பெண்களினால் குடும்பத்துக்கு ஏற்பட்ட
சாபத்தை நீக்கும் ரிஷி பஞ்சமிக் கதை
சாந்திப்பிரியா
  

அனைவரும் தன தானியம் பெற்று உடல் ஆரோக்கியத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் இருந்து குழந்தைப் பேறும் பெற்றிட ரிஷி பஞ்சமி விரதம் செய்ய வேண்டும் என வடநாட்டுப் பண்டிதர்கள் கூறுவார்கள். அது மட்டும் அல்ல ஒருவரது வீட்டில் பெண்களினால் ஏற்பட்ட சாபத்தை விலக்கவும் அது அவசியம் என்றும் கூறுவர்.
இந்த விரதத்தை அனுஷ்டிப்பது எப்படி?. புரட்டாசி மாதம் சுக்ல பஷ்ச திதியில் விரதத்தை அனுஷ்டிக்க வேண்டும். விடியற் காலை எழுந்து சூரியன் உதிக்கும் முன்பே நதியிலோ குளத்திலோ கிணற்று நீரிலோ குளித்தப் பின் பட்டாடை உடுத்திக் கொண்டு விரதத்தை துவக்க வேண்டும். சந்தனத்தால் ஆன பிள்ளையாரை பிடித்து வைத்து, அதற்க்கு மாலை அணிவித்து கலசம் வைக்க வேண்டும். அதன் பின் நாம் நமக்குத் தேவையான பிரார்த்தனை நிறைவேற வேண்டும் என வேண்டிக் கொண்டு பூஜையை துவக்க வேண்டும். அதன் ஸ்லோகங்களைப் படிக்க வேண்டும். அந்த விரதம் இருக்கும்போது நாள் முழுவதும் விரதம் இருந்து ஒருவேளை மட்டுமே சிறிதளவு உணவை உண்ண வேண்டும். அன்று சிறிதேனும் பிரசாதங்களை செய்து அதை வீட்டிற்கு அன்று வருகை தரும் உறவினர் அல்லது நண்பர்களுக்கு தர வேண்டும். அப்படி யாருமே வீட்டிற்கு வரவில்லை என்றால் குறைந்தபட்ஷம் வீட்டு வாயிலில் நின்று கொண்டு அங்கு வரும் பிச்சைக்காரர்களுக்காவது போடா வேண்டும். அதை பூஜா பிரசாத தானம் என்பார்கள். அதன் பின் கலசத்தின் முன் நின்று கொண்டு மனதில் காஷ்யபா,அத்ரி, பாரத்வாஜ முனிவர்கள், விஸ்வாமித்திரர், ஜமதக்னி,மற்றும் வஷிஷ்ட போன்ற முனிவர்களிடம் தமது குடும்பத்தில் பெண்களினால் ஏற்பட்டுள்ள சாபங்களை விலக்குமாறு வேண்டிக் கொள்ள சாபங்கள் விலகும் என்பது ஐதீகம். இந்த விரதத்தை அவரவர் தேவைக்கு ஏற்ப மூன்று நாட்கள் அல்லது ஐந்து நாட்கள் கடை பிடிக்க வேண்டும் என்ற செய்தியும் உள்ளது. நேபாளத்தில் உள்ள இந்துக்களின் மிக முக்கிய விரதம் இது.

இந்த விரதம் குறித்த கதை இது.

ஒரு முறை தருமர் கிருஷ்ணரிடம் சென்று ‘எங்கள் குடும்பத்திற்கு பெண்களினால் ஏற்பட்டு உள்ள சாபம் விலக ஏதாவது பரிகாரம் கூற வேண்டும் எனக் கேட்டாராம். ( திரௌபதியும் பாண்டவர்களின் மனைவியாகப் பிறந்ததும் ஒரு பெண்ணின் சாபத்தின் விளைவினால்தான்).அதற்குக் கிருஷ்ணர் கூறிய கதை இது. “இந்தியாவின் மத்தியப் பகுதியில் உள்ளது விதர்பா எனும் இடம். அந்த இடத்தை ஸ்னேயஜித் என்ற மன்னன் ஆண்டு வந்தான். அவன் இராஜ்ஜியத்தில் நல்ல நடத்தையும், நற்குணங்களும் கொண்டு நியாயம் மற்றும் உண்மையை கடை பிடித்த வண்ணம் சுமித்தரா என்ற அந்தணன் வாழ்ந்து வந்தான். அவனுக்கு ஜெயஸ்ரீ என்ற மனைவி இருந்தாள். அவளும் கணவரைப் போன்றே அனைத்து நற்குணமும் கொண்டவள். மிகவும் ஆசாரபூர்வமான குடும்பம் அது. ஒரு முறை அவன் வீட்டு விலகாகிய நேரத்தில் வீட்டில் அவர்களை அறியாமலேயே தீட்டு பட்டு விட்டது. அது அவர்களுக்குத் தெரியாது. அடுத்து சில தினங்களில் அவர்கள் இருவரும் மரணம் அடைந்து கணவன் நாயாகவும், மனைவி ஒரு மாடாகவும் பிறந்து அவர்களைப் போலவே வேறு ஜென்மம் எடுத்துப் பிறந்திருந்த அவர்களுடைய பிள்ளையின் வீட்டிலேயே வளர வேண்டியதாயிற்று. சுமித்தராவுக்கும் ஜெயஸ்ரீக்கும் தாம் யார் என்பதும் யார் வீட்டில் பிறந்து உள்ளோம் என்பதும் தெரியும். ஆனால் பிள்ளைக்கு அந்த மிருகங்கள் யார் என்பது தெரியாது.

ஒரு நாள் சிரார்த தினம். அன்று அவர்கள் வீட்டில் சமைத்து வைத்திருந்த பாயஸத்தை பாம்பு ஒன்று வந்து சாப்பிட முயன்றது. ஆனால் அது தனது வாயை வைக்க முடியாமல் சூடு தாக்கிவிட அதுவும் சூட்டினால் அதனுள் விஷத்தை உமிழ்ந்து விட்டுச் சென்றது. அதை தற்செயலாக நாயாகப் பிறந்து இருந்த ஜெயஸ்ரீ பார்த்து விட அந்த விஷம் கலந்த பாயஸத்தை யாராவது உண்டு மடிந்து விடக் கூடாதே, அதனால் தன் மகனுக்கு சாபம் ஏற்பட்டு விடக் கூடாதே என்ற கவலையில் அந்தப் பாயஸ பாத்திரத்தை தள்ளி அதை கீழே கொட்டி விட அதை கவனித்து விட்ட சமையல்காரப் பெண்மணி அதை முதுகெலும்பே முறியும் அளவுக்கு அடித்துத் துரத்தினாள். அதற்கு பதிலாக வேறு பாயஸம் செய்து வைத்தாள். அடிப்பட்ட நாயும் வலி தாங்காமல் அழுது கொண்டே மாடாக இருந்த கணவனிடம் தன் நிலையை எடுத்துக் கூறி அழ அவளை மாடு உருவில் இருந்த கணவன் தேற்றினான்.

அனைத்து சாஸ்திரமும் நன்கு படித்திருந்த அந்த அந்தணணின் மகன் அந்த விலங்குகள் பேசியதைக் கேட்டார். அவருக்கு விலங்குகள் பாஷையும் புரியும். ஆஹா……தவறு நடந்து விட்டதே, பூர்வ ஜென்மத்தில் நம் தாய் தந்தையாக இருந்தவர்கள் அல்லவா மாடாகவும் நாயாகவும் தற்போது பிறந்து நம்முடன் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டான். எந்த தந்தையின் மரணத்திற்கு இன்று திவசம் செய்கிறோமோ அவர் மனதை அல்லவா வருத்தப்பட வைத்து விட்டோம் என எண்ணிக் கலங்கி அந்த இரு விலங்குகளையும் உள்ளே அழைத்து வந்து நன்கு குளிப்பாட்டி அவற்றை வணங்கியப் பின் அவற்றையும் அழைத்துக் கொண்டு ஒரு முனிவரிடம் சென்று அதற்கு பரிகாரம் கேட்டான். அவரும் ரிஷி பஞ்சமி விரதத்தின் மகிமையை எடுத்துக் கூறி அதை செய்தால் அவனுடைய பெற்றோர்களுக்கு மோட்சம் கிடைக்கும் எனவும் கூற அவனும் அதை செய்து தன் பெற்றோர்களுக்கு மோட்சத்தை அடைய வழி செய்தார்.

இந்தக் கதையை தருமரிடம் கூறிய கிருஷ்ணர் எந்த ஒருவன் ரிஷி பஞ்சமி விரதத்தை சரியாகக் கடைபிடித்தச் செய்கிறானோ அவனுடைய குடும்பத்துக்கு பெண்களினால் ஏற்பட்ட சாபம் விலகும் என்று கூறி அவருக்கு ஒரு வழி காட்டினார்.

பூர்வ ஜென்ம பாபங்களை விலக்கிக் கொள்ள விதர்பாவை ஆண்டு வந்த சிதாஷ்வ எனும் மன்னன் பிரும்மாவிடம் ஒரு விரதத்தை தமக்கு அருளுமாறு வேண்டிக் கொண்டபோது அவர் இந்தக் கதையை கூறியதாகவும் இன்னொரு செய்தி உள்ளது. ஆனாலும் இந்த விரதமே பூர்வ ஜென்ம பாபங்களை விலக்குகின்றது என்பது வட நாடுகளில் ஐதீகமாக உள்ளது.