ரிஷி முனிவர்களின்  சில கதைகள்
சாந்திப்பிரியா 
உத்தர பாரதத்தில் பாடலிபுத்திரம் எனும் நகரில் முன்னொரு காலத்தில் வித்யாசாகரா என்ற ஒரு பிராமணர் வாழ்ந்து வந்தார். அவர் அனைத்து சாஸ்திரங்கள் மற்றும் வேதங்களை நன்கு கற்றறிய ஆவல் கொண்டார். ஆகவே அவர் நல்ல ஒரு குருவை தேடி அலைந்தார். பாடலிபுத்திரத்தில் அவர் மனதுக்கு ஏற்ற குரு எவருமே கிடைக்கவில்லை. இடம் இடமாக  தேடி அலைந்து விட்டு தனக்கு ஏற்ற குரு கிடைக்காததினால் மனம் வருந்தி களைப்படைந்தவர் விந்திய மலைசாரல் அருகில் சென்று ஒரு ஓடையில் குளித்து விட்டு அருகில் இருந்த வனப்பகுதிக்குச் சென்று அங்கிருந்த ஒரு பெரிய புளிய மரத்தடியில் சென்று உறங்கலானார்.
அந்த மரத்தின் மீது ஒரு பிரும்ம ராக்ஷசன் வாழ்ந்து வந்தது. ஒரு மனிதன் அந்த மரத்தின் அடியில் உறங்குவதைக் கண்ட அந்த பிரும்ம ராக்ஷஷன், அவரை உண்ணுவதற்காக கீழே இறங்கி  வந்ததும்  வித்யாசாகராவின் மார்பில் பூணூல் இருப்பதைக் கண்டது.  ”ஓஹோ..இவர் ஒரு பிராமணர் போல உள்ளதே. இவரை சாப்பிட முடியாது”  என எண்ணிய பிரும்ம ராக்ஷசன் தூங்கிக் கொண்டு இருந்தவரை எழுப்பியது. தூக்கத்தில் இருந்து எழுந்தவர்தன் முன்னால் ஒரு பிரும்ம ராக்ஷசன் அமர்ந்து இருப்பதைக் கண்டு கடவுளை வேண்டிக் கொண்டு தோத்திரம் சொல்லத்  துவங்க , அந்த ராக்ஷசன் அவரிடம் ” ஐயா, நீங்கள் என்னைப் பார்த்து பயப்பட வேண்டாம். நானும் ஒரு பிராமணனே. நான் பூர்வ ஜென்மத்தில் செய்துள்ள ஒரு பாவக் காரியத்தினால் பிரும்ம ராக்ஷசனாகப் பிறந்து சாப விமோசனத்தை எதிர்பார்த்துக் காத்து இருக்கின்றேன். நீங்கள் உங்களுக்கு அனைத்து சாஸ்திரங்களையும் , வேதங்களையும் கற்றுக் கொடுக்க தகுந்த குருவை தேடி அலைவது உங்கள் மன ஓட்டத்தின் மூலம் தெரிகின்றது. ஆகவே உங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றால் நான் கற்றுள்ள அனைத்தையும் உங்களுக்குக் கற்றுத் தருகிறேன்” என்றது.  அதைக் கேட்டு ஆச்சர்யம் அடைந்த வித்யாசாகராவும் அதற்கு ஒப்புக் கொண்டார். அந்த பிரும்ம ராக்ஷசனும் தான் பூமியில் இருந்தால் அதை கற்பிக்க முடியாது என்பதினால் அவரையும் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொள்ளுமாறுக் கூற அவரும் அந்த மரத்தின் மீது ஏறி அமர்ந்து கொண்டார்.
பிரும்ம ராக்ஷசன் ஒரு கிளையில் அமர்ந்து கொள்ள அதன் கீழ் கிளையில் சிஷ்யனாக வித்யாசாகரா அமர்ந்து கொண்டார். முதலில் அது அவருக்கு பசி மற்றும் உறக்கம் இல்லாமல் இருக்க ஒரு குரு மந்திரத்தை உபதேசித்தது. அதற்குப் பிறகு ஆறு மாதங்களுக்கு தொடர்ந்து அந்த பிரும்ம ராக்ஷசனும் அவருக்கு தான் கற்று இருந்த சாஸ்திரங்கள் , வேதங்கள், மந்திரங்கள் என அனைத்தையும் கற்றுக் கொடுத்தது.  அது முதலில் கொடுத்து இருந்த குரு மந்திரத்தின் மகிமையினால் ஆச்சர்யமாக ஆறு மாதங்களுக்கு மேலாகியும் வித்யாசாகராவிற்கு பசியோ, உறக்கமோ வரவில்லை. அப்படியே அமர்ந்து கொண்டு பாடங்களைக் கற்றரியத் துவங்கியவர் தன்னை மறந்து அங்கேயே அமர்ந்தவண்ணம் குரு போதனைகளை ஏற்றுக் கொண்டு இருந்தார். அந்த பிரும்ம ராக்ஷசன் கூறியவற்றை அவர் மரத்தின் மீது இருந்த இலைகளைப் பறித்து அவற்றில் கூர் ஆணியினால் செதுக்கிக் கொண்டார். அனைத்தையும் கற்றரிந்தப் பின் அவர் மரத்தின் மீது இருந்து இறங்கி தனது குருவிற்கு வந்தனங்களை தெரிவித்து அதை வணங்கினார். அடுத்தகணம் அந்த பிரும்ம ராக்ஷசனும் மறைந்து விட்டது.
அங்கிருந்துக் கிளம்பிச் சென்றவர் வழியில் அவர் எழுதி வைத்து இருந்த சில இலைகளை தவற விட்டு விட்டார். காட்டை விட்டு  வெளியேறியதும் அவருக்கு பசி மற்றும் உறக்கம் இல்லாமல் இருக்க பிரும்ம ராக்ஷசன் செய்திருந்த மந்திரத்தின் மகிமை மறையலாயிட்று.  இரவு  வந்தது. பசி வயிற்றைக்  வதைக்க அருகில் இருந்த சிவபெருமான் ஆலயம் ஒன்றின் வெளியில் தனது தலைக்கு அந்த இலைகளை ஒரு தலையாணியைப்  போல வைத்துக் கொண்டு படுத்துக் கொண்டார்.
படுத்தவர் பசியினால் அப்படியே உறங்கி விட்டார். காலையில் எழுந்திருக்க முடியவில்லை. உடல் நலமின்றி ஆயிட்று. அப்போது அந்த ஆலயத்தின் பக்கத்தில் இருந்த வீட்டில் இருந்த மந்தாகினி என்பவள் அவரது நிலையை பார்த்து தவித்துப்  போய் அவரை மற்றவர்கள் உதவியுடன் ஒரு மருத்துவரிடம் காண்பித்து சில நாட்கள் தன் வீட்டிலேயே தங்க வைத்து குணமடைய வைத்தாள். அவர் உடல் நிலை நன்கு ஆனதும் அவர் மீது அன்பு கொண்டவள் அவரை மணக்க  விரும்பினாள்.  அவருக்கும் அவளை மணந்து கொள்ள ஆசையாக இருந்தது.  ஆனால் அந்த காலாத்தில் ஒரு பிராமணர் கீழ் ஜாதியை சேர்ந்தவளை மணக்க முடியாத நிலைமை இருந்தது. அப்படி மணக்க வேண்டும் எனில் முதலில் அவர் ஒரு பிராமணர், அடுத்து வைசியர் மூன்றாவதாக ஷத்ரியர் இனப் பெண்களை மணந்து கொண்டப் பின்னரே வேறு பெண்களை மணக்கலாம் என்பது நீதியாக இருந்தது. ஆகவே மந்தாகினி அதற்கான நீதியைக் கேட்க மன்னனிடம் அவரை அழைத்துச் சென்றாள்.
மன்னனும் வித்யாசாகராவின் அறிவுத் திறமையையும், அவர் பெற்றிருந்த  ஞானத்தின் காரணத்தையும் அறிந்து கொண்டவுடன் அவரை பெரிதும் மதித்தார். அதே நேரத்தில் அவரைக் காப்பாற்றி தன் வீட்டில் வைத்திருந்து குணப்படுத்திய மந்தாகினியையும்   ஏமாற்ற விரும்பவில்லை. ஆகவே அந்தப் பிரச்சனையை சுமுகமாகத் தீர்த்து வைக்க அவர் தனது மகள், தனது அமைச்சரின் மகள் மற்றும் தமது குலகுருவின் மகள் என மூவரின் சம்மதத்தையும் பெற்று அவர்களை வித்யாசாகருக்கு மணமுடித்து வைத்தப் பின் மந்தாகினிக்கும் கடைசியாக அவரை மணமுடித்துத் தந்தார். இப்படியாக சிக்கலான பிரச்சனையைத் தீர்க்க மன்னனும் அவருடைய சகாக்களும் எடுத்துக் கொண்ட விஷயம் நல்ல விதத்தில் முடிவுக்கு வந்தது. அந்த நான்கு மனைவிகளுடன் வாழ்ந்த வித்யாசாகராவுக்கு பிறந்த மகன்களே உஜ்ஜயினியை ஆண்ட விக்ரமாதித்தன், பத்ரஹரி, வாருச்சி மற்றும் பட்டி போன்றவர்கள். தமது தந்தையும், மன்னனும் மறைந்தப் பின் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பத்ரஹரிக்குப் சில காலத்திலேயே விக்ரமாதித்தனை அரசனாக்கிவிட்டு சன்யாசத்தை மேற்கொண்டு விட்டார்.