போக வேண்டிய இடத்துக்கு போகச் சொல்லி பிரார்த்தனை செய்த பின்னர், கண்களை மூடிக் கொண்டு, ஆவாஹனம் செய்து பூமியிலே ஊன்றிய கல்லை மீண்டும் வெளியில் எடுத்து விடுவார்கள். அதாவது அங்கு வாசம் செய்து கொண்டிருந்த ஜீவனை வெளியில் எடுத்து விடுவார்கள் என்பதான ஐதீகம் ஆகும். கற்களை எடுத்தப் பின் கண்களை திறக்க வேண்டும். அங்கும் இங்கும் பார்த்தபடி மனம் அலை பாயாமல் இருக்க வேண்டும் என்பதற்காகவே கர்மா செய்பவர் கல்லை எடுக்கும் முன்னர் கண்களை மூடிக் கொள்கின்றார்.
265) இறந்தவரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து கல்லை அகற்றும் இந்த சடங்கையே பாஷாண உத்தாபனம் என்பார்கள். அவற்றை துணியில் வைத்து கையலம்பிக் கொண்டு, கல் மீது ஒட்டிக் கொண்டு இருந்த மண், தானியங்கள் இவற்றை எடுத்துக் கொண்டு போய் எல்லாவற்றையும் ஒரு குழியில் போட்டு அதன் மீது நெல்லையும் சிறிது பசுவின் சாணத்தையும் கொட்டி விட்டு மூடி விடுவார்கள். இதே போல நதி கரையில் காரியங்களை செய்வார்கள். பெரியோரை வலம் வந்து பிரார்த்தனை செய்த பின் தாடி மீசைகளை மழித்த பின் குளித்து விட்டு வீடு திரும்புவார்கள்.
266) யதாஸ்தானம்: பத்தாவது தினத்தன்று யதாஸ்தானம் செய்து (முன்னிருந்த இடம் அல்லது சம்பந்தப்பட்ட இடம் என்று பொருள்) செய்து வெளியில் எடுக்கப்பட்ட ஜீவாத்மாவானது, கட்டை விரல் போன்ற அளவும், அமைப்பும் கொண்ட சூட்சும சரீரம் எடுக்குமாம். அதன் பின்னரே சூட்சும சரீரம் எடுத்த அந்த ஜீவாத்மாவானது யம தூதர்களுடன் யமலோகத்துக்கு பயணத்தை துவக்குமாம். அதன் பயணத்துக்கு வழி வகுக்கும் நிலையை ஏற்படுத்தவே யதாஸ்தானம் எனும் சடங்கு செய்து அந்த ஜீவனுக்கு நாம் விடை கொடுத்து அனுப்புகிறோம்.
267) இறந்தவர் மனைவி உயிருடன் இருந்தால், அவளும் ப்ரபூத பலி சடங்கில் கலந்து கொள்ள வேண்டும். அன்றைய தினம் ஒரு புதுப் புடவை வாங்கி அதை அவள் தோளின் மீது சகோதரர்கள் போட வேண்டும். கையில் தரக் கூடாது. அதை தோளில் புடவை சாத்துவது அல்லது புடவை போடுவது என்பார்கள். அதற்குப் பிறகு அவள் அப்படிப்பட்ட பட்டுப் புடவைகளை அணியக் கூடாது என்பதற்காக கடைசியாக அவளுடைய வீட்டினரால் சம்பிரதாயமாக தரப்படுவதாம். சமூகத்தில் விதவை எந்த நிலையில் வாழ வேண்டும் என்பதை அவளுக்கு புரிய வைக்கும் ஆன்மீக போதனைக்காகவே வைக்கப்பட்டு உள்ள இந்த சடங்கிற்கு வேறு எந்த காரணமும் கிடையாது.
268) தாலி எடுத்தல்:- பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு நார் புடவையை பிரித்து சகோதரன் கழுத்தில் போட்ட பின் இரவு நடு எல்லா சுமங்கலிகளையும் வெளியே போகச் சொல்லி தாலியை கழுத்தில் இருந்து எடுத்துத் தருமாறு கூறி அதை வாங்கிக் கொண்டு பால் கிண்ணத்தில் போடுவர். இந்த சடங்கு விதவையானவள் உலக பந்தம் அனைத்தையும் அறுத்துக் கொள்வதாக தத்துவமாக உள்ளது.
269) பண்டைக் காலத்தில் கணவரை இழந்த பெண்கள் பத்தாம் நாள் சடங்கிற்குப் பிறகு விதவையாகக் கருதப்பட்டதினால் அன்றைய தினம் அவர்கள் தாலியை எடுத்து விட்டு தலைமுடியை வழித்துக் கொண்டு, வெள்ளை புடவையை மட்டுமே அணிந்து கொள்ள வேண்டும் என்றும், வேறு எந்த வண்ணப் புடவைகளையோ, நகைகளையோ அணிந்து கொள்ளக் கூடாது என்றும், விதவையான பின் வெளியில் செல்லக் கூடாது, விழாக்களில் கலந்து கொள்ளக் கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகளை விதித்து இருந்தார்கள்.
270) அதற்கு அடிப்படைக் காரணம் விதவை ஆன பெண்கள் உலக சுக போகங்களில் மூழ்கி காம இச்சை கொண்டு அலையக் கூடாது, தமது இறுதி வாழ்நாள் வரை பக்தி மார்கத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக வைக்கப்பட்டு இருந்த சடங்கு முறை ஆகும். ஆனால் தற்காலத்தில் பல குடும்பங்களில் இந்த சடங்கு முறை இருப்பதாகத் தெரியவில்லை. காரணம் விதவையான பெண்கள் தமது தலைமுடியை வழித்துக் கொள்வதில்லை, வெள்ளைப் புடவைகளை அணிந்து கொள்வதில்லை, நகைகளை அணிந்து கொள்கின்றார்கள், ஆடம்பரமாகவும் இருக்கிறார்கள். அனைத்து விழாக்களிலும் கலந்து கொள்கிறார்கள். ஆகவே இந்த சடங்கு தார்மீக அடிப்படையில் அமைந்த ஒன்றாகும்.
271) ஆனந்த ஹோமம்: சாந்தி ஹோமம் செய்து முடிக்கப்பட்ட பின்னர் சில குடும்பங்களில் ஆனந்த ஹோமம் என்பதையும் செய்வார்கள். இது வீட்டினரின் மகிழ்ச்சிக்காக செய்யப்படும் ஹோமம் ஆகும். இவை அனைத்தும் இறந்தவரின் ஆன்மா சாந்தியடையவும், அவரைச் சார்ந்தவர்கள் துக்கத்தில் இருந்து மீண்டு வரவும் செய்யப்படும் சடங்குகள் ஆகும்.
272) சாந்தி ஹோமம்: வீட்டிற்கு வந்ததும் சாந்தி ஹோமம் செய்து முடிந்தப் பின் வந்துள்ள உறவினர் அனைவருக்கும் உணவு அளிப்பார்கள். சாந்தி ஹோமம் அமைதிக்காக செய்யப்படும் ஹோமம் ஆகும். அன்று தீட்டு விலகி விட்டதாக ஐதீகம் உண்டு. அன்று சாரு சம்பாவனை (உறவினருக்கு அப்பம் மற்றும் பொறி ஓதியிடுதல்) என்பதையும் செய்வார்கள். இது இறந்தவருக்கு செய்யப்படும் தானமாகும். அன்று குடும்பத்தினருக்கு விலகி விட்டதாக கருதப்படும் தீட்டு மறுநாள் மீண்டும் வந்து சேரும் என்பார்கள்.
273) வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்கள் கர்மாவில் செய்யப்படும் மந்திரங்களுக்கு உரிய தேவதைகள். ஜீவாத்மாவை பிடித்துக் கொள்ள முயலும் தீய ஆவிகளை விரட்டி தம்மை நோக்கி பயணித்துக் கொண்டு இருக்கும் ஜீவாத்மாவுக்கு பாதுகாப்பு தரும் தேவதைகளே வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்கள். அவர்களுடைய பாதுகாப்பில் அடுத்த பத்து நாட்களிலும் இருக்கும் ஜீவாத்மா, அந்த பத்து நாட்களிலும் செய்யப்படும் சடங்குகளினால் பசி, தாகம் இன்றி இருக்கும்.
274) பத்து நாட்கள் சடங்குகள் எனும் கணக்கிற்கு இன்னொரு காரணமும் உள்ளது. மரணம் அடைந்து விட்டவர்களது ஜீவாத்மாவானது வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களிடம் பாதுகாப்பாக உள்ள நேரத்தில் அந்த ஜீவாத்மாவின் தர்ம, அதர்ம கணக்குகளை ஆராய்ந்து பார்த்து அதற்கான தண்டனைகளையும் முடிவு செய்து கொண்ட பின்னரே அந்த ஜீவாத்மாவை தமது யமகணங்கள் மூலம் அழைத்துக் கொண்டு செல்ல யமதர்ம தேவருக்கு பத்து நாட்கள் ஆகுமாம்.
275) வசுக்கள், ஏகாதச ருத்திரர்கள் மற்றும் ஆதித்யர்களிடம் இருந்து யமகணங்களின் கட்டுப்பாட்டிற்கு ஜீவாத்மா போய் விட்டாலும் பத்து நாட்களுக்கு மேலாக அடுத்த இரண்டு நாட்களும் அந்த ஜீவாத்மாவை அங்கு இருந்தவாறு மீதமுள்ள சடங்குகளில் பங்கேற்க யமதர்மன் அனுமதித்து உள்ளாராம்.
ஜீவாத்மாவின் பயணம் -11
பதினோராவது நாளன்று நடைபெறும் சடங்குகள்
276) ஏகோத்திஷ்டம்: பதினோராவது நாள் காரியம் என்பது ஒருவரது இறப்புக்குப் பிறகு செய்யப்படும் இறுதிக் சடங்குகளில் ஒன்றாகும். இது பொதுவாக ஏகோத்திஷ்டம் (அதாவது ஒருவருக்கு என்பது பொருள்) என்று அழைக்கப்படுகிறது.
277) ஜீவாத்மா பூமி உலகத்திலிருந்து மூதாதையர்களின் உலகத்திற்கு (பித்ரு-லோகம்) மாறுவதற்கு உதவுவதற்காக இந்த சடங்கு செய்யப்படுகிறது. பதினொன்றாம் நாள் வரை, ஜீவாத்மா பூமிக்குரிய பிரேத சரீரத்தில் இருந்ததாக கருதப்படுகிறது. 11 ஆம் நாளன்று செய்யப்படும் சில சடங்குகள் பின்வருமாறு:
• யஜ்ஞோபவீத தாரணம்: நீராடிய பின்னர், கர்த்தாக்கள் அனைவரும் பத்து நாட்களும் அணிந்திருந்த பழைய பூணலை கயற்றி விட்டு புதிய பூணலை முறைப்படி மந்திரங்கள் ஓதி அணிந்து கொள்ள வேண்டும்.
• புண்யாஹவாசனம்: புண்யாஹவாசனம் என்பது தீட்டு வீட்டை மந்திரங்கள் ஓதி புனிதப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் வீட்டில் மீண்டும் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்புவதற்கு செய்யப்படும் ஒரு சடங்காகும்.
• நவசிராத்தம்: நவசிரார்த சடங்கு என்பது என்பது ஒன்பது நாளுக்கும் சேர்த்து இறந்தவருக்காக செய்யும் ஒன்பது தானம் ஆகும். இதை செய்வதின் மூலம் ஜீவாத்மா பயணிக்கையில் அதற்குத் தேவையான சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை.
• வ்ருஷ உத்ஸர்ஜனம்: வ்ருஷபம் என்றால் காளை மாடு என்று அர்த்தம். உத்ஸர்ஜனம் என்றால் விடுவித்தல் அல்லது விலக்குதல் என்று பொருள். வ்ருஷ உத்ஸர்ஜனம் என்பது இறந்தவரின் பிரேத உடல் இந்த உலகிலிருந்து அகலுவதற்காக செய்யப்படும் சடங்கு ஆகும். அந்த சடங்கு என்ன என்றால் ஒரு மாட்டின் கன்றின் மீது சூலம் போல குறியிட வேண்டும். அதன் பிறகு அந்த காளை மாட்டை தானம் செய்து விட வேண்டும். இறந்து விட்டவரின் ஜீவாத்மாவானது பிசாசாக மாறி விடக் கூடாது; மேலுலகம் சென்று பித்ருக்களோடு நல்ல முறையில் சேர வேண்டும் என்பதற்காக செய்யப்படும் சடங்கு ஆகும்.
• ஏகாதச பிராமண போஜனம்: பதினோரு பிராமணர்களுக்கு உணவு அளித்தல்.
• ஆத்ய மாசிகம்: பொதுவாக மாசிகம் என்பது இறந்தவர் ஜீவனுக்கு செய்யும் நேர்த்திக் கடன் என்பதாகும். இந்த சடங்கின் மூலம் இறந்தவரின் ஆன்மாவுக்கு பிசாசத்துவ நிவிர்த்தி கிடைக்கும். இந்த சடங்கு இறந்தவரின் ஆன்மா அமைதி பெறவும், அவரை அடுத்த நிலைக்கு கொண்டு செல்லவும் செய்யப்படுகின்றன. மேலும், இது குடும்பத்தோர் மற்றும் உறவினர்கள் துக்கத்திலிருந்து மீண்டு வருவதற்கும் ஒரு வழியாகும்.
• ஒத்தன் சாப்பாடு :- பதினோராம் நாளன்று நடைபெறும் இன்னொரு முக்கியமான சடங்கு ஒத்தன் சாப்பாடு என்பதாகும். அன்றைய தினம் ஒத்தன் எனப்படும் ஒரு புரோகிதரை அழைத்து வந்து அவரையே உப்பில்லாத உணவை அங்கேயே தயார் செய்து அதை உண்டு விட்டு செல்லுமாறு கூறுவார்கள்.
• அவர் தயாரிக்கும் உணவில் உப்பு மற்றும் பிற சுவையான பொருட்களைத் தவிர்ப்பது, குடும்பத்தின் துயர நிலையையும், உலக இன்பங்களிலிருந்து பிரிந்திருப்பதையும் பிரதிபலிக்கிறது. அவர் உணவு தயாரிக்கத் தொடங்குவதற்கு முன்பு அதற்காக அவருக்கு தட்சணை தர வேண்டும்.
• அவர் போகும்போது அவரை யாரும் பார்க்கக் கூடாதாம். இதுவும் ஒரு முக்கியமான சடங்காம். அப்படி செய்பவரையே பிரேத மனிதர் என்பார்கள்.
ஜீவாத்மாவின் பயணம் -12
பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் சடங்குகள்
278) 12வது நாளில் செய்ய வேண்டிய கர்மாக்கள் புண்யாஹவாசனம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம் போன்றவை ஆகும். நீர்க் குடத்தைத் (உதக கும்பம்) தானமாக வழங்குவதே சோத கும்ப சிரார்த்தம் என்று கூறப்படுகின்றது. சோத கும்ப சிரார்த்தம் செய்வதின் மூலம் இறந்தவர்களுடைய ஜீவாத்மாவின் தாகம் மட்டும் அல்ல அதன் பசியும் தீரும் என்பர்.
279) புண்யாஹவாசனம்: 12ஆம் நாளும் புண்ணியாகவாசனம் செய்யப்படுகின்றது. தீட்டு வீட்டை மந்திரங்கள் ஓதி புனிதப்படுத்தவும், சுத்தப்படுத்தவும் வீட்டில் மீண்டும் அமைதியும் மகிழ்ச்சியும் திரும்புவதற்கு செய்யப்படும் ஒரு சடங்காகும்.
280) ஸபிண்டீகரணம் :- இதில் முக்கியமான கர்மா ஸபிண்டீகரணம் என்பதாகும். ஸபிண்டீகரணம் என்பது தன்னுடைய குலத்திலுள்ள மூதாதையர்களுக்காக செய்யப்படுகின்ற பூஜையாகும். இறந்தவருக்கு முன் மாண்ட அவருடைய மூன்று தலைமுறையினரின் பிண்டத்துடன் இறந்தவரின் பிண்டத்தையும் ஒன்று சேர்ப்பது ஸபிண்டீகரணம் எனும் சடங்கு ஆகும்.
281) இந்த சடங்கை மரணம் அடைந்தவரது 12வது தினத்திலோ, 15வது தினத்திலோ அல்லது ஆறாவது மாதத்திலோ செய்யலாம். ஆனால் கண்டிப்பாக செய்ய வேண்டும். அதுவரை இறந்தவர் பிரேத ஜென்மத்துடன் இருப்பார். ஆகவே அதை செய்து முடிக்காதவரை இறந்தவருடைய பிள்ளைகள் எந்தவிதமான சுப நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளுதல் கூடாது. ஸபிண்டீகரணம் செய்து முடித்த பின்பே இறந்தவருடைய பிரேத ஜென்மமானது முழுவதுமாக நீங்கப்பெற்று பித்ருக்களின் உருவை அடையும். இந்த கர்மாவை செய்த பின் தாய், தந்தையரின் வம்சாவளியில் மூன்று தலைமுறையினருக்கு சிரார்த்தம் செய்ய வேண்டும்.
282) பிரேதத்துவம் பெற்ற ஜீவாத்மாக்கள் உடனடியாக அடுத்த பிறவி எடுக்கும் என்பதல்ல. அந்த பிரேத ஜீவாத்மாக்கள் யமலோகத்துக்கும் போகாமல், சொர்க்க லோகத்துக்கும் போகாமல் யமதர்மனின் கணக்கு வழக்குகளின் அடிப்படையில் அவற்றுக்கு கிடைக்க உள்ள தண்டனை மற்றும் பிரத பலன்களை எதிர் பார்த்தவண்ணம் பயணித்துக் கொண்டு இருப்பார்கள். அதன் பயணம் முடிவுற ஒரு வருட காலம் ஆகுமாம். இறந்தவராது ஜீவாத்மா யம லோகம் செல்வதற்கு இடையே 16 இடங்களில் தங்கி செல்ல வேண்டும். அந்த தங்குமிடங்களில் தாகம் இன்றி பசி இன்றி இருக்க வேண்டும் என்பதற்காக உணவு மற்றும் தண்ணீர் கிடைக்கும்படி செய்யவே அந்த ஒரு வருட காலத்துக்குள் பதினாறு ஸ்ரார்தங்களை செய்ய வேண்டி உள்ளது. இதை சோத கும்ப சிரார்த்தம் என்று கூறுவார்கள்.
283) ஒரு வருடத்தில் அந்தந்த குறிப்பிட்ட நாளில் செய்ய வேண்டிய ஸ்ரார்தத்தை ஏதாவது ஒரு தவிர்க்க முடியாத காரணத்தினால் கர்த்தாவினால் செய்ய முடியாது போய் விட்டால், அந்த பாவம் கர்மாவை செய்பவருக்கு போகாது. மாறாக அந்த பாவம் எந்த ஜீவனுக்காக அந்த ஸ்ரார்தம் செய்யப்படுமோ அதற்கு போய் சேரும். அதனால் அது படும் வேதனையின் விளைவாக, அந்த ஜீவனின் குடும்பத்தினர் மன வேதனைகளை அடைவார்கள். அந்த நிலை ஏற்படக் கூடாது என்பதற்காகவே ஒரே நாளில் அந்த பதினாறு ஸ்ரார்தங்களை முறையாக, நியதிப்படி செய்வதின் மூலம் யமதர்ம தேவர் அந்த ஜீவன்களுக்கு கிடைக்க உள்ள தண்டனைகளின் கொடுமைகளைக் குறைப்பார் என்பது நம்பிக்கை.
284) பதினாறு ஸ்ரார்தங்களையும் ஒரே நாளில் செய்து முடிக்க முடியாது என்பதினால்தான் பன்னிரண்டாம் நாளன்று பதினாறு அந்தணர்களுக்கு அரிசி, வாழைக்காய் போன்றவற்றுடன் தட்ஷணயையும் சேர்த்து கொடுத்து அந்த குறிப்பிட்ட கர்மாவை செய்து முடிக்கிறார்கள். பதினாறு அந்தணர்களுக்கு தரும் தானங்களைத் தவிர, ஒரு அந்தணருக்கு போஜனமும் போட்டு தட்சணை தருவார்கள்.
ஜீவாத்மாவின் பயணம் -12 (a)
பன்னிரண்டாம் நாளன்று நடைபெறும் சடங்குகள்- அதற்கான காரணங்கள்
285) சரீரத்தை விட்டு வெளியேறிய ஜீவாத்மா தகனத்துக்குப் பின்னர் அடுத்த பதினோரு நாட்களும் சூட்சும உடலோடு பூவுலகிலேயே வாசம் செய்கிறது. அதனால்தான் அந்த பதினோரு நாட்களும் அந்த ஜீவனின் பசி, தாகம் ஆகியவற்றை அடக்குவதற்காக எள்ளும் தண்ணீரும் கலந்து தர்ப்பணம் செய்து பிண்டம் போடுகின்றார்கள். ஜீவாத்மாவிற்கு மானிட சரீரமே இல்லை எனும்போது அவை எப்படி பிண்டத்தை உண்டு தர்பை மூலம் தரப்படும் எள்ளும் தண்ணீரையும் குடிக்க முடியும், பிண்டத்தை உண்ண முடியும் என்ற சந்தேகம் எழலாம். நாம் உண்ணும் உணவை நாம் உண்ட பின்னரே, நமது பசி அடங்குகின்றது. இவை அனைத்தும் உடல் செயல்களுடன் தொடர்புடையவை. ஆனால் மானிட சரீரம் அற்ற ஜீவாத்மாவினால் உடல் ரீதியாக எந்த உணவையும் உட் கொள்ளவோ, தண்ணீர் குடிக்கவோ முடியாது. எனவே, மந்திர உச்சாடனைகளினால் வெளிப்படும் மந்திர அலைகள், எள் மற்றும் தண்ணீர் கலந்த பிண்டத்தை, ஜீவாத்மாக்கள் உண்ணும் நிலையிலான உணவு சக்திகளாக மாற்றும்போது, கண்ணுக்குத் தெரியாத ஜீவாத்மாக்கள் அவற்றை உறிஞ்சி தங்கள் பசி மற்றும் தாகத்தைத் தணித்துக் கொள்கின்றன.
286) வெள்ளை எள் என்பது திருமாலின் வியர்வையிலிருந்து தோன்றியதாக கருதப்படுவதினால் அந்தத் தானியம் மிகவும் பரிசுத்தமானதாகும். கருப்பு எள் அதே விஷ்ணுவின் இன்னொரு அவதாரமான வராஹ மூர்த்தியிடம் இருந்து தோன்றியதாக கூறப்படுகின்றது. ஆகவே சிரார்த்த காலத்தில் எந்த எள்ளை பயன்படுத்தினாலும் பலன் ஒன்றே.
287) சிரார்த்த காலத்தில் எள்ளை தண்ணீருடன் கலந்து தர்பை புல் மூலம் சமர்பிக்கையில், பித்ருக்களின் பசியைப் போக்கி திருமால் வாழும் இடமான வைகுண்டலோகத்துக்கு இறந்தவர்களது ஜீவாத்மாக்களை அனுப்பி வைப்பதாக ஐதீகம் உள்ளது.
288) மும்மூர்த்திகளும் வசிப்பதாக கூறப்படும் தர்ப்பைப் புல் முதலில் ஆகாயத்தில் தோன்றியது என்றும் அதுவே பரப்பிரும்மனின் வடிவம் என்றும் அதனால் தர்பை உள்ள இடத்தில் இருந்து தீய சக்திகள் ஓடி விடும். இதனால்தான் இறந்தவரது உடலில் இருந்து வெளியேறிய ஜீவாத்மாவை தீய சக்திகள் அணுக முடியாமல் இருக்க தர்பை மீது சவத்தை வைப்பார்கள்.
289) தர்பையில் நமக்கு தெரியாத அளவிலான காந்த சக்தி அதிகம் உள்ளது என்பதினால் அதை கையில் வைத்துள்ளவர்களுக்கு, பிராண சக்தியைத் தருகிறது. அதனால்தான் நாம் சடங்குகள் செய்யும்போது இழக்கும் பிராண சக்தியை அதிகரிக்க அதை பயன்படுத்துகிறோம். வேதங்களிலும் தர்பையின் மகிமையைக் கூறி உள்ளார்கள்.
290) சாஸ்திரங்களின் அடிப்படையில் அமைந்த நம்பிக்கையின்படி, நாம் பன்னிரண்டு நாட்கள் சடங்குகளைச் செய்யத் தவறினால், இறந்தவரின் ஆன்மாக்கள் பித்ரு லோகத்தை விரைவாக அடையாது. எம தேவரிடம் இருந்து உரிய நீதியைப் பெற்ற பிறகும் உடைந்த இதயத்துடன் இலட்சியமின்றி அலைந்து திரியும். ஜீவாத்மா வேதனைப்பட்டால், அது சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு பல இன்னல்களை விளைவிக்கும்.
ஜீவாத்மாவின் பயணம்-13
13 ஆம் நாள் சடங்குகள்
291) முதல் பன்னிரண்டு நாட்கள் அசுப சடங்குகள் இறந்தவருக்காக செய்யப்படும் சடங்குகள் என்றாலும், பதிமூன்றாம் நாள் செய்யப்படும் மங்களகரமான சடங்கானது இறந்து விட்டவருடைய குடும்பத்தினர் அதுவரை கொண்டிருந்த துயர நிலையை விலக்கிக் கொள்வதை குறிக்கும் சடங்கு ஆகும். அன்றைக்குத்தான் தமது கர்ம பலன்களுக்கு ஏற்ப யம தேவரிடம் இருந்து தண்டனைப் பெற்றுக் கொள்ளும் ஜீவாத்மா தண்டனைக் கால முடிவில், ஏழு தலை முறைகளை சேர்ந்த பித்ருக்களுடன் ஒன்றிணைகின்றது என்ற செய்தியை தருகின்றது.
292) சுபஸ்வீகாரம் :- பதிமூன்றாம் நாளன்று வீட்டின் அனைவருக்கும் உள்ள தீட்டு காலம் முடிந்து விடும். குடும்பத்தினர் குளித்து விட்டு புத்தாடை அணிந்து கொள்வார்கள். அன்று ஹோமம் செய்து அந்த ஹோம ஜலத்தை வீடு முழுவதும் தெளித்து வீட்டையும் சுத்தமாக்குவார்கள். இதை சுபஸ்வீகாரம் என்று கூறுவார்கள். இறந்து போன ஜீவாத்மா புதிய உலகிற்கு செல்ல ஆயத்தம் ஆகி விட்டதையும், இனி அதன் குடும்பத்தினர் மகிழ்ச்சி மிக்க நாட்களை எதிர் கொள்வார்கள் என்ற தத்துவத்தையும் காட்டுகின்றது.
293) புரோஹிதர் நவகிரஹ ஹோமம், சாந்தி ஹோமம் போன்றவற்றை செய்து வீடு முழுவதும் மற்றும் வீட்டில் உள்ள அனைவரின் மீதும் ஹோமத்தில் வைத்து பூஜை செய்த புண்ணியாவசன தண்ணீரை தெளிப்பார்.
294) சுபஸ்வீகாரத்தின் அன்று மாலை புரோஹிதர் இறந்தவரின் ஜீவாத்மா பயணிக்கும் கதையைக் கூறுவார். புரோஹிதர்களினால் கூறப்படும் அந்த கதை கருடபுராணத்தில் கருடாழ்வாருக்கு திருமால் கூறியதான கதையின் அடிப்படையில் அமைந்து உள்ளது.
295) அன்று மாலை குடும்பத்தினர் அனைவரும் ஏதாவது ஒரு ஆலயத்திற்கு சென்று வழிபட்டு விட்டு வருவார்கள். அதோடு வீட்டினருக்கு இருந்த அனைத்து தீட்டும் முடிந்து விட்டது என்பதாகும்.
.…..ஜீவாத்மாவின் பயணம் -14 தொடர்கின்றது